Tag Archives: இன்றைய செய்தி

தமிழர் விடுதலைக் கூட்டணி வேட்பாளரை மண்வெட்டி கொண்டு துரத்திய சிறிதரனின் அடியாட்கள்!

கிளிநொச்சி மாவட்டத்தில் பிரமந்தனாறுப் பிரதேசத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறு;ப்பினர் சிறிதரனின் அடியாட்கள் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளரை மண்வெட்டிகொண்டு துரத்தியுள்ளனர்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தனது கோட்டையாக வைத்திருக்கும் கிளிநொச்சியில் வேறு கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கு எச்சரிக்கை விடுத்து வரும் நிலையில், பிரமந்தனாறுப் பிரதேசத்தில் தனது கையாள் ஒருவர் போட்டியிடுவதால் உதயசூரியன் கட்சியைச் சேரந்த வேட்பாளருக்கே தனது அடியாட்களைக் கொண்டு அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் சிறிதரனால் தேர்தலில் போட்டியிட்டுவதற்காக களமிறக்கப்பட்டவர்கள் அனைவரும், ஏதோ ஒரு வகையில் சமூகத்தை அழிக்கும் நோக்குடையவர்களே. உதாரணத்துக்கு வேழமாகிலிதன் என்பவர், பல பாலியல் சேட்டைகளில் ஈடுபட்டவர்.

இதேபோன்று தர்மபுரத்தில் கந்துவட்டி வாங்கும் ஒருவரை நியமித்த சிறிதரன், உண்மையில் மக்கள் நலன் கருதி, மக்களுக்குச் சேவை செய்யும் தொண்டர்கள் எவரையுமே நியமிக்காது, தனக்கு நெருங்கியவர்களை வேட்பாளர்களாக நியமித்துள்ளார்.

தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்குப் போடாவிட்டால், புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்படமாட்டாது – சுமந்திரன்!

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10 நாளன்று நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே வாக்குகளைப் போடவேண்டுமெனவும், அவ்வாறு போடாதுவிட்டால் புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்படமாட்டாது எனவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேற்று பருத்தித் துறையில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றியிருந்தார்.

மேலும் அவர், புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையில், சமஷ்டித் தீர்வே பரிந்துரைக்கப்பட்டுள்ளதெனவும், அதனையே ஏக்கிய ராஜ்ய எனக் குறிப்பிட்டுள்ளதாகவும் ஏக்கிய ராஜ்ய என்றால் ஒருமித்த நாடு எனவும் இதுபற்றி மக்கள் குழம்பிக்கொள்ளத் தேவையில்லையெனவும் உரையாற்றியிருந்தார்.

சுமந்திரன் மேடைகளில் மக்களுக்கு இவ்வாறு பிரச்சாரம் செய்துவரும் நிலையில், சிறிலங்கா அரசாங்கத்தைச் சேர்ந்த மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் ஏக்கிய ராஜ்ய என்றால் ஒற்றையாட்சியுடைய நாடு எனவும், அதில் எந்த மாற்றமும் கிடையாது எனவும், இந்நாட்டில் சிங்கள மொழிக்கே முன்னுரிமை வழங்கப்படும் எனவும் மக்களுக்குத் தெரிவித்து வருகின்றனர்.

அதைவிட மேலாக, இடைக்கால அறிக்கையை உருவாக்கியவர்களுள் முக்கியமானவர்களுள் ஒருவரான ஜயம்பதி விக்கிரமரட்ணவும், இடைக்கால அறிக்கையில் இலங்கை ஒற்றையாட்சியுடைய நாடு என்பது அழுத்திக் கூறப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறிருக்கையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரின் இடைக்கால அறிக்கையில், சமஷ்டி ஆட்சியே வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும், அதற்கும் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்கவேண்டுமெனவும், இல்லாவிட்டால் சமஷ்டித் தீர்வு கிடையாது போகும் என மக்களை ஏமாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

முல்லைத்தீவில் கடற்படை முகாமமைக்க 671 ஏக்கர் நிலப்பரப்பை அபகரிக்க அரசு அனுமதி!

முல்லைத்தீவு மாவட்டம் வெள்ளான் முள்ளிவாய்க்கால் உள்ளடங்கலாக 671 ஏக்கர் நிலப்பரப்பினை அபகரிப்பதற்கு சிறிலங்கா கடற்படையினருக்கு அரசாங்கம் அனுமதியளித்துள்ளது.

தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் விகல்ப என்ற ஊடகத்தின் ஆசிரியர் சம்பத் சமரக்கோன், எழுப்பியிருந்த வினாவுக்கு காணிகள் மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சின் மேலதிக செயலர் தயாரத்ன கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளளார்.

குறித்த பிரதேசமானது மக்களுக்குச் சொந்தமான பிரதேசமாகும். தமது பிரதேசத்தை தம்மிடம் வழங்குமாறு கோரி கேப்பாப்புலவில் மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இருப்பினும், வெள்ளான் முள்ளிவாய்க்கால், வட்டுவாகல் ஆகிய இரண்டு பிரதேசங்களையும் உள்ளடக்கியே இவ்விராணுவமுகாம் அமைப்பதற்கு அரசாங்கம் அனுமதியளித்துள்ளது.

2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தம் இடம்பெற்ற பிரதேசங்களான வெள்ளான் முள்ளிவாய்க்கால் மற்றும் வட்டுவாகல் பிரதேசங்கள் மர்மம் நிறைந்த பிரதேசங்களாகும்.

இறுதி யுத்தத்தின்போது இப்பிரதேசங்களிலேயே பலர் கொன்றொழிக்கப்பட்டனர். அத்துடன் சரணடைந்தவர்கள் பலரும் இவ்விடங்களிலேயே சிறிலங்கா இராணுவத்தினரால் சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செ;ய்யப்பட்டமைக்கான ஆதாரங்கள் வெளியாகியிருந்தன.

இந்நிலையிலேயே, வட்டுவாகல், வெள்ளான் முள்ளிவாய்க்கால் ஆகிய பகுதிகளில் உள்ள 671 ஏக்கர் காணிகள் பொதுத் தேவைக்காக சுவீகரிக்கப்படும் என்று கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம், அமைச்சர் கயந்த கருணாதிலக அறிவித்திருந்தார்.

எனினும், இக்காணி ககடற்படையினரின் முகாம் அமைப்பதற்காகவே அபகரிக்கப்பட்டுள்ளதாக காணி உரிமைச் சட்டத்தின் கீழ் அரசாங்கம் பதிவுசெய்துள்ளது.

இருப்பினும், மக்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருவதுடன், போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

யுத்தம் நிறைவடைந்த காலத்திலிருந்து, இப்பிரதேசம் இராணுவத்தினரால் தொடர்ச்சியான கண்காணிப்புக்குட்படுத்தப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

மூதூரில் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் மக்களுக்குமிடையே முறுகல்!

மூதூர் பிரதேசத்தில் பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைக்கு ஈபிடிபி கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா சென்று உரையாற்றியபோது அப்பிரதேச மக்களுக்கும் அவருக்குமிடையே முறுகல் ஏற்பட்டதுடன், மக்கள் அவரிடம் பல கேள்விகளைக் கேட்டதால், அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்டனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, ஈபிடிபி கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா நேற்று பிரச்சார நடவடிக்கைக்காக மூதூர் கிராமத்திற்குச் சென்று மக்களுன் உரையாற்றியபோது, மக்களில் ஒருவர் ‘நீங்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் எமது கிராமத்துக்கு வருகை தந்து ஏனைய அரசியல்வாதிகளைப் போன்றே கருத்துக்களைத் தெரிவித்திருந்தீர்கள். அத்துடன் கிராமத்தை அபிவிருத்தி செய்வதற்காக உங்களுடைய கட்சி நிதியிலிருந்து குறிப்பிட்ட தொகையை ஒதுக்குவதாக தெரிவித்திருந்தீர்கள், ஆனால் உங்களால் தெரிவிக்கப்பட்ட எதனையும் நீங்கள் இக்கிராமத்திற்குச் செய்யவில்லை.

மீண்டும் தேர்தல் பிரச்சாரத்திற்கு இங்கு வந்துள்ளீர்கள், மீண்டும் அபிவிருத்தி செய்யப்போவதாகக் கூறுகிறீர்கள். தேர்தலின் பின்னர் கிராமத்தை அபிவிருத்தி செய்வீர்கள் என்பதில் என்ன உத்தரவாதம் உள்ளது எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்குப் பதிலளித்த டக்ளஸ் தேவானந்தா மக்களைப் பார்த்து நீங்கள் ஏதோவொரு அரசியல்கட்சி சார்பாக தன்னைக் குழப்புவதாக தெரிவித்தார். இதற்கு மக்கள் மத்தியிலிருந்து, நாங்கள் உங்களைக் குழப்பவில்லை. உங்களால் சொல்லப்பட்ட அபிவிருத்தி வேலைகளை நீங்கள் இக்கிராமத்திற்குச் செய்தால் நாங்கள் உங்களுடன் இணைந்து செயற்படத் தயார் எனத் தெரிவித்திருந்தனர்.

இதன்போது, அங்கு காணொளி எடுத்த கிராமத்தவர் ஒருவரின் தொலைபேசியைப் பறித்த ஈபிடிபியினர், அதனைச் சேதப்படுத்தியுமிருந்தனர்.

தேர்தல் காலங்களில் மாத்திரம் கிராமங்களுக்குச் செல்லும் அரசியல் கட்சிகள், அங்கு மக்களிடம் கிராமத்தை அபிவிருத்தி செய்து தருவோம் எமக்கு வாக்குப் போடுங்கள் எனத் தெரிவித்துவிட்டு, தேர்தல் நிறைவடைந்ததும், அந்த மக்களைப் பற்றிச் சிந்திப்பதில்லை. அதற்கான பிரதிபலனை டக்ளஸ் தேவானந்தா மூதூரில் எதிர்கொண்டுள்ளார்.

அதேபோல், வடக்கில் உள்ள அரசியல்வாதிகளும் தமது வாக்குறுதிகளுக்கான பலனை விரைவில் சந்திக்க நேரிடும் என்பதே நிதர்சனம்.

கோத்தபாய ராஜபக்ஷவின் கையாளும், 116 பவுண் நகைக் கொள்ளையருமான விஜயகாந்த் யாழ். மாநகரசபைத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் போட்டி!

மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் அப்போதைய பாதுகாப்புச் செயலராக இருந்த கோத்தாபய ராஜபக்ஷவுடன் சேர்ந்தியங்கியவரும், வீடு புகுந்து 116 பவுண் நகையைக் கொள்ளையடித்தவருமான விஜயகாந்த் என்பவர் யாழ். மாநகரசபைத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியில் போட்டியிடுகின்றார்.

2013 யூலை மாதம் வங்கியில் 116 பவுண் நகை அடகு வைக்க விஜயகாந்த் சென்றபோது வங்கி ஊழியர் ஒருவரின் திருட்டு போன நகையும் அதில் இருந்தது. இதையடுத்து கோப்பாய் காவல்துறையினருக்கு விடயம் அறிவிக்கப்பட, விஜயகாந்த் உள்ளிட்ட நால்வர் கைதாகி, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இதனையடுத்து, 116 பவுண் நகையை திருடியது, அடகு வைக்க முயன்றது உள்ளிட்ட நான்கு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு விசாரணைகள்  நடைபெற்று வருகின்றது.

இவர்கள் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்படவில்லையாயினும், எதிர்வரும் பெப்ரவரி மாதம் 1ஆம் நாள் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த சம்பவம் நடந்தபோது விஜயகாந்த் ஈ.பி.டி.பியில் இருந்தார். சம்பவத்தையடுத்து கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

கட்சியிலிருந்து நீக்கப்பட்ட விஜயகாந்த், மைத்திரிபால சிறிசேன ஆட்சிக்கு வந்ததும், மைத்திரிக்கு குடைபிடித்த விஜயகாந்த் இறுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைந்து மாநகர முதல்வராகப் போட்டியிடவுள்ளார்.

 

அரசியலாக்கப்பட்ட வவுனியா பேருந்து நிலையப் பிரச்சனை!

கடந்த மூன்று நாட்களாக இலங்கை போக்குவரத்துச் சங்கத்தின் வடபிராந்திய ஊழியர்களின் பணிப்புறக்கணிப்புக்கு தீர்வு காணப்பட்டபோதிலும், அவர்கள் இதுவரை போராட்டத்தைக் கைவிடவில்லை.

இச்சிக்கலை தீர்க்கும் விதமாக இன்று யாழ்ப்பாணத்தில் சந்திப்பொன்று நடந்தது. இச்சந்திப்பில் இலங்கை போக்குவரத்துச் சபை அதிகாரிகளும் கொழும்பிலிருந்து வருகை தந்திருந்தனர். தனியார் போக்குவரத்து சங்க பிரதிநிதிகளும் இதில் கலந்து கொண்டனர்.

வடமாகாண முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், புதிய பேருந்து நிலையத்தில், இலங்கை போக்குவரத்துச் சங்கத்தினருக்கு தனியாக இடம் ஒதுக்கித் தருமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், பழைய பேருந்து தரிப்பிட வர்த்தகர்களுக்கு, அவர்கள் விரும்புமிடத்து புதிய பேருந்து நிலையத்தில் வர்த்தக நடவடிக்கையை மேற்கொள்வதற்கு ஒழுங்குகள் செய்துதரப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டது.

இதற்கு தனியார் போக்குவரத்துச் சங்க ஊழியர்கள் இடப்பற்றாக்குறையைக் காரணம் காட்டி எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்து, அருகிலுள்ள காணியில் வர்த்தக நடவடிக்கையை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்என உறுதியளிக்கப்பட்டது.

இந்நிலையில், இலங்கைப் போக்குவரத்துச் சங்க ஊழியர்கள் சிலர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருடன் கொழும்பில் இலங்கை போக்குவரத்துச் சங்க அதிகாரிகளைச் சந்தித்து, போக்குவரத்துச் சங்க அமைச்சரை வவுனியாவுக்கு அழைத்துவந்து அவர் வழங்கும் தீர்வின் பின்னரே போராட்டத்தைக் கைவிடுவதாக போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

அத்துடன், புதிய பேருந்து நிலையத்தை பிரித்து தமது பிரதேசத்தைச் சுற்றி மதில் எழுப்பவேண்டுமெனவும் கோரியுள்ளனர்.

இப்போராட்டத்தின் பின்னணியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனே செயற்படுவதாகவும், ஏற்கனவே விக்னேஸ்வரனுக்கும் சுமந்திரனுக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாட்டுக்கு பழிவாங்கும் நோக்கிலேயே சுமந்திரன் இவ்வாறு செயற்படுவதாக தெரியவந்துள்ளது.

எது எவ்வாறிருப்பினும் கடந்த மூன்று நாட்களாக பல்வேறு வழிகளில் அல்லலுறும் மக்களுக்கு இலங்கைப் போக்குவரத்துச் சங்க ஊழியர்களின் செயற்பாடு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

வாழ்வுக்காக போராட்டம் நடத்தும் முல்லைத்தீவு மீனவர்கள்!

முல்லைத்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் வெளிமாவட்டம் மற்றும் இந்திய மீனவர்களால் தமது தொழிலுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

யுத்தத்தினால் பெரும் இழப்புகளைச் சந்தித்த முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள், மீன்பிடித் தொழில் மூலமே தமது வாழ்வைக் கட்டியெழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில், 2012ஆம் ஆண்டில் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த 32 மீனவர்களுக்கு முல்லைத்தீவுக் கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்கான அனுமதியை கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களம் அனுமதி கொடுத்திருந்தது.

ஆனால், 2017ஆம் ஆண்டில் வெளிமாவட்டத்தைச் சேர்ந்த 305 மீனவ படகுகள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக நீரியல்வளத் திணைக்களத்திடம் மக்கள் முறையிட்டும் எந்தவொரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.

இது தவிர, கிழக்கே அமைந்துள்ள கொக்குத்தொடுவாய் கடல்நீரேரியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுவரும் தமிழ், முஸ்லிம் இனங்களைச் சேர்ந்த மீனவர்களை பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த சிங்கள மீனவர்கள் தொடர்ச்சியாக அச்சுறுத்தி வருவதுடன், மீனவர்களின் படகுகளை தீவைப்பது, அடித்து நொருக்குவது போன்ற நாசகார செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நாசகாரச் செயல்கள் அனைத்தும் இராணுவத்தின் பாதுகாப்புடனேயே மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதற்கு ஆதாரமாக அண்மையில் மாத்தளன் கடற்பரப்பில் மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர்களின் படகுகளை கடற்படையினரின் படகு மோதியதில் படகு முழுமையாகச் சேதமடைந்ததுடன் மீனவர்கள் இருவரும் தெய்வாதீனமாக உயிர் தப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு வெளிமாவட்ட மீனவர்களின் அத்துமீறலுக்கு முகங்கொடுத்துக்கொண்டிருக்கும் முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள், இந்திய மீனவர்களின் ஆக்கிரமிப்புக்கும் முகங்கொடுத்து வருகின்றனர்.இந்திய மீனவர்களின் வருகையைக் கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்தாலும், அவர்களின் அத்துமீறல் தொடர்ந்துகொண்டே இருக்கின்றது.

இப்பிரச்சனை தொடர்பாக முல்லைத்தீவு மாவட்ட மீனவ சங்கங்கள் நீரியல்வளத் திணைக்களம், வடமாகாண முதலமைச்சர் உட்பட கடற்றொழில் அமைச்சர் போன்றவர்களுக்கு எடுத்துரைத்தனர்.

இருப்பினும், இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென்பதுடன், ஆக்கிரமிப்பு அதிகரித்தவண்ணமே உள்ளது.

 

ஒரு வருடமாக வவுனியா மத்திய பேருந்து நிலையத்தை இயங்கவிடாது தடுக்கும் இலங்கை போக்குவரத்துச் சங்க ஊழியர்கள்!

வவுனியாவில் 195 மில்லியன் ரூபாவில் புதிதாக அமைக்கப்பட்ட மத்திய பேருந்து நிலையம் கடந்த ஒரு வருடமாக இயங்க முடியாத நிலையில் உள்ளது. இதற்கு இலங்கைப் போக்குவரத்துச் சங்கப் பேருந்துகள் இப்பேருந்து நிலையத்திற்குச் செல்ல மறுத்துவருகின்றமையே பிரதான காரணமாக உள்ளது.

வவுனியாவில் மத்திய கடைத் தொகுதிகளுக்குள் நீண்டகாலமாக இலங்கை போக்குவரத்துச் சபையின் பேருந்து நிலையம் இயங்கிவந்தது. அதேநேரம் தனியார் பேருந்து நிலையங்கள் வீதியோரத்திலேயே இயங்கி வந்தன.

இந்நிலையில், வவுனியா நகரத்தை அபிவிருத்தி செய்வதற்கு பேருந்து நிலையமொன்று அவசியம் என பலதரப்பட்டவர்களாலும் கோரிக்கைகள் விடுக்கப்பட்ட நிலையில் 195 மில்லியன் ரூபா செலவில் வடமாகாண சபையினால் இப்பேருந்து மத்திய நிலையம் அமைக்கப்பட்டது.

இது கடந்த வருடம் திறக்கப்பட்டாலும், இப்பேருந்து நிலையத்துக்குள் வடமாகாண இலங்கைப் போக்குவரத்துச் சங்கத்தினர் செல்வதற்கு மறுத்து வருவதுடன், பல பணிப்புறக்கணிப்புப் போராட்டங்களிலும் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையிலேயே, குறித்த பிரச்சனை தொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில், நாளைக்குள் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருடனும் பேசி ஒரு முடிவுக்கு வருமாறு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு நீதிமன்றம் அறிவித்திருந்தது.

இதனையடுத்து முதலமைச்சருக்கும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்குமிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து அனைத்து பேருந்து சேவைகளையும் புதிய பேருந்து நிலையத்திலிருந்து இயங்குமாநு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டது.

முதலமைச்சரின் இந்த உத்தரவையடுத்து, நேற்று பழைய பேருந்து நிலையத்திற்கு வாயிற் தடை போடப்பட்டது. இதனால், வடமாகாண இலங்கைப் போக்குவரத்துச் சபையினர் தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக பழைய பேருந்து நிலைய கடை உரிமையாளர்களும் தமது வியாபாரம் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அனைத்துப் பேருந்துகளும் தரிப்பதற்கென மக்களால்தான் ஒரு பொதுவான மத்திய நிலையம் கோரப்பட்டது. இந்நிலையில் புதிய மத்திய நிலையத்தில் இலங்கை போக்குவரத்துச் சபை சேவையில் ஈடுபடப்போவதில்லையென அறிவித்து பல போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இவர்களின் பின்னணியில் இருப்பவர்கள் யார்? இதனால் இவர்களுக்கு என்ன ஆதாயம்? இதனால் தமது போக்குவரத்தின்மூலம் பெறப்படும் வருமானம் குறைவடையும் என்ற அச்சம் காரணமாக அரசாங்கமே, இவர்களைத் தூண்டி விடுகின்றதா என்ற சந்தேகமும் உருவாகியுள்ளது.