Tag Archives: இந்திய செய்தி

கூடங்குளம் அணு மின் உற்பத்தியை தொடங்கலாம் : உயர் நீதிமன்றம் தீர்ப்பு

கூட‌ங்குள‌ம் அணுஉலை‌க்கு எ‌‌திரான அனை‌த்து வழ‌க்குகளையு‌‌ம் செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் த‌ள்ளுபடி செ‌ய்து‌ள்ளதா‌ல் அ‌ணு‌மி‌ன் ‌நிலைய‌த்தை தொட‌ங்க எ‌ந்த தடையு‌ம் இ‌ல்லை.
அணு மின் உற்பத்தி உலகம் முழுவது அழிவுகளை ஏற்படுத்திவரும் நிலையில் அதற்கு எதிராக உலகம் முழுவதும் மக்கள் போராடிவருகின்றனர். உலகம் முழுவதும் உருவாகிவரும் அழுத்தங்கள் காரணமாக பல நாடுகளில் அணு மின் உற்பத்தி கைவிடப்பட்டது. மக்களின் தொடர்ச்சியான போராட்டங்களை கருத்தில் கொள்ளாமால் தமிழ் நாட்டு மாநில அரசும் மத்திய அரசும் அணு மின்நிலையத்தை தொடங்கி தம்மை நவ பாசிச அரசுகளாக அறிவித்துள்ளன.
கூடங்குளத்தில் மின்உற்பத்தியைத் தொடங்க தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும், அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையமும் அனுமதி அளித்திருந்ததை எதிர்த்து செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் வழக்குகள் தொடரப்பட்டன.

உற்பத்தியை தொடங்கும் முன்பு மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக பொறியாளர் சுந்தர்ராஜன், மீனவர்கள் பாதுகாப்பு நலச்சங்கத் தலைவர் பீட்டர் ராயன் உள்ளிட்டோர் மனுதாக்கல் செய்திருந்தன‌ர்.

பாதுகாப்பு ஏற்பாடுகள் உறுதி செய்யப்படாதவரை, கூடங்குளத்தில் மின்உற்பத்தியைத் தொடங்க தடை விதிக்க வேண்டும் என அவர்கள் தங்கள் மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

இந்த வழக்குகள் மீதான விசாரணை முடிவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்ப‌ட்டது. கூட‌ங்குள‌ம் அணுஉலை‌க்கு எ‌‌திரான அனை‌த்து மனு‌க்களையு‌ம் த‌ள்ளுபடி செ‌ய்த ‌நீ‌திப‌திக‌ள், அணுஉலை தொட‌ர்பாக த‌மிழக அரசு போதுமான ஏ‌ற்பாடுகளை செ‌ய்து‌ள்ளது எ‌ன்று ‌தீ‌ர்‌ப்ப‌ளி‌த்தன‌ர்.

கூடங்குளம் ஒடுக்குமுறை : தோழர் மருதையனுடன் – ஜீ.ரி.வி உரையாடல்
இடிந்தகரையிலிருந்து உதயகுமார்
கூடங்குளம் அணு மின்நிலையம் : இலங்கையில் மனித அவலத்திற்கான நச்சு விதை
சுனாமி எச்சரிக்கையால் உயிர் அச்சத்திற்கு உள்ளான கூடங்குளம் மக்கள்
கூடங்குளம் அணுமின் நிலையத் திட்டத்தை எதிர்க்கவில்லை – இலங்கை
உங்களுக்குத்தெரியுமா? இந்த 16 கேள்விகளுக்கும் விடை..?: ஞாநி
புகுஷிமா அணு உலை விபத்து : உலக மயமாகும் கதிர்வீச்சு
அணு மின் உற்பத்தி – பேசப்படாத உண்மைகள் – மின் நூல்

கருணாநிதி கைவிட்டார் : தா.பாண்டியன் தமிழீழ தீர்மானத்தைக் கொண்டுவருவார்?

டெசோ மாநாட்டில் இலங்கையில் தனி ஈழம் கிடைக்க கருணாநிதி தீர்மானம் கொண்டு வந்து போர்க் கொடி உயர்த்தினால் நாங்களும் அவருடன் போராட தயாராக இருக்கிறோம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.
அப்பாவி மக்களின் வாக்குக்களைப் பொறுக்கி பதவியைக் கைப்பற்ற நினைக்கும் இந்தக் கட்சிகள் ஈழப் பிரச்சனையை தமது சொந்த நலன்களுக்காகப் பயன்படுத்திக்கொள்கின்றன.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மானிலச் செயலாளருக்கு மட்டுமல்ல அனைவருக்கும் அறியத்தக்கதாக கருணாநிதி தமிழீழத்திற்கான தீர்மானத்தைக் கொண்டுவர முடியாது என அறிவித்துள்ளார். இப்போது த.பாண்டியன் ஏன் தமிழீழத்தை ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றக்கூடாது.

Related: இந்திய மேலாதிக்கம் குறித்துப்பேச ஈழத் தமிழர்களுக்கு உரிமையில்லை – து.ராஜா

கஷ்மீரில் இந்திய அரசின் சித்திரவதைகள் : சனல் 4 காணொளி இணைப்பு

கஷ்மீரில் சுய நிர்ணய உரிமை கோரிப் போராடும் மக்களுக்கு எதிராக இந்திய அரசின் சித்திரவதைகளையும், மனிதப் படுகொலைகளையும், பயங்கரவாதச் செயற்பாடுகளையும் 11.06.2012 அன்று பிரித்தானியத் தொலைக் காட்சியான சனல் 4 இல் வெளியிடப்பட்ட ஆவணப்படம் சித்தரிக்கிறது. ஈழத்தை ஆக்கிரமிக்கும் இராணுவத்தின் தொகைக்கும் அதிகமாக கடந்த இரண்டு தசாப்தங்களாக கஷ்மீரில் அரச படைகள் நிறுத்தப்பட்டுள்ளன. ஒரு புறத்தில் பாகிஸ்தானும் மறு புறத்தில் இந்தியாவும் ஆக்கிரமிக்க முயலும் கஷ்மீரின் விடுதலைக்காக அந்த தேசத்தின் மக்கள் விட்டுக்கொடுக்காத போராட்டம் நடத்துகின்றனர். சனல் 4 இன் ஆவணப்படம் பல தகவல்களைத் தொகுத்திருக்கிறது. சனல் 4 இன் அரசியல் நோக்கம் எதுவாயினும், ஐரோப்பாவில் இந்திய ஜனநாயகத்தை தோலுரித்துக் காட்டுவதில் இந்தக் காணொளி வெற்றிகண்டுள்ளது.

பேஸ் புக் (facebook) அமரிக்காவின் உளவு தளமாகத் தொழிற்படுகிறது : ஜுலியன் அசாஞ்ஜ்

விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ஜ் தனது நேர்காணல் ஒன்றில் பேஸ் புக் என்பது அமரிக்க உளவுத்துறையின் வேவு தளமாகத் தொழிற்படுகிறது என்று தெரிவித்தார். பேஸ் புக் போன்ற சமூக வலைத் தளங்களின் பின்னணியில் தானியங்கி தரவு சேகரிக்கும் மென்பொருள் தனி நபர்கள் குறித்த தகவல்களைச் சேகரித்து அமரிக்க உளவுத்துறைக்கு வழங்குகிறது என்று மேலும் குறிப்பிட்டார். பேஸ் புக்கில் நண்பர்களை இணைக்கும் போது அவர்களின் நடவடிக்கைகள், நண்பர்கள், வாழ்விடங்கள், உறவினர்கள் போன்ற இலவச தகவல் சேவையை அமரிக்க உளவுத்துறைக்கு இலவசமாக பாவனையாளர்கள் வழங்குகின்றனர் என்று அவர் மேலும் குறிப்பிட்டார். பேஸ் புக் பிரதானமாகவும் தவிர, யாஹூ, கூகிள் போன்றன உளவு வேலைக்காகப் பயன்படும் மிகவும் அரிய கண்டுபிடிப்புக்கள் என மேலும் குறிப்பிட்ட அசாஞ்ஜ், தகவல் தொழில் நுட்பம் உருவாக்கிய “அறிவு சமூகம்” குறித்த புதிய விவாதத்திற்கும் அதன் மாற்றுக் குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடரும் படுகொலைகள்: கொலைகாரர்கள் விஜயகுமார், சிதம்பரம், மன்மோகன் சிங்

கடந்த ஜூன் 28 ம் நாள் இரவு சத்திஸ்கார் மாநிலத்தில் உள்ள பீஜப்பூர் மாவட்டத்தில் சுமார் இருபது மாவோயிஸ்டுகளை ஒரு நீண்ட துப்பாக்கிச் சண்டைக்குப் பின் சுட்டு வீழ்த்தியதாக மத்திய ரிசர்வ் போலீஸ் படையும் சத்திஸ்கார் போலிசும் அறிவித்தன. இந்தியத் தொலைக் காட்சிகள் அதிலும் குறிப்பாக ஆங்கிலச் செய்தி நிறுவனங்கள் இந்த வெற்றியை நாள் முழுவதும் மீண்டும் மீண்டும் அறிவித்த வண்ணம் இருந்தன. மாவோயிஸ்டுகளுடனான போரில் இது ஒரு மிகப் பெரும் வெற்றியாக நாடு முழுவதும் பறை சாட்டப்பட்டது. தொலைகாட்சிகளில் போலீஸ் அதிகாரிகள், ஒய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் மீண்டும் மீண்டும் தோன்றி இது ஓர் மிகப் பெரும் வெற்றி என்ற கொண்டாடிக் கொண்டிருந்தனர்.

கூடவே, அமைச்சர் சிதம்பரம் தொலைக் காட்சியில் தோன்றி தமது தலைமையில் இயங்கும் படைகள் இந்த அரும் சாதனையை நிறைவேற்றியதாக மகிழ்ச்சி பொங்க அறிவித்தார். ஒரு தேர்ந்த பொய்யனுக்குரிய பம்மாத்துடன் சம்பவம் குறித்துப் பசப்பினார். இந்த நடவடிக்கை மிகவும் திட்டமிட்டு, பல நாட்களாக சேகரிக்கப்பட்ட உளவுச் செய்திகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பப்டதாக அறிவித்தார். இந்தப் போரில் ஒரு போலீஸ்காரர்கூட சாகவில்லை என்றும் ஆறு பேருக்குக் காயம் மட்டுமே ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார். இது மாவோயிஸ்டுகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும், இனி வரும் காலங்களில் போலீஸ் படைகள் தீவிரமாகப் போராடும் என்றும் மகிழ்ச்சியுடன் அறிவித்தார்.

ஆனால், அவரது பெருமை அடுத்த சில மணி நேரத்தில் அம்பலமாகி விட்டது. கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள் என்ற பழமொழி பொய்யாகி சிதம்பரத்தின் பொய் எட்டு மணிநேரம் தான் என்று உணர்த்தியது. உண்மை கசியத் தொடங்கி குற்றக் கும்பலான மன்மோகன், சிதம்பரம், விஜயகுமார் ஆகியோரின் கோரமுகங்களை வெளிக் கொண்டு
வந்துள்ளது.

நடந்தது என்ன?

பழங்குடியினரது வாழ்வில் ஆட்டமும் பாட்டமும் கூடிய திருநாட்கள் பல. அவற்றில் ஒன்று விதைப்புத் திருநாள். மழைக்காலம் தொடங்கும் ஜூன் – ஜூலை மாதத்தில் ஊர்கூடித் திட்டமிட்டு செய்யும் பயிர் பற்றியும், பாசன விபரம் பற்றியும் விவாதிக்க அவர்கள் ஆண்டு தோறும் கூடுவது வழக்கம். மனிதர்களின் கூட்டு உழைப்பையும் இயற்கையின் தயவையும் மட்டுமே நடைபெறும் பழங்குடி விவசாயத்தில் இந்த நாள் மிகவும் முக்கியமானது. குறிப்பிட்ட இந்த நாளில் அனைவரும் கூடித் திட்டமிடுவது பழங்குடி விவசாயிகளின் நடைமுறை. இந்த நாளில், வரிசைக்கிரமமாக யார் விதைப்பது, என்ன விதைப்பது என்று ஊர் கூடி முடிவு செய்வார்கள். மழை கடந்து போகும் முன் மிஞ்சியிருக்கும் மிகக் குறுகிய காலத்தில் விவசாயப் பணிகளை முடிக்க வேண்டுமானால் ஒவ்வொரு குடும்பமும் அடுத்த குடும்பத்தை, அடுத்த ஊர்க்கார்களை நம்பி ஒருவருக்கு ஒருவர் கொடுத்து வாங்கி ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அப்படித்தான், பீஜப்பூர் மாவட்டத்தில் உள்ள சிறுகூடம், கொத்தகூடம், ராஜூபெண்டா என்ற மூன்று கிராமங்களைச் சேர்ந்த மக்கள் சுமார் எண்ணூறு பேர் அன்று கூடினர். ஆட்டமும், பாட்டும், இசையும், இரவு முழுக்க நடந்து கொண்டிருந்தது.

சிதம்பரம் மந்திரியாக இருக்கும் உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் வரும் பாம்புப் படை (COBRA forces) என்ற பெயரில் அழைக்கப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படைகள் சுமார் முன்னூறு பேர் அடங்கிய போலீஸ் படைகள் இந்தக் கூட்டத்தைச் சுற்றி வளைத்தது. கண்மண் தெரியாமல் சுடத் தொடங்கின. இந்தப் படைகள் பழங்குடிகளைக் கொலைகள் செய்வதில் பேரின்பம் கொள்ளும் போலீஸ் அதிகாரியான விஜயகுமார் தலைமையில் இயங்குகின்றன. இரவில் இறந்தது பெரும்பாலும் குழாந்தைகள். இரவு விடிந்து மறுநாள் சிக்கிய இளைஞர்களை பிடித்துக் கொன்றனர். போலிஸ் சுட்டுக் கொன்ற இருபது பேர்களும் அப்பாவிப் பழங்குடிகள் அவர்களில் ஒருவரும் மாவோயிஸ்டுகள் இல்லை.
கொலை செய்யப்பட்டவர்களில் பத்துப்பேருக்கும் மேலானவர்கள் குழந்தைகள். இவர்களில், பள்ளி செல்லும் மாணவர்கள் விடலைப் பையன்கள், இளஞ் சிறுமிகள் அடக்கம். அத்துடன் வயதான முதியவர்கள்

ஓடமுடியாத கிழவிகள் அடக்கம். பின் வரிசையிலும் முன் வரிசையிலும் அமர்ந்திருந்தவர்கள் முதலில் கொல்லப்பட்டவர்கள். இதில் தபேலா வாசித்துக் கொண்டிருந்த இசைக்கலைஞர் தபேலாவைத்த தழுவியபடியே கொல்லப்பட்டார். இருளில் தப்பியோடும் போது போலீசின் கண்ணில் தட்டுப் பட்ட சிறுவர்களை கோழியை அமுக்குவது போல அமுக்கி அவர்களை முதலில் காலில் சுட்டும் பின்னர் தொண்டையில் சுட்டும் கொலை செய்தனர். மறு நாள் காலையில்தான் நிகழ்வின் முழுக் கோரமும் தெரியத் தொடங்கியது. மனதைத் திடப்படுத்திக்கொண்டு பிணங்களைச் சேகரிக்க வந்த முதியவர்கள், பெண்களை அடித்தும், மானபங்கப் படுத்தியும், சிலரது முலைகளை அறுத்தும் சிலரை போலீஸ் கொலை செய்த்தது.

எந்த ஆயுதமும் இன்றி திருவிழாவில் கூடியிருந்த அப்பாவிகளை கொலை செய்ததைத்தான் இப்படி வீரம் மிக்க போராக சிதம்பரம் சித்தரித்தார். இந்திய தொலைக் காட்சிகள் தங்கள் படைகளின் இத்தகைய தீரத்தைத்தான் நாள் முழுதும் கொண்டாடின. அடுத்த இரண்டு நாட்களில் உண்மை சிறுகச்சிறுக கசியத் தொடங்கியதைக கண்ட சிதம்பரம் இறுக்கமான முகத்துடன் தொலைக்காட்சியில் தோன்றி தமது படைகள் முதலில் துப்பாக்கிகளால் சுடப் பட்டதால் திருப்பித் தாக்கினர் என்றார். இப்படிப்பட்ட நேரங்களில் தொடர்பில்லாதவர்கள் யாராவது அடிபட்டிருந்தால் அது கொல்லப்பட்டவர்கள் தான் பொறுப்பு என்றார். இரவில் அவர்கள் ஏன் கூட வேண்டும். மாவோயிஸ்டுகள் அப்பாவி மக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தியிருக்கலாம் என்று ஒரு புளுகையும் அவரது எடுபிடிகள் அவிழ்த்து விட்டார்கள்.
கொலைகாரன் விஜயகுமார்

இந்தக் கொலைகளைத் தான் தமது படைகள் ஏதோ பெரும் போர் ஒன்று நடத்தி இருபது தீவிரவாதிகளைச் சுட்டுக் கொன்றதாக போலீஸ் துறை தலைவர் விஜயகுமார் பெருமைப்பட்டார். இந்த நபர் நடத்திய கொலைகள் தமிழ் நாட்டில் அனைவருக்கும் தெரிந்ததே. வீரமணி, வெங்கடேச பண்ணையார் போன்ற உள்ளூர் ரவுடிகளை போலிமோதலில் சுட்டுக் கொன்று ஜெயலலிதா முன்பு தன்னை ஒரு வீரப் பிரதாபியாக அனைவருக்கும் காட்டிக் கொண்டவர். ஆனால், இவரது கொலைகள் கடந்த எண்பதாம் ஆண்டுகளிலேயே கோமாளி எம்.ஜி.ஆரின் ஆட்சியின் போது தொடங்கியது. தர்மபுரியில் பல புரட்சியாளர்களையும், புரட்சிகர இயக்கங்களின் ஆதரவாளர்களையும் பிடித்துச் சென்று சுட்டுக் கொன்றதில் இவரது பெருமைகள் தொடங்கின. இன்னொரு கொலைகாரனான தேவாரம் இவருக்கு நேரடிக் குருநாதர்.
இந்த இருவரும் பின்னாளில், வீரப்பனைப் பிடிக்கிறோம் என்று ஆயிரக் கணக்கான பழங்குடிகளைத் துன்புறுத்தியதிலும் நூற்றுக்கும் மேலானவர்களை கொன்றதும் அனைவருக்கும் தெரிந்த செய்திதான். இறுதியில், விசம் கொடுத்துக் கொல்லப்பட்ட வீரப்பனை நான் தான் பிடித்தேன் என்று மார் தட்டியவர் இவர்.

அப்பாவிகளைக் கொலை செய்யும் தமது பெருமையை மூலதனமாக்கி மிக முக்கியமான இந்திய ரிசர்வ் போலீஸ் படைக்கு தலைவராக சிதம்பரத்தின் தயவில் வந்து சேர்ந்தார்.

பொய் சொல்வதில் இவர் சிதம்பரத்தையும் விஞ்சியவர். பல பெண்களது முலைகள் வெட்டிச் சிதைக்கப்பட்டுள்ளதைத் தாம் கண்டதாகவும், போலீசார் அப்பாவிகளைக் கொன்றிருப்பதாகவும் பிணங்களைக் கண்ட பத்திரிகையாளர்கள் சொல்கிறார்களே இதற்கு உங்கள் பதில் என்ன? என்று இவரிடம் கேட்டனர். அதற்கு விஜயகுமார் சொன்னார், “எங்கள் படைகள் அப்பாவிகளை சித்திரவதை செய்வது என்பது நினைத்துப் பார்க்க முடியாதது, அப்படிப்பட்ட எண்ணம் அவர்களின் ரத்தத்தில் கூடக் கிடையாது” என்று புளுகினார்.

இந்தப் பேர்வழி செய்த சித்திரவதைகளை சதாசிவம் கமிசன் உட்பட பல விசாரணைகள் மூலம் வெளி வந்துள்ளது. நீதிமன்றம் விஜயகுமார் செய்த சித்திரவதைகளுக்கு நட்ட ஈடு வழங்க உத்தரவிட்டுள்ளது. பல புகார்கள் பதிவு செய்யப்படாத வழக்குகள் இன்னமும் இந்த நபர் மீது நிலுவையில் உள்ளன. இவரின் கூட்டாளியான சங்கர் பிதரி என்ற கர்நாடக் போலீஸ் அதிகாரியை உயர் நீதிமன்றம் இதே குற்றச் சாட்டுகளின் அடிப்படையில் “கொலைகார்கள் போலீஸ் துறைத் தலைவராக பணியாற்ற தகுதியில்லாதவர்கள் என்று தீர்ப்பளித்துப் பணி நீக்கம் செய்தது. ஆனாலும் சிதம்பரம் மன்மோகன் சிங்கின் தயவு இருப்பதால் இந்த கொலைகாரன் சிறு பிள்ளைகளைக் கொல்வதை அபாரமான துணிச்சலாகக் காட்டிக் கொள்கிறார். எந்த ஒரு இந்தியப் பத்திரிகையும் தொலைக் காட்சியும் இந்தக் கொலைகாரனை எதிர்க் கேள்வியும் கேட்கவில்லை.

கொலைகள் அம்பலமான பிறகு நாளுக்கு ஒரு பொய் என்ற அளவில் அவிழ்த்து விட்டார். “மாவோயிஸ்டுகள் குழந்தைகள் பெண்களை முன்னிறுத்தி கேடயமாகப் பாவித்திருக்கலாம் என்றும் தாம் இப்படிப்பட்ட சம்பவங்களை ரகசியம் கருதி இதுவரை வெளியிடவில்லை என்றும், இப்போது நேரம் வந்ததால் வெளியில் சொல்கிறேன்” என்றார்.
சிதம்பரத்தின் பொய்யை அவர் ஒட்டிக கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர்களே நேரடியாக கேள்வி கேட்கத் தொடங்கி விட்டனர். சத்திஸ்கர் மாநில காங்கிரஸ் கட்சி சிதம்பரம் சொன்னதில் சிறிதும் உன்மைமையில்லை என்று அறிக்கை வெளியிட்டது. கூடவே, கொலை செய்யப் பட்டவர்களுக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் எந்த தொடர்புமில்லை என்றும் சொன்னது.

போலீசார் துப்பாக்கியால் சுடப்பட்டது உண்மையா?

மாவோயிஸ்டுகள் வைத்திருக்கும் குருவி சுடும் துப்பாக்கிகள் மூலம் போலீசார் சுடப்பட்டனர் என்றும் அதன் பின்னரே இந்தத் தாக்குதல் தொடங்கியது என்றும் ஒரு கதையை அவிழ்த்து விட்டனர். கூடவே, சில குருவி சுடும் துப்பாக்கிகளையும் கொண்டு வந்து மாவட்டப் போலீசார் காட்டத் தொடங்கினர். ஆறு போலீசார் சுடப்பட்டு ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாக சிதம்பரம் சொன்னார்.

சுடப்பட்ட போலீசாரை நேரில் காணச் சென்ற இந்து பத்திரிக்கை நிருபரிடம் மருத்துவமனை தலைமை டாக்டர் சொன்னது: “மொத்தத்தில் இரண்டு பேருக்கு சிறிய துப்பாக்கி தோட்டாச் சில்லுகளால் காயம் ஏற்பட்டுள்ளது. மற்ற இருவர் தடுமாறி விழுந்து கால் சுழுக்கியதினால் நடக்க முடியாமல் இங்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் என்றார்”. துப்பாக்கிகளை கண்மண் தெரியாமால் சுட்டதில் பாறைகளில் பட்டுச் சிதறிய தோட்டாச் சில்லுகள் இந்தக் காயத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்று ஒரு மருத்துவர் சொன்னதாக இந்து பத்திரிகையின் நிருபர் எழுதியிருக்கிறார்.

கடைசியில் மாவோயிஸ்டுகள் சுட்டதாகச் சொன்னதும் பொய் என்று அம்பலமானது.

ஏன் இந்தக் கொலைகள்?

சிதம்பரம் ஏன் இந்தக் கொலைகளுக்கு தலைமை தாங்கி நடத்துகிறார் என்பது நாம் அறிந்து கொள்ள வேண்டும். இந்தக் கிராமங்கள் அமைந்திருக்கும் நிலங்கள் அளப்பரிய தாதுக்களைக் கொண்டிருக்கின்றன. இரும்பு, செப்புத் தாதுக்கள் இதில் மிகவும் முக்கியமானது. மன்மோகன் சிங் தலைமயில் அறிவித்து நடத்தப்பட்டு வரும் புதிய பொருளாதார கொள்கை என்பது உலக வங்கியின் புதிய காலனியாதிக்க முறை. இந்த பொருளாதார கொள்கையின்படி பல உள்ளூர் வெளியூர் கம்பெனிகள் முளைத்து நிலங்களை அபகரிக்கக் காத்துக் கொண்டிருக்கின்றன.

இப்படி இதுவரை சத்தீஸ்கரில் மட்டும் சுமார் 650 கிராமங்கள் சிதம்பரத்தின் தலைமையில் காலி செய்யப் பட்டுள்ளன. ஐந்து ஆண்டுகளுக்கு முன் சுமார் 10 லட்சம் மக்கள் வாழ்ந்த இந்தப் பகுதியில் இன்று பாதிப் பேர் கூட கிராமாங்களில் இல்லை. எங்கே போனார்கள் என்பதற்குக் கூட அரசிடம் கணக்கு இல்லை. அவர்கள் உள்நாட்டில் அகதிகளாக ஆந்திர மாநிலத்தில் தஞ்சம் புகுந்திருப்பதாகவும் பலர் காடுகளுக்குள் சென்று உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு வாழ்வதாகவும் சில அறிக்கைகள் சொல்கின்றன.

இப்படி கிராமங்களைக் காலி செய்து நிலைகளை கைப்பற்றுவது முதலில் சல்வா ஜூடும் என்ற கூலிப் படைகள் செய்து வந்தனர். இந்திய உச்ச நீதிமன்றம் இந்தக் கூலிப் படைகளை தடை செய்தவுடன் விஜயகுமாரின் மத்திய ரிசர்வ் படைகள் நேரடியாக களம் இறங்கியுள்ளன.

மக்களை வெளியேற்று நிலங்களைக் கைப்பற்று: புதிய பொருளாதாரம்

இப்படி கிராமங்களை ஒழித்து எஞ்சிஇருக்கும் மக்களை கூண்டுகள் போன்ற காலனிகளில் தள்ளுவது நூறு ஆண்டுகளுக்கு மேலாக செய்யப்பட்டு வரும் ஒரு நடைமுறைதான். இலங்கைப் போரிலும் இதே வழிமுறைதான் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த மூன்று கிராமங்களையும் சுரங்கம் தோண்டுவதற்காகவே சிதம்பரத்தின் கூலிப் படைகள் தாக்கியிருக்கின்றன. இனி வரும் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ரூர்கேலா போன்ற மிகப் பெரும் இரும்பு ஆலைகளுக்குத் தேவையான தாதுக்கள் இந்தக் கிராமங்களில் இருந்து தான் தோண்டவேண்டும். அதற்கென அமைக்கப்படும் தனி ரயில் பாதையில் இப்படி இன்னும் சுமார் ஐநூறு கிராமங்கள் உள்ளன. இவர்களது எதிர்ப்பை சமாளிக்க ஒரே அடியாக இந்தக் கிராமங்களை அழித்து விடுவது என்ற வழிமுறையை சிதம்பரம் வகுத்து செயல் படுத்தி வருகிறார். மக்களை ஒரேயடியாக கொலை செய்வது மிஞ்சியவர்களை ஓரிடத்தில் குவிப்பது, நிலங்களைக் கைப்பற்றுவது இது தான் புதிய பொருளாதாரக் கொள்கையின் வழி முறை.

கொலைகளை நிறுத்து !! கொலைகாரர்களை கைதி செய்!

அப்பட்டமான கொலை நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் உள்துறை அமைச்சர் சிதம்பரம், ரிசர்வ் போலீஸ் தலைவர் விஜயகுமார், மாநில முதல்வர் ராமன் சிங் அதை நியாயப் படுத்தும் பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை செயலர் வி.கே. சிங் ஆகியோரை இந்திய சட்டங்களின் படியும், சர்வதேசப் போர் நடத்தை சட்டங்களின் படியும் உடனடியாக கைது செய்து, சிறையில் அடைத்து விசாரணை செய்து,. தண்டனை வழங்க கோருவது.அணைத்து சனநாயக உரிமையாளர்களின் கடமையாகும்.

Description: Maoist encounter
சிதம்பரம்-விஜயகுமார் கொலை செய்த குழந்தைகள்- வயது 6 முதல்14

கொலை செய்யப்படதில் பெரும் பகுதி சிறுவர்கள்:

http://www.ndtv.com/video/player/news/6-minors-killed-in-Chhattisgarh-encounter-congress-report/238237
கொல்லப்பட்டவர்களின் பிணாங்களைக் கூட கொடுக்க மறுக்கும் சிதம்பரத்தின் நிர்வாகம்:
http://www.ndtv.com/video/player/news/the-unclaimed-maoist-leader/238229

திமுகவினர் சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்துகின்றனர்

திமுகவினர் மீது பொய் வழக்கு போடப்படுவதை கண்டித்து தமிழகம் முழுவதும் அக்கட்சியினர் இன்று சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்துகின்றனர். இந்தப் போராட்டத்தில் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர். திமுகவினர் மீது அரசின் பழிவாங்கும் நடவடிக்கையை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று காலை சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் என்று திமுக தலைவர் கருணாநிதி அறிவித்தார். இதற்காக மாநிலம் முழுவதும் சிறை நிரப்பும் போராட்டம் குறித்த விளக்க பொதுக் கூட்டங்களும் நடந்தன.

சென்னையில் 16 இடங்களில் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டன. கொளத்தூரில் நடைபெறும் போராட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். எழிலகம் அருகே நடைபெறும் போராட்டத்தில் தென் சென்னை மாவட்டச் செயலாளர் அன்பழகன் கலந்து கொள்கிறார். வட சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் ஆர்.டி.சேகர், சேகர்பாபு ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

தமிழகம் முழுவதும் மாவட்டச் செயலாளர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் கட்சியின் முன்னணித் தலைவர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொள்கின்றனர். போராட்டம் குறித்து கட்சியின் முன்னணித் தலைவர்களுடன் கருணாநிதி நேற்று மாலையில் ஆலோசனை நடத்தினார். இதற்கிடையில் அமைதியான முறையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாமல் சிறை நிரப்பும் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று கட்சித் தலைமை அறிவித்துள்ளது.

அதேநேரத்தில், போராட்டம் அமைதியாக நடைபெற, போலீசாரும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் இடங்களை திமுகவினர் ஏற்கனவே அறிவித்துள்ளதால், அங்கு ஒவ்வொரு துணை கமிஷனர் தலைமையிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாவட்டங்களில் டிஎஸ்பிக்கள் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் உயர் அதிகாரிகளுடன் டிஜிபி ராமானுஜம் நேற்று ஆலோசனை நடத்தினார். சென்னையில் போலீஸ் கமிஷனர் திரிபாதி ஆலோசனை நடத்தினார்.

யார் யார்: திமுக சட்டத்துறை செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அண்ணா அறிவாலயத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: நாளை(4ம்தேதி) காலை முதல் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும். இந்த போராட்டத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கொளத்தூரிலும் மற்றும் துணைப் பொதுச் செயலாளர்கள் துரை முருகன், சற்குணபாண்டியன், வி.பி.துரைசாமி, டி.«.க.எஸ் இளங்கோவன் எம்பி உள்ளிட்ட முன்னணி தலைவர்களும் கலந்து கொள்கின்றனர்.

தமிழகம் முழுவதும் நடக்கும் போராட்டத்தில் சுமார் இரண்டரை லட்சம் பேர் கலந்து கொள்ள சம் மதம் தெரிவித்து பெயர்களை தந்துள்ளனர். அவர்கள் அனைவரும் சிறை நிரப்பும் போராட்டத்தில் கலந்து கொள்வார்கள். போராட்டம் எப்படி நடைபெற வேண்டும் என்பதை ஏற்கனவே திமுக தலைவர் கருணாநிதி விளக்கியுள்ளார். போராட்டத்தில் கைதாகும் தொண்டர்கள் ஜாமீனில் வெளிவர மாட்டார்கள். இவ்வாறு ஆர்.எஸ்.பாரதி கூறினார்.

ஜனாதிபதித் தேர்தலில் பிரணாப் முகர்ஜியை ஆதரிக்க முடியாது : வைகோ

மயிலாடு துறையில் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய வை.கோ ஜனதிபதித் தேர்தலில் பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவு தரமுடியாது என்றார்.
தமிழகத்திற்கு இது சோதனை காலம். ஆயிரம் ஆண்டுகளாக நெற்களஞ்சியமாக விளங்கி பசித்தோருக்கு உணவளித்த தமிழகத்தில் இன்று நம் ஒவ்வொருவர் தலையிலும் கத்தி தொங்குவதுபோல் உள்ளது.

கேரள அரசு முல்லை பெரியாறு அணையை உடைத்தே தீருவோம் என செயல்பட்டு வருகிறது. உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி கேரள அரசு செயல்படுகிறது. கேரள சட்டசபையில் நீர்வளத்துறை அமைச்சர் ஜோசப் முல்லை பெரியாறில் மாற்று அணை கட்ட ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.

முல்லை பெரியாறில் புது அணை கட்டினால் தமிழகத்தில் 2 1/2 லட்சம் ஏக்கர் விவசாய நிலம் பாதிப்படையும். பிரணாப் முகர்ஜி ராணுவ மந்திரியாக இருந்தபோது இலங்கையில் பலாளி விமான நிலையம் கட்ட இந்திய அரசு உதவுவதாக கேள்விப்பட்டு நான் பிரணாப் முகர்ஜியை சந்தித்து கேட்டேன் அப்போது அவர் உதவ மாட்டோம் என கூறினார். ஆனால் இந்திய அரசு உதவி செய்தது.

இலங்கைக்கு உதவி செய்யக்கூடாது என பிரணாப் முகர்ஜியிடம் கூறியபோது இலங்கை உறவு தேவை என்று கூறினார். இதனால் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் பிரணாப் முகர்ஜிக்கு ம.தி.மு.க. ஆதரவு அளிக்காது.

மூத்த வக்கீல் ராம்ஜெத்மலானி என்னிடம் போனில் பேசி பிரணாப் முகர்ஜியை ஆதரிக்கக்கூடாது என கேட்டுக் கொண்டார். முல்லை பெரியாறு அணை பிரச்சினையில் தி.மு.க.வைவிட அ.தி.மு.க. அரசின் அணுகுமுறை சிறப்பாக உள்ளது

தமிழ் நாட்டில் ஈழத்தமிழ் அகதிகளும் பிழைப்புவாதிகளும் : வியாசன்

ஈழப் போராட்டத்தில் இந்தியத் தலையீடு என்பது கொலைகளையும் ரணங்களையும் அவலங்களையும் எச்சமாக விட்ட்டுவைத்த சாபக்கேடு என்றால் தமிழ் நாட்டு அரசியல் வாதிகளின் தலையிடு அதற்கும் மேலானது. பரந்துபட்ட தமிழ்நாட்டு மக்களுக்கோ அங்கே வாழ்வதற்காகப் போராடும் ஒடுக்கப்படுகின்ற மக்களுக்கோ முகவரி தெரியாத அரசியல் பிழைப்பு வாதிகள் ஈழம் பெற்றுத்தருகிறோம் என்று நரம்பு புடைக்கக் கொக்கரிக்கும் போது மனிதம் மறுபடி மறுபடி சாகடிக்கப்படுவதாய் உணர்கிறோம். புலம்பெயர் நாடுகளில் உணர்ச்சியூட்டும் கவர்ச்சிக் கூச்சல்களுக்கு விசிலடிக்கும் ஒரு சிறிய கூட்டத்தைத் தவிர இந்தப் பிழைப்பு வாதிகளை யாரும் கண்டுகொள்வதில்லை.

வைகோ, திருமாவளவன், ராமதாஸ், நெடுமாறன், சீமான் என்ற ஒரு நீண்ட வரிசையைக் காணலாம். ஈழத்தில் மக்கள் சாரி சாரியாக் கொன்று குவிக்கப்பட்ட போதெல்லாம் இந்த வரிசைப் படுத்ட்ல்களில் உள்ளடங்கியவர்கள் ஒரு துரும்பைக் கூட அசைக்க முயலவில்லை.

வழக்குரைஞர்கள், மாணவர்கள் என்ற தன்னெழுச்சியான மற்றும் ஒடுக்கப்பட்ட அமைப்புக்களின் போராட்டங்கள் முன்னெழுந்த ஒவ்வோரு தடவையும் அவற்றை அழிப்பதற்கான அத்தனை நடவடிக்கைகளையும் மேற்கொண்டவர்கள் இவர்கள்.. அழிவுகளுக்கு எதிராகப் போராடியவகளிடம் நீங்கள் வாயை மூடுங்கள் நாங்கள் பேசித் தீர்த்த்துக் கொள்கிறோம் என்று நந்திக்கடல் இரத்தச் சிவப்பாகும் வரை பேசிக்கொண்டிருந்தனர்.

ஈழத் தமிழர்கள் மீது கைவத்தால் தமிழகம் பற்றி எரியும் என்று இன்று பேசும் அதே உணர்ச்சியோடு புலம்பெயர் மக்களை நம்பவைத்து ஏமாற்றியவர்கள்.

மிருகத்தின் வெறியோடு பல்தேசிய நலன்களுக்காக தமிழக மக்களை ஒடுக்கும் அரச படைகளால் சித்திரவதை செய்யப்பட்டு அனாதரவாகத் தெருவோரங்களில் வீசியெறியப்பட்ட ஒடுக்கப்பட்ட தமிழகத் தமிழர்களின் பிணங்களைக் கடந்து புலம் பெயர் நாடுகளுக்கு இலவச விமானச் சீட்டோடு வந்திறங்கி மேடைகளில் முழங்கிவிட்டுச் செல்லும் இந்த அரசியல் வியாபாரிகள் விலகிக் கொண்டாலே ஈழப் போராட்டத்திலும் அதன் வரலாற்றிலும் ஆயிரம் பூக்கள் மலரும்.

இவர்கள் மௌனமாக இருந்திருந்தாலே முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நிகழந்த வேளைகளில் தமிழக மக்கள் காத்திரமான பங்களிப்பை வழங்கியிருந்திருக்கக் கூடும்.

அத்தனையையும் நடத்தி முடித்துவிட்டு தமிழின விரோதியாக தன்னைத் தானே பிரகனப்படுத்திக்கொண்ட ஜெயலலிதாவை நம்பக் கோரினார்கள். ரஜீவ் கொலையில் சட்டவிரோதமாகக் குற்றம் சுமத்தப்பட்ட முன்று பேரையும் தூக்கில் போட வேண்டும் என்று ஜெயலலிதா அரசு நீதிமன்றத்தில் மனுக் கொடுத்த பின்னரும் இவர்களிகளில் பெரும்பாலம்னவர்கள் ஜெயலலிதாவை ஈழத்தாய் என மகுடம் சூட்டினார்கள்.

ஜெயலிதா அரசு ஆட்சிக்கு வந்த மறுகணமே பரமக்குடியில் அப்பாவி மக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள உத்தரவிட்டதை இந்த ஈழம் பெற்றுக்கொடுக்கும் பேர்வழிகள் கண்டுகொண்டதில்லை. மக்கள் கொல்லப்பட்ட போதெல்லாம் மனிதாபிமானம் இவர்களுக்கு வந்ததில்லை. ஈழத் தமிழர்களுக்காக மட்டும் தெரிந்தெடுத்த மனிதாபிமானம் கூரையைப் பிய்த்துக்கொண்டு இவர்களது தலைகளில் ஏறிவிடும்.

இன்றுவரை இவர்கள் செய்த கைங்கரியம் எல்லாமே ஒடுக்கப்பட்ட, போராடுகின்ற தமிழ் மக்களை மட்டுமல்ல, இந்தியா முழுவதும் வாழும் ஈழப் போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் போராட்ட சக்திகளை அன்னியப்படுத்தியமையே ஆகும்.

சரி, இவர்கள் எல்லாம் பிழைப்புக்காக அன்றி, உண்மையிலேயே ஈழ மக்களுக்காக தமிழகத்திலிருந்து போராடுகிறவர்கள் என்று ஒரு பேச்சுக்கு வைத்துக்கொள்வோம். 20 வருடங்களாக சிறப்பு முகாம் என்ற சித்திரவத்கைக் கூடங்களில், அகதிகளாக தமிழ் நாட்டிற்கு வந்த ஈழத் தமிழர்கள் வதைக்கப்படுகிறார்களே இவர்கள் இது குறித்து மூச்சுக்கூட விட்டதில்லையே ஏன்?

கியூ பிரிவு என்ற தமிழ் நாட்டு அரசின் ஈழத் தமிழர்களுக்கான போலிஸ் பிரிவின் நேரடிக் கட்டுப்பாட்டினுள் இயங்கிவரும் இந்தச் சிறப்பு முகாம் செங்கல்பட்டு என்ற இடத்தில் இன்னும் இயங்கிவருகிறது.

இதுவரை ஆயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள், ஈழ அகதிகள் விடுதலைப் புலிகள் என்ற சந்தேகத்தின் பெயரில் இந்தச் சிறைகளில் அடக்கப்பட்டுச் சித்திரவதை செய்யப்பட்டுள்ளனர். இரட்டைப்பட்டு தங்கச் சங்கிலியோடு “உணர்ச்சிக் கவிஞர்” காசியானந்தன் தமிழகத்தின் தலையில் உட்கார்ந்து ஈழப் போர் நடக்கும் என சுதந்திரமாக கூச்சலிடும் அதேவேளை சிறப்பு முகாம்கள் என்ற சித்திரவதைக் கூடங்களில் சுதந்திரத்திற்காகப் போராடிய ஈழப் போராளிகள் கூடச் சித்திரவதை செய்யப்பட்டார்கள்.

காசியானந்தனும் அவரது பரிவரங்களும் ரோவினால் இயக்கப்ப்படுகிறார்களா இல்லையா என்பதெல்லாம் எமது ஆய்வில்லை. ஈழத்தமிழர்கள் அவரது காலடியில் அவல நிலைக்கு உள்ளாக்கப்படும் போது எப்படி மௌனித்திருக்க முடிகிறது என்பதே எமது கேள்வி.

சர்வதேசச் சட்டங்களுக்கு எதிராக மட்டுமல்ல இந்தியச் சட்டங்களுக்கும் எதிரான இந்தச் சட்டவிரோத சிறப்பு முகாம்களில், தமிழ் நாடு காவல்படை விரும்பிய போதெல்லாம் சித்திரவதை செய்யலாம். எவ்வளவு காலம் வேண்டுமானாலும் விசாரணையின்றி தடுத்துவைத்திருக்கலாம். செத்துப் போகாமல் இருப்பதகற்காக மட்டுமே உணவு வழங்கப்படும்.

காற்றோட்டமற்ற விலங்குகள் வாழும் இடம் போன்ற இருட்டறைகள்! வெளி உலகில் இருந்து முற்றாகத் தனிமைப்படுத்தப்ப்ட்ட சட்டவிரோத செயற்பாடுகள்!! இந்திய ஜனநாயகத்தின் விம்பத்தை ஈழத்தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தும் நுளை வாயில்!!!.

இலங்கை அரச பேரினவாதிகளின் கொலைக்கரங்களிலிருந்து தப்பியோடிப் பல இன்னல்களைக் கடந்து தமிழ் நாட்டில் வந்திறங்கிய அனாதரவான அப்பாவிகள் இன்னொரு அழிப்பிற்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.

செங்கல்பட்டு சிறப்பு முகாமில் சட்டவிரோதமாக அடைத்துவைக்கப்பட்டுள்ள 28 அகதிகளில் 13 பேர் சாகும்வரை உண்ணாவிரதமிருக்கிறார்கள். இதில் மூன்று பேரின் நிலை கவலைகிடமாக உள்ளது.

சிறப்பு முகாம் தவிர ஈழத் தமிழ் அகதிகள் வாழும் ஏனைய முகாம்களிலும் அடிபடை மனித உரிமைகள் கூட வழங்கப்படுவதில்லை. .இவர்கள் குறித்தும் பிழைப்புவாத அரசியல்வியாபாரிகள் மூச்சுக்கூட விடுவதில்லை.
103 முகாம்களில் அகதிகள் வாழ்கிறார்கள். இந்த முகாம்களின் தெளிவற்ற புள்ளிவிபரங்களின் அடிப்படையில் ஒரு லட்சம் அகதிகள் வாழ்கிறார்கள். பல அகதிகள் 25 வருடங்களுக்கு மேலாக அங்கே வாழ்கிறார்கள். அவர்களது குழந்தைகள் திருமணம் செய்துகொண்ட பின்னர் கூட அங்கே அகதி முகாம்களிலேயே வாழ்கிறார்கள். இவர்களுக்கு இந்தியப் பிராஜா உரிமை வழங்கப்படுவதில்லை. இலங்கை மண்ணையே மிதிக்காத மனிதர்கள் இன்னமும் அகதி என்ற அடைமொழியுடனேயே வாழ்கிறார்கள்.

முகாம்களிலும் அதற்கு வெளியிலும் வாழ்கின்ற அகதிகளின் எண்ணிக்கை இன்னும் பல மடங்காக்கலாம். அகதிகளின் குழந்தைகளுக்கு பல்கலைக் கழக அனுமதி பெறுவதே இயலாத காரியம். இந்தியப் பிரஜை இல்லை என்பதால் வெளி நாட்டவர்களுக்கான கட்டணக்மே அறவிடப்படுகின்றது. இதே காரணத்தால் முழு நேர வேலையில் இணைந்து கொள்வது பல சந்தர்ப்பங்களில் சாத்தியமற்றதாகின்றது.

உலகில் இந்த நூற்றாண்டின் அடிமைகள் போன்று நடத்தப்படும் இந்த அகதிகள் குறித்து பிழைப்பு வாதிகள் தமது மாளிகைகளில் இருந்து கண்துடைப்பு அறிக்கை கூட எழுதியது கிடையாது.

– செங்கல்பட்டு சித்திரவதை முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள அகதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.

 – ஏனைய முகாம்களில் வாழும் அகதிகளுக்கு அடிப்படை வசதிகள் வழங்கப்பட வேண்டும்.

– பல வருடங்களாக தமிழ் நாட்டில் வாழ்பவர்களும் அங்கேயே பிறந்தவர்களும் விரும்பினால் இந்தியப் பிரஜா உரிமை வழங்கப்பட வேண்டும்.

– சரவதேசச் சட்டங்களின் அடிப்படையில் அந்த மக்களின் உரிமைகள் அனைத்தும் வழங்கப்பட வேண்டும்.

புராணக் கதைகளில் ஞானச்மபந்தர் என்ற பிராமணர் இலங்கையை நோக்கி ராமேஸ்வரத்திலிருந்து தேவாரம் பாடியது போன்று தமிழ் இனவாதிகள் ஐரோப்பிய புலம்பெயர் நாடுகளில் வாழும் அகதிகளின் பணத்தைக் குறிவைத்து உணர்ச்சிவசப்பட்டது போதும். இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள். முடியாவிட்டால் போராடுங்கள். ஈழம் பெற்றுக்கொடுப்பதை விட இது இலகுவானது. சீமான் தனது கட்சி ஆவணத்தில் குறிப்பிட்டது போன்றே “இந்திய ஒருமைப்பாட்டிற்கும், இறையாண்மைக்கும் பாதிப்பின்றியே” இந்த இலகுவான கோரிக்கைகளை நிறைவேற்றலாம்.

இவற்றை நிறைவேற்றாமல் ஈழம் பெற்றுக் கொடுக்கிறோம் பேர்வளிகள் என்று யாராவது வந்தால் அவர்களது முகத்தில் ………………!