Tag Archives: அரச பயங்கரவாதம்

குருதியுறைந்த ஜூலைப் படுகொலைகள் : சபா நாவலன்

பிரித்தானியக் குடியேற்றத்தின் பின்னான காலம் நெடுகிலும் தனது தேசிய அடையாளத்திற்காக மரணத்துள் வாழ நிர்பந்திக்கப்பட்ட மக்கள் கூட்டம் தான் இலங்கைத் தமிழ்ப் பேசும் சிறுபான்மையினர்.வன்னி இனப்படுகொலைகள் வரைக்கும் நகர்த்திவரப்பட்ட மனிதப் பேரவலங்களின் முன்னறிவிப்பே ஜுலைப் படுகொலைகள். இன்று தமிழ்ப் பேசும் மக்களுக்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. மீண்டும் அப் படுகொலைகள் வரலாற்றுச் சுழற்சியில் இடம்பெறலாம் என்ற அச்சம் ஒவ்வொருவரதும் ஆழ் மனதில் குடிகொண்டுள்ளது. அச்சம் தரும் வகையில் பௌத்த அடையாளங்கள் தமிழ்ப் பகுதிகள் முழுவதும் முளைத்துக்கொண்டிருக்க நல்லிணக்கம் குறித்துப் பேசுகிறது இலங்கையரசு. இன்னும் எப்போதாவது படுகொலைகள் நடைபெறலாம் என்று அச்சம் கொள்வதற்கான குறியிடுகளாக இவை கருதப்படுகின்றன. இத்தனை அழிவுகளுக்குப் பின்னரும் ஒற்றையாட்சியையும், பௌத்த சிங்கள மேலாதிக்கவாதத்தையும் தனது உறுதியான கோட்பாடாக முன்வைக்கும் இலங்கை அரசும் அதன் அடிமைகளும் வரலாற்றைத் திரும்பிப்பார்க்க மறுக்கின்றனர்.

1956 இல் தான் முதல் படுகொலையைச் எதிர்கொண்டனர். 1952 ஆம் ஆண்டு இலங்கையின் முதல் பிரதமரான டி,எஸ்.சேனாநாயக்கவினால் 7.2 மில்லியன் டொலர் செலவில் ஆரம்பித்து வைக்கப்பட்ட கல்லோயத் திட்டத்தின் பின்னணியில் கிழக்கு மாகாணத்தில் தமிழ்ப் பேசும் மக்களின் செறிவைச் சீர்குலைப்பதற்கான பேரினவாத நோக்கமே அடிப்படையாக அமைந்தது.

திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்திற்கான முதல் பரீட்சாத்த முயற்சியாக இது கருதப்படலாம். பட்டிப்பளை ஆறு என்ற தமிழ்ப் பெயர் கல் ஓயா என்று சிங்களத்தில் மாற்றப்படிருந்தது.

150 குடும்பங்களைக் குடியேற்றும் நோக்கோடு, ஏறத்தாள நாற்பதாயிரம் ஏக்கர் நிலத்திற்கு நீர்ப்பாசனம் வழங்கும் வகையில் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. தமிழர்கள், முஸ்லீம் தமிழர்கள், வேடர்கள், சிங்களவர் போன்ற இனக் கூறுகளைக் கொண்ட நிலமற்ற குடும்பங்கள் குடியேற்றப்பட்டன. குடியேற்றம் நிகழ்ந்த போது சிறீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியிலிருந்தது. சிங்கள மொழியை மட்டும் ஆட்சிமொழியாக மாற்றும் தனிச் சிங்களச் சட்டமூலம் சமர்பிக்கப்பட்ட ஜூன்.1956 இல் கல் ஒயா குடியேற்றங்கள் முற்றுப் பெற்றிருந்தன. 50 வீதமான சிங்களக் குடும்பங்களை கொண்டிருந்த இத்திட்டத்தில் குடியேற்றப்பட்ட தமிழ்ப் பேசும் சிறுபான்மையினர் மத்தியில் அதிர்ப்தி நிலவிவந்தது. வளமற்ற பகுதிகளில் அவர்கள் குடியேற்றப்பட்டிருந்தனர்.

கொழும்பில் தனிச் சிங்களச் சட்ட மசோதா சமர்ப்பிக்கப்பட்ட வேளையில் அதற்கு எதிராகப் போராடிய தமிழ்த் தேசிய வாதிகளை இலங்கை அரச குண்டர் படையினர் தாக்கிய சம்பவம் அதிர்வுகளை ஏற்படுத்தியிருந்தது.

ஜூன் மாதம் ஐந்தாம் திகதி 1956 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தச் சம்பவத்தின் பின்வந்த சில நாட்கள் தலைநகரிலிருந்த தமிழ்ப் பேசும் மக்களின் வியாபார நிறுவனங்கள் தாக்கியழிக்கப்பட்டன.

கல் ஓயாவில் இதன் எதிரொலியை காணக்கூடியதாக இருந்தது. குடியேற்றப்பட்ட தமிழ்- சிங்கள இனப் பிரிவுகளிடையே சிறிய வன் முறைகள் ஏற்பட்டன. 10ம் திகதி ஜூன் மாதம் கொழும்பு சிங்கள நாழிதழ்கள் சிங்கள யுவதி ஒருவர் பாலியல் வன் முறைக்கு உள்ளாக்கப்பட்டதாக செய்த் வெளியிட்டிருந்தன. 11ம் திகதியில் சிங்களக் குடியேற்ற வாசிகள் மத்தியில்ருந்த காடையர்கள் தமிழ்ப் பேசும் சிறுபான்மையினரைக் கோரமாகக் கொலைசெய்ய ஆரம்பித்தனர். காவல் துறையினர் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இரண்டு நாட்களுக்குள் 150 அப்பாவித் தமிழர்கள் அனாதைகளாகக் கொன்று குவிக்கப்பட்டனர்.

1983.julyஒரு புறத்தில் சிங்களப் பேரினவாதிகளும் தமிழ் அரசியல் வாதிகளும் தமது சமூகம் சார்ந்த வாக்குத் திறனை அதிகப்படுத்திக்கொள்ள மக்களின் உணர்வுகளைப் ப்யன்படுத்திக் கொள்ள, கல் ஓயா கொலைகள் சில அறிக்கைகளோடு மறைந்து போயின.

இந்தியாவின் தென் மூலையில் அதன் இரத்தக் கண்ணிர் போன்று அமைந்திருக்கும் இலங்கைத் தீவின் முதல் இனப்படுகொலை கல் ஓயாப்படுகொலைகளே.

1958 இல் நாடு தழுவிய அளவில் தமிழ்ப் பேசும் மக்களுக்கு எதிரான வன் முறைகள் ஆரம்பித்தன. பண்டாரநாயக்க தனிச்சிங்களச் சட்டத்தைக் கொண்டுவந்ததன் பின்னதாக ஏற்பட்ட பண்டா – செல்வா ஒப்பந்தம் ஐக்கிய தேசியக் கட்சியின் தீவிர எதிர்ப்பினால் கிழித்தெறியப்பட்டது. இது குறித்துப் பேசுவதற்காக தமிழரசுக் கட்சியின் மாநாடு ஒன்று வவுனியாவில் ஏற்பாடுசெய்யப்பட்டது. இந்த மாநாட்டில் சிங்கள எதிர்பு முழக்கங்கள் முன்வைக்கப்பட்ட அதே வேளை வன்முறையற்ற வழிகளில் போராட்டங்கள் நடத்துவதகத் தீர்மானிக்கப்படுகிறது. மாநாட்டில் கலந்துகொள்ள மட்டக்களப்பிலிருந்து சென்ற இரண்டு தமிழர்கள் சிங்கள இனவெறியர்களால் பொலநறுவைப் புகையிரத நிலையத்தில் கோரமாகக் கொலைசெய்யப்படுகின்றனர்.

பொலநறுவைக் கரும்புத் தோட்டத்தில் தொழில் செய்த ஏழைத் தமிழ்த் தொழிலாளர்கள் சிங்களக் காடையர்களால் தாக்கப்படுகின்றனர். 70 தமிழர்கள் கொல்லப்படுகின்றனர். மே மாதம் 25 ஆம் திகதி 70 தமிழர்களை கொன்று குவித்த படுகொலை நிகழ்வு தமிழ்ப்பேசும் மக்கள் வாழும் பகுதியெங்கும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தமிழ்ப் பேசும் மக்களுக்கு எதிரான தாக்குதல்கள் நாடு முழுவதும் பரவ ஆரம்பித்தது. பாணந்துறையில் இரண்டு சிங்களப் பெண்கள் கொலை செய்யப்ப்படுகிறார்கள். இதனைத் தொடர்ந்து அங்கிருந்த இந்துக் கோவில் அர்ச்சகர் உயிரோடு எரிக்கப்படுகிறார்.

நுவரெலிய நகராட்சித் தலைவர் தனிப்பட்ட காரணங்களுக்காகக் கொலைசெய்யப்படுகிறார். இவரது கொலையே வன்முறைகளுக்குக் காரணம் என நாட்டின் பிரதமர் வானொலியில் உரையாற்ற தமிழ்ப் பேசும் மக்களுக்கு எதிரான வன் முறைகளுக்குப் பிரதமர் அங்கீகாரம் வழங்கியது போல் இருந்தது.

300 வரையான தமிழ்ப் பேசும் மக்களைக் காவுகொண்ட வன் முறை நிகழ்வுகளின் எதிர்விளைவாக 12 ஆயிரம் தமிழர்கள் அகதிகளானார்கள்.

ஓகஸ்ட் மாதம் 1977 ஆம் ஆண்டு இலங்கைப் பொதுத் தேர்தலின் பின்னதாக உருவெடுத்த வன்முறைகள் இலங்கை முழுவதும் 400 வரையான தமிழர்களைக் கொன்று போட்டதுடன் 15 தமிழர்களை அகதிகளாக்கியது. 77 வன்முறை மலையகத் தமிழர்களையும் பெருமளவில் பாதித்தது. 1977 தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணிக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியும், அதன் பின்னதான உணர்வலைகளும் இலங்கையில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது.

பல்கலைக் கழகங்களுக்கான மொழிவாரித் தரப்படுத்தல்கள், திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் போன்றன தமிழ்த் தேசிய வாத அலையைத் தோற்றுவித்திருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவத் தாக்குத்தல்கள் அதன் மீதான வெறுப்புணர்வு என்பன பேரினவாதத்தை உக்கிரன்மடையச் செய்திருந்தது. பிரதம மந்திரி ஜே.ஆர்.ஜெயவர்தன தனது யாப்பியல் சர்வாதிகாரத்தை நிலை நாட்ட சிங்களப் பேரின வாதத்தைப் பயன்படுத்திக் கொண்டார். இவை அனைத்திற்கும் பலியான அப்பாவித் தமிழர்கள் இலங்கைத் தீவின் பிரசைகளாகக் கருதப்பட்டனர்.

1977 இல் தமிழ்ப் பேசும் மக்கள் மீதான படுகொலைகள் கட்டவிழ்த்துவிடப்பட்ட பின்னர், நாட்டின் பிரதமர் ஜெயவர்தன பாராளுமன்றத்தில் பேசியது பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. “நீங்கள் சண்டையிட முயற்சித்தால் அவர்களும் சண்டை போடுவார்கள். நீங்கள் சமாதனத்தை விரும்பினால் அவர்களும் விரும்புவார்கள். தமிழர்கள் சிறுபான்மை என்ற வகையில் அவர்களுக்கு உரிய இடம் வழங்கப்படும்.” இலங்கையில் வாழுகின்ற ஒவ்வொரு தமிழ்ப் பேசும் குடிமகனுக்கும் தான் இலங்கையன் அல்ல என்ற உணர்வை முதலில் வெளிப்படையாக ஏற்படுத்திய உரை அதுவாகும்.

july23ம் திகதி ஜூலை மாதம் 1983 ஆம் ஆண்டு இதுவரை நடந்திராத நாடுதழுவிய வன்முறை தமிழ்ப் பேசும் மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டது. 3000 தமிழர்கள் வரை கோரமாகக் கொல்லப்பட்ட ஜூலைப் படுகொலைகள் யாழ்ப்பாணத்தில் 13 இராணுவத்தினர் விடுதலைப் புலிகளால் கொலை செய்யப்பட்டதன் எதிர்வினையாக மேற்கொள்ளப்பட்டது என அரச தரப்புப் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. 1977 இல் ஜெயவர்தன கூறிய போர் என்றால் போர் என்ற தமிழ்ப் பேசும் மக்களுக்கு எதிரான யுத்தப் பிரகடனம் 1983 இல் மறுபடி பிரயோகிக்கப்பட்டது.

அரச படைகள் இனப்படுகொலையைக் கட்டுப்படுத்த முனையவில்லை. சிங்களக் காடையர்கள் வெலிக்கடை சிறைச்சாலையில் சிறை வைக்கப்படிருந்த தமிழ் அரசியல் கைதிகளைப் மனித குலம் வெட்கித் தலைகுனியும் வகையில் கொன்று குவித்தனர். தலை நகரில் வாக்களர் விபரத்தைச் சேகரித்துக்கொண்ட இனவெறியர்கள் தமிழ்ப் பேசும் மக்களின் வீடுகளைச் சூறையாடினர். உயிரோடு தீவைத்துக் கொழுத்தப்பட்ட தமிழர்கள் பலர்.

நாடே மனித அவலத்துள் அமிழ்த்தப்பட்டது. தெருவோரத்தில் சாகடிக்கப்பட்ட அனாதைத் தமிழர்களின் பிணங்கள் அப்புறப்படுத்தப்பட நாட்கள் சென்றன. அரச இயந்திர வன்முறையை வெளிப்படையாக தனது நாட்டு மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்ட போதுதான் தமிழ்ப் பேசும் மக்கள் மரணத்துள் வாழ்வதாக உணரத் தொடங்கினார்கள்.

இனப்படுகொலை திட்டமிட்டு ஆரம்பிக்கப்பட்ட இரண்டாவது நாள் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டிருந்த போராளிகள் 37 பேர் சிங்கள இன வெறியர்களால் கோரமாகக் கொலைசெய்யப்பட்டார்கள். தமிழ்ப் பேசும் மக்களின் உணர்வுகள் எரிந்துகொண்டிருக்க, இது நடந்து மூன்றாவது நாள் மறுபடியும் பதினைந்து தமிழ்க் கைதிகள் கொசுக்கள் போல அதே சிறைக்கூடத்தில் கொல்லப்பட்டார்கள். பேரினவாதம் என்ற கருத்தியல் நிகழ்த்திய படுகொலைகள் தான் இவைகள்.

மலையகத் தமிழர்கள் அரை மனிதர்களாகவே கருதப்படுகிறார்கள். இலங்கை அதிகாரம் தங்கியிருக்கும் பெருந்தோட்டத் தொழிற்துறையின் கூலி அடிமைகளாக அவர்கள் நடத்தப்படுகிறார்கள். இலங்கையின் மத்திய பகுதியில் அங்கீகரிக்கப்பட்ட சிறைகளில் ஒரு நூற்றாண்டுக்கு மேலாக அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். பேரினவாதத்தின் ஒவ்வொரு அசைவும் அவர்களை மேலும் சூறையாடுகின்றது.

சிங்கள மக்கள் மத்தியில் புரையோடிப் போயிருக்கும் சிங்கள பௌத்த மேலாதிக்கச் சிந்தனை, பிரித்தானியரால் உரமிட்டு வளர்க்கப்பட்டது. அனகாரிக தர்மபாலவைத் திட்டமிட்டு உருவாக்கியது பிரித்தானிய அரசு. பௌத்த மதத்தை அரசியல் தளத்தை நோக்கி நகர்த்திய பிரித்தானியப் பிரித்தாளும் தந்திரம், நிறுவன மயப்பட்ட சிங்கள பௌத்த மேலாதிக்க வாதத்தை பேரினவாதமாக வளர்த்துள்ளது.

இலங்கையில் பேரினவாதம் என்பதே சிங்கள பௌத்த மேலாதிக்க வாதக் கருத்தியலை அடிப்படையாகக் கொண்டதாக அமைகிறது. தொலைதூரக் கிராமங்கள் வரை அக்கிராமங்களை கட்டுப்படுத்தும் பௌத்த விகாரைகள் வழியாக இக்கருத்தியல் நிறுவனமயப்பட்டுள்ளது. எந்த அரசியலும் எப்போதும் பயன்படுத்தக் கூடிய வகையிலான சோவனிசமாக, சமூகத்தின் எதிர்மறைச் சக்தியாக உருவெடுத்துள்ள சிங்கள பௌத்த மேலாதிக்கம், அதன் வழியான சோவனிசம் எப்போது அழிக்கப்படும் என்பது சிங்கள முற்போக்காளர்கள் எழுப்ப்பும் வினா.

சிறுபான்மைத் தேசிய இனங்களின் விடுதலைக்கான போராட்டம் சரியான திசைவழி நோக்கி வளர்ந்து செல்லும் உச்ச நிலையில் சிங்களத் தேசிய இனம் தான் கட்டுண்ட சிங்கள பௌத்த மாயையிலிருந்து விடுதலை பெற வாய்ப்புகள் உண்டு. ஐம்பதாயிரம் அப்பாவிகளை கொன்றுகுவித்த ராஜபக்ச அரச அதிகாரம் மீண்டும் வெற்றிபெறத் துணைவந்தது கூட சிங்கள பௌத்த சிந்தனையில் ஊறியிருக்கும் சோவனிசம் தான்.

இனப்படுகொலையின் கோரத்திலிருந்து  மக்கள் இன்னும் விடுப்பட்டாகவில்லை. மனிதச் சீர்குலைவு நிலையிலிருந்து அவர்கள் மீண்டாகவில்லை. இப்போது தவறுகளை அவர்கள் பார்த்திருக்கிறார்கள். நண்பர்கள் எதிரிகள் எல்லாம் வெளிப்படையாகத் தம்மை இனம் காட்டிக்கொண்டிருக்கிறார்கள். மக்கள் விரோதிகள், சமூகத்தின் எதிரிகள், காட்டிக்கொடுத்தவர்கள், லும்பன்கள் ஏன் தமது “துரோகிகள்” என்பவைகளை எல்லாம் மக்கள் தெரிந்துவைத்திருக்கிறார்கள். அழிவுகளிலிருந்து சுதாகரித்துக்கொண்டு பிழைப்பு வாதிகளின் தடைகளைத் தாண்டி மக்கள் மீண்டும் எழுச்சிகொள்வார்கள். தமிழ்ப் பேசும் சிறுபான்மைத் தேசிய இனங்கள் தனது பிரிந்துபோகும் உரிமைக்காகத் தொடர்ந்து போராடுவது தவிர்க்க முடியாது என்பதை இன்று ஜூலைப் படுகொலை நாளில் மக்கள் விரோதிகளின் முகத்தில் அறைந்து உரக்கச் சொல்வோம்.

Published on: Jul 11, 2012 | மீள் பதிவு

பாசிஸ்ட் மோடியை வரவேற்கும் செலவைப் பொறுப்பேற்கும் லைக்கா மொபைல்

lycamobieஇனக்கொலையாளியும் இந்திய இந்து பாசிஸ்டுமான நரேந்திர மோடியை வரவேற்பதற்காக வெம்பிளி அரங்கு 13.11.2015 முழு நாளும் வாடகைக்கு அமர்த்தப்பட்டுள்ளது. விழாவிற்கான ஒழுங்குகளைக் கவனிப்பதற்காக ‘பிரித்தானியா மோடியை வரவேற்கிறது’ என்ற தலையங்கத்தச் சுமந்த 450 பணியாளர்களைக் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இரவு விருந்து, கலை நிகழ்ச்சிகள், உரைகள் போன்றவை பிரித்தானிய பல் தேசிய வியாபார நிறுவனங்களின் அனுசணையுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

நள்ளிரவு வரைக்கும் வெம்பிளி அரங்கை வாடகைக்கு அமர்த்துவதற்கான செலவுத் தொகை மட்டும் 2 மில்லியன் பிரித்தானிய பவுண்ஸ்கள்.

அதற்கான செலவு முழுவதையும் மோடியை இயக்கும் பல்தேசிய நிறுவனங்கள் போட்டி போட்டுப் பொறுப்பெடுத்துக்கொண்டன. செலவுகளைப் பொறுப்பெடுத்துக்கொண்ட நிறுவனங்கள் தொகைக்கு ஏற்ப வெள்ளி, தங்க அனுசரணையாளர்கள் எனத் தரம்பிரிக்கப் பட்டிருந்தனர்.

இதில் பிரதான தகவல் என்னவென்றால், லைக்கா மோபைல் நிறுவனம் முதல் தர தங்க அனுசரணையாளர்கள் என்பதே. இலங்கையின் இனக்கொலையாளி மகிந்த ராஜபக்சவின் பொதுநலவாய நாடுகளில் முதல்தர அனுசரணையாளர்களான லைக்கா நிறுவனத்தினர், இனக்கொலையாளி மோடியின் இன்றைய பண வழங்குனர்கள்

மனிதகுல விரோதி மோடியை வரவேற்கும் களியாட்டங்களுக்கான செலவுகளைப் பொற்ப்பெடுத்துக்கொண்ட ஏனைய நிறுவனங்களில், சண் மார்க், இந்தியன் வங்கி, டாட்டா, ரவலெக்ஸ், பாங்க் ஒப் பரோடா போன்றவை பிரதானமானவை.

இந்து பாசிசமானாலும், சிங்கள பௌத்த பேரினவாதமானாலும், தமிழ்த் தேசிய அடிப்படைவாதிகளானாலும் லைக்கா போன்ற பல்தேசிய வியாபாரக் கொள்ளையர்களுக்கு வேறுபாடுகள் கிடையாது.

இன்று மோடி பிரித்தானியப் பிரதமரின் அலுவலகத்திற்கு வருகை தந்த போது, ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் இனக்கொலையாளிக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். லைக்கா நிறுவனம் உட்பட்ட ஏனைய பல்தேசிய நிறுவனங்கள் இந்த மக்களின் எதிரிகள் என்பதை நிறுவியுள்ளன.

மோடியின் வருகையை எதிர்த்து லண்டனில் நடந்த ஆர்ப்பாட்டம்: நிர்வாணமான இந்திய ஜனநாயகம்

மைக்ரோ சொப்ட், சிஸ்கோ, இன்டல்: ஸ்னோடெனின் புதிய தகவல்கள்

NSA-Partnersஉலகத்தை ஆட்சி செய்யும் பல்தேசிய வியாபார நிறுவனங்கள் மக்களை உளவுபார்க்கும் செயற்பாட்டிலும் ஈடுபட்டுவருகின்றன. அமெரிக்க அரசின் தேசிய பாதுகாப்பு முகவர் நிலையத்திற்கு மக்களை உளவுபார்த்து அவர்களின் அரசியல் நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களை வழங்கும் நிறுவனங்களில் AT&T, Verizon, Microsoft, Cisco, IBM, Oracle, Intel, Qualcomm, Qwest and EDS போன்ற பல்தேசிய வியாபார நிறுவனங்களும் அடங்கும் என எட்வார்ட் சினோடென் வெளியிட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆளும் அரசுகளின் முழுமையான ஆதரவோடும் பங்களிப்போடும் உழைக்கும் மக்களைச் சுரண்டிக் கொழுக்கும் இந்த நிறுவனங்கள் தமது நாட்டு மக்களையே உளவு பார்க்கும் செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வருகின்றன. இவ்வாறான நிறுவனங்களுக்காகப் உலகம் முழுவதும் போரைக் கட்டவிழ்த்துவிட்டு கொத்துக்கொத்தாக மக்களைக் கொன்றுகுவிக்கும் அமெரிக்கா உட்பட்ட ஏகாதிபத்திய நாடுகள் அதே நிறுவனங்களுடன் இணைந்து தமது சொந்த நாட்டு மக்களையும் உளவு பார்க்கின்றன.

உலகின் ஏகபோக முதலாளித்துவ நாடுகள் தம்மைச் சுற்றி இரும்புத் திரை ஒன்றை எழுப்பியுள்ளன. சாமான்ய மனிதன் அறிந்துகொள்ளத்தக்க நாளாந்த தகவல்களைக் கூட தமது இரும்புத்திரைக்குள் பூட்டிவைத்து சர்வாதிகாரச் சிறை ஒன்றை அவை எழுப்பியுள்ளன. இந்தத் திறந்தவெளிச் சிறைக்குள் தமது அடிப்படை உரிமைக்காகப் குரல்கொடுக்கும் அனைவரையும் உளவுபார்த்துக் கண்காணிக்கும் பொறிமுறை ஒன்றை இந்த அரசுகள் ஏற்படுத்தியுள்ளன.

மிகவும் பலம் மிக்க பல்தேசிய வியாபார நிறுவனங்கள், தன்னார்வ நிறுவனங்கள், இராணுவம், அதிகாரஅமைப்பு போன்ற அனைத்தும் இணைந்த ஆளும் அரசுகள் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் ஏற்பட்டுவரும் பொருளாதார நெருக்கடியின் விளைவாகப் போராட முனையும் அனைவரைம் முளையிலேயே அழிக்கும் கண்காணிப்புப் பொறிமுறை ஒவ்வொரு மனிதனையும் திறந்தவெளிச் சிறைக்குள் பூட்டிவைத்திருக்கிறது.

போராடுவதைத் தவிர வேறு வழிகள் இல்லை என்ற நிலைக்குத் தள்ளப்பட்ட மக்கள் கூட்டம் ஐரோப்பாவில் உருவாகி வருகின்றது. அரசுகளைப் பொறுத்தவரை அவர்களை அழிப்பதைத் தவிர வேறு வழி இல்லை என்ற நிலைக்குத் வந்தடைந்துள்ளன.

இவை அனைத்தையும் உடைத்துக்கொண்டு மக்கள் போராடத் தலைப்படுகிறார்கள். தம்மை ஆளும் முதலாளித்துவ அரசுகள் தமக்கானவை அல்ல, மில்லியன்களைக் கொள்ளையிடும் பல்தேசிய வியாபார நிறுவனங்களுக்கானவை என மக்கள் உணர ஆரம்பித்துள்ளனர்.’ஒளிந்து கொள்வதற்கு இடமில்லை’ என்ற தலைப்பில் கிளென் கிரீன்வால்ட் எழுதிய நூலில் ஸ்னோடென் வெளியிட்ட இத்தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

டெல்லியில் இந்திய அரசின் மாநாடில் கலந்துகொண்டவர்களும் அறிக்கையும்

meeting01

இந்திட அரசு டெல்லியில் நடத்திய மாநாட்டின் முடிவுகள் குறித்த தீர்மானம் இன்று வெளியிடப்பட்டது. இலங்கையில் இனப்படுகொலை நடத்திய இந்திய அரசு தனது ஆதரவாளர்களை அழைத்து தனது குகைக்குள்ளேயே கூட்டம் நடத்தி 13 வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துமாறு பங்களித்தவர்களின் ஊடாகக் கோரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்திய அதிகாரவர்க்கத்தின் நலன்களுக்காக இலங்கையில் தலையீடுகளை மேற்கொள்வதற்காக இந்திட அரசினால் திணிக்கப்பட்ட 13 வது திருத்தச்சட்டத்தை நிறைவேற்றுமாறு இந்திய அரசைக் கோரும் தீர்மானம் நிறைவேற்றுவதன் ஊடாக ஈழப் போராட்டத்தின் அடிப்படை நியாயங்களைக் கூடக் குழிதோண்டிப் புதைப்பதற்கு வழிசெய்துள்ளனர் .
மாநாட்டில் தலைமை வகித்த திரு பொன் சத்தியசீலன் கையொப்பமிட்டு வெளியிடப்பட்டுள்ள இந்த அவமனகரமான அறிக்கை இலங்கையில் ஒடுக்கப்படும் தமிழ்ப்பேசும் மக்களை இந்திய அரசுக்கு மீண்டும் காட்டிக்கொடுக்கிறது. புலம் பெயர் நாடுகளில் இயங்கும் அமைப்புக்கள் அனைத்தும் ஐந்தாம்படைகள் போன்று செயற்படும் நிலையில் இந்திய அரசின் குரலை நேரடியாகவே ஒலிக்கும் கூட்டம் ஒன்று தயாராகிவிட்டதை இந்த நிகழ்வு தெளிவாகக்காட்டுகின்றது.
தெற்காசியாவில் நடைபெறுகின்ற ஒடுக்கப்படும் மக்களின் ஒவ்வொரு போராட்டத்தினதும் எதிரியான இந்திய அரசு தனது நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ள புதிய முகவர் கும்பலைத் தயார்செய்துள்ளது.
சத்தியசீலனைத் தவிர, பி.ஏ.காதர், சார்ள்ஸ், ராம்ராஜ், ஜென்னி ஆகியோர் கூட்டத்தில் கலந்துகொண்ட அறியப்பட்ட முகங்கள்.

meeting02

meeting03

 

மாநாட்டுத் தீர்மானங்கள் – ஆங்கிலத்தில்

தொடர்புடைய பதிவுகள்:

டெல்லியில் இரத்தச் சோறு உண்கிறார்கள் : சபா நாவலன்

பிரபாகரன் சீவிக்கிறார் : மீண்டும் வை.கோ

vaikoஇலங்கையில் தமிழ்ப் பிரதேசங்கள் பாசிச ராஜபக்ச அரசால் புற்று நோய் போல அரிக்கப்பட்டு அபகரிக்கப்படுகின்றது. ‘அமைதியை’ப் போதித்த புத்தர் ஆக்கிரமிப்புச் சிலையாக அழிக்கப்படும் மக்களின் முற்றத்தில் நிறுவப்படுகின்றது. அவலத்தின் மத்தியில் வாழப்பழகிக்கொண்ட மக்கள் கூட்டம் உருவாக்கப்படுகிறது. எங்கும் இருள் சூழ்ந்த நம்பிக்கையிழந்த தமிழ்ப் பேசும் மக்கள் இழந்தவற்றிலிருந்து கற்றுக்கொண்டு ராஜபக்ச பாசிசத்தை முறியடிக்க குறைந்தபட்ச வழிகளைக்கூட அடைத்து அருவருப்பாக அழகுபார்க்கிறது ஒரு கூட்டம். பயப்படாதிர்கள் பிரபாகரன் வருவார் என்று ஈழப் பிரச்சனையை முன்வைத்துப் பிழைப்பு நடத்தும் வியாபாரிகள் இன்னும் வாழ்கிறார்கள். வை.கோ ஈழப்த் தமிழர்களின் போராட்டத்தைச் சீர்குலைத்து மக்களைக் குழப்பத்திற்கு உள்ளாக்கும் பிழைப்புவாதிகளின் பிரதானமானவர்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, சத்தியம் தொலைக்காட்சி என்ற ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் ,
பிரபாகரன் உயிருடன் இருக்கின்றாரா? அல்லது நம்பிக்கையை கொடுப்பதற்காக சொல்லப்படும் வார்த்தைகளா என கேட்கையில்,

என் நெஞ்சால் நேசிக்கின்ற என் தலைவர் உயிரோடுதான் இருக்கின்றார். அவ்வளவு தான் என்னால் சொல்ல முடியும். அவர் இருக்கின்றார். அவர்தான் இயக்கிக் கொண்டு இருக்கின்றார் என்று பதிலளித்தார்.

புலம் பெயர் மக்களை மந்தைகளாக எண்ணும் வை.கோ போன்றவர்கள் ஆரம்பித்த ‘பிரபாகரன் வாழ்கிறார், ஈழப் போர் நடத்த மீண்டுவருவார்’ என்று கூறிய பொய், வன்னிப்படுகொலைகளின் பின்னர் தமிழ் நாட்டு மக்களின் எழுச்சியைக் கட்டுப்படுத்தியது. நாடுகளின் உளவுப்படைகள் கழுகுகள் போன்று இலங்கையைச் சுற்றி வட்டமிடும் நிலையில் வை.கோ வின் பொய் புலம் பெயர் குறும் தேசிய இனவாதிகளுக்கும், ஐந்தாம் படைகளுக்கும் தீனி போடுகின்றது.

மறுபுறத்தில் அழிக்கப்படும் தமிழ்ப் பேசும் மக்களை நோக்கி, சிங்கள மக்களுடன் தமிழர்கள் ஒற்றுமையாக வாழமையே தேசிய இனப்பிரச்சனைக்குக் அடிப்படைக் காரணம் என்று கூக்குரல் போடுகின்றனர் தன்னார்வ நிறுவனங்களின் முகவர்கள். இத் தன்னார்வ நிறுவனங்களின் முகவர்களுக்கும், அரச எடுபிடிகளுக்கும் தீனி போடுகின்ற வைகோ போன்ற பிழைப்புவாதிகள் சுய நிர்ணய உரிமை என்பதே இனவாதம் என்று கருத்து வலுவடைவதற்குத் துணை போகின்றனர்.

எங்களை மீண்டும் கியூபாவிற்கு அனுப்பிவையுங்கள்

கியுபா நாட்டின் அரசியலை ஏற்றுக்கொள்ளாத நூற்றுக்கணக்கானவர்களை 2011 ஆம் ஆண்டு ஸ்பானியஅரசு வரவேற்றது. கத்தோலிக்க திருச்சபை, கியுபா அரசு மற்றும் ஸ்பானிய அரசுகளிடையேயான உடன்பாட்டின் அடிப்ப

டையில் இவர்கள் ஸ்பானியாவிற்கு அழைத்துவரப்பட்டார்கள். அவர்களுக்கு ஸ்பானிய அரசு வேலையற்றோருக்கான உதவித்தொகையையும் வழங்குவதாக உறுதியளித்தது. பல ஆயிரக்கணக்கில் கியூபாவிலிருந்து வெளியேறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட போதும் சில நூற்றுக்கணக்கானவர்களே வெளியேறினர். இந்த வெளியேற்றம் கியூபாவிற்கு எதிரான பிரச்சாரமாக பல்தேசிய வியாபார ஊடகங்களில் வெளியாகியது. இவ்வாறு வெளியேறி ஸ்பா

னியாவில் குடியேறிய குடும்பங்களில் ஒன்று கில்பேர்டோ மார்டினேஸ் எனபவரது குடும்பமும் ஒன்றாகும். ஐரோப்பியப் பொருளாதார நெருக்கடியில் சிக்குண்ட இவர்களது குடும்பம், வாழ்வதற்கு வழியின்றி, வேலையற்று செஞ்சிலுவைச் சங்கம் போன்ற அமைப்புக்களின் உதவியுடன் வாழ்ந்து வந்தது.

 

evictions-of-cubansகியுபாவையும் அதன் அரசியல் பொருளாதாரத்தையும் ஏற்றுக்கொள்ளாத மார்டினேஸ் குடும்பம் வாழ்ந்து வந்த வீட்டை நோக்கி மே மாதம் 7ம் திகதி ஸ்பானியப் பொலிஸ்படை சென்றது. அவர்கள் வீட்டின் உரிமையாளருக்கு வாடகை வழங்காத குற்றத்திற்காக அவர்கள் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டு நடுத்தெருவில் தள்ளப்பட்டார்கள். பணம்படைத்த வீட்டின் உரிமையாளருக்காக கனவுகளோடு ஸ்பெயினிற்கு வந்த கியூபக் குடும்பம் தெருவில் தள்ளப்பட்டது.
நகரங்களில் வீடுகளிலிருந்து வெளியேற்றப்படும் ஆயிரக்கணக்கானவர்களைக் காண்பது ஸ்பானியாவில் வழமையாகிவிட்டது.

இப்போது கியுப அரசியலையும் ஜனநாயகத்தையும் புரிந்து கொள்வதாக கில்பேர்டோ மார்டினேஸ் கூறுகிறார். இதுதான் ஸ்பானியா என கியூபாவிலிருக்கும் போது தெரிந்திருந்தால் தான் அங்கிருந்து வெளியேறியிருக்க மாட்டேன் என்கிறார். ‘இப்போது நான் கேட்பதெல்லாம் எமது குடும்பத்தை மீண்டும் கியூபாவிற்கு அனுப்பிவையுங்கள் என்பதே’ என மார்டினேஸ் உருக்கமாகக் கூறுகிறார்.

கியூபாவில் உலகின் மிகச்சிறந்த மருத்துவ வசதி, கல்வி வசதி உட்பட மற்றும் அ

னைத்து அடிப்படை வசதிகளும் மக்களுக்கு வழங்கப்படுகிறது.

நி.நே

 

சாதிச் சங்கங்களும் இனச்சுத்திகரிப்பும் – எச்சரிக்கை (பாகம்2) : சபா நாவலன்

80களின் ஆரம்பத்திலிருந்து ஐரோப்பிய, அமரிக்க நாடுகளை நோக்கிப் புலம்பெயர்ந்த வடபகுதி, குறிப்பாக யாழ்ப்பாணத் தமிழர்களின் புலம்பெயர் நாடுகளில் நிரந்தரமாகக் குடியேறிவிட்டனர். புலம்பெயர் நாடுகளின் நவ-தாராளவாத கலாச்சாரத்துடன் ஒட்டாத இவர்களின் கலாசாரம் தமது சொந்ததேசத்தில் சிறிதளவாவது ஏற்பட்ட மாற்றங்களைக்கூட உள்வாங்கிக்கொள்ளவில்லை.

சீர்குலைந்து போயுள்ள ஐரோப்பியக் கலாச்சாரத்தின் முற்போக்கான கூறுகளைக் கூட எதிர்க்கும் விசித்திரமான அடையாளக் குழுக்கள் தான் இந்தப் புலம்பெயர் குழுக்கள். ஈழத் தமிழர்களுக்கு மட்டுமல்ல மூன்றாம் உலக நாடுகளிலிருந்து புலம் பெயர்ந்து மேற்கை வாழ்விடமாக வரித்துக்கொண்ட பல்வேறு சமூகக் குழுக்களுக்கும் இது பொருந்தும்.

Jaffnaபுலம் பெயர் ஐரோப்பிய நாடுகளில் ஏனைய சமூகங்களைப் போன்றே தமிழர்கள் தனிக் குழுக்களாகப் பிரிந்து வாழ்கின்றனர். ஏனைய சமூகங்களுடன் குறைந்தபட்சத் தொடர்புகளைக்கூட பேணிக்கொள்ளாத புலம்பெயர் தமிழர்கள் தமது கலாச்சார விழுமியங்களைப் பேணிக்கொள்வதற்காக பல பண்பாட்டுக்கூறுகளைப் பேணிக்கொள்கின்றனர். அவற்றினூடான தொடர்புகள் இலங்கையின் நான்கு தசாப்தங்களின் முன்னர் காணப்பட்ட அதே சமுக உறவுகளை மீண்டும் மீண்டும் மீழமைத்துக்கொள்கின்றனர்.

குடிபெயர்ந்த தமிழர்கள் மத்தியில், முதலாவது சந்ததி இப்போது தான் உருவாக்கம் பெற்றுள்ளது. அந்தச் சந்ததியை தமது கலாச்சார வட்டத்திற்குள் பேணுவதற்காகான பெரும் போராட்டம் ஒன்றை நடத்திக்கொண்டிருக்கிறார்கள் புலம்பெயர் தமிழர்கள்.

இன்று இலங்கையில் கூட அருகிப் போய்விட்ட பூப்புனித நீராட்டு விழா, மரபு சார்ந்த திருமணச் சடங்குகள் போன்றவற்றை மிகுந்த பொருட்செலவில் புலம்பெயர் நாடுகளில் மேற்கொள்கிறார்கள்.
30 வருடங்களின் முன்னிருந்த “யாழ்ப்பாணத்தை” ஐரோப்பாவில் மட்டும்தான் காணமுடியும்.

நான்கு தசாப்தங்களின் முன்னான யாழ்ப்பாணத்தில் காணப்பட்ட குறைந்தபட்ச முற்போக்கு ஜனநாயகக் கூறுகள் கூட அழிக்கப்பட்டு ஆதிக்கத சாதிகளின் அதிகாரத்திற்கு உட்பட்ட இறுக்கமான சமூகக்கட்டமைப்பு ஒன்று புலம்பெயர் நாடுகளில் தோன்று வளர்ச்சியடைந்து நிலைபெற்றுள்ளது.

ஆதிக்க சாதிச் சங்கங்கள்

கோவில்கள், ஊர்சங்கங்கள், தமிழ்ப் பாடசாலைகள் போன்ற அனைத்து சமூகக்கூறுகளுமே வேளாள மேலாதிக்கத்தின் கோரப்பிடிக்குள் உட்பட்ட சாதிச் சங்கங்களாகவே தொழிற்படுகின்றன. சாதிரீதியான ஒடுக்குமுறை என்பது நேரடியான வடிவமாக இச்சமூகக் கூறுகளுள் காணப்படாவிட்டாலும் அதன் மேற்கூறுகள் அனைத்தும் ஆதிக்கசாதி வெளாளர்களின் அதிகாரத்திற்கு உட்பட்டதே.

kokuvil_sangilianயாழ்ப்பாணத்தில் வேளாள சாதிகளின் தலிபான்களை உருவாக்கிய கொக்குவில் இந்துக்கல்லூரி, யாழ் இந்துக்கல்லூரி, வட்டுக்கோட்டை இந்துக்கல்லூரி போன்ற பாடசாலைகளின் பழையமாணவர் சங்கங்கள் வெறும் சாதிச் சங்கங்களாகவே செயற்படுகின்றன. தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சார்ந்த உதிரியானவர்கள் கூட இக்கட்டமைப்பினுள் அனுமதிக்கப்படுவதில்லை. தாழ்த்தப்பட்டவர்கள் பெரும்பான்மையாகக் கல்விகற்ற பாடசாலைகளின் சங்கங்களை இங்கு காணமுடியாது.

சாதியம் என்பது இந்தியா போன்று வரலாற்று வழிவந்த நிலப்பிரபுத்துவ தொழில் முறைகளின் அடிப்படையில் இலங்கையில் உருவாகவில்லை. இதனால் சாதிய ஒடுக்குமுறை என்பது பல சந்தர்ப்பங்களில் வெளித்தெரியாத சமூகத்தின் ஆழத்தில் புதைந்துகிடக்கும் புண் போன்றே இலங்கையில் காணப்படுகின்றது.

பழைய மாணவர் சங்கங்கள் போன்ற அமைப்புக்கள் சாதிய ஒடுக்குமுறையை நேரடியாக முன்வைப்பதில்லை. பதிலாக அதனை அமைப்புக்களாக நிறுவனமயப்படுத்தியுள்ளது. ஒடுக்கப்பட்ட சாதியினர் பழையமாணவர்களாகக் காணமுடியாத இப்பாடசாலைகளின் புலம்பெயர் அமைப்புக்கள் அடுத்த சந்ததியை தமது சாதி எல்லைக்குள் கட்டிவைத்திருப்பதற்கான வைத்திருப்பதற்கான முடிச்சுக்கள். சாதிப் பெயரை உச்சரிக்காத சாதிச் சங்கங்கள்.

புலம்பெயர் நாடுகளில் காணப்படும் இந்துக்கோவில்கள் ஆதிக்க சாதி வேளாளர்களாலேயே நிர்வகிக்கப்படுகின்றது. அதன் விழாக்களை ஒழுங்கமைப்பவர்கள், நிர்வாக அமைப்பினர், தீர்மானிக்கும் அதிகாரம் படைத்தவர்கள் அனைவரும் சாதிய அமைப்பின் உச்சத்திலுள்ள வேளார்களே. இவர்கள் சாதியக் கட்டமைப்பைப் புலம்பெயர் நாடுகளில் பேணுவதற்கு தம்மாலான அனைத்தையும் செய்துமுடிக்கின்றனர்.

மாதம் ஒருமுறையாவது தமிழர்கள் தமது ஆதிக்க சாதிகளோடு ஒன்றுகூடி தமது ‘பெறுமானத்தைப்’ பறைசாற்றும் முரசங்களே கோவில்கள். அதன் விழாக்கள். அதனூடாக ஒழுங்கமைக்கப்படும் சமயச் சடங்குகள், விழாக்கள், வைபவங்கள் ஆதிக்க சாதியின் ஒழுங்கமைப்பைப் பாதுகாக்கின்றன.

புலம்பெயர் நாடுகளில் தமிழர்கள் செறிந்துவாழும் பிரதேசங்களில் முளைவிட்டிருக்கும் தமிழ்ப் பாடசாலைகள் சாதியக் கட்டமைப்பை பேணுவதற்கான மற்றொரு பிரதான நிறுவனமாகத் தொழிற்படுகின்றது. ஆரம்பத்திலிருந்து ஆதிக்கசாதி வேளாளர்களின் கலாச்சார மையங்களாகத் தோற்றம்பெற்ற பாடசாலைகள், அடுத்த சந்ததிக்கு சாதியத்தை அறிமுகப்படுத்தும் தொடர்பாடல் நிறுவனமாகச் செயற்படுகிறது. இங்கு வார இறுதி நாட்களில் ஒன்று கூடும் ஆதிக்க சாதியினர் தமது குழந்தைகளுக்கு தாம்சார்ந்த சாதியினரை அறிமுகம் செய்யும் பொது நிறுவனமாகவே இப்பாடசாலைகள் செய்ற்படுகின்றன.

templeஒவ்வொரு பாடசாலைகளிலும் இந்துக் கலாசார நிகழ்வுகள், சாமி வழிபாடுகள், யாழ்ப்பாணப் பெருமை போன்றன கற்பிக்கப்படுகின்றன. அங்கு விளையாட்டுப்போட்டிகள் நடத்தும் போட்டில் இல்லங்கைளுக்கு யாழ்ப்பாணப் பாடசாலைகளின் பெயர்கள் சூட்டப்படுகின்றன. தாழ்த்தப்பட்டவர்களைப் புறக்கணித்த வேளாளர்களின் பாடசாலைகளின் பெயர்களையே இந்த இல்லங்கள் காவித்திரிகின்றன.

பிரித்தானியா போன்ற பல் கலாச்சார நாடு என்று தம்மைக் கூறிக்கொள்ளும் நாடுகளில் இப்பாடசாலைகளுக்கு அரச நிதி உதவியும் வழங்கப்படுகிறது. இவற்றின் நிர்வாகிகள் ஒரு குறித்த குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் அவர்களின் நண்பர்களுமே. நிர்வாகக் குழுத் தெரிவிலிலிருந்து இந்த அமைப்பின் எந்த அங்கத்திலும் தாழ்த்தப்பட்ட சாதிகளுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படாத ஆதிக்க சாதி ‘ஜனநாயகம்’ மட்டுமே காணப்படும்.

வன்னிப் படுகொலைகளின் பின்னர் புலம்பெயர் நாடுகளில் தோற்றம் பெற்றுள்ள மற்றுமொரு ஆதிக்க சாதி நிறுவனமாக உதவி அமைப்புக்கள் செயற்படுகின்றன. புலம்பெயர் நாடுகளில் சமூகத்தின் மேல்மட்டத்திலிருந்த அவ்வப்போது ஆங்கிலத்தில் உரையாடக்கூடிய நிலப்பிரபுத்துவ சிந்தனை படைத்த நபர்களால் உருவக்கப்பட்டுள்ள இந்த அமைப்புக்கள் தன்னார்வ நிறுவனங்களின் உதவிபெறும் அதே நேரத்தில் விழாக்கள் போன்றவற்றை ஒழுங்கு செய்து பணம் திரட்டி வன்னியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவதாகக் கூறுகின்றனர். வடக்குக் கிழக்கு முழுவதும் சுற்றுப் பயணம் செய்யும் நிறுவனங்களும் இதில் அடக்கம்.

இந்த அமைப்புக்களின் நோக்கம், அவர்களின் விழாக்கள், தென்னிந்திய கலாச்சாரக் குப்பைகளைப் பணம் சேர்க்கிறோம் என்று புலம்பெயர் நாடுகளில் இவர்கள் குவிக்கும் ஈனச் செயல் அனைத்தும் மேலும் தெளிவாகப் பேசப்பட வேண்டும்.

சாதியத்தைக் காவிச்செல்லும் விழாக்கள்

தமது அடுத்த சந்ததிக்குச் சாதீயத்தைக் காவிச்செல்லும் மற்றொரு பிரதான ஊடகம் கலாசார விழாக்கள். பூப்புனித நீராட்டுவிழா, கோவில் திருவிழாக்கள், சங்கீத மற்றும் நடன அரங்கேற்றங்கள் போன்ற பெரும் பணச்செலவில் நடத்தப்படும் விழக்கள் ஒன்று கூடலுக்கான அரங்கமாகவும் சாதியத்தைக் காவிச்செல்லும் பிந்தங்கிய கூறுகளாகவும் செயற்படுகின்றன.

poopபெண் குழந்தைக்கு பருவ மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டது என்பதை தனது சாதிக்காரர்களுக்கு அறிவிப்பதற்காக பெரும் பணச்செலவில் விளம்பரங்களோடு விழாவெடுக்கப்படுகின்றது. சாமத்தியச் சடங்கு அல்லது பூப்புனித நீராட்டுவிழா என்றழைக்கப்படும் இவ்விழா சாதிய அமைப்பினைப் பேணுவதில் அதி முக்கித்துவம் பெற்றுள்ளது. இதனால்தான் இவ்விழா பெரும்பணத்தைத் தின்று தொலைக்கிறது.

மாற்றுச் சாதிகளில் திருமணம் செய்துகொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கூட இவ்வாறான விழாக்களுக்கு அழைக்கப்படுவதில்லை.

புலிகளின் அரசியல் மீது புலம்பெயர் தமிழர்கள் செல்வாக்குச் செலுத்த ஆரம்பித்த 90களின் ஆரம்பத்திலிருந்து இந்த ஆதிக்க சாதிச் சங்க அமைப்புக்கள் அனைத்தும் புலிகளின் கூறுகளாகவே தொழிற்பட்டன. புலிகளின் போராட்டத்திற்கு ஆதிக்க சாதியினைச் சார்ந்த நிலப்பிரபுத்து சிந்தனையை அடிப்படையாகக் கொண்ட பின் தங்கிய அரசியலைச் செலுத்துவதற்கு இச்சாதிய அமைப்புக்களே பிரதான காரணமாகின. இவ்வாறன அமைப்புக்களால் உள்வாங்கப்படக்கூடிய நிலையிலிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற இராணுவக் குழு முற்றாக அழிக்கப்படுவதற்கும் இந்த அமைப்புக்களின் உச்சத்திலிருந்த குறித்த ஆதிக்க சாதி பழமைவாதிகளும் காரணமானார்கள்.

இன்று காணப்படும் புலம்பெயர் யாழ்ப்பாண சமூகத்தின் பெரும்பகுதி ஆதிக்க சாதிச் சங்களாலும் அவற்றின் அரசியலாலும் ஒழுங்கமைக்கப்பட்ட பின் தங்கிய அழுகிய அருவருப்பான கட்டமைப்பைக் கொண்டுள்ளது.

தமிழ் இனவாதம்

இந்த ஒழுங்கமைப்பைப் பாதுகாப்பதற்கான தத்துவார்த மேல்பகுதியாக இந்துத்துவம் செயற்படுகின்ற அதே வேளை தமிழ் இனவாதமும் செயலாற்றுகின்றது. ‘ஆண்ட தமிழன்’ போன்ற இனவெறியைத் அடுத்த சந்ததிவரைக்கும் இழுத்துச் செல்லும் யாழ்ப்பாணத் தமிழர்கள் இலங்கை பாசிச அரசுடன் நேரடியாக தொடர்பற்றவர்களாக விம்பத்தைப் புனைந்து கொள்கின்றனர். இதன் மறுபக்கம் முற்றிலும் வேறானது. யாழ்ப்பாணத்தின் அனைத்து இலங்கை அரச கூறுகளோடும் நேரடியானதும் மறைமுகமானதுமான தொடர்புகளைபேணிவரும் இப் புலம்பெயர் அமைப்பின் தலைமைகள் இலங்கை அரசியலில் செல்வாக்குச் செலுத்தும் வலிமையையும் கொண்டவை.

sri_lanka_genocideஇலங்கை அரசின் பாசிச இனவெறி இராணுவம் ஆட்சி நடத்தும் யாழ்ப்பாணத்தின் அனைத்து ஆதிக்க சாதி நிர்வாகக் கூறுகளோடும் தொடர்புடைய நெருக்கமான வலையமைப்பை இவர்கள் கொண்டுள்ளனர். சிறிய காணித்துண்டை வாங்குவதிலிருந்து உள்ளூர் அரசியலை ஒரு எல்லைவரை தீர்மானிப்பது வரை இவர்களின் ஆதிக்கம் காணப்படுகின்றது.

புலம் பெயர் நாடுகளிலிலோ அன்றி இங்கிருந்து இலங்கையில் ஆதிக்கம் செலுத்தும் எல்லைவரை இலங்கையிலோ புலம்பெயர் தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு அதிகாரம் காணப்பட்டதில்லை. புலம்பெயர் நாடுகளிலும் அவர்கள் மீதான ஒடுக்குமுறை நிறுவவனமாகியிருக்கிறது. சமூகத்தின் ஒவ்வொரு அங்கங்களிலும் அது படர்ந்திருக்கிறது.

தமது சொந்த நலன்கள் மேலெழும் போது இனப்படுகொலை அரசின் கோரமுகம் வேளாள ஆதிக்க சாதிகளின் தலைமைகளுக்குத் தெரிவதில்லை. ‘தேசிய இணையம்’ என்று தன்னைத்தானே அழைத்துக்கொள்ளும் அதிக இனவாதிகள் படிக்கும் வலைத்தளமொன்றில் தனது கொழும்பு வீட்டை மீட்பதற்காக புலம் பெயர் புலிப் பிரமுகர் ராஜபக்ச குடும்பத்தோடு பேச்சு நடத்தியது நியாயம் எனக் கட்டுரை வெளியாகியிருந்தது. சொத்தை இழப்பதற்குப் பதிலாகப் பேச்சு நடத்துவதில் என்ன தவறு என்று இறுமாப்போடு கேடிருந்தது. அதன் பின்னான மாவீரர் தினத்தில் அதே பிரமுகர் முக்கிய ஒழுங்கமைப்பாளரானார்.

தேசியம் என்பது ஆதிக்க சாதியை ஒழுங்மகைக்கும் பிழைப்பு வாதிகளின் ஒரு பக்க முகம். அதன் மறுபக்கத்தில் இலங்கை இனப்படுகொலை அரசுடனும் அதன் ஏனைய கூறுகளோடும் தொடர்புகளைப் பேணிவருகின்றனர்.

இவர்களின் ஆதிக்க சாதி வெறி புலிகள் வாழும் வரை நேரடியான பாதிப்புக்களை ஏற்படுத்தவில்லை. புலிகளின் அழிவின் பின்னர் வெளிப்படையாகத் தெரிய ஆரம்பித்த சாதிய முரண்பாடு புலம் பெயர் நாடுகளில் பிளவுகளை ஆழப்படுத்தியது. புலிகளின் பின்புலமாகச் செயற்பட்ட ஆதிக்க சாதித் தலைமைகள், புலிகளின் அழிவின் பின்னர் மேலோங்கிய சாதிய முரண்பாட்டில் சாதி ஒடுக்குமுறையின் முகவர்களானார்கள்.

புதிய சந்ததியின் மீதான ஒடுக்குமுறையும் இன அழிப்பின் பின்னான சாதிய ஒடுக்குமுறையும் தாழ்த்தப்பட்ட சாதிகள் மத்தியில் விரக்தியையும் வெறுப்புணர்வையும் தோற்றுவித்தது.

இதனைப் புரிந்துகொண்ட பிளவுவாத சக்திகள் அந்த விரக்த்தியின் தலைமைப் பொறுப்பில் அமர்ந்துகொண்டனர். வேளாள ஆதிக்க சாதி ஒழுங்கமைப்பின் தலைமையைத் தக்கவைத்துக்கொண்டவர்களுக்க் நிகரான இப்பிழவு வாதிகள் ஏகாதிபத்திய நிதியாலும், மகிந்த பாசிச அரசாலும் நேரடியாகக் கையகப்படுத்தப்பட்டவர்கள்.

ஆதிக்க சாதிச் சங்கங்களுக்கு எதிரான தாழ்த்தப்ப்ட்ட சாதிகளின் சங்கங்களாக தோற்றம் பெற்ற இச்சங்கங்கள் இந்தியாவிலிருந்து இறக்குமதியான தலித்த்தியம், அடையாள அரசியல், பின்நவீனத்துவம் போன்ற சமூகத்தைப் பின்னோக்கி இழுத்துச் செல்லும் தத்துவங்களைப் பற்றிக்கொண்டன.

புலம் பெயர் நாடுகளில் சாதியக் கட்டமைப்பினாலும், இலங்கையில் இனச்சுத்திகரிப்பினாலும் பாதிப்படையாத விரல்விட்டெண்ணக்கூடிய மேல்மத்தியதர வர்க்கம் ஐரோப்பிய அமரிக்க சமூகங்களோடு வர்க்க அடிப்படையிலான தொடர்பைப் பேணிவந்தது. நிலப்பிரபுத்துவ சாதி அமைப்பைக் கடந்து ஐரோப்பிய அதிகாரவர்க்கத்தின் உயரணிகளோடு தம்மை அடையாளப்படுத்தும் இவர்களுக்கு ஆதிக்க சாதி சாதிய அடையாளம் அவசியமானதல்ல. இக்கூட்டத்தின் ஒரு பகுதியினர் தலித் அமைப்புக்கள் என்ற தாழ்த்தப்பட்ட சாதிச் சங்கங்களின் ஆதரவாளர்கள்.

நேரடியான அரச ஆதரவு தாழ்த்தப்பட்ட சாதிச் சங்கங்களின் தலைமை இவர்களிடமே காணப்படுகிறது. ஒடுக்கப்பட்ட சாதியினர் மத்தியிலான விரக்தியையும் வெறுப்பையும் தமது சொந்த அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தும் இந்த அரசியல் பிழைப்புவாதிகள் இலங்கை இனப்படுகொலை அரசுடன் நேரடியான தொடர்புகளைப் பேணிவருகின்றனர்.

ஒரு புறத்தில் மனிதகுல அவமானமான ஆதிக்க சாதிச் சங்கங்கள் ஏற்கனவே உறுதியான சமூக ஒழுங்கமைப்பினுள் புலம்பெயர் நாடுகளில் சாதியமைப்பைப் பேணும் அதே வேளை ஒடுக்கப்பட்ட சாதிகள் சார்ந்த தலித் கோட்பாட்டை வரித்துக்கொண்ட அமைப்புக்கள் இனச்சுத்திகரிப்பிற்குத் துணை போகின்றன. இலங்கை அரசின் அங்கங்களாகச் செயற்படுகின்றன.

தொடரும்..

முதல்பாகம் :

சாதிச் சங்கங்களும் இனச்சுத்திகரிப்பும் – எச்சரிக்கை 

அசோக்கின் கட்டுரையை முன்வைத்து இலங்கை அரசினது புலத்து லொபிகளைப் புரிந்து கொள்ளல் என்பது…: ப.வி.ஶ்ரீரங்கன்

அசோக்கினது கட்டுரையில் பேசப்படும் விடையங்கள் குறித்துத் தொடர்ந்து பேசப்படவேண்டும்.இன்றைய பிளவுவாத அரசியலை வகுத்தியங்கும் சிங்கள அரசு மற்றும் இந்தியப் பிராந்திய நலனும் பரவலாகத் “தலித்துவ” அமைப்புகளையும் , பிரதேசவாதப் பிளவு வாதத்தையும் கூர்மைப்படுத்தும் கருத்தியலைப் பிழைப்புவாதிகளது நலனோடிணைத்துக் கருத்துப் பரப்புரை செய்கிறது.

இதன் வழித் தமிழ்பேசும் மக்களைப் பிளப்பதற்காகவே கருணா-பிள்ளையான் குழுவைக் கட்டிக் கிழக்குப் பிரதேச வாதத்தைத் திறம்படச் செய்தன ,இத்தகைய நலன்கள் -அரசுகள்.

இதன் நிகழ்ச்சி நிரலுக்குட்பட்ட பிரான்சுத் தலித்துவது முன்னணியும் அதன் உறுப்பினர்களும் மற்றும் கிழக்கைப் பிளப்பதில் தனக்கான ஆதாயத்தைக் கண்டடைந்த பிழைப்புவாதியும் ,ஆட்காட்டியுமான ஞானமும் இதன் உச்சக்கட்டமான இயங்கு தளத்தை நமக்குள் நிகழ்த்திக்காட்டினர்.

கிழக்கைப் பிளந்த இந்திய-இலங்கை வியூகம்:

pilliyan_dalitகிழக்கைப் பிளந்த இந்திய-இலங்கை ஆளும் வர்க்கங்கள் ,தமிழ்ப் பிரதேசமெங்கும் ஒட்டுக் குழுக்களை வைத்து மக்களை ஆயுதத்தால் அச்சமூட்டியும், அடிமைப்படுத்தியும் வந்தன.புலிகளது அதே பாணியில் ,இத்தகைய குழுக்கள் மக்களை அச்சமூட்டி அடிமைப்படுத்தியதுமல்லாது சாதிரீதியாகவும்-பிரதேச ரீதியாகவும் பிளந்தனர்.இதன் தொடரில் அராசகம் புரிந்த பிள்ளையானோடு இன்றுவரை கைக் கோற்கும் ஞானம் , பிள்ளையானின் அரசியல் ஆலோசகர் என்பதும் ,அந்த அரசியலுக்குக் கருத்தியல் வலுக்கொடுப்பதென்பதும், இலங்கை அரசினது தமிழர்கள்மீதான ஒடுக்குமுறைக்கு ஒத்தோடுவதென்பதும் ,அதன்வழியான அரசியலானது முற்று முழுதாக இந்திய நலனுக்குட்பட்டதென்பதும் நாம் அறிந்ததே.

பிள்ளையானது கட்சியின் உறுப்பினனான ஞானம் தேர்தல் பரப்புரை செய்து, அடவாடித்தனமாக மக்களை வெருட்டிய பிள்ளையானுக்குத் தோழமையானவரென்பதும் ,சட்டபூர்வ ஆலோசகரென்பதும் உரறிந்ததே.

இலங்கை அரசுக்கும் அதன் இராணுவ ஆதிக்கத்துக்கும் ,தமிழ் மக்கள்மீதான ஒடுக்குமுறைக்கும் உடந்தையாகவே அரசியலை முன்னெடுக்கும் பிள்ளையான்-கருணா மற்றும் கே.பி. ,டக்ளசு போறோரெல்லாம் இலங்கை அரசினது அரசியல் செல்வாக்குக்குட்பட்டவர்களானாலும் அவர்கள் அனைவரும் இந்திய அரசினது செல்வாக்குக்குட்பட்ட லொபிக் குறுப்புகளே. இங்கே, இவர்களை மெல்ல இயக்கும் வரதராசப் பெருமாளையும் இனங்காட்ட வேண்டும்அசோக் இந்தத் தளத்திலும் இயங்கும் அரசியலைக் குறறித்துப் பேச வேண்டும்.இவர்களனைவருமே ஆபத்தானவர்கள்.

varatharசோபாசக்தி போன்றோரை இந்தப்புள்ளியில் புரியவேண்டுமானால் “வரதாசாப் பெருமாளுக்கு ஈழப்போராட்டத்துள் ஆக்க பூர்வமான வரலாறொன்று இருக்கிறது” என்ற சோபாசக்தியின் கருத்திலிருந்து புரியும் அரசியலானது இந்தத் தளத்தை மேலும் புரிய வைக்கும்.

அன்று ,இந்திய ஆமிகளோடு கப்பலேறிய அரசியலானது தமிழ்பேசும் மக்களது நலனுக்கான தெரிவில்லை!அது,முற்று முழுதாக இந்திய நலன்களை இலக்கைக்குள் திணிக்கும் ஒரு நிகழ்சியாகும்.

இப்போது,அசோக்கைப் புரியும்போது மிகச் சரியாகவே இத்தகைய பிளவு வாதிகளையும் இந்திய இலங்கைக் கைக்கூலிகளையும் கணித்துச் சொல்கிறார்.

இந்தச் சதியாளர்கள்தாம் இலங்கைக்கும்-புலத்துக்குமாகப் பறந்து, பறந்து அரசியல் செய்வதிலிருந்து இலங்கைக்குப் புலத்து மக்களைக் காட்டிக் கொடுப்பதுவரை இவர்களது தெரிவாக இருக்கிறது.இத்தகைய இலங்கை -இந்தியக் கூலிகளைச் சாதரண நபர்களாக்கும் முயற்சியின் தெரிவாகவே இவர்கள் ,இலக்கியம்-சந்திப்புகள் ,கலந்துரையாடலெனச் செய்து மாற்றுக் கருத்துடையவர்களைத் தமக்குள் கிரகிக்கும் போது இது,சதியை மேலும் அரசியற்றளத்தில் வலுவாக்கிறது.இவர்களோடு வாசுதேவன் போன்றவர்கள்கூட அரசியல்-கலந்துரையாடல் செய்யும்போது எனக்கு வாசுதேவன் பேசும் தேசியம்-புலிவழியான போராட்டம் புரியும் தளமானது பிழைப்புவாதம் மட்டுமல்ல.இதுவும் ,ஒருவகை இந்திய லொபி அரசியலே!

ஒருவகை லொபி:

kuganarhan_militaryஇங்கேயிதை மேலும் விரித்துச் சொல்வதானால் முள்ளி வாய்க்காலுக்குப் பின் யாழ்ப்பாணஞ் சென்ற தேவதாசன்-இராகவன்(முன்னாள் புலிகளது இயக்க-மத்திய குழுவின் முன்னணித் தலைவர்)மற்றும், சுகன் போன்றவர்கள் யாழ்பாணத்திலியங்கும் இந்திய-இலங்கை அரசுகள்சார் குகதாசனின் தமிழ்த் தொலைக் காட்சியொன்றில் தோன்றித் தமது பேட்டிகளை வாரி வழங்கினர்.அப்போது, யாழ்ப்பாணத்தில் கந்தோரோடையில் அகழ்ந்தெடுக்கப்பட்ட வரலாற்று ஆவணமான புத்தர் சிலைகள் குறித்துக் கருத்துச் சொன்ன வரலாற்று மேதை இராகவன்: “இவைகளெல்லாம் உறுதிப்படுத்தும் உண்மைகள், சிங்கள மக்கள் பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னமே இங்கெல்லாம் வாழ்ந்ததற்கான ஆதாரம்” என்றார்.

இதையும் மீறித் தேவதாசனும்,இராகவனும் அழுத்தமாகச் சொன்ன இன்னொரு கருத்தானது”தமிழ்பேசும் மக்கள்,தமிழர்கள்என்ற அடையாளத்தோடு செயற்படாது நாம் அனைவரும் இலங்கையர்கள் என்று ஒற்றுமையாகச் செயற்படவேண்டும்-நாட்டை வளர்க்கவேண்டும்-காக்கவேண்டும்” என்றார்கள்.

இஃது, 2010-11 க்குள் நிகழ்ந்த இலங்கை அரசு-இந்திய வியூகத்தினது தயாரிப்பாகவே அன்று நான் பிரித்துடைத்துச் சொன்ன பதில்.இது குறித்துத் தூண்டிலிலும்,ஜனநாயகத்திலும் நான் பதிவுகளைப் பதிந்தே வைத்திருக்கிறேன்.

இந்தப் பல்வேறுபட்ட இலங்கை இந்திய நலன்களுக்குடந்தையான இத்தகைய பிழைப்புவாதிகளைக் குறித்து அசோக் நேர்மையாகப் பேசுகிறார்.மக்கள் நலன்சார்ந்து தோழர் அசோக் பேசுவது மிகவும் வரலாற்றுத் தேவையானது.

ragavanஏனென்றால் நிர்மலா குழுவின் முக்கிய புள்ளி இராகவன் பேசுவதை மேலும் பாருங்கள் .இலங்கையில் இனவொதுக்கல்-அரசபயங்கரவாதம் அற்ற சூழல் உருவாகிவிட்டதாகவும் மேலும் வடமாகாணம் தனியே தமிழருக்குரியதல்ல அங்கே சிங்களவர்கள் இரண்டாயிரம் ஆண்டுகளாக வாழ்வதாகவும் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த சிங்களம் பேசும் மக்கள் மீளத் தமது தாயகத்துக்கு வந்தபோது, அவர்களைச் சந்தித்த கையோடு இராகவன் பேட்டி வழங்கியதொரு திசையில்”புதைபொருள் ஆராச்சியின் மூலம் கந்தரோடையில் கண்டெடுக்கப்பட்ட பௌத்த மத அடையாளங்களெல்லாம் வரலாற்று ரீதியாகச் சிங்கள மக்கள் இங்கெல்லாம் வாழ்ந்ததற்கான அடையாளங்களென” வேறு வரலாற்று நூல்கள்வழி உண்மையுண்டென இராகவன் சொன்னபோது எனக்கு உடம்பெல்லாம் ஒரே புல்லாரிப்பு!

முதலியார், செ.இராசநாயகம், சுவாமி ஞானப்பிரகாசர், ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை போன்றோரது ஆய்வுகளை முன்வைத்து தமிழ்ப் பிரதேசங்களில் கண்டடைந்த பௌத்த மத அடையாளங்களைச் சிங்கள மக்களது வாழ்வின் எச்சமெனக்கொள்ளும் புத்திக்கு வரலாற்றைப் புரிவதில் பேரினவாதத்தின் புகழ்ச்சி அவசியமாக இருக்கிறது இவர்களுக்கு.இந்தச் சந்தர்ப்பவாதமானது காலவோட்டத்தில் தமிழ் மக்களை அரசியலுரிமையற்ற மந்தைக் கூட்டமாக்கும் நரித்தனமான சிங்கள ஆளும் வர்க்கதஇதுக்குத் துணைபோவதே!இது வரலாற்றை மட்டுமா புரட்டும்?-முடிந்தால் சிங்கள இராணுவத்தின் ஒடுக்குமுறைகளைக்கூட இத்தகைய குழுக்கள் நியாயப்படுத்துவதும் அதன் தளத்தில் இது வேளாளரின் பொய்யென்றும் சிங்கள இனவாத அரசுக்குத் துணைபோவதிலிருந்து தமது இருப்பை உறுதிப்படுத்தும்.

பௌத்தம் என்றால் சிங்களவர்கள்,சிங்களவர்கள் என்றால் பௌத்தம் :

இலங்கையின் வடபிராந்தியத்தில் தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்ததும்,அவர்களது அடையாளங்களும் பௌத்த மதத்தோடு பிணைந்திருந்ததை எங்கே போய்ச் சொல்ல?

பௌத்தம் என்பது சிங்களவருக்கு மட்டுமே இலங்கையிற் சொந்தமெனக் காணும் தமிழ் வரண்ட மூளைக்குத் தன் முன்னோர் ஆரம்பத்தில் பௌத்தர்களாக,சமணர்களாக வாழ்ந்திருந்தனரென்று அறிய முடியவில்லையென்றால் வாயை மூடி மௌனித்தல் நலமே..ஆனால் இராகவன்-நிர்மலா போன்றவர்களும் இவர்களைப்போலவே பிளவுவாத அரசில் செய்யும் ஊக்கங்கொண்ட மேற் சொன்னவர்கனளும் சந்திக்கும் புள்ளி இலங்கை -இந்திய மற்றும் அந்நிய ஆர்வங்களுக்காகத் தமிழ்பேசும் மக்களைக் காட்டிக்கொடுத்தலோடு இலங்கையின் புரட்சியைக் காயடித்தலென்பதே இதன் அர்த்தம்!

dalitfrontfranceஇத்தோடு புலத்துத் தலித்துவக் குழுக்களது போலித்தனமான கோசத்தை நாம் மேலும் பார்ப்போம்.இன்று,இலங்கை பூராகவும் நிலவும்(ஏன் இந்தியா பூராகவும்)சாதியமைப்பு, நடைமுறையிலுள்ள சமூக அமைப்பின் உருவாக்கமல்ல. நிலவும் நவகாலனித்துவ அமைப்பு தனது முழுமை பெறாத முதலாளித்துவ வளர்ச்சிக்கொப்பச் சீர்படுத்திக்கொண்ட(தடுத்தாட்கொண்ட)அல்லது திருத்தி அமைத்துக்கொண்ட இலங்கையின்-இந்தியாவின் கடந்தகால நிலப்பிரபுத்துவச் சமூக அமைப்பின் ஒரு ஊக்கமாகவே இந்தச் சாதிய அமைப்பு முறை மேலெழுகிறது.

இதைக் குறுக்கி வாசிக்கத் தள்ளப்பட்ட புலத்துத் தலித்துவக் குழுக்கள் தமது எசமானர்களது நலத்தின் பொருட்டு ,அதையே தனிப்பட்ட வகைமாதிரிக்குள் மொன்னைத் தனமாக விளக்குவதும் கூடவே ஒரு தேசிய இனத்தின் விடுதலைக்குக் குறுக்கே நின்று கல்லெறியும் வினையாக மாற்றுகின்றனர்.இது திட்டமிட்ட சதி!

சாதியமைப்பின் நிலைகளையும்,இன்றைய நிலைக்கான காரணத்தையும் ஆய்வதென்பது:

கடந்த 600 ஆண்டு வரலாற்றைப் புரட்டிப் பார்க்க வேண்டிய தேவையைப் பின் தள்ளிவிட்டு, சமீப வரலாற்றில் 60 ஆண்டு அரச முதலாளியத்தின் கடைக்கோடியில் தமிழ்பேசும் சமுதாயத்தைக் கழுமரத்தில் ஏற்றுவது நியாயமான அறிவுப்போக்கல்ல.ஆனாலும், இவர்கள் அதைத் தெரிந்தே செய்கின்றனர்.இதுதாம் இவர்களுக்கான நிகழ்சி நிரல்.இதை வகைப்படுத்தி இயக்கும் ஒடுக்குமுறையாளர்கள் ,தமது இலக்குத் தமிழ் மக்களைப் பிளப்பதென்பதால் இத்தகைய பிளவை அரசியல் ரீதியாக இயக்கவும் ,அதைச் சட்ட ரீதியாக்கவும் முயலும் கருத்துக்களைக் கட்டுகின்றனர்.அதுவே, ஒருகட்டத்துள் சாதியச் சமூகங்களாக அடையாளப்படுத்தப்பட்டு அது, “சுதேசி அடையாளமாக” க் கருத்தியற்றளத்தில் ஏற்கப்பட்டுச் சலுகைகளை வழங்குவதிலிருந்து அதை நிலைப்படுத்தவும் ,அதன்வழியில் மக்களை ஒரு குடையின் கீழ் அணி திரள்வதைத் தடுப்பதிலும் கவனமாக இருக்கின்றனர்.

தற்போது நிகழும் அணிச்சேர்க்கைகளை உற்று நோக்குபவர்களது புரிதலில் பல உண்மைகள்”தமிழீழப் போராட்டம்”குறித்தும்,தமிழ் மக்களது அரசியல் எதிர்காலம் குறித்தும் ஓரளவு இனங்காணத்தக்க அரசியல் புரிதல்கள் சாத்தியமாகிறது.இன்று,மக்களைப் பல கூறுகளாக இனங்கண்ட புலிவழிக் கருத்தியல் தன்னளவில் இலங்கையில் உடைவு காணுந்தறுவாயில் புலத்தில் பிழைப்புக்கான இருப்பாக இது நிலைப்படுத்த முனையும் அரசியலை இந்த அணிச் சேர்க்கை வற்புறுத்துகிறது.

இனவொடுக்குமுறைக்கெதிரான தேசிய விடுதலைப் போரை பிற்போக்கான வகையில் முன்னெடுத்த இயக்கவாத மாயை தகர்ந்து தவிடுபொடியாகும் தருணம் புலிகளது அழிவோடு சாத்தியமானது. எனினும்,புலிகளது வெற்றிடத்தைக் குறித்துக்கொண்டிருந்த அந்நிய மூலதனம் தனது தேவைக்கேற்ற குழுக்களை அதன் இடத்தில் இருத்துவதே அதன் முதற்பணியாக இப்போதிருப்பதென்பது உண்மையானது. இதை எதிர்பார்த்துக் காத்திருந்த வெளிப் புறச் சக்திகள் மெல்லத் தமது நலன்களை மையப்படுத்திய அரசியற் கருத்தரங்கங்களையும்,அதுசார்ந்த பொருளாதார ஒத்துழைப்புகளையும் குறித்து வகுப்பெடுக்கச் சந்திப்புகளைச் செய்கிறது.இந்தத் திடீர் அரசியற் கருத்தரங்கங்கள்-பட்டறைகள் யாவும் தமிழ்பேசும் மக்களது உயிரைக்குடித்த இயக்கங்களது முன்னாள்-இன்னாள் உறுப்பினர்கள்-அரசியல் ஆலோசகர்களை வைத்தே நடைபெறுவதைக்கவனித்தால் இதன் உள்ளடக்கம் புரியத் தக்கது.இதிற்றாம் ஞானத்தின்-தேவதாசனின் இராகவனின் ,நிர்மலாவின் பாத்திரங்களைப் புலத்தில் உருவாக்குகிறார்கள் என்பதைத் தெளிவாகச் சொல்லவேண்டும்.

இலங்கை அரசானது இந்தியாவின் வியூகத்துக்கமைய தனக்காவும் ஒரு லொபிக் குழுவை உருவாக்கிக்கொண்டாலும், அத்தகைய குழுவானது இந்திய ரோவுக்கும் கூசாத் தூக்கும் சந்தர்ப்பமானது இயக்கங்களது நலனுக்குட்பட்ட அரசியலோடு பொருந்துவது. இதுவே “வேளாளன்-வேளாளன் ,யாழ் மேலாதிக்கம்”எனத் தொண்டை கிழியக் கத்திக்கொள்கிறது.

பண்டுதொட்டு தமிழ் மக்கள் ஏமாற்றப் படுகிறார்கள்:

gun_point_tamilsஆயுத முனையிலும்,கருத்தியல் முனையிலும் அவர்களின் உரிமைகள் ஏலம் விடப்படுகிறது.இந்த ஈனத்தனத்தை எல்லா இயக்கங்களும் திறம்படச் செய்துமுடித்திருக்கிறார்கள்.புலிகள் அழிந்த கையோடு அவர்களது உப பிரிவுகள் தனித்தியங்க அனுமதிக்கப்பட்டு,புலிகளது தொடர் இருப்புக்கான பல் முனை நகர்வுகள் ஒழுங்கு படுத்தப்படுகிறது.அந்நிய சக்திகளிடம் கட்டுண்டு கிடக்கும் இலங்கைத் தேசத்தின் ஆளும் வர்கத்தால் ஈழத் தமிழர்களின் சுயநிர்ணயவுரிமை உதாசீனப்படுத்தப்படுகிறது. இதற்குத் தோதாகவே தலித்துவக் குழுக்களைச் சாதியம் பேச வைத்தும் ,வேளாளரின் ஆதிக்கம் என்றெல்லாம் வகுப்பெடுத்துத் தமிழ்பேசும் மக்களுக்குள் உட் பூசல்களைத் தொடர்ந்து வளர்த்துவருகிறது இலங்கைச் சிங்கள ஆளும் வர்க்கம்.

இதன் தொடர்ச்சியாக அவர்களது வரலாற்று வாழ்விடங்கள் இல்லாதாக்கப்பட்டு,தமிழர்கள் தேசம் தொலைத்த ஜிப்சி இனத்துக்குத்தோதானவொரு இனமாகப்பட்டுச் சிங்கள ஏக இனவாதம் தொடர்ந்து இருத்தி வைக்கப்படுகிறது .இது,புதிய இலங்கையின் புரட்சிக்கு எதிரான கூறுகளைக் கொண்டியங்குகிறதென்பதை நாம் மறுக்க முடியாது.இதற்குத் தோதான அரசியலைக் கிழக்கில் பிள்ளையான்-கருணா குழு முன்னெடுக்கும்போது வடக்கில் டக்ளசு சார்ந்து சாதியவாதப் பிளவுகளை நிலைப்படுத்தத் தலித்துவக் குழுக்களைத் தீனிபோட்டு வளர்க்கும் அரசியலானது வடமாகாணத்துள் மக்களைத் தொடர்ந்து பிளவுப்படுத்திக் காலப் போக்கில் பெரும் கலவரங்களைச் சந்திக்க வைக்க முனைகிறது.இது, சிங்கள இனக் கலவரத்துக்கொப்பவும் அல்லது மேலும் பெரிதாகவும் வளர்க்கப்பட்டுச் சிங்கள இனவாதமெல்லாம் வேளாளரின் சாதியவொடுக்குமுறைக்கு நிகரானதல்ல என்றும் , வரலாறுரைக்கப்படலாம். இங்கு, பிரதான முரண்பாடு வேளாளச் சாதிய ஆதிக்கமேவெனும் அரசியல் கருத்தாக்கவும் ,இதுசார்ந்து மெல்ல எழுப்பப்படலாம்.இன்றைய தலித்துவ மற்றும் பிரதேசவாதப் பிளவு வாதமெல்லாம் இதை நோக்கிய நகர்த்தப்படுகிறது.

இன்றைய இந்தவுலகத்தில் வர்க்க,பால்-நிறபேதங்களும்,சாதிய-இன,மத பேதங்களும் தற்செயலாகத் தோன்றியதல்ல.இவை வரலாற்றில் செல்வக்குவிப்பின் ஆரம்பத்திலிருந்து தொடங்குகிறது.ஆரம்ப தாய்வழிக் குழுமத்தில் தேவைகளானது பொருள்வளர்ச்சியையும்,அதைக்காப்பதையும் நோக்கமாக்க அதுவே பலம் பொருந்திய ஆளுமைiயும் இதற்குள் திணிக்கிறது.இதன் தொழிற்பாடானது வலியவர்கள் தமது நிலையை வெகுவாக நிலைப்படுத்தும்போது மற்றவர்களுக்கான ஆடு தளம் சுருங்கிவிடுகிறது. இந்தப் புரிதலோடு இன்றைய புலம்பெயர் தமிழ்க் குழுமத்தின் அரசியல் நகர்வைப் புரிய முனைந்தால்அந்நியத் தேசங்களது கனவானது தமிழ் மக்களைப் பிரதேச ரீதியாக எங்ஙனம் பிளந்துள்ளதென்றும்,அதன் தொடர்விருத்தியாக முன் தள்ளப்படும் கட்சிகள்-குழுக்களது மாதிரிக் குட்பட்ட அரசியல் அமுக்கமும் புலியினது போராட்டப் பாதையின் எச்சமாக நகர்வதை இனங்காணமுடியும்.

இன்று புலம்பெயர் தளத்தில் ஊடகவன்மமாகவும்-கட்சிகட்டும் பெரிய போர்வினை நுட்பமாகவும் ஒருங்கே தமிழ்மக்களது விடிவு குறித்து வகுப்பெடுக்கின்றனர்.ஒவ்வொரு நிகழ்வுக்குப் பின்னாலும் ஏதோவொரு அரசியல் இருக்கிறது.இது, அவரவர் சார்ந்தியங்கும் தத்துவங்கட்கு அமைய நிகழ்வதில்லை.மாறாக, அவரவர் வர்க்கத் தளத்தைச் சார்ந்து இது மையமானவொரு செயற்பாட்டை நெடுக வற்புறுத்தி வருவதனால்,அதைச் சாதிப்பதில் எழும் சிக்கல்களை முழுமொத்த மாற்றுக் கருத்து நிலைகளுக்கும் பொதுமைப்படுத்தும் நோக்கில், பற்பல எண்ணங்களைப் புனைகின்றார்கள்.இதுள் தனிநபர்சார்ந்த ஒழுக்கம்முதல் அவரவர் சொந்த விவகாரங்களும் மக்கள் நலன் என்ற முலாம் பூசப்பட்டு வெளியுலகுக்கு ஒருவித வன்முறை அரசியலாக வெளிவருகிறது.

இவை நமது மக்களது எதிர்காலவாழ்வு குறித்துப் புதுவகைக் கருத்துக்களைத் தமது எதிர்கால இலங்கை அரச வியூகத்திலிருந்து தொடரும் புதிய தெரிவுகளில், புலம்பெயர் தமிழ்க் குழுக்கள் அரசியல் ரீதியாக அணிதிரள்வது புரட்சியெனப் பரப்புரைக்குள்ளாக்கப்படும் தருணத்தில் பக்கம் பக்கமாகப் புதிய தொடர்கள் ஏதோவொரு மூலையில் இருப்பெடுக்கிறது.

மாற்றுக் கருத்தாளர்களென நம்மை நாம் பிரகடனப்படுத்திய கையோடு,நமக்குள் சிதைவுறம் நமது செயலூக்கம்,இன்று, பெரும்பாலும் நமக்குள் வன்மைத்தைத் தகவமைத்தில் முடிவடைகின்றன.

இவை நமது மக்களது பிரச்சனைகளைச் சொல்லியே தத்தமது எஜமானர்களது தேவைகளைக் கையிலெடுத்துள்ளது.இங்கே, தலித்துக் குழுக்களோ அல்லது கிழக்குப் பிள்ளையான்-ஞானம் மாபியாக்களோ அன்றி இலக்கியச் செம்மல் சோபாசக்தியின் விசமக் கருத்தாடலோ விலக்கல்ல.இது, குறித்து அசோக் பேசுவது ரொம்பச் சுணக்கமென்றாலும் பேசினரென்பது மக்கள் நலன்சார் அரசியலுக்கும் ,அதுசார்ந்து மக்களது உரிமைகளைத் தூக்கிப்பிடித்து, இலங்கையில் உரிமைகளைப் பல்வேறு தேசியவினங்கள்-சிறுபான்மைச் சமுதாயங்காளக இருந்தபடி வென்றெடுப்பதற்காகவேனும் நாம் மேற்காணும் இலங்கை -இந்திய லொபிகளது பிளவுவாத – மக்கள்விரோத முகங்களைக் குறித்துக் கவனத்தைத் திருப்பியாகவேண்டும்.இதைவிட வேறொரு தெரிவு முள்ளி வாய்க்காலுக்குப்பின் ஒடுக்குமுறையாளர்கள் விட்டு வைக்கவில்லையென்பதும் நாம் தரிசிக்க வேண்டிய யதார்த்தமாகும்.

ப.வி.ஶ்ரீரங்கன்
03.05.2013

தொடர்புடைய பதிவுகள்:

இலங்கை அரச தொங்குதசைகளின் மேதின ஊர்வலம் : அசோக் யோகன்
சாதிச் சங்கங்களும் இனச்சுத்திகரிப்பும் – எச்சரிக்கை : சபா நாவலன்
சுகனார் படிகம் : ப.வி.ஶ்ரீரங்கன்