சுமந்திரனின் பாராளுமன்ற உரையும் புதிய அரசியலமைப்புத் திட்டமும்

sumanthiranபுதிய அரசியல் அமைப்பை உருவாக்குவது தொடர்பாகப் பாராளுமன்றத்தில் உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி சுமந்திரன், அது வரலாற்று முக்கியத்துவம் மிக்கது எனக் கூறினார். பாராளுமன்றத்திற்கு வெளியே சில எதிர்ப்புக் குரல்கள் இருந்தாலும் புதிய அரசியல் திட்டம் ஒன்று தேவை என்பதைப் பாராளுமன்றத்தின் உள்ளே அனைவரும் ஏற்றுக்கொள்கின்றனர் என்றார்.

இனங்கள் மத்தியில் அதிகாரப் பரவலாக்கல் தேவை என சுமந்திரன் குறிப்பிட்டார். முன்னைய அரசியல் யாப்புக்கள் தயாரிக்கப்பட்ட போதெல்லாம் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டார்கள் எனக் குறிப்பிட்ட சுமந்திரன். முன்னைய அரசியல் அமைப்புகள் உருவாக்கப்பட்ட போது, தனி மனிதர்களாக ஒவ்வொருவருக்கும் உரிமைகள் குறித்துச் சிந்திக்காமல் கலாச்சார இன மத அடையளங்களின் அடிப்படையில் உரிமை வழங்கப்பட்டிருந்தால் இலங்கைத் தீவு ஒரு உறுதியான தனி நாடாகத் தொடர்ந்திருக்கும். இந்த நாட்டின் அடிப்படைப் பண்பாக அது அங்கீகரிக்கப்படாமையால் மட்டுமே இலங்கையில் முப்பது வருட யுத்தமும், இன்று வரைக்குமான சிக்கல்களும் தோன்றின என்றார்.

சுமந்திரனின் உரையின் சாராம்சம்:

ஒரு பக்கத்தில் முற்போக்குச் சிந்தனைகளை முன்வைக்கும் ஜே.வி.பி போன்ற கட்சிகள் தமிழ் மக்களின் பிரச்சனைகளை வெறும் பொருளாதாரப் பிரச்சனைகளாகவும், வேலையில்லாத் திண்டாட்டமாகவும் கூறுவது வருத்தத்திற்குரியது. அவ்வாறான சிந்தனை தோன்றுவதற்கு தமிழர்களின் பிரச்சனைகளைப் பற்றி மட்டுமே தமிழ் ஊடகங்களும், சிங்களவர்களுடைய பிரச்சனைகளைப் பற்றி மட்டுமே சிங்கள ஊடகங்களும் கவனம் செலுத்துவதாகும்.

அரசியலமைப்புச் சட்டத்தின் படி பிரிவினை சட்டவிரோதமாக்கப்பட்டிருந்தாலும், இரண்டு வேறுபட்ட உலகங்களே தமிழ் மக்கள் மத்தியிலும், சிங்கள மக்கள் மத்தியிலும் காணப்படுகின்றது. இவை இரண்டும் ஒரு புள்ளியில் சந்திப்பதில்லை.

ஒருங்கிணைந்த அரசு என்று இன்று சிலர் கூறிக்கொண்டாலும் அது பெரும்பான்மையினரின் அரசு என்பதே உண்மை. பெரும்பான்மை இனத்தவரின் விருப்பங்களே இதுவரை நிறைவேற்றப்பட்டன. அதனால் தான் 1949 ஆம் ஆண்டு தமிழர்களின் ஒரு பகுதியினரை குடியுரிமை அற்றவர்களாக்க முடிந்தது. இந்த நாட்டில் வாழ்வதற்குரிய அடிப்படை உரிமை மறுக்கப்பட்டது. அது 1956 ஆம் ஆண்டு மறுபடி நடந்தது.
இன்று நாட்டின் இரண்டு பிரதான அரசியல் கட்சிகளும் புதிய அரசியல் அமைப்புத் தேவை என ஒப்புக் கொள்வது புதிய வரலாற்றுத் திருப்பம்.

இரண்டு முக்கிய கட்சிகளாலும் ஏற்படுத்தப்பட்ட பாரிய தவறுகளுக்கு மீண்டும் இடம் கொடுக்க வேண்டாம்.

என்ற கருத்துக்களை அவர் தெரிவித்தார்.

புதிய அரசியல் அமைப்பு இலங்கை மக்களுக்கும் தமிழ்ப் பேசும் சிறுபான்மையினருக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததோ இல்லையோ சுமந்திரனின் பாராளுமன்ற உரை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பாடங்களைக் கற்றுத் தருகிறது.

சுமந்திரனின் உரை ஒற்றையாட்சிக்குள் மட்டுமே தீர்வைக் கோருவதாக இருந்தாலும், வரலாற்றின் முக்கிய புள்ளிகளைத் தொட்டுச் செல்கிறது. மக்களை உணர்ச்சிவசப்படுத்தி தமிழ்த் தேசிய சில்லரை வியாபாரம் நடத்தும் தமிழ்த்தேசிய வியாபாரிகளுடன் ஒப்பிடும் போது சுமந்திரனின் ஏகாதிபத்திய மொத்த வியாபாரம் தற்காலிகமாக அழிவுகளை மட்டுப்படுத்துகிறது. சிங்கள மக்களுக்கு மறைக்கப்பட்ட உண்மையைக் கூறுகிறது.

இலங்கை இப்போது ஒரு நாடாக இல்லை என்பதையும் அது தமிழ்ப் பேசும் சிறுபான்மைத் தேசிய இனங்களின் வெவ்வேறு தேசங்களாகவே நடைமுறையில் உள்ளது என ஒப்புக்கொள்ளும் சுமந்திரன் சிறுபான்மைத் தேசிய இனக்களுக்கு உரிமை வழங்கப்பட்டால் மட்டுமே ஒரு நாடாக உறுதியடையும் என்பதைக் கூறுகிறார்.

இங்கு சிறுபான்மைத் தேசிய இனங்களின் உரிமை என்றால் என்ன என்பதை மட்டும் சுமந்திரன் குறிப்பிடவில்லை. சர்வதேசச் சட்டங்களே அங்கீகரிக்கும் ‘சுய நிர்ணைய உரிமை’ என்பதே அது. மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமையான சுய நிர்ணைய உரிமைக்கான கோரிக்கையின் நியாயத்தைச் சிங்கள மக்கள் மத்தியில் கூறுவதற்கும் அதற்கான அரசியலை முன்வைப்பதற்கும் அரசியல் தலைமை அற்றுப்போன நிலையிலேயே சுமந்திரன் போன்றவர்களின் கைகளில் அது விழுந்துள்ளது.

எஞ்சியிருக்கும் தமிழ் சிங்கள இனவாதிகளும், புலம்பெயர் தேசிய வியாபாரிகளும், அதன் உள்ளூர் முகவர்களும் புதிய அரசியல் தலைமையின் தோற்றத்தைத் தடுத்து வருகின்றனர். அந்த வகையில் அரசியல் தலைமை சுமந்திரன் போன்றவர்களின் கைகளில் ஒப்படைக்கப்படுவது தவிர்க்க முடியாதது.

தவிர, ஜே.வி.பி மற்றும் அக்கட்சியிலிருந்து பிளவடைந்த முன்னைலை சோசலிசக் கட்சி போன்ற இடதுசாரிச் சாயம் பூசிய இனவாதக் கட்சிகள் சுய நிர்ணைய உரிமையை மறுத்துவருகின்றன. தமிழ்ப் பேசும் மக்களின் ஒடுக்குமுறையை வெறும் பொருளாதாரப் பிரச்சனையாகவே கொச்சைப் படுத்துகின்றன.

இவை அனைத்தும் இணைந்தே ஏகாதிபத்திய நாடுகளுக்கு இலங்கையின் கதவுகளை அகலத் விடப்பட்டிருக்கின்றன.