Save Tamil‐ அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட திஸ்ஸநாயகத்திற்கான சிறைத் தண்டனை கூட்டத்தில் எனது அறிக்கை : டி.அருள் எழிலன்

aruராஜு சிந்து என்ற இரண்டு யானைக்குட்டிகளுக்காக வருந்திய எந்த ஒரு இலங்கை ஊடகமும் முகாம்களுக்குள் முடக்கப்பட்டுள்ள இம்மக்களுக்காக எழுதத் துணியவில்லை. வவுனியா முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள இந்த யானைக்குட்டிகள் தொடர்பாக உங்களில் யாரேனும் கரிசனம் கொள்வீர்கள் என்றால் திசநாயகாவிற்கு தீர்ப்பு எழுதிவிட்டு விலங்கை மாட்டியது போல உங்களுக்கும் மாட்டப்படும். மௌனமாக்கப்பட்ட வன்னி மக்களின் உரிமையைப் போல நீங்கள் மௌனமாக்கப் படுவீர்கள். ஆமாம் இலங்கைத் தீவின் மக்களும் பெரும்பாலான அறிவு ஜீவிகளும் யானைகளுக்காக மட்டுமே இறங்க பழக்கப்பட்டுத்தப்பட்டிருக்கிறார்கள். திசநாயகத்தின் கையில் இடப்பட்ட விலங்கும், லசந்தாவின் உயிரும் ஏனைய ஊடகவியளார்களை இலங்கையில் அமைதியாக்கி விட்டது.

பத்திரிகையாளர் திசநாயகத்திற்கு ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் திகதி மதியம் 20 ஆண்டுகால கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்ட போது இலங்கையில் உள்ள எந்த ஊடகங்களும் இதைக் கண்டித்து ஒரு கட்டுரையோ கண்டன  அறிக்கையோ, தலையங்கமோ எழுதவில்லை. அரசியல் கட்சிகள் நீண்ட மௌனத்தின் பின்னரே வாய் திறந்தார்கள். இலங்கைக்குள் செயல்படும் மனித உரிமை அமைப்புகள் இன்றுவரை மௌனமாகவே இருக்கின்றன. அநீதியானதும் அக்கிரமமானதுமான இந்தத் தண்டனையை எதிர்த்து குரல் கொடுக்கும் தைரியம் இலங்கை தேசத்திற்குள் எவர் ஒருவருக்கும் இல்லாமல் போனது. இலங்கையின் டெய்லி மிரர் தவிர  பெரும்பாலான ஊடகங்கள் அமைதியாகி விட்டன. ஆனாலும் சர்வதேச ஊடகங்களும், மனித உரிமை  அமைப்புகளும் திசநாயகத்திற்காய் பேசினார்கள்.

எல்லாவற்றிர்கும் மேலாக திசநாயகத்திற்கு இரண்டு சர்வதேச விருதுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. 1979 – ல் இலங்கையின் தெற்கிலும் வடக்கிலும் நிலவிய கொந்தளிப்பான நிலையை கருத்தில் கொண்டு பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்தினார் அப்போதைய இலங்கை அதிபர் ஜெயவர்த்தன நாடு முழுக்க பல்லாயிரம் இளைஞர்கள் வேட்டையாடப்பட்டு நிராதரவான முறையில் கொல்லப்பட்டனர். அப்படி கொல்வதற்கான கட்டற்ற சுதந்திரத்தை பயங்கரவாதச் சட்டம் அவர்களுக்கு வழங்கியிருந்தது. போராளிகளுக்கும், மனித உரிமை ஆர்வலர்களுக்கும், அரசியல் இயக்கம் கட்ட நினைப்பவர்களுக்கும் எதிராக பயன்படுத்தப்பட்டு வந்த இந்த பயங்கரவாத தடுப்புச் சட்டத்திற்கு ஊடகவியளார் ஒருவரும் முதலாவதாக பலியாகியிருக்கிறார்.

2008ம் ஆண்டு மார்ச் 19ம் தியதி புலிகளோடு தொடர்பு கொண்டிருந்தார் அவர்களிடம் பணம் வாங்கியிருந்தார் என்ற குற்றச்சாட்டின் பெயரில் கைது செய்யப்பட்ட திசநாயகம் கிட்டத்தட்ட ஐநூறு நாட்களுக்கு மேல் சட்ட வீரோதமான முறையில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டார்.பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை பிரயோகிக்கும் இலங்கை பாதுகாப்பு அமைச்சரும் ராஜபக்ஸவின் தம்பியுமான கோத்தபாய ராஜபக்ஸ திசநாயகத்தை மட்டுமல்ல அவர் விரும்புகிற எவர் ஒருவரையும் இப்படி தடுத்து வைத்திருக்க முடியும்.நண்பர்களே திசநாயகம் செய்த தவறு என்ன? சுதந்திரமாக சிந்திக்கவும், சிந்திக்கிற ஒன்றை எழுதுகிற உரிமையும் ஏன் திசநாயகத்திற்கு மறுக்கப்பட்டது என்றால், அவர் போர் நிறுத்தக் காலத்தில் தனது கண்காணிப்பின் கீழ் வெளியான நோர்த ஈஸ்டன் இதழில் இரண்டு கட்டுரைகள் எழுதினார். இந்த இரண்டு கட்டுரைகளுக்காகவும் தான் அவருக்கு இருபதாண்டுகால சிறைத் தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. இரண்டு கட்டுரைகளின் மூலம் திசநாயகம் இலங்கையின் புனிதத்திற்கு களங்கம் ஏற்படுத்தி விட்டதாகவும், அபகீர்த்தியை ஏற்படுத்தி விட்டதாகவும் அவரை கைவிலங்கிட்டு சிறைக்கு அனுப்பியிருக்கிறார்கள். journalists-meet200ஆனால் திசநாயாகம் எண்பதுகளில் தொழிலாளிகளுக்காக போராடி தன் வேலையை இழந்தவர். காணாமல் போனவர்களுக்காக தொடர்ந்து போராடிக் கொண்டிருந்தவர். வடக்கில் காணாமல் போனவர்கள் குறித்து அவர் ஆவணப்படம் ஒன்றையும் இயக்கியுள்ளார். போர் மனித உறவுகளைச் சிதைப்பது குறித்த ஆழ்ந்த கவலை அவருக்கு இருந்தது. இன ரீதியான பிரச்சனைகளை வன்முறை வழியில் இல்லாமல் அரசியல் ரீதியாக தீர்ப்பது குறித்த ஆய்வை செய்தவர் அவர். தான் கைது செய்யப்படும் வரை போருக்கு எதிராகவும் சமாதானம் தொடர வேண்டும் என்றும் உறுதியாக இருந்தார்.

ஆனால் போரை தீவீரப்படுத்துவதில் குறியாக இருந்தவர்களுக்கு மிகவும் இடைஞ்சல் செய்து கொண்டிருந்த திசநாயக்த்தை கையில் விலங்கிட்டு முடக்கினார்கள். திசநாயகம் கைது செய்யப்பட்ட பின்பு லசந்தா கொலை செய்யப்பட்டார். அவர் போரின் பங்காளிகள் குறித்து புலனாய்வு செய்து போர், ஆயுதக் கொள்வனவு, அதில் இலங்கை ஆட்சியாளர்களுக்கு உள்ள தொடர்பு குறித்தெல்லாம் அதிர்ச்சியான பல உண்மைகளை லசந்தா வெளிக்கொண்டு வர இருந்த போது கோழைத்தனமான முறையில் அவரைக் கொன்றார்கள். அவரது துணைவியார் சோனாலி சமரசிங்க குழந்தைகளோடு இலங்கையில் இருந்தே தப்பிச் சென்றார்.லசந்தா கொலை, திசநாயகம் கைது என தமிழ் மக்கள் மீது காட்டப்பட்ட போர் வெறி நியாயமான கருத்துக்களை வெளிப்படுத்தி வந்த சிங்கள ஊடகவியளார்கள் மீதும் காட்டப்பட ஒரு நியாயவாதி கூட அங்கு வாழ முடியாது என்று ஊடகவியளார்கள் தப்பித்து ஓடினார்கள் இன்று வரை உலகெங்கிலும் அலைந்து கொண்டிருக்கிறார்கள்.

ஜெயப்பிரகாஸ் சித்தம்பல திசநாயகம் என்னும் ஊடகவியளாரின் செயல்பாடு என்பது இன்றைக்கு நேற்றைக்கு அல்ல கடந்த முப்பதண்டுகாலமாகவே போருக்கும் வன்முறைக்கும் எதிரானதாக இருந்து வந்திருக்கிறது. தெற்கில் 1989& ம் நடந்த வன்முறைகளில் போது காணாமல் போனவர்கள், படுகொலையான சிங்கள இளைஞர்கள் குறித்த தகவல்களை வெளிக் கொண்டு வந்தவர் இன்றைய ஜனாதிபதியாக இருக்கும் ராஜபட்சேதான் ஆனால் அன்றைக்கு மக்கள்பால் அக்கறை கொண்ட திசநாயகத்தை அதற்கு பயன்படுத்திக் கொண்டார் இன்றைய ஜனாதிபதி. இடையில் ஓடிக் கழிந்த இந்த இருபதாண்டுகளில் மாறியது ராஜபட்சேதானேத் தவிற திசநாயகா இல்லை. திசநாயகா 89&ல் சிங்கள மக்களுக்காக எதைச் செய்தாரோ அதையே 20002, 20003& ல் தமிழ் மக்களுக்காகச் செய்தார். ஆனால் அதிகார பீடத்திற்கு வந்த பிறகுதான் ராஜபட்சேவின் இடதுசாரி முகமூடி கலைந்தது. யுத்தத்தை எதிர்ப்பதை கொள்கையாக காட்டிக் கொண்ட ராஜபட்சே தமிழ் மக்களுக்கு யுத்தத்தையே பரிசாகவும் கொடுத்தார்.ஆனால் அப்போதும் இப்போதும் யுத்தத்திற்கு எதிராகவே பேசிய, பேசிக் கொண்டிருக்கும் திசநாயகத்துக்கு கையில் விலங்கிட்டு சிறைக்கு அனுப்புகிறார்.

நண்பர்களே நீதிமன்றத்தின் முன்னால் நமது சகாவான திசநாயகம் நீண்ட வாக்குமூலம் ஒன்றை வழங்கியுள்ளார். தனது வாக்குமூலம் எப்படி அதிகார வெறியர்களால் தீர்ப்புக்கு ஏற்றவாறு திருத்தி எழுதப்பட்டது என்பதையும். தன் வழக்கு தொடர்பாக தான் வழங்கிய வாக்குமூலத்தின் ஒரு பகுதியை அவர்கள் மறைத்து இலங்கை அரசின் நீதிமன்ற குரலுக்கு ஏற்றவாறு எப்படி மாற்றினார்கள் என்பது குறித்தும் எழுதியிருக்கிறார்.போரால் பாதிக்கப்பட்ட மக்களினங்கள், தமிழ் மக்களின் இனவிடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த போராளிகள் தொடர்பாகவும் தன் கருத்தை பதிவு செய்திருக்கிறார். 2006 ஜூன் மாதம் முதலாம் தியதி முதல் 2007 ஜூன் மாதம் முதலாம் தியதி வரை திசநாயகத்தால் நடத்தப்பட்ட நோர்த் ஈஸ்டன் மாதாந்திர இதழுக்கான நிதிகள் முறையாக பெறப்பட்டது குறித்தெல்லாம் அதில் விபரித்துள்ளார்.ஆனால் அவரது குரல் இலங்கை ஆட்சியாளர்களை அச்சுறுத்தியிருக்கிறது. அதனால்தான் மூன்று லட்சம் மக்களை முட்கம்பி வேலிகளுக்குள் அடைத்து வைத்திருப்பதன் மூலம் நாட்டிலுள்ள ஏனைய சிறுபான்மை இன மக்களை அடக்கி அச்சுறுத்தி வைத்திருப்பது போலவே திசநாயகத்திற்கு கைவிலங்கிட்டு சிறைத்தண்டனை வழங்கியதன் மூலம் நாட்டிலுள்ள ஏனைய ஊடகவியளார்களையும் அச்சுறுத்தி அமைதியாக்குகிறார்கள்.

இன்று இலங்கையில் வாழும் எந்த ஒரு ஊடகவியளாரும் குறிப்பாக தமிழ் பேசும் ஊடகவியளாரும் திசநாயகத்தை வைத்தே தங்களின் தலைவிதியை தீர்மானித்துக் கொள்கிறார்கள்.நண்பர்களே தேசீய வெறியே தேசப்பற்றாக உருவாகி எங்கும் வியாபித்திருக்கும் ஒரு காலச் சூழலுக்குள் நாம் வாழ்கிறோம். உலகெங்கிலும் எல்லா தேசங்களிலும் தேசிய வெறி கொழுந்து விட்டெறிகிறது. ஊதியம் பெற்றுக் கொண்டு இராணுவத்தில் இணைந்து பணியாற்றும் இராணுவ வீரர்கள் தியாகிகளாக சித்தரிக்கப்படுவதும் குண்டு வீச்சுகளில் கொல்லப்படும் மக்கள் பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்பட்டு தேசப் பெருமிதங்களால் அவர்கள் புதைக்கப்படுவதும் இன்று உலகெங்கிலும் காணக் கூடியதாய் இருக்கிறது.போர்களும், ஆயுதங்களும் தேச நலனுக்கானவை என்கிற சிந்தனைகளும் மேலெழுந்து வருகிற சூழல் உலகெங்கிலும் காணப்படுகிறது. இந்த தேசீய வெறி பெரும்பான்மை என்னும் பெருமிதத்தால் கட்டப்பட்டிருப்பதையும் நாம் காண்கிறோம். சிறுபான்மை மக்களின் எளிமையான கலாசார பழக்கவழக்கங்கள், வழிபாட்டு நம்பிக்கைகள், மொழி, நிலம், என அவர்களின் சிவில் உரிமைகளை பெரும்பான்மை சமூகங்கள் மறுக்கிற சூழலை நாம் காண்கிறோம். பெரும்பான்மைச் சமூகத்திற்கு அடங்கி நடக்கிறவர்கள் இந்த தேசத்திற்கு உண்மையானவர்களாகவும் தங்களின் நம்பிக்கை சார்ந்த அடையாளங்களோடு வாழ முற்படுகிறவர்கள் தேசத்துரோகிகளாகவும் சித்தரிக்கும் சூழலில் பெரும்பான்மை மக்கள் போலியான இந்த தேசீய பெருமிதங்களில் மூழ்கிற அதே வேளையில் சிறுபான்மை மக்கள் ஒன்றிலோ வாழ்வதற்கான தங்களின் எளிய அடையாளங்களை அழித்துக் கொண்டு பெரும்பான்மை சமூகங்களோடு ஐய்க்கியமாகிறார்கள். அல்லது தனிமைப்படுத்தப்படுகிறார்கள். மதம், மொழி, இனம், தேசம், சாதி, என எந்த ஒன்றையும் நினைத்து பெருமை கொள்ளவோ அத்தோடு பிணைத்து பெருமிதம் கொள்ளவோ என்ன இருக்கிறது? ஆனால் இன்று இலங்கைத் தீவில் பிறந்த சிங்களர்கள் ஒவ்வொருவருமே அந்தத் தீவை காக்க புத்தரால் அனுப்பப்பட்டவர்கள் தாஙகளே என நினைத்து பெருமிதம் கொள்கிற அதே நேரத்தில் தமிழ் பேசும் மக்களே துர்தேவதைகளால் அனுப்பப்பட்டு இந்த தேசத்தை நிர்மூலமாக்க வந்தவர்கள் இவர்கள் என்ற எண்ணமும் அங்கே பெரும்பான்மை மனோபாவமாக இருக்கிறது.

பௌத்த சிங்கள தேரவாத மரபு என்பது பாசிச மரபாக மாறிய இந்த இரு நூற்றாண்டுகால வரலாற்றில் தமிழ் மக்களைப் போலவே மலையாளிகளையும்,இஸ்லாமிய மக்களையும் கொன்றொழித்தே அவர்கள் சிங்கள மேன்மையை நிறுவியிருக்கிறார்கள். இந்த சிங்கள மேன்மையின் மீது பூசப்பட்டுள்ள முலாம்தான் தேரவாத பௌத்த மரபு. இரத்தம் தோய்ந்த அதன் கொலை வரலாற்றில் இந்த முப்பதாண்டு காலத்தில் மட்டும் அது சிங்களர்களும் தமிழர்களுமாய் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான மக்களைக் கொன்று தின்றிருக்கிறது. 2006‐ம் ஆண்டிலிருந்து 2009& ம் ஆண்டு வரை இருபதுக்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் இலங்கை அரசாங்கத்தாலும் போராளிக்குழுக்களாலும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் இலங்கை அரசின் இனவாதப் போக்கை சுட்டிக் காட்டியும் விமர்சித்தும் எழுதியவர்களே, நீண்டகால கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளை நெறிக்கப்படுவதன் அடையாளமாக அய்யாத்துரை நடேசன், மயில்வாகனம் நிமலராஜன், ரிச்சர்ட்டி டி சொய்சா, தேவிஸ் குருகே, தர்மரத்தினம் சிவராம், ரேலங்கி செல்வராஜா, நடராஜா அற்புதராஜா ஐ. சண்முகலிங்கம், சுப்ரமணியம் சுகிர்தராஜன், சின்னத்தம்பி சிவமகாராஜா, சம்பத் லக்மால் சில்வா, இசைவிழி செம்பியன், ரி.தர்மலிங்கம், சுரேஸ், கேதீஸ் லோகநாதன், சந்திரபோஸ்,புண்ணியமூர்த்தி சத்தியமூத்தி எனப் பலரும் படுகொலையாகி வீழ்ந்திருக்கிறார்கள்.

நான் தேசியவாதியல்ல முதலாளித்துவ ஒழுக்கம் உருவாக்கி வைத்துள்ள இந்த வர்த்தக நலன் சார்ந்த தேசியவெறிக்குள் ஒரு தமிழ் தேசியவாதியாகவோ இந்திய தேசீயவாதியகாவோ நான் இருக்க விரும்பவில்லை. இருக்கவும் மாட்டேன். ஆனால் ஒடுக்கப்பட்ட சிறுபான்மை மக்களினங்கள் தங்களின் அடையாளங்களை உறுதி செய்யும் பொருட்டு நாம் அக்கறை கொண்டுள்ளோம். இந்தியாவின் மணிப்பூர், நாகாலாந்து உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் பழங்குடி மக்களின் அரசியல், சிவில் உரிமைகள் எப்படி அங்கீகரிக்கப்படுவதோடு பாரம்பரீய நிலங்களில் இருந்து அவர்கள் அப்புறப்படுத்தப்படுவதை நாம் எதிர்க்கிறோமோ, காஷ்மீரிகளின் சுயாட்சிக் கோரிக்கையை எப்படி ஆதரிக்கிறோமோ, இஸ்ரேலின் ஆக்ரமிப்பில் இருந்து பாலஸ்தீனம் எப்படி விடுதலை பெற வேண்டும் என நாம் நினைக்கிறோமோ, துருக்கி ஆட்சியளர்களிடமிருந்து குர்தீஷ்கள் எப்படி விடுதலை பெற வேண்டும் என நினைக்கிறோமோ, அப்படித்தான் ஈழமும், இலங்கை ஆட்சியாளர்களிடமிருந்து விடுதலை பெற வேண்டும் என நான் நினைக்கிறேனே தவிற ஈழத்த்தை ஆதரிக்கிற நான் தமிழன் என்பதாலோ அங்கே போராடிக் கொண்டிருப்பவர்கள் தமிழர்கள் என்பதாலோ அல்ல, இதுவல்லாமலும் இலங்கைத் தீவிற்குள் இனி சிங்கள மக்களும் தமிழ் மக்களும் சேர்ந்து வாழும் சாத்தியங்கள் முற்று முழுதாக அறுந்து விட்டதாகவே நான் நினைக்கிறேன்.

இந்த அரசியல் யதார்த்த நிலையில் இருந்தே நான் திசநாயகத்தின் கைதைக் கண்டிக்கிறேன். மத்தியகிழக்கில் யுத்த சூனியத்துக்குள் சிக்கி எப்படி ஊடகவியலாளர்கள் உயிர் விடுகிறார்களோ அப்படியே இலங்கை அரசின் ஊடக அடக்குமுறையை நான் காண்கிறேன். என என் கருத்துக்களை உங்கள் முன்னால் நான் பதிவு செய்ய விரும்புகிறேன்.

திசநாயகத்தை நிபந்தனையின்றி விடுதலை செய்!

முட்கம்பி வேலிகளுக்குள் முடக்கி வைத்திருக்கும் மக்களை அவர்கள் பாரம்பரீய பிரதேசங்களில் குடியமர்த்து!

கைது செய்யப்பட்ட ஆண், பெண் போராளிகள்,மூத்த தலைவர்கள் குறித்த விபரங்களை பகிரங்கப்படுத்து. நீதிமன்றத்தில் நிறுத்து!

இனப்படுகொலை செய்யாதே! தமிழ் மக்களின் அரசியல் சிவில் உரிமைகளை அங்கீகரி!

நன்றி,

வணக்கம்.

டி.அருள் எழிலன்.

2 thoughts on “Save Tamil‐ அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட திஸ்ஸநாயகத்திற்கான சிறைத் தண்டனை கூட்டத்தில் எனது அறிக்கை : டி.அருள் எழிலன்

  1. பத்திரிகையாளர் திசநாயகம் அவர்கள் ஓர் உயர்வான மனிதராக இன்று சிங்களதேசம் அவரைக்கொண்டு வந்து விட்டுள்ளது. அதே நேரத்தில் சிங்கள தேசத்தின் காட்டுமிராண்டி தனங்களுக்கும் மனிதநேயமற்ற செயற்பாடுகளுக்கும் இந்த கேடுகெட்ட சர்வதேசமும் துணைபோகின்றதே என்பதை பார்க்கும் போது ஒரு வெறுப்பும்> வேதனையும் ஏற்படுகின்றது. நீதி சொல்ல வேண்டிய நீதிமான்கள் கூட அதற்கு துரோகமிழைப்பதுவும் ஆட்சியாளர்களுக்கு துணைபோகும் ஒரு அநாகாPகம் உலகில் இலங்கைத்தீவில் மட்டும் தான் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். அப்படியான ஒரு நாட்டில் தமிழர்களும் சிங்களர்களும் இணைந்து வாழ முடியுமா???? இதனை சிங்களவனுக்கு அடிவருடி சுகம்காணும் எம்மின துரோகிகள் உணர்வார்களா?? உணர்வுள்ள உரமுள்ள தமிழன் மதிப்புக்குரிய திசநாயகம் அவர்கள் வெளிக்கொணர்வதற்கான முயற்சியில் அனைத்து தமிழ் உள்ளங்களும் ஈடுபடுங்கள்

  2. அருள் எழிலன்,
    உங்கள் போராட்டத்திற்கு தமிழ் மக்கள் அனைவரும் நன்றி தெரிவிக்க வேண்டும்.
    இது வெற்றி பெற்றால் தமிழ் மக்களிடையே மிகப் பெரும் நம்பிக்கை பிறக்கும்.
    அது மாபெரும் சக்தியாக உருவெடுக்கும். -நன்றி

Comments are closed.