ஆயுதப் போராட்டத்தின் இறுதி எச்சங்களும் அழிக்கப்படுகின்றன; விக்கியும் சம்பந்தனும் இணைந்தனர்

tnaமுப்பது வருடங்களாக ஆயுதம் தாங்கிய யுத்தம் நடத்திய தமிழ்ப் பேசும் மக்களின் போராட்டம் இன்று அன்னியர்களின் கைகளில் முழுமையாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. புலம்பெயர் பிழைப்புவாதக் குழுக்கள் இதனை போராட்டம் சர்வதேச மயப்படுத்தப்பட்டதாக மார்தட்டிக்கொள்கிறார்கள். எந்தவிதக் கூச்ச உணர்வுமின்றி தமது நடவடிக்கைகளின் காரணமாகவே ‘சர்வதேசம்’ தலையிடுகிறது என்கிறார்கள். வன்னிப் படுகொலைகளின் பின்னான நிகழ்வுகள் அனைத்தும் ஏற்கனவே திட்டமிட்டபடியே நடைபெறுகின்றன.

அதனை இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சம்பந்தன் உறுதிப்படுத்தியுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களின் ஒன்றுகூடல் ஒன்று நேற்று கிளிநொச்சியில் நடைபெற்றது. அதன் போது கைதிகள் தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளித்த சம்பந்தன் வெளிநாட்டிலிருந்து வருபவர்களுடன் இது தொடட்பாகப் பேசிக்கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் தேசிய இனங்களின் சுய நிர்ணைய உரிமை அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கையில் அதற்கான கோரிக்கையை முன்வப்பதே தீவிரவாதம் என்ற கருத்து தமிழர் தரப்புகளிடமிருந்தே முன்வைக்கப்படுகிறது. தமிழ்ப் பேசும் சிறுப்பான்மைத் தேசிய இனங்களுக்கான சுயநிர்ணைய உரிமைக்கான கோரிக்கை முற்றாக அழிக்கப்பட்டு இன்று குறைந்தபட்ச அரசியல் தீர்விற்காக வெளிநாடுகளிடம் கையேந்தும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இதனைக் ஏற்றுக்கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண சபை முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் சம்பந்தனின் தலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பலப்படுடுத்கி தீர்வை வென்றெடுப்போம் என்றார்.

தீர்வு ஒன்றை மக்கள் எதிர்பார்ப்பது தவறானதல்ல. அது சுய நிர்ணைய உரிமைக் கோரிக்கையில் அழிவிலிருந்தே உருவாக வேண்டுமென்பது ஆபத்தானது.

இஸ்லாமிய அடிப்படைவாதிகள் போன்று மேற்கு ஏகாதிபத்தியங்களின் நேரடிக் கட்டுப்பாட்டினுள் இயங்கும் புலம்பெயர் பினாமிகள் புலிகளின் அடையாளத்தைப் பயன்படுத்தியே சுயநிர்ணைய உரிமையை அழித்துவிட்டனர்.

புலிக் கொடிகளோடும் சின்னங்களோடும் தெருத்தெருவாக ஐரோப்பிய நாடுகளில் வியாபாரத்தில் ஈடுபடும் பினாமிகளுக்கு மக்களின் நலனில் அக்கறையில்லை. அவர்களின் அடிப்படை நோக்கம் புலிகளின் அடையாளத்தைப் பயன்படுத்தி முடியுமான அளவிற்குப் மக்கள் பணத்தைச் சுருட்டிகொள்வதே.

அழிக்கும் நாடுகளின் ‘புரஜக்ட் மனேஜ்மன்ட்’ தொழிலைச் செவ்வனே செய்துமுடிக்கும் கோட்பாடுகளற்ற ஒவ்வொரு அமைப்பும் அரசியல் நீக்கம் செய்யப்படவேண்டும்.