மாகாணசபைக்கான தேர்தலுக்குத் தயாராகும் வாக்குப் பொறுக்கிகள்

 சர்வதேச சமூகம் என்று அழைக்கப்படுகின்ற உலகின் அதி பயங்கர அதிகார வர்க்கத்தின் கூட்டு எதை விரும்புகிறதோ அதை இலங்கையில் செயற்படுத்துவதற்காக தெரிவுசெய்யப்பட்ட அடிமைகள் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், தமிழரசுக் கட்சியால் தலைமை தாங்கப்படும் அதன் அரசியலும் .

தமிழரசுக் கட்சியின் மேட்டுக்குடி ஏகாதிபத்தியங்கள் சார்ந்த அரசியலுக்கும் இலங்கை அரசின் அரசியலுக்கும் அடிப்படையில் எந்த முரண்பாடும் கிடையாது.

‘சிங்களவனின் தோலில் செருப்புத் தைப்போம்’ என்று மேடை மேடையாக முழங்கிவிட்டு பேரினவாத அரசியல் யாப்பையே வரைந்துகொடுத்த அரசியல் வரலாற்றையே அறுபது வருடங்களாக நாம் அனுபவித்து வருகிறோம். அதற்கெல்லாம் இந்த மேட்டுக்குடிகள் ஒரு பெயர் வைத்திருக்கிறார்கள். அது தான் அரசியல் சாணக்கியம் என்பது.

இன்று மக்கள் மீண்டும் தேர்தல் அரசியலை நோக்கி அழைத்துவரப்பட அதனை மையமாக முன்வைத்து வாக்குப் பொறுக்கக் காத்திருக்கும் வல்லூறுகள், இதுவரைகால இழப்பையும், தியாகங்களையும் இருந்த இடம் தெரியாமல் அழித்துவிட்டன.

இலங்கை அரசு அனைத்து மாகாணங்களுக்கும், ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெறும் என அறிவிக்க, அதிகாரக் கனவுகளோடு காத்திருந்த வாக்குப்பொறுக்கிகள் தம்மைத் தயார்படுத்த ஆரம்பித்துவிட்டனர்.

40 வருட காலப் போராட்டத்தின் விளைபலன் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெறுவது மட்டுமே என்ற எல்லைக்குள் அனைத்தும் குறுக்கப்பட்டுவிட்டன.

போராட்டம் சர்வதேச மயப்பட்டுவிட்டதாக புலம்பெயர் புலிகளும் அவர்களின் உள்ளூர் முகவர்களும் மார்தட்டிக்கொள்ள, வட கிழக்கின் வழங்கள் சர்வதேச வர்த்தக நிறுவனங்களின் சுரண்டலுக்குத் தயார்படுத்தப்பட்டுவிட்டன.

போராடத்தின் தோல்விக்கான காரணத்தைக் கூட ஆராய்ந்து பார்க்க மறுக்கும் புலம் பெயர் தேசங்களிலிருந்கு கட்டமைக்கப்படும் மூடிய சமூகம், போராடினால் சர்வதேசம் அழித்துவிடும் என்ற மாயைக்குள் மக்களை அமிழ்த்தி வைத்திருக்கிறது.

எஞ்சியிருக்கும் மக்களின் போர்குணத்தை துடைத்தெறிந்து தேர்தலும் வாக்குப் பொறுக்குதலுமே கதியென தமிழரசுக் கட்சியின் பிழைப்புவாத வழிமுறையை இன்று மொத்த சமூகமுமே ஏற்றுகொள்ளும் ஆபத்தான நிலை தோற்றம் பெற்றுள்ளது.