நீச்சல் வீராங்கனை சாய்ராவைக் கொன்ற தனியார் பள்ளி ! : இளங்கோ

saira-swimmer-suicide-2காசியாபாத் (உ.பி மாநிலம்) மாவட்டத்தைச் சேர்ந்த பதினொன்றாம் வகுப்பு பள்ளி மாணவி சாய்ரா சிரோகி (வயது-16) பள்ளி நிர்வாகத்தின் நெருக்கடி தாளாமல் 24-01-2016 அன்று தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.

மாணவி சாய்ரா சிரோகி இந்தியாவின் நட்சத்திர நீச்சல் வீராங்கனை ஆவார். இதுவரை 200-க்கும் மேற்பட்ட பதக்கங்களை வாங்கிக் குவித்திருக்கிறார். இந்தியா சார்பாக அகில உலக நீச்சல் விளையாட்டுப்போட்டிக்கும் தேர்வாகியிருக்கிறார். 50 மீட்டர் BreastStroke நீச்சல் போட்டியை 35.83 வினாடிகளில் கடந்து தேசிய சாதனையை நிகழ்த்தியிருக்கிறார். மேலும் இந்த வயதிலேயே தொடர்ச்சியாக பதினாறு மணி நேரம் 40 கிலோமீட்டர் நீந்தி அபார சாதனையும் புரிந்திருக்கிறார்.

ஆனால் நீரில் சாதனை புரிந்த இந்த வீராங்கனையை இவர் படித்த தனியார் பள்ளி ஈவிரக்கமின்றி மூழ்கடித்திருக்கிறது.

ஆங்கில நாளேடுகளில் மிகப்பரவலாக கவனம் பெற்ற மாணவி சாய்ராவின் தற்கொலை செய்தி இருவிதமான காரணங்களை முன்வைத்திருக்கிறது.

இந்து ஆங்கில நாளேட்டில் வந்த செய்தி மாணவி சாய்ரா போக்குவரத்துக்கட்டணம் ரூ. 45,000 கட்டாததால் பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டதை வெளிச்சத்திற்கு கொண்டுவந்திருக்கிறது.

மாணவியின் தந்தை அளித்த தகவலின் படி, போக்குவரத்துக்கட்டணம் செலுத்தாததால் பள்ளி நிர்வாகம் மாணவி சாய்ராவை வகுப்பிலிருந்து வெளியேற்றியிருக்கிறது. பணம் புரட்ட முடியாததால் சாய்ராவின் தந்தை, சாய்ராவை பணம் கிடைக்கும் வரை வீட்டிலேயே இருக்கச் சொல்லியிருக்கிறார். பலநாட்கள் வீட்டிலிருந்த சாய்ராவை பள்ளி நிர்வாகம் சில நாட்களுக்கு முன்புதான் மீண்டும் சேர்த்துக்கொண்டதாக கூறும் மாணவியின் தந்தை இதுதான் தன் மகளின் சாவுக்கு காரணமாக இருக்குமோ எனக் கருதுகிறார்.

சாய்ரா பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டதை மறுக்காத பள்ளி நிர்வாகம், இது ஏற்கனவே நடிந்த முடிந்த கதை என்கிறது. சாய்ரா படிக்கும் தனியார் பள்ளியான Delhi Public School Gaziabad, மாணவிக்கு முழுக் கல்விக் கட்டணத்திலிருந்து விலக்கம் அளித்ததாகவும், ஆனால் இரண்டு வருடங்களாக போக்குவரத்துக் கட்டணம் ரூ, 45,000 மட்டும் கட்டவில்லையென்றும் இதனால் இவர் பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டு ஜனவரி 11 அன்றே மீண்டும் சேர்த்துக்கொள்ளப்பட்டார் என்றும் சொல்கிறது. மாணவி வகுப்பிலிருந்து வெளியேற்றப்பட்டதை மாணவியின் நீச்சல் பயிற்சியாளரும் உறுதி செய்திருக்கிறார்.

saira-swimmer-suicide-3இந்தியன் எக்ஸ்பிரசில் வெளியான செய்தி, பள்ளி நிர்வாகத்தின் மற்றொரு நெருக்கடியைப் படம்பிடித்துக் காட்டுகிறது. மாணவி சிரோகி தொடர்ச்சியாக நீச்சல் போட்டிகளில் பங்கேற்பதால், பள்ளி வைக்கும் மாதத் தேர்வு, யுனிட் தேர்வு போன்ற தேர்வுகளில் பங்கேற்க முடிவதில்லை. அதே சமயம் பள்ளி நிர்வாகம் அனைத்து தேர்வுகளையும் எழுதச் சொல்லியிருக்கிறது. ஏற்கனவே தன் பயிற்சியாளரிடம் மாணவி சாய்ரா, எதிர்வரும் தேர்வுகளை முன்னிட்டு தன்னால் நீச்சல் பயிற்சியில் கலந்துகொள்ள முடியாதென்றும் தேர்வில் தேர்ச்சி பெறவில்லையென்றால் பள்ளியிலிருந்து தன்னை நீக்கிவிடுவார்கள் என்றும் கூறியிருக்கிறார். தற்பொழுது மாணவி இறந்த பிறகு, மாணவிக்கு தேர்வு எழுத தாங்கள் எந்தவிதமான அழுத்தத்தையும் தரவில்லையென பள்ளி நிர்வாகம் தெரிவித்திருப்பதையும் செய்திகள் வெளிக்காட்டுகின்றன.

இரண்டு செய்திகளும் ஒரே உண்மையைத்தான் சொல்கின்றன. மாணவி சாய்ரா, தனியார் பள்ளி நிர்வாகத்தால் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறார் என்பதே அது. இந்தவகையில் மாணவி சாய்ரா தனியார்மயத்தின் கோரமுகத்திற்கு பலியாகிருக்கிறார்.

மாணவி சாய்ராவின் தனியார்பள்ளி மட்டுமல்ல, இந்தியாவெங்கிலும் தனியார் பள்ளிகள் இப்படித்தான் செயல்படுகின்றன.

திறமையுள்ளவருக்கு முழுக்கல்விக்கட்டணம் விலக்கு என்று சொல்லிக்கொண்டே, போக்குவரத்துக் கட்டணம், ஆண்டு விழாக் saira-swimmer-suicide-1கட்டணம், தோட்டம் பராமரிப்புக் கட்டணம், தியானக் கட்டணம் என்று வாரிச் சுருட்டுவதில் தனியார் பள்ளிகள் என்றைக்கும் சுணங்கியதேயில்லை.

saira-swimmer-suicide-1கடைசியில் 900 ரூபாய் பெறுமானமுள்ள ஒரு சட்டை வாங்கினால் இரண்டு சட்டை இலவசம் என்ற வியாபார உத்திதான் மாணவி சாய்ராவின் விசயத்திலும் போக்குவரத்துக் கட்டணம் ரூ, 45,000 கட்டவில்லை ஆனால் கல்விக் கட்டணம் இலவசம் என தனியார்மயத்தின் வக்கிரமாக வந்து நிற்கிறது.

தமிழ்நாட்டிலும் சிங்காரவேலர் கமிட்டி பரிந்துரைத்த கட்டண விகிதத்தை எந்த தனியார் பள்ளியும் மயிரளவிற்கும் மதித்ததில்லை. அது அமல்படுத்தப்படுகிறதா என்று எந்த அரசு அதிகாரியும் பார்த்ததுமில்லை. சென்ற வருடம் கடலூரில் கூட மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையமும், கல்வி உரிமைக்கான பெற்றோர் மாணவர் சங்கமும் நீண்ட போராட்டங்களை நடத்தி கமிட்டி பரிந்துரைத்த கட்டணத்தை கட்ட வைத்தனர்.

அப்படியிருந்தும் கூட பள்ளிகள் நூதன முறையில் கொள்ளையிடுவது, அரசாங்க கட்டணம் செலுத்துகிற குழந்தைகளை ஒதுக்கி வைத்து தீண்டத்தகாதவர்களாக நடத்துவது, விளையாட்டு, ஓவியம், கலை போன்ற பயிற்சிகளில் இருந்து ஒதுக்கிவைப்பது என அட்டூழியங்கள் தொடரத்தான் செய்கின்றன.

இதற்கு மூலகாரணம் எது? அரசின் தனியார்மயக் கொள்கைதான். கல்வி என்பது மக்களின் அடிப்படை உரிமை அதை வழங்கவேண்டியது அரசின் கடமை என்பதில் இருந்து நழுவி, காசு உள்ளவனுக்குத்தான் கல்வி என்பதை நடைமுறைப்படுத்தும் கொள்ளைக் கும்பலின் தலைவனாக இருக்கிறது அரசு.

அனைவருக்கும் கல்வி என்று சொல்கிற அரசின் சட்டம் கூட நடைமுறையில் தனியார்மய பங்களிப்பைத்தான் முன்வைத்தது. இச்சட்டம் அமல்படுத்தப்பட்ட பிற்பாடு தான் கடந்த நான்கு வருடங்களில் நாடெங்கிலும் இரண்டு இலட்சம் பொதுப்பள்ளிகள் மூடப்பட்டிருக்கின்றன.

நலிந்த பிரிவினருக்கு 25% இடங்களை தனியார் பள்ளிகள் ஒதுக்க வேண்டும்; அவர்களுக்கான கல்வி கட்டணத்தை அரசு அளிக்கும் என தனியார்மயக் கொள்ளைக்கு சட்டப்பூர்வ வடிவம் கொடுத்தது இந்த அரசுதான். விளைவு? அன்றைக்கு பெங்களூரில் அரசு உதவி பெறும் குழந்தைகள் பிற குழந்தைகளிடம் இருந்து அடையாளம் காணப்படுவதற்காக குழந்தைகளின் முடியை வெட்டி உட்காரவைத்தது தனியார் பள்ளி. இன்றைக்கு காசியாபாத் பள்ளி, போக்குவரத்துக் கட்டணம் என்று சொல்லி மாணவி சாய்ராவை வகுப்பில் இருந்து வெளியேற்றியதோடு அல்லாமல் அம்மாணவியின் இறுதி மூச்சையும் நிறுத்தியிருக்கிறது.

மாணவி சாய்ராவைக் கொன்ற தனியார் பள்ளியின் வக்கிரம் இத்தோடு நிற்கவில்லை. மாணவி சாய்ரா நீச்சல் போட்டிகளில் பங்கேற்றதால் வகுப்புத் தேர்வு, யுனிட் தேர்வுகளில் பங்கேற்கமுடியவில்லை என்ற அம்சத்தையும் நாம் பரிசீலிக்க வேண்டும்.

நமது நாட்டின் கல்வி அமைப்பு மாணவி சாய்ராவை மட்டுமல்ல விளையாட்டு, கலை, ஓவியம், பேச்சு என்று ஒவ்வொரு துறைகளிலும் என்னதான் மாணவர்கள் பரிணமித்தாலும் அவர்களை மனனக் கல்வியின் அடிப்படையில் தான் மதிப்பிடுகின்றது. மாணவி சாய்ரா என்னதான் நீச்சல் வீராங்கனையாக இருந்தாலும் படிப்பைப் பொறுத்தவரை அவள் மக்குதான் என்று சொல்லாமல் சொல்கிறது பள்ளி நிர்வாகம்.

யுனிட் தேர்வு, பருவத் தேர்வுகளைப் பொறுத்தவரை தாங்கள் மாணவிக்கு அழுத்தம் கொடுக்கவில்லை என்று பள்ளி நிர்வாகம் சொல்கிற பொழுது மாணவியோ தேர்வுகளில் தேர்ச்சி பெறாவிட்டால் தான் பள்ளியிலிருந்து நீக்கப்படுவேன்; ஆகையால் தன்னால் நீச்சல் பயிற்சிக்கு வரமுடியாது என்று தன் பயிற்சியாளரிடம் கூறியிருப்பதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்.

09-education-no-commodityமாணவியோ நீச்சல் வீராங்கனை; தனியார் பள்ளியோ பிராய்லர் கோழிகளை உருவாக்கும் இன்குபேட்டர்கள். எல்லாவிதத்திலும் மாணவி சாய்ராவுக்கு மட்டுமல்ல, இந்தியாவின் அனைத்து மாணவர்களைப் பொறுத்தவரை, காசு பார்க்கும் தனியார் பள்ளிகள் ஆற்றலை வளர்த்துக் கொள்ளும் இடமாக அமையவில்லை. மாறாக மனனக் கல்வியை முன்வைக்கும் வேண்டாத தொங்கு சதைகளாக இருக்கின்றன என்பது தான் நிதர்சனம்! இதற்கு மக்களிடையே புகுத்தப்பட்டிருக்கும் தனிநபர் பிழைப்புவாதமும் நுகர்வுக் கலாச்சாரமும் ஒரு காரணம்.

தமிழ்நாட்டிலும் எத்தனையோ சாய்ராவைப் போன்ற கண்மணிகள் தனியார்மயத்தின் கொள்ளைக்கும் கல்வி அமைப்பிற்கும் privitization-education-conferenceபலியாக்கப்பட்டிருக்கின்றனர். ஒன்றுக்கும் உதவாத சக்கைகளையும் தக்கைகளையும் உருவாக்குகிற இத்தகையக் கொலைக்கூடங்கள் நீச்சல் வீராங்கனை மாணவி சாய்ராவை போன்ற திறமையாளர்களை மதிப்பிடும் நிலையில் இருக்கின்றன என்பது சகிக்கமுடியாத அவலம்.

இந்த அவலம் வெட்டி எறியப்பட வேண்டும். வேண்டாத தொங்கு சதையாக இருக்கிற தனியார்மயம் சுட்டெரிக்கப்பட வேண்டும். பெற்றோர்களே உழைக்கும் மக்களே நமது குழந்தைகளை தனியார்மயத்திற்கு காவு கொடுக்காதீர்கள்.

காசுள்ளவனுக்குத்தான் கல்வி என்பது கல்வியின் நோக்கம் அல்ல. அது கல்வியை பண்பாட்டிலிருந்து நீக்கி பண்டமாக பார்க்கும் முதலாளிகளின் வியாபார உத்தி. இதன் மூலம் மனிதன் தன் அடிப்படை விழுமியங்களை காவு கொடுத்துவிட்டு விலங்கு நிலைக்குத் தாழ்கிறான்.

இன்றைக்கு தனியார்மயம் கல்விச்சூழலில் சூறையாடுகிற மாணவர்களின் எண்ணிக்கை வகைதொகையற்றவை. இந்த அட்டூழியங்களுக்கு நாம் முடிவு கட்டாவிட்டால் நாளை நாமும் சாய்ராவின் பெற்றோரைப்போன்று நம் செல்வங்களை இழந்துவிட்டு நிற்கக் கூடும். இந்தியா மாணவர்களின் பிணக்காடாக நிற்கும்!

– இளங்கோ

http://www.vinavu.com/2016/01/27/education-privitisation-kills-up-state-level-swimmer/