புதிய அரசியல் தீர்வு – மறைக்கப்படும் உண்மைகள் : சபா நாவலன்

thehiddentruthஅறுபது ஆண்டு காலத் தேசிய இனப்பிரச்சனை புதிய இலங்கை அரசின் அரசியல் யாப்பு திருத்ததின் ஊடாக முடிவிற்கு வரும் என்ற நம்பிக்கை பலரையும் ஆட்கொள்ள ஆரம்பித்திருக்கிறது. இதன் பின்புலத்தில் மேற்கு ஏகாதிபத்திய அரசுகளின் நேரடித் தலையீடு ஆரோக்கியமான சூழலை மக்களுக்கு அறிவிக்கவில்லை. போர்க்குற்ற விசாரணை, ஆட்சி மாற்றத்தின் பின்னான சிங்கள அரசியல் தலைமை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதிக்கம். அதன் எதிரணிகளின் முனைப்பு என்ற அனைத்துமே ஏற்கனவே திட்டமிட்ட அரசியல் நகர்வுகளைக் கொண்டிருக்கின்றன என்பதை மிகத் தெளிவாக யாரும் இனம் கண்டுவிடலாம்.

இன்று தற்காலிகமாகவேனும் தேசிய மோதல்களையும் முடிவிற்குக் கொண்டுவரவேண்டிய தேவை இலங்கை அரசிற்கு மட்டுமன்றி அதன் பின்புலத்தில் செயற்படும் ஏகாதிபத்திய நாடுகளுக்கும் காணப்படுகின்றது. சிங்கப்ப்யூரிற்கு அடுத்ததாக ஆசியாவின் முக்கிய வர்த்தக மையமாக மாறிவரும் இலங்கையில் ஆயுத மோதல்களைத் தற்காலிகமாகத் தணிக்க வேண்டிய தேவை உள்ளூர் மற்றும் சர்வதேச அதிகார வர்க்கங்களின் அவசர தேவையாக உள்ளது.

அவ்வாறு மோதல்களைத் தணிக்க வேண்டுமாயின் தேசிய இன ஒடுக்குமுறையை தற்காலிகமாகத் தணிப்பதற்கான தேவை எழுந்துள்ளது.

அவ்வாறு தற்காலிகமாகத் தணிக்க வேண்டுமெனின் தேசிய இனப் பிரச்சனைக்கான தற்காலிகத் தீர்வு ஒன்று முன்வைக்கப்பட வேண்டும்.

ஒவ்வொரு தடவையும் குறைந்தபட்ச தீர்வு ஒன்று முன்வைக்கப்படும் போது, சிங்கள வாக்குப் பொறுக்கிகள் அதனை எதிர்ப்பது வழமையான ஒன்றாக அமைந்திருந்தது வரலாறு.

இன்று தீர்வுக்கு எதிரான எதிர்க்குரலைத் தலைமை தாங்கும் அணியைத் தலைமை தாங்கும் வலுவுடைவர் மகிந்த ராஜபக்ச. இங்குதான் போர்க்குற்ற விசாரணையும், அதன் உள்ளகப் பொறிமுறையும் தொடர்பான மறைக்கப்பட்ட உண்மைகள் வெளிவருகின்றன.

முதலில், ஜெனீவாவில் போர்க்குற்ற விசாரணை தொடர்பான தீர்மானம் சிங்கள மற்றும் தமிழ் அதிகாரவர்க்கங்களின் பெரிய அளவிலான எதிர்ப்புக்கள் எதுவுமின்றி இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்பபட்டது.

இரண்டாவதாக, அது தொடர்பாக மகிந்த ராஜபக்சவுடன் பேச்சுக்கள் நடைபெறுகின்றன.

அதனூடாக சில முடிவுகளை இலங்கையின் புதிய ஆளும்வர்க்கம் எட்டியுள்ளதை அனுமானிக்கக் கூடியதாகவுள்ளது. முன்வைக்கப்படவிருக்கும் புதிய அரசியல் அமைப்புத் திட்டத்திற்கும் தீர்வுத் திட்டத்திற்கும் மகிந்த தரப்பிடமிருந்து எதிர்ப்புக்கள் வரக்கூடாது என்பதே மகிந்தவுடன் ரனில் மைத்திரி அரசு செய்துகொண்ட ஒப்பந்தமாகவிருக்கலாம். இதன் பிரதிபலனாக மகிந்தவைப் போர்க்குற்றங்களிலிருந்தும் ஊழல் குற்றங்களிலிருந்து காப்பாற்றுவதாக உறுதியளிக்கப்பட்டிருப்பதைப் புதிய நகர்வுகள் தெரியப்படுத்துகின்றன.

அதாவது மகிந்தவும் போன்ற செல்வாக்குள்ள போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்பட மாட்டார்கள் அதேவேளை அவர்கள் தீர்வுத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்க மாட்டார்கள்.

வரலாற்றுரீதியாக இனப்படுகொலையின் கோரங்களைச் சந்தித்த தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியிலிருந்து சுய நிர்ணைய உரிமைக்கான கோரிக்கை தீர்வுத் திட்டத்தைத் தொடர்ந்து எழுச்சியாக உருவாகலாம். அதனை எதிர்கொள்வதற்கு எதிர்த் தரப்புத் தலைமைகளும் உருவாக்கப்பட்டுவிட்டன.

புலம்பெயர் மேற்கு ஏகாதிபத்திய அடியாள் படைகளால் உருவாக்கப்பட்டு ஏற்றுமதிசெய்யப்பட்ட தமிழ் மக்கள் பேரவையே தீர்வுத்திட்டத்தின் எதிர்த் தரப்பாகச் செயற்படும் தோற்றம் ஏற்பட்டாலும் அது சுய நிர்ணைய உரிமையைக் கோராது என்பது அவர்களின் திட்டங்களே தெரிவிக்கின்றன. தீர்வுத் திட்டத்தில் சீர்திருத்தங்களை மேற்கொள்வதே அவர்களின் நோக்கம்.

அதற்கான சிறந்த அடியாட்படைகளாக விக்னேஸ்வரன், சுரேஸ் பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்ற முகவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஆக, சுய நிர்ணைய உரிமைக்கான கோரிக்கையும் அதன் நியாயமும் அழிக்கப்பட்டு வடக்கும் கிழ்க்கும் குறைந்த பட்ச அடிப்படையில் இணைந்த மாகாண சபை தீர்வாக முன்வைக்கப்படும்.

இதன் பின்னணியில் சுய நிர்ணைய உரிமைக்கான கோரிக்கை அழிக்கப்பட்டு, இலங்கையில் பல்தேசியச் சுரண்டலுக்கான வெளி உருவாக்கப்படும்.

பல்தேசியப் பெரு நிறுவனங்கள் இலங்கையின் வளங்களைச் சுரண்டி அப்பாவி மக்களைத் தெருவில் நிறுத்தும். அவ்வாறான ஒரு எதிர்காலத்தில் சிங்கள மக்கள் மத்தியிலிருந்து எழுச்சிகள் ஆரம்பிக்க, சிங்கள அதிகாரவர்க்கம் ஆயுதமாகப் பயன்படுத்தி அப்பாவிச் சிங்கள மக்களை நச்சூட்டும். இது ஒரு சுழற்சி போல இனப்படுகொலை வரை மக்களை அழைத்துச் செல்லலாம்.

இன்று தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியில் மக்கள் சார்ந்த அரசியல் தலைமை இல்லை. அரசியல் தலைமைக்கான அந்த இடைவெளி சுய நிர்ணைய உரிமைக் கோரிக்கையை அழிப்பதற்கான சூழலை தமிழ் சிங்கள அதிகாரவர்க்கங்களுக்கு ஏற்படுத்திக்கொடுத்துள்ளது.
ஆக, தேசிய இன ஒடுக்குமுறைச் சுழற்சியிலிருந்து தற்காத்துக்கொள்ளவும், இருண்ட எதிர்காலத்தை எதிர்கொள்ளவும் புதிய மக்கள் இயக்கம் ஒன்று இன்றைய தேவையாகவுள்ளது. தீவுத் திட்டம் தோற்றுவிக்கப்போகும் ஜனநாயக இடைவெளியை அவ்வாறான மக்கள் இயக்கத்தை உருவாக்கவும், ஏகாதிபத்திய அடியாட்களை அரசியல் நீக்கம் செய்யவும் பயன்படுத்திக்கொள்வதே மக்கள் பற்றுள்ள ஒவ்வொருவரதும் கடமை.