நாசிகளை நிர்வாகிகளாக நியமிக்கும் ட்ரம்ப் பாசிச உலகின் தலைவன்: நீதி தேடும் ஈழக் கோமாளிகள்

டொனால்ட் ரம்ப் இன் தலைமையில் அமெரிக்க முதலாளித்துவம் உலகை மிகத் தீவிரமாக இராணுவமயப்படுத்தத் திட்டமிட்டுள்ளது தெளிவாகின்றது. மத்திய கிழக்கு நாடுகள் முழுவதும் இரத்தமும் சதையும் மிதக்கும் பூமியாக மாற்றிய அமெரிக்கா இனி உலகத்தின் எஞ்சிய பகுதிகளிலும் இரத்த ஆறை ஓடவிடப்போகிறது என்பதை ட்ரம்பின் நியமனங்கள் சந்தேகமின்றி நிறுவுகின்றன. தேசிய விடுதலை என்பது ஏகாதிபத்தியங்களுக்கு எதிரானது என்ற அடிப்படையைக்கூட புரிந்துகொள்ள மறுத்த அறிவிலிகள் நிரம்பிய எமது சமூகத்தின் ஒரு பகுதி ட்ரம்பையும் வரவேற்க தயாராகிறது. ட்ரம்பின் மனிதகுலத்தின் மீதானத தாக்குதலுக்கு நிர்வாகிகள் தயார்படுத்தப்பட்டுவிட்டனர்.

ஸ்ரிபன் பானன்
ஸ்ரிபன் பானன்

வெள்ளை மாளிகையின் மூலோபாய வாதியாக ட்ரம்ப் நியமித்திருக்கும் மனிதகுல விரோதி ஸ்ரிபன் பானன் என்பவர் இதுவரைக்கும் நவ நாசி எனவும், வெள்ளை நிறவாதி எனவும், வெள்ளை தேசியவாதி எனவும் ஊடகங்களாலும் ஜனநாயகவாதிகளாலும் வர்ணிக்கப்பட்டவர். கறுப்பினத்தவர்கள் மீதும், வெள்ளை நிறமற்றவர்கள் மீதும் அருவருப்பான கருத்துக்களை முன்வைத்த பானன் என்ற சமூகவிரோதி தனது நியமனத்தின் பின்னரும் தான் ஒரு நிறவாதி எனப் பிரகடனப்படுத்தியுள்ளார். தான் பாசிசத்தை ஆதரிப்பதாகக் கூறுகிறார்.

வெள்ளை நிறமுள்ளவர்கள் சூரியனின் புதல்வர்கள் என்ற பிரச்சாரத்தில் ஈடுபட்ட இப் பிரகிருதி, இன்று உலகத்தின் நகர்வைத் தீர்மானிக்கப்போகும் மனித குல விரோதிகளில் ஒருவன்.

ஜெப் சென்சஸ்
ஜெப் சென்சஸ்

ட்ரம்ப் இன் சட்டத்துறை ஆலோகராகவும் அட்டனி ஜெனரல் பதவிக்கும் அலபாமவின் செனட்டர் ஜெப் சென்சஸ் தெரிவாகியிருக்கிறார். ட்ரம்பிற்கு எந்தவகையிலும் குறைவற்ற நிறவாதியும், வெளிநாட்டுக் குடியேற்றவாசிகளுக்கு எதிராக அற்பத்தனமான கருத்துக்களை முன்வைப்பவருமான செசன்ஸ் அறியப்பட்ட அடிப்படைவாதியாவர்.

வலதுசாரி தீவிரவாதிகளில் ஒருவரான இவர் உலகமே அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் போது ஒரு பாலின திருமணத்திற்கு எதிராக வெறுக்கத்தக்க கருத்துக்களை முன்வைத்தவர். எல்லா அடிப்படைவாதிகளையும் போல இராணுவ மற்றும் பொலிஸ் கட்டுப்பாடுகளை நேசித்தவர். இறுக்கமான பொலிஸ் கட்டுப்பாடு வேண்டும் எனவும் பொலிஸ் அதிகாரம் அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் குரல்கொடுத்தவர். ஈராக் யுத்தத்தை வெளிப்படையாக ஆதரித்தவர். இஸ்லாமியர்களுக்கும், கறுப்பினத்தவர்களுக்கும் எதிரான வன்மம் மிக்க கருத்துக்களை வெளிப்படையாக முன்வைத்தவர்.

இளம் சட்ட நிபுணராகவிருந்த காலத்திலிருந்து ஜெப் செசன் மீதான பல்வேறு நிறவாதக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. இடதுசாரிகள், கம்யூனிஸ்ட்டுக்களை மரணதண்டனைக்கு உள்ளாக்க வேண்டும் என்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்த இவர் ஒபாமா காலத்தில் வதிவிட அனுமதி வழங்கப்பட்ட 8 லட்சம் வெளிநாட்டவர்களை வெளியேற்றுவார் என அவரது நெருங்கிய ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

ட்ரம்பின் ஆதரவாளர்களை ஜெப் செசனை சிறந்த தேசிய வாதி என அழைக்கின்றனர். ஒடுக்கப்பட்டும் தேசிய இனத்தின் உழைக்கும் மக்கள் சார்ந்த ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் மட்டுமே முற்போக்குத் தேசியவாதமாகும் என்பதற்கு ட்ரம்ப் மட்டுமல்ல நமது போராட்டமும், புலம்பெயர் பினாமிகளும், இலங்கை அரச பேரினவாதமும் உதாரணங்கள்.

flynnட்ரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக யுத்த வெறிபிடித்த மைக்கல் பிளின்ன் தெரிவாகியுள்ளர். ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற நாடுகளில் குரூரமான யுத்ததங்களை வழி நடத்திய இவர் சித்திரவதைகளை அதிகரிக்க வேண்டும் என்ற கருத்தை தனது ஒரு தெரிவாக முன்வைக்கிறார். வெறித்தனமான இஸ்லாமிய எதிர்ப்பை முன்வைக்கும் இவர், வெளிநாட்டுக் குடியேற்றவாசிகளை எதிர்ப்பவர்களில் ஒருவர்.

இதில் வேடிக்கை என்னவென்றால் தமிழ் தேசிய கோமாளிகள் ட்ரம்ப் ஈழத் தமிழர்களை ஆதரிப்பாரா இல்லையா என்ற எதிர்வுகூறல்களில் ஈடுபட்டுள்ளன.

ஆயுதங்களும் இராணுவமுமே தனது கனவு எனக் கூறும் மனிதம் மரணித்துப்போன சமூகத்திலும், கொலைகளையும். மனிதப்படுகொலைகளையும் மனித நேயம் கூறும் தமிழ் மனிதர்களுக்கு மத்தியிலும் ட்ரம்ப் இன் நாசிக் கொள்கைகளுக்கு மத்தியிலும் ஈழத்தைத்தேடும் கயவர்கள் தேசியவாதிகள் அல்ல, தேசத் துரோகிகள்.