நாவல் பழத்தினதும் விதையினதும் மருத்துவப் பலன்கள் :உணவே மருந்து, இரசாயன வில்லைகள் அல்ல!

நாவல் மரத்திற்கு ஆருகதம், நேரேடு, சுரபிபத்தினர் என்றும் பெயர்கள் இருக்கின்றன. ஆங்கிலத்தில் நாவல் மரத்தினை (Jamun) ஜம்பலம், பிளாக் பிளம் என்று பெயர்கள் உண்டு. ஜம்பு நாவல் என்றொரு ரகமும் உண்டு. இதன் பழங்கள் இனிப்பு கலந்த துவர்ப்பாக இருக்கும்.
நாவல் மரத்தின் இலைகள் கரும்பச்சையாக பளபளப்புடன் இருக்கும். ஜனவரி பிப்ரவரி மாதங்களில் இலைகளை உதிர்த்து நிர்வாணமாக வெட்கப்பட்டு நிற்க்கும் நாவல் மரம் சந்திரமுகியின் கண்களாக கருமை நாவல் பழங்களை கொத்துகொத்தாக தாங்கி வனப்புடன் ஜுலை, ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் கவர்ச்சிகரமாக காட்சியளிக்கிறது.. கிராமங்களில் மரத்தில் ஏறி இதனை உதிர்த்து விற்பனைக்கு எடுத்து வருவார்கள். ஒரு மரத்திலிருந்து ஆண்டொன்றுக்கு 50 முதல் 80 கிலோ பழங்கள் கிடைக்கும்.நாவல் பழத்தைத் தின்றால் நாவின் நிறம் கருமையாக மாறும். நா வறண்டு நீர் வேட்கை மிகும். இப்படி நாவின் தன்மையை மாற்றுவதால் ‘நா+அல்’ (நாவல்) என்றனர். துவர்ப்புச் சுவை உள்ள பழம் நாவல்பழம்.
நாவல் பழம், நாகப்பழம், நவாப்பழம் என்று வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படும், இந்தப் பழம் மருத்துவக் குணங்கள் நிறைந்தது.
தமிழ் இலக்கியங்களில் இடம் பெற்ற இந்தப்பழம், எளிமையும், வலிமையும் சேர்ந்த ஒரு அருமையான பழம்.
நாவல் பழம் மட்டுமன்றி அதன் விதையிலும், அதிலிருந்து உற்பத்தி செய்யப்படும் தூளிலும் இயற்கை மருத்துவ அம்சங்கள் உண்டு.
நீரிழிவு நோய்:
நீரிழிவு நோயால் பலரும் பாதிக்கப்பட்டு அவதியுறுகிறார்கள். இதை கட்டுப்படுத்த நாவல் பழத்தின் விதைகள் சிறந்த மருந்து. தவிர கோப்பியின் சுவையுடன் நாவல் விதையின் தூள் காணப்படுவதால், அதனைக் கோப்பிக்கு மாற்றீடாக அருந்தலாம். நாவல் பழ விதையில் தயாரிக்கப்படும் கோப்பி, இலங்கையிலும் பிற நாடுகளிலும் காணக்கிடைக்கின்றன.
பிற பயன்கள்:
* நாவல் பழத்திற்கு சிறுநீர் பெருக்கம், பசியை தூண்டும் தன்மை உண்டு. மேலும், நாக்கு மற்றும் பல் ஈறுகளை சுத்தம் செய்யும் தன்மையும் இதற்கு உண்டு.
* தொடர்ந்து நாவல் பழங்கள் சாப்பிட்டு வந்தால் குடல், இரைப்பை இதயத்தின் தசைகள் வலுவாகும்.
* நாவல் பழச்சாற்றுக்கும் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் குணம் உண்டு.
* நாவல் மரத்தின் பட்டைக்கு நரம்பை பலப்படுத்தும் சக்தியும், மூச்சுக்குழல் அழற்சி, காசநோய், குடல் புண்கள் மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவற்றை குணமாக்கும் சக்தியும் உண்டு.
* இரத்தம் சுத்தப்படுத்துதலிலும் நாவல் முக்கிய இடம் பெறுகிறது.
நாவல் பழம் சாப்பிட்டால் நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் இருக்கும். கல்லீரல் கோளாறுகள், குடற்புண் போன்றவற்றைப் போக்க வல்லது.