தேசிய இனப்பிரச்சனையை மதப் பிரச்சனையாகத் திசை திருப்ப இன்றைய ஆளும்வர்க்கம் சதி செய்கிறது.

chandrikaஇலங்கையில் தேசிய இனப்பிரச்சனையை வெறும் மதம் சார்ந்த ஒன்றாக திசை மாற்றும் நடவடிக்கைகள் கடந்த ஐக்கிய நாடுகள் மனித சபை வெளியிட்ட 2015 ஆம் ஆண்டு அறிக்கையிலிருந்தே ஆரம்பமாகிவிட்டது. சிறீலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிக்கா குமாரதுங்க மதச்சார்பற்ற அரசியலமைப்பொன்றை உருவாக்கும் தனது முயற்சியில் அனைவரையும் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற தேசிய நல்லிணக்கத்துக்கான செயலகத்தினால் ஒழுங்குபடுத்தப்பட்ட கருத்தரங்கில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும், மதச்சார்பற்ற அரசியலமைப்பு மற்றும் கூட்டாட்சி பற்றி, சிறீலங்கா பல நாடுகளிடமிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்ளவேண்டுமெனவும் தெரிவித்த அவர் பல நாடுகள் இவ்வாறு தமது பிரச்சனைகளைத் தீர்த்துள்ளன எனவும் தெரிவித்தார்.

இலங்கையின் பிரதான முரண்பாடு தேசிய இன முரண்பாடு என்பதை இலங்கையின் அதிகாரவர்க்கம் சாரி சாரியாக மனிதப்படுகொலைகளை நடத்திய பின்னரும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. இலங்கையில் பேரினவாதத்தின் கோட்பாடாக மதம் செயற்படுகின்றது. வட-கிழக்கில் தோன்றும் பௌத்த சின்னங்கள் பேரினவாதத்தின் யுத்தத்திற்குப் பின்னான அச்சுறுத்தும் குறியீடு. அரசியல் யாப்பில் மத சார்பின்மை என்பதன் மறுபக்கத்தில் இலங்கையின் பிரதான பிரச்சனை தேசிய இன ஒடுக்குமுறை என்பதை மறுப்பதுடன் அதன் குறியீடான பௌத்த மதத்தை மேலும் ஆதிக்கமுடையதாக்கிவிடுகிறது.

இன்றைய இலங்கை அதிகாரவர்க்கத்தின் பின்னணியில் செயற்படும் அமெரிக்கா இலங்கையில் மத சுதந்திரத்தைப் பாதுகாக்க நிதி உதவி வழங்கவிருப்பதாகத் தெரிவித்துள்ளது. 9/11 தாக்குதலைப் பயன்படுத்தி உலகம் முழுவதும் மத முரண்பாடுகளைத் திட்டமிட்டு ஏற்படுத்தி இஸ்லாமியர்களுக்கு எதிரான போராட்டம் என்ற பெயரில் மத வெறுப்புணர்வைத் தூண்டி உலகின் ஒரு பகுதியை யுத்தவலயமாக்கியது அமெரிக்கா. இன்று இலங்கையில் மட்டும் மத சுதந்திரத்தைப் பாதுகாக்க நிதி வழங்குவதாகக் கூறுவது ஆபத்தானதும் நகைப்பிற்கிடமானதுமாகும்.

அமெரிக்கா ராஜாங்கத் திணைக்களத்தின் ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் தொழில் பிரிவு இது தொடர்பிலான உதவிகளை வழங்க உள்ளது.

இலங்கையில் மதச் சுதந்திரத்தை பாதுகாக்கவும் அதனை உறுதி செய்யவும் அர்ப்பணிப்புடன் செயற்படும் நிறுவனங்களுக்கு உதவிகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளுர் மட்டத்திலும் தேசிய ரீதியிலும் மதச் சுதந்திரத்தை ஊக்குவித்து மேம்படுத்த திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியமானது என தெரிவித்துள்ளதுடன் அரசாங்கத்திற்கும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் தரப்பினருக்கும் மத சுதந்திரத்தை உறுதி செய்ய, சிவில் சமூகத்தின் பங்களிப்பும் ஒத்துழைப்பும் அவசியம் எனக் குறிப்பிட்டுள்ளது.

இன்றைய இலங்கைப் பேரினவாத அரசை இயக்கும் அமெரிக்கா, தேசிய இனங்கள் என்ற கோட்பாட்டை முற்றாக அழித்து மதங்கள் என்ற எல்லைக்குள் குறுக்க முற்படுவதையும் மத சுதந்திரம் என்ற தலையங்கத்தில் பௌத்த சிங்கள பேரினவாதத்தைப் பேணுவதிலும் ஆர்வம்காட்டுவது ஆபத்தானது.