இன அழிப்பை மேற்கொண்ட சிங்களப் பேரினவாத அரசு, அடையாள அழிப்பை மேற்கொண்டு வருகின்றது!

இலங்கை என்ற முதலாளித்துவ அரச கட்டமைப்பு நிலைக்க வேண்டுமானால், இலங்கையில் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் இருப்பும் தவிர்க்கவியலாத ஒன்று. சிங்கள உழைக்கும் மக்கள் அரசின் மீதான வெறிப்புணர்வுக்கு உட்படும் போதெல்லாம் சிங்கள பௌத்த பேரினவாதம் திட்டமிட்டுத் தூண்டப்படுகிறது. இன்றைய இலங்கை அதிகாரவர்க்கத்தின் உள் முரண்பாடுகளைக் கையாளவும், இலங்கை முழுவதும் வெறுப்படைந்திருக்கும் சிங்கள உழைக்கும் மக்களைத் திசைதிருப்பவவும் பேரினவாதம் இழையோடும் அரச அதிகாரம் திடீரெனத் தீவிரமடைகிறது.

யாழ்ப்பாணத்தின் முற்றவெளிக்கும் தேசிய இனப்பிரச்சனைக்கும் நெருக்கமான தொடர்புகள் உண்டு. 1977 ஆம் ஆண்டு முற்றவெளி மைதானத்தில் நடைபெற்ற கார்னிவெல் நிகழ்வில் பொதுமக்களால் அத்துமீறிய சிங்கள போலிஸ் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து போலிஸ் மக்கள் மீது துப்பாக்கிப் பிரையோகம் நடத்தியதில் 4 அப்பாவிகள் கொல்லப்பட்டனர்.

1974 ஆம் ஆண்டு முற்றவெளிக்கு அருகில் தமிழாராச்சி மாநாட்டில் கொல்லப்பட்ட மக்கள் தேசிய இனப்பிரச்சனையின் மற்றொரு குறியீடு.

இந்த வாரத்தின் இறுதிப்பகுதியில் நடைபெற்ற சம்பவங்கள் முற்றவெளியைச் சமூக அக்கறையுள்ளவர்களின் ஈர்ர்பு மையமாக மாறியுள்ளது.

யாழ்பாணம் நாகவிகாரை விகாராதிபதி மீகா யதுரே ஞானசார தேரர் கடந்த 19 ஆம் நாள் கொழும்பு வைத்தியசாலையில் இயற்கை எய்தினாா். யாழ் ஆரியகுளம் பகுதியில் அமைந்துள்ள நாகவிகாரையின் விகாராதிபதியாக கடந்த 1991 ஆம் ஆண்டில் இருந்து வந்த இவர் தனது 70 ஆவது வயதில் கடந்த 19ஆம் நாள் இயற்கை எய்தினார்.

இவரின் பூதவுடல் விசேட உலங்குவானூர்திமூலம் விகாரைக்கு எடுத்துவரப்பட்டு, முற்றவெளியில் அடக்கம் செய்வதற்கான நடவடிக்கையை சிறிலங்கா இராணுவம் மேற்கொண்டது.

முற்றவெளி அலங்கரிக்கப்பட்டு மரணச்சடங்குகளுக்கான ஆரம்பவேலைகள் பூர்த்தியாக்கபட்டுள்ளது. முற்றவெளி மையனம் அல்ல. பௌத்த துறவியை அடக்கம் செய்த பின்னர், வரலாற்றுப் பெருமைகொண்ட முற்றவெளியின் ஒரு பகுதி பௌத்தர்களின் புனிதப் பிரதேசமாக்கப்படும்.

பேரினவாதத்தை எவ்வாறு தமிழ் வாக்குகளாகவும் சிங்கள வாக்குகளாகவும் மாற்றிக்கொள்வது என தமிழ் சிங்கள அரசியல்வாதிகள் திட்டமிடுவதை மட்டுமே இன்றைய இலங்கையின் அரசியலின் அவலக்குரலாகக் காணலாம்.

தமிழ் இனவாதத்தை வாக்குகளை நோக்கமாகக் கொண்டு தூண்டாமலும் சிங்களப் பேரினவாதிகளுக்கு வாய்ப்பளிக்காமலும் இப் பிரச்சனையைத் தொலை நோக்கோடு அரசியல்வாதிகள் அணுகுவது மட்டுமல்ல, மக்களை அணிதிரட்டி புதிய மக்கள் சார்ந்த அரசியலை முன்வைத்தால் மட்டுமே சுய நிர்ணைய உரிமைக்கான குரலை வலுவாக்க முடியும்.

Leave a Reply