ஐ.நா மனித உரிமைப் பேரவையை நோக்கிய அரசியல் பிழைப்பு ஆரம்பமாகிறது

unhrcவழமை போல ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் 32 அமர்வு எதிர்வரும் வாரங்களில் ஆரம்பமாகிறது.புலம்பெயர் நாடுகளில் தமிழர் தலைமைகள் எனக் கூறிக்கொள்ளும் பிழைப்புவாதிகள் ஐ.நாவைச் சுற்றி வலம்வரத் தயாராகிவிட்டனர். புலம்பெயர் குழுக்களின் இருப்பிற்காகவே உழைக்கும் யாழ்ப்பாண மற்றும் தமிழக முகவர்கள் விமான நிலையப் பயணத்திற்குத் தயாராகிவிட்ட்டனர்.

முள்ளிவாய்க்காலில் உலக மக்களின் ஒருபகுதி சாரிசாரியாக அழிக்கப்பட்ட மறு கணமே தமிழ்ப் பேசும் மக்களின் வீரம் செறிந்த தியாகங்கள் அனைத்தையும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் அதன் உப கூறுகளான ஐக்கிய நாடுகள் நிறுவனத்திற்கும் விலைபேசி மொத்தமாக விற்பனை செய்துவிட்டு போராட்டத்தை சர்வதேச மயப்படுத்திவிட்டதாகவும், தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் என்றும் இன்றும் மக்களை ஏமாற்றிப் பிழைப்பு நடத்தும் புலம்பெயர் குழுக்கள் எந்தக் கூச்சமும் இல்லாமல் இன்னும் ஐ.நாவில் பேசி போர்க்குற்ற விசாரணை நடத்தப் போகிறோம் என மீண்டும் ஒரு முறை புறப்பட்டுவிட்டனர்.

கடந்த ஏழு வருடங்களில் உலகம் முழுவதும் பரந்துகிடக்கும் உரிமைக்காகப் போராடும் மக்கள் கூட்டங்களிலிருந்து போராட்டத்தையும் சுய நிர்ணைய உரிமைக்கான நியாயத்தையும் தனிமைப்படுத்தி ஐ.நா சபையின் மூடிய அறைக்குள் முடங்கிக்கிடக்கும் அதிகாரிகளிடம் அதனை ஒப்படைத்துவிட்டு மைத்திரி-ரனில் பேரினவாத அரசை நிறுவிவிட்ட எந்த அவமான உணர்ச்சியுமின்றி இன்னும் ஐ.நா வின் இரத்தக்கறை படிந்த வாசல் படிகளை மிதிக்கத் தயாராகிவிட்டனர்.

பதினாறுக்கும் மேற்பட்ட புலம்பெயர் நாடுகளில் தமது அமைப்புக்களை வைத்திருக்கும் இப் பிழைப்புவாதக் கும்பல்கள் இதுவரைக்கும் தமது நாடுகளிலுள்ள மக்கள் மத்தியில் எமது போராட்டத்தின் நியாயத்தை எடுத்துச் செல்லவில்லை. இலங்கை பௌத்த சிங்கள பேரினவாதத்திற்கு எதிரான அபிப்பிராயத்தை உலக மக்கள் மத்தியில் எடுத்துச்செல்ல விரும்பாத இவர்கள் வன்னிப் படுகொலைகளை கச்சிதமாக நடத்த உதவிய ஐ.நா நிறுவனத்தின் அதிகாரிகளிடம் எமது மக்களின் தலைவிதியை ஒப்படைக்க உதவினர். சர்வதேச மயப்படுத்தப்பட வேண்டிய மனித உரிமை, போராட்ட நியாயம் என்பன ஐ.நாவின் மூடிய அறைகளுக்குள் முடக்கப்பட்டுள்ளன.

சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தின் நியாயத்தையும், இனப்படுகொலைக்கு எதிரான நியாயத்தையும் அமெரிக்காவிடமிருந்தும் ஐ.நாவிடமிருந்தும் விடுதலை செய்து மக்கள்மயப்படுத்த வேண்டிய கடமை எஞ்சியுள்ள சமூக உணர்வுள்ளவர்களின் கடமை.

ஐ.நாவும் அமெரிக்காவும் இனப்படுகொலையின் சூத்திரதாரிகளைத் தண்டிக்கும் என்ற மாயையை ஏற்படுத்தி மக்களுக்குப் போலி நம்பிக்கையை வழங்கி அவர்களைப் போராட விடாமல் முடக்கி இக் குழுக்களை மக்கள் மத்தியில் நிர்வாணமாக நிறுத்த வேண்டியது ஒவ்வொரு சமூகப்பற்றுள்ள மனிதர்களதும் கடமை.

இனப்படுகொலையின் பின்னணியில் செயற்பட்ட நாடுகளிடமிருந்து கூலிப் பணத்தைப் பெற்றுக்கொள்ளும் இக்குழுக்களில் பல தமது கொடுப்பனவுகளுக்காக வேலை செய்பவை.

கடந்த ஏழுவருட காலத்தில் இக் குழுக்கள் மக்கள் மத்தியில் ஏற்படுத்திய அழிவுகளைச் சுய விமர்சனத்திற்கு உட்படுத்தி புதிய போராட்ட அரசியல் தோன்றும் வகையில் அரசியலிலிருந்து விலகிக்கொள்ள வேண்டும். இவர்களை அரசியல் நீக்கம் செய்யப்படும் வரை தமிழ்ப் பேசும் மக்களின் தன்னுரிமைக்கான போராட்டத்தில் அழிவுகளை மட்டுமே விதைத்துக்கொண்டிருப்பார்கள்.