பாரிஸில் மாவீரர் தின வாள் வெட்டு வன்முறை நாளைய சந்ததிக்கும் விதைக்கப்படுகிறது?

blood_sword_parisபாரிஸ் லா சப்பலில் மாவீரர் தினம் தொடர்பான துண்டுப்பிரசுரங்களை வினியோகித்துக்கொண்டிருந்த தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த ஜெயக்குமார் மீது வாள் வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வெட்டுக் காயங்களுக்கு உள்ளான ஜெயக்குமார் அம்புலன்ஸ் வண்டியில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். சில சமூக இணையங்களில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் உள் மோதலே இத்தாக்குதலுக்குக் காரணம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாரிஸ் நகரில் தமிழர் ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்கள் தாக்குதலுக்கு உள்ளாவது இது முதல் தடவையல்ல. தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் (TCC) முக்கிய உறுப்பினரும், செயற்பாட்டாளருமான பரிதி -ரேகன் – (நடராஜா மதீந்தரன்) அவர்கள் பரீஸ் நகரின் மையப்பகுதியில் வைத்து 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9 ஆம் திகதி சுட்டுக்கொலை செய்ய்ப்பட்டார்.

இலங்கை இராணுவத்தின் துணைக்குழுவான சிறீ ரெலோ என்ற மக்கள் விரோத இயக்கத்துடன் தொடர்புடைய நபர்கள் கொலையாளிகள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்.

பின்னதாகக் கசிந்த தகவல்கள் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் உள் மோதலுக்கு சிறீ ரொலோ பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற ஊகங்களை ஏற்படுத்தின. இவை உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் எனினும், ஈழம் பிடித்துத்தருவதாகக் கூறும் ஒருங்கிணைப்புக்குழு பருதி கொலை தொடர்பாகவோ அன்றி ஏனைய தாக்குதல்கள் தொடர்பாக சட்ட நடவடிக்கை எதனையும் இதுவரை மேற்கொள்ளவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது.
பிரித்தானியாவில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த தனம் என்பவர் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டார்.

ஜேர்மனியில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த பலர் ஜேர்மனிய அரச படைகளால் கைதுசெய்யப்பட்ட பின்னர், ஒருங்கிணைப்புக் குழுவின் தலைமைப் பொறுப்பிலிருந்த வாகீசன் என்பவர் அதன் பொறுப்புக்களிலிருந்து விலகிக்கொள்ள சிறீரவி என்பவர் பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டார்.

ரீசீசீ இன் பொறுப்பில் இயங்கும் தமிழாலயம் என்ற கல்வி நிறுவனத்தின் பணம் தொடர்பான சர்ச்சையில் சிறீரவி என்பவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின.

ஐரோப்பிய நாடுகளின் இயங்கிவரும் ரீசீசீ மற்றும் அதன் துணை அமைப்புக்கள் வன்னி இனவழிப்புக் காலத்தில் தாம் திரட்டிய பணத்திற்கான கணக்கு விபரங்களை மக்கள் முன்வைக்கவில்லை. “தலைவர் வருவார் அவரிடம் பணத்தை ஒப்படைப்போம்” என்கிறார்கள்.

வன்னி இனப்படுகொலை கோரங்கள் முடிந்து ஏழு ஆண்டுகளுக்கு மேலான நிலையில் பில்லியன் டொலர்கள் பெறுமானமுள்ள நிதி தொடர்பான விபரங்கள் வெளியிடப்படவில்லை. தவிர, மாவீரர் நிகழ்வு போன்றவற்றில் திரட்டப்படும் நிதி தொடர்பான தகவல்கள் வெளியாவதில்லை. கடந்த இலங்கைப் பாராளுமன்றத் தேர்தலில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை பாராளுமன்றத்திற்கு அனுப்புவதற்கு என்று வசூலிக்கப்பட்ட பணம் தொடர்பான விபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

இன்று ரீசீசீ உறுப்பினர்கள் மத்தியில் முன்னைய பணத்தைப் பாதுகாப்பதற்கும் புதிய வருவாயைத் தேடிக்கொள்வதற்கும் மோதல்கள் நடைபெறுகின்றனவா என்ற சந்தேகங்கள் புலம்பெயர் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

முன்னை நாள் மற்றும் இன்றைய ரீசீசீ உறுப்பினர்கள் சொத்து விபரங்கள் வெளியிடப்பட வேண்டும். திரட்டப்பட்ட நிதியில் சொத்தாக்கப்பட்ட பணம் முழுவதும் வன்னியிலிருந்து கைதாகி, தடுப்பு முகாம்களில் அடைத்துவைக்கப்பட்டு, சமூகத்தின் மத்தியில் கைவிடப்பட்ட போராளிகளின் வாழ்விற்காக பயன்படுத்தப்பட வேண்டும். வன்னிப் படுகொலைகள் தொடர்பாக இதுவரை எந்த முழுமையான ஆவணங்களும் வெளியாகவில்லை. சாட்சிகள் பாதுகாக்கப்படவில்லை. வன்னியில் போராடியவர்கள் தெருக்களில் அனாதைகளாகக் கைவிடப்பட்டுள்ளனர்.

பொஸ்பரஸ் குண்டுகளால் தாக்கப்பட்ட பெண் போராளி ஒருவர் இன்றும் அச்சம் மிக்க சூழலில் வாழ்வதாகத் தெரிவிக்கிறார். தனது வாழ்க்கையைப் பாதுகாக்கக்கூட வழியற்று குண்டுகள் கருக்கிய உடலுடன் அடிப்படை வசதிகள் கூட அற்ற நிலையில் வாழ்கிறார்.

போர்க்குற்றத்திற்குத் தண்டிக்கப் போகிறோம் என மக்களை ஏமாற்றும் புலம்பெயர் குழுக்கள் இவரைப் போன்ற ஆயிரக்கணக்கான சாட்சிகளை தெருவோர அனாதைகளாகக் கைவிட்டுள்ளனர்.

தாம் இன்னும், இலங்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக கஜேந்திரகுமாரையும் விக்னேஸ்வரனையும் உருவாக்கிவருகிறோம் எனக் கூறும் இவர்கள் தமது பணக் கொள்ளைக்கான நியாயத்தை தேடிக்கொள்வதற்கான முகவர்களை உருவாக்க முயல்கின்றனர்.

சில குழுக்கள் தமது பணத்தின் புறக்கணிக்கத்தக்க பகுதியை இலங்கையில் உதவி என்ற பெயரில் எலும்புத் துண்டுகள் போல, தமது முகவர்கள் ஊடாக அனுப்பிவைத்துவிட்டு தமது கொள்ளைக்கு நியாயம் கற்பிக்கின்றனர்.

போராளிகளும் மக்களும் சாட்சியின்றி மரணித்துபோன அவலத்தின் மற்றொரு குறியீடான இரத்தம் தோய்ந்த இப் பணத்தின் அப்பாவி உள்ளூர் முகவர்கள் அதன் மூலத்தை அறிந்திருப்பதில்லை.

நாளைய சந்ததி தமது முன்னோர்களின் கொள்ளையை நியாயம் எனக் கருதியே பெரியவர்களாகிறது. இவற்றையெல்லாம் வியாபாரத் தந்திரம் என ஏற்றுக்கொள்ளும் மனோ நிலை உருவாகி வருகிறது.
உலக மக்களுக்கு இனவழிப்பின் கோரத்தைக் கூறும் நிகழ்வாகவே பிரித்தானியாவில் கிளைகளைக் கொண்டுள்ள பல நாடுகளின் போராட்ட அமைப்புக்கள் தமது குறியீட்டு நாள் நிகழ்வுகளை நடத்துகின்றன. நமது வியாபாரிகளைப் பொறுத்தவரை உலக அதிகாரவர்க்கங்களிடம் சரணடைந்து போராட்டத்தின் நியாயத்தையே காட்டிக்கொடுக்கின்றனர், அதன் மறுபக்கத்தில் எழுச்சியற்ற பெரும் பணச் செலவிலான சடங்குகள் போல நிகழ்வுகளைக் கொண்டாடுகின்றனர்.

புலம்பெயர் தமிழர்களை உணர்ச்சிவசப்படுத்தி உசுப்பேற்றினால் மட்டுமே தமிழீழம் கிடைகும் என்று தமது குருட்டு நியாயத்தை விளம்பரப்படுத்துகின்றனர்.
இவற்றின் விளைபலனாக வன்முறை புலம்பெயர் ஈழ அரசியலின் பிரிக்கமுடியாத அங்கமாக மாறிவிட்டது. நேர்மையான அரசியல் எங்காவது மூலையில் வெளித்தெரியும் என்ற நம்பிக்கையற்ற சமூகமும் புதிய சந்ததியும் வியாபாரிகளின் வழிநடத்தலில் மௌனிக்கப்பட்டுள்ளது.