எழுக தமிழ் பிரகடனத்தில் சுய நிர்ணய உரிமையை மறுத்து பேரினவாதத்திற்கு துணைசென்ற விக்னேஸ்வரன்

vikneswaranசுய நிர்ணய உரிமை என்பது ஒரு தேசிய இனம் பிரிந்து சென்று தனியரசு அமைப்பதற்கான உரிமை என்பதைத் தவிர வேறில்லை. சுய   நிர்ணய உரிமையைக்  கோருதல் என்பது இலங்கை உட்பட உலகின் எந்த நாடுகளிலும் தடைசெய்யப்படவில்லை. சுயநிர்ணய  உரிமையைக் கோருவது ஒரு தேசிய இனத்தின் அடிப்படை ஜனநாயக உரித்தாகும். அதனை நிராகரிப்பது ஜனநாயக விரோதச் செயற்பாடாகும். இலங்கையில் வாழும் சிறுபான்மைத் தேசிய இனங்களுக்குச் சுய நிர்ணய உரிமையை அங்கீகரிக்காமை என்பது இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனநாயக விரோதச் செயற்பாடாகும். சுய நிர்ணய உரிமை என்ற அடிப்படை ஜனநாயக உரிமையை வழங்க மறுப்பது என்பது தேசிய இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதை மறுப்பது என்றே அர்த்தப்படுத்தப்படும். கடந்த சனியன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற எழுக தமிழ் என்ற நிகழ்வின் இறுதியில் வட மாகாண சபை முதலமைச்சர் சுய நிர்ணய உரிமையை மிகவும் தந்திரமாக நிராகரித்து இலங்கை அரசின் பேரினவாத நோக்கங்களுக்குத் துணை சென்றுள்ளார்.

முன்பெல்லாம் வாக்குக் கட்சிகள் மக்களுக்கு வாக்குறுதிகளை வழங்கிவிட்டு பின்னதாக அதனை நிராகரிப்பது வழமை. விக்னேஸ்வரன் ஒரு படி மேலே சென்று சுய நிர்ணய உரிமையுடன் கூடிய சமஷ்டியை இலங்கை அரசிடம் கோருகிறோம் என எழுக தமிழ்ப் பிரகடனத்தில் கூறியுள்ளார். சுய நிர்ணய உரிமை என்பது ஒரு தேசிய இனத்தின் தன்னுரிமை, அத் தேசிய இனம் பிரிந்து சென்று தனியரசு அமைத்துக்கொள்வதற்கான அடிப்படை ஜனநாயக் உரிமை. சமஷ்டி என்பது அதுவல்ல. அது மத்திய அரசின் உப அரசாக ஒரு தேசிய இனம் சார்ந்த பகுதிகள் செயற்படுவதற்கான நிர்வாக அமைப்பு முறை.

ஐக்கிய நாடுகள் நிறுவனம் கூட சுய நிர்ணய உரிமையை அங்கீகரித்துள்ளது, மக்களின் சுய நிர்ணய உரிமை என ஐக்கிய நாடுகள் நிறுவனம் குறிப்பிடும் சரத்துக்கள் உலக நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. பல ஆண்டுகளாக மக்களின் போராட்டங்களால் ஏற்பட்ட அழுத்தங்களை எதிர்கொள்ளவே ஐக்கிய நாடுகள் சபை சுய நிர்ணய உரிமையை அங்கீகரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.
எடுத்ததற்கெல்லாம் ஐக்கிய நாடுகள் சபையில் முறையிடுவோம் எனக் கூறும் போலிகள் யாரும் இதுவரை இலங்கையிலுள்ள சிறுபான்மைத் தேசிய இனங்களின் சுய நிர்ணய  உரிமையை இலங்கை அரசு நிராகரிக்கிறது என முறையிட்ட வரலாறில்லை.
சுய நிர்ணய உரிமை வேண்டாம் சமஷ்டியே போதுமானது எனக் கூறுவதற்கு விக்னேஸ்வரனுக்கு முழு உரிமையும் கருத்துச் சுதந்திரமும் உண்டு, அதனை அவர் முன்வரைபு செய்த யாப்பிலேயே குறிப்பிட்டுள்ளார். அந்த யாப்புத் திருத்தம் கூட சமஷ்டி என்பதை முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை என்பது தனியான விடையம்.

ஆனால் சுய நிர்ணய உரிமையுடன் கூடிய சமஷ்டி என மக்களை ஏமாற்றுவது கூச்சமின்றி அவர் நடத்தும் ஆபத்தான அரசியல்.

தமிழ் பேசும் மக்கள் சுய நிர்ணய உரிமை என்ற அடிப்படை ஜனநாயக உரிமைக்குக் குறைந்த எந்தத் தீர்வையும் ஏற்றுக்கொள்வது ஆபத்தானது. நாங்கள் பிரிந்து போவதாகக் கூறவில்லை, மாறாக பிரிந்து செல்லும் உரிமையை வழங்குங்கள் என்றே அரசிற்கு எதிராகப் போராடியிருக்கிறோம். இதுவரை கால இழப்புகளின் பின்னரும் பிரிந்து செல்லும் உரிமயை மிகவும் தந்திரமாக மறுக்கும் விக்னேஸ்வரன் அடிப்படையில் பேரினவாதத்திற்குச் சேவை செய்கிறார்.

எந்த அவமான உணர்வுமின்றி விக்னேஸ்வரனின் சுய நிர்ணய உரிமை மறுப்பை ஆதரித்துக் கொண்டாடும் புலம்பெயர் தமிழ் அரசியல்வாதிகளுக்கு சுரேஷ் பிரேமச்சந்திரனின் ஆசீர்வாதங்களும் நிச்சயம் கிடைக்கும்.

உள்ளூராட்சி தேர்தல் வருகிறது என்ற போக்கில் மக்களை உணர்ச்சிவசப்படுத்தும் போலி முழக்கங்களை முன்வைத்து நடத்தப்படும் நிகழ்வுகள் அல்ல இன்றைய எமது தேவை. வாக்குப் பொறுக்கும் போலிகளின் பிழைப்புவாத அரசியலுக்கு அப்பால், சுய நிர்ணய உரிமைக்கான அரசியல் முன்வைக்கப்பட வேண்டும். அதற்காக மக்கள் அணிதிரட்டப்பட வேண்டும்.

விக்னேஸ்வரன் தனது உரையில் சிங்கள மக்களுக்கும், உலக மக்களுக்கும் தமிழ் மக்களின் செய்தியைச் சொல்வதே பேரணியின் நோக்கம் என்கிறார். அதற்காக அவர் பாரட்டப்படவேண்டும். எந்தச் செய்தி சொல்லப்பட வேண்டும் என்பது தான் இங்கு கேள்வி. தமிழ் பேசும் மக்களின் பிரிந்து செல்லும் உரிமை அங்கீகரிக்கப்பட்டாலே இலங்கை என்ற தீவில் கூட்டாட்சி அமைவதற்கான அடிப்படைச் சாத்தியங்கள் உண்டு, இல்லையெனில் இலங்கை அமைதியற்ற நாடாக மாறிவிடும் என்பதே வரலாறு கூறும் பாடம்.