வட மாகாண சபையின் விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் தலைமறைவு?

Ainkaranesanஎம்.ரி.டி வோக்கஸ் என்ற மலேசியாவைத் தளமாகக் கொண்ட நிறுவனத்தின் இலங்கைக் கிளை இலங்கை அரசுடன் இணைந்து நடத்திய கொள்ளையில் சுன்னாகம் பகுதியிலுள்ள இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளமை தெரிந்ததே. இன்றைய இலங்கை அரசின் செல்லப் பிள்ளையான இந்த நிறுவனம் சுற்றுச்சூழல் சர்வதேசக் குற்றவியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளமை தொடர்பாக மக்கள் பற்றுள்ள தனிநபர்களும், அமைப்புக்களும் குரலெழுப்பிவந்தனர் . பெரும் அரசியல் செல்வாக்குமிக்க இந்த நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவர் பிரித்தானிய ஆளும் கட்சியின் ஐரோப்பியப் பாராளுமன்ற உறுப்பினரான நிரஜ் தேவா.

இந்த நிறுவனமும் அது சார்ந்த தனி நபர்களும் தமது குற்றச் செயல்களை மூடி மறைப்பதற்காக வடக்கின் அரசியல் வாதிகளையும் அதிகாரிகளையும் விலைபேச ஆரம்பித்தனர். அதன் வலைக்குள் சிக்கிய முக்கிய நபர்களில் வட மாகாண சபையின் விவசாய அமைச்சர் ஐங்கரநேசனும் ஒருவர். வட மாகாண சபையின் முதலைமைச்சர் ‘சிங்கக்கொடி புகழ்’ சீ.வீ.விக்னேஸ்வரனின் முழு ஒத்துழைப்புடன் செயற்படும் ஐங்கரநேசன் முள்ளிவாய்க்காலிற்குப் பின்னர் நடத்தப்பட்ட மிகப்பெரும் பேரழிவான சுன்னாகம் நீர், நிலம் ஆகிவற்றை நஞ்ச்சாகிய சம்பவத்தின் பின்னணியில் செயற்பட்டுள்ளார் என்பது அவர் தயாரித்த போலி நிபுணர் குழுவின் அறிக்கை ஊடாக வெளிவந்தது.

தவிர ஆய்வுகளின் ஊடாகப் பெறப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் நீர் நஞ்ச்சாக்கப்பட்டமை உறுதி செய்யப்பட்டதன் பின்னர் தேசிய நீர் வழங்கல் சபை மக்களுக்கு நீர்த் தாங்கிகள் ஊடாக நீர் வழங்கி வந்தது. எம்.ரிடி. வோக்கஸ் நிறுவனத்திற்கு விலை போன ஐங்கரநேசன் மற்றும் விக்னேஸ்வரன் குழு போலி நிபுணர் குழுவின் ஆய்வறிக்கையின் அடிப்படையில் மக்களுக்கு வழங்கப்பட்ட நீரை நிறுத்தி அவர்கள் நஞ்சு நீரைப் பருகத் துணை சென்றது.

இந்த வழக்கு கடந்த மாதம் 5ஆம் திகதி மல்லாகம் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போது வடமாகாண விவசாய அமைச்சர் பொ .ஐங்கரநேசன் உள்ளிட்டவர்களுக்கு நீதி மன்றம் அழைப்பாணை உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்நிலையில், குறித்த வழக்கு மல்லாகம் நீதிமன்றத்தில் நீதிபதி ஏ. யூட்சன் முன்னிலையில் கடந்த மாதம் 18ஆம் திகதி மீண்டும் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. எனினும், அழைப்பாணை விடுக்கப்பட்வர்கள் நீதி மன்றில் முன்னிலையாகவில்லை. இதன் காரணமா குறித்த வழக்கு இன்றைய தினம் வரை ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், வட மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனுக்கு நீதிமன்றத்தால் அழைப்பாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த போதிலும், வெளிநாடு செல்ல வேண்டியிருப்பதால் இன்றைய தினம் நீதிமன்றத்துக்குச் சமூகமளிக்க முடியாது எனத் தெரிவித்து தனது சட்டத்தரணியூடாக நேற்று முன்தினம் மல்லாகம் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராகி அனுமதி கோரியிருந்தார்.

அவரது விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி அடுத்த வழக்குத் தவணையின் போது கண்டிப்பான நீதி மன்றில் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில் சுன்னாகம் குடிநீர்ப் பிரச்சினை தொடர்பான அறிக்கையொன்றை தேசிய சுற்றுச் சூழல் அதிகார சபை இன்றைய தினம் நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

அத்துடன், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் அதிகாரிகள் இன்றைய தினம் நீதிமன்ற வழக்கு விசாரணைக்குச் சமூகமளிக்காத காரணத்தால் அவர்களுக்கு எதிராக யாழ். பிராந்திய பொலிஸ் அத்தியட்சகரினூடாகப் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து பெற்றுக் கொள்ளக் கூடிய நீரைப் பயன்படுத்தலாமா? பயன்படுத்த முடியாதா? என்ற ஆய்வறிக்கையை உடனடியாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமெனவும் தேசிய சுற்றுச் சூழல் அதிகார சபைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரதேச சபைகளில் நிதி பற்றாக்குறை காரணமாகவே நிலத்தடி நீர்மாசுவினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நீரை விநியோகிக்க முடியாதுள்ளதாக இடர் முகாமைத்துவ அமைச்சு நீதிமன்றத்தில் அறிவித்தது.
எனினும், பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு உரிய வகையில் குடிநீர் விநியோகிக்கப்பட வேண்டுமென உத்தரவிட்ட நீதவான், வழக்கு விசாரணைகளை எதிர்வரும் 8ஆம் திகதி வரை ஒத்தி வைத்தும் உத்தரவிட்டுள்ளார்.

விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் இதுவரை நீதிமன்றத்திற்குச் செல்லாமல் வெளி நாடு செல்வதாக தொடர்ச்சியாகக் கூறி வருகின்ற போதிலும் மல்லாகம் நீதிம்ன்றம் நீதியை நிலை நாட்ட முனைப்புடன் செயற்படுகிறது. இந்த நிலையில் நீதி மன்றத்திற்குத் தலைமறைவாகி தொடர்ந்தும் ஏமாற்றி வரும்,  தமிழ் நாட்டில் வசிக்கும் ஐங்கரநேசனின் அடுத்த நடவடிக்கைகள் தொடர்பான பல சந்தேகங்கள் எழுந்துள்ளன.