அம்மாவாணை நான் சிறீவாஸ் இல்லை! : சோளன்

kaundanmaniஆவரங்கால் ஆட்டிய பாதத்தின்ர அடிமுடி சத்தியாமா, அம்மாவாணை சோளனுக்கும் சோசலித்துக்கும் கனக்சன் இல்லை கண்டியளோ! சோளனும் சோர்ச் புஸ்சும் ஒண்டுக்கிருந்து ஒரே தட்டுல சாப்பிட்டு வளர்ந்தனாங்கள். அம்மாவாண சோர்ச் புஸ் சீனாக்குப் போய் யாவாரம் பேசேக்க அவற்ற சப்பாத்துத் துடைக்கிற வேலைக்கு தான் சோளன் விண்ணப்பிச்சவன். அந்தாளோ குறுக்கால வந்த யாரிட்டையோ தமிழன்ர பெருமையைக் கேள்விப்பட்டிருக்க வேணும். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தில முன் தோன்றி அமெரிகன் கொடி போட்ட அன்டாரயரோட வேலி பாய்ஞ்சு சாதனை படைத்த தமிழன்ற பெருமையை அவர் கேள்விப்பட்ட உடனேயே சோளனுக்கு வைட் ஹவுசிலையே வேலை போட்டுத் தந்திட்டார்.

மகிந்த மனுசியோட வைட் கவுசுக்கு வரேக்க பஞ்சிகாவத்தையில இருந்து கசிப்பு இறக்கி ஊத்துக்கொடுத்து அவரைச் சூடாக்கிற வேலைக்கு சோளனை நியமிச்ச புஸ்சர் பிறகு படிப்படியா பதவி உயர்த்தி இண்டைக்கு கோட் சூட் போட்டு அங்கங்க போய் வாற அளவுக்கு விட்டிருக்கிறார்.
ஒபாமா வந்த பிறகும் சோளன் வைட் கவுசல விளையாடுற  வேலை தான்.

வன்னியில் கொத்துகுண்டு போடேக்க அமெரிக்கன் அண்டாயரோட கட்டில்ல ஏறி நின்று அஞ்சு வயசுப் பிள்ளை மாதிரி குதிச்சு விளையாடுற வேலை இடைக்காலத்தில செய்தனான்.

இப்பெல்லம் வேலை நல்ல ஈசி! இலங்கை அரசாங்கம் தமிழருக்கு உரிமை கொடுக்குது என்று அமெரிக்கா சொல்லேக்கையும், ரனிலும் மைத்திரியையும் சேர்ந்து ஜனநாயக உருண்டை தருகினம் என்று அமெரிக்கன் ராஜாங்க அமைச்சர் சொல்லேக்கையும், இனிமேல் போர்க்குற்ற விசாரணையை ரனிலிட்டையும் மைத்திரீட்டையும் குடுத்துட்டு போத்திக்கொண்டு படுங்கோ என்று சொல்லேக்கையும் கோர்ட் சூட்டோட பெருவிரல் சூப்பிக்கொண்டு உலாத்தித் திரியிறது தான் வேலை.

அந்தக் காலத்தில காச்சட்டையும் இல்லாம மூக்குச் சளியும் வழிய சோடாப்புட்டிக் கண்ணாடியோட முற்றத்தில விளையாடி எக்ஸ்பீரியன்ஸ் இருக்கிற எனக்கெல்லாம் இதெல்லாம் ஒரு கொசுறு வேலை என்று ஒபாமவுக்கும். கெரிக்கும் தெரிந்திருக்க நியாயமில்லைத் தான்.

ஆனானப்பட்ட ஆவரங்கால் சிவனின்ர அருள் பெற்று ஐரோப்பாவிற்கு திருநீறும் சொக்கேல சந்தணப் பொட்டுமா வந்து அசைலம் கேட்ட எனக்கு ஒபாமா மரியாதை தாறது ஒன்டும் புதிசில்ல.

உந்த தமிழனுக்கு இதெல்லம் விளங்காது! அவனுக்கு புளியங்கொட்டை போட்டுச் சாத்திரம் பாக்க எல்லாம் தெரியாது. யாழ்ப்பாணத்தில பெற்றோல் இருந்தா அமெரிக்கனைக் கூட்டிக்கொண்டுவந்து சிங்களவனைச் சிலாவிச் சுட்டு தமிழ் ஈழம் பிடிச்சுப் போடலாம் என்றால் ஒருத்தனும் ஒத்துழைக்கிறான் இல்லை. நான் பனங்கொட்டையைக் கூட கிலுக்கிப் பார்த்து அதுக்குள்ள பெற்றோல் இருக்குதெண்டு ஒரு நாள் நிரூபணம் செய்யாட்டில் பாருங்கோவன்.

இப்பிடித் தமிழனை அமெரிக்கன் தூக்கி வைச்சுக் கொண்டாடேக்க அதுக்கு எதிரா ஒருத்தன் கதைச்சால் அவன் யாரா இருக்ககலாம்?

உண்ணாண இந்தக் கேள்வியே விளங்காத எத்தின பேர் எங்கட அறிவுகெட்ட சமூகத்தில இருக்கினம்?

அமெரிக்கனை யாருக்குப் பிடிக்காது?

சீனாக் காரனுக்கு மட்டும் தான்!

சரி ஏன் பிடிக்காது?

சீனாக் காரன் மூக்கால இங்கிலீசு பேசுறான் என்று தான்!

அப்ப அமெரிக்கனை எதிர்க்கிறவனுக்கு யார் காசு கொடுக்கிறது?

உங்களுக்குத் தெரியும் தானே சில்லரை எண்டாலே சீனாக் காரன் தானே!

சீனா பாஸ்ட் பூட்டில சேர்த்த சில்லரை எல்லாத்தையும் அமெரிக்கனை எதிர்த்துப் பேசுற தமிழனுக்குத் தானே குடுக்கிறாங்கள்.

இனி, சீனாக்காரன் யாரெண்டால் கொம்மினிஸ்டு. கொம்மினிஸ்டு என்றால் எல்லாத்தையும் சேர்(Share) பண்ணிவிடுகிறது தான்!

அப்ப பேஸ் புக்கில எல்லாத்தையும் சேர் பண்ணுறவன் எல்லாம் கொம்மினிஸ்டு.

அப்பேர்ப் பட்ட நாதாரிகளான கம்மினிஸ்டுகள் சீனாக் காரனிட்ட காசு வாங்கிக்க்கொண்டு அமெரிக்கனுக்கு எதிராக் கதைக்கிறான். அமெரிக்கனோ நான் சொன்ன மாதிரி தமிழனை சோக்கா நடத்திறான்.

******

ஐயோ இவளாத்தையும் நான் கனவுகண்டு எழும்பேக்க நேரம் சரியாக 2 மணி அதிகாலை. இப்பிடிப் பயங்கரக் கனவுக்குக் காரணம் எனக்கு அந்த மின்னஞ்சலை அனுப்பி வெருட்டின நண்பர் பெருந்தகை தான். எழும்பின சோளன், “நான் அவரில்லை” என என 1008 தடவை ஊ.சிவமயம் எழுதின மாதிரிச் சொல்லிய களைப்பிலேயே உறங்கிவிட்டான்.
அந்த ஈமெயிலை கீழே தருகிறேன், தயவு செய்து இதயமோ, பல்லோ பலவீனமானவர்கள் படிக்க வேண்டாம் என சோளன் கேட்டுக்கொள்கிறான்!
மின்னஞ்சலை அனுப்பியவர் : சின்னத்துரை சிறீவாஸ் -ஆவரங்கால்
மின்னஞ்சல்:
“Sinnathurai Srivas Avarangal he call him a long standing TNA MEMBER OF UK BRANCH
4 hrs ·
கம்யூனிஸ்டுகளின் பின்னணியில் நடாத்தபடும் புதுவெளிச்சம், நேருக்குநேர் போன்ற நிகழ்ச்சிகள், தமிழர்க்கு ஐநா.ம.உ.ச மூலம் தீர்வுகாணநிற்கும் அமெரிக்காபோன்ற நாடுகள் தம்நலனுக்காக தலையிடுகின்றார்கள் என்று அப்பட்டமான பொய்களை பரப்புவதற்காகவே தொடர்ந்தும் இயங்குகின்றன. 2009முன் சீனாவின் அடிவருடிகளால் பின்புறத்தில் நடாத்தப்படும் இந்த கம்யூனிஸ்ட் ஊடுருவிகள் ளின்றும் ஐபிசி தமிழ் போன்ற ஊடகங்களுள் புகுந்து கோத்த/மகிந்த சீனாவின் அஜென்டாவைவைத்து தமிழரை ஐநாவிலிருந்து கலைக்க, அமெரிக்க தீர்மானத்தை ஜெனீவாவில் எரித்தும், அமெரிகவிற்கெதிராக தமிழர்கெதிராக ஜெனீவாவில் நாடுகளிடம் வாக்குகள்கேட்டும், நாட்டில் ஆட்சிமாற்றத்தை எதிர்த்து மகிந்தவை கோலேற்ற முயல்பவர்கள். அமெரிக்கா போன்ற மனிதவுரிமைகாக்கும்நாடுகளுக்கு உலக ம்க்களின் சுதந்திரம் முக்கியம் அதன்பின்தான் தம் பொருளாதார நலம். உயிரைகொடுத்து போராடிய எம்மினதுக்குதெரியும் லட்சியம் என்றால் என்னவென்று, அதேபோல் மனிதவுரிமைகாப்பது இந்த நாடுகளின் லட்சியம். இதை இல்லையென்றும் தம்நலனுக்கி நிற்கின்றார்களென்றும் பொய்பிரசாரம் செய்வதற்கென்றே புதுவளிச்சம், நேருக்குநேர், மற்றும் சில அரசியல் புறோக்றாம்களை ஐபிசி-தமிழ் அரசியல்பிரிவு கம்யூனிஸ்ட் வாதிகள் நடாத்துகினர். 2009ல் தமிழ் இன அழிப்புச் செய்தது சீனா. ஜெனீவாவில் அமெரிக்கதீர்மானத்தை தோர்கடித்து தமிழரை கலைக்க நிற்பது சீனா. இந்த உண்மைகளை மறைப்பதற்காகவே இந்த ஊடக அரசியல்பிரிவு வேலைசெய்கின்றது. தமிழரை ஏமாற்றுவத்ற்காகவே வாலைசெய்கின்றன.”

எங்கேயாவது தெருமுனையில் கண்டாலும், சிறீவாஸ் அவர்கள் கண்ணீரும் கம்பலையுமாக ‘நீ சீனாக் காரனா’ எனக் கேட்டுவைக்கிறார். இனிமேல் சோளனுக்கு இப்படி பயங்கரக் கனவுகள் வராமல் இருக்க வேண்டுமானால் மதிப்பிற்குரிய சிறீவாஸ் அவர்களை, அவரது நண்பர்கள் உரிய இடத்தில் சேர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.