மக்கள் போராட்டத்தை நிராகரித்தமையே புலிகளின் தோல்விக்குக் காரணம் : தோழர் சிவசேகரம்

தோழர் சிவசேகரம்  இலங்கையைச் சேர்ந்த மார்க்சிய அரசியல் விமர்சகர்களுள் குறிப்பிடத் தக்கவர். தற்கால விமர்சனம் குறித்த அவரது கட்டுரைகள் “விமர்சனங்கள்” என்ற பெயரில் நூலாக வெளிவந்திருக்கிறது. தோழர் சிவசேகரம் அவர்களின் நேர்காணலின் முதற்பகுதி புதிய ஜனநாயகம்(பு.ஜ) இதழில் அச்சுப் பிரதியாக வெளிவந்திருக்கிறது. அதன் மறுபதிவு இங்கே தரப்படுகிறது.

புதியஜனநாயகம்: வான்படை வைத்திருக்கும் அளவுக்கு வலிமையான இராணுவ அமைப்பாகக் கட்டமைக்கப்பட்டிருந்த Sivasegaramவிடுதலைப் புலிகள் இயக்கம் இப்போது ஏறத்தாழ ஒட்டு மொத்தமாக அழிக்கப்பட்டு விட்டது. இதன் விளைவாக ஈழத் தமிழர்களின் சுயநிர்ணயப் போராட்டமும் மாபெரும் பின்னடைவுக்குள்ளாகி விட்டது. இதற்கான புற மற்றும் அகக் காரணங்கள் என்ன?

சிவசேகரம்: மூன்று சிறிய விமானங்கள் வைத்திருந்தது பெரிய விசயம் தான். ஆனாலும் இதை வைத்தே அதை வான்படை என்று சொல்ல இயலாது. இதைவிட வலிமையான விமானப்படை இலங்கை அரசிடம் இருந்தது. மற்றப்படி வலிமையான கடற்படை இன்னபிற ஆயுதங்கள் புலிகளிடம் இருந்தது உண்மை தான். இப்படி இந்த ஆயுத வலிமையை நம்பியதே புலிகளின் தோல்விக்கு முக்கிய காரணம். ஆரம்பத்தில் மக்களின் பேச்சைக் கொஞ்சம் கேட்டவர்கள் ஆயுத வலிமை வந்த பிறகு மக்களின் பேச்சைக் கேட்பதில்லை. இது புலிகளுக்கு மட்டுமல்ல, ஆரம்பத்தில் இருந்து எல்லா இயக்கங்களுக்கும் பொருந்தும்.

மக்களை விடுத்து ஆயுத வழிபாடு செய்த இந்தத் தவறு தமிழ் தேசியத்தின் முக்கியமான பலவீனமாக இருந்தது. எடுத்துக்காட்டாக யாழ்ப்பாணத்திலிருந்து மக்கள் வெளியேற வேண்டும் எனப் புலிகள் உத்தரவிட்ட போது அதற்கு மக்கள் சம்மதம் இல்லாமலேயே அமுல்படுத்தினார்கள். தற்போது கிளிநொச்சியிலும் இதேதான் நடந்தது. இப்படி விடுதலைப் போராட்டத்தின் எந்த அம்சத்திலும் மக்களின் பங்களிப்பு இல்லாமலேயே இருந்தது. புலிகள் ஆணையிட்டால் மக்கள் நிதி தர வேண்டும். ஆர்ப்பாட்டங்களுக்கு வர வேண்டும். தேர்தலைப் புறக்கணிப்பதோ பங்கேற்பதோ செய்ய வேண்டும். எந்தப் பிரச்சினையிலும் மக்களின் கருத்து விருப்பம் கேட்டு நடப்பதில்லை. தாங்கள் ஈழத்தைப் பெற்றுத் தரும் சக்தி எனவும், அதற்கு மக்கள் கட்டுப்பட்டவர்கள் என்பதே புலிகளின் செயல்பாடாக இருந்தது. இதனால் மக்களிடமிருந்து போராட்டம் அந்நியப்படத் தொடங்கியது. பிரபாகரன் முடிவெடுத்தால் சரியாக இருக்கும் அவர் என்றைக்குமே தோல்வியடைய மாட்டார் என்பதே புலிகள் மக்களிடம் உருவாக்கிய சிந்தனையாகும்.

புறக்காரணங்களைப் பொறுத்தவரை சீனாவும், இந்தியாவும் ஆயுதங்களை வழங்கியதைக் குறிப்பிடலாம். மேலும் சீனாவின் பெயரைச் சொல்லி இந்தியாவின் பாவத்தைக் கழுவும் போக்கும் இங்கு இருக்கிறது.

கருணாவின் துரோகத்தைப் பொறுத்தவரை அதை ஒரு தனி மனித நிகழ்வாகப் பார்க்க இயலாது. ஏற்கெனவே வடக்கு கிழக்கு குறித்த முரண்பாடுகள் மக்களிடம் நிலவியிருந்தது. யாழ்ப்பாணத்து மக்கள் மட்டக்களப்பு மக்களைக் கீழாகப் பார்க்கும் மனோபாவம் நிலவியது. இன்றைக்கு இது மாறியிருந்தாலும் சாதி ரீதியாகவும் இன்னும் பல அம்சங்களிலும் இது நீடிக்கவே செய்கிறது. இந்த முரண்பாட்டிற்குத் தீர்வுகாணும் வண்ணம் புலிகள் முயலவில்லலை. மாறாக இந்த முரண்பாட்டை வைத்துப் புலிகளை அழிப்பதற்கு இலங்கை இராணுவம் கருணாவை நன்கு பயன்படுத்திக் கொண்டது. கருணா மட்;டும் பிரியவில்லை. அவருடன் ஒரு கூட்டமே விலகிச் சென்றது. இராணுவத்தின் உதவியுடன் கிழக்கில் இருந்த புலித் தலைவர்களை கருணா கும்பல் கொலை செய்தது. மேலும் புலிகளின் போர் உத்திகள், இகசியங்கள் அனைத்தும் கருணா மூலம் சிங்கள் இராணுவத்திற்குச் சென்றன.

எனவே இதனை கருணா என்ற தனிமனிதரை வைத்துப் பார்க்காமல் வடக்கு கிழக்கு முரண்பாட்டின் அடிப்படையிலேயே இந்தத் துரோகத்தை விளங்கிக் கொள்ள வேண்டும். புறக்காரணங்கள் எவ்வளவு பாதகமாக இருந்தாலும், அகக் காரணங்களே போரின் முடிவைத் தீர்மானிக்கின்றன. சீனப் புரட்சியில் கூட எதிரி வலிமையாக இருந்த போது செஞ்சேனை பல இடங்களில் பின்வாங்கியது. இது தோல்வி அல்ல: மாறாக தனது சக்திகளைப் பாதுகாத்து எதிரிக்குப் பாதகமான சூழ்நிலையில் தாக்குவது என்ற தந்திரம் தான். புலிகளைப் பொறுத்தவரை எதிரியைக் குறைத்தும் தமது வலிமையைக் கூட்டியும் மதிப்பிட்டார்கள். கிழக்கு மாகாணம் முற்றிலும் வீழ்ந்த பிறகாவது, அவர்கள் தங்களது நிலையைப் புரிந்து கொண்டு தற்காப்பு நிலைக்குப் பின்வாங்கியிருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால் இந்தத் தோல்வியையும் மக்கள் அழிவையும் தவிர்த்திருக்கலாம். புலிகளின் சுத்த இராணுவவாதக் கண்ணோட்டமே இந்த அழிவைத் தேடிக் கொண்டது.

புதியஜனநாயகம்: கிளிநொச்சி வீழ்ந்த பிறகு புலிகள் கெரில்லாப் போர் முறைக்கு மாறியிருந்தால், இத்தனை இழப்புக்கள் ஏற்பட்டிருக்காது எனப் பலரும் சுட்டிக் காட்டுகிறார்கள். ஏறத்தாழ 25 ஆண்டுகள் ஆயுதப் போராட்டம் நடாத்தி வந்த புலிகள் இந்த மாற்றுப் போர் உத்திக்கு ஏன் மாறிச் செல்லவில்லை. அவர்கள் எதை நம்பி யாரை நம்பி மரபு வழிப் போரை இறுதிவரை தொடர்ந்து நடாத்தி வந்தார்கள்?

சிவசேகரம்: இதற்கான ஒரு பகுதி பதிலை ஏற்கெனவே கூறியிருக்கிறேன். மரபுவழிப் போரோ இல்லை கெரில்லாப் போரோ அது மக்கள் யுத்தமாக இருந்தால் தான் வெற்றி பெற முடியும். மக்களைச் சாராமல் கெரில்லாப் போர் முறைக்கு மாறியிருந்தாலும், புலிகளுக்கு எதிரான சக்திகளால் அவர்கள் காட்டிக் கொடுக்கப்படும் அபாயம் உள்ளது.

மக்கள் போராட்டம் தீவிரமாக நடக்கும் போது தான் கெரில்லா யுத்தமும் நடாத்த முடியும். ஓருவேளை மக்களின் பங்கேற்பு இல்லாமல் இருந்திருந்தாலும், கெரில்லாப் போர் முறைக்கு மாறியிருந்தால் கூட இந்த இழப்புக்களைக் கணிசமாகத் தவிர்த்து இருக்கலாம். கூடவே தமது பாதையைப் புலிகள் சுயவிமர்சனம் செய்து கொண்டு அப்படி மாறியிருந்தால் இந்தப் போரின் போக்கு மாறியிருக்கக் கூடும்.

இப்படி அவர்கள் போர் முறையை மாற்றிக் கொள்ளாததற்கு இன்னொரு காரணம், அவர்கள் மேற்கு நாடுகளிலும் தமிழ்நாட்டிலும் உள்ள தங்களுடைய ஆதரவாளர்களின் போராட்டம். தேர்தல் காரணமாக ஒரு கௌரவமான பேச்சுவார்த்தை மூலம் போரை நிறுத்த முடியும். அதன் மூலம் புலித்தலைமையைக் காப்பாற்றிக் கொள்ளலாம் என்று தவறாக நம்பியதும் ஆகும். அமெரிக்கப் புதிய அதிபர் ஒபாமாவைக் கூட அவர்கள் நம்பினார்கள். இறுதிக்காலத்தில் நோர்வேயையும் அவர்கள் அளவுக்கதிகமாக நம்பினார்கள். இந்தத் தவறான முடிவுகளாலும் அவர்கள் பெரும் தோல்வியைச் சந்திக்க நேர்ந்தது.

புதியஜனநாயகம்: பிரபாகரன் உள்ளிட்ட புலிகளின் தலைவர்கள் போரிட்டு மரணமடைந்தார்களா? அல்லது சரணடைந்தபின் சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டார்களா? இறுதி நாட்களில போர் முனையில் நடந்துது என்ன?

சிவசேகரம்: அவர்கள் போரிட்டு இறந்ததற்கான ஆதாரங்கள் மிகவும் குறைவாகவே உள்ளன. போரிட்;டு இறந்தவர்கள் எல்லாம் கடைசி இரண்டு வாரத்திற்கு முன்பாகக் கொல்லப்பட்டவர்கள். இறுதி நாட்களில் பலரும் சரணடைந்தே கொல்லப்பட்டிருக்கிறார்கள். புலிகள் எதிரியிடம் சிக்காமல் இருப்பதற்கு சயனைட் கடிப்பது வழக்கம். இவர்கள் அப்படியும் சாகவில்லை. பிரபாகரனது உடல் காயங்களைப் பார்க்கும் போது குறிப்பாக அவரது தலை வெட்டப்பட்டதைப் பார்த்தால், இது போர்க்காயம் போலத் தெரியவில்லை. அவர் பிடிபட்டுக் கொடூரமான சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டார் என்றே தெரிகிறது. இதேபோல சரணடையச் சென்ற நடேசனும் அவரது மனைவியுடன் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

புதியஜனநாயகம்: வை.கோ, நெடுமாறன் போன்ற தமிழினவாதிகள் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் எனக் கூறுவதன் பின்னணி என்ன?

சிவசேகரம்: இவர்கள் புலிகளின் முகவர்களாக, குரலாகத் தான் தமிழ்நாட்டில் செயல்படுகிறார்கள். வெளிநாடுகளில் இருக்கும் புலிகளின் ஒரு பிரிவினர் இன்னமும் பிரபாகரன் இறக்கவில்லை என்று கூறுவதை இவர்கள் ஏற்கிறார்கள். இதன்மூலம் தமிழ்நாட்டில் இருக்கும் புலி ஆதரவு மக்களின் நம்பிக்கையைப் பெற்று, அரசியல் இலாபம் கருதி இப்படிப் பிரச்சாரம் செய்கிறார்கள் எனக் கருதுகிறேன்.

பிரபாகரன் உடல் பலகோணங்களில் வெளியிடப்பட்டும் நம்ப முடியாதவர்கள் யார் இருக்க முடியும்? இவர்கள் பிரபாகரன் இறந்ததை அறிவிப்பதற்கு ஏன் அஞ்சுகிறார்கள். வெளிநாடுகளில் புலிகள் திரட்டியிருக்கும் கோடிக்கணக்கான டொலர் பணம் இப்போது பிரபாகரன் உயிரோடு உள்ளதாகக் கூறும் பிரிவினரிடம் உள்ளது. பிரபாகரன் இறந்து விட்டார் என்று சொன்னால், இந்தப் பணத்தை என்ன செய்யப் போகிறீர்கள் என மக்கள் கேட்பார்கள். அதைத் தவிர்க்கவே இவர்கள் பிரபாகரன் இறந்ததை மறுக்கிறார்கள். பிரபாகரன் மீண்டும் வரும் போது போர் செய்வதற்கு இந்தப் பணம் தேவைப்படும் என்று சொல்லலாமல்லவா? அரசியலுக்கு அப்பாற்பட்டு இப்படியும் ஒரு காரணம் உள்ளது. இதனால் இறந்து போன பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்துவதைக் கூட இவர்கள் தடுக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.

புதியஜனநாயகம்: ஈழத் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டம் சந்தித்திருக்கும் இப்பின்னடைவு பற்றி ஈழத்தில் வாழும் தமிழர்களும் புலம் பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்களும் ஒரேமாதிரியான கருத்தினைக் கொண்டுள்ளார்களா?

சிவசேகரம்: இல்லை என்று தான் நினைக்கிறேன். புலம் பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் தனி ஈழம் என்ற கருத்திற்குக் கொடுத்த முக்கியத்துவத்தை சுயநிர்ணயத்திற்குக் கொடுக்கவில்லை. சமாதானப் பேச்சுவார்த்தைக் காலத்தில் அவர்கள் சமஷ்டி என்று பேசியிருந்தாலும் அடிப்படையில் தனிஈழம் என்ற கண்ணோட்டத்தில் தான் சிந்தித்து வந்தார்கள். இலங்கையைப் பொறுத்தவரை சுயநிர்ணயம் பற்றிய பேச்சுக் கூடுதலாக இருந்து வந்தது. குறிப்பாக புலிகளின் கட்டுப்பாட்டுக்கு வெளியே இருக்கும் மக்கள் மத்தியில் தனி ஈழம் குறித்த கருத்து வலுவாக இருந்தது என நான் நம்ப மாட்டேன். அவர்களுக்குச் சுயநிர்ணய உரிமை என்பதன் பொருள் தெரியாவிட்டாலும் ஏதோ ஒரு சுயாட்சி அதிகாரம் என்பதைத் தெரிந்து வைத்திருந்தார்கள். இது தான் அவர்களுடைய யதார்த்தமாக இருந்தது. இரண்டு பிரிவினருக்கும் இந்தப் போரின் முடிவு அதிர்ச்சியாக இருந்தது.

புலம் பெயர்ந்தவர்கள் மத்தியில் அவர்கள் எதிர்பார்த்திருந்த ஈழம் தோல்வியடைந்து விட்டபடியால் அவர்களுடைய சிந்தனை அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதாக இருந்தது. ஈழத்தில் இருந்த மக்கள் முகம் கொடுக்கும் பிரச்சினை வேறு. அவர்களுக்கு அடிப்படை மனித உரிமை, வாழும் உரிமை, அரசியல் உரிமை இவையெல்லாம் இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள். இதை வெளிப்படுத்துவதற்கான ஊடகச் சுதந்திரம் கூட இல்லை. புலம் பெயர்ந்தவர்கள் ஒரு கற்பனை உலகத்தில் வாழ்கிறார்கள். எடுத்துக்காட்டாக சமாதானப் பேச்சுவார்த்தையின் போது புலிகள் சமஷ்டி அதிகாரத்திற்கு உடன்பட்டார்கள் என்றதும் ஈழத்திலும் மக்கள் அதனை ஏற்றார்கள். ஆனால் புலம் பெயர்ந்த மக்கள் மத்தியில் இதற்கு எதிர்ப்பு இருந்தது.

புதியஜனநாயகம்: நாடு கடந்த தமிழீழம் என்றெல்லாம் அறிவிக்கப்படும் சூழ்நிலையில், புலம் பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் தமிழ் தேசியவாதத்தினைக் கட்டியெழுப்பும் வாய்ப்புக்கள் உள்ளனவா?

சிவசேகரம்: முன்பு சொன்னதைப் போல பிரபாகரன் இறந்து விட்டார் இறக்கவில்லை என்று இறந்த கட்சி இறவாத கட்சி என்று இரு பிரிவுகளாக புலம் பெயர்ந்த ஆதரவாளர்களிடம் பிளவு உள்ளது. இதில் இறந்து விட்டார் என்ற பிரிவு தனது அரசியல் சுயலாபத்திற்காக இந்த நாடு கடந்த ஈழத்தை அறிவித்திருக்கிறது என்று தான் நான் பார்க்கிறேன். இப்படி ஒரு முன்மாதிரி வேறு எந்த விடுதலை இயக்கத்தாலோ அல்லது ஆக்கிரமிப்புக்குட்பட்ட நாடோ செய்ததில்லை. 1970ஆம் ஆண்டு கம்போடியாவில் ஒரு இராணுவப் புரட்சி மூலம் சிகாணுக் ஆட்சி பறிக்கப்படுகிறது. அதையடுத்து அவர் சீனாவில் தனது நாடு கடந்த அரசை அறிவிக்கிறார். அப்போது கம்போடியாவில் அவருக்கென்று விடுவிக்கப்பட்ட பிரதேசங்கள் இருந்தன. ஆனால் இலங்கையில் அப்படி ஒரு சதுர அங்குல நிலம் கூட இல்லாமல் புலம் பெயர்ந்தவர்கள் அதுவும் மேலை நாடுகளில் குடியுரிமை பெற்றவர்கள் இப்படி அறிவிப்பதை நான் ஒரு கேலிக் கூத்தாகத் தான் பார்க்கிறேன். இதனை எந்த முக்கியத்துவமும் இல்லாத அரசாங்கங்கள் கூட அங்கீகரிக்காது என்பதே என் கருத்து. மேலும் தற்போது கே.பி. கைது செய்யப்பட்ட பிறகு இதன் நம்பகத் தன்மை கேள்விக்குறியாக இருக்கிறது. இப்படிப்பட்ட கருத்து புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ள படித்தவர்கள், வழக்கறிஞர்கள், செல்வந்தர்கள் ஊடாகப் பரப்பப்படுகிறது. இங்கே வைகோ, நெடுமாறன் ஆடும் நாடகத்தைப் போன்றே இதுவும் ஒரு நாடகமாகத் தான் எனக்குத் தெரிகிறது.

புதியஜனநாயகம்: மலையகத் தமிழர், முஸ்லீம்கள், சிங்கள மக்கள் ஆகியோர் 25 ஆண்டு கால ஆயுதப் போராட்டத்தையும், அதன் முடிவையும் எப்படிப் பார்க்கிறார்கள்?

சிவசேகரம்: மலையகத் தமிழர்களைப் பொறுத்தவரை புலிகளின் போராட்டத்தோடு பெரிய முரண்பாடு இல்லை. பொதுவில் இந்தப் பேராட்டத்தை அனுதாபத்தோடு தான் பார்த்தார்கள். அந்த அளவில் இந்தத் தோல்வி அவர்களிடம் ஒரு ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது எனலாம்.

தென்னிலங்கையில் வாழும் முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் புலிகள் போராடுவது தமக்குப் பாதுகாப்பானது என்றே கருதினார்கள். தற்போது புலிகள் தோற்கடிக்கப்பட்ட பிறகு சிங்களப் பேரினவாதத்தால் தமக்கு அபாயம் ஏற்படலாம் என அஞ்சுகிறார்கள். வடக்கு கிழக்கு முஸ்லிம்களில் ஒரு பகுதியினர் புலிகள் மற்றும் ஏனைய விடுதலை இயக்கங்களின் அராஜகங்களால் பாதிக்கப்பட்டவர்கள். பள்ளிவாசல் படுகொலை, கிராமங்களில் படுகொலை, யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றம் எனப் பல விசயங்களைச் சொல்லலாம். இவர்கள் புலிகள் தோற்றது நல்லது என்றே நினைக்கக் கூடும். ஆனால் சற்று நிதானமாகச் சிந்தித்துப் பார்த்தால் இது தமிழ் தேசிய இனத்தின் மீதான சிங்களப் பேரினவாதத்தின் வெற்றி என்று அவர்களில் சிலர் உணர்கிறார்கள். அப்படிச் சில தலைவர்கள் பேசவும் செய்கிறார்கள். அவர்களில் சந்தர்ப்பவாதிகளும் உண்டு.

மலையகம், முஸ்லிம் மற்றும் வடக்கு கிழக்குக் கட்சிகளை அரசாங்கம் தனது நோக்கத்திற்காகப் பிளப்பதும், பேரம் பேசுவதும் கூட நடக்கிறது. சிங்கள மக்களைப் பொறுத்தவரை இந்தப் போர் ஒரு கௌரவப் பிரச்சினை. இதுவரை தங்கள் மீது செய்யப்பட்ட அவமானங்கள் தற்போது கழுவப்பட்டதாக அவர்கள் உணர்கிறார்கள். தேசியவாதத்தின் தவிர்க்க முடியாத விளைவு இது. ராஜபக்சவும் இதனை நன்கு பயன்படுத்திக் கொள்கிறார். தமிழ் மக்கள் மீது தாங்கள் வெற்றி பெற்றதாகவும் அவர்கள் கருதுகிறார்கள். இதைவைத்து அரசாங்கம் பல அடக்குமுறைச்சட்டங்களை அமுல்படுத்தி வருகிறது. இறுதியில் இந்தப் போக்கு சிங்கள மக்களுக்கே எதிராக வரும். அப்போது சிங்கள மக்களும் இந்த அரசின் பாசிசப் போக்கை உணரக் கூடும். சிங்கள மக்கள் மத்தியில் தமிழர் பிரச்சினையைப் பேசினாலே அவர்களைச் சிங்களப் புலி என அவதூறு செய்யும் வழக்கம் இருந்தாலும், ஒரு சிலர் அப்படி வேலை செய்கின்றனர். அதனால் சிறையும் சென்றிருக்கின்றனர். தற்போது தமிழ் இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்படும் காட்சி கூட சிங்களப் பத்திரிகையாளரால் தான் வெளியிடப்பட்டது. இத்தகைய சக்திகளை நாம் அங்கீகரிக்க வேண்டும். ஆனால் தமிழ் தேசிய இனவாதத் தலைவர்கள் இப்படிப்பட்ட சக்திகளைக் கண்டு கொள்வது கிடையாது.

புதியஜனநாயகம்: சிங்கள மக்கள் ஈழத் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலையை ஏற்றுக் கொண்டதற்கு சிங்களப் பேரினவாத மனோபாவத்தைக் காரணமாகக் கூறலாம். ஆனால் சிங்கள மக்கள், சிங்கள இராணுவத்தால் பத்தாயிரக்கணக்கில் சிங்கள இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டதைக் கூட எதிர்த்துக் கலகத்தில் இறங்கவில்லையே ஏன்?

சிவசேகரம்: இந்த இனப்படுகொலையைச் சிங்கள மக்கள் ஏற்றுக்கொண்டார்களா என்பதிலே எனக்கு ஐயம் இருக்கிறது. ஏனென்றால் பெரும்பாலான சிங்கள மக்களுக்கு இப்படி ஒரு இனப்படுகொலை நடந்ததே தெரியாது. இறுதி நாளில் 20000 பேர் கொல்லப்பட்டதை மறுத்துத் தான் சிங்கள ஊடகங்கள் எழுதின. ஆனால் இந்த அரசாங்கம் சிங்களப் பேரினவாதப் பிரச்சாரத்தைச் செய்வதை சிங்கள மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கிறது. முள்கம்பி முகாமில் தமிழ் மக்களை வைத்திருப்பதற்கு கண்ணிவெடி தான் காரணம் என்ற அரசின் பிரச்சாரத்தைக் கூட அவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். இதனாலேயே சிங்கள மக்கள் தமிழ் மக்களை வெறுக்கிறார்கள் என்று சொல்ல இயலாது என்று நினைக்கிறேன். அப்படி இருந்தால் கொழும்பில் இரு பிரிவு மக்களும் சேர்ந்து வாழ முடியாது. அந்த நிலை வரவில்லை.

ஆனால் சிங்கள மக்கள் பேரினப் பெருமிதத்தில் இருக்கிறார்கள் என்னும் அதேசமயம் அது இனவெறுப்பாக மாறவில்லை. புலிகள் சிங்கள மக்கள் மீது கட்டவிழ்த்து விட்ட பயங்கரவாதம் கூட இந்தப் பெருமித உணர்வுக்குக் காரணமாக இருக்கலாம். சிங்கள மக்கள் புலிகளால் கொல்லப்பட்ட போது எந்தத் தமிழினத் தலைவரும் அதனைக் கண்டிக்கவில்லை என்பதையும் இங்கே பார்க்க வேண்டும். தமிழ் மக்கள் மீதான தாக்குதலைச் சிங்கள மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் சக்திகள் சிறுபான்மை என்றாலும் அவை இருக்கத் தான் செய்கின்றன. இவர்களைச் சிங்களப் புலி என அரசு கைது செய்வதும் நடக்கிறது.

சிங்கள இளைஞர்கள் கொல்லப்பட்டது குறித்துப் பார்த்தோமானால், அது மக்களிடையே ஒரு எதிர்ப்பைத் தோற்றுவிக்காததற்குக் காரணம் ஜே.வி.பியின் பயங்கரவாதம். அரசாங்கம் ஜே.வி.பியின் பயங்கரவாதத்தை முறியடித்து விட்டது என்றே மக்கள் பார்த்தார்கள். அந்தக்காலத்தில் ஜே.வி.பி. மிக மோசமாக நடந்து கொண்டது. அப்போது ஒரு இலட்சம் பேர் கொல்லப்பட்டார்கள் என்றால் அதில் 25 வீதம் ஜே.வி.பி செய்த கொலைகளாகும். ஜனநாயகவாதிகள். இடதுசாரிகள், இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் தமிழர்களின் உரிமைகளை ஆதரித்தவர்கள் போன்றோரைத் தான் அரசியல் எதிரிகள் என்று ஜே.வி.பி. கொலை செய்தது. கொல்லப்பட்டவர்கள் எல்லாம் அரசு ஆதரவாளர்கள் அல்ல. அரசு நடத்திய கொலைகள் முடிந்த பிறகு இந்தப் பிரச்சினை மனித உரிமை மீறல் என்று மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்பட்டது. அதில் இப்போதைய அதிபர் ராஜபக்சவும் உண்டு.

1994 இல் யு.என்.பி. அரசு கவிழ்ந்தததற்கு இந்தப் படுகொலைகள் ஒரு காரணமாகும். 1971 ஜே.வி.பி கலவரத்தை அரசு ஒடுக்கிய போது குத்துமதிப்பாக பத்தாயிரம் பேர் படுகொலை செய்யப்பட்டார்கள். அதைக்கண்டித்து கவிதை, கதை, நாடகம் என இலக்கியத்தில் பரவலாக வெளிப்பட்டது. அந்த நிலை 90களில் இல்லை. அதற்கு அரசியல் கருத்துக்களைப் பேச முடியாது என்ற அச்சநிலையே காரணம். அதையும் மீறி ஒரு சிங்களப் பாடகி அரச கொலைகளைக் கண்டித்துப் பாடியிருக்கிறார்.

புதியஜனநாயகம்: இந்தியாவில் காஷ்மீர், மணிப்பூர், அசாம், நாகலாந்து ஆகிய மாநிலங்களில் விடுதலைப் போராட்டங்கள் பல்வேறு குழுக்களால் நடத்தப்பட்டு வருகின்றன. அத்தேசிய இனமக்கள் ஈழ மக்களின் போராட்டத்தில் இருந்து கற்றுக் கொள்ளக் கூடிய படிப்பினைகள் பற்றிக்; கூற முடியுமா?

சிவசேகரம்: அவர்கள் எல்லோரும் பிரிவினைக்காகத் தான் போராடுகின்றனர் என்று என்னால் சொல்ல இயலாது. ஏதோவொரு சுயநிர்ணய உரிமைக்காகத் தான் போராடுகிறார்கள். நாகலாந்தில் கூட பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய சுயாட்சியை வழங்கினால் இந்தப்பிரிவினை விசயம் ஒரு காலத்தில் இல்லாமல் கூடப் போகலாம். நாகலாந்து பிரிய வேண்டுமா இல்லையா என்பது அம்மக்கள் எடுக்க வேண்டிய முடிவு. பிரிவினைக்காகப் போராடுகிறார்கள் என்பதல்ல பிரச்சினை. அது மக்கள் போராட்டமாக இருக்கிறதா என்பதே முக்கியமானது. மாறாக அது ஆயுதம் ஏந்திய சில குழுக்களின் போராட்டமாக மட்டும் இருந்தால், புலிகளுக்கு நடந்தது தான் அவர்களுக்கும் நடக்கும்.

புதியஜனநாயகம்: நாட்டினை மேலும் தீவிரமாக மறுகாலனியாக்குவதற்கும், அரசினைப் பாசிச மயமாக்குவதற்கும் சிங்கள ஆளும் வர்க்கமும், சிங்களப் பேரினவாத ஓட்டுக்கட்சிகளும் இந்தப் போரையும், தமிழினப்படுகொலைகளையும் எப்படிப் பயன்படுத்தி வருகின்றன?

சிவசேகரம்: இந்தப் போருக்குப் பிறகு இலங்கை அரசுக்கும் ஐரோப்பிய மற்றும் அமெரிக்காவிற்குமிடையே சில முரண்பாடுகள் உள்ளன போலத் தோன்றும். ஏனென்றால் மேலை நாடுகள் சடங்குக்காக மனித உரிமை, தமிழ் மக்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்று பேசுகிறார்கள். இந்த விமர்சனங்களை ஏற்றுக் கொண்டால் சிங்களப் பேரினவாத உணர்வு புண்படுமென்பதால் அரசாங்க அதிகாரிகள் மிகவும் திமிரோடு ஐநா சபையோ அமெரிக்காவோ இதில் தலையிடுவதற்கு உரிமை இல்லை என்றெல்லாம் பேசுகிறார்கள். வெளித் தோற்றத்தில் முரண்பாடுகள் இருப்பது போலத் தோன்றினாலும் நடைமுறையில் 180 கோடி டொலர் கடன் கேட்கப்பட்டதற்கு 250 கோடி டொலர் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கிடைக்கிறது. இந்தப் போர் நாட்டின் பொருளாதாரத்தைப் பெரிதும் பாதித்துள்ள நிலையில் ஏகாதிபத்தியங்கள் இலங்கையை மேலும் தம் பிடிக்குள் கொண்டு வரும் எல்லா நடவடிக்கைகளையும் செய்து வருகின்றன. அதேநேரம் இலங்கை அரசு புலிகளை அடக்கிவிட்டதோடு நின்று விடாமல் இராணுவத்தை மேலும் பலப்படுத்தப் போகின்றது. புலிகள் இல்லாத நிலையில் இந்த இராணுவம் யாரை எதிர்த்துப் போரிடப் போகிறது? நாளை பாசிச அரசுக்கு எதிராக வரும் எழுச்சியை அடக்கவே இந்த இராணுவம் பயன்படப் போகிறது. இந்த அரசு அரசு எந்திரத்தை மேலும் பலப்படுத்தி வருகிறது. அது ஏகாதிபத்திய நலன்களுக்காகவும் பயன்படப் போகிறது.

புதியஜனநாயகம்: வடக்கில் வசந்தம் கிழக்கின் விடியல் என்ற பெயரில் ராஜபக்ச அரசால் முன்வைக்கப்படும் திட்டங்கள் எந்தவகையில் ஈழத் தமிழரின் நலன்களுக்கு உரிமைகளுக்கு எதிராக உள்ளன?

சிவசேகரம்: எல்லா அரசியற் கட்சிகளையும் சிதைத்து அரசாங்கக் கூட்டணியின் கீழ் கொண்டு வருவதற்காகவே இவை உதவுகின்றன. கிழக்கில் பிள்ளையானும் வடக்கில் டக்ளஸும் அரசாங்கச் சின்னத்தின் கீழ் போட்டியிட்டு வெல்கிறார்கள். இதன் மூலம் இனம், மதம் முதலானவற்றின் பெயரில் எந்தக்கட்சியும் இருப்பதை ஒழிக்கவே இந்த அரசு முயல்கிறது. தமிழ் மக்கள், முஸ்லிம் மக்கள், மலையக மக்கள் தங்களது நலனுக்காகக் கட்சி நடத்த முடியாது என்பதே அரசின் நோக்கமாக இருக்கிறது. வடக்கின் வசந்தமோ கிழக்கின் விடியலோ மக்களுக்கு எந்த நலனையும் கொண்டு வரப் போவதில்லை. இவை அரசு எந்திரத்தைப் பலப்படுத்துவதற்குத் தானே ஒழிய மக்களுக்கானதல்ல.

அரச ஆதரவாளர்கள் கட்டமைக்கும் புதிய பிம்பம் : சபா நாவலன்

A-camp-Tamil-womanஹிட்லரின் வீழ்ச்சிக்குச் சற்றுப் பின்னதாக உலகம் முழுவதும் நாஸி இராணுவத்துடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ இணைந்து செயற்பட்ட பலருக்குத் தண்டனை வழங்கப்பட்டது. ஜேர்மனியில் நூரம்பேர்க்கிலும், பிரான்சில் பியேர் லாவாலிலும் என்று ஒவ்வொரு நாடுகளிலும் குற்றவியல் நீதிமன்றங்கள் மனிதத்திற்கு எதிரான குற்றங்களுக்காகத் தண்டனை வழங்கின.

இந்த விசாரணைகளிலிருந்தெல்லாம் தப்பித்துக்கொண்ட சிறப்புரிமை கொண்ட மேல் மத்தியதர வர்க்கத்தின் பிரதிநிதிகளில் பலர் ஐம்பது நீண்ட ஆண்டுகளின் பின்னரும் கைது செய்யப்பட்டுத் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

நாசிப் படைகளின் மனிதப் படுகொலைகளோடும், ஆக்கிரமிப்போடும் தம்மை இணைத்துச் செயற்பட்ட பலர் முன்வைத்த நியாயங்களிலெல்லாம் ஒரு பொதுத் தன்மை காணப்பட்டது. இவர்களில் பெரும்பான்மையானோர் ஹிட்லரோடு இணைந்து மட்டும்தான் மக்களுக்குச் சேவையாற்று சூழல் அமைந்திருந்ததாகவும் மக்கள் சேவை என்பதன் அடிப்படையிலேயே நாசிப்படைகளுடன் இணைந்து செயற்பட்டதாகவும் தம்மை நியாயப்படுத்திக் கொள்ள முனைந்தனர்.

அண்மைய வரலாற்றில் மொரிஸ் பப்போன் என்ற பிரஞ்சுக் காரர் நாசிக் காலப் போர்க்குற்றங்களுக்காகத் சிறைத் தண்டனை பெற்றவர்களூள் குறிப்பிடத் தக்கவர்.

1970 இலிருந்து 1980 வரையான காலப்பகுதியில், அமச்சர், மேயர், பாராளுமன்ற உறுப்பினர் என்று பல அரச உயர் பதவிகளை வகித்திருக்கிறார் மொரிஸ் பப்போன். 1981 ஆம் ஆண்டு இறுதிப்பகுதிகளில், பிரஞ் பத்திரிகையொன்று மொரிஸ் பப்போன் இற்கும் யூதர்களின் சித்திரவதை முகாம்களிற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக செய்தி தெரிவிக்க இவர் குறித்த நீதிமன்ற விசாரணை ஆரம்பமாகிறது.

நாஸிப் படைகளுடனான பப்போனின் தொடர்புகள் நிருபணமான mauricepaponபின்னர், அவர் அதற்கு வழங்கியிருந்த விளக்கவுரையே இங்கு முக்கியத்துவம் பெறுகிறது. “ஏனைய பிரஞ்சு அதிகாரிகள் எல்லம் மௌனமாயிருந்த போது என்னைப் போல ஒரு சிலர் மட்டும் தான் அடைத்து வைக்கப்பட யூதர்களுக்கு உதவிபுரிய முன்வந்தோம். வெளியே இருந்த படி எந்த உதவிகளையும் வழங்க முடியாத நிலையில் நாஸிப் படைகளின் நிர்வாக அமைப்புகளுடன் இணைந்து, தடுத்து வைக்கப்பட்டோரிற்கு தேவையான உணவு, இருப்பிட வசதிகள், குடிநீர் வசதிகள் போன்றவற்றை உறுதி செய்வதே எனது நோக்கமாக இருந்தது.” என்றார். இறுதியாக 1998 இல் மொரிஸ் பப்போன் சிறைப்பிடிக்கப்பட்டார்.

வரலாறின் காலச் சுழற்சி பப்போனோடு நின்று போகவில்லை. எங்கெல்லாம், மானுட விரோதிகளும், சமூக விரோதிகளும் மக்களின் மரணங்களின் மீது தமது ஆதிக்கத்தை நிறுவிக்கொள்ள எத்தனிக்கிறார்களோ அங்கெல்லாம்,அவர்களின் பின்னால் ஆயிரம் மொரிஸ் பப்போன்கள் அதே கருத்து வடிவங்களோடு உருவாகிவிடுகிறார்கள்.

பப்போனின் நியாயப்படுத்தலில் பின்வரும் புள்ளிகள் பிரதானமானவை.

 1. ஏனையோர் செயற்பாடற்றிருந்தனர்.

 2. நான் அதிகாரத்திற்கு அதாவது நாஸிகளுக்கு ஆதரவாகச் செயற்பட்டேன்.

3. நாஸிகளிற்கு ஆதரவாகச் செயற்பட்டதன் காரணம் யூதர்களுக்கு உதவி புரிவதே.

முதல் இரண்டு மூன்று என்ற தொடர்ச்சியான நியாயப்படுத்தல்கள் வரலாற்றின் ஒவ்வொரு சிக்கலான காலப்பகுதியிலும் அதிகாரம் சார்ந்த சக்திகளால் முன்வைக்கப்ப்டுகின்ற தர்க்கீக நியாயப்படுத்தலாகும்.

 திட்டமிட்ட அதிகாரத்தின் சார்பில் இயங்கும் தத்துவார்த்தத் தளத்தில் முன்வைக்கப்படுகின்ற இவ்வாறான கருதியலை ஒரு குறித்த மனித, நேயம் மிக்க பிரிவினரும் பின்பற்றுகின்றனர். காலவோட்டத்தில் இதன் வளர்ச்சியானது, சோவனிசம், பாசிசம் போன்ற சமூகவிரோதக் கருத்துக்களாக உருப் பெறுகின்றது. இன்னொரு வகையில் தன்னார்வ நிறுவனங்கள் கூட இதே தொடர் நியாயத்தின் அடிப்படையில் தான் உருவாக்கப்படுகின்றன.

முதலில் செயற்பாடற்றிருக்கும் மக்களின் அடையாளங்களை இனம் காணல், பின்னர் அதிகாரம் சார்ந்து அவர்களின் அடையாளம் குறித்த பிரச்சனைகளை அணுகுதல், இறுதியாக அந்த மக்கள் பிரிவினருக்கு வழங்கும் தற்காலிக உதவிகளூடாக பிரதான பிரச்சனைகளிலிருந்து திசைதிருப்புதல் என்ற ஒழுங்கு பொதுவாகவே பிரயோகிக்கப்படுகின்றது. புலிகளின் அழிவின் பின்னதாக, இலங்கை அரசு சார்ந்து இயங்குகின்ற புலம் பெயர் தமிழர்களால் உருவாக்கப்பட்ட தன்னார்வ அமைப்புக்களும், இந்திய அரசு சார்ந்து இயங்குகின்ற சில அமைப்புக்களும் இதே கருத்தியலையே முன்வைக்கின்றன.

புலம் பெயர் நாடுகளிலிருந்து இருபத்தியொரு நபர்களைக் கொண்ட குழுவொன்று இலங்கை அரசின் உயர்மட்ட அரசியல் வாதிகளை சந்தித்துத் திரும்பிய நாளிலிருந்து முதல் தடவையாக தமிழர்கள் மத்தியிலிருந்து வெளிப்படையாகவே அரச சார் செயற்பாடுகள் “உதவி” என்ற தலையங்கத்தில் ஆரம்பிக்கிறது.

இந்த நூற்றாண்டின் மனித குலமே வெட்கித் தலைகுனியும் மனிதப்படுகொலையை நிகழ்த்தியிருக்கும் இலங்கை – இந்திய அரசுகளை உலகமே பார்த்துக்கொண்டிருந்த கேவலத்தைக் கண்டிருக்கிறோம். கொலையின் கோரத்திலிருந்து மீண்டவர்களை ஒரு சிறிய நிலப்பரப்பில் அடைத்து வைத்திருப்பதை உலகமே “அங்கீகரிக்கும்” அருவருப்பையும் பார்த்துக்கொண்டிருந்திருக்கிறோம்.

இதே அங்கீகாரத்தைத் தமிழ் பேசும் புலம் பெயர்ந்தவர்களிடமும், முன்னர் தேசிய அரசியலில் முனைப்புடன் வினையாற்றியவர்களிடமிருந்தும், இடது சாரிகளிடமிருந்தும் இந்த அளவில் யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை.

மொரிஸ் பப்போனின் அதே நிகழ்சித் திட்டம் தான் இவர்கள் முன்வைப்பது கூட! திட்டமிட்ட இனப்படுகொலையையும் இனச்சுத்திகரிப்பையும் நிகழ்த்துகின்ற இலங்கை அரசிற்கு எதிராக, குறைந்த படசம் அதன் துணைப்படைகள் தவிர்ந்த அனைத்துத் தமிழ் பேசும் மக்களின் குரலும் ஒருங்கு சேர்ந்து ஒலிக்கும் என எதிர்பார்த்தவர்கள் பெருத்த ஏமாற்றத்திற்கு உள்ளானார்கள்.

புலியெதிர்ப்பு, ஜனநாயக மீட்பு அதன் தொடர்ச்சியான அபிவிருத்தி, அகதிகளுக்கான உதவி என்று ஒரு திட்டமிட்ட வலைப்பின்னலே உருவாகிவிட்டது. இவற்றுள், இந்திய இலங்கை அரசுகளின் நேரடி, மறைமுகக் கட்டுப்பாடுகள் தவிர, இன்னும் அவற்றின் தத்துவார்த்தப் பகுதிகளும் இணைந்து கொண்டுள்ளன. இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பின்நவீனத்துவ, தலித்திய வாதிகள் போன்றோர் தவிர பல முன்னாள் புலி ஆதரவாளர்கள் கூட இந்த வலைப்பின்னலோடு தம்மையும் இணைத்துக் கொண்டுள்ளனர்.

வேறுபட்ட அரசியற் தளங்களில் இயங்கு கின்ற இலங்கை இந்திய அரசுசார் இந்தக் குழுக்கள் இரண்டு பிரதான பிரிவுகளாக இயங்குகின்றன.

 1. நேரடியாகவே இலங்கை அரசை ஆதரிக்கும் குழுவினர்.

 2. அரசு தவறிழைத்தாலும் அதனைச் சார்ந்து நின்றே தடுப்பு முகாம்களில் வாழும் மக்களுக்கு உதவ முடியும் என்கிற பிரிவினர்.

இந்த இரண்டாம் வகையினர் தான் மொரிஸ் பப்போன் முன்வைக்கும் பாசிச ஆதரவுத் தளத்தில் இயங்குகின்ற ஆபத்தான பிரிவினர். பல்வேறு காரணங்களின் பால் சர்வதேச தன்னார்வ பல இலங்கைத் தடுப்பு முகாம்களுக்கு உதவி புரியக் காத்திருக்கின்றன.

மேற்கு நாடுகள் சார்ந்த நிதி வழங்கல் மையங்களைச் சார்ந்து செயற்படும் இவ்வாறான நிறுவனமயப்பட்ட அமைப்புக்களான, Save The Children, Action Aid, Redcross போன்ற பல அமைப்புக்களை இலங்கை அரசு தடுப்பு முகாம்களிலிருந்து தடை செய்து வைத்திருக்கிறது. MSF என்ற பிரஞ்சு தன்னார்வ நிறுவனம் முகாம்களுக்கு வெளியில் நிலை கொண்டு மருத்துவ வசதிகளை மேற்கொள்கிறது. சேவா லங்கா என்ற சிங்கள மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட தன்னார்வ அமைப்புக்கூட அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளது. ஆக, இலங்கை அரசைப் பொறுத்த வரை தனது இனவழிப்பு அரசியலுக்குத் துணைபோகிற எந்த நிறுவனத்தையும் அங்கீகரிகத் தயாராகவே இருக்கின்றது.

தெற்காசியாவில் கடந்த பத்தாண்டுகளாக உருவாகியிருக்கின்ற பொருளாதாரச் சுரண்டலும் இதன் பின்புலத்தில் பெருகிவரும் வறிய மக்களின் தொகையும் உருவாக்கவல்ல எதிர்ப்பரசியலை உலகளாவிய வகையில் எதிர்கொள்ளும் ஒரு பகுதியே இலங்கையில் உருவாகும் எதிர்ப்பரசியலின் அனைத்துச் சாத்தியங்களையும் அழித்தொழித்தல் என்பதாகும்.

கடந்த மாதம் பாதுகாப்புப் படைகளுக்கு மத்தியில் உரையாற்றிய இந்திய அரசின் பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன், புலம் பெயர் நாடுகளிலிருந்து புலிகள் மறுபடி புத்துயிர் பெறலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புலிகளினதும் பிரபாகரனதும் புத்துயிர்ப்பு என்பது வெறுமனே மறுதலையான கற்பனையாக மாறிவிட்ட நிலையில், புதிய கருத்துக்களும், அமைப்புக்களும், அரசியல் இணைவுகளும் உருப்பொறுவதற்கான வாய்ப்புகள் குறித்தே இலங்கை இந்திய அரசுகள் துயர் கொள்கின்றன என்பது வெளித்தெரிய ஆரம்பித்துள்ளது. புலிகள் என்று அடையாளப்படுத்தி அழிப்பு நடத்துவதென்பது புதிய தந்திரோபயமே தவிர வேறில்லை.

திஸ்ஸநாயகமோ, லசந்தவோ, போதல ஜெயந்தவோ, பாக்கியசோதியோ புலிகளில்லை. புலம்பெயர் தேசங்களில் உருவாகும் தன்னார்வ அமைப்புக்கள், அவை சார்ந்த ஊடகங்கள், அனைத்தும் இங்கெல்லாம் குறைந்த பட்சம் தெற்காசிய எதிர்ப்பியக்கங்களின் உந்து சக்தியாக அமையவல்ல, கருத்துக்களையும் குழுக்களையும் குறிவைக்க ஆரம்பித்துவிட்டன.

இனப்படுகொலையையும், இனச்சுத்திகரிப்பையும் அம்பலப்படுத்த முனையும் அனைத்து இடதுசாரிகளும், ஜனநாயக சக்திகளும், மனிதாபிமானிகளும் தடுப்பு முகாம்களின் நிலைமைகளை முன்னேற்ற அரசுடன் இணைந்து தொழிற்படாத துரோகிகளாகச் இவ்வமைப்புக்களால் சித்தரிக்கப்படுகின்றனர்.

எதிப்பரசியலின் புதிய பரிணமங்களையும், எதிர்ப்பியக்கங்களையும் குறித்துப் பேச முனைவோரையும், மக்கள் குறித்து அக்கறையற்றவற்றர்கள் என்ற பிம்பத்தைக் கட்டமைக்க முனைகின்றனர். புலிகள் மாற்று அரசியல் குறித்துச் சிந்திப்போரை ஒடுக்கியதன் விளைவு இன்று கால் மில்லியன் மக்கள் தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அரசு சார் பாசிசத்தை முன்நிறுத்தும் புலம் பெயர் புதிய புலிகள் தெற்காசியா முழுவதையும் அதிகாரத்தின் சிறைக்குள் அடைப்பதற்கு இன்று ஒத்திகை பார்க்கிறார்கள். சாராம்சத்தில் இவர்கள் கோருவதெல்லாம், நாங்கள் வன்னி மக்களுக்கு உதவுகிறோம் நீங்கள் எம்மைபற்றி விமர்சிக்காமல் இலங்கை அரசுடன் இணைந்து எம்மைப்போல் உதவி செய்யுங்கள் என்பது தான். இவர்கள் புலம் பெயர் நாடுகளிலிருந்து வன்னி மக்களுக்கு வீசியெறியும் எலும்புத் துண்டுகளுக்கெல்லாம் இலங்கை அரசு எதிர்பார்க்கும் விலையைப் பற்றிப் பேசுவதில்லை. இவர்கள் எங்காவது ஒரு மூலையில் இலங்கை அரசுடன் கைகோர்த்துக்கொண்டு உலாவருவதைப் பற்றி வன்னிமக்கள் கூடக் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை.

மக்கள் கேட்பதெல்லாம் அந்தச் சிறைகளிலிருந்து விடுதலை மட்டும்தான். முகாம்களிலிருந்து தப்பியவர்கள், இலங்கை அரச கெடுபிடிகளை மீறிச் சேகரிக்கப்பட்ட ஆவணங்கள், அரசு சாரா ஊடகங்கள் எல்லாமே மக்களின் உணர்வுகளையும் கோரிக்கைகளையும் பிரதிபலிக்கின்றன. இலங்கை அரசு சார்ந்த துணைப்படை ஊடகங்கள், அரசு சார் தொண்டு நிறுவனங்கள், தூதராலயச் செய்திகள் போன்றன மட்டுமே மக்கள் முகாம்களில் மகிழ்வுடன் உலாவருகிறார்கள் என்றும், அவர்களுக்கு விடுதலை எல்லாம் தேவையில்லை சாப்பாடுதான் தேவை என்று பிரச்சாரம் மேற்கொள்கிறார்கள்.

இவர்களுக்கெல்லம் திடீரென உதயமான “மக்கள்பற்றின்” உந்துதலில் வன்னிக்கு ஒடோடிச் சென்று உதவிபுரிவதை யாரும் மறுக்கவில்லை ஆனால் உதவி என்ற பெயரில், இதுவரை காலமும் செத்துப் போன ஆயியமாயிரம் மக்களின் இழப்புக்களையும், எரிந்து கொண்டிருக்கும் உணர்வுகளையும், சில்லறை உதவிகளுக்காக விலைபேசுவதையுமே நிராகரிக்கிறோம்.

அவர்கள் உதவி என்ற பெயரில் அரசின் பாரிய இன அழிப்பை நியாயப்படுத்துவதை மௌனிகளாய் நியாயப்படுத்துவதை மட்டுமல்ல, அரசை விமர்சிப்பவர்களையும், புதிய எதிர்ப்பரசியலை முன்னிறுத்துபவர்களைக் காட்டிக்கொடுப்பதையும் தான் நிராகரிக்கிறோம்.

அறிவியலில் கருத்தாக்கங்களுக்கு எதிராகவும் , புதிய விவாதத் தளங்களுக்கு எதிராகவும், எதிர்ப்பியக்கங்களிற்கு எதிராகவும் இவர்கள் தாக்கல் செய்யும் அதிகாரம் சார்ந்த குற்றப்பத்திரிகையைத் தான் நிராகரிக்கிறோம்.

பிரஞ்சுக்காரன் மொரிஸ் பப்போன் ஒரு உதாரணம் மட்டுமே, ஆயிரம் பப்போன்களை நேரடியாகப் பார்த்தவர்களின் தமிழ் சமூகத்தில் வாழ்பவர்கள் நாங்கள்.

மீனவர் படுகொலைகள் சில கசப்பான உண்மைகள் : டி.அருள் எழிலன்

fishermen_500

 

 

 
 இலங்கை கடற்படையால் கொல்லப்பட்டவர்கள்

கடந்த முப்பதாண்டுகளில் நானூறுக்கும் மேற்பட்ட மீனவர்கள்கொல்லப்பட்டிருப்பதாகவும், ஆயிரக்கணக்கான மீனவர்கள் காயமடைந்திருப்பதாகவும் பல நேரங்களில் பாம்பன் பகுதி கடலோர கிராமங்களுக்குள் சிங்களப் படைகளே தரையிரங்கி தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் ஏராளமான குற்றச்சாட்டுகள் இலங்கை கடற்படையினர் மீது சுமத்தப்படுகிறது. நீண்டகாலமாக தமிழகத்தின் மீனவர் பிரச்சனையைக் கண்டு கொள்ளாதவர்கள் இன்று தவிர்க்க முடியாமலோ, அல்லது தேவை கருதியோ இது குறித்து அவ்வப்போது தவணை முறையில் பேசுகிறார்கள்.

கடந்த முப்பதாண்டுகளாக இலங்கை தீவிற்குள் நடந்து வந்த ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்திருக்கிறது. இலங்கை அரசுப் படைகள் வன்னி மீதான போரை இரண்டரை ஆண்டுகாலம் நடத்தி துயரமான மக்கள் படுகொலையோடு போரை வெற்றிகரமாக முடித்திருக்கிறார்கள். போர் மனிதர்களை இடம்பெயரவும், ஊனமாக்கவும், காணாமல் போகவும், கடத்திச் செல்லவும், உயிரைப் பறிக்கவும் செய்கிறது என்பதற்கு ஈழ மக்கள் மட்டுமல்ல தமிழக கரையோர மீனவர்களும் ஒரு எடுத்துக்காட்டு. உள்நாட்டில் அல்ல அண்டை நாட்டில் நடக்கும் யுத்தம் கூட அதன் எல்லையை அண்டிய மக்களை எப்படி பாதிக்கிறது என்பதற்கு பாம்பன் பகுதி மீனவர்கள் கடந்த முப்பதாண்டுகளாக படும் துன்பமே சாட்சி. இப்போதோ ‘போர் முடிந்து விட்டது புலிகள் அழிக்கப்பட்டு விட்டார்கள். கடற்புலிகள் இல்லை’, என இலங்கை அரசு போரின் வெற்றியை கொண்டாடிக் கொண்டிருக்கிறது. ஆனால் இராமேஸ்வரம் மீனவர்கள் மீதான தாக்குதல் மட்டும் நின்றபாடில்லை.

இந்தப் போரின் துவக்கத்தில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து மீனவர்களை மரியா என்ற படகில் வந்த சிலர் சுட்டுக் கொன்றார்கள். அவர்களை விடுதலைப் புலிகள் என்றது இந்திய அரசு. எனக்கு அப்போது நேர்காணல் ஒன்றை வழங்கிய அப்போதைய புலிகளின் அரசியல் பிரிவு தலைவரும் குண்டு வீச்சில் கொல்லப்பட்டவருமான சுப. தமிழ்செல்வன் இதை மறுத்தார். ஆனாலும் போரின் நியாயங்களும் அது நமக்குள் ஏற்படுத்திய பாதிப்புகளாலும் நாம் சம்பவங்களை கடந்து சென்று விட்டோம். ஒரு வழியாக துயரமான முறையில் முள்ளிவாய்க்காலில் அது முடிவுக்கு வந்தது மே மாதத்தில். ஆனாம் அந்த மே மாதத்திற்குப் பிறகு மட்டும் தமிழக மீனவர்கள் இருபது தடவைக்கும் மேலாக இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டிருக்கிறார்கள். தினந்தோறும் மீனவர்கள் தாக்கப்படுவது வாடிக்கையான ஒன்றாக மாறிப் போய்விட்டது.

தங்கள் மீதான தாக்குதலை தட்டிக் கேட்காத, தங்களை பாதுகாக்கத் தவறிய மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து பாம்பன் பகுதியின் ஐந்து மாவட்ட மீனவர்கள் கடந்த 22 நாட்களாக வேலை நிறுத்தம் செய்தனர். தமிழக மீனவளத்துறை அதிகாரிகளின் உறுதிமொழியை அடுத்து அவர்கள் கடந்த (12-09-2009) அன்று சனிக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற அன்றே இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டனர். அவர்களின் படகுகள் மோசமான முறையில் சேதப்படுத்தப்பட்டு, வலைகள் அறுக்கப்பட்டு, மீன்கள் கொள்ளையடிக்கப்பட்டு, அவர்கள் கையாலாகதவர்களாய் கரை திரும்பினார்கள். அதே வாரத்தில் 21 மீனவர்களை பிடித்துச் சென்று விட்டது இலங்கை கடற்படை. இந்தக் கட்டுரை எழுதப்படுகிற இன்று (24-09-2009 வியாழக்கிழமை) அவர்கள் விடுதலையாவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆக போர் முடிந்தாலும் இந்தப் பிரச்சனை தீரப்போவதில்லை என்பதை இலங்கை கடற்படை நமக்கு உணர்த்தியிருக்கிறது. தமிழக மீனவர்கள் இவ்வாறு கைது செய்யப்படுவது போலவே இலங்கை மீனவர்களும் இப்போது தமிழக, ஆந்திர போலிசாரால் கைது செய்யப்படுகிறார்கள். இலங்கை மீனவர்கள் இப்போதும் நமது புழல் சிறையில் அடைபட்டிருக்கிறார்கள் என்பதெல்லாம் இந்த எல்லை தாண்டும் கடல் விவாகரம் என்பது இரு நாட்டு மீனவர்களையும் எந்த அளவுக்குப் பாதித்துள்ளது என்பதற்கு எடுத்துக்காட்டு.

இந்திய அரசின் அணுகுமுறை?

தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் தொடர்ந்து தாக்கப்படுவதற்கு தீர்வாக, சர்வதேச கடல் எல்லையைக் கடந்த தமிழக மீனவர்கள் 22 பேர் இந்தியக் கடற்டையால் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் மீன்பிடி அங்கீகாரம் இரத்து செய்யப்பட்டிருப்பதோடு, எல்லை தாண்டும் மீனவர்கள் இதை ஒரு எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற மறைமுக மிரட்டலையும் விடுத்திருக்கின்றன மத்திய மாநில அரசுகள். ஒவ்வொரு முறை மீனவர்கள் தாக்கப்படும் போதும் மத்திய அரசு தமிழக மீனவர்களை மிக மோசமான எல்லை தாண்டிய கள்ளத் தொழிலாளர்களாகவே சித்தரித்து வந்திருக்கிறது. ஒரு முறை கடற்படை அதிகாரி ஒருவர் எச்சரிக்கிற தொனியில் இப்படிச் சொன்னார், ”எல்லை தாண்டும் மீனவர்கள் தண்டிக்கப்படுவார்கள்’. தமிழகத் தலைவர் ஒருவர் கூட ‘அதிக பொருளுக்கு ஆசைப்படுகிற மீனவர்கள் இப்படி எல்லை தாண்டிச் சென்று விடுகிறார்கள்’ என்கிற தொனியில் சொன்னார். இப்போது நடந்திருந்க்கும் நிகழ்வுகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் பா.சிதம்பரத்திடம் கேட்டபோது, ‘மீனவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும்’ என்றார்.

மேலே சுட்டிக்காட்டியுள்ள இந்திய ஆளும் வர்க்க அதிகார பீடங்களின் குரல்களில் எங்காவது இலங்கை அரசை இது தொடர்பாக கண்டித்திருக்கிறார்களா? பாதிக்கப்படுகிற மீனவர்களை அதிக ஆசை கொண்டவர்களாகவும், எல்லை தாண்டும் கள்ளக் குடியேறிகளாகவும், நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துபவர்களாகவும் சித்தரிக்கும் இவர்கள், இந்த உயிர்வாழ்வு பிரச்சனையை ஒரு அடையாள அட்டைப் பிரச்சனையாகவோ, எல்லைப் பிரச்சனையாகவோதான் அணுகி வருகிறார்கள். ஆனால் இலங்கை மீனவர்களுக்கும் இந்திய மீனவர்களுக்கும் உயிர்வாழ்தலின் பொருளாதார நலனை தரித்திருக்கும் கச்சத்தீவை அண்டிய பகுதியே இவ்விதமான பதட்டத்தைத் தாங்கியிருப்பதன் மூலம். கச்சத்தீவு பற்றிய விவாதத்தை முன் வைப்பதும். இந்திய சாதீய சமூகங்களின் அரசியல் பிரதிநிதித்துவம் குறித்தும், திராவிட இயக்க அரசியலில் கோலோச்சும் சாதி ஆதிக்க அரசியல் சூழலில் அரசியல் அநாதைகளாக விடப்பட்டுள்ள இம்மக்களின் அரசியல் விடுதலை குறித்தும் பேசுவதுமே பொருத்தமான ஒன்றாக இருக்கும் என நினைக்கிறேன்.

கச்சத்தீவு ஆதி முதல் இன்று வரை

இலங்கையில் பிரிட்டீஷார் பெருந்தோட்ட பயிர்செய்கைக்கு வட தமிழகத்திலிருந்தும் தென் தமிழகத்திலிருந்தும் கூலி அடிமைகளை கொண்டு சென்ற 19, 20 நூற்றாண்டுகளிலேயே பாக் நீரிணையை அண்டிய கச்சத்தீவு இந்தியா வழியாக இலங்கைக்கு செல்லும் ஒரு பாதையாக இருந்து வந்துள்ளது. அதற்கு முன்னரும் வரலாற்றுக் காலம் தொட்டே இருந்து வந்துள்ளது. இலங்கையின் ஐக்கிய தேசியக் கட்சியை உருவாக்கிய பிரிட்டீஷார் அக்கட்சியிடம் ஆட்சியதிகாரத்தை ஒப்படைத்து திரும்பிய பின் குடிவரவு, குடியகல்வு சட்டக் கோவைகள் அமலுக்கு வந்த பின்னரும் கூட நீண்ட நெடுங்காலமாக சட்டங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பாதையாக பாக் நீரிணையும் கச்சத்தீவும் இருந்துள்ளது. கலவரக் காலங்களில் மக்கள் இடம்பெயர்ந்து தமிழகத்துக்கு வரவும், அரசியல் செல்வாக்குள்ள கடத்தல்காரர்கள் பயன்படுத்தும் வழியாகவும் இது இருந்து வந்துள்ளது. 1983 ஜூலைக் கலவரங்களைத் தொடர்ந்து ஈழப் போராளிகள் இந்திய அரசின் ஆதரவைப் பெற்று இந்தியாவுக்கு வரவும், அகதிகள் தமிழகத்துக்கு வரவும், இங்குள்ள வியாபாரிகள் பண்டமாற்று வணிகத்திற்காக சென்றும் வந்துள்ளனர். பொதுவாக இலங்கை மேட்டுக் குடி சமூகங்கள் இவர்களை கள்ளத்தோணிகள் என்று அழைக்கிறார்கள்
kumuthini_350இக்காலத்தில் வேகம் பெற்ற ஈழத் தமிழ் மக்களின் தேசிய இன விடுதலைப் போராட்டமும் அது தமிழகத்து மக்கள் மத்தியில் பெற்றிருந்த ஆதரவும், இந்திய மத்திய அரசு அதற்கு ஆதரவு அளித்த நிலையில் ஈழ கப்பல்

குமுதினி படகுத்துறை

போக்குவரத்துக்கழகம் என்கிற அங்கீகாரமில்லாத ஒரு சேவையைக் கூட அங்குள்ளவர்கள் நடத்தியதாகத் தெரிகிறது. போராளிகளை பயிற்சிக்கு அழைத்து வருவது, பயிற்சி முடிந்தவர்களை கொண்டு அங்கு விடுவது என்பது உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக போராளிகளுக்கு இந்த பாக் நீரிணை பயன்பட இலங்கையின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் தரும் ஒரு வலையமாக கச்சத்தீவும் அதைத் அண்டிய பாக்நீரிணையும் இருப்பதாகக் கருதிய இலங்கை அரசு, 1985 ஆம் ஆண்டு இப்பகுதியில் மீன் பிடிக்கவோ, அங்கீகாரமில்லாமல் நடமாடவோ தடை விதித்ததோடு தடை செய்யப்பட்ட ஒரு பகுதியாகவே கச்சத்தீவையும் அதன் அண்டைப் பகுதியையும் இன்று வரை நடத்தி வருகிறது.

மனிதர்கள் வாழாத – தொழில் பயன்பாட்டிற்கு மட்டும் பயன்படுத்தும் தீவுகளாக கச்சத்தீவு மட்டும் இல்லை. பாலைத்தீவு, கக்கிரத்தீவு என இன்னும் இரண்டு தீவுகள் கூட யாழ்குடா நாட்டில் இருக்கிறது. கேந்திர முக்கியத்துவம் இருந்தாலும் முழுக்க முழுக்க இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால் இத்தீவுகளை இலங்கை மீனவர்கள் மட்டுமே பயன்படுத்தி வருகிறார்கள். இவ்விதமாய் மனிதர்கள் வாழ்ந்தும், வாழாமலுமாய் 11 தீவுகள் யாழ்குடா நாட்டை அண்டிய பகுதியில் உள்ளதாம். ஆனால் இந்திய தமிழக மீனவர்களுக்கோ உபயோகப்படும்படியாய் இருப்பது கச்சத்தீவு மட்டும்தான். கச்சத்தீவு என்னும் மனிதர் வசிப்பிடமல்லாத அப்பிரதேசத்தை தமிழக மீனவர்கள் வலைகளை உலர்த்திக் கொள்ளவும், மீன்களை வெட்டி உப்புக் கண்டமிட்டு கருவாடாக்கி கொண்டு வருவதற்கும், தற்காலிக இளைப்பாறுதலுக்கும், சங்கு, கடலட்டை போன்றவற்றை பிடிக்கும் ஒரு நிலமாகவும் தற்காலத்தில் பயன்படுத்தி வருகிறார்கள். முன்னர் கச்சத்தீவு மேய்ச்சல் நிலமாகவும், யுத்தக் காலங்களில் இராணுவ வீரர்களுக்கான பயிற்சி மையமாகவும் கூட இருந்ததுண்டு. இரண்டாம் உலகப் போரின் போது கச்சத்தீவில் நேசப் படைகள் பீரங்கித் தளம் ஒன்றை அமைத்திருந்ததாகவும் தகவல்கள் சொல்கின்றன. மீன்களின் இனப்பெருக்கத்திற்கு பெரிதும் பயன்படும் பவளப்பாறைகள் நிறைந்த இப்பிராந்தியத்தின் கடல் சூழல் மிக ஆரோக்கியமான ஒன்றாக நிலவுவதாலும் அதிக விலை கிடைக்கும் இறால் கணவாய் போன்ற மீன்வகைகள் மிக அதிக அளவில் கிடைப்பதாலும் மீனவர்களின் பொருளாதாரத் தேடலுக்கும் அவர்களின் மேம்பாட்டிற்கும் இப்பகுதி மிக முக்கிய தவிர்க்க முடியாத மீன் பிடி வலையமாக இருந்து வருகிறது.

தமிழகத்தின் இராமநாதபுரம், நாகை, புதுக்கோட்டை, தஞ்சை, உள்ளிட்ட ஐந்து மாவட்ட மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சனையாக மாறிவிட்ட கச்சத்தீவு தொழில் ரீதியாக மட்டுமல்லாமல் பண்பாட்டு ரீதியாகவும் ஈழ, இலங்கை, இந்திய மீனவர்களை வரலாற்று ரீதியாகவும் பிணைத்திருக்கிறது. கச்சத்தீவில் 1913 ஆம் ஆண்டு புனித அந்தோணியாரின் ஆலயம் ஒன்று நிறுவப்பட்டது. பொதுவாக கடற்கரையோர சமூகங்களிடம் பனிமய மாதா, ஜெபமாலை மாதா, அலங்கார மாதா, அற்புத மாதா என பெண் தெய்வ வழிபாடு மிகவும் பிரசித்தி பெற்றது போல புனித அந்தோணியார் வழிபாடும் பிரசித்தி பெற்றதுதான். கிறிஸ்தவத்தின் ஏனைய புனிதர்களை விட அந்தோணியார் மீனவர்களிடையே அதிக செல்வாக்கோடு விளங்குகிறார். பாஸ்கா பண்டிகைக் காலத்தில் வரும் கச்சத்தீவு அந்தோணியார் கோவில் திருவிழாவிற்கு இராமநாதபுரம் தங்கச்சி மடத்திலிருந்து பங்குப்பாதிரியாரும் அனைத்து மத மக்களும் வருடம்தோறும் சென்று சிறப்பு வழிபாடு செய்து திரும்புகின்றனர். இதற்கான உரிமை பாரம்பரியமாக தமிழக மீனவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் கச்சத்தீவிற்குள் இருக்கும் அந்தோணியார் கோவில் யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நெடுந்தீவு பங்கின் கிளைப்பங்காக இன்றும் இருக்கிறது. அந்த வகையில் அக்கோவிலுக்கு முழுப் பொறுப்பும் நெடுந்தீவு பங்கையே சாரும். கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது என்ற தர்க்கத்தின் போது இதை ஒரு சான்றாக இந்தியாவிடம் வைத்து வாதிட்டு வந்தது இலங்கை அரசு.

கச்சத்தீவு சர்ச்சைகள்

கச்சத்தீவிற்கு உரிமையாளர் யார் என்கிற சர்ச்சை 1921-லேயே இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் துவங்கியது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் பாக் நீரிணைக்கும், மன்னார் வளைகுடாவிற்கும் இடையில் ஒர் எல்லையை வகுப்பதற்கான மகாநாடு ஒன்று கொழும்பில் இந்தியா மற்றும் இலங்கை குடியேற்ற நாட்டு அரசுகளிடையே 1921 அக்டோபரில் நடைபெற்றது. இரு தரப்புமே ஒரு முடிவுக்கு வரமுடியாத காரணத்தால் 1921ல் செய்து கொண்ட ஒப்பந்தம் மிகவும் பலவீனமான ஒன்றாகவே கருதப்பட்டு வந்தது. இலங்கையும் இந்தியாவும் சுதந்திரமடைந்து 1974 ஆம் ஆண்டில் இன்னொரு உடன்படிக்கை செய்து கொள்ளும்வரை கச்சதீவு தொடர்பான விவகாரம் தொடர்ந்தது.

இரண்டாம் உலகப் போரின் போது இலங்கை அரசால் பீரங்கித் தளமாக கச்சத்தீவு பயன்படுத்தப்பட்ட போது, 1949இல் இந்தியா தனது கடற்படைப் பயிற்சியை இத்தீவில் மேற்கொள்ளப் போவதாக அறிவித்தது. இப்பயிற்சிக்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்த இலங்கை இவ்வாறான ஒரு கடிதத்தை இந்திய அரசிற்கு அனுப்பியது. ”கச்சத்தீவானது இலங்கைக்குரிய பகுதியென்றும் பயிற்சியை மேற்கொள்வதற்கு இந்தியா முன்கூட்டியே இலங்கையிடம் அனுமதி பெறவேண்டுமெனவும்” இலங்கை கூற அது முதன் முதலாக இந்திய நாடாளுமன்றத்தில் எதிரொலித்தது. பிரிட்டீஷ் இராணுவத்தின் வலுவான தளமாக இலங்கை மாற்றப்பட்டு அது இந்தியாவுக்கான அச்சுறுத்தலாக மாறியிருந்த காலத்தில் இந்தியா வலுவான முறையில் இலங்கைக்கு தன் எதிர்ப்பைத் தெரிவிக்கவில்லை. இந்தியாவின் முதல் பிரதமர் நேருவின் போக்கு என்பது தமிழக மக்களுக்கு பெரும் துரோகம் இழைப்பதாக இருந்தது.

கச்சத்தீவு தொடர்பான பிரச்சனை பாராளுமன்றத்தில் எழுந்த போது நேரு, இப்பிரச்சினை குறித்து போதிய தகவல்கள் என்னிடம் இல்லை என்றும் இது தொடர்பாக சென்னை அரசிடம் விபரம் கோரி இருப்பதாகவும் கூறினார். இந்த சின்னஞ்சிறிய தீவு குறித்து இரு அரசுகளும் தமக்கிடையில் மோதிக் கொள்ளப் போவதில்லை என்றும் குறிப்பாக எமது அண்டை நாடான இலங்கையுடன் இது குறித்து தேசிய கௌரவப் பிரச்சினை எதுவும் சம்பந்தப்படவில்லை எனவும் உதாசீனமான பதிலைத் தெரிவித்தார். தமிழக மீனவர் நலன் குறித்து அக்கறையற்ற இந்திய அரசின் தடித்தனமான அணுகுமுறையின் ஆரம்ப வார்த்தைகள் இப்படித்தான் துவங்கின. அன்றைய நிலையில் இந்தியா இந்து மகாசமுத்திரத்தின் இந்திய நலன்கள் குறித்த அக்கறைகளைக் கொண்டிருக்கவில்லை. இந்திராவின் ஆட்சிக்காலத்திலேயே அவர் இந்து மகாசமுத்திரத்தில் இந்தியாவுக்கு எதிரான சக்திகள் ஊடுறுவது குறித்து அக்கறை கொண்டிருந்ததெல்லாம் இப் படலத்தின் இன்னொரு கிளைக்கதை. நேரு காலத்தில் காட்டப்படாத அக்கறை இந்திரா காலத்தில் காட்டப்பட்டது. ஆனால் அது என்ன மாதிரியான அக்கறை?

இந்தியா கச்சத்தீவு தங்களுக்கானது என்பதற்கான ஆதாரமாக சில கடந்த கால வரலாறுகளை முன்வைத்தது. அதாவது சென்னை அரசின் கீழ் உள்ள மதுரை மாநிலத்தின் ஜமீன்தாராக இருந்தவர் ராஜா. 1947ம் ஆண்டு வரை கச்சதீவானது இவரது அதிகார எல்லைக்குட்பட்டிருந்தது. இக்காலத்தில் ஜமீன்தார் ஒழிப்புச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதும் கன்னியாகுமரியைச் சார்ந்த பத்துதீவுகள் (கச்சதீவு உள்ளிட்ட) இவரின் அதிகாரத்திலிருந்து எடுக்கப்பட்டு சென்னை அரசிற்கு உட்படுத்தப்பட்டது. கன்னியாகுமரித் தீவுகளில் இவரது ஆதிக்கம் படிந்திருந்தமையால் ராஜாவைச் “சேதுபதி” என்றும் “முனையின் பிரபு” என்றும் அழைத்தனர். 1822 முதல் ராஜா இத்தீவை முத்துக்குளிப்பவர் இறங்குதுறையாக பயன்படுத்தினார். கிழக்கிந்தியக் கம்பெனி இவ்வுரிமையை அவரிடமிருந்து பறித்துக்கொண்டது. ஆயினும் “ஈஸ்தி மீரர் சனாட்” என்ற உடன்படிக்கையின்படி கச்சதீவு ராஜாவின் இறைமைக்கு உட்பட்ட பிரதேசமாக பிரித்தானிய அரசு அங்கீகரித்தது. இறைமை உள்ளவர் என்ற வகையில் ராஜாவே பல நிர்வாகப் பணிகளை நிறைவேற்றி வந்தார்.

பல மன்னர்களின் கைகளுக்கு மாறி, செல்வந்த வணிகர்களின் கைகளுக்கும் மாறிய இத்தீவு கடைசியில் இராமநாதபுரம் ராஜாவின் ஆளுகையின் கீழ் இருந்ததாகவும். அவர் சென்னை மாகாணத்திற்கு கப்பம் கட்டி வந்ததாகவும் இந்தியா தெரிவித்தது. கச்சத்தீவு எப்போதும் இலங்கையின் ஒரு பகுதியாக இருந்ததில்லை என்பதை நிறுவ இந்தியா பல்வேறு வரி ஆவணங்களை முன் வைத்தது. இலங்கை அரசோ 15-ஆம் நூற்றாண்டின் வரைபடம் ஒன்றைக் காட்டி போர்த்துக்கீசியரின் ஆளுகையின் கீழ் கச்சத்தீவு இலங்கையின் ஒரு பகுதியாக இருந்ததாகவும், இராமநாதபுரம் மகாராஜா யாழ்ப்பாண ராஜ்ஜியத்துக்கு கப்பம் கட்டியதாகவும் சான்றாதாரங்களில்லாத ஒரு வாதத்தை முன்வைக்க வரைபடத்தின் அடிப்படையிலான இவ்வாதத்தை இந்தியா நிராகரித்தது. இழுபறியாக நீடித்த கால நீட்சிக்குப் பிறகு 1974 ஜனவரியில் ஸ்ரீமாவோ பண்டார நாயக்கா இந்தியாவுக்கு பயணம் ஒன்றை மேற்கொண்டபோது பாக் நீரிணை எல்லை தொடர்பாக அப்போதைய பிரதமர் இந்திராகாந்தியோடு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் கிட்டத்தட்ட 50 வருடங்கள் தீர்க்கப்படாத பிரச்சனையாக இருநாடுகளுக்கும் இருந்து வந்த கச்சத்தீவு விவகாரம் தணிந்துபோயிற்று அல்லது மக்கள் மன்றத்தில் கவனத்திற்கு வந்தது.

1974ன் இந்தியா இலங்கை கச்சத்தீவு ஓப்பந்தம்

இந்திய பிரதமர் இந்திராவுக்கும் இலங்கைப் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டார நாயக்காவிற்கும் இடையே 1974ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26ஆம் தியதி செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின்படி பாரம்பரிய நீர்ப்பரப்பு பகுதிகளில் ஒன்றான ஆதாம் பாலத்திலிருந்து பாக்கு நீரிணை வரையிலுமான பகுதிக்கு கடல் எல்லை நிர்ணயிக்கப்பட்டதோடு, இவ்வுடன்படிக்கையில் உள்ள 5வது, 6வது சரத்துகள் கச்சதீவு இலங்கைக்குரியதாக இருந்தபோதிலும் இந்திய மீனவர்கள் பாரம்பரியமாக அனுபவித்து வந்த உரிமைகளை அனுபவிக்க வழிசெய்கின்றது.

சரத்து – 5

“மேற்குறிப்பிட்டவற்றுக்குட்பட்டு இந்திய மீனவர்களும் யாத்திரிகர்களும் இதுவரை அனுபவித்தது போல கச்சதீவுக்குச் செல்லும் உரிமையைப் பெறுவர். தொடர்ந்தும் அவ்வுரிமையை அனுபவிப்பர். இந்த நோக்கங்களுக்காக பிரயாண ஆவணங்களோ விசாக்களோ இலங்கையிலிருந்து பெறவேண்டுமென தேவைப்படுத்தமுடியாது. இதற்கு அவசியமும் இல்லை. இலங்கை இதற்கு நிபந்தனையும் விதிக்க முடியாது”

சரத்து – 6

“இலங்கையினதும் இந்தியாவினதும் படகுகள் மற்றவரின் நீர்ப்பரப்பினதும் ஒவ்வொருவரினதும் நீர்ப்பரப்பினுள்ளும் பாரம்பரியமாக அனுபவித்து வந்த உரிமைகளைத் தொடர்ந்தும் அனுபவிப்பர்”
இந்த ஒப்பந்தம் இலங்கைத் தரப்பினருக்கு மகிழ்ச்சியை வழங்கிய அதே நேரத்தில் தமிழகத்தில் எதிர்ப்புகளைக் கிளறி விட்டது. இந்திய பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் இவ் ஒப்பந்தத்தை எதிர்த்து வெளிநடப்புச் செய்தனர். லோக் சபாவில் அறிக்கை கிழித்தெறியப்பட்டது. அதிமுகவின் அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் நாஞ்சில் மனோகரன் ”தேசப் பற்றற்றவர்களின் நாகரீகமற்ற செயல் இது” எனக் கண்டித்தார். திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. செழியனோ ”இவ்வுடன்படிக்கை புனிதமற்ற ஒன்று” என்றார். தமிழக சட்டமன்றத்திலும் சிறு சலசலப்புகளை ஏற்படுத்தியதே தவிர கச்சத்தீவின் மீதான உரிமை பறிபோனதை திராவிடக் கட்சிகள் மக்கள் போராட்டமாக மாற்றவில்லை. தேர்தல் கூட்டணி, மத்திய அரசின் தயவு, பதவி அரசியல் என்கிற பல்வேறு பலவீனங்கள் காரணமாக இப்பிரச்சனை மக்கள் மன்றத்தில் கொண்டு செல்லப்படவில்லை.

இந்து மகாசமுத்திரத்தில் ஏகாதிபத்திய நாடுகளின் அத்துமீறலும், இந்தியாவைச் சூழ நிலவும் பதட்டமும் இந்தியாவை இலங்கையோடு நட்பாக நடந்து கொள்ளத் தூண்டியது. இந்து மகாச்சமுத்திரம் வழியாக இந்தியாவுக்கு ஏற்படும் ஆபத்துக்களை நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம் என்றார் இந்திராகாந்தி. இந்தியாவின் பிராந்திய தேசிய நலன்களுக்கு உகந்தது என்று கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தார் அம்மையார். ஆனால் அன்று முதல் இன்று வரை தமிழக மீனவர்கள் கடலின் மீதான தங்களின் உரிமையை இழந்தது குறித்தோ உயிர்வாழ்வுக்கு பெரும் அச்சுறுத்தலான ஒன்றாக கச்சத்தீவும் அதை அண்டிய பகுதிகளும் மாறிவிட்டது குறித்தோ இந்திய அரசு அன்றும் கவலைப்படவில்லை இன்றும் கவலைப்படவில்லை. மாறாக ஒவ்வொரு முறை மீனவர்கள் தாக்கப்படும் போதும் கொல்லப்படும் போதும் அதை ஒரு எல்லை தாண்டும் பிரச்சனையாக மட்டுமே திரித்துக் கூறிவருகிறது. ஆனால் கச்சத்தீவு ஒப்பந்தத்தின் 6ம் ஷரத்து இரு நாட்டு மீனவர்களும் சுதந்திரமாக மீன்பிடிக்கவும் வந்து செல்லவும் உரிமை வழங்கியுள்ளது குறித்து இந்தியா மௌனம் சாதிக்கிறது.

இந்நிலையில்தான் 1983 ஜூலைக் கலவரங்களுக்குப் பிறகு ஆயுதப் போராட்டம் துளிர்த்த பின்னர் பயங்கரவாத தடைச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதோடு தேசிய கடல் பாதுகாப்பும் இலங்கை அரசால் முடுக்கி விடப்பட்டது. எண்பதுகளுக்குப் பிந்தைய இக்காலக்கட்டத்திலிருந்தே இரு நாட்டு மீனவர்களுக்கும் இது பெரும்பாதகமான ஒரு பகுதியாக மாறிவிட்டது. தமிழக மீனவர்களின் படகுகளைத் தாக்கியளிப்பது, மீன்களை கொள்ளையடிப்பது, நிர்வாணமாக்கி சித்திரவதை செய்வது, கடைசியில் சுட்டுக் கொல்வது என்று தமிழக மீனவர்கள் துன்புறுத்தப்பட்டார்கள். இலங்கை கடற்படையினரின் இதே கொடுஞ்செயலுக்கு ஈழத் தமிழ் மீனவர்களும் அப்பாவி பொது மக்களும் கூட தப்பியதில்லை. 1985 ஆம் ஆண்டு நெடுந்தீவின் மாவலித்துறையில் இருந்து குமுதினி படகில் புங்குடுத்தீவு நோக்கிச் சென்ற அப்பாவி ஈழத் தமிழர்கள் 33 பேரை இலங்கை கடற்படையினர் சுட்டும், வெட்டியும் படுகொலை செய்தார்கள். கடத்தல், காணாமல் போதல் என எல்லா வழமையான யுத்த தந்திர பாணிகளையும் இலங்கை கடற்படை ஈழத் தமிழர்களிடம் செய்தது போலவே தமிழக மீனவர்களிடையேயும் செய்து வந்தது. படிப்படியாக அதிகரித்துச் சென்ற இலங்கை கடற்படையின் அட்டகாசம் தொண்ணூறுகளில் அதிகரித்துச் சென்றது. ஆண்டொன்றுக்கு கிட்டத்தட்ட ஐம்பது தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டனர். 1993ல் மட்டும் தமிழக மீன்வளத்துறையின் குறிப்புப்படி 43 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதுவரை காணாமல் போனவர்கள், கொல்லப்பட்டவர்கள் என எண்ணிக்கை எடுத்தால் அது நானூறைத் தாண்டும் என்கிறார்கள் பாதிக்கப்பட்ட மீனவர்கள். நிரந்தரமான ஊனத்திற்கு உள்ளானவர்களின் எண்ணிக்கையோ இதைப் போல பல மடங்கு அதிகம்.

எனவே கச்சத்தீவு என்பது இரு நாட்டு மீனவர்களின் உயிர்வாழ்தலுக்கான பிரதேசம் என்பதோடு, அங்கு தமிழ், சிங்கள மீனவர்களின் சுதந்திரமான உழைப்புக்கான உத்திரவாதம் வழங்கப்பட வேண்டும்.

தமிழக மீனவர்கள் வஞ்சிக்கப்பட்ட கடற்கரைச் சமூகம்?

கடலும் கடல் சார் வாழ்வுமே மீனவர்களின் உயிர்வாழ்வில் தங்கி நிற்கிறது. உலகமயமாக்கலின் பின்விளைவுகளாய் மீனவப் பழங்குடிகள் இன்று கடற்புரங்களில் இருந்து பெயர்த்தெடுக்கப்பட்டு சமவெளிப் பகுதிகளுக்குள் வீசப்படுகிறார்கள். தண்ணீரில் இருந்து எடுத்து வீசப்படும் மீன் குஞ்சுகள் மூச்சு திணறிச் சாவது போல அவர்கள் வேர்களை இழந்து கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டிருக்கிறார்கள். சுற்றுலா வளர்ச்சியின் பெயராலும், கடற்கரை மேலாண்மைத் திட்டத்தின் பெயராலும், பன்னாட்டு ஏகபோக மீன்பிடி உரிமையாலும் அவர்களின் வாழ்வு நசுங்கி நாசமாகிறது. பழவேற்காட்டில் தொடங்கி கன்னியாகுமரியின் கேரள எல்லையான நீரோடி வரை சுமார் 1,062 கிலோ மீட்டர் நீளம் கொண்ட கிழக்கு கடற்கரையோரமாக வாழும் இம்மக்கள் வங்காள விரிகுடாவையும், அரபிக்கடலையும் அண்டி வாழ்கிறார்கள். புவியியல் ரீதியாக ஒரமாக ஒடுக்கப்பட்டு சமவெளிச் சமூகத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்ட இம்மக்கள் தமிழக அரசியலில் தீர்க்கமான சக்திகளாகவோ செல்வாக்கு செலுத்தும் சக்திகளாகவோ வளரவில்லை. வளர அனுமதிக்கப்பட்டதும் இல்லை.

பழவேற்காடு, சென்னை, மாமல்லபுரம், கடலூர், பாண்டிச்சேரி, சிதம்பரம், புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, இராமேஸ்வரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி என இந்துக் கதையாடலில் புனிதத் தல ஒளிவட்டங்கள் இவ்வூர்களுக்கு இருந்தாலும் கூட இந்த நகரங்களின் பூர்வகுடிகள் மீனவப் பழங்குடிகளே. சென்னையின் வயது 300 என்கிறார்கள். அப்படியானால் அதற்கு முன் சென்னைக்கு வரலாறே கிடையாதா? பெரும் கோடீஸ்வரப் பண்ணைகளின் சொர்க்கமாகிப் போன சென்னையின் வயது 300 என்றால் அதன் அர்த்தம் என்ன? உங்கள் பாட்டனும் முப்பாட்டனும் வருவதற்கு முன்னால் சென்னை ஒரு மீனவ கிராமம். காலமாற்றத்தில் அது செயற்கைத் துறைமுக நகரமாக மாறிப் போனதோடு. வலைகள் காய்வதாலும், மீன்கள் கருவாடாக மாறுவதாலும் மெரீனாவின் அழகு கெடுகிறது என்று மீனவர்களைச் சுட்டுக் கொன்ற வரலாறுகள் கூட உண்டு. எழில் மிகு சென்னையின் அழகிற்குப் பின்னால் இரத்தம் தோய்ந்த மீனவர்களின் அழுகுரல் இன்றும் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது.

சென்னையில் தொடங்கி கன்னியாகுமரி வரை வாழ்கிற மீனவ மக்களில் காரையார், பர்வதரஜகுலம், பட்டினத்தார், பரதவர், முக்குவர் என பாரம்பரியமாக கடலை நம்பி வாழ்கிற மீனவர்கள் அதிகமாக உள்ளனர். சென்னைக்கு வந்த பண்ணைகள் எப்படி மீனவர்களை அப்புறப்படுத்தி சென்னையை அழகுபடுத்திக் கொண்டார்களோ அது போலவே, இராமேஸ்வரமும் பாரம்பரிய மீனவர்கள் துரத்தப்பட்ட ஒரு தீவாக மாறிவிட்டது. அங்கே இன்று செல்வாக்கு செலுத்துகிறவர்கள் முக்குலத்தோர். இராமநாதஸ்வாமி கோவிலை முன்வைத்து இந்து மதவெறிக் கும்பல்களான ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி போன்ற இந்துப் பாசிஸ்டுகள் இவ்வூர்களில் செல்வாக்கு செலுத்துவதும் அவர்களுக்கு அடியாள் வேலை பார்ப்பதும் இதே முக்குலத்தோர்தான். அது போல பாரம்பரிய மீனவர்களின் செழிப்பான நகரமாக இருந்தது தூத்துக்குடி. இன்றைக்கு மீனவர்களை தூத்துக்குடியில் இருந்து பீஸ் பிடுங்கி வீசி எரிந்து விட்டு தூத்துக்குடி நகரமே தங்களுக்கானது என்று அதிகார பலத்தோடு அமர்ந்திருப்பது நாடார்கள். கன்னியாகுமரியிலும் இதே நிலைதான். கன்னியாகுமரியில் விவேகானந்தா கேந்திரம், பகவதியம்மன் கோவிலை மையமிட்டு எழுப்பப்பட்டிருக்கும் இந்துப் பாசிசம், திருச்செந்தூரில் முருகன் கோவிலை முன்வைத்து உள்ளது. இந்த அமைப்புகளின் அடியாட்களாக செயல்படுவதும் இதே பிற்படுத்தப்பட்ட ஆதிக்க சாதிகள்தான். இந்தப் பகுதிகளில் எல்லாம் பிற்படுத்தப்பட்ட ஆதிக்க சாதிகளை அண்டியே பாரம்பரிய மீனவர்கள் வாழ வேண்டிய நிலை. தவிரவும் தமிழகத்தில் கடற்கரையோர சட்டமன்ற, நாடாளுமன்றத் தொகுதிகளில் எந்த சாதி செல்வாக்கானதோ பெரும்பான்மையானதோ அந்தச் சாதிகளைச் சார்ந்தவர்களை மட்டுமே வேட்பாளர்களாக நிறுத்தி வருகின்றன

திராவிடக் கட்சிகளான திமுகவும் அதிமுகவும் ஏனைய தேசியக் கட்சிகளும். சமவெளிச் சமூகங்களின் உரிமைகளை பிரதிநிதித்துவப்படுத்துகிற இந்த வேட்பாளர்களுக்கு ஒவ்வொரு தேர்தலின் போதும் ஓட்டு மட்டும் போடும் வாக்குப் பிண்டங்களாக மட்டுமே மீனவ மக்கள் திராவிடக் கட்சிகளால் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறார்கள். அரசியலில் சமவெளிச் சமூகங்களின் பிரதிநிதிகளே மீனவ மக்களின் தலைவர்களாக இருக்கிறார்கள். இராமேஸ்வரம் போன்ற பகுதிகளில் விசைப்படகு உரிமையாளர்களாகவும் இவர்களே இருக்கிறார்கள். இன்னொரு பக்கம் தென் தமிழக கடலோரங்கள் மட்டுமல்லாது கடற்கரை சமூகங்களில் செல்வாக்கு செலுத்தும் கிறிஸ்தவம் கூட இம்மக்களை இன்று வரை காயடித்தே வந்திருக்கிறது. ஒவ்வொரு தேர்தலின்போதும் பங்குப் பாதிரியார்கள் தேவாலயங்களில் குறிப்பிட்ட ஒரு திராவிடக் கட்சியின் பெயரைச் சொல்லி பகிரங்கமாகவே தேவாலயப் பூஜையில் ஓட்டு கேட்கிறார்கள். இந்தியத் திருச்சபை இந்துத் தன்மையாக மாறி காலங்கள் ஓடி விட்டாலும் உள்ளூரில் மீனவ மக்களை நசுக்குவது பிற்படுத்தப்பட்ட ஆதிக்கசாதி பாதிரியார்களே. மறைமவாட்டங்களில் மீனவ மக்களின் பங்களிப்புக்கும் வாய்ப்புகளுக்கும் பிற்படுத்தப்பட்ட ஆதிக்க சாதி பாதிரிகள் எதிராக இருக்கிறார்கள். தற்காலத்தில் ஒடுக்கப்பட்ட மீனவப் பாதிரிகள் விழிப்புணர்வடைந்து மறைமாவட்ட தலைமைகளில் உரிமைகள் கோரும் போது அதைப் பொறுத்துக் கொள்ள முடியாத ஆதிக்க சாதி திருச்சபை கோட்டாறு மறைவாட்டத்தையே இரண்டாகப் பிரிக்கும் நிர்வாக முடிவை எடுத்திருக்கிறது. பாதிரியார்களுக்கே இதுதான் நிலை என்றால் உழைக்கும் மீனவ மக்களின் நிலையை நீங்கள் யோசித்துப் பாருங்கள்.

பெரும்பான்மை மக்கள் தொகை கொண்ட சாதிகளும், ஆதிக்க சாதிகளுமே கோலோச்சும் தேசிய இயக்க, திராவிட இயக்க அரசியல் அதிகாரத்தில் மீனவர்கள் அரசியல் சக்திகளாக பலம் பெறாமல் போனதும் சமவெளிச் சமூகங்களில் இருந்து கடற்கரை மக்களுக்குள் ஊடுருவியிருக்கும் சுரண்டல் பேர்வழிகள் மீனவர்களின் உரிமை குறித்துப் பேசுவதுமே இராமேஸ்வரம் மீனவர்கள் பிரச்சனை ஒரு பெரிய அளவிலான மீனவர் பிரச்சனையாக வெடிக்காமல் போனதற்குக் காரணம். மீனவர் உரிமை பற்றிப் பேசுகிற இவர்கள் உண்மையான மீனவ மக்களின் வலிகளையும் வேதனைகளையும் அறியாதவர்களாக இல்லை. மாறாக காலங்காலமாக கடலில் இருந்து கொண்டு வரும் மீனுக்கு கரையில் இருந்தபடியே விலை நிர்ணயம் செய்து அதன் மூலம் கொழுத்த லாபம் பார்த்தவர்கள் இவர்கள். இன்றுவரை உடலுழைப்பில் ஈடுபடாமல் கரையில் அமர்ந்தபடியே உழைப்பைச் சுரண்டி வரும் இவர்கள் மீனவர் உரிமை தொடர்பாக பேசுவது எவ்வளவு அபத்தம்! சேது சமுத்திரக் கால்வாய் திட்டம் வந்தபோது, ஒரு பக்கம் சேதுக் கால்வாய் திட்டம் வந்தால் தமிழன் மல்லாக்கப் படுத்துக் கிடந்தபடியே உண்டு வாழலாம் என்றும் தமிழகம் சிங்கப்பூராக மாறிவிடும் என்றும் பேசிய மரபார்ந்த தமிழ்க் குரல் ஒரு பக்கம் இன்னொரு பக்கம் ராமன் பாலத்தை இடித்தால் நாடே சுடுகாடாக மாறிவிடும் என்று கூச்சலிட்ட இந்துப் பாசிசக் குரல் மறுபக்கம். ஆனால் இந்த இரண்டுக்குமிடையே மீனவர் நோக்கில் அவர்களது மரபார்ந்த மீன் பிடித் தொழிலில் இந்த சேதுக்கால்வாய் திட்டம் ஏற்படுத்தப் போகும் நாசகார அழிவு குறித்தோ, அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் பவளப்பறைகள் குறித்தோ ஏன் எந்த சக்திகளும் பேசவில்லையோ, அது போலத்தான் தற்போதைய மீனவர் பிரச்சனையும்.

இலங்கை கடற்படையால் இதுவரை 400-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதே எண்ணிக்கையில் இன்னொரு ஆதிக்க சாதியில் கொலைகள் விழுந்திருக்கும் என்றால் அதை திராவிட மனமோ, தமிழ்த் தேசிய மனமோ பொறுத்துக் கொண்டிருக்குமா என்பது இங்கு ஆராயப்பட வேண்டியது.

பொதுவாக மீனவச் சமூகத்தின் வீழ்ச்சிக்கு அவர்களின் குடிப்பழக்கமே காரணம் என்று பொதுப்புத்தியில் பதிந்திருக்கிறது. மீனவர்கள் தொழில் சார் வாழ்வைக் கொண்டிருப்பதால் நிரந்தரமான குடிகாரர்களாக இயல்பாகவே வாழ முடியாது. அப்படி வாழ்ந்தால் அவர்கள் கடலில் இருந்து அந்நியப்பட நேரிடும். மாறாக கள்ளுண்ணும் பழக்கமென்பது மீனவக் குடிகளிடம் சங்ககாலம் தொடங்கியே இருந்து வந்துள்ளது. மீனவ மக்கள் குடியால் சீரழிந்தவர்கள் என்கிற சிந்தனையை உருவாக்கியதும் கிறிஸ்தவம்தான். பின்னர் சுரண்டல் நலனுக்காகவும் அதைப் பேணி வளர்த்தெடுப்பதற்காகவும் இச்சிந்தனை சமவெளி சமூக ஆதிக்க சக்திகளால் கட்டி எழுப்பப்பட்டது. இப்படிப் பேசுகிற ஒருவர் கூட குடி இல்லாமல் இருந்தால் மட்டும் மீனவன் வாழ்வு மேம்பட்டிருக்குமா என்றோ இலங்கை கடற்படை சுடாமல் விட்டிருப்பானா என்பதையோ கேட்கத் தவறுகின்றனர். நீடித்த சுரண்டல் அடக்குமுறைக்கு இத்தகைய வசைகளும் குற்றச்சாட்டுகளும் ஒடுக்கப்பட்ட சமூகங்கள் மீது சாத்தப்படுவது பொதுப்புத்திதான்.

கடற்கரை சமூகங்கள் மீதான இந்த ஒதுக்கல் முறைதான் தமிழகத்திலிருந்து மீனவர்களுக்கான அரசியல் அழுத்தம் ஒன்று உருவாகாமல் போகக் காரணமாக இருக்கிறது. சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளில் மீனவ மக்களுக்கான பிரதிநிதித்துவம் இல்லை. இட ஒதுக்கீடு போன்ற ஒடுக்கப்பட்ட மக்களுக்கான தற்காலிக ஏற்பாடுகளில் கூட இவர்கள் ஆதிக்க சாதி பிற்படுத்தப்பட்ட மக்களுடனேயே போட்டி போட வேண்டிய நிலையில் இருக்கின்றனர். நீண்டகாலமாக பாரம்பரிய மீனவர்கள் பழங்குடிகள் பட்டியலில் இணைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை இன்று வரை கண்டுகொள்ளப்படவில்லை. இத்தகைய புறச்சூழல்களைக் களைவதில் போதிய அக்கறை காட்டாததாலும் இடதுசாரி இயக்கங்கள் கூட இம்மக்களின் அரசியல் எழுச்சிக்கு அவர்களிடம் பணி செய்யாமல் இருப்பதும், கிறிஸ்தவம் இம்மக்களை தொடர்ந்து மூடுண்ட சமூகங்களாக வைத்து சுரண்டிக் கொண்டிருப்பதுமே அவர்களை தற்கொலையான ஒரு சமூகமாக வைத்துள்ளது. இந்தப் பிரச்சனைகளை பேசாதவரை, இது குறித்து சிந்திக்காதவரை, இலங்கைக் கடற்படையின் தூண்டிலில் சிக்கிய மீன்களாக இவர்கள் இரையாவதும் தொடர்ந்து கொண்டே இருக்கும். மீனவர்களுக்காக பேசுவதைப் போன்ற பாவனைக் கோஷங்களுக்கும் குறைவிருக்காது.

இக்கட்டுரை எழுத உதவிய நூல்கள்:

கச்சதீவு – அன்றும் இன்றும், ஏ.எஸ்.ஆனந்தன்.

சேதுக்கால்வாய் திட்டமும் ராமேசுவரத்தீவு மக்களும் – குமரன்தாஸ்.

ஆழிப்பேரிடருக்குப் பின் – தொகுப்பு. வரீதைய்யா

உள்ளிட்ட சில பிரதிகள்.

– டி.அருள் எழிலன்

(அணங்கு பத்திரிக்கையில் வெளிவரவிருக்கும் இக்கட்டுரை, காலத்தின் தேவை கருதி முன்கூட்டியே பிரசுரிக்கப்படுகிறது)

“புதுவிசை” அரசியலும், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் -தமிழ் செல்வனுக்கு ஒரு பதில் : அசோக் யோகன்

visaiஎஸ்.வி.ஆர் இற்கான எனது  திறந்த மடலுக்கான தங்களது வருத்தம் படர்ந்த எதிர்வினையைக் காண நேர்ந்த நெகிழ்ச்சியுடனும், தங்களுக்கு எனது தரப்பு சார்ந்த நியாங்களை விளக்குவதற்குமாகவே இதனை எழுதுகிறேன்.

தாங்களும், தாங்கள் சார்ந்த மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வெகுஜன அமைப்புக்களான தொழிற்சங்கம், இலக்கிய அமைப்பு, வாலிபர் அமைப்பு என அனைத்திலும் செயல்படும் ஆதவன் தீட்சண்யாவினதும் பிரச்சினையின் வேர்களில் இருந்து எனது இந்த பிரதியை துவங்கலாம் என நினைக்கிறேன்.

ஆதவன் தீட்சண்யாவும் நீங்களும் தனிநபர்கள் அல்ல.மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலும் அதனது வெகுஜன அமைப்புக்களிலும் பொறுப்பிலுள்ளவர்கள்.

பொதுவாழ்வு சார்ந்த உங்களது நடத்தைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், மாரக்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் சார்ந்து நீங்களும் பொறுப்புடன் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள்.

”கட்சியின் அதிகாரபூர்வமான தீக்கதிர், செம்மலர் போன்ற பத்திரிக்கைகளில் வருவதைத்தான் நாங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் “என நீங்கள் சொல்வது அடிப்படையான அரசியல் பிழை என்றே நான் கருதுகினறேன்.

ஆதவன் தீட்சண்யாவும் நீங்களும் ஆசிரியர் குழுவிலிருந்து வழிநடத்தும் புதுவிசை சஞ்சிகைகக்கும், உங்களுக்கும், நீங்கள் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் கருத்தளவில் சம்பந்தமில்லை என்கின்ற மாதிரி நீங்கள் பேசுகின்றீர்கள்.

இது ஒப்ப முடியாத ஒரு வாதம் என நான் நினைக்கின்றேன்.

ஆதவன் தீட்சண்யா ஒரு அப்பாவி அல்ல. அவர் இலங்கைப் பிரச்சினை தொடர்பாகத் தமிழகத்தில் செய்து கொண்டிருப்பது சர்வதேசிய அரசு சாரா தன்னார்வ வலைப்பின்னலின் தொடர் அரசியல்.

அவர்தான் சுசீந்திரனைத் தேடிச் சென்று நேர்காணல் செய்து புதுவிசையில் வெளியிட்டவர்.

அவர்தான் சோபாசக்தியின் நேர்காணலை, சுகனின் நேர்காணலை hinduramவெளியிட்டவர். அ.மார்க்ஸின் கட்டுரையை வெளியிட்டவர்.
அந்த நேர்காணல்களில் தான் இலங்கையில் இனப் படுகொலை நடக்கவில்லை எனும் விடயம் சொல்லப்பட்டது.

இலங்கை இடதுசாரிகளின் சாதிய எதிர்ப்புப் போராட்டங்கள் கொச்சைப்படுத்தபட்டன. கோவை ராணுவ வாகனங்கள் எதிர்ப்புப் போராட்டம் கொச்சைப்படுத்தப்பட்டது.

புலிகள் எதிர்ப்பை மட்டுமே முனைப்பாகக் கொண்டு அரசு சார்பு நிலைபாடுகளை முன்வைப்பவர்கள் இந்த நால்வர் குழுதான்.

இதனது உச்சம் இலங்கை இனவாத அரசுக்கும்,இலங்கை பௌத்தக் கருத்தியலுக்கும் சம்பந்தமில்லை எனும் சுகனின் உளறல்கள்.

புதுவிசையின் இந்த அரசியலுடன் உடன்பாடு கொண்டு, நீங்கள் சொல்கிற வகையிலான இலங்கை அரசுக்கு எதிரான ‘ஒற்றுமை’ அரசியலை முன்னெடுக்க முடியும் என நீங்கள் கருதுகிறீர்களா?

நீங்கள் மாறுபட்ட கருத்து உள்ளவர்களின் ஒற்றுமை பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்.

ஆதவன் தீட்சண்யா திட்டமிட்ட வகையில் அதனைக் குலைப்பதற்கான அரசியலை, முனைப்பாக முன்னெடுத்துக் கொண்டு இருக்கிறார்.

ஆதவன் தீட்சண்யா அப்பாவி அல்ல.

இலங்கை அரசு ஆதரவுக் குழுவினரின் அழைப்பின் பேரில்தான் அவர் லண்டன் கூட்டத்திற்கு வந்து சென்றார்.

இந்த  இலங்கைக் ஆதரவு    குழுவினர்  தமிழகத்திற்கு வரும்போது அவர்தான் அவர்களை வரவேற்று, ஈழப் பிரச்சினை தொடர்பாக நக்கல் நளினமாகக் கேள்விகளும் கேட்டு புதுவிசை சஞ்சிகையில் தொடர்ந்து நேர்காணல்கள் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்.

இதனைத் தனிநபர் உறவுகள் எனச் சொல்கிறீர்களா அல்லது அரசியல் பரிமாணம் கொண்ட உறவு எனச் சொல்கிறீர்களா?

புதுவிசை மேலெடுத்து வருகிற அரசியலுக்கும் மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சிக்கும், அதில் அங்கம் வகிக்கும் உங்களுக்கும் தொடர்பற்ற ‘சுதந்திர’ அரசியல் எனச் சொல்கிறீர்களா?

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொறுப்பான முழுநேர ஊழியரான உங்கள் பதில் இவ்விடயத்தில் ஒப்ப முடியாததாகவே இருக்கிறது.

இலங்கை குறித்த என்.ராமின் நிலைபாடுகளும் ஆதவன் தீட்சண்யாவின் நிலைபாடுகளும் தங்களது கட்சியின் நிலைபாடுகளுக்கு விரோதமானது எனத் தாங்கள் கருதுவீர்களானால்-

நிலவி வரும் ஒரு குழப்பத்திற்கு நீங்கள் திட்டவட்டமாக முடிவு கட்டமுடியும்.

 தங்களது கட்சியின் அதிகாரபூர்வமான தீக்கதிர் பத்திரிக்கையில், “பலர் நினைக்கிறமாதிரி, என்.ராமின் அரசியலுக்கும், ஆதவன் தீட்சண்யா முன்னெடுக்கும் அரசியலுக்கும், இலங்கைப் பிரச்சினை தொடர்பாக புதுவிசை முன்னெடுக்கும் அரசியலுக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியலுக்கும் சம்பந்தமில்லை” என நீங்கள் அறிவிக்கலாம் இல்லையா?

அறம் சார்ந்த கருத்துப் போராட்டத்தில் எமக்கு நம்பிக்கையுண்டு.
நாம் நடத்திக் கொண்டிருப்பதும் கருத்துப் போராட்டம்தான் mahintha100என்பதில் நாங்கள் உறுதியான நிலைபாடு கொண்டிருக்கிறோம்.

தங்கள் மீது இப்போதும் நான் பெறுமதிப்புக் கொண்டிருக்கிறேன். இலங்கை அரசைப் பாசிச அரசு எனத் தாங்கள் விமர்சித்திருப்பதை நான் அறிவேன். இலங்கை அரசுக்கு எதிராக, கருத்து மாறுபாடுகளுக்கு அப்பால் அனைவரும் ஒன்றுபட வேண்டும் எனத் தாங்கள் அறைகூவி வருவதையும் நாங்கள் அறிவோம். அதனையே நாங்களும் வழிமொழிகிறோம்.

துரதிருஷ்டவசமாக திருவனந்தபுரம் மாநாடு குறித்து தாங்கள் முழுமையாக அறியாமல், தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன்தான் நீங்கள் சென்றீர்கள் என்று நீங்கள் சொல்வதை எம்மால் ஒப்ப முடியாததாக இருக்கிறது.

ஆதவன் தீட்சண்யாவின் நிலைபாடுகளும் தொடர்புகளும் அறியாமையிலும் அப்பாவித்தனத்திலும் நடக்கிற காரியங்கள் அல்ல. அவரோடுதான் நீங்கள் திருவனந்தபுரம் மாநாட்டில் பங்கு கொண்டிருக்கிறீர்கள்.

தன்னார்வ அரசு சாரா நிறுவனங்களின் எதிர்ப் புரட்சி அரசியல் குறித்து அதிஅவதானம் கொண்டிருக்கிற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முழு நேர ஊழியராகத் தங்களது பதிலை எம்மால் ஒப்ப முடியவில்லை.

நான் தங்களது வலைத்தள வாசகன் எனும் அளவில் எமது நண்பர் டி.அருள் எழிலனது கருத்துக்கள் தொடர்பான தங்களது பதிவில், ஆதவன் தீட்சண்யாவினது வழமையான நக்கல் நடையுடனான ஒரு பின்னூட்டம் பார்த்தேன்.

”டி.அருள் எழிலனதும் அவரொத்தவர்களினதும் கருத்துக்களுக்கு வார்த்தைக்கு வார்த்தை தன்னால் பதில் எழுத முடியும்” என எக்களிப்புச் செய்துவிட்டு, “ஆனாலும் தான் எழுதக் கூடாது என அமைதி காப்பதாக “ புத்த பகவானின் மறு அவதாரம் போல ஆதவன் தீட்சண்யா பேசுகிறார்.

அவரை வார்த்தைக்கு வார்த்தை பதில் சொல்லச் சொல்லுங்கள்.
வெறும் வாய்வீச்சு வேண்டாம். நாங்கள் அதனை ஒரு சவாலாகவே ஏற்கிறோம்.

மற்றபடி, தங்களது வருத்தம் படர்ந்த எதிர்விணையைக் காண நேர்ந்த நெகிழ்ச்சியுடனும்,தங்களுக்கு எனது தரப்பு சார்ந்த நியாங்களை விளக்குவதற்குமாகவே இதனை எழுதுகின்றேன்.

அன்புடனும் தோழமையுடனும்
அசோக் யோகன்.

கோபட் கான்டேயை விடுதலை செய்! : டி.அருள் எழிலன்

gandyவடகிழக்கில் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான தனது போரைoperation of green hunt என்னும் பெயரில் தீவீரப்படுத்தியிருக்கிறது இந்திய அரசு. வடகிழக்கின் பெரும்பலான ஆதிவாசிப் பழங்குடி மக்கள் இந்தியாவின் இராணுவ நடவடிக்கையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

நேரடியான இராணுவ நடவடிக்கை, என்கவுண்டர்கள், சட்டவிரோதக் காவல், பொருளாதாரத் தடை என்று வழமையாக இராணுவம், மக்களுக்கு எதிராக எதை எல்லாம் ஒரு கருவியாக பயன்படுத்துமோ அதை எல்லாம் வடகிழக்கு மாநிலங்களின் மீது கட்டவிழ்த்து விட்டுள்ளது. மேற்குவங்கம் லால்கரின் தொடங்கிய இராணுவ கூட்டு நடவடிக்கை, சட்டீஸ்கர், நாகாலாந்து, மணிப்பூர், ஜார்கண்ட், பீகார், ஒரிஸ்ஸா போன்ற மாவோயிஸ்டுகள் செல்வாக்கு மிகுந்த மாநிலங்களுக்கும் பரவியிருக்கிறது.

ஆனால் இந்தியாவின் இந்நடவடிக்கை ரகசிய நடவடிக்கை. பல நேரங்களில் ஊடகங்கள் இதை ஊதிப் பெரிதாக்கு விட்டுவதால் மாவோயிஸ்டுகளை நினைத்த மாதிரி இராணுவத்தால் கையாள முடியாத நிலையில் கடுமையான ஊடகத் தணிக்கையை உள்துறை அமைச்சகம் மிரட்டல் தொனியில் மேற்கொண்டிருக்கிறது. பல எழுத்தாளர்களும், மனித உரிமை ஆர்வலர்களும், கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், மேற்கு வங்கத்தில் மாவோயிஸ்டுகள் ஆதரவு ஊடகங்கள் முடக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில்தான் மாவோயிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினரும், மிக முக்கியமான தலை சிறந்த இடது சாரி சிந்தனையாளருமான கோபட் கான்டேயை தெற்கு டில்லியில் வைத்து வைத்து கடந்த செப்டம்பர் 22 -ஆம் தியதி கைது செய்தது டில்லி போலீஸ். வழக்கம் போல் ஒரு தீவிரவாத எழுத்தாளரைக் கைது செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டது.

இந்திய மாவோயிஸ்டுகள் முன்னெப்போதையும் இல்லாத அளவுக்கு அரசின் நேரடி யுத்தத்திற்கு இப்போது முகம் கொடுக்கிற நிலையில் கான்டே யின் கைது மாவோயிஸ்டுகளுக்கு பெரும் இழப்புதான். 13 பேரைக் கொண்ட பொலிட்பியூரோவில் ஏற்கனவே ஆறு பேர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், ( இதில் ஒருவரை ஜார்கண்ட் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்திய போது மாவோயிஸ்டுகள் அவரை மீட்டுச் சென்றார்களாம்) கான்டேயும் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்நிலையில் ஜார்கண்ட் மாநில புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் பிரான்சிஸ் இந்துவாரைக் கடத்திச் சென்ற மாவோயிஸ்டுகள். சிறையிலுள்ள தங்களின் சகாக்களான சத்ர தர்ம கோட்டே, பூஷன் யாதவ், கோபட் கான்டே , ஆகியோரை விடுவிக்கச் சொல்லி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கோரிக்கை ஒன்றை வைத்தனர். இப்படி ஒருவர் கடத்திச் செல்லப்பட்டிருக்கிறார் என்றோ, இப்படியான கோரிக்கையை மாவோயிஸ்டுகள் வைத்திருக்கிறார்கள் என்றோ மத்திய உள்துறை அமைச்சகம் வெளிக்காட்டிக் கொள்ளாத நிலையில், அக்டோபர் எட்டாம் தியதி இன்ஸ்பெக்டர் பிரான்சிஸ் இந்துவாரின் தலையை அறுத்து நெடுஞ்சாலை ஓரமாக வீசி விட்டுச் சென்று விட்டனர்.

மிக எளிமையான குடும்பத்தைச் சேர்ந்த பிரான்சிஸ் இந்துவாரின் மனைவ்யும் பிள்ளைகளும் கதறியழுத போது, மாவோயிஸ்டுகள் ஏன் இப்படிச் செய்கிறார்கள் என்ற எரிச்சலே நம்மிடம் தோன்றுகிறது. ஒரு இன்ஸ்பெக்டரை கடத்திச் சென்று கழுத்தை அறுப்பதினால் இப்பிராந்தியத்தின் வலிமையான இரக்கமில்லாத ஒரு இராணுவத்திடம் எதைக் கோரிப் பெற்று விட முடியும் என நினைக்கிறார்கள் என்று தெரியவில்லை.

 மூன்று தலைவர்களை விடுவிக்க வேண்டும் என்று மாவோயிஸ்டுகளை வைத்த கோரிக்கையை தந்திரமாக மறைக்கும் சிதம்பரம், இன்ஸ்பெக்டரின் உயிரை ஒரு பொருட்டாகவே நினைக்காத குரலும் இது இருக்கிறது.

gandy4பிரிட்டீஷ் ஆட்சிக்குப் பிறகு சுதந்திர இந்தியாவை உருவாக்கிய நேரு பல்வேறு ராஜ்ஜியங்களாக சிதறிக் கிடந்த பிரதேசங்களை ஒருங்கிணைத்து இந்தியாவை உருவாக்கினார். சிலருக்கு ஆசைகள் காட்டியும், போலி வாக்குறுதிகள் கொடுத்தும், பணியாத ராஜ்ஜியங்களுக்கு படைகளை அனுப்பியுமே இன்றைய இந்தியா உருவாக்கப்பட்டது. அந்த வகையில் காஷ்மீர் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதி இன்று வரை உதாசீனப்படுத்துகிறது என்பதோடு, காஷ்மீர் மக்கள் நிரந்தரமான இராணுவ முகாம்களுக்குளோளேயே வாழ வேண்டியதாயிற்று. வடகிழக்கு மக்கள் எப்போதும் தங்களை இந்தியர்களாக கருத்திக் கொண்டது இல்லை. காரணம் இந்தியா எப்போதும் தங்களின் செல்வந்த முதலாளிகளின் அந்தப்புரமாகவே வடகிழக்கை நடத்தி வந்தது. டாட்டா, பிர்லா, பாம்பே டையிங், அம்பானி என இந்திய தொழில் முதலாளிகளின் பண்ணை நிலங்களாக வடகிழக்கு மாற்றப்பட்டது. பழங்குடிகளின் நிலங்கள் அவர்களிடம் இருந்து பறித்தெடுக்கப்பட்டு காப்பியும் தேயிலையும் பயிரிடப்பட்டன.

 இந்தியாவில் உலகமயம் அறிமுகமான நிலையில் நிலம் எந்த வடிவத்திலும் மக்களுக்கானது இல்லை என்பதை இந்தியா வடகிழ்ககில் இப்போது உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறது. வடகிழக்கு மக்களின் தனி நாடு கோரிக்கை, டில்லியில் குவிக்கப்பட்டுள்ள அதிகாரம் பலவீனமடைய வேண்டும் என்பதால் தனி நாடு கோரிக்கையை ஆதரிக்கிற மாவோயிஸ்டுகள். வடகிழக்கு மக்களின் வர்க்கப்புரட்சியை முன்னெடுத்துச் செல்லல், அவர்களின் நிலம், மொழி , பண்பாட்டுக் கோரிக்கைகளை ஆதரித்தல் என இன்று மாவோயிஸ்டுகள் வலுவான மக்கள் செல்வாக்குப் பெற்ற இடங்களாக வடகிழக்கு மாறியிருக்கிறது.

முன்னாட்களில் நக்சலைட்டுகள் என்றும் நகசல்பாரிகள் என்றும் அழைக்கப்பட்ட இந்த ஆயுதக் கிளர்ச்சியார்கள் தெலுங்கனாவிலும், கேரளாவிலும், கர்நாடகாவிலும், தமிழகத்திலும் செல்வாக்குப் பெற்றிருந்தனர். தென்னிந்தியாவில் மாவீயிஸ்டுகள் வலுவிழந்த நிலையில், வடகிழ்ககில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட் சதுர மைல் பரப்பில் ஒரு மினி சிவில் நிர்வாக அமைப்பையே மாவோயிஸ்டுகள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்திய அரசுக்கு எதிரான மாவோயிஸ்டுகளின் இன்றைய போராட்டம் என்பது அதன் உருமாற்றத்திற்கு வருவதற்கு முன்னால் பல்வேறு குழுக்கள் வடகிழக்கு மக்களின் பிரச்ச்னைகளுக்காக போராடினார்கள். மற்றபடி பிரச்சனை நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகள் அல்ல, அதிகாரத்தின் கரம் கொண்டு மக்களை நசுக்கும் இந்தியாவே பிரச்சனைக்கு காரணம். அதற்கு கோப்ட கான்டேதான் ஒரு உதாரணம். சரி யார் இந்த கோப்ட கான்டே……

தொடரும்..

புலம் பெயர் பிழைப்புவாதிகளின் பகல் கனவுகள் : விஜயகுமாரன்

daydreamஉலக வரலாறுகளில் ஆளும்வர்க்கங்கள், மக்களின் பிரச்சனைகளை தீர்த்து வைத்தன என்பதற்கு ஒரு சான்றைக் கூடகாட்டமுடியாது. போராட்டங்களை மக்களின் அரசியல், பொருளாதாரகோரிக்கைகளை வெண்றெடுக்கவைத்தன. அமெரிக்கத் தொழிலாளர்களின் எட்டுமணி நேர வேலை, காலனித்துவத்திற்கு எதிரான தேசியவிடுதலைகள்,பொதுவுடமைக்கட்சிகளின் போராட்டங்கள் என்பவற்றை வரலாறு காட்டுகிறது.

புலிகளின் பின்னடைவிற்குப்பிற்கான அரசியல் வெற்றிடத்தை நிரப்புவதற்கு புகலிடத்தில் உள்ள பல குழுக்கள் போட்டி போடுகின்ற்ன.ஆனால் தமிழ் மக்களின் பிணங்களை மிதித்துக்கொண்டு உயிர் பிழைத்த தமிழனை காட்டிக்கொடுக்கிறார்கள்.

புலிகளின் வலதுசாரி அரசியல்,ஜனநாயகமறுப்பு ஆயுதமோகம், மக்களின் பிரச்சனைகளை முன்வைக்காமல் தமது குழுநலன் சார்ந்து பிரச்சனைகளை அணுகியமைபோன்றவை, இன்றையபின்னடைவுகளிற்கான பிரதான காரணிகளாகும். எந்தவீழ்ச்சியில் இருந்து தமிழ் மக்களை மீட்கப்புறப்பட்டு இருக்கும், தம்மை தமிழ் ஜநாயகவாதிகள் என்று கூறிக்கொள்ளும் பிழைப்புவாதிகள், இலங்கையின் மிகப்பெரிய கொலைகாரன்,ஊழல்,குடும்ப அரசியல்,ஜனநாயமறுப்பு என்பவற்றின் மொத்தவியாபாரியான மகிந்தாவின் கால்களை கழுவுவதன் மூலம் தமிழ் மக்களின் உரிமைகளை பெற்றுத்தருவார்களாம் என மற்றவர்களை நம்பச்சொல்கிறார்கள்.

வன்னி முகாம்களை பார்வையிடச்சென்ற இக்குழுக்களில் ஒன்றினது அறிக்கை, இலங்கைஅரசின் பச்சைப்பொய்களை விட பல மடங்கு பொய் பேசுகிறது. மரணித்த மக்கள், நோயாளிகள், வண்புணர்ச்சிக்கு உள்ளான பெண்கள்,போதிய உணவு , இருப்பிட சுகாதார வசதிகள் வழங்கப்படாமை போன்ற எதுவுமே இந்த மேட்டுக்குடி வாழ்வு வாழ நினைக்கும் கும்பலுக்குத் தெரியவில்லை.

தேசம் நெற் இணையத் தளத்தில் மகிந்தாவின் நாட்டிற்காக உயிரையே விடுவேன் என்ற புல்லரிக்க வைக்கும் வீர வசனங்களை -இவ்வசனங்களை தமிழ் நாட்டு முதிய வியாபாரி கருணாநிதி தான் எழுதிக் கொடுத்தாரோ என்று எனக்கு ஒரு சந்தேகம்- வெளியிட்டு பாதம் பணிகின்றனர். தேசத்தில் வெளிவந்த கிலாரி கிளிங்டன் வன் புணர்ச்சியை இலங்கை ராணுவம் ஆயுதமாகப் பயன்படுத்தியது என்ற குற்றச்சாட்டு குறித்த கட்டுரைக்குப் பின்னூட்டமிட்ட அனைவருமே இலங்கை அரசைக் காப்பாற்றவே முனைப்புக் காட்டினார்கள். ‘அமரிக்க ராணுவம் பாலியல் வன்முறைகளில் ஈடுபடவில்லையா’, ‘எந்த நாட்டு ராணுவம் செய்யவில்லை’ என்ற அடிப்படையிலேயே இவர்களின் வாதம் அமைந்திருந்தது.

இவர்களுக்கு எல்லாம் தமிழ்ப் பெண்களின் அழுகுரல்கள் கேட்பதில்லை. அவர்களுக்கு நிகழ்ந்த பயங்கரங்கள், அவர்களின் அவலக் குரல்கள், இலத்திரனியல் கொலைக்கு உட்படுத்தப்படுகிறது. பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகளிற்காக தேசத்தை ஏன் குற்றம் சாட்டவேண்டும் என யாராவது நினைத்தால், இலங்கை அரசையோ,மகிந்தாவையோ விமர்சித்து நேரத்திற்கு எழுதிப்பாருங்கள் தேசம் அதனைபிரசுரிக்காது. இது பலருடைய அனுபவம்.

தமிழருவிமணியனின் சந்திப்பு பற்றிய ஒரு கட்டுரையில் தேசம் ஆசிரியர் அக்கூட்டத்திற்கு வந்த புலி ஆதரவாளர்கள் இன்னமும் பகல் கனவில் மிதப்பதாகக் கவலை கொள்கிறார். பெரும்பாலன புலிஆதரவாளர்கள் அரசியல்ரீதியாக வளர்ந்தவர்கள் அல்ல, அவர்கள் தமிழ்தேசியம், இன ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் என்பவற்றிற்காகவே புலிகளை ஆதரிக்கிரார்கள். ஆனால் இவர் போன்ற அரசியல் மேதைகள், நரபலி வேட்டையாடும் மகிந்தாவிற்கு ஊடாக தமிழ் ளிற்கு விடுதலை பெற்று தந்து விடப்போகிறார்களாம்.

நுண்ணரசியல், அடையாள அரசியல் போன்றவற்றின் முலம் தமிழ் மக்களின் போராட்டத்தை சிதைக்கபேரினவாதிகள் முயல்கிறாகள்.இதன் ஒரு வெளிப்பாடுதான் பின்நவீனத்துவவாதி சுகன்,இலங்கை தேசியகீதம் தமிழில் இருப்பதாக கூறிப் பாடிக்காட்டியது. சமயக் குப்பைகள், வணிக தமிழ் சினிமாப்படங்கள், தமிழககாங்கிரஸ்கோமாளிகளின் பேச்சுக்கள்,வணிகசஞ்சிகைகள் M.G. இன் அண்ணாயிசம் பற்றிய அரும் பெரும் விளக்கம் எல்லாம் தமிழில் தான் இருக்கிறது. பின்நவீனத்துவ வாதிகள் இவற்றை எல்லாம் அருத்த கூட்டங்களில் பாடிப்பயன்பெறலாம்.

மரம் சும்மா இருக்க நினைத்தாலும் காற்று அதை விடுவதில்லை என்ற மாவோவின் வரிகளிற்கு ஏற்ப பேரினவாதத்ற்கு எதிரான ஈழமக்களின் போராட்டம் மீண்டும்வீறுகொண்டு எழும் போது ஈழமண்ணில் இருந்தே அதன் தலைமைசக்திகளும் எழப் போகின்றன இப்புலம்பெயர் பிழைப்புவாதிகளின் தலைமைக்கனவுகள் ஒரு நாளும் பலிக்கப்போவதில்லை.

எஸ்.வி.ராஜதுரையும் – அறம்சார் சில கேள்விகளும்! : அசோக் யோகன்

progovஇலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக ஜெர்மனியை தளமாகக் கொண்ட இயங்கும் ஐ.என்.எஸ்.டி எனும் தன்னார்வ அரசு சாரா நிறுவனத்தின் அனுசரணையில் திருவனந்தபுரத்தில் நடந்த மாநாட்டில் தாங்கள் சிறப்புரை ஆற்றினீர்கள் (எதுவரை – செப்டம்பர்-அக்டோபர் – 2009) என்பதைக் கேட்டு நான் அதிர்ந்து போனேன்.
இலங்கையில் இனப்படுகொலை நடக்கவில்லை எனச் சொல்கிற சுசீந்திரனின் முன்முயற்சியில் நடைபெற்ற நிகழ்வுதான் திருவனந்தபுரம் கூட்டம் என்பதைத் தாங்கள் அறிவீர்கள் என நான் நம்புகிறேன்.
இந்து பத்திரிக்கையின் என்.ராமினாலும், சிங்கள இனவாதக் கட்சியான ஜே.வி.பியினாலும் தகவமைக்கப்பட்ட இலங்கை குறித்த அரசியல் பார்வை கொண்ட மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எழுத்தாளர்களான ச.தமிழ்ச் செல்வன், ஆதவன் தீட்சண்யா போன்றவர்களோடு திருவனந்தபுரம் கூட்டத் தளத்தை நீங்கள் பயன்படுத்தியிருந்தீர்கள் என அறிந்தபோது மேலும் அதிர்ந்து போனேன்.
மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இலங்கை சார்ந்த நிலைபாட்டுக்கு ஆதரவாக, சுசீந்திரன் போன்றவர்களை முன்வைத்து, இவர்கள் தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொண்டு வருவதையும் நீங்கள் அறியாதவரல்ல என நினைக்கிறேன்.

 இலங்கை அரசின்பாலான ஒரு மென்மையான நிலைபாட்டுடன் விடுதலைப் புலிகளை மட்டுமே நடந்து முடிந்த கொலைகளுக்குக் காரணமாக நிறுத்துகின்ற அரசியலை சுசீந்திரன் போன்றவர்கள் முன்வைத்து வருகிறார்கள். இந்த அரசியலைத் தமிழகத்தில் முன்னெடுத்து வருகிறவர் அ.மார்க்ஸ் என்பதையும் தாங்கள் அறியாதிருக்க வாய்ப்பில்லை.

இலங்கை பற்றிய, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியலுக்குகந்த வகையிலான சுசீந்திரன் போன்றவர்களின் நேர்முகங்களையும், இவர்களுக்கு ஆதரவாக அ.மார்க்ஸ் எழுதிய கட்டுரையையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினது ஆதவன் தீட்சண்யா அங்கம் வகிக்கிற புதுவிசையில் அவர்தம் கட்சியினது அரசியல் பிரச்சாரத்தின் பகுதியாக வெளியிட்டார்கள் என்பதனையும் தாங்கள் அறிந்தே இருப்பீர்கள்.
சுசீந்திரன் தனது தன்னார்வ நிறுவன அரசியலுக்கும், தனது இலங்கை அரசின்சார்பு அரசியலுக்கும் ஒரே தளத்தில் தங்களையும், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும் இணைத்திருக்கிறார் என்பதுதான் இன்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

அன்புள்ள எஸ்.வி.ஆர் அவர்களே, இனப்படுகொலை நடக்கவில்லை என்று சொல்கிற சுசீந்திரன் கூட்டிய திருவனந்தபுரம் மாநாட்டில் தாங்கள் ஏன் கலந்து கொண்டீர்கள் எனச் சொல்வீர்களா?
அன்று முதல் இன்று வரை இலங்கை அரசு சார்பான இந்து என்.ராமினதும், சிங்கள இனவாதக் கட்சியான ஜே.வி.பியினதும் அரசியலையுமே முன்னெடுக்கும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினது எழுத்தாளர்களுக்கும் தங்களுக்குமான, அக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கான, பொதுக் காரணிகள் என்ன எனச் சொல்வீர்களா?
தன்னார்வ மற்றும் அரசு சாரா அமைப்புகளின் அரசியல் பற்றித் தாங்கள் அறியாதிருப்பீர்கள் என நான் நம்பவில்லை. உலகெங்கிலும் புரட்சிகர அரசியல் முன்னெடுக்கப்படாது முடக்குவதும், அமெரிக்க ஐரோப்பிய பாணியிலான ஜனநாயகத்தையும் சிவில் சமூகத்தையும் அமைப்பதுமே அவர்களது அரசியல் என்பதையும் தாங்கள் ஒப்புக் கொள்வீர்கள் என்றே நம்புகிறேன்.

ஐ.என்.எஸ்.டி எனும் அமைப்பு ஜெர்மனியைத் தளமாகக் கொண்ட ஒரு தன்னார்வ அரசு சாரா அமைப்பு. இந்த அமைப்பு இலங்கை அரசியலும் இனப்பிரச்சினையும் தொடர்பான கருத்தரங்குகளை நடத்தி வருகிறது. கருத்தரங்குகள் ஜெர்மனியின் பேட் போல் நகரில் அமைந்துள்ள பிராதஸ்தாந்து கிறித்தவ அமைப்பான எவாஞ்ஜலிக் அகாதமி துணையுடன் நடத்தப்பட்டு வருகிறது.
ஐ.என்.எஸ்.டி அமைப்புக்காக சலுகையில் இக்கருத்தரங்குகளை இந்த அமைப்பு நடத்துகிறது. இக்கருத்தரங்கு தொடர்பு முகவரியாகவும் இந்த அமைப்பினது முகவரியே இக்கருத்தரங்க அழைப்பிதழில் உள்ளது.
உலக தேவாலயக் கூட்டமைப்பிலும் எவாஞ்ஜலிக்கா அகாதமி அங்கம் வகிக்கிறது. ஜெர்மானிய அரசு, இலங்கை அரசு, அரசு சாரா அமைப்புக்கள், பிற ஈடுபாடுள்ள குழுக்கள் போன்றவற்றுக்கு இடையில் புரிந்துணர்வுக்காகவும் ஒத்துழைப்புக்காகவும் இக் கருத்தரங்குகள் நடத்தப்படுகின்றன. ஜெர்மனியிருந்தும், இலங்கையிலிருந்தும், உலகெங்கிலுமிருந்தும் ஐரோப்பியர்களும் ஆசியர்களும் இக்கருத்தரங்ககளில் பங்கு பெறுகிறார்கள்.
மேலும் ஜெர்மனியிலும் உலகெங்கிலும் பிராதஸ்தாந்து அறத்தைப் பரப்புவதன் ஒரு பகுதியாகவே இந்தக் கருத்தரங்குகளை இவ்வமைப்பு நடத்தி வருகிறது.
மார்க்ஸியர்களும் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்தவர்களும் தன்னார்வ அமைப்புக்களின் கருத்தரங்குகளில் கலந்து கொள்ளும் போது எழுப்பப்படும் கேள்விகளையே தங்கள் முன்பாகவும், தங்களோடு அக்கூட்டத்தில் பங்கு பற்றிய, தன்னார்வ நிறுவனங்கள் குறித்து புரட்சிகரமான அறம் பேசுகிற மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எழுத்தாளர்களான ச.தமிழ்ச்செல்வன் மற்றும் ஆதவன் தீட்சண்யா முன்பாகவும் முன் வைக்கிறேன்.
தன்னார்வ நிறுவனங்கள் என்கிறபோது அதனது நிதியாதாரம் பற்றிய கேள்விகளை இடதுசாரிகளும் மார்க்சியர்களும் எழுப்புவது தவிர்க்க இயலாதது. பெருமளவிலான நிதிச்செலவுகளோடுவும் பயணச் செலவுகளோடும் உலகெங்கிலும் கருத்தரங்குகளை நடத்தும் ஐ.என்.எஸ்.டியின் நிதியாதாரம் குறித்த ஒரு ஆர்வலரின் கேள்விக்கு ஐ.என்.எஸ்.டி தளத்தில் பதில் சொல்லப் பட்டிருக்கிறது. இலங்கை அரசின் நிதியாதாரத்தில் ஐ.என்.எஸ்.டி இயங்குகிறது என்பது குற்றச்சாட்டு.

இலங்கை அரசின் பணத்திலோ அல்லது விடுதலைப் புலிகள் பணத்திலோ ஐ.என்.எஸ்.டி இயங்கவில்லை எனப் பதில் தரப்பட்டிருக்கிறது. திட்டவட்டமாக இதில் ஐ.என்.எஸ்.டியின் நிதியாதாரம் குறித்த பதில் தவிர்க்கப்பட்டிருக்கிறது.

எவாஞ்ஜலிகல் அகாதமியாவின் உறவு, நிதி தொடர்பாக எழுந்திருக்கும் கேள்விகள், தமிழர்கள் மீதான இனப்படுகொலை எனச் சிக்கலானதொரு சூழ்நிலையில் தன்னார்வ மற்றும் அரசு சாரா நிறுவனமான ஐ.என்.எஸ்.டி நடத்திய கருத்தரங்கில், மார்க்சியராகத் தம்மை முன்னிறுத்தும் தாங்கள் கலந்து கொண்டதற்கான நிதி ஆதாரம் குறித்த தெளிவுறுத்தலையும், நியாயப்பாட்டையும் அன்புள்ள எஸ்.வி.ஆர் அவர்களே, தாங்கள் முன்வைக்க வேண்டும்.
உலகெங்கிலும் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்கள் நடந்து வருகின்றன. மக்கள் தமது உரிமைகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழுகிறார்கள். இவ்வாறான மக்கள் இயக்கங்களை வழிநடத்துகிறவர்கள், நிறைய அரசியல் தவறுகளும் செய்கிறார்கள்.
மதவழி நின்று இதனை அணுகுகிறவர்கள் இருக்கிறார்கள். வஹாபிசத்தையும் பிராதஸ்தாந்து அணுகுமுறையையும் இந்துத்துவ அணுகுமுறையையும் தீர்வாக முன்வைக்கிற அரசியல்வாதிகள் இருக்கிறார்கள். மார்க்சியர்கள் எனத் தம்மைக் கருதிக் கொள்கிறவர்கள் இவ்வழிகளில் பிரச்சினைக்கான தீர்வுகளை முயல்வதில்லை .
அப்படி எனில், அன்புள்ள எஸ்.வி. ஆர். அவர்களே, தன்னார்வ மற்றும் அரசு சாரா நிறுவனமான ஐ.என்.எஸ்.டி நடத்திய இலங்கைத் தமிழர் தொடர்பான திருவனந்தபுரக் கூட்டப் பங்கேற்பை மார்க்சியர்களாகத் தம்மைக் கருதிக்கொள்ளும் தாங்களோ, தங்களோடு கூட்டத்தில் கலந்துகொண்ட ச.தமிழ்ச்செல்வன், ஆதவன் தீட்சண்யா போன்றவர்கள் எவ்வகையில் நியாயப்படுத்த முடியும் எனக் கருதுகிறீர்கள்?
தமிழ்செல்வனுக்கும், ஆதவன் தீட்சண்யாவுக்கும் ஒரு கேள்வியை இங்கே முன்வைக்கிறேன். மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் உலக தன்னார்வ அரசு சாரா நிறுவனங்களின் எதிர்ப்புரட்சி அரசியல் பற்றி ஒரு நூலையே எழுதியிருக்கிறார்.
ரட்சியாளர்களாகத் தங்களை முன்னிறுத்திக் கொள்ளும் ச.தமிழ்ச்செல்வனும் ஆதவன் தீட்சண்யாவும், இலங்கை அரசு சார்பான, தன்னார்வ அரசு சாரா நிறுவனக் கருத்தரங்கில் கலந்து கொண்ட தங்கள் நடத்தைக்கு என்ன காரணத்தை முன்வைக்கிறீர்கள்?
அன்புள்ள எஸ்.வி.ஆர் அவர்களே, இறுதியாக ஒரு முக்கியமான கேள்வி. தாங்கள் இலங்கை அரசைக் கடுமையாக எதிர்த்து வருகிறீர்கள். ஐ.என்.எஸ்.டி நடத்தி வரும் இலங்கை தொடர்பான கருத்தரங்குகளில் தொடர்ந்து கலந்து கொண்டு வரும் பத்திரிக்கையாளர் பௌஸர் என்பவர் யார் எனத் தங்களுக்குத் தெரியுமா?
அவர் இலங்கை அரசுடன் செயல்பட்டு வரும் ஈ.பி.டி.பி செயலர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் ஐரோப்பியப் பிரதிநிதிகளில் ஒருவர் என்பது தங்களுக்குத் தெரியுமா?
பௌஸர் ஆசிரியராக இருந்து நடத்தும் “எதுவரை” இதழில்தான் உங்கள் திருவனந்தபுரச் சிறப்புரை பற்றிய செய்தி வந்ததும், வேறு எந்த இலங்கைத்தமிழ் பத்திரிக்கைகளிலும், ஐ.என்.எஸ்.டி தளம் உள்பட படத்துடன் அந்தச் செய்தி வரவில்லை என்பதும் தங்களுக்குத் தெரியுமா?
பௌஸர் பெயரிலோ, சுசீந்திரன் பெயரிலோ அக்கட்டுரை வராமல் தாஸ் எனும் அநாமதேயத்தின் பெயரில் அக்கட்டுரை வெளியாகி இருக்கிறது என்பதனையும் தாங்கள் அறிவீர்களா?
தோழர் எஸ்.வி.ஆர். அவர்களே, இலங்கை அரசு சார்பான கொள்கையுடைய தன்னார்வ அரசு சாரா நிறுவனமொன்று இலங்கை அரசியல் தொடர்பாக நடத்தியிருக்கிற திருவனந்தபுரம் கருத்தரங்கில் நீங்கள் கலந்து கொண்டிருப்பதானது தாங்கள் இதுவரை பேசி வந்திருக்கிற புரட்சிகர மார்க்சியத்துக்கு ஒரு களங்கம் என்றே நான் நினைக்கிறேன்.
இது பற்றி எங்களுக்குச் சொல்ல நீங்கள் என்ன பதிலை வைத்திருக்கிறீர்கள்?
மற்றபடி என்றும் போல அன்புடன்,
அசோக் யோகன்.

தடுமாறும் தமிழ்த் தலைமைகளும்-தமிழ்த் தேசிய இனத்தின் எதிர்காலமும்:வெகுஜனன்

tulf33தமிழர் தலைமைகள் என்று தம்மை வர்ணித்து வரும் அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் இன்று கடுமையான தடுமாற்றத்திற்கும் இயலாமைகளுக்கும் உள்ளாகி நிற்கின்றன. இதில் கடந்த பொதுத்தேர்தலில் புலிகள் இயக்கத்துடன் இணைந்து 22 பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செய்வதறியாது திகைத்து நிற்கிறது. வன்னி யுத்தத்தில் பின்னடைவு ஏற்பட ஆரம்பிக்கும் வரை தாமே தமிழ்த் தேசிய இனத்தின் ஏகப்பிரதிநிதிகள் என்பது போன்று நெஞ்சு நிமிர்த்தி நின்று பாராளுமன்றத்திற்கு உள்ளும் வெளியிலும் வீண் பேச்சுக்களும் வீரதீர வசனங்களும் வெளியிட்டு வந்தனர். அரசியல் தொலைநோக்கில் தமிழ்த் தேசிய இனத்தின் எதிர்காலம் எப்படி அமையும் என்பதைச் சிறியளவில் கூட அவர்களால் அனுமானிக்க முடிய வில்லை. காரணம் அவர்களது நம்பிக்கை முழுவதும் தமிழ் மக்களின் மீதல்ல. புலிகள் இயக்கம், இந்தியா, சர்வதேச சமூகம் என்பனவற்றின் மீதே முழுவதும் தங்கியிருந்தது. ஆனால் இவர்கள் எதிர்பார்த்திருந்த இந்தியாவின் நிலை முழுக்க முழுக்க எதிர்நிலைப் பட்டதாலும் புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்டு அதன் தலைமை அழிக்கப்பட்டதாலும் இன்று திரிசங்கு நிலையில் இருந்து வருகின்றனர். இது அவர்களால் செய்யப்பட்ட முன்வினைகளின் பின் விளைவுகளால் ஏற்பட்டுள்ள துர்ப்பாக்கிய நிலையாகும். அதனால் கக்கவும் முடியாது விழுங்கவும் முடியாத கையறு நிலையில் தமிழ்க் கூட்டமைப்பினர் இருந்து வருகின்றனர்.

அண்மையில் இத் தமிழ்க் கூட்டமைப்பினர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை அலரி மாளிகையில் சந்தித்து மூன்று மணிநேரம் பேச்சுவார்த்தை நடாத்தியதாக ஊடகங்கள் தெரிவித்தன. ஆனால் அச் சந்திப்பில் கூட்டமைப்பினர் பேசிய நேரம் மிகக் குறைவானதாகும். பல்வேறு விடயங்கள் பற்றி விவாதிக்கப் போகிறோம் எனக் கூறிச் சென்றவர்களிடம் பெரிதாக எதையும் கேட்கும் நிலையில் ஜனாதிபதி இருக்கவில்லை. ஜனாதிபதியும் அவரது சகோதரரும் ஆலோசகருமான பாராளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்சவும் தான் அதிக நேரம் பேசியவர்களாவர். தாம் ஏன் சுமார் மூன்று லட்சம் வரையான மக்களை முகாம்களில் தடுத்து வைத்திருக்கிறோம் என்பதற்கும், மீள் குடியேற்றம் உடனடியாகவோ அன்றி கிட்டிய காலத்திலோ செய்ய முடியாது என்பதற்கும் நீண்ட விளக்கம் அளிக்கப்பட்டது. புலிகள் இயக்கத்தை முழுமையாக வடிகட்டி எடுக்கவும். வன்னியில் கண்ணி வெடிகளை கண்டு பிடித்து அகற்றவும் அதிக காலம் செல்லும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாகும் என்ற இறுக்கமான செய்தியே தமிழ்க் கூட்டமைப்பினருக்கு கூறப்பட்டது. இதனைக் கேட்டுக் கொண்டு வெறுங் கையுடன் திரும்புவதைத் தவிர வேறெதுவும் கூற முடியாத பரிதாப நிலையிலேயே அவர்கள் இருந்தனர். அவர்களிடம் உள்ள ஒரே திருப்தி பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளாவது உள்ளனவே என்பது மட்டுமேயாகும். ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் உள்ள சங்கடம் யாதெனில் அவர்கள் ஊர் உலகிற்குப் பாராளுமன்ற உறுப்பினர்களாவர். அது மட்டுமன்றி இதுவரை அரசாங்கத் தரப்பால் கூட்டமைப்பில் இருந்து எவரையும் தமது பக்கத்திற்கு பிரித்தெடுத்துக் கொள்ள இயலவில்லை. எனவே அவர்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டே அதற்கான முயற்சிகளும் இடம் பெறுவதாகவே பேசப்படுகிறது. அந்த வலைக்குள் ஓரிருவர் சிக்கவும் கூடும் என்ற நம்பிக்கை உள்ளது.

மேலும் ஏற்கனவே இடம்பெற்ற வடக்கின் தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினருக்குக் கிடைத்த வாக்கின் வீதம் 10ற்கும் குறைவானதாகும். யாழ் மாநகரசபையில் உறுப்பினர்களைப் பெற முடிந்தாலும் வவுனியாவில் நகரசபை நிர்வாகத்திற்கு தலைமை தாங்கினாலும் மக்களின் ஆதரவு நிலை அடிமட்டமாகவே இருந்து வருகிறது. பாராளுமன்ற உறுப்பினர் ஆகுவதோ ஏனைய தேர்தலில் தேர்ந்தெடுக்கப் படுவதோ மக்களின் ஆதரவில் அல்லது அரசியல் தெளிவின் கொள்கை விளக்கத்தின் வழிகளில் அல்ல. வர்க்கம், சாதி, ஊர், பணம், ஊழல், முறைகேடுகள் போன்றனவே ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் வெற்றியை தீர்மானிக்கின்றன. இதன் மூலம் அத்தகையவர்களே தலைமை தாங்குபவர்களாகக் காட்சிப்படுத்தப் படவும் செய்கின்றனர். இது 62 வருட முதலாளித்து பாராளுமன்ற ஆட்சி முறையின் இலட்சணம் ஆகும். தமிழ்த் தலைமைகள் இதற்கு விதிவிலக்கானவர்கள் அல்ல. அன்றிலிருந்து இன்றுவரை தமிழ்த் தேசியத்தின் பெயரால் பாராளு மன்றம் – ஆயுத நடவடிக்கைகள் – பாராளுமன்றம் எனச் சுழன்ற வண்ணமே உள்ளனர். இத்தகையவர்களுக்கு ஆதிக்க அரசியல், பாராளுமன்ற பதவிகள், பேரப்பேச்சுக்கள் போன்றவற்றிற்கு அப்பால் செல்ல முடிவதில்லை. தமிழ்த் தேசிய இனத்தின் மத்தியில் காணப்படும் இன வர்க்க சாதி பெண் ஒடுக்குமுறை களுக்கு எதிராக கொள்கை வைக்கவோ அவற்றுக் குரிய போராட்ட வழிமுறைகளை முன்னெடுக்கவோ தாயாராக வில்லை. இனிமேலும் புதிய மாற்றுக் கொள்கைக்கோ நடைமுறைக்கோ தயாராக மாட்டார்கள்.

karuna99இதன் வழியில் அரசாங்கத்தோடு இணைந்து நின்று செயலாற்றி வந்த ஈ.பி.டி.பி. இப்போது சற்றுத் தடுமாற்றம் அடைந்த நிலையிற் காணப்படுகிறது. அரசாங்கத்தின் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட நிர்ப்பந்திக்கப் பட்டதையும் வடக்கில் மக்களிடம் அதற்கு குறைந்தளவிலாவது வரவேற்பு கிடைக்காமல் போனதையிட்டும் உணர ஆரம்பித்துள்ளது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வெளியிட்டுள்ள கருத்துக்களில் அதனைக் காணமுடிகிறது. மகிந்த சிந்தனை அரசாங்கமும் ஜனாதிபதியும் தமது உள்நோக்க நிலைப்பாடுகளை வடக்கில் ஈ.பி.டி.பி. மூலமும் கிழக்கில் அமைச்சர் கருணா, முதலமைச்சர் சந்திரகாந்தன் மூலமும் நிறைவேற்றிக் கொள்ள முன்நிற்கிறார்களே தவிர அவர்கள் முன்வைக்கும் கோரிக்கைகளையோ அல்லது தமிழ் மக்கள் சார்பான விருப்பங்களையோ நிறைவேற்றத் தயாராக இல்லாத நிலையே காணப் படுகிறது. அதனால் இவர்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான உள்ளார்ந்த முரண்பாடுகள் வெளிவராத அடிக்கடியான புகைச்சல்களாகவே இருந்து வருகின்றன.

இதே நிலைதான் ஆயுதம் தூக்கி அதனால் அழிவுபட்டுப் பின்பு ஜனநாயக நீரோட்டம் என்று கூறிக்கொண்டு பாராளுமன்ற அரசியலுக்கு வந்தவர்களிடமும் காணப்படுகிறது. புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப். (பத்மநாபா அணி) மற்றும் ஆனந்தசங்கரியின் தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகியனவும் அரசாங்கத்தை எதிர்த்து நிற்கவும் முடியாது விட்டுச் தூரச் சென்று சுதந்திரமாக அரசியல் செய்யவும் முடியாத நிலையில் தடுமாற்றத்துடன் இருந்து வருகின்றனர். ஏறத்தாழ ஒரே நிலைப்பாட்டில் உள்ள இவர்களிடம் கூட ஒத்த கருத்தோ மாற்றுக் கொள்கையோ இல்லாத நிலைதான் தொடர்கிறது.

இவற்றைவிடத் தற்போது தமிழ்க் கூட்டமைப்பில் இருந்துவரும் ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப். ஆகிய இரண்டு கட்சிகளும் ஏற்கனவே புலி எதிர்ப்பு வன்மத்துடன் சந்திரிகா அரசின் கீழ் அரசாங்கத்துடன் இருந்து தமது நடவடிக்கைகளை முன்னெடுத்தவர்களாவர். புலிகள் மட்டுமே பிரதான எதிரியென கொண்டிருந்த இவர்கள் புலிகளின் ஆதரவுடன் பாராளுமன்ற பதவிகளைப் பெறவும் தமிழ் மக்கள் மத்தியில் தத்தமது பாராளுமன்ற அரசியலை தக்க வைக்கவும் தமிழ்க் கூட்டமைப்பில் இணைந்தனர். பாராளுமன்றப் பதவிகளைப் பெற்றனர். ஆனால் நிலைமை இந்தளவுக்கு ஆபத்தாக வருமெனக் கனவிலும் அவர்கள் நினைக்கவில்லை. அவர்கள் மட்டுமன்றித் தமிழ் மக்கள் மத்தியில் அன்று தொட்டு ஆண்ட பரம்பரை ஆதிக்கச் சிந்தனை வழியில் பாராளுமன்ற அரசியலில் இருந்து வந்த தமிழரசு-தமிழ்க்காங்கிரஸ் கட்சிகள் கூட இப்படியொரு அவல நிலைக்கு தள்ளப்படுவோம் என எதிர்பார்க்கவில்லை. இவர்கள் எல்லோரும் ஒருபுறம் புலிகளின் ஆயுதப் பலத்தையும் மறுபுறம் இந்திய ஆளும் வர்க்க எசமானர்களையும் நம்பியிருந்தனர். அவை இரண்டும் இன்று இவர்களின் பிடிக்குரியதாக இல்லாத நிலையில், நடையிழந்து குரலற்று வெறும் பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ற பெயரில் தட்டுதடுமாறியவர்களாக இருந்து வருகின்றனர். அதுமட்டுமன்றி இவர்கள் அனைவரிடம் ஒட்டுமொத்த தமிழ்த் தேசிய இனத்திற்கும் செய்த அரசியல் துரோகமும், மக்கள் மத்தியில் கொலை, கொள்ளை, சகோதரப் படுகொலை நிகழ்த்திய இரத்தக் கறைகளும் அழிக்கப்பட முடியாத அளவுக்கு நிறைந்துள்ளன.

tna077இவர்கள் அனைவரும் தமிழ்த் தேசியத்தை பின்பற்றியவர்கள் என்பதுடன் இந்திய ஆளும் வர்க்க எசமானர்களின் காலடியில் கிடந்து வந்தவர்கள். அழிவுகளைத் தேடிய புலிகளும் இத் தமிழ் கூட்டமைப்பினரும் தமிழ்த் தேசிய இனத்திற்கு மாபெரும் துரோகம் இழைத்தவர்களே ஆவர். இதில் யார் கூட குறையச் செய்தவர்கள் என்று கணக்கிட முடியாத அளவுக்கு சகல நிலைகளிலும் தமிழ்த் தேசிய இனத்தின் இருப்பிற்கும் எதிர்காலத்திற்கும் மாபெரும் அழிவுகளை தேடித் தந்திருக்கின்றனர். சில தமிழ் தேசியவாத ஆய்வுக்காரர்கள் இப்போதும் பாராளுமன்ற இடதுசாரிகள் இழைத்த அரசியல் தவறுகளை பெரும் தமிழினத் துரோகமாக ஊதிப் பெருப்பித்துக் காட்டி வருவதில் குறியாக இருக்கின்றனர். அத் தவறுகள் மறைக்கப்படுவதற்கு இல்லை. ஆனால் தமிழ்;த் தேசிய வாதத் தலைமைகள் அனைத்தும் தமிழ்த் தேசிய இனத்திற்கு செய்துள்ள மாபெரும் துரோகங்களோடு அவற்றை ஒப்பிட்டுப் பார்த்தால் அது மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் போன்றதாகும். இவற்றை வெறும் அரசியல் காழ்ப்புணர்வினால் நாம் கூறவில்லை. வரலாற்றின் ஊடே இடம்பெற்ற நிகழ்வுகளின் அடிப்படையிலேயே காணுகின்றோம்.

இந்த நிலையில் இருந்து தமிழ்த் தேசியவாதத் தலைமைகள் எவ்வகையிலும் மாற்றம் அடையப் போவதில்லை. ஆனால் தமிழ்த் தேசிய இனத்தின் முன்னால் ஒரு பாரிய அரசியல் கேள்வி எழுந்து நிற்கிறது. தொடர்ந்தும் செக்கு இழுத்த பாதையில் தமிழ்த் தேசிய வாத பிற்போக்கு தலைமைகளுக்குப் பின்னால் தலையாட்டி மாடுகள் போன்று அல்லது செம்மறியாட்டுக்கூட்ட மனோநிலையில் மேய்ப்பர்கள் காட்டும் இருட்டு அரசியலுக்குள் தொடர்ந்து செல்வதா அல்லது அதனை நிராகரித்த புதிய அரசியல் வழிமுறைகளை நாடுவதா என்பதே அக் கேள்வியாகும். கடந்த கால தமிழ்த் தேசியவாத அரசியல் வரலாற்றின் ஒவ்வொரு காலகட்ட வரலாற்று நிகழ்வுகளும் ஆழ்ந்து நோக்கப்படல் வேண்டும். அவற்றிலிருந்து உரிய அனுபவங்களும் பட்டறிவுகளும் பெறப்பட்ட மீளாய்வும் சுய விமர்சனங்களும் மக்கள் மத்தியில் முன்னெடுக்கப்படுவது அவசியம். அறணைத்தனமாக அன்றன்று மறந்துவிட்டு அரசியல் ஆதிக்க மேய்ப்பர்களின் பின்னால் ஓடும் அரசியல் கலாச்சாரத்திற்கு தமிழ் மக்கள் முற்றுப் புள்ளியிடல் வேண்டும்.

தமிழ்த் தேசிய இனத்தின் இன்றைய அவல நிலையையும் இருப்பையும் எதிர்காலத்திற்குரிய தொலைநோக்குத் திட்டங்களையும் வகுக்கக் கூடிய ஒரு பரந்து பட்ட அரசியல் விவாதம் அவசியம். இதனை, தனியே ஒரு கட்சி அல்லது சில படித்த மேதாவிகள் அல்லது புலம்பெயர்ந்த உயர்வர்க்க கனவான்கள் என்போரால் செய்ய முடியாது. தமிழ்த் தேசிய இனத்தின் பொரு ளாதார அரசியல் சமூகப் பண்பாட்டுத் தளங்களிலான யதார்த்த நிலைமைகளை உண்மைகளின் அடிப்படையிலும் வரலாற்று வளர்ச்சிகளின் ஊடாகவும் அலசி ஆராயப்பட வேண்டும். இவ் ஆராய்வும் கொள்கை முடிவுகளும் மேட்டுக்குடி உயர்வர்க்க சக்திகளின் தேவைகள் விருப்பு வெறுப்புக்களுக்கு அப்பால் எடுக்கப்படல் வேண்டும். பரந்துபட்ட தொழிலாளர்கள் விவசாயிகள் மீனவர்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் பெண்கள் மற்றும் கீழ் மத்தியதர வர்க்கத்தினரான அரசாங்க தனியார் துறையினர் மற்றும் உழை க்கும் மக்களின் நலன்களிலிருந்து தோற்றுவிக்கப் படல் வேண்டும். இத்தகைய நிலைப்பாடு தான் தமிழ்த் தேசிய இனத்திற்குரியதும் முதலாளித்துவ பேரினவாத ஆளும் அதிகார சக்திகளுக்கும் அவர்களது அன்னிய கூட்டாளிகளுக்கும் எதிராக முன்னேறிச் செல்லக் கூடியதுமான சரியான அரசியல் வெகுஜனப் போராட்ட மார்க்கமாக அமைய முடியும். இதனைத் தமக்குரிய வரலாற்றுக் கடமையாகவும் தமது தலைவிதியை தாமே தீர்மானிக்கும் வகையிலும் தமிழ் மக்கள் முன்னெடுக்க முன்வராது விட்டால் தொடர்ந்தும் அடக்குமுறைகள் அழிவுகள் அவலங்களுக்குள் அடிமைத்தனமான வாழ்வை மேற்கொள்ள வேண்டியே ஏற்படும்.