வாசகசாலை; மனதிற்கான வைத்தியசாலை

எம்.ரிஷான் ஷெரீப்
எம்.ரிஷான் ஷெரீப்

வாசிப்பு பற்றி ஒரு பதிவு எழுதியிருந்தேன். மனதுக்குப் பிடித்த புத்தக வாசிப்பானது, நோயாளிகளை விரைவில் குணப்படுத்த ஏதுவாகும். அவர்களது மனதை சாந்தப்படுத்தும். வெளிநாடுகளில் நோயாளிகளை விரைவில் குணமடையச் செய்ய இந்த முறையைப் பின்பற்றுகிறார்கள். அந்த நடைமுறை, இலங்கையிலுள்ள அநேகமான வைத்தியசாலைகளில் பின்பற்றப்படுவதில்லை. காரணங்கள் பலவற்றைச் சொல்லலாம்.

இலங்கையிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளும், அங்கு அனுமதிக்கப்படும் நோயாளிகளை, ‘நாம் நோயாளிகள்’, ‘நாம் பலவீனமானவர்கள்’ என உணரச் செய்துகொண்டேயிருக்கின்றன. இதே நிலைப்பாடுதான் நோயாளிகளுடன், அவர்களுக்கு உதவுவதற்காக, கூடத் தங்க நேர்பவர்களுக்கும். அந்த மந்த நிலையும், தன்னம்பிக்கை ஏற்படுத்தாத சூழலும் நோயாளிகளை இன்னுமின்னும் சோர்வடையச் செய்கின்றன. இந்த நிலைமையை மாற்ற நாம்தான் முயற்சிக்க வேண்டும்.

முதல் முயற்சியாக, நீர்கொழும்பு, மாவட்ட பொது வைத்தியசாலையிலுள்ள வைத்தியர் ஷாலிகா மற்றும் மருத்துவத் தாதிகளுடன் இணைந்து, அங்குள்ள டெங்கு நோயாளர் பிரிவில், ஒரு சிறு வாசகசாலை ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. நீர்கொழும்பு வைத்தியசாலையில் தற்போது தங்கி சிகிச்சை பெறுபவர்கள், மருத்துவ தாதிகளை அணுகுவதன் மூலம் இந்தச் சேவையைப் பெற்றுக் கொள்ளலாம்.

முற்றிலும் இலவச சேவையான இது, முற்றுமுழுதாக சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை, அங்கு தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கும், அவர்களைப் பார்த்துக் கொள்ளத் தங்கியிருக்கும் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் மாத்திரமானது. வைத்தியசாலையில் தங்க நேரும் காலப்பகுதியில், புத்தக வாசிப்பில் அவர்கள் காணும் மன நிறைவானது சொல்லி மாளாதது.

இதற்கு நீங்களும் உதவுவதை வரவேற்கிறேன். உதவ விரும்பும் அனைவரும் தங்களிடம் மேலதிகமாக இருக்கும் அல்லது அன்பளிப்பாகக் கொடுக்க விரும்பும் புத்தகங்களை அனுப்பி வைத்து உதவலாம். ஒரு புத்தகமாக இருந்தால் கூடப் பரவாயில்லை. சிறுவர் நூல்கள், சிறுகதை, கவிதை, நாவல்கள், தன்னம்பிக்கை தொகுப்புகள் என எந்த நல்ல தொகுப்பாக இருந்தாலும், எந்த மொழியில் இருந்தாலும், அனுப்பலாம்.

கவிஞர்கள், எழுத்தாளர்கள், நூலாசிரியர்கள் தாம் வெளியிட்டுள்ள தொகுப்புக்களில் ஒன்றை அனுப்பி வைத்தால் கூட பேருதவியாக இருக்கும். புதியதே வேண்டுமென்றில்லை. இன்னும் வாசிக்கக் கூடிய நிலைமையில் இருக்கும் எந்தத் தொகுப்பாக இருந்தாலும் சரி.

புத்தகங்களை அனுப்ப விரும்புபவர்கள் கீழுள்ள முகவரிக்கு, பதிவுத் தபாலில் (Registered Post) அனுப்பி வையுங்கள்.

To:
Nurse In charge,
DHDU,
District General hospital,
Negombo,
Srilanka

நன்றி !

என்றும் அன்புடன்,
எம்.ரிஷான் ஷெரீப்

கூர்மை பெறும் முன்னை நாள் விடுதலை புலிப் போராளிகளின் விவகாரம் :எஸ்.என் கோகிலவாணி

கடந்த ஆறு தசாப்தங்களுக்கு மேலாக தனது தலைவிதியினைத் தானே நிர்ணயித்துக் கொள்வதற்காக தமிழ் பேசும் மக்கள், பல வழிகளிலும் மேற்கொண்டு வந்திருந்த உரிமைப் போராட்டம் ஒரு நிறைவுறாத தொடர்ச்சியாக இன்று வரை நீண்டு செல்கின்றது. எத்தனையோ அவலங்கள் தியாகங்களைக் கடந்து வந்த நிலையில் இன்று தமக்கான உரிமையினை கோருவதற்கான அனைத்து வழிகளும் மிகவும் நுணுக்கமாக அடைக்கப்பட்ட ஒரு முட்டுச் சந்தியில் தமிழினம் நிறுத்தப்பட்டிருகின்றது.

vanni_genocideவன்னியின் இறுதி யுத்தத்தின் போது வெளித் தொடர்புகள், போக்குவரத்து வழிகள் உட்பட்ட அனைத்து வழிகளும் அடைக்கப்பட்ட நிலையில் மந்தைகள் போல மக்களை அடைத்து வைத்து ஆறு மாதங்களுக்கு மேலாகத் தனது கொலைத் தொழிலை இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வந்திருந்தமைக்கான ஆதாரமாக அந்தக் கொடூரங்களை எதிர்கொண்ட மக்கள் இன்னும் இருக்கின்றார்கள். அதை வெளிப்படுத்தும் ஆவணங்கள் இருக்கின்றன. தடை செய்யப்பட்ட ஆயுதங்களைப் பிரயோகித்து இலங்கை அரசாங்கம் யுத்தம் புரிந்துள்ளது என்பதற்கான ஆதாரமாக உடலியல் பாதிப்புகளுக்குள்ளான மக்கள் இன்றுவரை உலாவருகின்றார்கள். மொத்தத்தில் இறுதி யுத்தத்தில் மிகக் கொடூரமான வகையில் போர்க்குற்றங்களையும் மனித உரிமை மீறல்களையும் இலங்கை அரசாங்கமும் இராணுவமும் இழைத்திருக்கின்றன என்பதற்கு இதை விட சான்றுகள் இருக்க முடியாது. ஆனால் இங்கே பாதிக்கப்பட்டிருப்பது இலங்கையில் சிறுபான்மைத் தேசிய இனமான தமிழ் மக்கள். அந்தப் பாதிப்பை ஏற்படுத்தியது பெரும்பான்மை இன சிங்கள அரசாங்கமும் அதன் படைகளும். பெரும்பான்மை சிங்கள பௌத்த மக்கள் மீது தனது வாக்கு வங்கிக்காகத் தங்கியிருக்கும் ஆளும் சிங்கள அரச தரப்பு, அந்த மக்களின் ஒரு பகுதியான சிங்கள முப்படைகள் மீது விசாரணை நடாத்தி அவர்கள் போர்க்குற்றம் இழைத்துள்ளார்கள் என ஒரு போதும் நிறுவ முயலாது.

warcrimeஇந்த நிலையில் இலங்கையில் இராணுவத்திற்கெதிரான போர்க்குற்ற விசாரணையென்பது அது உள்ளக விசாரணையாகட்டும் அல்லது சர்வதேச விசாரணையாகட்டும் எந்தக் காலத்திலும் நடைபெறப்போவதில்லை. அப்படி நடாத்தப்பட்டால் கூட தற்போது ஈராக்கில் பிரித்தானியப் படைகள் போர்க்குற்றங்களில் ஈடுபட்டது தொடர்பில் சில அடி மட்ட இராணுவத்தினர் மீது குற்றங்களைச் சாட்டியது போன்றே இங்கும் கீழ் நிலையில் உள்ள ஒரு சில இராணுவத்தினர் மீது குற்றங்களைச் சாட்டி அவர்களைத் தண்டிப்பது போன்ற ஒரு பாவனையைக் காட்டுவதன் மூலம் சர்வதேசத்தையும் தனது சிங்கள பௌத்த மக்களையும் திருப்திப்படுத்தி தம்மை ஒரு நீதிவான்களாக, நடுநிலைத் தன்மை கொண்டவர்களாக காட்டுவதற்காகவே அந்த விசாரணை அமையுமேயன்றி அரச பயங்கரவாத நடவடிக்கைகளால் பாதிப்படைந்த மக்களுக்கான தீர்வு வழங்குவதற்காகவோ அல்லது பொறுப்புக் கூறலுக்காகவோ அமையாது.

இப் போர்க்குற்ற விசாரணை மற்றும் பொறுப்புக் கூறல் தொடர்பில் எதுவித முன்னேற்றமும் ஏற்படப் போவதில்லை என்பது வெளிப்படையாகவே உணர்ந்து கொள்ளப்பட்ட நிலையில் கடந்த 2010ம் ஆண்டில் இருந்து ஒரு வருடத்திற்கு இரு தடவைகள் ஜெனீவாவில் மனித உரிமைகள் ஆணைக்குழு முன் ஒன்று கூடுவதால் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை.

எமது நிலங்கள் இராணுவக் குடியிருப்புக்களாகவே தொடர்கின்றன. என்றும் எதுவும் நடைபெறலாம் என்ற அச்சம் கலந்த மயான அமைதி வடக்குக் கிழக்கின் நாளாந்த வாழ்க்கையாகிவிட்டது. நல்லிணக்கம், நல்லாட்சி என்ற தலைப்பில் நடத்தப்படுகின்ற சிறுபான்மைத் தேசிய இனங்களைச் சிதைக்கும் நடவடிக்கையின் பின்னணியில் குண்டு வீச்சுக்களும் போர் விமானங்களின் இரைச்சலும் மட்டுமே நிறுத்தப்பட்டிருக்கிறது.
.
Vavuniyaவட கிழக்கின் இன்றைய சூழலை மேலோட்டமாக அலசினால் இராணுவ ஒடுக்குமுறை தற்காலிகமாகத் தணிந்திருப்பது போன்ற போலியான தோற்றப்பாட்டைத் தந்துவிடும். உண்மை அதுவல்ல என்பது அங்கு நாளாந்தம் வாழ்கின்ற ஒவ்வொரு தமிழர்களுக்கும் தெரிந்திருக்கிறது.

சில காலங்கள் வரைக்கும் உலகத்தின் அதிகார பலம் மிக்க நாடுகளால் இலங்கை இராணுவம் போர்க்குற்றங்களுக்காகத் தண்டிக்கப்படும் என்ற நம்பிக்கை இன்று படிப்படியாகத் தகர்ந்து செல்ல ஆரம்பித்திருக்கிறது. இவ்வாறான சூழலில் வடக்குக் கிழக்கின் சந்து பொந்துக்களிலெல்லாம் போர்க்குற்றத்தில் ஈடுபட்ட இராணுவம் குடிகொண்டிருக்கிறது . மக்கள் குடியிருப்புக்கள் மத்தியில் இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டிக்கின்றன.

Dominique Strauss-Kahn
Dominique Strauss-Kahn

உலக நாணய நிதியத்தின் முகாமைத்துவ இயக்குனராகப் பதவிவகித்த டொமினிக் ஸ்ரொஸ்கான், நியூயோர்க் நகரில் வைத்து பாலியல் குற்றம் ஒன்று தொடர்பாகக் கைது செய்யப்பட்டுச் தனிமைச் சிறையில் வைக்கப்படுகிறார். அவர் தனிமைப் படுத்தப்பட்ட போது அமெரிக்க பாதுகாப்புத் துறை கூறிய பிரதான காரணம், அவரின் நடமாட்டத்தால் சமூகத்தில் ஏனையவர்களுக்குப் பாதிப்பு ஏற்படலாம் என்பதே. பாலியல் குற்றத்தில் ஈடுபட்டதாகக் கருதப்பட்ட ஒரு தனிமனிதனுக்கே இவ்வளவு கரிசனை என்றால் சாரிசாரியாகப் பாலியல் வல்லுறவிலும், போர்க்குற்றங்களிலும், மனிதப்படுகொலைகளிலும், இனவழிப்பிலும் ஈடுபட்ட இராணுவம் எப்படி மக்கள் குடியிருப்புக்களுக்கு மத்தியில் சுதந்திரமாக உலாவரலாம் என்ற கேள்வியை அரசை நோக்கி முன்வைப்பதற்கும் உலக மக்கள் மத்தியில் எடுத்துச்செல்வதற்கும் இன்று யாருமில்லை.

இந்த நிலையில் இலங்கை இராணுவத்தின் தடுப்பு முகாம்களில் புனர்வாழ்வு என்ற பெயரில் தடுத்து வைக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளது இனங்காண முடியாத மரணங்கள் என்ற செய்தி கடந்த இரு வாரங்களாக தமிழ் ஊடகங்களைப் பொறுத்தவரையில் முக்கிய இடத்தைப் பிடித்திருந்தது.

2009களின் நடுப்பகுதியில் வன்னிப் பகுதியில் மனிதாபிமான நடவடிக்கை என்ற பெயரில் தனது முப்படைகளையும் கொண்டு தமிழ் மக்கள் மீது கொடூரமான இன அழிப்பினை மேற்கொண்டிருந்த இலங்கை அரசாங்கம் எவ்வாறு தான் இழைத்த போர்க்குற்றங்களையும் மனித உரிமை மீறல்களையும் வெகு சாதாரணமாகக் கடந்து போக நினைக்கின்றதோ அதே போன்றே இங்கு குறிப்பிடப்படும் முன்னை நாள் விடுதலைப் புலிகள் அங்கத்தவர்களது விடயத்தையும் வெகு எளிதாகக் கடந்து சென்று விடும் என்பது ஒரு வெளிப்படை உண்மை.

சமீப காலங்களாக ஊடகங்களில் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னை நாள் போராளிகளில் 103 பேர் இனம் தெரியாத நோய்களினால் மரணித்தனர் என்ற செய்தி பரப்பரப்பாகப் பேசப்பட்டு வருகின்றது. தடுப்பு முகாம்களில் மிகக் குறைந்த இடப் பரப்பில், சுகாதார வசதிகளற்ற நிலையில் பெருமெடுப்பிலான போராளிகள் அடைத்து வைக்கப்பட்டனர். சாதாரணமாக நால்வர் தங்கக் கூடிய அறைகளில் இருபதிற்கும் மேற்பட்டோர் திணிக்கப்பட்டனர். ஆயிரம் வரையிலானோர் குளிப்பதற்கு அரை மணி நேரமே ஒதுக்கப்பட்டது. மலசல கூடங்களிற்கு நீர் வசதிகள் காணப்படவில்லை. ஏற்கனவே போர்முனைகளில் போராயுதங்களின் வீரியங்களினால் மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்த இப் போராளிகளுக்கு யுத்தத்தின் பின்னரான தடுப்பு முகாம் வாழ்க்கை என்பது மிக மோசமான காலத்தை உணர்த்தியிருந்தது.

இந்த நிலையில் தடுப்பு முகாம்களுக்குள் இருந்த வேளைகளிலேயே சில மரணங்கள் ஆண் பெண் போராளிகள் மத்தியில் இடம்பெற்றிருந்தமையை யாராலும் மறுக்க முடியாது. வைத்தியசாலைகளிலேயே அவை நிகழ்ந்திருந்தன. அந்த மரணங்களுக்கான காரணம் அறியப்படவில்லை. அதனை உள்ளிருந்து கேட்பதற்கான மனவலுவும் போராளிகளுக்கு அப்போது இருந்திருக்கவில்லை.

எங்களது தமிழ் அரசியல்வாதிகளைப் பொறுத்தவரையில் அடுத்த தேர்தலுக்கு தமிழ் மக்களது வாக்குகளைக் கவர்வதற்கு இந்த விடயம் பெரிதும் உதவியாக இருக்கப் போகின்றது.
விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து தாம் சார்ந்த சமூகத்தின் விடுதலைக்காகப் போராடிய போராளிகள் புனர்வாழ்வு என்ற பெயரில் தடுத்துவைக்கப்பட்ட பின்னரே சமூகத்தில் இணைந்துகொள்ள அனுமதிக்கப்பட்டனர்.
நல்லிணக்கம் தொடர்பாகவும் யாப்பு மாற்றம் தொடர்பாகவும் பேசுகின்ற எந்த அரசியல்வாதியும் முன்னை நாள் போராளிகளது நிலவரம் பற்றிப் பேசுவதில்லை.

நல்லிணக்கத்திற்குச் செல்வதற்கு முன்னால், கைதுசெய்யப்பட்ட போராளிகளின் இன்றைய நிலை தொடர்பான இலங்கை அரசிடமிருந்து குறைந்தபட்ச விபரங்களையாவது பெற்றுக்கொள்ள இவர்கள் முன்வந்ததில்லை. நூற்றுக்கணக்கான போராளிகள் வாழும் சாட்சிகளின்முன்னால் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் இன்றையை இருப்புத் தொடர்பான தகவல்களைக்கூடப் பெற்றுக்கொள்ள முடியாதவர்கள் இன்று தமிழர்களின் நலன் குறித்துப் பேசுகிறார்கள்.
இவர்கள் அனைவருமே போராளிகளை முன்வைத்து அரசியல் சுயலாபம் தேடிவதற்கு மட்டும் தவறியதில்லை.

இந்த நிலையில் தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டிருந்த போராளிகளில் 103 பேர் மர்மமாக இறந்து போயினர் என சில ஊடகங்களும் அரசியல்வாதிகளும் மக்களை உணர்ச்சிவசப்படுத்துவதன் காரணம் மர்மமானது.

இந்த 103 மரணங்களுக்கான எந்தவிதமான ஆதாரத்தையும் இவர்கள் இதுவரை முன்வைத்ததில்லை. இக் குற்றச்சாட்டை முன்வைப்பவர்கள் தமக்குத் தெரிந்த ஆதாரங்கள் இருந்தால் குறைந்த பட்ச விபரங்களோடு அவற்றை வெளிப்படுத்த வேண்டும். உணர்சிவசப்படுத்துவதற்கான வதந்திகள் போன்று அல்லாமல், ஆதாரபூர்வமாக இது குறித்த விடயங்களை முன்வைப்பது மிக மிக அவசியமாகும்.

தமது அரசியல் சுயலாபத்திற்காக போராளிகளைப் பகடைக்காயாக்கும் இது போன்ற குற்றச்சாட்டுக்கள் பாரிய பின் விளைவுகளை ஏற்படுத்தும். இன்று முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு தவறானது என நிறுவப்பட்டால், ஆதாரபூர்வமாக இலங்கை இராணுவம் மேற்கொண்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் அனைத்தும் புனைகதைகள் என இலங்கைப் பேரினவாதிகள் வாதிடுவதற்கான வாய்ப்பை வழங்கிவிடும்.

tamil-genocide-sri-lankaவன்னியில் திட்டமிட்ட இனப்படுகொலை நடத்தப்படிருக்கிறது. அதன் வடுக்கள் எமக்கான உரிமை கிடைத்தால் மட்டுமே ஆறும் என்பதில் மாற்றுக்கருத்துக்கள் இருக்க முடியாது. இத்தனை குற்றங்களுக்கும் பொறுப்பான இராணுவம், நீண்ட கால நோய்களை ஏற்படுத்தவல்ல நோய்களை உருவாக்கும் நச்சுக்களைப் போராளிகள் மீது செலுத்தியிருக்கலாம் என்ற சந்தேகங்கள் எழ இடமுண்டு. இரசாயனக் குண்டுகளையும் கொத்துக்குண்டுகளையும் மக்கள் மீது ஏவிய இராணுவத்திற்கு இவை ஒன்றும் தலைபோகிற விடையமல்ல

இக் குற்றச்சாட்டைப் பொறுப்புணர்வுடன் முன்வைப்பவர்களாக இருப்பின் சில தகவமைக்கப்பட்ட முழுமையான ஆதாரங்களை முன்வைக்கட்டும். அவ்வாறான ஆதாரங்கள் இருந்தால் போராளிகள் அனைவர் மீதான பொருத்தமான மருத்துவப் பரிசோதனை ஒன்றைக் கோரி மக்களை அணிதிரட்டிப் போராட வேண்டும். இந்த கொடூரத்திற்கு எதிராக உலகின் மனிதாபிமானிகளையும் ஜனநாயகவாதிகளையும் ஒன்றிணைய அழைக்கவேண்டும். இதன் பின்னர் உடனடி மருத்துவ நிவாரணமும் விசாரணைக்கான பொறிமுறையும் முன்மொழியப்பட வேண்டும்.

இவற்றையெல்லாம் தவிர்த்து வட கிழக்கிலும் புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்களின் காதுகளுக்கு மட்டும் எட்டுமாறு பொறுப்பற்ற வகையில் செயற்படுவது சமூகப்பற்றுள்ளவர்களின் நடவடிக்கையன்று.

இவை அரசியல் சுயலாபத்திற்கு மட்டுமே பயன்படும். இத்தகைய உருவேற்றும் உணர்ச்சி அரசியல் எம் மத்தியிலிருந்து இல்லாமல் ஆக்கப்பட்டவர்களுக்கும், அவலத்தை எதிர்நோக்கும் மக்களுக்கும், துயரின் விளிம்புகளில் வாழும் போராளிகளுக்கும் எந்த விதத்திலும் உதவப் போவதில்லை. மாறாக சுய நிர்ணைய உரிமைக்கான எமது போராட்டத்தின் நியாயத் தன்மையினை கேள்விக்குரியதாக்கும் ஒன்றாகவே அமையும்.

நன்றி : தினக்குரல்

வாசிப்பு – ஒரு கலை ! : எம்.ரிஷான் ஷெரீப்

edwin-louis-cole‘வாசிப்பு மனிதனைப் பூரணப்படுத்தும்’ என ஒரு பழமொழி இருக்கிறது. உண்மைதான். மனிதனின் உடல் வளர்ச்சிக்கு உணவும் மருந்தும் எவ்வளவு உதவி செய்கின்றனவோ, அது போலவே மனிதனின் மன வளர்ச்சிக்கும், ஆளுமை விருத்திக்கும் புத்தகங்கள் உதவுகின்றன. புத்தகங்கள் வாசிக்கும்போது சில படிமுறைகள் பின்பற்றப்பட வேண்டுமென்பது உங்களில் பலருக்குத் தெரியாமலிருக்கும். அது ‘வாசிக்கும் கலை’ எனப்படுகிறது.

வாசிக்கும் கலை குறித்து வெவ்வேறு அறிஞர்கள் வெவ்வேறு கருத்துக்களைக் குறிப்பிட்டுள்ளனர். அவற்றுள் 1972 இல் தோமஸ் மற்றும் ரொபின்சன் ஆகியோரால் அறிமுகப்படுத்தப்பட்ட SQ3R (எஸ்.க்யூ.த்ரீ.ஆர்) முறை பிரபலமான ஒரு முறை. இங்கு SQ3R முறையின் கீழ் புத்தகமொன்றை வெற்றிகரமாக வாசித்து முடிப்பதற்கு ஐந்து படிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.

S – Survey ( தேடிப் பார்த்தல்)
Q – Question ( கேள்வி எழுப்புதல்)
R – Read (வாசித்தல்)
R – Retrive ( மீளவும் பார்த்தல்)
R – Review (விமர்சித்தல்)

இங்கு முதல் படிமுறை S – Survey ( தேடிப் பார்த்தல்) ஆகும். தேடிப்பார்ப்பதில் நூலின் பெயர், நூலாசிரியர், பிரசுரிக்கப்பட்டுள்ள ஆண்டு, முன்னுரை மற்றும் அறிமுகம், பக்கங்களின் எண்ணிக்கை ஆகியவற்றை ஆராய்ந்து பார்ப்பது முக்கியமாகும். நூல் குறித்த கேள்விகளை எழுப்புவது இரண்டாவது படிமுறையாகும்.

‘இந்த நூலை வாசிப்பதால் எனக்குப் பயனிருக்குமா?’

‘இதில் உள்ளடங்கியுள்ள விடயங்கள் என்னென்ன?’

போன்ற கேள்விகளை எழுப்பி விடை கண்டுகொள்வது அவசியமாகும். அவ்வாறு விடைகளைக் கண்டுகொண்ட பிற்பாடு, அந் நூலை வாசிக்க ஆரம்பிப்பது மூன்றாவது படிமுறை. மிகுந்த அவதானத்தோடு புத்தகங்களை வாசிப்பது மிக முக்கியமானது. அவ்வாறு அவதானத்துடன் வாசிப்பதோடு, வாசித்த விடயங்களை மீளவும் மனதிற்குள் மீட்டிப் பார்ப்பது நான்காவது படிமுறை. இவ்வாறு செய்யும்போது நீங்களே அந் நூல் குறித்த ஒரு முடிவுக்கு வந்திருப்பீர்கள். அடுத்ததாக இங்கு ஐந்தாவது படிமுறையானது, முழுமையாக நூலை வாசித்து முடித்த பிற்பாடு, அந் நூல் குறித்து விமர்சிப்பதாகும்.

இந்த வழிமுறையில் புத்தகமொன்றை வாசித்து முடித்த பின்பு, உங்கள் அறிவு விருத்தியாகியிருப்பதோடு, மனதும் மகிழ்வுடன் இருக்கும். இதனால் வாசிக்கும் ஆர்வமும் அதிகரித்து, நேரமும் பயனுள்ள முறையில் கழியும்.

மாணவர்கள் பரீட்சைகள் எழுதிவிட்டு, பெறுபேற்றை எதிர்பார்த்துக் காத்திருக்கும் காலகட்டமானது தரமான புத்தகங்களை வாசிப்பதற்கென உகந்த காலம். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல நூல்களை வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தால், அவர்களது நேரத்தைப் பயனுள்ளதாக்குவதோடு, நல்லதொரு வழிகாட்டியையும் அவர்களுடனேயே இருக்க வைப்பது போலாகும்.

சிந்திப்போம் !

– எம்.ரிஷான் ஷெரீப்

அனைத்து ஹார்ட்லி கல்லூரி பழைய மாணவர்களின் கவனத்துக்கு : வைத்திய கலாநிதி முரளி வல்லிபுரநாதன்

Murali-Vallipuranathanபருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரியின் கொழும்புக் கிளையானது கடந்த 75 வருடங்களுக்கு மேலாக அதற்குரிய சுயாதீன யாப்புடன் கிட்டத்தட்ட 750 உறுப்பினர்களுடன் இயங்கி வருகிறது. ஹார்ட்லி கல்லூரியின் பழைய மாணவர்கள் கடின உழைப்பினால் பல துறைகளிலும் உயர்ந்த நிலையை அடைந்து கல்லூரியின் நற்பெயரை தொடர்ந்து பேணி வருகிறார்கள் . சமுதாய மருத்துவ நிபுணராக கடமை ஆற்றி வரும் நான் கொழும்புக் கிளையின் நிர்வாக சபை உறுப்பினராகவும் பிரதி தலைவராகவும் பல வருடங்களாக செயல்பட்டுள்ள நிலையில் ஹார்ட்லி கல்லூரியில் மாணவர்களுக்கு உதவும் முகமாக வருடந்தோறும் சதுரங்கப் பயிற்சி பட்டறைகளையும் உயிரியல் விளக்க வகுப்புகளையும் ஒரு சேவையாக நடாத்தி வருகிறேன்.

கடந்த சில வருடங்களாக கொழும்புக் கிளையில் பதவியில் உள்ளவர்கள் யாப்பு விதிகளை மீறி சட்டவிரோதமாகவும் பழைய மாணவர் சங்கத்தை அரசியல் இலாபம் ஈட்டும் நோக்கத்துடனும் பயன்படுத்தி சுயநலமாக செயல்ப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு யாப்பு விதிகளுக்கு அமைய இயங்குமாறு என்னாலும் ஏனைய சிரேஷ்ட உறுப்பினர்களினாலும் விடுக்கப்பட்ட கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு செவிடன் காதில் ஊதிய சங்காகிய நிலையில் இறுதிக் கட்ட நடவடிக்கையாக யாப்பு விதிகளை அமூல் படுத்தவும் நல்லாட்சியைக் கொண்டுவரும் முகமாகவும் நீதிமன்ற இடையீட்டைக் கோரும் நிலைமை ஏற்பட்டது. 27.07.2016 சக பழைய மாணவர்களின் ஒத்துழைப்புடன் நான் தாக்கல் செய்த மனுவை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் விசாரணை செய்து ஹார்ட்லி கல்லூரி பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளையின் வருடாந்தப் பொதுக் கூட்டத்தை 28.07.2016 அன்று நடத்துவதை தடை செய்து உத்தரவிட்டதுடன் மேலதிக விசாரணைகளை 10.08.2016க்கு ஒத்திவைத்துள்ளது.இது தொடர்பாக மேலதிக விளக்கம் அளிக்கும் வகையில் ஹார்ட்லி கல்லூரியின் கொழும்புக் கிளையில் இடம் பெற்று வரும் சட்டவிரோத நடவடிக்கைகளை உங்களுடைய கவனத்துக்கு சமர்ப்பிக்கிறேன்

1. ஜனநாயக உரிமை மறுப்பு :பொதுவான உறுப்பினர்களின் நிர்வாக சபைக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் உரிமையை மறுத்தல்
யாப்பு விதிகளுக்கு முரணாக 29. 06.2016 நிர்வாக சபைக்கான வேட்பு மனுக்கள் முடிவு செய்யப்பட்ட பின்னரே 28.07.16 வருடாந்த பொதுக் கூட்டத்தை நடத்துவதற்கான கடிதங்கள் உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டன. யாப்பு விதிகளின் படி முதலில் செயலாளர் நிர்வாக சபையில் உள்ள பதவிகளுக்கு விண்ணப்பங்களை வெளிப்படையாக கோரவேண்டும். ஹார்ட்லி கல்லூரியின் எந்த ஒரு கிளையிலும் 3 வருடங்களுக்கு மேலாக உறுப்பினராக இருந்த எவரும் வருடாந்தப் பொதுக் கூட்டத்துக்கு 2 வாரம் முன்னதாக வேட்பு மனுவை தாக்கல் செய்ய முடியும். அதன்பின்னரே நிர்வாக சபை வருடாந்த பொதுக் கூட்டத்துக்கு ஒரு வாரம் முன்பாக தகுதி வாய்ந்த வேட்பு மனுக்களை முடிவு செய்ய வேண்டும். ஆனால் தற்போதுள்ள செயலாளர் நிர்வாக சபை பதவிகளுக்கு வெளிப்படையாக ஒரு போதும் விண்ணப்பங்களைக் கோருவதில்லை. இவருடைய இந்த சட்டவிரோத நடவடிக்கையினால் நிர்வாக சபையில் இல்லாத உறுப்பினர்கள் நிர்வாக சபையினுள் வருவது தடை செய்யப் படுவதுடன் அவர்களுடைய ஜனநாயக உரிமைகள் மறுக்கப்படுகிறது. இதன் மூலமாக நிர்வாக சபை உறுப்பினர்கள் போட்டியின்றி மீண்டும் தெரிவு செய்யப்படுவதற்கு வழி ஏற்படுகிறது . நிர்வாக சபையில் பெரும்பான்மையோர் தொடர்ச்சியாக 2 வருடங்கள் அல்லது அதற்கு மேலாக பல வருடங்களாக தொடர்ந்து பதவியில் நீடித்து வருகின்றனர். இம்முறை பழைய மாணவர் சங்கத்தின் சரித்திரத்தில் முன்னொருபோதும் இல்லாத வகையில் தலைவர் ஏனைய உறுப்பினர்களுக்கு சந்தர்ப்பம் வழங்காமல் மூன்றாவது வருடமாகவும் தனது பதவியில் நீடிப்பதற்கு முயன்று வருகிறார். இவர் முந்திய தலைவருக்கு இரண்டாவது சந்தர்ப்பம் வழங்காது அனைவருக்கும் சந்தர்ப்பம் வழங்கப் படவேண்டும் என்று கூறி பதவிக்கு வந்தவர் என்பது குறிப்பிடத் தக்கது. 11.07.2016 அன்று யாப்பு விதிகளின் படி வருடாந்தப் பொதுக் கூட்டத்துக்கு

2 வாரம் முன்னரே அனுப்பப்பட்ட எனது தலைவர் பதவிக்கான வேட்பு மனு எந்தக் காரணமும் காட்டப் படாமல் நிராகரிக்கப் பட்டது. எந்த ஒரு ஜனநாயக அமைப்பிலும் காணப்படும் அடிப்படை உரிமையாகிய அனைத்து உறுப்பினர்களுக்கும் நிர்வாக சபையில் உள்ள பதவிகளை வகிக்கும் உரிமையை மறுக்கும் குறைந்த பட்சம் வேட்பு மனு தாக்கல் செய்வதை அனுமதிக்காத சட்டவிரோத சதி செயல்களையும் அராஜகப் போக்கையும் எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும் ? இவ்வாறு நடப்பது கல்லூரிக்கு நற்பெயர் சேர்க்குமா என்பதை அனைத்து உறுப்பினர்களும் சிந்தித்து பார்க்க வேண்டும்.

2. சட்டவிரோதமான மோசடிக் கணக்கு வழக்குகள்
மேலும் சங்கத்தின் வரவு செலவுக் கணக்கு விபரங்கள் யாப்பின்படி ஒரு மாதம் முன்னராகவே உறுப்பினர்களுக்கு கிடைக்க வேண்டும். இவ்வாறு முன்னரே அனுப்பாமல் வருடாந்தப் பொதுக் கூட்டம் நடந்து கொண்டிருக்கும் போது 8-10 பக்கங்கள் கொண்ட கணக்கு வழக்கை சமர்ப்பித்து உறுப்பினர்கள் அதை சரியாக வாசிக்க முன்னரே அதை அங்கீகரிக்குமாறு கோருவது திட்டமிட்ட மோசடி ஆகும். உதாரணமாக சில மாதங்களுக்கு முன்னர் நடத்தப்பட்ட ஒருநாள் மருத்துவ முகாமுக்கான செலவு சரியாக ஒரு இலட்சம் ரூபாய்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மையான செலவு எவ்வாறு சரியாக ஒரு இலட்சம் ரூபாயாக இருக்கும் என்பதற்கு அப்பால் பங்கு பற்றிய மருத்துவர்கள் அனைவரும் தமது சேவைகளை இலவசமாக வழங்கியுள்ள நிலையில் ஒரு நாள் மருத்துவ முகாமுக்கு ஒரு இலட்சம் ரூபாய்கள் என்பது மிகவும் அதிகமாக ஏற்றுக் கொள்ள முடியாத செலவாக உள்ளது. நான் யாழ் மருத்துவ சங்கத்தின் தலைவராக இருந்த போதும் வேறு சந்தர்ப்பங்களிலும் பல இலவச மருத்துவ முகாம்களை நடாத்தி இருக்கிறேன் . பொதுவாக 10 தொடக்கம் 20 ஆயிரமே இதற்காக செலவாகும். இவை எல்லாவற்றையும் விட மிகப் பெரிய சட்டவிரோத மோசடியானது பழைய மாணவர் சங்க உறுப்பினர் ஒருவரைக் கொண்டே கணக்காய்வு (audit ) செய்வது ஆகும். கணக்காய்வு சட்டப்படி சங்கத்தின் உறுப்பினர் அல்லாத ஒருவரினால் நல முரண்பாடு (conflict of interest ) எதுவும் அற்ற நிலையில் சுயாதீனமாக செய்யப் படவேண்டும்.

3. ஒழுங்கற்ற சட்ட விரோத நிர்வாக சபைக் கூட்டங்கள்

நிர்வாக சபைக் கூட்டங்கள் செயலாளரினால் யாப்பு விதிகளுக்கு அமைய 2 வாரங்களுக்கு முன்னதாகவே அனைத்து நிர்வாக சபை உறுப்பினர்களுக்கு அறிவிக்கப் படவேண்டும். முன் கூட்டியே ஒரு சிலருடன் திட்டமிட்டுவிட்டு 3 தினங்களுக்கு முன்னர் ஏனையோருக்கு நிர்வாக சபைக் கூட்டம் இடம் பெறும் என அறிவிப்பது என்னைப் போன்ற பல வேலைகளில் ஈடுபட்டுள்ளவர்களை வராமல் பண்ணுவதற்குரிய கபட நாடகமாகும். பல சந்தர்ப்பங்களில் உரிய கடந்த கூட்ட நடவடிக்கைக் குறிப்புகளும் நிகழ்ச்சி நிரலும் முன் கூட்டியே அனுப்பப் படவில்லை.

4. பழைய மாணவர்களைக் கௌரவிக்காமை

வருடாந்த பொதுக் கூட்டத்துக்கு கல்வியினாலும் கடின உழைப்பினாலும் வாழ்க்கையில் உயர்ந்த பழைய மாணவர்களை விருந்தினராக கௌரவிப்பது உயர்நிலை அடைந்த பாடசாலைகளின் பழைய மாணவர் சங்கத்தின் வழக்கம் ஆகும். இந்த வழக்கமே பாடசாலை மாணவர்களையும் கனிஷ்ட பழைய மாணவர்களையும் மேலும் உயர் நிலையை அடைய ஊக்குவிக்கும் . ஆனால் ஹார்ட்லி பழைய மாணவர் சங்கம் கடந்த 2 வருடங்களாக எந்த பழைய மாணவரையும் கௌரவிக்காமல் இருப்பதுடன் பழைய மாணவர் அல்லாத ஒரு அரசியல்வாதியை கௌரவிப்பதன் மூலம் மாணவர்களை கல்வி கடின உழைப்பு இன்றி குறுக்கு வழியில் முன்னேறும் பாதையில் செல்ல ஊக்குவிக்கிறது.

5. அரசியல் மயப் படுத்துதல்

உலகத் தமிழர்கள் அனைவரும் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தினால் மேற்கொள்ளப் பட்ட ஆயிரக் கணக்கான அப்பாவித் தமிழர் படுகொலையை நினைவு கூரும் கறுப்பு ஜூலையை அனுஷ்டிக்கும் போது அதே ஜூலை மாதத்திலேயே அதிகளவு தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட கொழும்பு மண்ணிலே இன்றுவரை ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த எவருமே இந்தப் படுகொலை தொடர்பாக மன்னிப்பு கேட்காத நிலையில் ஹார்ட்லி கல்லூரிக்கு ஒரு பஸ் வண்டி கிடைத்ததற்காக பிரதமருக்கு பாராட்டு விழா எடுப்பது என்பது எவ்வளவு தூரம் பொருத்தமானது என்பதை ஒவ்வொரு தமிழரும் சிந்தித்து பார்க்கவேண்டும். 83 இனப் படுகொலையின் பின்னர் தமிழரின் முதுகெலும்பான கல்வியை வழங்கும் நூலக எரிப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக இலங்கையிலேயே தலை சிறந்த ஒரு கல்லூரி நூலகமாக இருந்த ஹார்ட்லி கல்லூரி நூலகம் 1984 இல் எரிக்கப் பட்டதும் இன்று வரை இந்த நூலகம் பழைய நிலைக்கு நிகராக கட்டி எழுப்பப் படவில்லை என்பதையும் இந்த இடத்திலே குறிப்பிட்டாக வேண்டும். இலங்கையில் கல்வி நிலையில் தலை சிறந்த பாடசாலைகள் பல சொந்தமாக பஸ் வண்டியைக் கொண்டிராத நிலையில் ஹார்ட்லி கல்லூரிக்கு பஸ் எந்த நோக்கத்தில் வழங்கப் படுகிறது என்பதையும் ஆராய வேண்டி இருக்கிறது. மேலும் பஸ் வண்டியை வழங்கிய காரணத்தினால் பிரதமரை ஹார்ட்லி பழைய மாணவர்கள் கௌரவித்தார்கள் என்று வைத்துக் கொண்டாலும் அமைச்சர் சுவாமிநாதன் போன்ற ஹார்ட்லியுடன் தொடர்பில்லாத ஐக்கிய தேசியக் கட்சி பிரமுகர்கள் ஏன் இந்த பாராட்டு விழாவுக்கு அழைக்கப் படவேண்டும்?

ஹார்ட்லியின் நண்பர்களே! மேலே நான் குறிப்பிட்டிருக்கும் சட்ட விரோத நடவடிக்கைகளும் அரசியல் சூழ்ச்சிகளும் பாடசாலைக்கு நற் பெயருக்கும் மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கும் உதவப் போகின்றதா ? நான் இந்த வழக்கை வைப்பதற்கு முன்னர் இதை சிரேஷ்ட உறுப்பினர்களின் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முயன்றேன். எனது நண்பரும் தற்போதைய தலைவரின் நெருங்கிய உறவினருமான திரு ராஜசிங்கம் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த முயன்றபோது, ஹார்ட்லி கல்லூரி மின்னஞ்சல் பதில்கள் வேலை நேரத்தில் அனுப்பப் பட்டிருக்கிறது என்றும் ஹார்ட்லி கல்லூரி நிகழ்வில் சிங்களத்தில் தேசிய கீதம் பாடுவதை ஆட்சேபித்து நான் அனுப்பிய மின்னஞ்சல் கைவசம் இருப்பதாகவும் தெரிவித்து இதன் மூலமாக என்னை பதவி நீக்க முடியும் என்று பயமுறுத்தி இருந்தார் தலைவர். இப்படிப் பட்டவரை தொடர்ந்து தலைவராக வைத்திருக்க வேண்டுமா?

இத்தகைய சூழ்நிலையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி பழைய மாணவர் சங்கத்தை யாப்பின் படி இயங்கவும் பாடசாலையின் நற்பெயரைக் காக்கவும் எனது செயல்பாடுகளுக்கு ஆதரவு நல்குமாறு அனைவரையும் நட்புடன் கேட்டுக் கொள்கிறேன்
நன்றி

வைத்திய கலாநிதி முரளி வல்லிபுரநாதன்

மேற்கின் பிரபல பாடகி இன் புரட்சிக்குரல் : பின் தங்கிய தமிழ்ச் சமூகத்திலிருந்து புதிய குரல்

M.I.A.'s fourth album, Matangi, is out now.
M.I.A.’s fourth album, Matangi, is out now.

தமிழர்கள் அப்பட்டமான சந்தர்ப்பவாதிகள், தமது வாழ்க்கைக்காகவும் இருப்பிற்காகவும் ஏகாதிபத்தியங்களுடனும் நிறவாதிகளுடனும் சமரசம் செய்துகொள்ளத் தயார் நிலையிலிருப்பவர்கள் என்ற விம்பத்தை M.I.A தகர்த்துள்ளர். ஈரோஸ் இயக்கத்தின் ஆரம்பகால நிறுவனர்களில் ஒருவரான அருளர் என்ற அருள்பிரகாசம் அவர்களின் மகளான M.I.A சமூகப் பிரச்சனைகளுக்கு எதிராகச் தனது குரலைப் பல தடவை உரக்க ஒலித்துள்ளார்.

இனப்படுகொலைக்கு எதிராகவும், ஏகாதிபத்தியங்களுக்கு எதிராகவும், நிறவாதத்திற்கு எதிராகவும் உரிமை என்ற பெயரில் வியபாரம் செய்யும் சந்தர்ப்பவாதிகளுக்கு எதிராகவும் M.I.A சரணடைவுகளுக்கு விட்டுக்கொடுப்புக்களும் அப்பால் தனியாகப் போராடியுள்ளர். அமெரிக்காவிலும், பிரித்தானியாவிலும் பிரபல ஹிப் ஹொப் பாடகியாகத் திகழும் மாயாவின் போராட்டம் இன்றையை புதிய சந்ததிக்கு முன்னுதாரணம். பின் தங்கிய சிந்தனையில் ஊறியுள்ள ஈழத் தமிழ்ச் சமூகத்தின் மத்தியிலிருந்து M.I.A போன்றவர்களின் தோற்றம் இன்று அவசியமானது.
விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ், அமெரிக்காவின் அழுகிய முகத்தை உலகிற்குக் காட்டிய எட்வார்ட் ஸ்னோடன் போன்றவர்களுக்காகக் குரல் கொடுத்த மாயா, வன்னி இனப்படுகொலைக்கு எதிராக உலகம் முழுவதும் தனது குரலைப் பதிவுசெய்திருக்கிறார்.

41 வயதாகும் மாதங்கி அருட்பிரகாசம் M.I.A என்ற பெயரிலேயே உலகெங்கும் அறியப்பட்டவர்.

ஜூலை மாதம் 16 ஆம் திகதியன்று லண்டன் நகரில் வெளியாகும் என்ற நாழிதழுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றின் பின்னர் உலகப் புகழ் பெற்ற AFROPUNK நிகழ்விலிருந்து நீக்கப்பட்டுள்ளர்.

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 24ம் திகதியன்று லண்டனில் நடைபெறும் விழாவில் உலகின் புகழ் பெற்ற பாடகர்கள் பலர் கலந்துகொள்கின்றனர். அதேவேளை M.I.A அந்த நிகழ்ச்சியிலிருந்து ஒழுங்கமைப்பாளர்களால் நீக்கப்பட்டுள்ளார்.

இலங்கை அரசின் போர்க்குற்றங்களைப் பற்றி அமெரிக்காவின் டைம்ஸ் கோபுரத்திலோ, பிரித்தானிய தேம்ஸ் நதி ஓரத்திலோ உட்கார்ந்து பேசினால் யாரும் கண்டுகொள்ளப் போவதில்லை. அமெரிக்காவும் பிரித்தானியாவும் அப்படிப் பேசுபவர்களைத் தட்டிக்கொடுத்துக்கொண்டே இலங்கை அரசிற்கு ஆயுதங்களையும் ஆலோசனைகளையும் வழங்கும் ஆனால் அங்கெல்லாம் ஆப்கானிஸ்தானிலும் சிரியாவிலும் இலங்கையிலும் ஏன் உலகின் ஏனைய பகுதிகளிலும் இந்த நாடுகள் நடத்தும் யுத்த வெறியாட்டங்களையும் சூறையாடலையும் பற்றிப் பேசினால் மட்டும் சிக்கலுக்கு உள்ளாக்கப்பட வாய்ப்புக்கள் உண்டு,

இன்று இலங்கையில் தமிழர்களின் மீதான இனப்படுகொலையை சிங்கள உழைக்கும் மக்களுக்கு உணர்த்தினாலோ அவர்களுடன் போராட்டங்களில் கைகோர்த்துக்கொண்டாலோ அழிக்கப்படுவோம். இம் முறை இலங்கை அரசு போர் வெற்றியைக் கொண்டாடவில்லை. இன்னும் சில வருடங்களில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் மாவீரர் தினத்தைக் கொண்டாட அனுமதித்தாலும் வியப்படைவதற்கில்லை. அதற்கிடையில் இலங்கையின் ஏழை மக்களும், தமிழ்ப் பேசும் சிறுபான்மையினரும் ஒட்டச் சூறையாடப்பட்டிருப்பார்கள். ஒடுக்கப்பட்ட மக்கள் எங்கிருந்தாலும் அவர்கள் எமது நண்பர்கள் என்றும், ஒடுக்கும் அதிகாரவர்க்கம் எங்கிருந்தாலும் அவர்கள் எதிரிகள் என்றும் மக்களுக்குக் கூறுவதற்கு இலங்கையில் அரசியல் தலைமை இல்லை. அதேவேளை மாயா கூறுகிறார் ‘உலகம் முழுவதுமுள்ள மக்களுக்காக நான் குரலெழுப்புகிறேன். ஒருவர் மற்றொருவரை விட முக்கியமானவர் என்று கூறமுடியாது. சமமான உரிமை தான் இங்கு முக்கியமானது’.

எம்மைப் பாதுகாத்துக்கொள்வதற்காக உலகம் முழுவதையும் கொலைக் களமாக மாற்றும் அமெரிக்காவிடம் மண்டியிடுவோம் என அறைகூவிய தமிழ்த் தலமைகளுக்கு மத்தியில் மாயா உயர்ந்து நிற்கிறார்.

அமெரிக்காவில் கறுப்பினத்தவர் கொல்லப்படுவதையும் ஒடுக்கப்படுவதையும் முன்வைத்துத் தோன்றிய அமைப்புத் தான் Black Lives Matter (கறுப்பர்களின் வாழ்க்கை முக்கிய விடையம்)

தன்னார்வ நிறுவனம் போன்ற இந்த அமைப்பின் உயர் மட்ட உறுப்பினர்கள் அமெரிக்காவை நேசிப்பதாகவும் அங்கு வாழும் கறுப்பினத்தோரின் வாழ்க்கையை உறுதி செய்வதே தமது நோக்கம் என்கிறார்கள். அமெரிக்காவை மட்டுமல்ல அந்த நாடு ஒடுக்கப்படும் மக்கள் மீது மேற்கொள்ளும் கொலைகளையுமே அவர்கள் நேசிக்கிறார்கள் என்பதே அத்ன் உள்ளர்த்தம். ஒபாமாவிற்கான தமிழர்கள் என்ற அமைப்பையே உருவாக்கி வைத்திருக்கும் எமது தமிழ்த் தேசியவாத ‘முனோடிகளுக்கு’ இதெல்லாம் புரிந்துகொள்ள முடியாத புதிர்கள் தான்.

அடையாளம் ஒன்றை முன்வைத்து மட்டுமே அரசியல் நடத்தும் இந்த நிகழ்ச்சிப் போக்கிற்கு எதிராக மாயாவின் கருத்துக்கள் கோபம் நிறைந்தது. அவர் Evening Standard இற்கு வழங்கிய நேர்காணலில், ” Beyoncé அல்லது Kendrick Lamar ‘இஸ்லாமியர்களின் வாழ்க்கை முக்கியமான விடயம்’ என்றோ ‘சிரிய மக்களின் வாழ்க்கை முக்கியமான விடையம்’ என்றோ கூறுவார்களா? அல்லது பாக்கிஸ்தானிய குழந்தைகள் பற்றி ஏதாவது கூறப்போகிறார்களா? அப்பிள் இல் ஒரு பாட்டாக அதனை நீங்கள் கேட்க முடியாது, ஓனன் அமெரிக்கத் தொலைக்காட்சியில் நீங்கள் அதனைக் கேட்க முடியாது. ரிவிட்டரில் டாக் ஒன்றை உருவாக்க முடியாது. மிஷேல் ஒபாமா உங்களைக் கொண்டாடப் போவதில்லை. இவைதான் சுவாரசியமான கேள்விகள். ”
இக் கருத்துக்களுக்காகத் தான் மாயா இலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

தம்மைக் அமெரிக்கக் கறுப்பினத்தவரின் குரலாக அடையாளப்படுத்திக்கொள்ளும் குறிப்பிடும் இந்த இரண்டு பாடகர்களும் சிரியாவைப் பற்றியோ திட்டமிட்டு அழிக்கப்படும் இஸ்லாமிய மதத்தைப் பின்பற்றும் உலகம் முழுவதும் வாழும் மக்களைப் பற்றியோ பேசப் போவதில்லை என்பதை மாதங்கி அருள்பிரகாசம் தனது நேர்காணலில் போட்டு உடைத்ததை விழா ஒருங்கிணைப்பாளர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. உலகின் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக இங்கு ஒலிக்கிறார்.

பல் கலாச்சார நிகழ்ச்சியாகக் கொண்டாடப்படும் இல் மாயாவின் கருத்துக்களுக்கு இடமிலை.

இலங்கை அரசு இப்போது மாயா அங்கு செல்வதற்கான தடையை நீக்கியுள்ளது. ஆனால் அங்கு செல்வதற்கு மாயா விரும்பவில்லை என்கிறார். கணவரிடமிருந்து பிரிந்து வாழும் மாயா, தான் ஒரு குழந்தையின் தாய் என்பதால் இபோது தனது வாழ்க்கையை இலங்கைக்குச் சென்று ஆபத்திற்கு உட்படுத்த விரும்பவில்லை என்கிறார்.

அமெரிக்கா மத்திய கிழக்கில் நடத்தும் சட்டவிரோத யுத்த்தினால் தமது சொந்த நிலத்திலிருந்து பிடுங்கியெறியப்பட்ட அகதிகளுக்காகப் பாடிய ஒரே பிரபல பாடகர் மாதங்கி என்பது குறிப்பிடத்தக்கது.

ஆக மாதங்கி அருட்பிரகாசத்தின் முன்னால் மேற்கு ஏகாதிபத்தியங்களின் பின்னால் அலையும் புலம்பெயர் மற்றும் இலங்கை அரசியல்வாதிகள் குறுகிய நோக்கம் கொண்ட வியாபாரிகளே.

அகதிகளுக்கான மாதங்கியின் பாடல்:

ஐந்து வயது மகனுடன் பயணித்த தாயைச் சுட்டுக்கொன்ற அமெரிக்கப் போலிஸ்

black_lives_matter_black_fridayஅரைக் கறுப்பினத்தவரான பாராக் ஹுசையின் ஒபாமா அமெரிக்க ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட போது அமெரிக்காவில் கறுப்பினத்தவருக்கு விடுதலை கிடைத்துவிட்டது போன்று மக்கள் ஆர்ப்பரித்தார்கள். செத்துப்போய்க்கொண்டிருந்த முதலாளித்துவ ஜனநாயகத்திற்கும், பாராளுமன்ற அரசியல் வழிமுறைக்கும் புத்துயிர் கிடைத்துவிட்டதாக பலர் நம்பிக்கைகொள்ள ஆரம்பித்தனர். அமெரிக்காவைக் கனவு நாடாகவும் சொர்க்கமாகவும் நம்பியவர்கள் தமது நம்பிக்கை உறுதிப்படுத்தப்பட்டது என மகிழ்ச்சி கொண்டனர்.

உலகம் முழுவதும் அதிகமாகக் கொலைகளில் ஈடுபடும் இராணுவம் அமெரிக்காவினுடையதே என்பதெல்லாம் உள்நாட்டில் செல்லுபடியாகாது என ஒபாமாவை ஆதாரம் காட்டி விவாதிக்க ஆரம்பித்தனர்.
கறுப்பினத்தவர்கள் மீதான ஒடுக்குமுறை அமெரிக்காவின் வரலாற்றோடு பின்னிப் பிணைந்தது. 46.3 வீதமான கறுப்பின மக்கள் அமெரிக்காவில் வாழ்கின்றனர். ஒபாமாவின் ஆட்சியில் அமெரிக்கப் போலிஸ் கறுப்பினத்தினரைக் கொல்வது நாளாந்த நிகழ்வாகிவிட்டது.

-கடந்த வருடத்தில் 102 கறுப்பின நிராயுதபாணிகளை அமெரிக்கப் போலிஸ் கொன்றுள்ளது

-அமெரிக்க சனத்தொகையில் கறுப்பினத்தினர் 13 வீதமாக அமைந்திருக்கும் நிலையில் கொல்லப்படும் நிராயுதபாணிகளில் 37 வீதமானர்கள் கறுப்பினத்தவர்கள்.

– இத் தொகை போலீஸ் கொலை செய்யும் வெள்ளையினத்தவரின் தொகையை விட 5 மடங்கு அதிகம்

தனது ஐந்து வயது மகனுடன் பயணம் செய்த கறுப்பினத் தாய் ஒருவர் கடந்த 2ம் திகதியன்று போலிசாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது ஐந்து வயது மகன் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வீதி ஒழுங்கை மீறியமை தொடர்பாகப் போலிஸ் உடன் ஏற்பட்ட வாக்குவாதத்திலேயே அவர் கொல்லப்பட்டதாகத் தகவல் தெரிவிக்கப்படுகிறது, கொலை செய்யப்பட்டவர் துப்பாக்கி ஒன்றை வைத்திருந்ததாகப் போலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட போதும் பொதுமக்கள் தரப்பிலிருந்து அதற்கு மறுப்புத் தெரிவிக்கப்படுகின்றது.

போலிஸ் பயங்கரவாதம் நாளாந்தம் அதிகரிக்கும் நிலையில் இச் சம்பவம் ஒரு உதாரணம் மட்டுமே.

தடுத்துவைக்கப்பட்டுள்ள வெளிநாட்டவர் மீது பிரித்தானிய அரசின் வன்முறை

detaineesபிரித்தானியாவில் உழைக்கும் மக்கள் வறுமையின் விழிம்பை நோக்கி இழுத்துவரப்படும் நிலையில் நிறவாதம் நிறுவனமயப்படுத்தப்பட்டு அரசே அதனை மக்கள் மத்தியில் விதைத்துவருகிறது. எனப்படும் உணவகங்களில் உணவைப் பெற்றுக்கொண்டவர்களின் தொகை வரலாறு காணத அளவு அதிகரித்துள்ளது.

கடந்த வருடம் உணவைப் பெற்றுக்கொண்டவர்களின் தொகை 19 வீதத்தால் அதிகரித்துள்ளது. 1,084,604 தடவைகள் மூன்று வேளை உனவு வழங்கப்பட்டுள்ளதாகப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலமைக்கு வெளி நாட்டவரே காரணம் என்ற பொய் அரசு உட்பட பல்வேறு அதிகாரமட்ட நிறுவனங்களால் பரப்பப்படு வருகின்றது.

இந்த நிலையில் திருப்பி அனுப்பப்படுவதற்காகத் தடுப்பு முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் சட்டவிரோதக் குடியேறிகள் தொடர்பான மனித உரிமைகள் மீறும் விதிமுறைகளை பிரித்தானிய அரசு ஏற்படுத்தியுள்ளது.
தலைமை அதிகாரிகளின் அனுமதியுடன் முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள வெளிநாட்டவர்கள் இரண்டு வாரங்களுக்கோ அன்றி அதற்கு மேலதிகமாகவோ தனிமைச் சிறையில் அடைத்துவைக்கப்படலாம். அவ்வாறு அடைத்துவைக்கப்படும் போது அவர்களுக்கு மருத்துவ வசதி தேவைப்பட்டால் நிர்வாகம் அதனை வழங்குவது குறித்துக் கருத்தில் கொள்ளலாம். என புதிய அரச சட்ட வரைபு கூறுகின்றது.

ஒரு நோயாளியின் வலியை நிர்வாகம் உணர்ந்து கொண்டால் மட்டுமே மருத்துவ வசதி என்கிறது பிரித்தானிய அரசு.

சிறை அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் பாலியல் வதைக்கும் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகின்றனர் என பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்ட நிலையில் புதிய சட்டவரைபு வெளியாகியுள்ளது.

பரபரப்பு ஊடக வியாபாரிகளும் ஆய்வாளர் கோமாளிகளும் : வியாசன்

mediacownsவன்னி இனப்படுகொலை நிறைவடைந்த நாளிலிருந்து இன்று வரை ஈழப் போராட்டம் சர்வதேச மயப்படுத்தப்பட்டுவிட்டது என மக்களை ஏமாற்றிய கோமாளிகள் இன்று தம்மைச் சுதாகரித்துக்கொள்ள முற்படுகின்றனர். ‘சர்வதேசம்’ என்ற அடைமொழிக்குள் உலகம் முழுவதும் எப்படி அழிக்கப்பட்டு நிர்மூலமாக்கபடுகிறது போன்ற அடிப்படைகளை முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்கு முற்பட்ட காலப்பகுதியிலிருந்தே பலர் கூறிவந்த போதும் அவற்றையெல்லாம் கண்டுகொள்ளாமல் ஆய்வு என்ற பெயரில் அழிவுகளுக்கு முன்னுரை வழங்கிய தமிழ் ஆய்வாளர் கோமாளிகள் இப்போது மைத்திரி – ரனில் அரசு வந்துவிட்டதால் தமது எஜமானர்களான மேற்கு ஏகபோக நாடுகள் தமது கடைக்கண் பார்வையை தம்மீது திருப்பவில்லை என அங்காலய்த்துக்கொள்கின்றனர்.

அவர்களைப் பொறுத்தவரை விடுதலை என்பது மக்கள் சார்ந்த எழுச்சி அல்ல, மாறாக யாரையாவது எங்காவது வால்பிடித்து குறுக்கு வழிகளில் சம்பாதித்துகொள்ளும் ஒரு வகையான வஸ்து. தாம் இதுவரை மக்களிடம் கூறிவந்த பொய்கள் புஸ்வாணமாகிவிட இப்போது புதிய பொய்களைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

அண்மையில் தாம் நம்பியிருந்த அமெரிக்காவின் யுத்தக்கப்பல் இலங்கை சென்று அந்த நாட்டின் கடற்படையுடன் இணைந்து பயிற்சிகளில் ஈடுபட்டுத் திரும்பியிருக்கிறது. பயிற்சி முடிவில் உரை நிகழ்த்திய இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர், இலங்கை ‘சர்வதேசத்திற்கு’ வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அரசியல் சாசனத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்வதே இதற்கான காரணம் எனத் தெரிவித்துள்ளார். ஆக, லட்சம் லட்சமாகப் பணம் செலவு செய்து புலம்பெயர் பினாமிகள் ஜெனீவாவில் நடத்திய கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், கருத்தரங்குகள். யாழ்ப்பாணத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட அரசியல் வாதிகளின் வெற்றுப் பேச்சுகளும், புலம்பெயர் அமைப்புக்கள் வழங்கிய போலி நம்பிக்கைகளும் பலனற்றுப் போயின.

இலங்கையில் அச்சம் கலந்த நிச்சயமற்ற சூழலில் மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். தமிழ்ப் பேசும் சிறுபான்மைத் தேசிய இனங்கள் எந்தச் சந்தர்ப்பத்திலும் மற்றொரு இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்படலாம். மீண்டும் சுற்றிவழைத்து கைதுசெய்யும் நடவடிக்கை ஆரம்பமாகலாம், இலங்கை அரசிற்கு எதிரானவர்கள் தீவிரவாதிகள் என அழிக்கப்படலாம். இவ்வாறான அச்சம் கலந்த நாளாந்த வாழ்க்கைக்கு மக்கள் பழக்கப்பட்டிருக்கிறார்கள்.

இலங்கை அரசைப் பொறுத்தவரை போராளிகள் புனர்வாழ்வு என்ற அடிப்படையில் ‘சமூகத்துடன் இணைக்கப்பட்டிருக்கிறார்கள்’. இனப்படுகொலை நடத்திய கிரிமினல் இராணுவம் மக்கள் குடியிருப்புகளுக்கு மத்தியில் நிலைகொண்டிருக்கிறது. இன்று புனர்வாழ்விற்கும் தண்டனைக்கும் உட்படுத்தப்பட வேண்டியவர்கள் இராணுவத்தினரே.
இந்த அடிப்படை உண்மையைக் கூட தமிழ் சிங்கள் மற்றும் முஸ்லீம் மக்களிடம் கூறுவதற்குப் பதிலாக உணர்ச்சிவசப்படுத்தும் வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் ஆய்வாளர் கோமாளிகளும் ஊடகங்களும் ஆபத்தானவை.

இதனை எதிர்கொள்வது எவ்வாறு?

இதற்கான மக்கள் சார்ந்த வழிமுறை என்பது அன்னிய நாடுகளை வால்பிடிப்பதல்ல.

வாக்குப் பொறுக்கும் கட்சிகளை நிராகரித்து மக்களை அணிதிரட்டும் அரசியல் பொறிமுறையை அறிந்து கொள்ளவேண்டும். ஒவ்வொரு அரசியலுக்கும் முன் தொடர்ச்சியான வரலாறு உண்டு.

இன்று ஊடடங்கள் என்ற பெயரில் இணையங்களில் வெளியாகும் பரபரப்புச் செய்திகள் வெறுமனே நுகர்வை நோக்கமாகக் கொண்டவை. செய்திகளை வைத்து வர்த்தகமாக்கிக் கொள்வதே அவர்களின் நோக்கம். வடக்கில் எங்காவது ஒருவரை மரணித்துவிட்டால், அது இராணுவம் அடித்த ஊசியினால் நடந்தது என்று உணர்ச்சிவசப்படுத்த முளைத்திருக்கும் பரபரப்புக் கூட்டங்கள் தெரிந்தோ தெரியாமலோ இராணுவத்தை நியாயப்படுத்துகின்றனர். இலங்கையில் அச்சம் தரும் சூழலில் வாழும் மக்களதும். போராளிகளதும் அடிப்படைப் பாதுகாப்பைக்கூடக் கருத்தில்கொள்ளாது இவர்கள் பரப்பும் வதந்திகளின் அடிப்படை நோக்கம் புலம்பெயர் நாடுகளில் வாழும் மக்களை உணர்ச்சிவசப்படுத்தி, அந்த உணர்ச்சியில் வர்த்ககம் செய்வதே என்பதில் எந்த சந்தேகமும் இருக்க முடியாது.

உலகின் மிகக் கொடூரமான இராணுவங்களில் இலங்கை இராணுவத்திற்குப் பிரதான இடமுண்டு. இலங்கை இராணுவம் மிகப்பெரும் மனிதப் படுகொலையை நடத்திவிட்டு யுத்தக் கிரிமினல்களுடன் மக்கள் குடியிருப்புகளில் நிலைகொண்டுள்ள அபாயத்தை மூடிமறைக்கும் பணியை இப் பரபப்பு வியாபாரிகள் செய்து முடிக்கின்றனர்.

2009 ஆம் ஆண்டின் பின்ன ஒடுக்கப்படும் தமிழ் மக்களின் அரசியல் தலைமை வெற்றிடமாகவே காணப்படுகின்றது. அதனை வாக்குப் பொறுக்கும் கட்சிகள் தற்காலிகமாகப் பிரதியிட்டுள்ளன. ஆய்வாளர்களதும், ஊடகங்களதும் நுகர்வு அரசியலுக்கு அப்பால் புதிய மக்கள் சார்ந்த அரசியல் முன்வைக்கப்படும் வரை அழிவுகள் மட்டுப்படுத்தப்பட மாட்டாது.