புத்தகத்தைப் பறித்தெறியும் பிரபாகரன் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்(பாகம்18) : ஐயர்

விடுதலைப் புலிகள் அமைப்பினுள் ஜன‍‍நாயகம் ஏற்பட வேண்டும் என்பதில் மிகுந்த‌ அக்கறையோடும் ஆர்வத்தோடும் செயற்பட்டவர்களில் மனோமாஸ்டர், அழகன், நந்தன், மாத்தையா,சுந்தரம் ஆகியோரைக் கோடிட்டுக் காட்டலாம் . இவர்கள் புலிகளின் உள்ளே ஜனனாயக வெளி ஒன்றை ஏற்படுத்துவதே முதலாவதும் முக்கியமானதுமான தேவை என்பதைக் குறித்துக் காட்டியவர்கள். மனோமாஸ்டர் ஓரளவு தெளிவான அரசியல் கருத்துக்களைக் கொண்டிருந்தார். ஏனைய உறுப்பினர்களுக்கு வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்துவதிலும், ஆர்வத்தை உருவாகுவதிலும் இவரின் பங்கு அளப்பரியயதாக அமைந்திருந்தது. மனோமாஸ்டர், புலிகள் அமைப்பில் இணைவதற்கு முன்பதாகவே இடதுசாரி அரசியலுடன் பரீட்சயமானவர் .

தனி நபர் கொலைகளுக்கும் கொள்ளைகளுக்கும் மாற்றாக குறைந்தபட்ச அரசியல் வழிமுறை ஒன்றை முன்வைப்பதே போராட்டத்தின் வெற்றிக்கான திசை என்பதை உறுதியாக முன்வைத்தார்.

மனோமாஸ்ரரின் கருத்துக்களோடு பொதுவாக மாத்தையா உடன்பாடுடையவராகக் காணப்பட்டார். வறிய குடும்பத்திலிருந்து புலிகளில் இணைந்துகொண்ட மகேந்திரராஜா என்ற மாத்தையா இந்தக் காலப்பகுதியில் மிகுந்த தேடல் ஆர்வம் மிக்கவராகக் குறிப்பிடத்தக்கவர்.

மனோமாஸ்டருக்கும் நந்தனுக்கும் இடையே அடிக்கடி விவாதங்கள், கருத்து மோதல்கள் ஏற்படுவது வழமை. தெரிவு செய்கின்ற அரசியல் வழிமுறை குறித்தே அந்த முரண்கள் அமைந்திருக்கும்.

மனோ மாஸ்டர் ரொஸ்கியக் கருத்துக்களின் ஆளுமைக்கு உட்பட்டிருந்தார். அகில இலங்கைப் புரட்சியின் ஒருபகுதியாகவே தமிழ் பேசும் மக்களின் விடுதலைப் போராட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பது மனோமாஸ்டரின் பிரதான கருத்தாக அமைந்திருந்தது.

நந்தனைப் பொறுத்தவரை தமிழீழத்திற்கான புதிய ஜனநாயகப் புரட்சி முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்திவந்தார். இவ்வகையிலேயே இருவருக்கும் இடையேயான விவாதம் அமைந்திருக்கும்.
நந்தன், மனோமாஸ்டர் ஆகியோரிடையேயான முரண்பாடென்பது பல தடவைகள் தீவிர விவாதப் போராக முடிவதுண்டு.

உள் முரண்பாடுகளிடையே மனோமாஸ்டர், மாத்தையா, குமணன் போன்றோர் இயக்க வேலைகளில் அர்ப்பண உணர்வுடனேயே ஈடுபட்டுவந்தனர். நந்தன் ஆரம்பத்திலிருந்தே பண்ணை நடைமுறைகளிலும், இயக்கத்தின் செயற்பாடுகளிலும் ஈடுபாடற்றவராகவே காணப்பட்டார்.

எண்பதுகளின் பின்னர் தமிழீழ தேசிய விடுத்லை முன்னணியில்(NLFT) இணைந்து செயற்பட்ட நந்தன், அம்முன்னணியின் செயலாளராகவிருந்த விசுவானந்ததேவனின் பிரிவிற்குப் பின்னர் அதன் தலைமைப் பொறுப்பிலிருந்தார்.

இவ்வேளையில் பிரபாகரனை வெளியேற்றுவதே இயக்கத்தை முன்னோக்கி நகர்த்துவதற்கான ஒரே வழி என்பதையும், பிரபாகரன் அற்ற புலிகளை உருவாக்குவதே நோக்கம் என்பதையும் சுந்தரம் பிரச்சாரப்படுத்தினார். சுந்தரத்தின் இந்தக் கருத்தோடு நந்தன் மிகுந்த உடன்பாடுடையவராகக் காணப்பட்டார். பிரபாகரன் என்ற தனிநபரை முதன்மைப்படுத்திய அரசியலில் சுந்தரமும் நந்தனும் இணைந்து கொண்டனர்.

நான் முன்வைத்த “மக்கள் அமைப்புக்களை உருவாக்குவதிலிருந்தே அனைத்தையும் ஆரம்பிக்க வேண்டும்” என்ற கருத்தோடு மனோமாஸ்டர் முழுமையாக ஒத்துழைத்தது மட்டுமன்றி நூல்களை வாசித்து தர்க்கரீதியான முடிபிற்கு வருவதற்கு ஏனைய போராளிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார்.

அன்றிருந்த சமூகப் புறச்சூழலில், பிரபாகரன் உட்பட நாம் அனைவருமே ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடுவதற்காக மட்டுமே புலிகள் என்ற அமைப்பை நோக்கி இணைந்திருந்தோம்.
இந்நிலையில், அழிவுகளை ஏற்படுத்த வல்ல தூய இராணுவ வழிமுறைக்கு மாற்றாக புதிய சிந்தனைப் போக்கு இயக்கத்தில் உருவாகியிருந்தது. நாம் வரித்துக்கொண்ட நோக்கத்தின் வெற்றிக்கான திசை என்பது குறித்தே எம் அனைவரினதும் கவனம் குவிந்திருந்தது.

பலரின் அர்ப்பணங்களுக்கும் தியாகங்களுக்கும் மத்தியில் உருவாகிக்கொண்டிருந்த எமது இயக்கத்தை தவறான வழி முறைகளூடான அழிவுப் பாதையிலிருந்து மீட்ட்டெடுப்பதே எமது அனைவரதும் நோக்கமாக அமைந்திருந்தது.

இவ்வேளையில் மக்கள் அமைப்புக்களை உருவாக்குதல் என்பதை விட புலிகளின் தலைமையை மாற்றியமைத்தால் பல பிரச்சனைகளுக்குத் தீர்வை எட்டலாம என்பது சுந்தரத்தின் கருத்தாக அமைந்திருந்தது. அவரோடு நந்தன் போன்ற பிரபாகரனின் சர்வாதிகாரப் போக்கில் அதிர்ப்தியடைந்திருந்த பலரும் உடன்பட்டிருந்தனர்.

என்னைப் பொறுத்த வரையில் நாம் பயணிக்கும் திசை தவறானது என்ற முடிபிற்கு வந்த பின்னர், புதிய அரசியல் வழிமுறை ஒன்றை முன்வைக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைக்கிறேன். பிரபாகரன் ஈறான அனைவரையும் புதிய அரசியல் வழிமுறைக்குள் இணைத்துக் கொள்வதனூடாக முன் நோக்கிச் செல்லலாம் என்ற கருத்தை இயக்க உறுப்பினர்கள் மத்தியில் முன்வைக்கிறேன்.

அவ்வாறான குறித்த வழிமுறை என்பது மக்கள் அமைப்புக்களை உருவாக்குவதிலிருந்தே ஆரம்பிக்கப்படலாம் என்ற கருத்தையும் முன்மொழிகிறேன்.

பதினேழு வயதில் போராட்டத்திற்காக அனைத்தையும் துறந்த போராளியான பிரபாகரன் அன்றிலிருந்து எந்த முற்போக்கு அரசியல் அணியாலும் அணுகப்படவில்லை. அப்போதிருந்த தூய இராணுவம் சார்ந்த சிந்தனை வட்டத்தினுள்ளேயே பிரபாகரன் முழுமையாக அமிழ்ந்து போயிருந்தார்.

தமிழரசுக் கட்சியினதும், தமிழர் விடுதலைக் கூட்டணியினதும் அரசியல் ஆளுமைக்குள்ளேயே நாங்கள் ஆட்கொள்ளப்பட்டிருந்தோம். தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு எதிரானவர்கள் எம்மளவில் துரோகிகளாகவே கருதப்பட்டனர். அவர்களின் பாராளுமன்ற அரசியலின் வன்முறை வடிவமாகவே நாம் செயற்பட்டுக்கொண்டிருந்தோம். கூட்டணியின் நேரடியான அரசியல் கட்டுப்பாடு இல்லாதிருந்தாலும் எமது சிந்தனைப் போக்கு அவ்வாறுதான் அமைந்திருந்தது.

பாரம்பரிய இடதுசாரிகள் என்று கூறிக்கொண்ட எவருமே எம்மை அணுகியதோ, நியாயமான போராட்டத்தை சரியான திசைவழி நோக்கி நகர்த்த வேண்டும் என்று எண்ணியதோ கிடையாது. தேசியப் போராட்டம் என்பது அவர்கள் மத்தியில் ‘தீண்டத்தகாத’ ஒன்றாகவே அமைந்திருந்தது.

மார்க்சிய நூல்களைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்த சில நாட்களிலேயே நியாயமான வழிமுறைகள் குறித்த ஆரம்ப அறிவைப் பெற்றுக்கொண்டோம். ஒரு அரசியல் இயக்கத்தை வழி நடத்தும் தத்துவார்த்தக் கோட்பாடுகள் பற்றியெல்லாம் சிந்தித்தது கிடையாது. கொலைகள் நிறுத்தப்பட வேண்டும். மக்கள் அமைப்புக்கள் உருவாக்கப்பட வேண்டும். மேலும் அரசியல் வழிமுறைகள் குறித்துக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதையே பிரதான நோக்கங்களாகக் கொண்டிருந்தோம்.

நாம் அடிக்கடி சந்தித்துப் பேசிக்கொள்கின்ற சிறிய அணியாக உருவாகியிருந்தோம்.

என்றுமில்லாதவாறு, குமரப்பா, மாத்தையா, ராகவன் சாந்தன், சுந்தரம், குமணன் போன்ற இன்னும் பல போராளிகள் அரசியல் தேடல்களிலும் விவாதங்களிலும் தீவிரமாக ஈடுபட்டனர். பண்ணைகளில் தற்செயலாக சந்தித்த, சிந்திக்கத் தொடங்கிவிட்ட பலர் மார்க்சிய நூல்களும் கையுமாகத் தான் காணப்பட்டனர். அது ஒரு அலையாக ஆரம்பித்து இயக்கத்தின் குறித்த மட்டத்தில் வியாபித்திருந்தது. மக்கள் போராட்டம், ஜனனாயகம், மத்தியத்துவம், உட்கச்சிப் போராட்டம் என்று பல்வேறு தளங்களிலும் பரந்த அறிவுத் தேடலில் கணிக்கத்தக்க அளவானோர் ஈடுபட்டோம்.

எல்லாமே ஒரு சில மாத இடைவெளிக்குள் நடந்தவை தான். அரசியல் திட்டம் போன்றவற்றை முன்வைப்பதற்கு எம்மிடம் போதிய தெளிவு இருந்திருக்கவில்லை.

இவ்வேளைகளில் ஒரு இடதுசாரிக் கட்சியின் பின்பலம் இருந்திருக்குமானால், அவர்கள் எம்மை அணுகியிருப்பார்களானால் இன்று தெற்காசியாவின் தென்மூலையில் நிகழ்ந்த வெற்றிபெற்ற போராட்டம் குறித்துப் பேசிக்கொண்டிருந்திருப்போம்.

சுந்தரம் போன்றோர் முவைத்த தலைமைத்துவம் குறித்த முரண்பாடும், அரசியலை விட பிரபாகரன் என்ற தனி நபரின் நடவடிக்கைகள் குறித்த முதன்மைப்படுத்தலும் பல போராளிகளைக் கவர்ந்திருந்தது.

இப்போது முன்று வேறுபட்ட போக்குகள் உருவாகியிருந்தன.

1. சுந்தரம் சார்ந்தோர் முன்வைத்த கருத்தைக்கொண்ட பிரபாகரனுக்கு எதிரான குழுவினர்.

2. மக்கள் அமைப்புக்களை உருவாக்குதல் என்று நான் முன்வைத்த கருத்து.

3. பிரபாகரனுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கிய உறுபினர்கள் பலரைக் கொண்ட குழு.

மனோமாஸ்டர், மாத்தையா, குமரப்பா போன்ற பலர் பிரபாகரனின் சர்வாதிகாரப் போக்கை எதிர்த்தாலும், மக்கள் வேலைகளை முன்னெடுப்பதிலிருந்தே புலிகளில் உள்ளார்ந்த மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்ற கருத்தையே முன்வைத்தனர். இவை குறித்து பிரபாகரன் இலங்கைக்கு வருவதற்கு முன்பதாக நாம் விவாதிக்கிறோம்.

இறுதியாக நான் ஒரு சமரச முன்மொழிவை முன்வைக்கிறேன்.

1. இப்போதுள்ள மத்திய குழுவிற்குப் பதிலாக செயற்குழு ஒன்றைத் தெரிவு செய்தல்
(செயற்குழுவில் தெரிவுசெய்யப்படும் உறுப்பினர்கள் அரச படைகளால் தேடப்படாத வெளிப்படையான மக்கள் வேலைகளை முன்னெடுக்கும் தகமையுடையவர்களாக அமைய வேண்டும் என்று கோரப்பட்டது.)

2. மக்களமைப்புக்களை உருவாக்கும் வேலைமுறைகளை ஆரம்பித்தல்.

3. அரசியல் தத்துவார்த்தப் பத்திரிகை ஒன்றை வெளியிடுதல்.

4. அப்பத்திரிகைக்கான பெயர் ஒன்றைத் தெரிவுசெய்தல்.

5. தனிநபர் படுகொலைகளையும் இராணுவம் சார்ந்த நடவடிக்கைகளையும் மக்கள் அமைப்புப் பலம் பெறும் வரையில் தற்காலிகமாக நிறுத்திவைத்தல்.

6. பொலீசாரால் தேடப்படுகின்ற அனைவரும் இந்தியா சென்று அங்கு மார்க்சிய கல்விகளில் ஈடுபடுதலும் முற்போக்கு அமைப்புகளோடு தொடர்புகளைப் பேணிகொள்ளலும் .

இந்த முன்மொழிவு எமது இயக்கத்திலிருந்த மூன்று வேறுபட்ட போக்குகளுக்கு இடையேயான சமரசமாகவும் அமைந்திருந்தது.

இங்கு பற்குணம், மைக்கல் கொலைகள் குறித்த விவாதங்களையும், பிரபாகரன் என்ற தனி நபர் குறித்த பிரச்சனைகளையும் இரண்டாவது பட்சமானதாகவும் மேற்குறித்த ஆறு அம்சங்களையும் முதன்மையானதாகவும் கொண்டு செயற்படவேண்டும் என்பதே எமது உறுப்பினர்களை நோக்கிய எனது கோரிக்கையாக அமைந்தது.

சுந்தரம் முதலில் இதற்கு உடன்படவில்லை. தலைமையை மாற்ற வேண்டும் என்பதே பிரதானமானது என வாதிக்கிறார். பெரும்பாலானவர்கள் எனது திட்டத்தை ஏற்றுக்கொள்ள சுந்தரமும் அவர் சார்ந்த கருத்தை உடையவர்களும் தவிர்க்கவியலாதவாறு திட்டத்தை ஏற்றுக்கொள்கின்றனர்.

இதே வேளை உமாமகேஸ்வரன் குறித்த பிரச்சனைகளுக்குப் பின்னர் பிரபாகரனின் சர்வாதிகாரப் போக்குகள் அதிகரிக்கின்றன. பிரபகரன் யாரையும் நம்புவதில்லை. தனது கட்டுப்பாடுகளை உறுப்பினர்களை நோக்கி இறுக்கப்படுத்துகிறார். அன்டன் பாலசிங்கம் தனது மனைவி அடேலுடன் லண்டன் திரும்பிச் சென்றுவிடுகிறார். பிரபாகரனுடன் தங்கியிருந்த ரவி பாலா போன்றோர் அவரது சர்வாதிகாரப் போக்கால் அதிர்ப்தி அடைகின்றனர். தலைமைக்கு எதிராகக் கேள்வி கேட்கக் கூடாது என ரவி சில தடவைகள் தம்பியால் எச்சரிக்கப்படுகிறார்.

இவ்வேளையில் தான் பிரபாகரன் எனது கடித்தை ஏற்று நாடு திரும்புகிறார். வல்வெட்டித்துறை ஊடாகவே படகு மூலமாக வந்திறங்கும் பிரபாகரன் அங்கிருந்து குமணன் வீட்டில் என்னைச் சந்திக்க வருகிறார். வரும் வழியில் கிட்டுவையும் அழைத்துக்கொண்டு வருகிறார். கிட்டுவோடு வந்திறங்கிய பிரபாகரனைக் கண்டதும் நான் அதிர்ச்சியடைந்தேன். கிட்டுவை தண்டனை வழங்கி வீட்டிற்கு நான் அனுப்பி வைத்த விடயத்தைக் கூறுகிறேன். அது குறித்து இப்போதைக்குப் பேச வேண்டாம் என்றும் பிரச்சனைகள் தொடர்பாகப் பேசுவோம் என்றும் பிரபாகரன் சொல்கிறார்.

நான் இயக்கத்தில் உருவான பிரச்சனைகள், எனது சிந்தனையில் ஏற்பட்ட மாற்றம், ஏனைய போராளிகளின் உணர்வலைகள் ஆகியவற்றைக் குறித்து விபரிக்கிறேன். பிரபாகரனை நூல்களை வாசித்துத் தர்க்கரீதியாகச் சிந்திக்குமாறு கோருகிறேன். நாங்கள் வரித்துக்கொண்ட வழிமுறை தவறானது நீண்டகால நோக்கில் அழிவுகளுக்கு வழிவகுக்கும் என்பது பற்றியும் அனைத்தையும் மாற்றியமைக்க வேண்டும் என்பது பற்றியும் விரிவாகப் பேசுகிறேன். இறுதியாக எனது முன்மொழிவுகளையும் விபரிக்கிறேன். பிரபாகரன் எதுவும் பேசவில்லை. ஆனால் மறுக்கவும் இல்லை.

இந்த உரையாடல்கள் நடைபெற்ற குமணன் வீட்டில் எங்களோடு ராகவனும் இருந்தார்.

புத்தகங்களை வாசிப்பதும் அரசியல் பிரச்சனைகள் குறித்த அறிவுத்தேடல் அவசியமானதாகவும் காணப்பட்ட அந்தக் காலப்பகுதியில் நாம் மார்க்சிய நூல்களை வாசிப்பது வழமை. நாம் பேசிக்கொண்டிருக்கும் போது ராகவன் ஒரு மார்க்சிய நூலை வாசித்துக்கொண்டிருந்தார். பிரபாகரன் திடீரென எழுந்து அந்தப் புத்தகத்தை ராகவனின் கைகளிலிருந்து பறித்து தூரே வீசிவிட்டு “இதையெல்லாம் தூக்கிப் போட்டுவிட்டு ஆயுதங்களைக் களட்டிப் பூட்டக் கற்றுக்கொள்ளுங்கள் ” என்று சொல்கிறார்.

இன்னும் வரும்..

பாகம் 17,பகுதி பதினாறைப் படிக்க., பாகம் பதினைந்தைப் படிக்க.., பாகம் பதின்நான்கை வாசிக்க.. , பாகம் பதின்மூன்றை வாசிக்க..  பாகம் பன்னிரண்டை வாசிக்க.. பாகம் பதினொன்றை வாசிக்க.. பாகம் பத்தை  வாசிக்க.. பாகம்  ஒன்பதை வாசிக்க.. பாகம் எட்டை வாசிக்க.. பாகம்  ஏழை வாசிக்க.. பகுதி  ஆறை  வாசிக்க… பகுதி ஐந்தை  வாசிக்க… பகுதி நான்கை வாசிக்க.. பகுதி மூன்றை வாசிக்க.. பகுதி இரண்டை வாசிக்க..  பகுதி ஒன்றை வாசிக்க..

நாம் செல்லும் திசை தவறானது – புலிகளுள் துளிர்விடும் அதிர்ப்தி – ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள்(பாகம் 17) : ஐயர்

கும்பகோணத்தைச் சேர்ந்த மேகநாதன் என்ற திராவிடர் கழக உறுப்பினர் எம்மோடு முழு நேர உறுப்பினராக வேலை செய்கிறார். ஐயர் ஒருவர் இயக்கத்தில் ,அதிலும் மத்திய குழுவில் பணியாற்றுவதாக கேள்விப்பட்டதும், ஐயரையெல்லாம் ஏன் சேர்த்துக்கொண்டீர்கள் எனக் கடிந்து கொண்டிருக்கிறார். பின்னதாக அவர் என்னைச் சந்தித்ததும் தனது அபிப்பிராயத்தை முழுமையாக மாற்றிக்கொண்டதாக என்னிடமே சொன்னார்.

மேகநாதன் உமாமகேஸ்வரனைக் கொலைசெய்ய நாம் தேடியலைந்ததைக் கண்டு மிரண்டுபோனார். அவரும் இதையெல்லாம் விட்டுவிடுங்கள் என்று தனது கருத்தை முன்வைக்கிறார். எமக்குச் சில ஆலோசனைகளும் வழங்குகிறார். என்னிடம் கூடத் தனிப்படப் பேசிப்பார்த்தார். எம்மைப் பொறுத்தவரை நமது வழிமுறை சரியானது என்ற இறுமாப்பில் தான் இருந்தோம்.

பின்னதாகப் சில உறுப்பினர்கள் இதெல்லாம் கலாபதியின் வேலையென்றும் அவர்தான் பிரபாகரனுக்குத் தலைமை ஆசையைத் தூண்டிவிட்டவர் என்றும் உமமகேஸ்வரனின் புறக்கணிக்கத் தக்க பாலியல் பிரச்சனையை முதன்மைப்படுத்தியவர் என்றும் கருத ஆரம்பித்தனர். இது குறித்துப் பலர் என்னிடம் பின்னாளில் அபிப்பிராயம் தெரிவித்தனர்.

கலாபதி குறித்த இந்த அபிப்பிராயம் பின்நாளில் நிகழந்த பல சம்பவங்களிலும் வெளிப்பட்டதாகக் கூறியவர்களும் உண்டு.

இப்போது உமாமகேஸ்வரனோடு எமக்கு எந்தத் தொடர்பும் இல்லை. அவரைத் தவிர அவருக்காக அன்று இயக்கத்திலிருந்து யாரும் பிரிந்து செல்லவில்லை. இந்தியாவிலேயே எமது கண்களுக்குப் படாமல் தலைமறைவாகிவிடுகிறார். ஊர்மிளாவோடு நாங்கள் எந்தத் தொடர்புகளையும் பேணிக்கொள்ள விரும்பவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கும் உமாமகேஸ்வரனுக்கும் இடையான தொடர்பு பின்பு ஒரு போதும் ஏற்பட்டதில்லை. ஊர்மிளா சில காலங்களின் பின்னர் நோய்வாய்ப்பட்டு இறந்ததாகக் கூறப்பட்டாலும் வேறுபட்ட கருத்துக்களும் நிலவுகின்றன.

இப்போது ஒவ்வொருவருக்கும் அதிகப்படியான பொறுப்புக்கள் வழங்கப்பட்டு இலங்கைக்கு அனுப்புவதாகத் தீர்மானிக்கப்படுகிறது. இலங்கையில் மத்திய குழுவில் பொறுப்பனாவர்கள் யாரும் இல்லை என்பதாலும் எமது இயக்க நடவடிக்கைகளைக் கவனிக்க வேண்டும் என்பதாலும் நான் முதலில் இலங்கை செல்வதாகத் தீர்மானிக்கப்படுகிறது.

உமாமகேஸ்வரனுக்கு தண்டையார்பேட்டை வீட்டு அறியப்பட்டது என்பதால் ஏதாவது பிரச்சனை உருவாகலாம் என எண்ணினோம். இதனால் அந்த வீட்டைக் கைவிட்டு திருவான்மியூரில் ஒரு வீட்டை ஒழுங்குபடுத்தி வாடகைக்கு அமர்த்திக்கொள்கிறோம். பாதுகாப்பு நடவடிக்கைகளில் அதீத கவனம் செலுத்தும் பிரபாகரன் உமாமகேஸ்வரனைக் கூடப் பாதுகாப்பு அச்சுறுத்தலாகக் கருதியமை வியப்புக்குரியதல்ல.

அந்த வீட்டில் நான் இரண்டு நாட்களே தங்கியிருக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இதன் பின்னர் நான் குமரப்பா, சுந்தரம் ஆகியோர் எமது விசைப்படகில் இலங்கை நோக்கிப் பயணமாகிறோம். நான் அங்கு இல்லாத வேளையில் இயக்கத்தின் மீதும் பிரபாகரனின் சர்வாதிகாரப் போக்கின் மீதும் வெறுப்பும் விரக்தியும் அதிகரித்த நிலையில் அனைத்துப் போராளிகளும் காணப்படுகின்றனர். பண்ணைகளுக்கு நான் சென்ற போது என்னிடம் இது குறித்து பரவலாகப் பேசப்படுகிறது.

மைக்கல் பற்குணம் போன்றோரின் கொலை தொடர்பாக பிரபாகரன் குமணனிடம் கூறியிருந்தார். குமணன் ஊடாக அந்தச் செய்தி அனைத்துப் பண்ணைகளுக்கும் பரவிவிடுகிறது. இது பின்னதாக மனோ மாஸ்டர், அழகன் போன்றோர் இயக்கத்தின் ஜனநாயகத் தன்மை குறித்தும் அதன் வழிமுறை குறித்தும் போர்க்குரல் எழுப்புகின்றனர். சுந்தரமும் இவர்களோடு இணைந்து கொள்கிறார்.

பயிற்சி முகாம் ஒழுங்கமைக்கப்பட்ட முறை, அதனுள் பிரபாகரனின் தன்னிச்சையான சர்வாதிகாரப் போக்கு, பற்குணம், மைக்கல் கொலைச் சம்பவங்கள்,உமாமகேஸ்வரன் குறித்த பிரச்சனைகள் என்று அனைத்தும் ஒருங்கு சேர பிரபாகரனுக்கு எதிரான போக்கு ஒன்று இயக்கத்தின் அனைத்து மட்டத்திலும் உருவாகி வளர்கிறது.

நான் அங்கு சென்ற முதல் நாளே மனோ மாஸ்டருடன் இன்னும் சிலர் என்னிடம் தமது அதிர்ப்தியை வெளிப்படுத்துகின்றனர். இதற்கெதிரான உட்கட்சிப் போராட்டத்தில் என்னையும் இணைந்துகொள்ளுமாறு கோருகின்றனர். 79 இன் மத்திய பகுதி இவ்வாறு இயக்கத்தில் கொந்தளிப்பு ஏற்பட்ட காலகட்டமாகும். அவ்வேளையில் இவை குறித்து நான் சிந்திக்க ஆரம்பிக்கிறேன்.

எது எவ்வாறாயினும் பதினேழு வயதில் அனைத்தையும் துறந்து தேசிய இன ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்ட பிரபாகரனுக்கு இவைபற்றி இதுவரை யாரும் கூறியதில்லை. பிரபாகரனுடன் தவறுகள் குறித்துப் பேசினால் தனது வழிமுறையை மாற்றிக்கொள்ள வாய்ப்புண்டு என்பதே எனது தனிப்பட்ட கருத்தாக ஆரம்பத்தில் அமைந்தது.

திருகோண்மலையிலுள்ள தொடர்புகளைக் கையாளும் பொறுப்பு குமணனிடமே இருந்தது. அங்கிருந்தவர்கள் எல்லாம் மார்க்சிய கம்யூனிசத் தத்துவங்களோடு அறிமுகமானவர்களாக இருந்தனர். பயஸ் மாஸ்டர் என்பர் விடுதலைப் போராட்டத்தில் ஆர்வமுடையவர்களுக்கு மார்க்சிய அரசியலைக் கற்றுத்தந்தார். திருகோணமலைக்குக் குமணன் செல்லும் வேளைகளிலெல்லாம் அங்கிருந்தோர் அவரிடம் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்திருந்தனர். அவற்றிற்குப் பதில் சொல்லவேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் குமணனும் மார்க்சிய நூல்களைக் கற்க ஆரம்பித்திருந்தார்.

இது தவிர மனோமாஸ்டர். நந்தன் போன்றோர் மார்க்சியக் கல்வியுடன் ஏற்கனவே பரீட்சயமாகியிருந்தனர். இதனால் குமணனில் ஆரம்பித்து விடுதலைப் புலிகள் அமைப்பில் ஒரு பிரிவினர் மார்க்சிய நூல்களை கற்பதில் ஆர்வமுடையோராக முயற்சி மேற் கொண்டனர்.

பின் நாளில் விடுதலைப் புலிகளின் பிரதித் தலைவராகவிருந்து அவர்களாலேயே இந்திய உளவாளி எனக் குற்றம்சாட்டப்பட்டுக் கொலைசெய்யப்பட்ட மாத்தையாவை எங்குபார்த்தாலும் சிவப்பு மட்டைகளோடு கூடிய மார்க்சிய நூலகளுடனேயே காணமுடியும். ஒரு தடவை நந்தன் மாத்தையாவைக் நோக்கி நூல்களை உண்மையில் வாசிக்காமல் அவற்றை வாசிப்பது போலப் போலியாக மற்றவர்களுக்குக் காட்டுவதற்காகவே அவற்றுடன் காணப்படுவதாகக் குறிப்பிட்டார். மார்க்சிய நூல்களை வாசிப்பது என்பதே எமக்கு மத்தியில் ஒரு அங்கீகாரம் என்கிற அளவிற்கு ஒரு அலைபோல அனைத்து மட்டங்களிலும் அது பரவியிருந்தது. மாத்தையாவும் பிரபாகரனின் சர்வாதிகாரப் போக்கிற்கு எதிராக மிகத் தீவிரமாகக் கருத்துக்களை முன்வைத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தக் காலப்பகுதியில் நான் குமணனின் வீட்டில்தான் தங்குவது வழமை.குமணனோ பழைய போராட்ட வரலாறுகள் குறித்த நூல்களைப் படித்துக்கொண்டிருந்தார்.

மிகக் குறுகிய காலத்தில் பல நூல்களை படித்திருந்தார். நிறைய நூல்களையும் வைத்திருந்தார். அவற்றை வாசிக்குமாறு என்னையும் வற்புறுத்தினார். அன்டன் பாலசிங்கத்தின் அரசியல் வகுப்புக்களுக்கு சென்று வந்த வேளைகளில் அவர் கற்பித்த இயக்கவியல் பொருள்முதல்வாதம் போன்ற எதுவுமே விளங்கிக்கொள்ள முடியாத சிதம்பர சக்கரம் போல் இருந்ததால் நான் ஆரம்பத்தில் அதிக ஆர்வம் காட்டவில்லை.

அங்கேயே நான் தங்கியிருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால் தவிர்க்க முடியாதவகையில் சில நூல்களை படிக்க முற்படுகிறேன். லெனினின் வாழ்க்கை வரலாறு, போல்சுவிக் கட்சி வரலாறு, அதிகாலையின் அமைதியில், ரஷ்யாவில் நரோட்னிக்குகள் குறித்த பிரச்சனை, அராஜகவாதம் குறித்த நூல்கள், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைத் திட்டம், மவோவின் இராணுவப் படைப்புக்கள் என்று குறிப்பான நூல்களை எனது வாழ்வின் முதல் தடவையாகப் வாசிபிற்கு உட்படுத்தும் வாய்ப்பு ஏற்படுகிறது. எல்லாமே மார்க்சிய நூல்கள் தான். அன்டன் பாலசிங்கம் ஒப்புவித்த வேளையில் புரிந்துகொள்ள முடியாதவற்றை எமது இயக்கத்தின் நடைமுறைகளோடு ஒப்பிட்டுப் படிக்கும் போது அவையெல்லாம் எமக்;காக எழுதப்பட்டவை போன்ற புத்துணர்வு ஏற்பட்டது.

முதலில் நான் படித்த நூல் லெனினின் வாழ்க்கை வரலாறு. யாரோ ஒரு மனிதனின் வாழ்க்கை வரலாறு என்ற வகையில் தான் நான் ஆரம்பித்தேன். அதில் சொல்லப்பட்ட விடயங்கள் எமது இயக்கத்தில் உருவாகியிருந்த பல பிரச்சனைகளுக்குத் தீர்வை முன்வைப்பதக அமைந்திருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது.

லெனினுடைய சகோதரர் நரோட்னிக் என்று அழைக்கப்பட்ட அமைப்பில் இருந்தவர். ஸார் குடும்பத்தின் ஆட்சிக்கு எதிராக அவர் போராடுகின்றார். தனிமனிதப் படுகொலைகளை மேற்கொள்வதன் மூலமே விடுதலைப் போராட்டத்தை வளர்க்க முடியும் என்ற கருத்தை முன்வைக்கிறார். இறுதியில் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டு மரணமடைகிறார். லெனின் அவரது சகோதரரின் வழிமுறை தவறானது என வாதாடுகிறார்.

அராஜகவாத வழிமுறை என்று சொல்லப்பட்ட இந்த வழிமுறைக்கு எதிராக புதிய திசைவழியை முன்வைத்து சமூகத்தில் மக்களை அணிதிரட்டுகிறார். நாடு முழுவதும் சென்று வெகுஜனங்களை அமைப்பாக்குகிறார். அவர்களது நாளாந்தப் பிரச்சனைகளை முன்வைத்தே மக்களை அணியாக்குகிறார். போராட்டத்தை வெற்றியை நோக்கி நகர்த்திச் செல்கிறார்.

விடுதலைப் புலிகளைப் பொறுத்த வரையில் தனிமனிதப் படுகொலைகளிலிருந்தே அனைத்தும் ஆரம்பமாகியிருந்தது. மக்களோடு எமக்கு எந்தத் தொடர்பும் இருந்ததில்லை. மக்கள் போராடுவதற்காக அணிதிரட்டப்படவில்லை. அவர்கள் எமது வீரச் செயல்களை ரசிக்கும் பார்வையாளர்களாகவே தொடர்ந்தனர். அனைத்திற்கும் மேலாக நான் உட்பட பலரும் விடுதலைக்காத் தான் கொலைகளை மேற்கொள்கிறோம் என நம்பியிருந்தோம். ஆனால் எதற்கெடுத்தாலும் கொலை, கொலை என்பது துரையப்பாவில் ஆரம்பித்து தொடர்ந்துகொண்டிருந்து விரக்தியையே தருவதாக அமைந்தது.

நரோட்னிக்குகளின் நடவடிக்கைகள் என்பதுதான் நாம் இராணுவத்தைக் கட்டமைப்பது என்ற பெயரில் முன்னெடுத்துக்கொண்டிருந்தோம் என்பது அப்போது தான் புரிந்துகொள்ள முடிந்தது.

முதல் தடவையாக வேறு ஒரு வழிமுறையும் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்க எமக்கு முன்னால் இருப்பதாக உணர்ந்து கொள்கிறேன்.

எனக்குள்ளே ஒரு புதிய இரத்தம் பாய்ச்சியது போன்ற இனம்புரியாத உணர்வு மேலிட்டது.

நான் கற்றுக்கொண்டவை எமது நடவடிக்கைகள் போன்றவற்றின் அவற்றுடனான தொடர்ச்சி என்பன குறித்து மனோமாஸ்டர், நந்தன், மாத்தையா, குமணன் போன்ற பலரும் விவாதிப்போம்.

மாவோவின் இராணுவப்படைப்புகள் மக்கள் இராணுவத்தை எப்படி வெற்றிகரமாகக் கட்டமைப்பது எனக்க் கற்றுத்தந்தது. அவர்கள் எப்படி மக்கள் மத்தியில் வெகுஜன வேலைகளை முன்னெடுத்தார்கள், மக்களோடு இணைந்து மக்கள் கண்காணிப்பில் போராட்டம் நடக்கின்ற போது தனி நபர் கொலைகள் அவசியமற்ற நிலை உருவாகும் என அறிந்து கொள்கிறேன். மக்கள் பணத்தில் தங்கியிருந்தால் கொள்ளைகளும், திருட்டும் தேவையற்றதாகிவிடும் என நம்பிக்கை தருகின்றன அந்த வரலாறுகள். மக்கள் நடத்துகின்ற வெகுஜனப் போராட்டங்களை ஊக்குவிப்பதும் அந்த வெகுஜனப் போராட்டங்களிற்கு ஆதாரமாக இராணுவத்தை மக்களின் கண்காணிப்பில் கட்டமைப்பதுமே ஒரு புரட்சிகரக் கட்சியின் கடமை என உணர்கிறேன். எமது தேசத்தின் விடுதலைக்கான பாதையை மக்கள் பலத்தோடு, உலக முற்போக்கியக்கங்களின் துணையோடு நாம் வகுத்துக்கொள்ளலாம் என நம்பிக்கை கொள்கிறேன்.

தனி மனிதர்களின் தூய்மைவாதம், அரசியலை விமர்சிப்பதற்கு மாறாக தனிமனித நடவடிக்கைகளை குறை கூறுதல் போன்ற விடயங்களுக்கு எல்லாம் முன்னைய போராட்ட அனுபவங்கள் விடை பகிர்ந்தன. துரோகிகளைத் தீர்மானிக்கும் “அரசியல் பொலீஸ்காரர்களாக” நாம் உலா வந்தமை போன்ற பல விடயங்களை நாம் மீள்பரிசீலனை செய்யவேண்டும் என்ற முடிவிற்கு வருகிறேன்.

என்னிலும் அதிகமாக மனோ மாஸ்டர், நந்தன், போன்றோர் மார்க்சிய இயக்கங்கள் குறித்தும் சமூகத்தை விஞ்ஞான பூர்வமாக எவ்வாறு அணுகுவது என்பன குறித்து தெரிந்து வைத்திருந்தாலும் நான் இவற்றையெல்லாம் எனது நீண்ட போராட்ட வரலாற்று அனுபவத்திலிருந்து பார்க்க முடிந்ததில் நாம் என்ன செய்யவேண்டும் என்பது குறித்த பார்வை ஏற்படுகிறது.

ஆயுதங்களிலும் அதிகமாக,பணத்தைச் சேகரித்துக் கொள்வதிலும் அதிகமாக, ஆட்பலத்தையும் இயக்கப்பிரச்சாரத்தையும் மேற்கொள்வதிலும் , இயக்கத்திற்கு ஆதரவாக மக்களைத் திரட்டிக்கொள்வதிலும் அதிகமாக மக்களமைப்புக்களை உருவாக்க்க வேண்டும் என்ற ஆர்வம்தான் எனக்கு ஏற்படுகிறது.

இதெல்லாம் குறித்து, மனோ மாஸ்டர், நந்தன், அழகன் போன்றோரோடு அடிக்கடி விவாதம் நடத்துவோம். சுந்தரம் ஏற்கனவே சுப்பிரமணியம் போன்ற இடது அரசியல் வாதிகளுடன் தொடர்பிலிருந்ததால் அவரும் நாம் முன்வைக்கும் கருத்துகளை ஏற்றுக்கொள்கிறார். எது எவ்வறாயினும் சுந்தரத்தின் பிரதான பிரச்சனையாக இருந்தது பிரபாகரன் மட்டும்தான். பிரபாகரனை பிரதியிட்டு புதிய சர்வாதிகாரமற்ற தலைமையை உருவாக்கினால் பிரச்சனைகள் தீர்ந்துவிடும் என்பதுதான் அவரின் பார்வையாக அமைந்தது.

ஆக அமைப்பினுள் இப்போது இரண்டு வகையான போக்குகள் உருவாகின்றன. முதலாவதாக சுந்தரம் முன்வைத்த பிரபாகரனை நீக்கி இன்னொருவாரால் அவரைப் பிரதியிடுவதனு;டாக மக்கள் அமைப்புகளை உருவாக்குவதோ அல்லது அதுபோன்ற ஏனைய ஜனநாயகப் பணிகளை முன்னெடுத்தல் என்பது. இரண்;டாவதாக நாம் ஒரு அரசியலை முன்வைக்கிறோம் அதனை அமைப்பினுள் பிரச்சாரம் செய்து அதனை ஏற்றுக்கொள்ள வைப்பதென்பது. இரண்டுக்குமே ஒரு பொதுவான இயல்பு இருந்தது எனபது உண்மை.பிரபாகரனின் சர்வாதிகாரப் போக்கிற்கு எதிரான போராட்டம் என்பதே. ஆனால் இரண்டுமே அடிப்படையில் வேறுபட்ட நோக்கங்களைக் கொண்டவையாக அமைந்தன.

இன்னொரு எல்லையில் நான் அனுபவ அரசியலையும் தத்துவார்த்தப் பக்கத்தையும் ஒன்றிணைத்துப் பார்த்தது போல தேசியப்பற்றுள்ள பிரபாகரனும் புரிந்துகொள்வாரானால் முழு இயக்கத்திலும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தலாம் என நம்பினேன்.

இதே காலப்பகுதியில் கிட்டு வாழ்ந்த பண்ணையில் ஒரு சிக்கல் ஏற்படுகிறது. கிட்டு மீன்பிடிச் சமூகத்தைச் சேர்ந்தவராயினும் வல்வெட்டித்துறையில் மீன்பிடியைத் தொழிலாகக் கொண்ட பரம்பரையைச் சார்ந்தவரல்ல. வல்வெட்டித்துறையில் மீன்பிடிக்கும் கூலித் தொழிலாளர்களை ஏனைய உயர் சமூகத்தினர் மதிப்பதில்லை. கிட்டுவின் பண்ணையில் யோன் என்ற மூத்த உறுப்பினரின் சகோதரரும் இணைந்திருந்தார். அவர் மீன்பிடியைத் தொழிலாகக் கொண்ட குடும்பத்தைச் சார்ந்தவர். கிட்டு அவரை அவமதிப்பது போலவே பலதடவைகள் நடந்துகொண்டிருக்கிறார். தவிர,இரண்டு தடவைகள் அவரை அடித்துத் துன்புறுத்தியிருந்தார். அவ்வேளைகளில் அவரை எச்சரித்து இனிமேல் அப்படி நடந்துகொள்ள மாட்டார் என்ற உறுதிமொழியை வாங்கியிருந்தேன்.

ஆனால் மூன்றாவது தடவையாகவும் கிட்டு அவருக்கு அடித்திருக்கிறார். இதனைக் கட்டுப்படுத்த முடியாது என்ற நிலை உருவான போது,கிட்டுவை பண்ணையை விட்டு வீட்டில் போய் இருக்குமாறு அனுப்பிவிடுகிறேன். அவர் வல்வெட்டித்துறைக்குச் சென்றுவிடுகிறார்.
போராட்டத்திற்கான எமது திசைவழி தவறானது என்ற முடிபிற்கு நான் உட்பட பெரும்பாலோனோர் வந்தடைகிறோம். மக்கள் சார்ந்த போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற கருத்துப் பரவலாக நிலவுகிறது. இந்த அடிப்படையில் மக்கள் அமைப்புக்களை உருவாக்கி அவர்களைப் போராடாப் பயிற்றுவிக்க வேண்டும் என்பதில் அனைவரும் உடன்பாட்டிற்கு வருகிறோம். ஆக, எமது திடீர் இராணுவ நடவடிக்கைகளையும், கொலைகளையும் நிறுத்திவிட்டு வெகுஜன வேலைகளை முன்னெடுத்து மக்களைப் போராட்டத்திற்கும் தற்காப்பு யுத்ததிற்கும் தயார்படுத்த வேண்டும் என்று பலரும் கருத ஆரம்பித்தனர்.

இப்போது இயக்கத்தில் உருவாகியிருக்கும் புதிய போக்கை பிரபாகரன்,நாகராஜா ஆகியோருக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்ற முடிவின் அடிப்படையில் அவர்களுக்குக் கடிதம் எழுதுவதாகத் தீர்மானிக்கிறேன். அதற்கு முன்பதாக இயக்கத்தில் உருவாகியிருந்த இரண்டு போக்குகளுக்கு இடையிலான சமரச முயற்சியாக அனைவரிடமும் ஒரு பொதுவான கருத்தை முன்வைக்கிறேன். பற்குணம்,மைக்கல் கொலை குறித்த பிரச்சனைகளை எல்லாம் இப்போதைக்குப் பேசாமல்,வெகுஜன வேலைகளையும் தத்துவார்த்தக் கல்வியையும் அதனோடிணைந்த மக்கள் அமைப்பைக் கட்டமைக்கும் திட்டத்தை முன்வைக்க வேண்டும் என்பதே அது. சுந்தரம் ஆரம்பத்தில் எதிர்ப்புத்தெரிவித்த போதும் இறுதியில் ஒரு இணக்கத்திற்கு வருகிறார்.

ஆக அந்தக் கடிதத்தில் ஒன்றை மட்டும் தான் குறிப்பிடுகிறேன். நாங்கள் முன்னெடுக்கும் போராட்ட வழிமுறை தவறானது.அழிவுகளை ஏற்படுத்த வல்லது. இது குறித்து நாங்கள் அவசரமாகப் பேச வேண்டியுள்ளது.அனைவரையும் உடனடியாக நாட்டுக்குத் திரும்பி வருமாறு அழைப்புவிடுக்கிறேன். கடித்தின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்ட பிரபாகரன், நாகராஜா,பேபிசுப்பிரமணியம் உட்பட அனைவரும் உடனடியாகவே நாடுதிரும்புகின்றனர். இந்தியாவில் ரவியும் பாலாவும் மட்டுமே தங்கியிருக்கின்றனர்.

இன்னும் வரும்..

பகுதி பதினாறைப் படிக்க., பாகம் பதினைந்தைப் படிக்க.., பாகம் பதின்நான்கை வாசிக்க.. , பாகம் பதின்மூன்றை வாசிக்க..  பாகம் பன்னிரண்டை வாசிக்க.. பாகம் பதினொன்றை வாசிக்க.. பாகம் பத்தை  வாசிக்க.. பாகம்  ஒன்பதை வாசிக்க.. பாகம் எட்டை வாசிக்க.. பாகம்  ஏழை வாசிக்க.. பகுதி  ஆறை  வாசிக்க… பகுதி ஐந்தை  வாசிக்க… பகுதி நான்கை வாசிக்க.. பகுதி மூன்றை வாசிக்க.. பகுதி இரண்டை வாசிக்க..  பகுதி ஒன்றை வாசிக்க..

கொல்லப்படுவதிலிருந்து தப்பிய உமாமகேஸ்வரன் (பாகம்16) : ஐயர்

நான் மத்திய குழுக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காகப் புறப்பட்ட வேளையில் என்னோடு சுந்தரம், குமரப்பா, மாதி ஆகியோரும் சென்னை நோக்கிப் பயணமாகின்றனர்.வேதாரண்யம் கடற்பகுதி ஊடாக இந்தியா சென்றடைந்த நாம் அங்கிருந்து தஞ்சாவூர் சென்று ஒரு நாள் தங்கியிருந்து விட்டு பின்னதாக சென்னை வந்தடைகிறோம். இந்த இடைவெளிக்குள் உமாமகேஸ்வரனுடனான முரண்பாடு பெரிதாகிறது. அவருடனான தொடர்புகள் முற்றாகத் துண்டிக்கப்படுகின்றன. அவர் இப்போது யாரையும் சந்திப்பதில்லை. அவர் எம்.எல்.ஏ விடுதியிலேயே தங்கியிருந்தார் என்பதையெல்லாம் அறிந்து கொள்கிறோம்.

பின்னர் அவர் அங்கிருந்தபடியே சம்பவம் தொடர்பாக நான் உட்பட்ட மத்திய குழுவினர் நித்தலின்பனார் இல்லத்தில் உமாமகேஸ்வரனிடம் இது குறித்து விளக்கம் கோருவதென முடிவாகிறது. இவ்வேளையில் அன்டன் பாலசிங்கமும் எம்முடன் இருக்கிறார். மத்திய குழு ஒன்று கூடல் ஒழுங்கு செய்யப்பட்ட அதே வேளை இன்னுமொன்றையும் நாம் ஒழுங்கு செய்துகொள்கிறோம். உமாமகேஸ்வரன் குற்றத்தை ஒத்துக்கொள்ளாது முரண்பாடுகளை வளர்க்கும் வகையில் வாதிட்டால் அவரை அன்றே கொலைசெய்துவிடுவது என்றும் தீர்மானிக்கிறோம். பிரபாகரனால் முன்மொழியப்பட்டு எம் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்தத் தீர்மானத்தை நிறைவேற்ற சுந்தரம், செல்லக்கிளி, ரவி ஆகியோர் ஒழுங்கு செய்யப்படுகின்றனர்.

சுந்தரம் அப்போதுதான் என்னோடு இலங்கையிலிருந்து சென்னை வந்து சேர்ந்திருந்தார். உமாமகேஸ்வரனைக் கொலைசெய்வதற்கான ஆயத்தங்கள் அனைத்தும் தயாராகிவிட சுந்தரம், செல்லக்கிளி, ரவி ஆகியோர் சைதாப்பேட்டை பாலத்திற்கு அருகாமையில் வைத்துக் கொலைசெய்வதாக ஏற்பாடாகிறது.

உமாமகேஸ்வரனை உணர்வுமிக்க போராளியாகத் தான் நான் பார்த்திருக்கிறேன். பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவராக தெரிந்தெடுக்கப்பட்டவர். இராணுவத் தூய்மைவாதத்தில் ஊறிப்போன எனக்கு உமாமகேஸ்வரனின் நடவடிக்கை துரோகமாகத் தான் தென்பட்டது. அனைத்திற்கும் மேலாக உமாமகேஸ்வரனிற்கு தனது ஊரில் ஒரு காதலி இருந்தார் என்பதும் எனக்குத் தெரிந்திருந்ததால் அவர்மீதான வெறுப்பு அதிகமாகியிருந்தது. அவரையே உமாமகேஸ்வரன் பின்நாளில் திருமணம் செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.பிரபாகரன், நான், நாகராஜா, பேபி சுப்பிரமணியம் ஆகிய அனைவரும் உமாமகேஸ்வரனின் வருகைக்காகக் காத்திருக்கிறோம்.

சென்னையின் வெம்மை சுட்டுக்கொண்டிருந்தது. மிக நீண்ட நேரமாகியும் உமாமகேஸ்வரன் அங்கு வந்து சேரவில்லை. அவர் இனிமேல் வரமாட்டார் என்ற முடிவுக்கு வந்தாகவேண்டியாயிற்று. அவர் வரவில்லை. நாங்கள் மட்டுமல்ல கொலைசெய்வதற்குத் தயாராக நின்றவர்களும் ஒருவகையான கலக்கத்துடன் திரும்பிவிடுகின்றனர்.

உமாமகேஸ்வரன் அன்று அங்கு வந்திருந்தால் அப்போதே பிரபாகரன் அனுப்பியவர்களால் கொலை செய்யப்பட்டிருப்பார். அதிஷ்டவசமாக அவர் அன்று உயிர்பிழைத்துக் கொள்கிறார். பின்நாளில் நடந்தவற்றை வைத்து அனுமானிக்கும் போது சுந்தரம் தான் உமா மகேஸ்வரனுக்கு கொலைத் திட்டமிடல் குறித்த தகவல்களை வழங்கியிருக்க வேண்டும் என்பது சற்று வெளிப்படையானதாகவே தெரியவந்தது. இதனால் தான் உமாமகேஸ்வரன் அங்கு எதிர்பார்த்தபடி வரவில்லை என்பது பலரும் பின்னர் ஊகித்துக்கொண்டார்கள்.

இந்த வேளையில் அன்டன் பாலசிங்கம் இந்த விடயம் பெரிதுபடுத்த வேண்டிய ஒன்றல்ல என்று ஒவ்வொருவரோடும் தனித்தனியாகப் பேசிய போதும் நாம் அனைவரும் பிரபாகரன் கூறுவதே சரியானது என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தோம். உமாமகேஸ்வரன் வராவிட்டாலும் விளக்கமளிப்பதற்காக ஊர்மிளா அங்கு சமூகமளித்திருந்தார்.அன்டன் பாலசிங்கத்தைப் பொறுத்தவரை இந்தப்பிரச்சனை முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டிய ஒன்றல்ல என எம்மிடம் கூறிய போதும் பிரபாகரனுக்கு எதிராகப் பேசுவதற்கு அவருக்குப் போதிய துணிவு இருந்திருக்கவில்லை.

இதே வேளை பிரபாகரனுடன் படகில் இந்தியாவிற்கு வந்த சந்ததியார் புலிகளால் ஏறக்குறைய வீட்டுக்காவலிலேயே வைக்கப்பட்டிருந்தார். அவர் போகின்ற இடங்களுக்கெல்லாம் எம்மிலிருந்து ஒரு உளவாளி அனுப்பபப்ட்டார். நான் சென்னைக்கு வந்ததும் சந்ததியார் என்னை அழைத்து மொட்டைமாடியில் பேசினார். உங்களது இயக்கம் தவறான பாதையில் செல்கிறது. எந்த ஜனநாயகமுமில்லை. எதையும் பேசமுடியாது. யாரும் கருத்துக்கூற முடியாது என்று கூறுகிறார். எனக்கெல்லாம் பிரபாகரன் கூறுவதே சரியானதாகப்பட்டது. நானும் தனிமனிதத் தூய்மைவாதக் கண்ணோட்டத்திலேயே வளர்ந்தவன். மைக்கல் கொலைசெய்யப்பட்ட நாளிலிருந்து பிரபாகரன் செய்வதெல்லம் தமிழ் மக்களின் விடுதலைக்காகவும் தமிழீழத்திற்காகவும் என்றே நம்பியிருந்தவன். பதினேழு வயதுச் சிறுவனாக உணர்ச்சி வேகத்தில் பிரபாகரன் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கை இலங்கை அரசை அதிரவைக்கும் வெற்றியைக் கொடுத்தது. அப்போது ஏற்பட்ட நம்பிக்கை எத்தனை கொலைகள் வேண்டுமானாலும் நிறைவேற்றி ஒரு பலமான இராணுவத்தை உருவாக்கிவிட்டால் தமிழீழம் கிடைத்துவிடும் என அவர் உறுதியாக நம்பியிருந்தார்.

பிரபாகரனும் அவரைத் தொடர்ந்து நாமும் துரோகி,எதிர்ப்புரட்சிக்காரன்,சமூகவிரோதி என்று எண்ணுபவர்களை எல்லாம் அழித்து நிர்மூலமாக்கிவிடுதல் என்பதை கொள்கையாகக் கொண்டிருந்தோம். இது தான் ஆயிரமாயிரம் தேசபக்தர்களையும், சமூக உணர்வு படைத்தவர்களையும் எதிர்காலத்தில் கொன்றொழித்தது.

எம்மத்தியில் உறைந்து கிடந்த அர்ப்பண உணர்வை சரியான அரசியலை நோக்கி வளர்த்தெடுக்க யாரும் முன்வரவில்லை. அதற்கான வேலைத்திட்டம் குறித்துக்கூட யாரும் சிந்திததில்லை. எந்த அரசியலுமின்றி சிறிய இராணுவ வெற்றிகளினூடாகக் கிடைத்த நம்பிக்கையை மட்டுமே எமது தொடர்ந்த வேலைமுறையாக்கிக் கொண்டோம். முப்பதாண்டுகால புலிகளின் வரலாற்றையும் கூட இந்தச் சிந்தனை முறைதான் தீர்மானித்தது. சில இளைஞர்கள் தாம் சார்ந்த சமூகத்திற்கு எதிராக இளைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராகக் கோபம் கொண்டு போராட முன்வந்திருக்கிறார்கள் என்றால் அவர்களை அன்னியப்படுத்தித் தனிமைப்படுத்துவது அபாயகரமானது.

இலங்கையில் சண்முகதாசன் தலைமையில் ஒரு தத்துவார்த்தப் போராட்டமே எமக்குத் தெரியாமல் எமக்கு வெளியில் நடந்து கொண்டிருந்தது. அவர்களெல்லாம் அனைத்தையும் இழந்து போராட முன்வந்த எம்மை நெறிப்படுத்த வேண்டும் என்றோ எம்மோடு தொடர்புகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றோ கிஞ்சித்தும் முயற்சித்ததில்லை. பாலசிங்கத்தின் வரவு கூட எந்தப் பலனையும் ஏற்படுத்தவில்லை. எமது தவறுகளை நியாயப்படுத்துவதிலிருந்தே அவரின் அரசியல் ஆரம்பிக்கிறது.சந்ததியார் கூறியதெல்லாம் எனக்கு ஒரு அரசியல் சார்ந்த கருத்தாகப் படவில்லை. ஏதோ உமாமகேஸ்வரனுடைய நண்பர் என்ற அடிப்படையில் அவரை நியாயப்படுத்துகிறார் என்றே கருதினேன்.

இப்போது உமாமகேஸ்வரனைத் தொடர்புகொள்ள முடியாத வகையில் சந்ததியார் தடுக்கப்பட்டிருந்தார். அவர் பின்னால் அவருக்குத் தெரிந்தவாறே ஒரு உளவாளி அனுப்பப்பட்டார். அவர் வீட்டிலிருந்து எங்கு சென்றாலும் பின் தொடர ஒரு நாளைக்கு ஒருவர் என்ற வகையில் நியமிக்கப்பட்டனர். இந்தக் காலப்பகுதியில் அன்டன் பாலசிங்கம் மார்க்சிய வகுப்புக்களை நடத்துகிறார். பொருள்முதல்வாதம், கருத்துமுதல்வாதம் என்றெல்லாம் பல கனதியான விடயங்கள் குறித்துப் பேசுவார். அவை யாருக்கும் புரிவதில்லை. குமரப்பா, சாந்தன் ஆகியோர் அக்கறையாக குறிப்புக்கள் எடுத்து அவற்றைப் படிப்பார்கள். எனக்கு எதுவும் புரிவதில்லை. பிரபாகரன், பேபி சுப்பிரமணியம் போன்றோர் அவரின் வகுப்புகளுக்கு வருவதே கிடையாது.

அன்டன் பாலசிங்கத்தை நாங்கள் எல்லாம் அண்ணா என்றுதான் அழைப்போம். மிக எளிமையாக அழகாகப் பேசவல்லவர். அனைவரது அபிமானத்தையும் பெற்றிருந்தார். பிரபாகரன் கூட அவர் மீதான ஆழமான மதிப்பு வைத்திருந்தார்.

உமாகமகேஸ்வரன் கொலையிலிருந்து தப்பித்துகொண்ட பின்னர் சந்ததியாரைக் கொலைசெய்ய வேண்டும் என்ற கருத்தை மத்திய குழுவைக் கூடி பிரபாகரன் முன்வைக்கிறார். சந்ததியார் உமாமகேஸ்வரனின் கையாள் எதிர்காலத்தில் ஆபத்தாக அமையக் கூடியவர் அவரைக் கொலைசெய்ய வேண்டும் என்ற கருத்தை முன்வைக்கிறார். நாகராஜா அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறார். முதல் தடவையாக நானும் பிரபாகரனைப் பலமாக எதிர்க்கிறேன். சந்ததியார் கொலைசெய்யப்படக் கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். பிரபாகரன் இதை எதிர்பார்க்கவில்லை. என்னை நோக்கிக் கூறுகிறார் ‘இனிமேல் நீங்களும் சந்ததியாரும் பட்டபாடு’ என்று விரக்தி தொனிக்கக் கூறுகிறார். மத்திய குழுக் கூட்டத்தின் போது பேபி சுப்பிரமணியம், பிரபாகரன், நாகராஜா, நான் ஆகியோரே விவாதிக்கிறோம். பேபி சுப்பிரமணியம் பிரபாகரனுக்கு எதிராகப் பேசவில்லை.

இறுதியாக சந்ததியாரை இனிமேல் அரசியலில் ஈடுபடக் கூடாது என்று எச்சரித்து இலங்கையில் கொண்டு சென்று விடுவோம் என்ற கருத்தைப் பிரபாகரன் முன்வைக்க நாங்கள் ஒரு மனதாக ஏற்றுக்கொள்கிறோம். நான் சந்ததியாருக்கு ஆதரவாகப் பேசியமையால் அவரை எச்சரிக்கும் பொறுப்பு என்னிடமே வழங்பப்படுகிறது. நான் சந்ததியாருடன் முன்னமே நீண்ட நேரம் பேசியிருந்தமையால் எனக்கு அவருடன் பேசுவதற்கான வெளி ஒன்று இருந்தது. நான் அவரிடம் போய் தமிழீழ விடுதலைப் புலிகளின் மத்திய குழுவின் முடிவுகளை முன்வைக்கிறேன். தான் போகும் வழியில் தன்னைக் கடலுக்குள் தள்ளிக் கொலைசெய்து விடுவோமோ என்ற பயம் கூட அவரிடம் இருந்தது. அதுகுறித்தும் என்னிடம் பேசினார்.

நாங்கள் உங்களைக் கொலைசெய்யமாட்டோம் ஆனால் நீங்கள் அரசியலில் ஈடுபடக் கூடாது என்ற நிபந்தனை விதிக்கிறோம் என நான் கூறி அவரை இலங்கைக்கு அனுப்பிவைக்கிறோம்.ஒரு தனிமனிதனின் அரசியல் உரிமையை ,பேச்சுரிமையை நாங்கள் கையிலெடுத்துக்கொண்டோம். நூறு கருத்துக்கள் மோதட்டும், நூறு பூக்கள் மலரட்டும் என்ற அழகான கவிதையின் ஆழம் அப்போது எங்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. ஒரு கருத்தையே கண்டு பயந்துபோய் கொன்று போட்டுவிடுகிற அளவிற்குக் கோழைத் தனமாக இருந்திருக்கிறோம் என்பதைப் புரிந்துகொள்ள பல நாட்கள் கடந்திருக்கின்றன.

எம்மிடம் விடுதலை உணர்வு இருந்தது. அதற்கான வழிமுறைகளை நாங்கள் தனிமனிதத்தூய்மை வாத உணர்வின் அடிப்படையிலிருந்தே கட்டமைத்துக்கொண்டோம். தூய்மையானவர்களாகக் எம்மை நாமே கருதிக்கொண்டோம்.அதையே பிரகடனப்படுத்திக் கொண்டோம். போராட்டத்தின் முன்னோடிகளான நாம்தான் தொடர்ச்சியாகப் போராட்டத்தில் உறுதியுடன் நிற்கின்றோம்.எம்மிடம் தூய்மையும் நேர்மையும் ஆழப்பதிந்து கிடக்கின்றது. இவற்றிற்கெல்லாம் யார் எதிர் வந்தாலும் அவர்கள் எம்மைப் பொறுத்தவரை துரோகிகளே. அழிக்கப்பட வேண்டியவர்களே.

மக்களின் விடுதலைக்காக என்று மட்டுமே சுய நலமின்றி எம்மோடு இணைந்து செயற்பட முன்வந்த சந்ததியார் என்ற போராளி இப்போது எமது கொலைக்கரங்களிலிருந்து விடுதலை பெற்று இந்து மா சமுத்திரத்தின் தென் மூலையைக் கடந்து இருளைக் கிழித்துக்கொண்டு இராணுவ கண்காணிப்பிலிருந்து தப்பியோடும் படகில் இலங்கை நோக்கி பிரயாணம் செய்கிறார்

 

இன்னும் வரும்..

 

பாகம் பதின்நான்கை வாசிக்க..  பாகம் பதின்மூன்றை வாசிக்க..  பாகம் பன்னிரண்டை வாசிக்க.. பாகம் பதினொன்றை வாசிக்க.. பாகம் பத்தை  வாசிக்க.. பாகம்  ஒன்பதை வாசிக்க.. பாகம் எட்டை வாசிக்க.. பாகம்  ஏழை வாசிக்க.. பகுதி  ஆறை  வாசிக்க… பகுதி ஐந்தை  வாசிக்க… பகுதி நான்கை வாசிக்க.. பகுதி மூன்றை வாசிக்க.. பகுதி இரண்டை வாசிக்க..  பகுதி ஒன்றை வாசிக்க..

உமாமகேஸ்வரன் ஊர்மிளா தொடர்பு – புதிய முரண்பாடுகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் (பாகம் 15) : ஐயர்

இந்தியா சென்ற எமது உறுப்பினர்கள் முதலில் மதுரைக்குச் சென்று மதுரையில் சில நாட்கள் தங்கியிருந்த பின்னர், செஞ்சி ராமச்சந்திரனின் உதவியுடன் எம்.எல்.ஏ விடுதியில் தங்கியிருந்தனர். அங்கு ஏனையோரும் தங்கியிருந்தனர். அங்கு (திராவிடர் கழகம்) தி.க விலிருந்த பலர் எமது இயக்கத்திற்கு அறிமுகமாகின்றனர். தமிழ்த் தேசியம் என்பது தமிழ் நாட்டில் திராவிட இயக்கங்களுடன் அடையாளப்படுத்தப்பட்டிருந்தது. திராவிடக் கொள்கையின் மறு முகம் தமிழ்த் தேசியமாக அமைந்திருந்தது. தமிழ் நாட்டைப் பொறுத்தவரை இது திராவிடக் கட்சிகளின் வாக்கு வங்கியாகக் கூடச் செயற்பட்டது. திராவிடக் கொள்கையின் தலித்தியக் கூறுடன் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எந்த பொதுத் தளமும் இருந்ததில்லை. ஆனால் எம்மைப் பொதுவாக அவர்கள் சமூகப் போராளிகளாகவே கருதினர். பல திராவிட இயக்கத் தொண்டர்கள் எம்மோடு இணைந்துகொள்ள விரும்பினர்.
 
எமது உறுப்பினர்கள் தங்கியிருந்தது செஞ்சி ராமச்சந்திரனின் விடுதி என்பதால் அங்கு அனைவரும் தங்கியிருக்க வசதியீனம் காணப்பட்டதால் தண்டையார்பேட்டையில் ஒரு வீடு ஒன்றை வாடகைக்கு அமர்த்திக் கொள்கின்றனர். பூபதி என்ற சேலத்தைச் சேர்ந்த எமது ஆதரவாளர் மூலம் அந்தவீடு வாடகைக்கு அமர்த்திக்கொள்ளப்படுகிறது. அதன் பின்னர் எம்.எல்.ஏ விடுதியிலும் வாடகை வீட்டிலும் மாறி மாறித் தங்கியிருக்க ஆரம்பித்தனர்.

1979 இன் ஆரம்பக் காலப்பகுதியில் நடந்த இச்சம்பவங்கள் குறித்த தகவல்களைப் பெரும்பாலும் இலங்கையிலிருந்த எனக்கு கடித மூலமும் நேரடிச்சந்திப்புகள் மூலமும் தெரிவித்துக்கொள்வார்கள். அப்போது தமிழ் மன்னன் என்ற சென்னைத் தமிழர் ஒருவர் எமக்கு நிறைய உதவிகள் செய்வார்.தவிர மேகநாதன் என்ற தமிழ் உணர்வாளரும், தி.கவின் உறுப்பினருமான ஒருவர் முழு நேர ஊழியராக எமது இயக்கத்தில் இணைந்து கொண்டார் சில காலங்களில் வீரமணி என்ற ஒருவரும் இந்தியாவிலிருந்து பகுதி நேரமாக எம்மோடு இணைந்துகொண்டார்.

உறுப்பினர்களின் தொகை அதிகரிக்கவும் ,தேடப்படுபவர்கள் இலங்கையில் இருந்து இந்தியா நோக்கி வரவும் இருப்பிடத்திற்கான தேவை அதிகரிக்கிறது. இதன் காரணமாக தஞ்சாவூரிலும் ஒரு வீட்டை வாடகைக்கு அமர்த்திக்கொள்கின்றனர். ஈழத்திற்கு தேவையான தளபாடங்களைச் சேர்த்து அனுப்பவும், அங்கிருந்து வருகின்றவர்களை தற்காலிகமாகத் தங்க வைப்பதற்காகவும் இந்த வீடு பயன்படுத்தப்படுகிறது.

இலங்கையிலிருந்து பிரபாகரனும் அவரோடு புறப்பட்ட மூவரும் சென்னையிலிருந்த தண்டையார்பேட்டை வீட்டிற்கே வந்து சேர்கின்றனர்.

அவ்வேளையில் இங்கிலாந்திலிருந்து அன்டன் பாலசிங்கம் தனது மனைவி அடேல் பாலசிங்கத்துடன் சென்னையில் எம்மைச் சந்திப்பதற்காக வந்து சேர்கிறார். அவர் வந்ததுமே புலிகளின் தலைவராகவிருந்த உமாமகேஸ்வரன் மற்றும் பிரபாகரன் உட்பட அனைவருடனும் பேசுகிறார். மார்க்சிய அரசியல் வகுப்புகளும், வெளியீடுகளும் அவசியமானவை என்று கூறுகிறார்.

பாலசிங்கம் தமிழ் நாட்டிற்கு வந்த சில நாட்களிலேயே துண்டுப்பிரசுரம் ஒன்றைப் புலிகளின் பேரில் நாடு முழுவதும் வினியோகிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கிறார். ‘சோசலிசத் தமிழீழத்தை நோக்கி…’ என்ற தலைப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முதலாவது துண்டுப்பிரசுரம் பாலசிங்கத்தால் எழுதப்பட்டு இந்தியாவில் அச்சிடப்படுகிறது. அதன் பிரதிகள் இலங்கையில் வினியோகம் செய்யப்படுவதற்காக எனக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. துண்டுப் பிரசுரம் எமக்குக் கிடைத்ததும் நாம் வேறுபாடுகளை மறந்து புதிய உற்சாகத்துடன் செயற்பட ஆரம்பிக்கிறோம்.

இதே காலப் பகுதியில் இலங்கையில் இனவாதத்தை வெளிப்படையாகவே பேசிய சிங்கள அரசியல் வாதிகளில் இலங்கை அமைச்சர் சிறில் மத்தியூ மிகப்பிரதானமானவர்.

சிங்கள பௌத்த மேலாதிக்க வாதத்தை மேலும் நஞ்சூட்டிய குறிப்பிடத்தக்க தலைவர்களில் சிறில் மத்தியூவும் ஒருவர். இவர் ‘சிங்களவர்களே! பௌத்தத்தைப் பாதுகாக்க எழுச்சி கொள்ளுங்கள்’ என்ற நூலை எழுதியவர். ஜே.ஆர்.ஜெயவர்தனாவின் அரசில் அரசவை அமைச்சராகப் பணிபுரிந்தவர். ‘யார் புலிகள்’ என்ற துண்டுப் பிரசுரம்  1979 இல் இவர் தபால் தலைப்புடன் அனைத்து பொது அமைப்புக்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டது. ‘தமிழர்கள் இலங்கையை அழிக்க வந்தவர்கள்’ என்று வெளிப்படையாகவே பேசிவந்தவர். இவரது மகன் நத்தா மத்தியூவும் பல அமைச்சரவைப் பதவிகளை வகித்தவர் என்பதோடல்லாமல், மகிந்த ராஜபக்ச அரசில் ஊவா மாகாணத்தின் ஆளுனராகவும் கடமையாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

குமணன் மனோமாஸ்டர் போன்ற ஏனைய உறுப்பினர்களுடன் இணைந்து நாமும் சிறில்மத்தியூவின் அதே தபால் தலைப்பைப் பயன்படுத்தி துண்டுப்பிரசுரத்தை அரச திணைக்களங்களுக்கும் அதன் மையங்களுக்கும் அனுப்பிவைப்பதாகத் தீர்மானித்து அவரின் இலச்சினை பொறிக்கப்பட்ட தபால் உறையை பிரசுரித்துக் கொள்கிறோம். இது அரச திணைக்களங்களுக்கு கிடைக்கும் அதே வேளை குறித்த நேரத்தின் அனைத்து வாசிக சாலைகள் பொது மையங்கள் பாடசாலைகள் போன்ற இடங்களுக்கு இருவர் கொண்ட அணிகளாகப் பிரிந்து தமிழ்ப் பகுதிகளில் வினியோகம் செய்வதற்காக பண்ணையிலிருந்தவர்களைத் தயார் செய்கிறோம்.
 
திட்டமிட்டபடி பிரசுரம் பெரியளவில் அனைத்து மட்டங்களையும் சென்றடைகிறது. ஒரு ‘அதிரடி’ நடவடிக்கை போன்று அமைந்த இந்த நிகழ்வின் பின்னர் புலிகள் குறித்து தமிழ் மக்கள் பரவலாகப் பேசிக் கொள்வதையும் அவர்களிடம் புதிய நம்பிக்கை துளிர்விட்டதையும் காணக்கூடியதாக இருந்தது.

பிரசுரம் பரவலாகக்ச் சென்றடைந்த சில நாட்களில் அது குறித்து இலங்கை உளவுப் பிரிவு மிகுந்த அச்சம் கொள்கிறது. குறைந்தது ஆயிரம் பேர் இணைந்து திட்டமிட்டுத் தான் இப் பிரசுரம் வெளியிடப்பட்டிருக்க வேண்டும் என்று கணிப்பிட்ட இலங்கை இரகசியப் பொலீசாரின் அறிக்கையை இலங்கையின் அனைத்து நாளிதழ்களும் பிரசுரிக்கின்றன.

சிறி லங்கா அரசின் திட்டமிட்ட குடியேற்றங்களும், இன அடக்கு முறையும் இராணுவ வடிவங்களாக உருவாகிக்கொண்டிருந்த வேளையில் பிரசுரம் மக்கள் மத்தியில் புதிய நம்பிக்கையைத் தோற்றுவிக்கிறது.

அவ்வேளையில் முகுந்தன் (உமாமகேஸ்வரன்), நாகராஜா போன்றோர் மிகத் தீவிரமாக இயங்கிக்கொண்டிருந்தனர். அவர்கள் உறங்குவதற்காக மட்டுமே தங்குமிடங்களுக்கு வருகின்ற அளவிற்கு மிகவும் தீவிர இயங்கு சக்திகளாகத் தொழிற்பட்டனர். உமாமகேஸ்வரன், நாகராஜா ஆகிய இருவருமே மிகுந்த அர்ப்பண உணர்வோடு செயலாற்றுபவர்கள். இவர்கள் சென்னையில் ஆரம்பித்து தமிழ் நாட்டின் பலபகுதிகளிலும் இயக்கத்தின் தேவைகளுக்கான பல தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டனர். அந்த வேளையில் இயக்கத்தின் தலைமைப் பொறுப்பு உமாமகேஸ்வரனிடம் இருந்ததது.

பிரபாகரன் சென்னைக்கு வந்த பின்னர் தளத்தில் பண்ணைகளை நிர்வகிப்பதிலிருந்து அனைத்து இயக்க வேலைகளும் நான் மட்டுமே கவனிக்க வேண்டிய சுமை எனது தோளகளில் விழுகிறது. எனக்கு உதவியாக ஏனைய போராளிகளும், குறிப்பாக குமணன் மனோ மாஸ்டர் போன்றோர் ஒத்துழைக்கின்றனர். மத்திய குழு உறுப்பினர்களும் பிரபாகரனும் களத்தில் இருந்து வெளியேறியதன் சுமையை உணரக் கூடியதாக இருந்தது. தனியே முடிபுகளை மேற்கொண்டு வேலைகளைச் செய்வது இது முதல் தடவை அல்ல. ஆனால் முன்னைய சந்தர்ப்பங்களைப் போல இலகுவானதாக இருக்கவில்லை. போராளிகளதும் பண்ணைகளதும் தொகை அதிகரித்திருந்தது. அத்தோடு கூடவே புதிய பிரச்சனைகளும் அவற்றிற்குத் தீர்வுகாணவேண்டிய பழுவும் அதிகமானது.

இலங்கையில் பிரபாகரன் பயிற்சி முகாமில் இருந்தவர்கள் மீது தன்மீதான அதிர்ப்தியை விட்டுச்சென்றிருந்தார். பிரபாகரனின் தன்னிச்சையான நடவடிக்கைகள் குறித்து பல உறுப்பினர்கள் தொடர்ந்தும் எதிர்ப்புக் குரலெழுப்பினர். வீரவாகு ரகு தொடர்பான பிரசனைகளை தொடர்ந்தும் சலசலப்பிற்கு உள்ளாகியிருந்தது. இவற்றையெல்லாம் சமாதானப் படுத்தி உறுப்பினர்களை ஒழுங்கிற்குக் கொண்டுவரவேண்டிய நிலையில் நான் இருந்தேன்.

பிரபாகரன் தமிழகம் சென்றதும் இயக்கதினுள் புதிய பிரச்சனை ஒன்று தலை தூக்குகிறது. பொதுவாக அனைவரும் சென்னையில் தண்டையார் பேட்டை வீட்டில்தான் தங்கியிருப்பது வழமை. அங்கே போராளிகள் அனைவரும் இரவு நீண்ட நேரம் இயக்க நடவடிக்கைகள் குறித்துப் பேசிக்கொண்டிருந்த பின்னர் உறங்கச் செல்வார்கள். அவ்வேளையில் ஊர்மிளாவும் அங்குதான் தங்கியிருந்தார். அவர் பேசிக்கொண்டிருந்த பின்னர் மொட்டை மாடியில் சென்று உறங்குவார். முகுந்தனும் (உமாமகேஸ்வரன்) பேசிக்கொண்டிருந்த பின்னர் உறங்கும் வேளையில் அவரும் மொட்டைமாடிக்குச் சென்றுவிடுவார். உமாமகேஸ்வரனின் இந்த நடவடிக்கை குறித்து கலாபதிக்கு சந்தேகம் ஏற்படுகிறது.

பலருக்கும் உமாமகேஸ்வரன் – ஊர்மிளா குறித்த சந்தேகங்கள் நீண்டகாலமாகவே இருந்துவந்தது. உமாமகேஸ்வரன் பலஸ்தீன இராணுவப்பயிற்சிகுச் செல்கின்ற வேளையில் விமான நிலையத்தில் அவர்கள் காதலர்கள் போல நடந்துகொண்டதாக அவ்வேளையில் விமான நிலையத்திலிருந்த நாகராஜா பிரபாகரனிடம் கூறினார். நாகராஜா வழமையாகவே சந்தேகப்படும் சுபாவம் உடையவராதலால், பிரபாகரன் அவரைத் திட்டியிருக்கிறார். தவிர அவர்களுடைய உடல் மொழி குறித்து வேறு உறுப்பினர்களும் கூடப் பேசியிருக்கின்றனர். குறிப்பாக பிரபாகரனிடம் இவை குறித்து முறையிட்ட போதிலும் பிரபாகரன் முகுந்தன் மீது சந்தேகம் கொள்ளவில்லை.

இவ்வாறான சந்தேகங்கள் ஏற்கனவே பேசப்ப்ட்டதால் நாகராஜாவும் கலாபதியும் ஒரு நாள் அனைவரும் உறங்கச் சென்றபின்னர் மொட்டைமாடிக்குச் சென்றிருக்கின்றனர். அங்கே ஊர்மிளாவும் உமாமகேஸ்வரனும் ஒன்றாக உறங்குவதைக் கண்டிருக்கிறார்கள். மறு நாள் காலை இவர்களிருவரும் பிரபாகரனிடம் இது குறித்துக் முறையிட்டிருக்கிறார்கள்.

பின்னதாக நாகராஜாவும் பிரபாகரனும் உமாமகேஸ்வரனை அழைத்து இது தொடர்பாகக் கேட்டிருக்கிறார்கள். உமாமகேஸ்வரன் பெரிதாக எதுவும் உடனடியாகச் சொல்லவில்லையெனினும் இதுதவிர நான் வேறு ஏதாவது தவறிழைத்திருக்கிரேனா என அவர்களைக் கேட்டிவிட்டுச் சென்றுவிட்டார்.

உமாமகேஸ்வரனின் நடவடிக்கையும் அதற்கான பதிலும் உறுப்பினர்களிடையே பெரும் கொந்தளிப்பையும்,கோபத்தையும் ஏற்படுத்துகிறது. நாம் அனைவருமே அரசியலைத் தனிமனிதத் தூய்மைவாததிலிருந்து தன் புரிந்துகொண்டவர்கள். அதிலும் தலைமைப் பொறுப்பிலிருந்த உமாமகேஸ்வரனின் இந்தப் பதில் அவரின் உறவை உறுதிப்படுத்துவதாக அமைந்திருந்தது. இந்த நடவடிக்கைகள் தூய்மையான, கட்டுக்கோப்பான இராணுவ அமைப்பை உருவாக்குவதற்கான கனவில் ஈடுபட்டிருந்த எம்மவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாகுகிறது.

ஒழுக்கமான இரணுவ அமைப்பில் இவ்வாறான பாலியல் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் என்பது அனுமதிக்கப்பட முடியாத குற்றமாகவே கருதினர். அதுவும் தலைமைப் பதவியிலிருக்கின்ற ஒருவர் மீதான குற்றச்சாட்டுக்களை மிகுந்த கோபம்கலந்த வெறுப்புடனேயே நோக்கினர்.

சில மணி நேரங்களில், ஊர்மிளாவுடன் பேசிவிட்டுத் திரும்பி வந்த உமாமகேஸ்வரன், அனைத்தையும் மறுக்கிறார்.இது தன்மீது திட்டமிட்டு சுமத்தப்படும் குற்றச்சாட்டு என்று கூறுகிறார். உமாமகேஸ்வரன் சாட்சிகளுடன் கூடிய சம்பவம் ஒன்றை மறுத்த போது அது மேலும் அவர்மீதான வெறுப்புணர்விற்கு வித்திடுகிறது. பொதுவாக அங்கிருந்த அனைத்து உறுப்பினர்களும் உமாமகேஸ்வரனுக்கு எதிரானவர்களாக மாறுகின்றனர்.

இவ்வேளையில் முன்னர் கென்ட்பாமில் தங்கியிருந்த ரவி, இவர்களிடையேயான தொடர்பு முன்னமே அனைவருக்கும் தெரிந்த ஒரு விடயம் தான் என்று சொல்கிறார். தவிர, கொழும்பில் ஊர்மிளா – முகுந்தன் தொடர்பு என்பது ஓரளவு அறியப்பட்ட விடயம் தான் என்றும் சொல்லப்படுகிறது. இவை அனைத்தையும் அறிந்துகொண்ட பிரபாகரனும் ஏனைய உறுப்பினர்களும் உமாமகேஸ்வரனைத் தலைமைப்பதவியிலிருந்து விலகிக்கொள்ளுமாறு கோருகின்றனர்.
சாதாரண உறுப்பினர்களுக்குப் பாலியல் தொடர்புகளிருப்பதைப் பலதடவைகள் நாங்கள் கண்டுகொள்வதில்லை. செல்லக்கிளிக்கு பெண்களுடன் தொடர்புகள் இருப்பதாக அவர் பண்ணைகளில் எம்மிடம் பல தடைவைகள் கூற முனைந்த வேளைகளில் நானும் ஏனையோரும் அதுபற்றியெல்லாம் இங்கு பேசவேண்டாம் என்று தடுத்திருக்கிறோம்.

பிரபாகரனுக்குக் கூட இது தொடர்பாகத் தெரியும். தவிர,செல்லக்கிளி மீது யாரும் கோபப்படுவதில்லை. அவரை துடிப்பான குறும்புக்கார இளைஞனாகவே அனைவரும் கருதினர். ஆக, இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு உமாமகேஸ்வரனை தலைமைப்பதவியிலிருந்து இறங்கி சாதாரண உறுப்பினராகச் செயற்படுமாறு கோருகின்றனர்.

அதே வேளை ஊர்மிளாவை பெருஞ்சித்தனார் வீட்டிற்கு மாற்றிவிடுகிறார்கள். உமாமகேஸ்வரன் தண்டையார்பேட்டை வீட்டிலிருந்து எம்.எல்.ஏ விடுதிக்கு மாறுகிறார். கூடவே ஏனைய உறுப்பினர்களுடனான தொடர்புகளை மட்டுப்படுத்திக் கொள்கிறார்.
இந்த வேளைகளில் அன்டன் பாலசிங்கமும் அவரது மனைவியும் சென்னையில்தான் இருக்கின்றனர். அவர் சென்னைக்கு வந்து சில நாட்களிலேயே இயக்கத்தின் தலைவராகவிருந்த உமாமகேஸ்வரனுக்கு எதிரான குற்றச்சாட்டு அதிர்வலைகளை ஏற்படுத்துகிறது.

பாலசிங்கமும் இந்தப்பிரச்சனை தொடர்பாக ஏனையோரிடம் பேசுகிறார். இந்தப் பிரச்சனையைப் பெரிதுபடுத்த வேண்டிய அவசியமில்லை என்பதுதான் பாலசிங்கத்தின் கருத்தாக அமைந்திருந்தது. . இவையெல்லாம் ஒரு புறத்தில் நிகழ்ந்து கொண்டிருக்க தமிழ் நாட்டில் உமாமகேஸ்வரனின் முரண்பாடு கூர்மையடைகிறது. தலைமைப் பதவியிலிருந்து விலகுமாறு முன்வைத்த கோரிக்கையை அவர் நிராகரிக்கிறார்.

உமாமகேஸ்வரன் தொடர்ச்சியாக தான் அவ்வாறு எந்தத் தொடர்பையும் ஊர்மிளாவுடன் கொண்டிருக்கவில்லை என மறுக்கிறார். இறுதியில் மத்திய குழு கூட்டப்பட வேண்டும் என்றும், மத்திய குழுவின் முடிவிற்குத் தான் கட்டுப்படுவதாகவும் கூறுகிறார்.

மத்திய குழு உறுப்பினர்களில் நான் மட்டும்தான் இலங்கையில் இருந்தேன். உமாமகேஸ்வரன் என்னையும் இணைத்துத் தான் மத்தியகுழு முடிவுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்க அனைவரும் அதனை ஏற்றுக்கொள்கிறார்கள். ஆக, என்னை இலங்கையிலிருந்து வரவழைத்து அதன் மத்திய குழு ஒன்று கூடலை நிகழ்த்திய பின்பே இறுதி முடிவிற்கு வருவதாகத் தீர்மானிக்கப்படுகிறது.

இன்னும் வரும்..

பாகம் பதின்நான்கை வாசிக்க..

பாகம் பதின்மூன்றை வாசிக்க..

பாகம் பன்னிரண்டை வாசிக்க..

பாகம் பதினொன்றை வாசிக்க..

பாகம் பத்தை  வாசிக்க..

பாகம்  ஒன்பதை வாசிக்க..

பாகம் எட்டை வாசிக்க..

பாகம்  ஏழை வாசிக்க..

பகுதி  ஆறை  வாசிக்க…

பகுதி ஐந்தை  வாசிக்க…

பகுதி நான்கை வாசிக்க..

பகுதி மூன்றை வாசிக்க..

பகுதி இரண்டை வாசிக்க..

பகுதி ஒன்றை வாசிக்க..

பிரபாகரனை எதிர்க்கும் போராளிகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் (பாகம் 14) : ஐயர்

V.Pirabakaran inioru.com

தமிழீழ விடுதலைப் புலிகளின் கனவு என்பதே பலம் மிக்க இராணுவத்தைக் கட்டமைப்பது தான். இதன் அடிப்படையே ஒழுங்கமைக்கப்பட்ட பயிற்சி முகாமொன்றை உருவாக்குவது என்பதிலிருந்தே ஆரம்பிக்க முடியும் என நாம் கருதினோம். இதற்குரிய முழுமையான திட்டத்துடன் பிரபாகரன் முன்வருகிறார். திட்டமிட்டபடி மாங்குளத்தில் பயிற்சி முகாம் ஆரம்பிக்கப்படுகிறது. இது வரையில் எழுந்தமானமாக சந்தர்ப்பம் கிடைக்கின்ற வேளைகளிலெல்லாம் நாம் பயிற்சியெடுத்துக் கொண்டிருந்தோம். துப்பாகிகளைச் சுட்டுப் பழகுவது போன்ற சிறிய இராணுவ நடவடிக்கைகளுக்கான பயிற்சிகளை மேற்கொண்டோம்.

79 இன் ஆரம்பத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பயிற்சி முகாமில் தான் திட்டமிட்டு ஒழுங்கமைக்கப்பட்ட இரணுவப் பயிற்சி ஆரம்பமாகிறது. முகாம் துல்லியமாகத் திட்டமிட்டு அமைக்கப்பட்டது.

பாதுகாப்புடன் கூடிய இராணுவ முகாம்களில் பங்கர்கள் வெட்டப்பட்டு, மண்மூடைகள் அடுக்கப்பட்டு ஒரு சிறிய இராணுவ முகாம் போலவே காட்சிதருகின்ற பயிற்சிக்களம் தயாரிக்கப்பட்டது. முதல் தடவையாக இராணுவப் பயிற்சிக்கென்றே சீருடைகள் தயாரிக்கப்படுகின்றன. பயிற்சி வழங்கப்பட்ட அனைவருக்கும் சீருடைகள் வழங்கப்படுகின்றன. இராணுவப் பயிற்சி ஒழுங்கு முறைகள் கூடப் பிரபாகரனால் தயாரிக்கப்படுகின்றன. அவரின் நீண்ட நாள் இராணுவக் கனவோடு கூடிய திட்டங்கள் முதலில் நனவானது.

அரச இராணுவம் மக்களிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டு அமைக்கப்படுகிறது. இதன் உள் நோக்கம் இராணுவத்தின் மனிதாபிமான,மென்மையான உணர்வுகளை முற்றாகத் துடைத்தெறிந்து, மக்களையும் அழிக்கவல்ல அரச இயந்திரத்தின் அலகாக உருவாக்குவது என்பதே. இதில் விசித்திரமானது என்னவென்றால் மக்கள் விடுதலைக்காகப் போராடுவதாகக் கூறிய நாங்களே எம்மையும் அறியாமல் மக்கள் பற்றற்ற இராணுவத்தை உருவாக்குவதற்கான அடிப்படையை மாங்குளத்தில் கட்டியெழுப்ப முனைந்தது தான்.

அனைத்திற்கும் மேலாக ஹிட்லரின் இராணுவ ஒழுங்கு முறைகளாலும் இராணுவ வெற்றிகளாலும் ஆளுமை செலுத்தப்பட்டிருந்த பிரபாகரன், ஜேர்மனிய இராணுவத்தின் ஒழுங்கு முறைகளை தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பயிற்சிகளில் புகுத்த முற்படுகிறார். ஹிட்லரின் இராணுவம் கட்டுக்கோப்பானதாகவும் உறுதியானதாகவும் அமைந்திருந்தமையால் மட்டும் தான் வெற்றிகளைத் தனதாக்கிக் கொள்கிறது என்று கூறுகிறார். .

இராணுப் பயிற்சி ஒழுங்குமுறையின் முதல் பகுதியாக பயிற்றப்படுகின்ற அனைவரும் ஹிட்லரின் இராணுவம் போல அதே முறையில் சலூயுட் செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. ஹிட்லரின் இராணுவத்தின் ஒழுங்குமுறையையும் கட்டுக்கோப்பையும் மிகவும் மதித்திருந்த பிரபாகரன் அதன் தமிழீழப் பிரதியாக விடுதலைப் புலிகளின் இராணுவம் அமைந்திருக்க வேண்டும் என்று விருப்பியிருந்தார். அதனை நானும் நிராகரிக்கவில்லை

இவ்வேளையில் தான் முதல் தடவையாக பிரபாகரனுக்கு எதிரான எதிர்ப்பலைகள் தோன்றுகின்றன. சில உறுப்பினர்கள் ஹிட்லரின் சலூயுட் முறை என்பது தேவையற்றது என வாதிட்டனர். பிரபாகரன் அவர்களுக்கு எதிராக வாதிடுகிறார். கட்டுக்கோப்பான இராணுவம் அமைய வேண்டுமானால் அதற்கான வழிமுறைகளும் அமைந்திருக்க வேண்டும் என்கிறார். அதன் ஆரம்பமே இந்த ஹிட்லர் முறை என்று வாதிடுகிறார். குறிப்பாக, பிற்காலத்தில் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்ட குமணன் இதை எதிர்க்கிறார். அவரும் பயிற்சி முகாம் ஆரம்பிப்பதற்கான திட்டமிடல் விவாதங்களில் பங்குகொண்ட வேளையிலேயே இந்த விவாதம் ஏற்படுகிறது. இறுதியில் பிரபாகரன் முன்வைத்த அடிப்படையில் ஹிட்லர் முறை ஏற்றுக்கொள்ளப்பட்டு நடைமுறைப்படுதப்படுகிறது.

கைப்பற்றப்பட்ட இரண்டு இயந்திரத் துப்பாக்கிகள் தவிர, நாம் இந்தியாவில் சில இயந்திரத் துப்பாகிகளையும் சிறிய ரக ஆயுதங்களையும் வாங்கியிருந்தோம். ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட இராணுவத்தின் பயிற்சி முகாம் போன்று அமைந்திருந்த எமது முகாமின் இராணுவ அணிவகுப்பு, முறையான உடற்பயிற்சி போன்றவற்றுடன் துப்பாகிகளால் சுட்டுப்பழகுதல் போன்ற செயற்பாடுகளையும் முன்னெடுத்தோம்.

மக்கள் இராணுவம் உருவாகி வளர்ச்சியடைகின்ற நிலையில் நிலையான இராணுவமும் பயிற்சிகளும் மேற்கொள்ளப்பட சரியான சூழல் உருவாகும் என்கிறது மாவோவின் இராணுவப்படைப்பு. நாம் நிலையான இராணுவத்தை எல்லாவற்றிற்கும் முன்னமே உருவாக்கிக் கொள்கிறோம். அதற்கான அனைத்து ஒழுக்கங்களும் ஒரு அரச இராணுவத்திற்கு ஒப்பானதாகத் திட்டமிடப்பட்டது.

மத்திகுழு உறுப்பினர்களில் முகுந்தன் (உமாமகேஸ்வரன்), நாகராஜா, பேபி சுப்பிரமணியம் ஆகியோர் இந்தியா சென்றுவிட்டதால் நானும் பிரபாகரனும் மட்டுமே பயிற்சி முகாம் குறித்த முடிவுகளுக்கு வருகிறோம். இந்தக் காலப்பகுதியில் யாழ்ப்பாணம் முழுவதும் இராணுவ மயப்படுத்தப்படுகிறது. இன்பம் செல்வம் என்ற இரண்டு இளைஞர்கள் இராணுவத்தால் சுட்டுக்கொலை செய்யப்படுகிறார்கள். இந்தக் கொலைகள் சமூகத்தின் அனைத்து மட்டத்திலும் அதிர்வுகளை ஏற்படுத்துகிறது.

பயிற்சி முகாமிற்கு கிட்டு, செல்லக்கிளி,சாந்தன்,ஜோன்,சித்தப்பா,குமரப்பா,மாத்தையா போன்ற முன்னணி உறுப்பினர்கள் அழைக்கப்படுகின்றனர். பிரபாகரன் பயிற்சி வழங்குகிறார். இவருக்கு ஹிட்லர் இராணுவ முறையில் வணக்கம் செலுத்துவதும் திட்டமிட்டபடி இடம்பெறுகிறது.

இந்த வேளையில் இயக்கத்தினுள் இன்னொரு பிரச்சனையும் உருவாகிறது. வல்வெட்டித்துறையைச் சேர்ந்த ரகு. வீரவாகு என்ற இருவரைப் பிரபாகரன் பண்ணைகளில் பயிற்றப்படாமல், அவர்கள் குறித்து எந்த முன்னறிதலுமின்றி முகாமிற்குக் கூட்டிவருகிறார். பயிற்சி முகாமிற்குக் கூட்டிவரப்பட்ட இவர்களிருவருக்கும் ஏனைய முக்கிய உறுப்பினர்களுடன் இணைத்துப் பயிற்சி வழங்கப்படுகிறது. இது குறித்து பிரபாகரன் நான் உட்பட யாருடனும் ஆலோசிக்கவில்லை. இதற்குப் பலரும் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். மற்றவர்கள் அனைவரும் பண்ணைகளில் நீண்டகாலம் பயிற்றுவிக்கப்பட்டு, அவர்களின் உறுதித் தன்மை பரிசோதிக்கப்பட்ட பின்னரே இயக்கத்தின் பயிற்சி மட்டத்திற்கு உள்வாங்கப்படுவது வழமையாக இருந்தது. ஏற்கனவே பண்ணைகளில் பல உறுப்பினர்கள் நீண்டகாலம் இராணுவப் பயிற்சிக்காகக் காத்திருக்கும் வேளையில் திடீரெனெ இருவரைப் பிரபாகரன் கூட்டிவந்தது குறித்து சர்வாதிகாரப் போக்கு என்ற கருத்து எழுகிறது. இந்த நடைமுறைக்கு பிரபாகரனிடம் எந்த உறுதியான காரணமும் இருக்கவில்லை. பலர் இந்த பிரபாகரனின் இந்த நடவடிக்கை குறித்துக் கேள்வியெழுப்பிய வேளைகளில் அவரிடம் அதற்குரிய பதில் இருக்கவில்லை.

வல்வெட்டித்துறைச் சேர்ந்த இந்த இருவரும் குண்டுகள் செய்வதற்கான இரசாயனப் பொருட்களை அவர்கள் கல்விகற்றுக்கொண்டிருந்த ஹாட்லிக் கல்லூரியிலிருந்து திருடிய சம்பவத்திற்காகப் பொலீசாரால் தேடப்படுகின்றனர். பொலீசாரல் தேடப்படுவதால் இவர்கள் தலைமறைவாகவே வாழ்கின்றனர். குமணன், மாதி, ரவி போன்ற உறுப்பினர்கள் ஏனையயவர்கள் புறக்கணிக்கப்பட்டு இவர்களை இயக்கத்தினுள் உள்வாங்கியது குறித்து பலத்த ஆட்சேபனைகளைப் பிரபாகரனுக்கு எதிராக முன்வைக்கின்றனர்.

சில நாட்களின் பின்னர் மாணவனாகக் கல்விகற்றுக்கொண்டிருந்த சிறுவனான வீரவாகு இயக்கத்தில் இணைந்து தலைமறைவாக வாழ்வதாக அவரது குடும்பத்தினர் அறிந்துகொள்கின்றனர். இது தெரியவரவே குமரப்பா,மாத்தையா போன்றோரூடாகப் புலிகளைத் தொடர்புகொள்ளும் அவரது குடும்பத்தினர் வீரவாகுவை வீட்டுக்கு அனுப்பிவைக்குமாறு வேண்டுகின்றனர். வீரவாகுவும் வீட்டிற்குச் செல்ல விரும்பியதால் பிரபாகரன் அவரை அனுப்பிவைக்கிறார். வீட்டிற்குச் சென்ற அவர் பொலீசில் சரணடைந்துவிடுகிறார். இந்த நிகழ்ச்சி பிரபாகரன் மீதான அதிர்ப்தியை மேலும் அதிகரிக்கிறது. இதன் பின்னர் பிரபாகரனின் தன்னிச்சையான போக்கு குறித்துப் பலரும் எதிர்ப்புத் தெரிவிக்க ஆரம்பிக்கின்றனர். பிரபாகரனின் இராணுவ மனோபாவமும் அதற்குரிய சர்வாதிகாரத் தன்மையும் சிறுகச் சிறுக இயக்கத்தின் நிர்வாகத்துள் நுழைய ஆரம்பிக்கிறது. அதற்குரிய எதிர்வினைகளை எம்மோடிருந்த போராளிகளின் முன்னேறிய பகுதியினர் அவ்வப்போது ஆற்றத் தவறவில்லை.அனைத்து வாதப்பிரதிவாதங்களோடு பயிற்சி முகாம் சில நாட்கள் நடைபெறுகிறது. சில காலங்களின் பின்னர் பயிற்சி முகாம் முடிவடைந்தது என்று கூறி நிறுத்தப்படுகிறது.

இந்தக் காலப்பகுதியில் காந்தீயத்தில் அகதி நிவாரண வேலைகளை மேற்கொண்டிருந்த சந்ததியார் தானும் தமிழீழ விடுதலைப் புலிகளில் இணைந்து கொள்ள விரும்புவதாகத் தெரிவிக்கிறார். பிரபாகரனைத் தொடர்புகொண்டு பேசுகிறார். பிரபாகரனும் சந்ததியாரும் பல தடவைகள் சந்தித்துக் கொள்கிறார்கள். அவரை புலிகளின் முக்கிய பொறுப்பில் இணைத்துக்கொள்ள வேண்டும் என்று பிரபாகரன் விரும்புகிறார்.

உமாமகேஸ்வரனூடாக எமக்கு ஆதரவாக வேலைசெய்த முதல் பெண் ஊர்மிளா பொலீசாரால் தேடப்படுகிறார். கொழும்பில் வாழ்ந்த அவர் தலைமறைவாக வடக்கு நோக்கி வருகிறார். பெண் என்பதால் இலகுவாக அடையாளப்படுத்தப்பட்டு கைது செய்யப்பட்டுவிடலாம் என அச்சம் நிலவியது.

லண்டனில் வசித்துவந்த கிருஷ்ணன் என்பவருடைய தலைமையில் எமக்கு ஆதரவாகச் சிலர் இயங்கிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுடன் அன்டன் பாலசிங்கத்திற்குத் தொடர்புகள் இருந்தன. அன்டன் பாலசிங்கம் இந்தியாவிற்கு வந்து எம்மைச் சந்திக்க விரும்புவதாக எமக்குத் தகவல் வருகிறது. இதற்காகப் பிரபாகரனும் இந்தியா செல்ல விரும்புகிறார். பயிற்சி முகாம் மூடப்பட்டுவிட்டதால் இந்தியா சென்று பாலசிங்கத்தைச் சந்திக்கவும், ஊர்மிளாவை இந்தியாவிற்கு அழைத்துச் செல்லவும் இது சரியான சந்தர்ப்பம் என எண்ணிய பிரபாகரன் இந்தியா செல்ல ஏற்பாடுகளை மேற்கொள்கிறார். அப்போது சந்ததியாரைத் தொடர்புகொண்ட பிரபாகரன்,அவரோடு முன்னரே இணைந்து வேலைசெய்த உமாமகேஸ்வரனை இந்தியாவிற்கு தன்னோடு வந்து சந்திக்குமாறு அழைக்கிறார்.

சந்ததியாரும் இதற்கு இணங்கவே, பிரபாகரன், ஊர்மிளா,சந்ததியார், கலாபதி ஆகிய நால்வரும் எமது விசைப்படகில் இந்தியா செல்கின்றனர். அவர்களைத் தொடர்ந்து ரவியும் பாலாவும் இந்தியா செல்கின்றனர்.

இன்னும் வரும்..

பாகம் பதின்மூன்றை வாசிக்க..

பாகம் பன்னிரண்டை வாசிக்க..

பாகம் பதினொன்றை வாசிக்க..

பாகம் பத்தை  வாசிக்க..

பாகம்  ஒன்பதை வாசிக்க..

பாகம் எட்டை வாசிக்க..

பாகம்  ஏழை வாசிக்க..

பகுதி  ஆறை  வாசிக்க…

பகுதி ஐந்தை  வாசிக்க…

பகுதி நான்கை வாசிக்க..

பகுதி மூன்றை வாசிக்க..

பகுதி இரண்டை வாசிக்க..

பகுதி ஒன்றை வாசிக்க..

வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்ட வங்கிக் கொள்ளை-ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் 13)

அவ்ரோ விமானக் குண்டுவெடிப்பு, அதுவும் இலங்கையில் தமிழர்களின் அடிமைச் சாசனம் அங்குராட்பனம் செய்யப்ப்பட்ட நேரத்தில் நடைபெற்ற இந்தச் சம்பவம் எமது தன்னம்பிக்கையை இரட்டிப்பக்கியிருந்தது. எதையும் சாதித்துவிடலாம் என்ற மனோபாவம் எம் அனைவரின் முகத்திலும் தெரிந்தது. இனிமேல் இயக்க நடவடிக்கைகளுக்குப் பணம் திரட்டிக்கொள்வதற்கான வழிமுறைகள் குறித்து ஆராய்கிறோம்.

1978 ஆம் ஆண்டு தனது இறுதியை எட்டிக்கொண்டிருந்தது. மார்கழி மாதம் ஆரம்பித்திருந்தது. கிழக்கில் சூறாவழியின் கோரத்தில் பெருந்திரளாக மக்கள் உயிரிழந்த சம்பவமும் அப்போது தான் அதிர்வுகளை ஏற்படுத்தியிருந்தது. அரச உதவிகள் எதிர்பார்த்த அளவில் கிழக்கிற்குப் போய்ச் சேரவில்லை என்பது தமிழ் மக்களின் கோபத்தையும் வெறுப்பையும் மேலும் அதிகப்படுத்டியிருந்தது.

இப்போது திருநெல்வேலி பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகிலுள்ள மக்கள் வங்கியைக் கொள்ளையிடுவதற்கான திட்டம் தீட்டப்பட்டாயிற்று. வங்கியின் உள்தொடர்புகள் ஊடாக பணம் பரிமாறப்படும் நேரம் என்பன துல்லியமாகப் பெற்றுக்கொள்ளப்படுகிறது. இக்கொள்ளையை மேற்கொள்வதற்காக பிரபாகரனும் செல்வதாகத் தீர்மானிக்கப்படுகிறது. தவிர, எதையும் முன்கூட்டியே திட்டமிட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வல்லமையுடைய ரவி, துணிச்சல் மிக்க போராளியான செல்லக்கிளி, ஜோன், உரும்பிராய் பெற்றோல் நிலையக் உரிமையாளரைக் கொலைசெய்தபின்னர் எம்மோடு இணைந்துகொண்ட பாலா, ராகவன் ஆகியோர் செல்வதாகவும் தீர்மானிக்கப்படுகிறது.

வெளியே இருந்து பெருந்தொகையான பணம் வங்கிக்கு எடுத்துச் செல்லப்படும் நாள் குறித்த தகவல்களும் எமக்கு வந்து சேர்கின்றன. இந்தப் பணத்தை வங்கிக்குள் கொண்டு செல்வதற்கு முன்னதாகவே வாசலில் வைத்து கொள்ளையிடுவதாகவே திட்டமிடப்பட்டது. மிகவும் கவனமாகத் திட்டமிடப்பட்ட பின்னர் வங்கியை நோக்கி இவர்கள் அனைவரும் செல்கிறார்கள். முன்னரே நிலைமைகளை அவதானித்த பின்னர், ஒவ்வொருவரும் எந்தெந்த நிலைகளில் தம்மை நிறுத்திக் கொள்வது என்பதைத் தீர்மானிக்கிறார்கள்.

உள்ளே வங்கிக்குப் பாதுகாவலராக ஒரு பொலீஸ்காரர் காவல் காத்துக் கொண்டிருந்தார், அவரைக் கையாள்வதற்காக அவருக்குப் அருகில் ரவியும் ஜோனும் தமது நிலைகளை வலுப்படுத்திக் கொள்கிறார்கள் செல்லக்கிளி பணத்தைக் கொண்டுவரும் வாகனத்தின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்வதற்கான தயார் நிலையில் இருக்கிறார். பிரபாகரன் நிலைமைகளை அவதானித்து நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அருகிலிருந்த கடையொன்றில் காத்துக் கொண்டிருக்கிறார்.இடையில் பாதுகாப்புப் படையினர் தகவல் கிடைத்து வந்தால் அவர்களைச் எதிர்கொள்வதற்காகவே பிரபாகரன் கடையில் இருந்ததாகக் கூறப்பட்டது.

எல்லோரிடமும் துப்பாக்கிகள் இருக்கின்றன. செல்லக்கிளி துப்பாக்கியோடு காத்திருக்கிறார். பாலா காருக்குள் காத்துக்கொண்டிருக்கிறார்.

எதிர்பார்த்தபடி பணத்தை ஏற்றிக்கொண்டு பொலீஸ் காவலுடன் ஜீப் ஒன்று வங்கியை நோக்கி வருகிறது. வழமைபோல ஜீப் வங்கியின் முன்னால் நிறுத்தப்படுகிறது. அதிலிருந்து பொலீஸ்காரர் இறங்குகிறார். அவர் இறங்கியதும் செல்லக்கிளியின் துப்பாகியிலிருந்து தோட்டாக்கள் அவரை நோக்கிப் பாய்கின்றன. அதேவேளை வங்கியில் காவலுக்கு நின்ற பொலீஸ்காரரை ரவி சுட்டுச் சாய்க்கிறார். எல்லாமே திட்டமிட்டபடி மின்னல் வேகத்தில் ஒன்றன்பின் ஒன்றாக நடந்தேறுகிறது.

திகில் நிறைந்த அந்தப் பொழுதில் மக்கள் அங்குமிங்குமாகச் சிதறி ஓடிக்கொண்டிருந்தார்கள். பிரபாகரன் மறைந்திருந்த கடைக்குள் இருந்து வெளியே வந்து ஒடிக்கொண்டிருந்தவர்களையும், பயப்பீதியில் அங்கேயே நின்றவர்களையும் நோக்கி நாம் தனிப்பட்ட கொள்ளையர்கள் அல்ல. விடுதலைப் புலிகளின் இயக்க நடவடிக்கைகளுக்காகவே இந்த்ப் பணம் கொள்ளையிடப்படுகிறது என்கிறார்.

செல்லக்கிளி சுட்டுக்கொன்ற பொலீசாரிடமிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளிற்கு இன்னொரு இயந்திரத் துப்பாக்கி வந்து சேர்கிறது. பஸ்தியாம்பிள்ளை குழுவினரிடமிருந்து கைப்பற்றப்பட்ட முதலாவது துப்பாக்கியோடு இப்போது இரண்டு துப்பாக்கிகளை நாம் உடமையாக்கிக் கொள்கிறோம். பணப்பெட்டியைக் காரில் ஏற்றிக்கொண்டவர்கள் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட இடத்தை நோக்கி அதனைக் கொண்டு செல்கின்றனர்.

இடையில் பொன்னம்மான் குமணன் ஆகியோர் சைக்கிள் ஒன்றில் காத்து நிற்கின்றனர். கைப்பற்றப்பட்ட இரண்டு ரிப்பீட்டர், குறிசுடும் துப்பாக்கி, இயந்திரத் துப்பாக்கி ஆகியவற்றை அவர்களிடம் கொடுத்து பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைத்துவிட்டு, பிரபாகரனும் பாலாவும் காரில் தொடர்கிறார்கள். ஏற்கனவே எமது ஆதரவாளர் வீடு ஒன்று பணத்தைப் பாதுகாப்பதற்காக ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. பாலாவும் பிரபாகரனும் அவர்களிடம் பணத்தை ஒப்படைத்துவிட்டு வேறு இடங்களை நோக்கி தமது பயணத்தை ஆரம்பிக்கின்றனர்.

இயந்திரத் துப்பாகியோடு வந்திறங்கிய கிங்ஸ்லி பெரேரா என்ற பொலிஸ் உத்தியோகத்தர் யாழ்ப்பாண வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்படும் வழியில் உயிரிழந்து போகிறார். மற்றவர் ஜெயரத்தினம். அவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ஓரிரு தினங்களில் மரணமடைந்து விடுகிறார். குடாநாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறது. முக்கிய சந்திகளில், சாலைத் திருப்பங்களில் எல்லாம் பொலீசாரும் இராணுவத்தினரும் வாகனங்களையும் சோதனையிடுகின்றனர். தமிழ் மக்களுக்கு வங்கிப்பணம் தனி நபர்களால் திருடப்படவில்லை என்ற உணர்வு இருந்ததை காணக்கூடியதாக இருந்தது.

பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வீட்டிலிருந்தவர்கள் பணத்தின் ஒருபகுதியைக் கையாடி தமது சொந்தத் தேவைக்காக உழவு இயந்திரம் ஒன்றை வாங்கியது எமக்குத் தெரியவருகிறது. பிரபாகரனையோ எம்மையோ பொறுத்தவரை மக்கள் பணத்தின் ஒவ்வொரு சல்லிக்காசும் இயக்கத்தின் தேவைகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் என்பதில் மிகவும் உறுதியாகவிருந்தோம். இதை அறிந்துகொண்டதும் பணத்தை அங்கிருந்து வேறு இடத்திற்கு உடனடியாகவே மாற்றிவிட்டோம். உழவு இயந்திரத்தை விற்று எமக்குப் பணத்தைக் கையளிக்குமாறு கையாடியவர்களிடம் கேட்கிறோம். பின்னதாக இதன் ஒருபகுதிப் பணம்மட்டும் எம்மால் பெற்றுக்கொள்ளபட்டது.

பத்துலட்சம் ரூபா என்பது 1978 ஆண்டில் கணிக்கக்த்தக்க பெரிய தொகைப்பணம். 5.12.1977 இல் நடைபெற்ற இந்தக் கொள்ளைச் சம்பவம் ஜே.ஆர்.ஜெயவர்தன அரசை மேலும் திகைப்பில் ஆழ்த்தியிருந்தது. தமிழீழம் கோருகின்ற போராளிகளின் பலம் அதிகரித்திருப்பதை அரசு உணர்ந்து கொண்டது. இராணுவ முகாம்கள் பலப்படுத்தப்படுகின்றன. வடகிழக்கின் பாதுகாப்பு சிறிது சிறிதாக பொலீசாரிடமிருந்து இராணுவத்தின் பிடியில் மாற ஆரம்பித்தது. பொலீஸ் நிலையங்கள் பலப்படுத்தப்பட்டன. சோதனைச் சாவடிகள் ஆங்காங்கே முளைத்து மக்களின் அன்றாட வாழ்க்கைக்குத் தொல்லைதர ஆரம்பித்தன.

எம்மைப் பொறுத்தவரை பத்து லட்சம் பணம் கொள்ளையிடப்பட்டது நாம் எண்ணியிருந்த இராணுவத்தைக் கட்டமைப்பதற்கான மிகப்பெரும் திறவுகோலாக அமைந்தது. மக்கள் பணத்தில், மக்களோடு வாழும் கெரில்லாப் படையினராக நாங்கள் இருந்திருக்கவில்லை.

தேனீர் அருந்துவதற்குக்கூட எமக்கு எங்கிருந்தாவது பணம் வந்தாகவேண்டும். போராளிகளைப் பராமரிக்கவேண்டும். பண்ணைகளை ஒழுங்கமைக்கவேண்டும். பயிற்சி முகாம்களை உருவாக்க வேண்டும். இவை எல்லாவற்றிற்கும் பணம் என்பது அடைப்படையானதும் அத்தியாவசியமானதாகவும் அமைந்திருந்தது.

போராட்டம் வெற்றியடைந்த நாடுகளின் வரலாற்றில் எழுதப்படாத வேறுபட்ட உதாரணங்களை நாம் கொண்டிருக்கிறோம். இவை மறுபடி விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். மக்கள் மத்தியில் வாழ்கின்ற போராளிகள் மக்கள் போராட்டங்களை ஊக்கப்படுத்துவதற்காக, மக்கள் அமைப்புக்களைப் பாதுகாப்பதற்காக தற்காப்பு யுத்தங்களை நிகழ்த்தவே ஆயுதங்களைச் சேகரித்துக்கொண்டார்கள்.அவர்கள் மக்களோடு வாழந்தவர்கள். மக்கள் பணத்தில் தம்மைத் தகவமைத்துக் கொண்டவர்கள்.

நாமோ மக்களிலிருந்து அன்னியமாகி காடுகளில் வாழ்ந்தவர்கள். இராணுவம் ஒன்றைக் கட்டியமைத்து, தாக்குதல் நடத்தி தனித் தமிழீழத்தைப் பெற்றுவிடலாம் என்று மிக உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தோம்.

மக்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக அவர்களின் பாதுகாப்பு அமைப்பாக நாம் எம்மைக் கருதியிருக்கவில்லை. இறுதியில் பெரும்பான்மை மக்கள் அதிகாரத்தைக் கைபற்றிக் கொள்வதற்குப் பதிலாக, புலிகள் என்ற அமைப்பின் அதிகாரத்தையே எமது வழிமுறை முதன்மைப்ப்படுத்தியது.

ஒரு விடுதலை இயக்கம் தன்னை பலப்படுத்திக் கொள்ள வேண்டுமானால் பெருந்தொகையான பணம் தேவை என்ற கருத்தை, மக்கள் பலத்தைத் துச்சமாக மதித்த கோட்பட்டை மக்கள் பலத்தில் தங்கியிராத அனைத்து அமைப்புக்களும் பற்றிக்கொள்ள ஆரம்பித்தனர். சிறிது சிறிதாக முளைவிட்ட இயக்கங்கள் கூட வங்கிகள் மீதும், சில சமயங்களில் தனியார் வியாபார நிலையங்கள், அரச பல நோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் போன்றவற்றின் மீதும் பழிவாங்கும் நடவடிக்கைகளாகவும் எப்போதும் ஒரு பார்வையை வைத்திருந்தனர். சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அவற்றைக் கொள்ளயிட்டே தமது உறுப்பினர்களைப் பரமரிப்பது, ஆயுதங்களை வாங்குவது போன்ற தமது பிரதான தேவைகளைப் பூர்த்திசெய்துகொண்டனர்.

மக்கள் சாராத,வெகுஜன அமைப்புக்கள் குறித்துச் சிந்திக்க மறுத்த அமைப்புக்கள் உருவாவதற்கான அடிப்படைகளாக வங்கிப் பணம் ஆரம்பத்தில் அமைந்திருந்தது. குழு நிலை அமைப்பாக இருந்த சிறிய இயக்கங்கள் கூட இந்த வழிமுறையின் தாக்கத்திற்கூ உள்ளாகியிருந்தனர்.

பணத்தின் வலிமை புதிய நடவடிக்கைகளுக்கு உரமிடுகின்றது. சில உறுப்பினர்களை எமது பின் தளமாகக் கருதப்பட்ட இந்தியாவிற்கு அனுப்பவும், புதிய இராணுவ ஒழுங்குகளோடு கூடிய பயிற்சி முகாம் ஒன்றை உருவாக்குவதற்கான முயற்சிகளில் உடனடியாகவே எம்மை ஈடுபடுத்திக்கொள்கிறோம்.

இன்னும் வரும்..

பாகம் பன்னிரண்டை வாசிக்க..

பாகம் பதினொன்றை வாசிக்க..

பாகம் பத்தை  வாசிக்க..

பாகம்  ஒன்பதை வாசிக்க..

பாகம் எட்டை வாசிக்க..

பாகம்  ஏழை வாசிக்க..

பகுதி  ஆறை  வாசிக்க…

பகுதி ஐந்தை  வாசிக்க…

பகுதி நான்கை வாசிக்க..

பகுதி மூன்றை வாசிக்க..

பகுதி இரண்டை வாசிக்க..

பகுதி ஒன்றை வாசிக்க..

அடிமைச் சாசனம்- புலிகளின் எதிர்வினை – ஈழப்ப்போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் 12)

இலங்கை அரசின் இன ஒடுக்குமுறையும் ஜே.ஆர் ஜயவர்த்தன அரசின் சர்வாதிகாரமும், பாசிசமும் ஒழுங்கமைக்கப்பட்ட பேரினவாதமாக விரிவடைகின்றது. புலிகளின் இருப்பைச் சுட்டிக்காட்டியே பேரினவாதம் சிங்களப்பகுதியில் தன்னை மேலும்மேலும் நிறுவிக்கொள்கிறது. தமிழ்ப் பேசும் சிறுபான்மையினர் மீதான, மொழி, கலாச்சார, பண்பாட்டு அடக்கு முறைகள் அதன் எல்லைகளைத் தாண்டி இராணுவ அடக்குமுறையாக விரிவடைகிறது. மறுபுறத்தில் அரச ஆதரவு தமிழ் அரசியல் வாதிகள் அரசாங்கத்துடன் இணைந்து தமிழ்ப் பேசும் மக்களின் பிரச்சனைக்குத் தீர்வு முன்வைக்கப்படும் என்கின்றனர். நீதி அமைச்சராகப் பதவிவகித்த கே.டபுள்யூ.கே.தேவநாயகம் தமிழ்ப் பிரதேசங்களின் அபிவிருத்தியையே தமிழர்கள் எதிர்பார்க்கின்றனர், வன்முறையை அல்ல என பத்திரிகையாளர் மாநாட்டில் கூறுகிறார். அரசியல் அமைப்பை மாற்றியமைத்து தமிழர் பிரச்ச்னைகளுக்குத் தீர்வு காணப்படும் என்று மேலும் அவர் கூறிய அதே வேளை அம்பாறை, திருகோணமலை போன்ற பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்கள் தீவிரமடைகின்றன.

பஸ்தியாம்பிள்ளை உட்பட்ட இரகசியப் பொலீசாரின் கொலை ஏற்படுத்திய அதிர்வலைகள், புலிகளின் பலம் குறித்த வாதங்களைப் பரவலாகத் தோற்றுவித்திருந்தது. இப் படுகொலை நிகழ்ந்து சரியாக ஒருமாதமும் பத்து நாட்களும் ஆன நிலையில் புலிகள் தடைச் சட்டத்தை ஜெயவர்தன அரசாங்கம் நிறைவேற்றுகிறது. 19.05.1978 அன்று இலங்கைப் பாராளுமன்றம் புலிகளும் அதை ஒத்த அமைப்புக்களையும் தடைசெய்வதாகச் சட்டமூலம் ஒன்றை நிறைவேற்றுகின்றது. பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்தச் சட்டத்திற்கு எதிராக இலங்கை தொழிலாளர் காங்கிரசைச் சேர்ந்த தொண்டைமான், தமிழர் விடுதலைக் கூட்டணி, சிறீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியன வாக்களிக்க, 131 ஆதரவான வாக்குகளுடனும் 25 எதிரான வாக்குகளுடனும் சட்டமூலம் நிறைவேறுகிறது.

இச்சட்டமூலம் இலங்கைப் பாதுகாப்புப் படைகளுக்கு முதல் தடைவையாக எல்லை மீறிய அதிகாரத்தை வழங்கியது.

சட்டமூலம் குழு நிலையில் விவாதத்திற்கு உட்படுத்தப்பட்ட போது தமிழ் அமைச்சரான தேவநாயகம் அதனை ஒரு வருடத்திற்கு மட்டுமே அமுல்படுத்த வழிகோலும் சட்டமூலம் ஒன்றைப் பிரேரித்தார். அதுவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அவ்வேளையில் எதிர்க்கட்சித் தலைவராக திரு.அமிர்தலிங்கம் இருந்தார். தடைச் சட்டத்தின் கீழ் நியமிக்கப்படும் ஆலோசனைக் குழுவில் எதிர்க்கட்சித் தலைவரால் முன்மொழியப்படும் ஒருவரும் ஏற்றுக்கொள்ளப்படுவார் என பிரதமமந்திரி ஆர்.பிரேமதாச தெரிவித்தார். அந்த ஆலோசனைக் குழு மூன்று உறுப்பினர்களை மட்டுமே கொண்டதாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.

சபையில் விவாதத்தின் போது கருத்துத் தெரிவித்த அமிர்தலிங்கம், வீரகேசரிப் பத்திரிகையில் வெளியான புலிகளின் கடிதம் உண்மைக்குப் புறம்பானது. அதில் குறிப்பிடப்படுள்ளது போல கனகரத்தினம் கொலைசெய்யப்படவில்லை. இது உண்மையானதல்ல சிருஷ்டிக்கப்பட்ட கடிதம் எனக் குறிப்பிட்ட அவர், ஒரு சில புலிகளைக் கைது செய்வதன் மூலம் இனப்பிரச்சனையைத் தீர்த்துவிட முடியாது என்றார்.

இச்சட்டம் நிறைவேற்றப்பட்டதும் அரசபடைகளின் அதிகாரம் வெளிப்படையாகவே தெரிய ஆரம்பித்தது. தமிழ் இளைஞர்களின் கைதுகளும் தாக்குதல்களும் அதிகரித்தன. எமது இயக்கத்திற்கான ஆதரவும் திடீரென ஒரு பாய்ச்சல் போல அதிகரித்ததை உணரக் கூடியதாக இருந்தது. இவ்வேளைகளில் மத்திய குழுவை அடிக்கடி கூட்டிக்கொள்வோம்.

தேடப்படுவோரின் படங்கள் அடங்கிய சுவரொட்டி தமிழ்ப் பேசும் மக்கள் நடமாடும் பகுதிகளில் பரவலாக ஒட்டப்பட்டிருந்தது. நாகராஜா, உமாமகேஸ்வரன், கண்ணாடி பத்மனாதன், வாமதேவன் ஆகியோரின் படங்கள் முன்னணியில் பதிவு செய்யப்பட்டிருந்தன. இவர்களைக் காட்டிக்கொடுப்போருக்கு ஒருலட்சம் ரூபா சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது, இவர்களைத் தொடர்ந்து பிரபாகரன், ரவி போன்றோரின் படங்கள் பிரசுரிக்கப்பட்டு இருபத்து ஐயாயிரம் ரூபா சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது.

தமிழ்ப் பேசும் மக்களைப் பொறுதத் வரையில் இவர்கள் எல்லாம் தம்மை விடுதலை செய்யவந்த கதாநாயகர்களாகவே நோக்கப்பட்டனர். இலங்கை முழுவதும் ஒரு புதிய அரசியல் சூழலுக்குள் இழுத்துச் செல்லப்படுவாதான நிலை தென்பட்டது.

வாமதேவன் என்பவர் எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தின் கார்ச் சாரதியாக வேலைபார்த்தவர் என்பதைத் தவிர போராட்ட நடவடிக்கைகளுடன் அவருக்கு எந்தத் தொடர்பும் இருந்ததில்லை. சில தனிப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்ட இவர் குற்றவியல் வழக்குகளிலும் பதிவாகியிருந்தார். கண்ணாடி பத்மநாதன் ஏற்கனவே 1973 ஆம் ஆண்டு செட்டியால் கொல்லப்பட்டிருந்தார்.

புலிகள் தடைச் சட்டம் நிறைவேற்ற சில நாட்களிலேயே புதிய சுவரோட்டி ஒன்று இரகசியப் பொலீசாரால் தயாரிக்கப்படுகிறது. அச் சுவரொட்டியில் காசியானந்தன், வண்ணையானந்தன், அமிர்தலிங்கத்தின் மகன் காண்டீபன் போன்ற வெளிப்படையான உறுப்பினர்கள் உள்ளிட்ட 38 தமிழ் இளைஞர்கள் தேடப்படுவோராக அறிவிக்கப்பட்டனர்.

வேலுப்பிள்ளை பிரபாகரன்(வல்வெட்டித்துறை) சபாரத்தினம் சபாலிங்கம் (யாழ்ப்பாணம்) ஆறுமுகம் விவேகானந்தன் (யாழ்ப்பாணம்) சபாரத்தினம் இரத்தினகுமார் ( யாழ்ப்பாணம்) துரையப்பா ராஜலிங்கம் (கொக்குவில்), செல்லையா சபாரத்தினம் (யாழ்ப்பாணம்), தம்பிப்பிள்ளை சந்ததியார் (சங்கானை), ஐயா துரைபாலரத்தினம் (அளவெட்டி), வேலாயுதபிள்ளை திசைவீரசிங்கம் (கொடிகாமம்), பொன்னுத்துரை சத்தியசீலன் (சுன்னாகம்), நவரத்தினம் நாராயணதாஸ்(யாழ்ப்பாணம்), வைரமுத்து நீர்த்தகுமார் ( மானிப்பாய்), கனகசபைமுதலி சிவராஜா(நல்லூர்), மாவை சேனாதிராஜா(தெல்லிப்பளை), ஆறுமுகம் கிருபாகரன் (அரியாலை), அலோசியஸ் கனகசுந்தர் (வேம்படி), சுந்தரம் சபாரத்தினம்(திருநெல்வேலி), எஸ்.புஸ்பராஜா(மைலிட்டி), பூபாலரத்தினம் நடேசாந்தன் (மட்டக்களப்பு), தம்பித்துரை ஜீவராசா(சாவகச்சேரி), அமிர்தலிங்கம் காண்டீபன் (லண்டன் குவின்ஸ் ரோட்), காசியானந்தன் (அமிர்தகளி), ஞானம்(யாழ்ப்பாணம்), சுப்பிரமணியம் குருகுலசிங்கம் (திருநெல்வேலி), விஸ்வசோதி இரத்தினம் என்ற இன்பம்(நவாலி), கந்தசாமி சிறீஸ்கந்தராஜா(கரணவாய் தெற்கு), கே.எஸ்.ஆனந்தன் (சுன்னாகம்),செல்லையா பாலசிங்க(கல்வியங்காடு), அமரசிங்கம் நாகராஜா(நீராவியடி), வேலுப்பிள்ளை சுப்பிரமணியம்(யாழ்ப்பாணம்), நடேசப்பெருமாள் கனகரத்தினம்(பரந்தன்), செல்வராசா யோகச்சந்திரன் (வல்வெட்டித்துறை), சிவராமலிங்கம் சந்திரகுமார்(திருநெல்வேலி), வண்ணையானந்தன் (யாழ்ப்பாணம்), உமாமகேஸ்வரன் (தெல்லிப்பளை) போன்றோர் தேடப்பட்ட பட்டியலில் இடம்பெற்றனர். இவர்களின் புகைப்படங்கள் அடங்கிய சுவரொட்டிகளை முன்னரைப் போலவே பொலீசார் பொது இடங்களில் ஒட்டியிருந்தனர்.

இதன் எதிரொலியாக சாவகச்சேரி எம்பி நவரத்தினம், நல்லூர் எம்.பி சிவசிதம்பரம் ஆகியோர் கடுமையான ஆட்சேபனை தெரிவித்தனர். ஏற்கனவே தேடப்பட்டு விடுவிக்கப்பட்டோரும், வெளிப்படையான அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்வர்களான, காசியானந்தன், வண்ணையானந்தன், மாவை சேனாதிராஜா ஆகியோரும் தேடப்படுபவர்களாக அறிவிக்கப்பட்டமை குறித்து ஆட்சேபம் தெரிவிக்க புதிய தேடப்படுவோரின் பட்டியல் ஒன்றைத் தயாரிக்கவிருப்பதாக பிரதமர் பிரேமதாச தெரிவிக்கிறார்.

இந்தச் சுவரொட்டியில் குறிப்பிடப்பட்டவர்களில் பிரபாகரனையும், கிருபாகரனையும், உமாமகேஸ்வரனையும்.நாகராஜாவையும்.ரவி யையும் தவிர மற்ற எவரும் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் உறுப்பினர்களாக இல்லை. இலங்கை அரச உளவுத்துறையின் பலவீனமும், தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியிலிருந்து தகவல் சேகரித்துக்கொள்வதற்கான வழிமுறைகள் இல்லாதிருந்த்மையையும் நாங்கள் கணித்துக்கொள்கிறோம். ஒரு வகையில் எமது நடவடிக்கைகளுக்குத் தமிழ் மக்களின் ஆதரவை இது வெளிப்படுத்துவதாகவும் அமைந்தது. தேடப்பட்டவர்களாக அறிவிக்கப்பட்ட பலர் தமிழரசுக் கட்சியைச் சார்ந்தவர்களாகவும், இளைஞர் பேரவையைச் சார்ந்தவர்களாகவும் இருந்தனர். புலிகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்பதாக தம்பித்துரை ஜீவராசாவும் தியாகராஜா எம்.பிஐக் கொலைசெய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு போலிசாரால் தேடப்படும்போது பிரபாகரனுக்கு முற்பட்ட பகுதிகளில் என்னைத் தொடர்புகொண்டவர்.

பெப்ரவரி ஆறாம் திகதி 1978 அன்று இலங்கை நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாகப் பிரகடனப்படுத்திக்கொண்ட ஜே.ஆர்.ஜெயவர்தன, யாப்பியல் சர்வாதிகாரத்தை நிலை நாட்டினார். புலிகள் தடைச் சட்டம் நிறைவேற்றப்பட்ட நான்கு மாத இடைவெளியில் இலங்கையை ஜனநாயகச் சோசலிசக் குடியரசாக்கும் அரசியல் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதற்கான அங்கீகாரம் 31ம் திகதி ஓகஸ்ட் மாதம் 1978 ஆம் ஆண்டு அமைச்சரவையால் வழங்கப்பட்டது. இதே நாளில் சுபவேளையில் இலங்கை நேரப்படி காலை 9:02 இற்கு இச்சட்டவரைவில் சபாநாயகர் கைச்சாத்திட்டார். அரசியல் அமைப்பில் அடிப்படை மாற்றங்களை ஏற்படுத்திய இச்சட்டமூலம் ஒரு புறத்தில் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியை மேலும் வலிமைபடைத்தவராக மாற்றியது, மறு புறத்த்தில் தமிழ் மொழியை இரண்டாவது மொழியாகச் சட்டரீதியாக மாற்றியமைத்தது.

ஒரு நாட்டில் ஒரு குறித்த மக்கள் பிரிவினரால் பேசப்படுகின்ற மொழியை அந்த நாட்டு அரசே இரண்டாவது மொழியாகப் பிரகடனப்படுத்தி தேசிய இன அடக்குமுறையை சட்டமாக்கிய துயர நிகழ்வு இலங்கையில் நடந்தேறியது.

இந்த அரசியல் அமைப்பிற்குரிய அங்குரார்பண வைபவம் 07ம் திகதி செப்டெம்பர் மாதம் 1978 இல் நடைபெற்றது. இந்த வைபவம் நாடுமுழுவதும் அரசாங்கத்தினால் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இலங்கையிலுள்ள ஆலயங்கள் எங்கிலும் 7 ஆம் திகதி வியாழக்கிழமை 7 மணிமுதல் 8 மணிவரை கோவில் மணிகள் ஒலிக்க வேண்டும் என்றும் அதனைத் தொடர்ந்து பௌத்த ஆலயங்களிலும். கோவில்களிலும், பள்ளிவாசல்களிலும் பிரார்த்தனைகள் இடம்பெற வேண்டும் என ஜே.ஆர்.அரசு உத்தரவிட்டது. ஜே.ஆர்.ஜெயவர்தனவின் இனவாதத் தீயில் எரிந்து கொண்டிருந்த சிங்கள மக்களின் பௌத்த சிங்கள மேலாதிக்கவாத உணர்விற்கு இது எண்ணைவார்ப்பது போலிருந்தது. 7 ஆம் திகதி எதிர்பார்த்தபடி சிங்களப் பகுதிகள் முழுவதும் விழாக்கோலம் கொண்டிருந்தன. தெருக்களின் சிங்கள மக்கள் இலவச உணவு வழங்கி மகிழ்ந்தனர். இலங்கை சிங்கக் கொடியோடு அனைத்து வாகனங்களும் ஒலியெழுப்பி ஆர்ப்பரித்தன. வடகிழக்கு எங்கும் இனம்புரியாத சோகம் இழையோடியது. சொந்த தேசத்தில் இரண்டாம்தர குடிமகனாகிப்போன துயரம் ஒவ்வொரு தமிழ்ப் பேசும் இலங்கையனதும் முகத்தில் தெரிந்தது.

மூன்றம் திகதி தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் அமிர்தலிங்கம் வெளிநாடு பயணமானார். எமது இனத்தின் விடுத்லைக்காக வெளிநாடுகளில் பிரச்சாரம் செய்யச் செல்வதாக உணர்ச்சிகரமாக விமானநிலையத்தில் பத்திரிகையாளர்களிடம் பேசினார்.

தமிழர்கள் கொதித்துப் போயிருந்தார்கள். வஞ்சம் தீர்க்கப்பட்டதான உணர்வு எல்லோர் மனதிலும் மேலோங்கியிருந்தது. இலங்கை முழுவதும் வன்முறைச் சம்பவங்கள் ஆங்காங்கே தலை காட்டி மறைகின்றன. இவ் வன்முறைகளின் உணர்வு ரீதியான பிரதிபலிப்பாக நாம் எதையாவது செய்தாகவேண்டும் என்பதில் முழு நேரத்தையும் தேசியப் போராட்டத்திற்காக அர்ப்பணித்த எமக்கு முழுமையான உடன்பாடிருந்தது.

இந்த வேளையில், தமிழ்ப் பேசும் மக்களின் விடுதலைக்காக இராணுவத்தைக் கட்டியமைப்பதை நோக்கமாகக் கொண்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளாகிய நாம் இலங்கை அரசு திகைத்துப் போகும் வகையில் ஏதாவது செய்யவேண்டும் என்று எண்ணியிருந்தோம். அதற்கான தயாரிப்புகளை மேற்கொண்டிருந்தோம். அதுதான் பாகம் ஐந்தில் எனது பதிவில் குறிப்பிட்டிருந்த அவ்ரோ விமானக் குண்டுத் தாக்குதல்.

வழமை போல இதற்கான தயாரிப்பு வேலைகளில் உடனடியாகவே செயற்பட ஆரம்பித்துவிட்டோம். இதற்கான முன் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக குலமும் பேபி சுப்ரமணியமும் பலாலியிலிருந்து கொழும்பு செல்லும் விமானத்தில் பயணம்செய்து நிலைமைகளை அவதானிப்பது எனத் தீர்மானிக்கப்படுகிறது. ஒத்திகை வேலைகளெல்லாம் முடிவடைந்து அவர்கள் இருவரும் கொழும்பிலிருந்து திரும்பிவந்து எம்மிடம் நிலைமைகளை விபரித்த பின்னர் குண்டுவெடிப்பிற்கான திட்டம் தீட்டப்படுகிறது.

பேபி சுப்பிரமணியம் நேரக் குண்டைத் தயாரிக்கும் வேலைகளில் ஈடுபடுகிறார். அவருக்கு இக்குண்டுவெடிப்பை நிறைவேற்றும் முக்கிய பணி வழங்கப்படுகிறது. இதற்கான தொழில் நுட்ப வேலைகளிலும் குண்டைத் தயாரிப்பதிலும் உமாமகேஸ்வரனின் பங்கு குறிப்பிடத்தக்கது. பலஸ்தீனத்தில் பெற்றுக்கொண்ட இராணுவப் பயிற்சிகளின் போது நேரக்குண்டு தயாரிப்பதற்கான முழுமையான அறிவை அவர் பெற்றிருந்தார் இதே வேளை ராகவனும் எம்மோடிருந்தார். பேபி சுப்பிரமணியத்துடன் இணைத்து விமானத்தில் கொழும்ப்பு வரை ராகவனும் பயணம்செய்து விமானத்தில் குண்டுவைத்துவிட்டுத் திரும்புவதாக ஏற்பாடாகிறது.

தகவல் சேகரிப்பு, பயணச் சீட்டு எல்லாம் தயாராகிவிட, திட்டமிட்டபடி அவர்கள் இருவரும் விமானத்தில் கொழும்பு நோக்கிப் பயணம் செய்கின்றனர். விமானநிலையத்தில் பயணிகள் அனைவரும் இறங்கிய பின்னர் குண்டு வெடிக்கும் நேரம் தகவைமைக்கப்படுகிறது.

7 ஆம் திகதி செப்டெம்பர் மாதம் இலங்கை ஜனநாயகச் சோசலிசக் குடியரசு அங்குரார்ப்பண வைபவம் கொழும்பு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படும் வேளையில் அவ்ரோ விமானம் தமிழீழ விடுதலைப் புலிகளால் குண்டுவைத்துத் தகர்க்கப்படுகிறது. இலங்கையின் தேசிய விமானச் சேவையை நடத்திக்கொண்டிருந்த ஒரே விமானமான அவ்ரோவைக் குண்டுவைத்துத் தகர்த்த நிகழ்வானது ஜே.ஆர்.அரசின் இதயத்தில் இரும்பால் அறைந்தது போலிருந்தது.

மறு நாளே தேடுதல், கைது என்று கொழும்பு நகரமே யுத்தமுனை போலக் காட்சியளித்ததாக பத்திரிகைகள் செய்திவெளியிட்டன. தமிழ் மக்கள் ‘பொடியள்’ சாதித்துவிட்டதாக பெருமிதமடைந்தார்கள். எல்லாவற்றையும் ஓசைபடாமல் நிறைவேற்றிய வெற்றிக்களிப்புடன் ராகவனும் பேபி சுப்பிரமணியமும் பண்ணைக்குத் திரும்பிவிடுகிறார்கள்.

எமது தோள்களில் விடுதலையின் சுமையை உணர ஆரம்பிக்கிறோம். புதியவர்களை இணைத்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும், முறையான பயிற்சி வழங்கப்பட வேண்டியதன் தேவையையும் உணர்ந்து கொள்கிறோம். எம்மிடமிருந்த புத்தூர் வங்கிப்பணம் தனது இறுதியை நெருங்கும் தறுவாயிலிருந்தது. புதிய நடவடிக்கைகளுக்கான பணத்தைத் திரட்டிக்கொள்ள வேண்டியதன் அவசியத்தைப் புரிந்துகொள்கிறோம். அதற்கான சாத்தியமான அனைத்து வழிகளையும் விசாரணைசெய்கிறோம். இவ்வேளையில் திருநெல்வேலி அரச வங்கிக் கிளையிலிருந்து அங்கிருப்பவரூடாக ஊடாக சில தகவல்கள் எமக்குக் கிடைக்கின்றன.

இன்னும் வரும்..

பாகம் பத்தை  வாசிக்க..

பாகம்  ஒன்பதை வாசிக்க..

பாகம் எட்டை வாசிக்க..

பாகம்  ஏழை வாசிக்க..

பகுதி  ஆறை  வாசிக்க…

பகுதி ஐந்தை  வாசிக்க…

பகுதி நான்கை வாசிக்க..

பகுதி மூன்றை வாசிக்க..

பகுதி இரண்டை வாசிக்க..

பகுதி ஒன்றை வாசிக்க..

கொலைகளை உரிமைகோரும் புலிகள்– ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பதினொன்று)

பஸ்தியாம்பிள்ளை குழுவினர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை பிரபாகரனுக்குத் தெரிவிக்க உமாமகேஸ்வரனும் செல்லக்கிளியும் யாழ்ப்பாணம் நோக்கிச் செல்கின்றனர். எம் அனைவருக்குமே பிரபாகரன் இது குறித்து மகிழ்ச்சியடைவார் என்பது தெரியும். உமாமகேஸ்வரனும் செல்லக்கிளியும் சில நாட்களில் திரும்பி வந்த போது பிரபாகரன் அடைந்த மகிழ்ச்சியை வார்த்தைகளால் விபரிக்க முடியாது என்று என்னிடம் கூறினர். தவிரவும், கணேஸ்வாத்தியின் காட்டிக்கொடுத்த துரோகச் செயலுக்கு அவரைக் கொலைசெய்திருக்க வேண்டும் என்று பிரபாகரன் கடிந்து கொண்டதாகவும் கூறினார்கள். அப்போது இருபத்தி நான்கு வயதை எட்டிப்பிடித்துக் கொண்டிருந்த இளைஞன் பிரபாகரனின் தூய இராணுவ வழிமுறை மீதான நம்பிகையில் பஸ்தியாம்பிள்ளை கொலை நிகழ்வு ஒரு மைற்கல்.

மக்கள் எழுச்சியைப் பாதுகாக்கவும், அதனை மேலும் உரமிட்டு வளர்க்கவும் ஆயுதப் போராட்டம் பயன்பட்டிருப்பதாக வரலாறுகள் கூறுகின்றன. ஆயுதங்கள் வெகுஜன எழுச்சியைத் தற்காத்துக்கொள்ளும் கேடயங்களாகப் பயன்பட்டிருக்கின்றன. மக்களின் நிறுவன மயப்பட்ட எழுச்சியைத் தூண்டுவதும், அவ்வெழுச்சி உருவாக்கும் சூழலில் மக்கள் மத்தியில் ஆயுதம் தாங்கிய கெரில்லாக்கள் தம்மை வலுப்படுத்துவம் வெற்றியின் இன்னொரு அம்சம். கடந்த அரை நூற்றாண்டு காலம் உருவாக்கிய சிந்தனைப் போக்கு ஈழத்தில் மட்டுமல்ல, அதிகாரமும் அடக்குமுறையும் கோலோச்சுகின்ற எந்த நாட்டிலும் மக்களைச் சாரா ஆயுத அமைப்புக்களே ஆதிக்கம் செலுத்தின. இராணுவ வெற்றிகளின் இறுதியில் இவ்வமைப்புகள் எல்லாம் தோற்றுப் போய் சரணடைந்திருக்கின்றன. சோமாலியாவில், இந்தோனேசியாவில், காஷ்மீரில், பங்களாதேஷில், இலத்தினமரிக்க நாடுகளில், கிழக்காபிரிக்காவில் எல்லாம் இது ஒரு சாபக்கேடு போல மக்களை அழித்துப் போராட்டங்களையும் அழித்துக் காட்டிக்கொடுத்திருக்கிறது.

சமூக உணர்வு கொண்டவர்களும், தேசப்பற்றாளர்களும், ஜனநாயக வாதிகளும் ஆயுதங்களின் மீதும் தூய இராணுவ வாதத்தின் மீதும் நம்பிக்கை கொண்டிருந்தவர்களாகவே வாழ்ந்த வரலாறுகள் துன்பகரமானவை. பிரபாகரன் என்ற தேசப்பற்று மிக்க இளைஞனின் ஒட்டுமொத்த சிந்தனையும், செயற்பாடும் போராட்டத்தை நோக்கியே ஒருமுகப்பட்டிருந்தது. தனது சுய லாபத்தையோ, சுய விளம்பரத்தையோ அனறு அவர் முதன்மைப்படுத்தியதில்லை.

70 களின் சூழல் வடகிழக்கில் பொருளாதார அபிவிருத்தியும் அதனோடு கூடவே இயல்பான தாராள வாதக் கலாச்சாரமும் துளிர்விட்டடிருந்தது. வடகிழக்குப் பெண்கள் ‘மினி ஸ்கேட்’ அணிவது கூட சமூக வழமையாகியிருந்த கலாச்சார மாற்றம் துளிர்விட்டிருந்த காலமது. சுப்பிரமணியம் பூங்கா இளம் காதலர்களால் நிரம்பி வழிந்தது. பிரபாகரனின் வயதை ஒத்த மத்தியதர வர்க்க இளைஞர்கள், உருவாகி வளர்ந்து கொண்டிருந்த அந்தக் கலாசாரத்தை நுகர்ந்து கொண்டிருந்த வேளைகளில் பிரபாகரனுக்கு இயந்திரத் துப்பாக்கி மீது அளவற்ற காதல் ஏற்பட்டிருந்தது. தமிழீழத்தை எப்போதாவது அடைந்தே தீருவோம் என்று தீர்க்கமான நம்பிக்கை கொண்டிருந்தார்.

கைப்பற்றப்பட்ட துப்பாக்க்கியைத் தன்னுடனேயே வைத்துக்கொண்ட பிரபாகரன், அடிக்கடி அதைத் தொட்டுப்பார்த்துக் கொள்வார். குழந்தைகள் போல தன்னோடு வைத்துக்கொண்டே உறங்கச் சென்றுவிடுவார். சில வேளைகளில் நள்ளிரவு கடந்த வேளைகளிலும் திடுமென எழுந்து உட்கார்ந்து கொண்டு துப்பாகியைச் சுத்தம் செய்து கொள்வார். எங்கள் உறக்கத்தைக் கலைத்து இயக்கத்தின் அடுத்த நடவடிக்கைகள் குறித்துப் பேசுவார். நாம் ஒரு இராணுவக் குழுவைக் கட்டமைத்து விடுவோம், தமிழ் ஈழம் கிடைத்துவிடும் என்ற கருத்தில் துளியளவும் குலைந்து போகாத நம்பிக்கை வைத்திருந்ததார்.

பஸ்தியாம்பிள்ளை உட்பட்ட இரகசியப் பொலீசாரைக் கொலைசெய்த நிகழ்வு எமக்கு மட்டுமே தெரிந்திருந்ததது . இலங்கை அரசிற்கு அவர் கொல்லப்பட்டாரா, தலைமறைவானாரா, விபத்தில் சிக்கிவிட்டாரா என்பதெல்லாம் மர்மமாகவே இருந்தது இலங்கை முழுவதும் தேடுதல்களும், திடீர்ச் சோதனைகளும் அதிகரித்திருந்தன. இலங்கை அரசு அதிர்ந்து போயிருந்தது. அரச படைகளைப் பொறுத்தவரை கனகரத்தினம் கொலைமுயற்சியின் தாக்கத்திலிருந்து இன்னமும் மீட்சியடையாத நிலையில் இன்னொரு மூன்று முக்கிய பொலீஸ் அதிகாரிகள் குறித்த மர்மம் நீடித்தது.

இந்த மர்மம் நீண்டகாலம் நீடிக்கவில்லை. ஏதோ வழியில் அரச படைகள் பஸ்தியாம்பிள்ளை குழுவினரின் கொலைகளை அறிந்துவிடுகின்றனர். சம்பவம் நிகழ்ந்து சரியாக நான்கு நாட்களுள் இரகசியப் பொலீசாரின் இறந்த உடல்களைப் பொலீசார் மீட்டதாக 12.04.1978 இல் அனைத்து பிரதான இலங்கை ஊடகங்களும் செய்தி வெளியிட்டிருந்தன. அதுவும் எங்கு எப்போது நடைபெற்றது என்ற நுண்ணிய தகவல்கள் பத்திரிகைகளில் வெளியாகின்றன. கொல்லப்பட்டவர்களின் உடல்கள் மீட்கப்படுகின்றன. இலங்கை முழுவதும் ஒரே பரபரப்பு.

வீரகேசரி, தினகரன், டெயிலி நியூஸ் போன்ற தினசரிகளின் தலைப்புச் செய்திகள் இதுவாகத்தான் இருந்தன.

‘வன்செயல் சம்பவங்கள் தொடர்பாக மன்னார் பகுதிக்கு விசாரணை செய்யச் சென்ற இரகசியப் பொலீஸ் உத்தியோகத்தர்கள் நால்வர், துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் வெட்டியும் கோரமாகக் கொல்லப்பட்டார்கள். மடுவுக்கும், மடுவீதிக்கும் இடையிலுள்ள மூன்றாவது கட்டையிலுள்ள காட்டுப்பிரதேசத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. இரகசியப் பொலீஸ் இன்ஸ்பெக்டர் பஸ்தியாம்பிள்ளை, சப்-இன்ஸ்பெக்டர் பேரம்பலம், சார்ஜன்ட் பாலசிங்கம், கான்ஸ்டபிள் சிறிவர்தனா(சாரதி) ஆகியோரே இவ்வாறு கொல்லப்பட்டவர்கள்’ என்று வீரகேசரியின் தலைப்புச் செய்தி அறிவித்தது.

‘ பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் சேபால ஆட்டிகல, வடபகுதி பொலீஸ் மா அதிபர் அனா செனிவரத்ன, இரகசியப் பொலீஸ் அதிபர் நவரட்ணம் ஆகியோர் விசாரணையை முடித்துக்கொண்டு கொழும்பு திரும்பியுள்ளனர். இவ்விசாரணை தொடர்பான அறிக்கையை ஜனாதிபதியிடம் நேற்றிரவு அவர்கள் கையளித்தனர்’ என்று மறு நாள் வீரகேசரிச் செய்தி தெரிவித்தது.

தமிழீழக் கனவிலிருந்த தமிழ்ப் பேசும் மக்கள் ‘பொடியள் கெட்டிக்காரங்கள்’ என்று பரவலாகப் பேசிக்கொண்டார்கள். தலமறைவு வாழ்க்கை நடத்திய நாம் வெளியே சென்று வரும் வேளைகளில் தமிழர்கள் பேசிக்கொள்ளும் போதெல்லாம் மௌனமாய் பெருமையடைந்து கொள்வோம்.அரசபடைகள் எப்படி இந்தத் தகவல்களைப் பெற்றுக்கொண்டார்கள் என்பது எமக்குப் புதிராக இருந்தது. புளியங்குளம் முகாமில் பிரபாகரன் உட்பட மத்திய குழுக் கூட்டங்களை நடத்தினோம். அவ்வேளைகளில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தெல்லாம் ஆராய்வோம்.

விரைவிலேயே தகவல்கள் அரச உளவாளிகளுக்கு தெரிய வந்தது எப்படி என்பதை நாம் அறிந்து கொண்டோம். பதினேழு வயதில் செட்டியின் சாகச நடவடிக்கையால் கவரப்பட்டிருந்த பிரபாகரன் உட்பட நாமெல்லாம் இப்போது செட்டி தான் இந்தத் தகவல்களை இராணுவத்திற்கு வழங்கியிருந்தார் என்று அறிய வந்ததும் சற்று அதிர்ச்சியாகத் தான் இருந்தது. அவ்வேளையில் செட்டி சிறையிலிருந்து திரும்பி சில மாதங்களே இருக்கும். பிரபாகரன் செட்டியோடு எந்தத் தொடர்புகளும் வைத்துக்கொள்ளக் கூடாது என்பதில் நானும் குலமும் ஆரம்பத்திலிருந்தே உறுதியாக இருந்தோம். இந்த விடயத்தில் எம்மிருவராலும் பிரபாகரன் மீது ஆளுமை செலுத்த முடிந்தது என்பது என்னவோ உண்மைதான்.

துரையப்பா கொலையை ஒட்டிய காலகட்டத்தில் பிரபாகரன் எம்மைச் சந்திக்க வந்த வேளையில் செட்டியின் ஆளாகவே அறிமுகமானதால் நாம் தொடர்பு வைத்துக்கொள்வதை நிராகரித்திருந்தோம். செட்டியுடன் உறவுகளை அறுத்துக்கொள்வது என்ற உறுதி வழங்கப்பட்ட பின்னரே நாம் இணைந்து செயற்பட ஆரம்பித்தோம்.

பஸ்தியாம்பிள்ளைக் கொலையில் செல்லக்கிளி அதிரடி நடவடிக்கைகள் எமக்கு உண்மையில் பிரமிப்பாகவே இருந்தது. செட்டி கூட இப்படித்தான். இப்படியான சந்தர்ப்பங்களில் துணிவாகச் செயற்படும் திறமை படைத்தவர். அவரது வாழ்க்கை முழுவதும் குற்றச் செயல்களோடு தொடர்புடையதாக இருந்ததால் தயக்கமின்றி முன்செல்லக் கூடியவர். பலம்மிக்க கட்டுக்கோப்பான இராணுவத்தைக் கட்டியமைப்பதே விடுதலையைப் பெற்றுத்தரும் என நம்பியிருந்த பிரபாகரன், அந்த இராணுவத்தைக் கட்டியமைப்பதில் செட்டி போன்ற துணிச்சல் மிக்கவர்கள். காத்திரமான பங்கு வகிக்க கூடியவர்கள் என நம்பியிருந்தார்.

மக்களின் பலத்தில் தங்கியிருக்காத, தனிமனித சாகசங்களில் நம்பிக்கையுள்ளவர்களைப் பொறுத்தவரை எதிரிக்கும் நண்பர்களுக்கும் இடையேயான இடைவெளி மிகக் குறுகியது என்பதற்கு செட்டி முதல் உதாரணமாக அறிமுகமானவர். இப்போது செட்டி அரசின் உளவாளியாகிவிட்டார் என்பது எங்களைவிட பிரபாகரனுக்கு அதிர்ச்சியானதாக இருந்தது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் செயலாளராகத் தெரிவு செய்யப்பட்டிருந்த எமது மத்திய குழு உறுப்பினர் உமாமகேஸ்வரன் தமிழர் விடுதலைக் கூட்டணியின் இளைஞர் அணிச் செயலாளராகச் செயற்பட்ட வேளையில் அதன் மகளிர் அணியின் செயலாளராகவிருந்த ஊர்மிளா என்பவருடன் அறிமுகமாகியிருந்தார். ஊர்மிளா மிகுந்த தேசிய உணர்வுகொண்ட போராளி என்பது தவிர அடக்கு முறைகள் மிகுந்த சமூகத்தில் எமக்கு ஆதரவாகக் கிடைத்த முதல் பெண் என்பது இன்னொரு சிறப்பம்சம். அவருடனான தொடர்புகளை உமா தொடர்ச்சியாகப் பேணிவந்தார். ஊர்மிளாவிற்கு அறிமுகமான பெண் ஒருவருக்கு தொடர்பான இன்னொருவர் இலங்கை உளவுப்பிரிவில் வேலைசெய்து கொண்டிருந்தார். அவரூடாக உளவாளியாக மாறியிருந்த செட்டி சிறிலங்கா இரகசியப் பொலீசாருக்கு எழுதியிருந்த கடிதத்தின் பிரதியொன்று ஊர்மிளாவிற்குக் கிடைக்கிறது. அந்தக் கடிதத்தில் மடுப் பண்ணையில் பஸ்தியாம்பிள்ளையைக் கொலைசெய்த சம்பவத்தின் விபரமும் தொடர்புபட்ட போராளிகளின் பெயர்களும் குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்தக் கடிதத்த்தின் பிரதியை கொழும்பு சென்றுவரும் சாந்தன் ஊடாக ஊர்மிளா எமக்குச் சேர்பிக்கிறார். ஆக, செட்டிதான் காட்டிக்கொடுப்பாளன் என்பதை உறுதி செய்து கொள்கிறோம். இனிமேல் இந்த விபரங்கள் எப்படி செட்டிக்குத் தெரிய வந்தது என்று ஊகிக்க எமக்கு நேரமெடுக்கவில்லை. செல்லக்கிளி செட்டியின் ஒன்றுவிட்ட சகோதரர். அவரூடாகத் தான் செட்டி இவற்றை அறிந்திருக்க வேண்டும் என்பது சற்று வெளிப்படையாகவே அனுமானித்துக் கொள்ளக்கூடிய நிலையில், செல்லக்கிளியிடம் இது குறித்துக் கேட்கிறோம். செல்லக்கிளி யாழ்ப்பாணம் சென்ற வேளையில் கள்வியங்காட்டில் செட்டியைச் சந்தித்திருக்கிறார். அங்கு தனது வீரச்செயல்கள் குறித்து செட்டியிடம் பேசியிருக்கிறார். அவரோ செல்லக்கிளி சொன்னவற்றையெல்லாம் எழுதி இலங்கை உளவுத் துறைக்கு அனுப்பியிருக்கிறார். அவர் அனுப்பிய கடிதத்தின் பிரதி இப்போது எம்மிடம் இருந்தது.

நாம் கணேஸ் வாத்தி இல்லாத ஐந்து உறுப்பினர்களாகச் சுருங்கிப் போன மத்திய குழுவை இப்போது அவசரமாகக் கூட்டுகிறோம். ஏனைய பண்ணைகள் குறித்த விபரங்களை செல்லக்கிளி செட்டியிடம் தெரிவிக்கவில்லை என முதலில் உறுதிப்படுத்திக் கொள்கிறோம். ஆக,பண்ணையின் கட்டமைப்புக்கள் அனைத்தும் அப்படியே இருக்க மேலதிக நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கிறோம்.

அரசபடைகளுக்கு இப்போது ஒரு தலைமறைவு இயக்கம் ஒழுங்குபடுத்தப்பட்ட வகையில் இயங்கி வருவதாகத் தெரிந்துவிட்டது. கனகரத்தினம் எம்.பி இன் கொலை முயற்சிக்கும் பஸ்தியாம்பிள்ளை குழுவினரின் கொலைக்கும் நெருங்கிய தொடர்பிருப்பதாக பாதுகாப்புச் செயலகம் அறிக்கை வெளியிட்டது. எம்மை நோக்கிய அவர்களின் நடவடிக்கைகளும் தீவிரமடைய ஆரம்பித்திருந்தது. இப்போது எதிர்பார்புடனிருந்த தமிழ் மக்களுக்கு எம்மை அறிமுகப்படுத்திக் கொள்ள இது சரியான சந்தர்ப்பம் எனத் தீர்மானிக்கிறோம். இந்த வகையில் நமது அனைத்து நடவடிக்கைகளையும், தாக்குதல்களையும் உரிமை கோருவதாக முடிவிற்கு வருகிறோம்.அந்த முடிவின் அடிப்படையில் துண்டுப்பிரசுர வடிவிலான கடிதம் ஒன்றைத் தயாரித்து பத்திரிகைகளுக்கு அனுப்புவதாகத் தீர்மானிக்கிறோம். அதற்கான பொறுப்பு அவ்வேளையில் செயலதிபராகவிருந்த உமாமகேஸ்வரனிடம் வழங்கப்படுகிறது.

உமாமகேஸ்வரனால் எழுதப்பட்டு அவர் கையொப்பத்தோடு வெளியிடப்பட்ட பிரசுரம் தான் தமிழீழ விடுதலைப் புலிகளின் முதலாவது துண்டுப் பிரசுரம். இந்தப் பிரசுரத்தில் நாம் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கைகள் அனைத்தும் உரிமை கோரப்படுகின்றன.

துண்டுப் பிரசுரத்தின் முழுமையான விபரம்:

தொடர்புடையோரின் கவனத்திற்கு,

தமிழ்ப் புதிய புலிகள் என்ற ஸ்தாபனத்தின் ஸ்தாபகப் பெயர் 05.05.1976 முதல் மாற்றி அமைக்கப்பட்டு ‘தமிழீழ விடுதலைப் புலிகள்’ என்ற புதிய பெயர் சூட்டப்பட்டுள்ளது.

பின்வரும் மரணங்களுக்கு நாங்கள் பொறுப்பு ஏற்கிறோம்:

1. திரு.அல்பிரட் துரையப்பா ( யாழ். மேயர், வடபகுதி சுதந்திரக் கட்சி அமைப்பாளர் சுட்டுக் கொலை)

2. திரு என். நடராஜா (உரிமையாளர் பெற்றோல் கராஜ், உரும்பிராய்; கோப்பாய் சுதந்திரக் கட்சி அமைப்பாளர், குண்டு வீச்சு)

3. திரு ஏ.கருணாநிதி, (இரகசியப் பொலீஸ், காங்கேசந்துறை,சுட்டுக்கொலை)

4. திரு. சண்முகநாதன் (இரகசியப் பொலீஸ், காங்கேசந்துறை.

(அதே நாளில் சுட்டுக்கொலை)

5. திரு.சண்முகநாதன் (இரகசியப் பொலீஸ் வல்வெட்டித்துறை)

6. திரு. தங்கராஜா (முன்நாள் நல்லூர் சுதந்திரக் கட்சி எம்பீயான திரு.அருளம்பலத்தின் காரியதரிசி)

7. திரு.சி.கனகரத்தினம் (முன்னர் தமிழர் விடுதலைக் கூட்டணி, தற்போது ஐ.தே.க வில் அங்கம் வகிக்கும் பொத்துவில் எம்.பி)

8. திரு,பஸ்தியாம்பிள்ளை (இரகசியப் பொலிஸ் இன்ஸ்பெக்டர்)

9.திரு.பேரம்பலம் (இரகசியப் பொலீஸ் சப் இன்ஸ்பெக்டர்)

10. திரு.பாலசிங்கம் (இரகசியப் பொலீஸ் சார்ஜன்ட்)

11. திரு.சிறிவர்தன(இரகசியப் பொலீஸ் சாரதி)

1978 ஏப்பிரல் ஏழாம் திகதி காலை ஆறு மணியளவில் பஸ்தியாம்பிள்ளை கோஷ்டியினர் தமிழீழ விடுதலைப் புலிகளைத் தேடிவந்தனர். அவர்கள் வசம் எஸ்.எம்.ஜி, ஷொட்கன், கைத் துப்பாக்கி ஆகியவை இருந்தன. அவர்கள் புலிகளைத் தாக்கினார்கள். அப்புலிகள் தங்களுக்கு உடல் காயமோ உயிர்ச் சேதமோ எதுவுமின்றி அவர்களை அழித்தார்கள். காரும் அழிக்கப்பட்டது.

இந்த மரணங்களுக்கு வேறு எந்தக் குழுவோ அல்லது இயக்கமோ அல்லது தனி நபர்களோ உரிமை கொண்டாட முடியாது. இலங்கையிலும் வெளிநாட்டிலும் உள்ள புலிகளைத் தவிர இவற்றுக்கு உரிமை கொண்டாடும் வேறு எவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

தங்கராஜா கொலைமுயற்சி புலிகளால் மேற்கொள்ளப்படவில்லை. அப்போது ஒரு குழுவாக சில இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்ட தங்கதுரை குட்டிமணி சார்ந்த குழுவினராலேயே மேற்கொள்ளப்பட்டது. அவர்கள் அப்போதும் இந்தியா இலங்கைக்கு இடையேயான கடத்தல் வியாபாரம் மேற்கொண்டிருந்தனர். அக்குழுவினர் தமது நடவடிக்கைகளையும் புலிகளின் பெயரிலேய்ர்ர் உரிமை கோருமாறு ஏற்பட்ட இணக்கத்தின் அடிப்படையிலேயே தங்கராஜாவின் பெயரும் எமது பிரசுரத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டது.

துண்டுப் பிரசுரத்தை எழுதி முடித்ததும், சாந்தன் அதனைக் கொழும்பிற்குக் கொண்டு சென்று ஊர்மிளாவிடம் ஒப்படைத்து தட்டச்சுச் செய்கிறார். அங்கிருந்தே அதன் பிரதிகள் பத்திரிகைகளுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன. அது அனுப்பப்பட சில தினங்களிலேயே தமிழீழ விடுதலைப் புலிகளின் சின்னத்தோடும்,உமாமகேஸ்வரனின் கையொப்பத்துடனுமான அந்தத் துண்டுப்பிரசுரம் பத்திரிகைகளில் வெளியாகின்றது. தமிழ்ப் பகுதிகளில் மட்டுமல்ல சிங்கள மக்கள் மத்தியிலும் பெரும் பரபப்பை ஏற்படுத்திய இப் பிரசுரம், இலங்கை அரசையும் கூட மிகவும் பாதித்தது.

இப் பிரசுரம் வெளியான மறு தினத்திலிருந்து, இலங்கைத் தீவு தனது அனைத்து வாழ்வலங்களையும் ஒரு புறத்தே ஒதுக்கி வைத்துவிட்டு, புலிகள் பற்றிப் பேசிக்கொண்டிருந்தது. தமிழ்ப் பேசும் சிறுபான்மையினர் தம்மைப் பாதுகாக்க இறைவனால் அனுப்பிவைக்கப்பட்ட பாதுகாவலர்கள் போலவே புலிகளை நேசிக்க ஆரம்பித்தனர். சிங்கள மக்கள் பெருந் தேசியவாதம் இன்னொரு படிநிலை வளாச்சியை அடைவது போல் தோற்றமளித்தது. இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் அனா செனிவரத்ன கொக்காவிலில் சிங்களக் குடியேற்றங்கள் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்று வவுனியா பொலீஸ் நிலையத்தில் பேசினார். 77 இன வன் முறையால் இடம்பெயர்ந்து வவுனியாவில் தங்கியிருந்த தமிழ் அகதிகள் பொலீசாரால் தாக்கப்பட்டனர். புலிகள் தடைச் சட்டம் குறித்து பாராளுமன்றத்தில் பேசப்படுகிறது. தமிழர் விடுத்லை கூட்டணி உறுப்பினர்கள் தாக்கப்படுகிறார்கள்.

பிரபாகரன் கனவுகண்ட இராணுவ வெற்றிக்கும்,ஒழுங்கு படுத்தப்பட்ட இராணுவத்திற்கும் மக்கள் ஆதரவைக் கண்கூடாகப் பார்க்க முடிந்தது. பிரபாகரன் ஹிட்லரின் நாசிக் கொள்கையாலோ, சுபாஸ் சந்திரபோசின் எதிர்ப்பு அரசியலாலோ ஆட்கொள்ளப்படவில்லை. அவை பற்றியெல்லாம் அவருக்கு கரிசனை இருந்தது கிடையாது. அவர்கள் கட்டமைத்திருந்த இராணும் குறித்தும் அதன் ஒழுங்கு முறைகள் குறித்துமே அவரின் முழுக் கவனமும் ஒருங்குபடுத்தப்பட்டிருந்தது. அன்று மாவோசேதுங்கின் இராணுவப்படைப்புகளை இவர் வாசிக்கச் சந்தர்ப்பம் கிடைத்திருந்தால் அவராலும் பிரபாகரன் ஆட்கொள்ளப்பட்டிருப்பார் என்று பிற்காலங்களில் நான் எண்ணுவதுண்டு.

இன்னும் வரும்..

  கட்டுரையைத் தொடர்ந்து விவாதம் நடத்துவோர் கட்டுரையைச் செழுமைப்படுத்தும் வகையில் கருத்துக்களை முன்வைக்குமாறு வேண்டப்படுகின்றனர். தவிர், சம்பவங்களும் அது குறித்த அரசியலும் தொடர்பான வினாக்களுக்கு தனது இறுதிப் பதிவில் ஐயர் பதிலளிப்பார்.

பாகம் பத்தை  வாசிக்க..

பாகம்  ஒன்பதை வாசிக்க..

பாகம் எட்டை வாசிக்க..

பாகம்  ஏழை வாசிக்க..

பகுதி  ஆறை  வாசிக்க…

பகுதி ஐந்தை  வாசிக்க…

பகுதி நான்கை வாசிக்க..

பகுதி மூன்றை வாசிக்க..

பகுதி இரண்டை வாசிக்க..

பகுதி ஒன்றை வாசிக்க..