மாகாணசபைத் தேர்தலில் மாவை சேனாதிராஜாவுக்கு எதிராக களமிறங்குகின்றார் விக்னேஸ்வரன்!

எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தலில் தமிழரசுக் கட்சி சார்பாகப் போட்டியிடவுள்ள அக்கட்சியின் தலைவர் மாவைசேனாதிராஜாவுக்கு எதிராக தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் போட்டியிடவுள்ளதாக ஈபிஆர்எல்எவ் கட்சியின் செயலாளரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

ஆனால், இது பற்றி வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எந்தக் கருத்தினையும் வெளியிடவில்லை.

இருந்தபோதிலும், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் ஊடகங்களுக்கு வாரம் ஒரு கேள்வி பதிலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தொடர்பில் பல அதிருப்திகளை வெளியிட்டு வருகின்றார்.

அதற்கமைய, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது, கொள்கைக்கும், யதார்த்த நிலைக்கும் முற்றிலும் மாறுபட்டுச் செயலாற்றுவதாகக் குற்றஞ்சாட்டிய வடமாகாண முதலமைச்சர், சி.விவிக்னேஸ்வரன், தேர்தல் காலங்களில் தமது கொள்கைகளை மக்களுக்கு தெரிவிக்கும் இவர்கள் தேர்தல் முடிந்த பின்பு , மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு பணக் கையாடல்களை மாத்திரம் தாமே மேற்கொண்டுவருகின்றனர் எனப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியிருந்தார்.

இது தவிர, உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடவுள்ள புளொட் மற்றும் ரெலோ அமைப்புக்களும் எதிர்வரும் காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடப்போவதில்லையென  அறிவித்துள்ளன.

தேர்தலில் மதவாதத்தைக் கிளப்பிவிடும் சிவசேனா மற்றும் இந்துசமயப் பேரவை!

எதிர்வரும் பெப்ரவரி மாதம் உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மாநகரசபைத் தேர்தலும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து மாநகர முதல்வர் பதவிக்குப் போட்டியிடுவதற்கென பல கட்சிகள் தமது கட்சிகளிலிருந்து உறுப்பினர்களைத் தெரிவு செய்து அவர்களின் பெயர் விபரங்களை வெளியிட்டிருந்தது.

இதில், தமிழரசுக் கட்சி சார்பாக இம்மானுவேல் ஆர்னோல்ட் மாநகர முதல்வர் வேட்பாளராகத் தெரிவுசெய்யப்பட்டதையடுத்து, முஸ்லிம், கிறிஸ்தவ மதத்தவர்களைப் பயமுறுத்தும் வகையில் சிவசேனை மற்றும் இந்து சயம அமைப்புக்கள்  அறிக்கைகளை வெளியிட்டிருந்தன.

அவ்வறிக்கையில், மாநகர சபைக்கான முதன்மை வேட்பாளர் தெரிவின்போது இந்துக்களின் மனம் கோணாதபடி நடந்துகொள்ள வேண்டும் என இந்து சமயப் பேரவை அறிக்கை வெளியிட்டிருந்தது.

சிவசேனை அமைப்பு சைவத்தையும், தமிழையும் காக்கும் வேட்பாளர்களுக்கு சைவ வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும் என்று துண்டறிக்கை ஒட்டியிட்டிருந்தது.

இந்தச் சிவசேனை அமைப்பானது, மும்பையிலிருந்து தமிழர்களை தமிழ்நாட்டுக்கு விரட்டியடித்ததுடன், தமிழர்களுக்கு வீடுகளை வாடகைக்கு வழங்கக்கூடாது எனவும், தமிர்களின் கடைகளை அடித்துடைத்து பல அட்டூழியங்களைச் செய்திருந்ததை யாரும் எளிதில் மறக்கமுடியாது.

இந்நிலையில், இந்த அமைப்பானது 2016ஆம் ஆண்டளவில் தமிழ் மக்களிடையே மத உணர்வுகளைத் தூண்டி அவர்களின் கவனத்தைத் திசைதிருப்பும் நடவடிக்கையில் இந்தியாவின் றோ அமைப்பால் உருவாக்கப்பட்டது.

இதற்காக தமிழ் அரசியல்வாதிகளான மறவன்புலவு சச்சிதானந்தம் மற்றும் யோகேஸ்வரன் ஆகியோரைக் களமிறக்கியுள்ளது.

இவர்களால் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக அடிக்கடி மதவெறியைத் தூண்டும் வகையில் துண்டுப்பிரசுரங்கள் வெளியிடப்பட்டு வருகின்றது.

ஆர்.கே நகர் இடைத் தேர்தலும் குஜராத் தேர்தலும்: ஒரு பொதுப் புள்ளி

இந்தியாவில் இரண்டு குறிக்கத்தக்க  தேர்தல்கள் பொதுவான செய்தியை அறிவித்திருக்கின்றன. ஒன்று குஜராத்  தேர்தல் மற்றது ஆர்.கே நகர் இடைத் தேர்தல். இரண்டு தொடர்பற்ற பிரதேசங்களில் நடைபெற்றாலும் அவற்றிற்கிடையே பொதுத் தன்மை ஒன்றைக் காணலாம். முதலாவது  தேர்தலில் இந்தியாவின் இந்துத்துவ அடிப்படைவாதக் கட்சியான பாரதீய ஜனதா கட்சி வெற்றி பெற்றிருக்கிறது. ஆர்.கே நகரில் ஜயலலிதாவுடன் கூட்டுச் சேர்ந்து தமிழகத்தைக் கொள்ளையடித்த மன்னார்குடி மாபியாக் குழுவின் பிரதானிகளில் ஒருவரான தினகரன் வெற்றிபெற்றுள்ளார்.

பாராளுமன்ற முதலாளித்துவ ஜனநாயக அமைப்பு முறை அது தோற்றம்பெற்ற மேற்கு நாடுகளில் மட்டுமல்ல அமெரிக்காவிலும் காலாவதியாகிவிட்ட காலகட்டத்தில் அதே ஜனநாயகம் இயல்பாகத் தோற்றம் பெறாது காலனியாதிக்க நாடுகளால் ஒட்டவைக்கப்பட்ட இந்தியா போன்ற மூன்றாமுலக நாடுகளில் கவலைக்கிடமான கேலிக் கூத்தாக மாறிவிட்டது.

மக்களின் உணர்வையும் சார்பு நிலையையும் கணித்துக் கூறமுடியாத அவர்களின் இயலாமையின் வெளிப்பாடாகவே தேர்தல்கள் அமைந்துவிடுகின்றன. பிரான்ஸ் நாட்டில் இறுதியாக நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் அந்த நாட்டின் நிறவாதக் கட்சிகளில் ஒன்றான தேசிய முன்னணி 33.8 வீத வாக்குகளைப் பெற்றிருந்தது. வெளிப்படையாகவே நிறவாதத்தை முன்வைக்கும் அக்கட்சியின் வெற்றி என்பதன் மறுபக்கத்தில் பிரான்ஸ் நாட்டில் அரைவாசிக்கும் சற்றுக் குறைவானவர்கள் நிறவாதிகளா என்றால் அது உண்மையல்ல.

அதே போன்றே, அமெரிக்கக் காட்டுமிராண்டி அரசியல்வாதி என வர்ணணை செய்யப்படும் டொனால்ட் ட்ரம்பின் வெற்றிச் செய்தியாக அமெரிக்கர்கள் அனைவரையும் நிறவாதிகளாகவும் நியாமற்றவர்களாகவும் கருத முடியாது.

அவர்களில் வெற்றியின் பின்னணியில் அதிகாரவர்க்கத்திற்கு எதிரான தமது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்கள் என்பதை செய்தியாக எடுத்துக்கொள்ளலாம். பிரான்சில் இதுவரைக்கும் சில பாராளுமன்ற ஆசனங்களைக்கூடப் பெற்றுக்கொள்ள முடியாத ஆளும் வர்க்கத்தின் அடையாளப்படுத்தப்படாத அரசியல்வாதியிடம் மக்களில் ஒரு பகுதியினர் சரண்டைந்தமைக்கு மக்களின் இயலாமையே காரணம்.

அந்த நாடுகளின் அதிகாரவர்க்கத்திடமிருந்து விடுதலை பெற புரட்சிகரக் கட்சிகளின் வெற்றிடம் ஏற்பட்டுள்ள சூழலே மக்கள் மாற்று வழிகளை அதுவும் இதுவரை பரீட்சித்துப்பார்க்கப்படாத வழிகளைத் தெரிவுசெய்ய முற்படுகின்றனர்.

இந்தியாவில் இதன் மறுபக்கம் மிகவும் நுண்ணியமானது.

குஜராத்தில் தேர்தலுக்கு முன்பான கருத்துக்கணிப்புகளில் அவ்வப்போது மத அடிப்படைவாதத்திற்கு எதிராகத் தம்மை முன்னிறுத்திக்கொள்ளும் காங்கிரஸ் கட்சியே முன்னிலை வகித்தது. ஆர்.எஸ்.எஸ். இயக்கும் பாரதீய ஜனதா பின்னடைவைச் சந்தித்திருந்தது.

காங்கிரஸ் கட்சியை இந்துத்துவ பாரதீய ஜனதாக் கட்சிக்கு எதிரான மாற்றாக மக்கள் கருதிய நிலையில், காங்கிரசின் தலைவர் தன்னையும் ஒரு இந்துத்துவா ஆதரவாளராக வெளிப்படுத்தினார். மறந்தும் இஸ்லாமியர்கள் எவரையும் பிரச்சார மேடைகளில் சேர்த்துக்கொள்ளவில்லை. தவிர, குஜராத் இந்துக்கோவில்களில் எதையும் தவறவிடாமல் ராகுல் காந்தி ஏறி இறங்கினார். மாற்றை எதிர்பார்த்த மக்கள், நரேந்திர மோடியின் குறுகிய மறுபதிப்பையே ராகுல் காந்தியிடம் கண்டார்கள். ராகுல் காந்தி நரேந்திர மோடி என்ற போட்டிக்கு இடையில் வேறு எந்தக் கட்சிகளும் இல்லாத நிலையில், போலியைவிட அசலே மேல் என மக்கள் கணிக்க மோடியின் பாரதீய ஜனதா மீண்டும் ஆட்சியைக் கையகப்படுத்திவிட்டது.

இந்துதுவா என்ற தலையங்கத்தில் நரேந்திர மோடி நடத்தும் கோப்ரட் கம்பனிகளின் ஏகாதிபத்திய அடிமை ஆட்சிக்கு மாற்றான தலைமையை ராகுல் காந்தி வழங்க முடியாது என்ற முடிவு மீண்டும் மோடியை ஆட்சி பீடத்தில் ஏற்றியது.

அதற்கு சமாந்தரமான போக்கே ஆர்.கே நகர் தேர்தலிலும் காணப்பட்டது. மோடியின் பாரதீய ஜனதா மற்றும் அதன் அடிமை அரசான எடப்பாடி பன்னீர் கொள்ளையர்களின் அரசிற்கு எதிரான மக்களின் எதிர்ப்புணர்வின் வடிகாலாக திராவிட முன்னேற்றக் கழகம் அமைந்திருக்கவில்லை. மத அடிப்படை வாதத்திற்கு எதிரான உயர்ந்த தொனியில் திருமா வளவன் பேசிய அளவிற்குக் கூட கருணாநிதியின் வாரிசான ஸ்டாலின் பேசவில்லை.

அதே வேளை தினகரனை மூலை முடுக்குகள் எல்லம் புகுந்து விரட்டிய பாரதீய ஜனதாவின் ஆட்சி அவரை மக்களிடம் கதாநாயகனாக மாற்றிவிட்டது. ஆக, இங்கும் பாரதீய ஜனதாவின் ஆட்சிக்கு எதிரான மாற்றை தி.மு.க விடமிருந்து எதிர்பார்க்க முடியாது என்ற சூழலில் அந்த ஆட்சியின் நேரடிப் பாதிப்பிற்கு உட்படுத்தப்பட்ட தினகரனைத் தவிர்க்க முடியாமல் மக்கள் தெரிவு செய்தனர்.

ஆக, குஜராத்திலும், ஆர்.கே நகரிலும் இந்துத்துவாவிற்கு எதிரான மாற்றையே மக்கள் எதிர்பார்த்தனர், ஆனால் அதன் எமாற்றம் எதிர்பாராத முடிவுகளைத் தந்துள்ளது.
இந்தியாவில் பிரித்தானியர்களால் ஒட்டவைக்கப்பட்ட பாராளுமன்ற அரசியல் கேலிக்கூத்தாகிவிட்டது. இந்தச் சூழலைப் புரட்சிகரக் கட்சிகள் பயன்படுத்திக்கொள்ளாவிட்டால் ஆர்.எஸ்.எஸ் இன்னும் பல ஆண்டுகள் ஆட்யில் நீடிப்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடும்,

கந்துவட்டிக்காரனை தேர்தலில் முன்னிறுத்திய சிறிதரன்!

எதிர்வரும் பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தர்மபுரம் வட்டாரத்தில் போட்டியிடுவதற்கு தர்மபுரத்தினைச் சேர்ந்த கந்துவட்டி அறவிடும் ஜீவன் என்பவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் நியமித்துள்ளார்.

ஜீவன் எப்படி வட்டி அறவிடுகின்றார் என்பது பற்றி மக்களுக்கு நன்றாகத் தெரியும். ஜீவனின் கந்துவட்டி அறவீட்டில் தர்மபுரப் பிரதேசத்தில் இயங்கிவந்த கரிணிகா நகைக்கடை உரிமையாளர் தற்கொலை செய்துகொண்டார் என்பதும் அனைவரும் அறிந்ததே.

2009ஆம் யுத்தம் நிறைவடைந்த பின்னர் கந்துவட்டி காரணமாக பெரும் கோடீஸ்வரர்களுள் ஒருவராகியுள்ளார் கந்துவட்டிக் காரரான ஜீவன்.

அத்துடன், தர்மபுரத்தில் நடைபெறும் பல்வேறு சட்டவிரோதச் செயல்கள், காவல்துறையிடம் சிக்கும் பட்சத்தில் ஜீவனைத் தொடர்புகொண்டால் அனைத்துப் பிரச்சனைகளும் தீர்ந்துவிடும் எனவும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், விசுவமடுப் பகுதியில் ஜீவன் என்பவரிடம் கடன் பெற்ற பலர் தற்போது தலைமறைவாகியுள்ளதாகவும், அண்மையில் இவ்வாறு தலைமறைவாகியிருந்த ஒருவரை அழைத்துவந்த ஜீவன் அவருக்காக சாட்சிநின்ற வர்த்தகர் ஒருவரின் வீட்டினை அபகரித்துள்ளமையும் தெரியவந்துள்ளது.

இவ்வாறு கந்துவட்டி அறவிடுபவரும், பல சட்டவிரோதச் செயல்களுக்கு துணைபோகும் ஒருவருமான ஜீவன் என்பவரை சிறிதரன் தர்மபுர அமைப்பாளராக நியமித்தமை அப்பகுதி மக்கள் மத்தியில் பல விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

மக்களுக்குச் சேவை செய்வதற்காக நியமிக்கப்படவேண்டிய அமைப்பாளர்களைத் தவிர்த்து சட்டவிரோத செயற்பாடுகளிலும், கந்துவட்டி அறவிடுபவர்களுமே தேர்தலில் வேட்பாளர்களாக நியமிக்கப்படுவது மக்களின் சாபக்கேடே.

இலங்கையில் தடைசெய்யப்பட்ட ரமடோல் மாத்திரையுடன் மாநகரசபை வேட்பாளர் கைது!

இலங்கை மருந்தாக்க கூட்டுத்தாபனத்தில் மாத்திரமே விற்பனை செய்யப்படும் ட்ரமடோல் மாத்திரையுடன் மாநகரசபை உறுப்பினர் ஒருவர் அம்பாறையில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அக்கரைப்பற்றைச் சேர்ந்த முகமது இஸ்மாயில் முகமத் ரபீக் எனப்படும் குறித்த மாநகரசபை உறுப்பினர் 23,000ஆயிரம் மாத்திரைகளை தனது வாகனத்தில் ஏற்றிக்கொண்டிருந்த வேளை காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவர் அக்கரைப்பற்று மாநகரசபைத் தேர்தலில் நுரானியா வட்டாரத்தில் தேசிய காங்கிரஸ் கட்சியில் போட்டியிடவிருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ட்ரமடோல் மாத்திரையானது வலி நிவாரணியாகும். தாங்கமுடியாத வலியுடன் உள்ளவர்கள் பயன்படுத்துவதற்கு வைத்தியர்களால் இம்மாத்திரை பரிந்துரை செய்யப்படுகின்றது.

இலங்கையில் 1100 மில்லிக்கிராம் கொண்டதும், ஒசுசலவில் மாத்திரம் வாங்குவதற்கும், வைத்தியரின் அனுமதிச்சிட்டையுடன் சென்றால் மாத்திரமே  இம்மாத்திரை வழங்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், குறித்த மாநகர சபை உறுப்பினரிடமிருந்து, 225மில்லிக்கிராம் கொண்ட மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இம்மாத்திரையைப் பயன்படுத்தும் ஒருவர், போதைவஸ்துக்கு அடிமையான ஒருவரால் எவ்வாறு அதிலிருந்து மீளமுடியாதோ, அதேபோன்ற நிலமையே இம்மாத்திரையைப் பயன்படுத்துபவருக்கும் ஏற்படுகின்றது. இதன் பாவனையைக் கைவிடும் சந்தர்ப்பத்தில், போதைப் பொருளைக் கைவிட்டவருக்கு ஏற்படும் உடல் நடுக்கம், நெஞ்சு படபடத்தல் மற்றும் உடல் நோவு போன்ற உபாதைகள் ஏற்படுகின்றன.

இம்மாத்திரை ஒன்றின் விலை 4 ரூபாய். ஆனால் தனியார் மருந்தகங்களில் தடைசெய்யப்பட்ட இம்மாத்திரையை 100 ரூபாவிற்கு விற்பதன்மூலம் அதிக இலாபம் ஈட்டமுடியும். ஆகவே, குறித்த நபர் இந்தியாவிலிருந்து கடல்வழியாகக் கொண்டுவரப்படும் இம்மாத்திரைகளை சட்டவிரோதமான முறையில் மருந்தகங்களுக்கு விற்பனை செய்துவந்தமை தெரியவந்துள்ளது.

இவர்மீது அபாயகரமான ஒளடதங்கள் கடத்தல் சட்டத்தின்கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டாலும், சட்டத்தின் ஓட்டையை வைத்து இவர் விடுதலையாவதற்கு அதிகளவான வாய்ப்புக்கள் உள்ளதாகத் தெரியவந்துள்ளது.

என்னிடம் ஆயுதங்கள் இருப்பது பாதுகாப்பு அமைச்சுக்குத் தெரியும் – கைதுசெய்யப்பட்ட புளொட் உறுப்பினர் நீதிமன்றில் தெரிவிப்பு!

கடந்த வாரம் யாழ் நகரின் மத்தியில், புளொட் அமைப்பினரால் நீண்டகாலமாக பயன்படுத்தப்பட்டுவந்த வீட்டிலிருந்து ஒரு தொகுதி ஆயுதங்கள் மீட்கப்பட்டதுடன், அவ்வீட்டில் தங்கியிருந்த புளொட் அமைப்பின் ஆரம்ப உறுப்பினர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டமை யாவரும் அறிந்ததே.

கைதுசெய்யப்பட்ட குறித்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், சம்பவத்துடன் தொடர்புடைய சிவகுமார் (பவுண்) என அழைக்கப்படும் குறித்த நபரை நீதிமன்றத்தில் முற்படுத்தியபோது தன்னிடம் ஆயுதங்கள் இருப்பது பாதுகாப்பு அமைச்சுக்குத் தெரியும் எனத் தெரியப்படுத்தியுள்ளார்.

சிவகுமாரின் வாக்குமூலமானது மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், பயப்பீதியையும் உருவாக்கியுள்ளது.

யுத்தம் நடைபெற்ற காலத்தில், இராணுவத்துடன் இணைந்து இயங்கிவந்த ஒட்டுக்குழுக்கள் என அழைக்கப்படும் ரெலோ, ஈபிடிபி, ஈபிஆர்எல்எவ் மற்றும் புளொட் அமைப்புக்களுக்கு அரசாங்கத்தினால் ஆயுதங்கள் வழங்கப்பட்டன.

இவ்வொட்டுக் குழுக்களால் யுத்தம் நடைபெற்ற காலத்தில் படுகொலைகள், ஆட்கடத்தல்கள் போன்ற பல குற்றச்செயல்கள் யாழ். நகரம் உட்பட வட கிழக்கு மாகாணங்களில் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

யுத்தம் நிறைவடைந்தபின்னர் இவ்வாறான ஆயுதக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் மீண்டும் அப்போதைய பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ஷவினால் மீளப் பெறப்பட்டன.

இந்நிலையில், புளொட் அமைப்பின் ஆயுதங்கள் திரும்பப் பெறப்பட்டாலும், சில ஆயுதங்கள் ஒப்படைக்கவில்லையெனவும், அவ்வாறான ஆயுதங்கள் அனைத்தும் தான் தங்கியிருந்த வீட்டிலேயே வைத்திருந்ததாகவும் சிவகுமார் எனப்படும் பவுண் நீதிமன்றத்தில் மேலும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், புளொட் அமைப்பினைச் சேர்ந்தவர்கள், சிறிலங்கா இராணுவ புலனாய்வு அதிகாரிக்கும் பவுண் என அழைக்கப்படும் சிவகுமாருக்கும் நெருங்கிய தொடர்பிருப்பதாகவும், இவர் யாழில் நடைபெற்றுவரும் வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்பு பட்டிருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

இதன்காரணமாகவே அவர் ஆயுதங்களை வெளிப்படையாக அலுமாரியில் பூட்டி வைத்திருந்ததாகவும், இந்த ஆயுதங்கள் தன்னிடமிருப்பது பாதுகாப்பு அமைச்சுக்குத் தெரியும் எனவும் வெளிப்படையாகவே தெரிவித்திருந்தார்.

எனினும், சிவகுமாரிடம் நடத்தப்படும் முறையான விசாரணையின்மூலமே, யாழ். குடாநாடெங்கும் நடைபெற்றுவரும் பல்வேறு குற்றச்செயல்கள் பற்றி அறிந்துகொள்ளமுடியும்.

பிட்கொயின் (Bitcoin) எனும் சதுரங்கவேட்டை :வி.இ.குகநாதன்

பிட்கொயின் (மெய்நிகர் நாணயம் அல்லது எண்மநாணயம் ) என்பது முதலீட்டு ஆர்வலர்கள்,பொருளியிலாளர்கள் என்பவர்களினது  கவனத்தை மட்டுமல்லாமல்  சாதரண மக்களின் கவனத்தையும் தன்பக்கம் திருப்பியுள்ளது.  பிட்கொயின் ஒரு முதலீடா அல்லது ஒரு வகைச் சூதாட்டமா என்ற விவாதம் ஊடகங்களில் முக்கிய இடம்பெறுகிறது. இந்த வியாழன் (07-12-2017)இரவுவரை ஒரு அலகானது 52 விழுக்காடு வரை சில பரிமாற்றல்களில் அதிகரித்துக் காணப்பட்டது. இவ்வாறான பெறுமதி அதிகரிப்பே  பலரின் கவனத்தையும் பிட்கொயின் மீது திருப்பியுள்ளது. பிட்கொயின் பற்றிய உரையாடல்கள் ஐரோப்பா,அமெரிக்கக் கண்டங்களைக்  கடந்து ஆசியாவில் இந்தியா போன்ற நாடுகளையும் அடைந்துள்ளது. இப்படிப்பட்ட பிட்கொயின் பற்றி அறிமுகமில்லாதவர்களிற்காக ஒரு சிறு விளக்கத்தை முதலில் பார்ப்போம்.

பிட்கொயின்(Bitcoin):

பிட்கொயின் என்பது டிஜிட்டல் நாணயத்தின் ஒரு அலகாகும்( A  unit of digital currency). இதற்கென ஒரு பௌதீக வடிவம் இல்லை. இது கணனிக்குறியீட்டுத் தொடரிலேயே பேணப்பட்டுவருகின்றது.  Satoshi Nakamoto என்பவரினால் (இவர் இன்னமும் முழுமையாக அடையாளங்காணப்படவில்லை) 2009 தை மாதத்தில்  பிட்கொயின் வெளியிடப்பட்டது. இந்த பிட்கொயினை இணையத்தில் (Blifinex, Coinbase , etc)  வாங்கவும் விற்கவும் முடியும். இந்த பிட்கொயினை சாதாரண கோப்பி குடிப்பதற்கு முதல் விடுமுறை கால முன்பதிவு இணையத்தளங்களில் செய்வதற்குவரை பயன்படுத்தலாம். இவ்வாறான செலவீனங்களை மேற்கொள்வதனைக் காட்டிலும் முதலீட்டு நோக்கத்தில் இந்த நாணயத்தை வாங்குவோரே அதிகம்.

பிட்கொயின் முதலீடுகள் பாதுகாப்பானவையா?

இந்தக் கேள்விதான் இன்றைய வணிக உலகின் முக்கிய கேள்வியாக எழுப்பப்படுகிறது. இக்கேள்விக்கான பதிலைத் தேடுவதற்கு முன்னர், இக் கேள்வியினையே சரி பார்க்கவேண்டியுள்ளது. அதாவது பிட்கொயினை ஒரு முதலீடாகக் கொள்ளலாமா என ஆய்வு செய்யவேண்டியுள்ளது. என்னைப் பொறுத்தவரையில் அது ஒரு சூதாட்டமேயன்றி, முதலீடல்ல. ஆரம்ப அறிமுகம் முதலே பிட்கொயின் நடைமுறைகளில் ஒரு வெளிப்படைத்தன்மையோ அல்லது பொறுப்புக்கூறும் தன்மையோ காணப்படவில்லை. அதன் ஏற்றம் எவளவு சடுதியானதோ அதன் இறக்கமும் அவ்வாறேயிருக்கும் என பல பொருளியிலாளர்களால் எதிர்வு கூறப்படுகிறது.  மேலும் இந்த பிட்கொயின்களை சேமித்துவைக்கும் இணைய பணப்பையும் (online wallets) பாதுகாப்பற்றது, ஏனெனில் இதனை இணைய ஊடுருவலாளர்கள் (hackers) ஊடுருவி திருடிக்கொள்ளும் ஆபத்து எப்போதும் உண்டு.  இதே ஆபத்து இணைய வங்கி நடைமுறைகளிலும் (online banking) உண்டாயினும், அங்கு வங்கிகளாலும் அரசாலும் வழங்கப்படும் குறிப்பிடத்தக்களவான பாதுகாப்பு உத்தரவாதங்கள் எதுவும் இங்கில்லை.

மேலும் இதன் ஆதரவாளர்கள் இங்கு ஏற்படும் ஏற்ற இறக்கங்களை பங்குச் சந்தையுடன் ஒப்பிடுகிறார்கள். அந்த ஒப்பீடும் தவறு, ஏனெனில் பங்குகளின் தளம்பல்களை ஒரளவிற்குப்  பொருளியல், அரசியல் அறிவுடையோரால் எதிர்வுகூறமுடியுமாகக் காணப்பட, மறுபுறத்தே  பிட்கொயின் தளம்பல்களை யாராலும் எதிர்வுகூற முடியாதநிலையே காணப்படுகிறது.

இந்த பிட்கொயின் நடைமுறை சற்றுச் சிக்கலானதாயினும் நாம் எளிமையாக விளங்கிக்கொள்ள  இதனை நாம் வளர்முக நாடுகளில் காணப்படும் வைப்புக்களிறகு அதிக வட்டி வழங்கும் தனியார் நிதிக்கம்பனிகளுடன்(finance companies) ஒப்பிட்டு விளங்கிக்கொள்ளலாம். இந்த நிதிக்கம்பனிகள் வங்கிகளைவிட வைப்புக்களிற்கு அதிகவட்டி வழங்குவதால் திடீரென வாடிக்கையாளர்கள் படையெடுப்பர். வைப்புக்கள் அதிகரிக்க அதிகரிக்க  வட்டியும் அதிகமாக வழங்கப்படும். வைப்புக்களின் வருகை ஒரு கட்டத்தில் குறைய ஆரம்பிக்க இந்த நிதிநிறுவனங்கள் பிரச்சனைகளைச் சந்திக்கும். வளர்ந்ததை விட பல மடங்கு வேகத்தில் சரிவடையும். இதே நிலமைதான் இந்த பிட்கொயின்களிற்கும் ஏற்படப்போகின்றது.

இந்த பிட்கொயின்களின் பெறுமதியானது எப்போதுமே இன்னொருவரின்  வாங்கும் விருப்பத்தில் மட்டுமே தங்கியுள்ளதுடன் இதன் பெறுமதியினை உறுதிப்படுத்துவோரும் யாருமில்லை. ஒரு கட்டத்தில் இதனை வாங்குவோரின் விருப்பம் குறைவடையத்தொடங்கும்போது,இதன் சரிவும் ஆரம்பிக்கும். இதிலுள்ள மற்றொரு குறைபாடு யாதெனில் மற்றைய முதலீடுகளில் காணப்படும் வருமானவழிமுறைகள் எதுவுமே இதிலில்லை. அதாவது பங்குமுதலீட்டில் கிடைக்கும் பங்கிலாபம், வீட்டுமனைத்துறை (Real estate)யிலுள்ள வாடகை போன்ற வருமான மூலங்கள் எதுவுமே இங்கில்லை. இந்த பிட்கொயினானது பெறுமதி அதிகரிப்பில் மட்டுமே தங்கியிருப்பதுடன், அதன் பெறுமதிக்கு எந்தவித உத்தரவாதமும் காணப்படவில்லை. மேற்கூறிய காரணங்களாலேயே பிட்கொயினானது ஒரு முதலீடாகவல்லாமல் சூதாட்டமுறையாகவே கருதப்படவேண்டியுள்ளது.

      இதுகாறும் பிட்கொயின் நடைமுறையால் பொதுமக்களிற்கு ஏற்படும் பாதிப்புக்களைப் பார்த்தோம். அரசுகளைப் பொறுத்தவரையில் பிட்கொயினானது ஒரு கறுப்புப்பண முதலீடாகவும், சட்டவிரோத மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளிற்கான பணப்பரிமாற்ற வழியாகவும் இலகுவாக பயன்பட நிறைய சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன.  இவளவு ஆபத்துக்கள் காணப்படுகின்றபோதும் இந்த பிட்கொயினை அரசுகள் கண்டுகொள்ளாமலிருப்பதற்கான அரசியல் நுட்பமாக ஆராயப்படவேண்டியுள்ளது.

இன அழிப்பை மேற்கொண்ட சிங்களப் பேரினவாத அரசு, அடையாள அழிப்பை மேற்கொண்டு வருகின்றது!

இலங்கை என்ற முதலாளித்துவ அரச கட்டமைப்பு நிலைக்க வேண்டுமானால், இலங்கையில் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் இருப்பும் தவிர்க்கவியலாத ஒன்று. சிங்கள உழைக்கும் மக்கள் அரசின் மீதான வெறிப்புணர்வுக்கு உட்படும் போதெல்லாம் சிங்கள பௌத்த பேரினவாதம் திட்டமிட்டுத் தூண்டப்படுகிறது. இன்றைய இலங்கை அதிகாரவர்க்கத்தின் உள் முரண்பாடுகளைக் கையாளவும், இலங்கை முழுவதும் வெறுப்படைந்திருக்கும் சிங்கள உழைக்கும் மக்களைத் திசைதிருப்பவவும் பேரினவாதம் இழையோடும் அரச அதிகாரம் திடீரெனத் தீவிரமடைகிறது.

யாழ்ப்பாணத்தின் முற்றவெளிக்கும் தேசிய இனப்பிரச்சனைக்கும் நெருக்கமான தொடர்புகள் உண்டு. 1977 ஆம் ஆண்டு முற்றவெளி மைதானத்தில் நடைபெற்ற கார்னிவெல் நிகழ்வில் பொதுமக்களால் அத்துமீறிய சிங்கள போலிஸ் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து போலிஸ் மக்கள் மீது துப்பாக்கிப் பிரையோகம் நடத்தியதில் 4 அப்பாவிகள் கொல்லப்பட்டனர்.

1974 ஆம் ஆண்டு முற்றவெளிக்கு அருகில் தமிழாராச்சி மாநாட்டில் கொல்லப்பட்ட மக்கள் தேசிய இனப்பிரச்சனையின் மற்றொரு குறியீடு.

இந்த வாரத்தின் இறுதிப்பகுதியில் நடைபெற்ற சம்பவங்கள் முற்றவெளியைச் சமூக அக்கறையுள்ளவர்களின் ஈர்ர்பு மையமாக மாறியுள்ளது.

யாழ்பாணம் நாகவிகாரை விகாராதிபதி மீகா யதுரே ஞானசார தேரர் கடந்த 19 ஆம் நாள் கொழும்பு வைத்தியசாலையில் இயற்கை எய்தினாா். யாழ் ஆரியகுளம் பகுதியில் அமைந்துள்ள நாகவிகாரையின் விகாராதிபதியாக கடந்த 1991 ஆம் ஆண்டில் இருந்து வந்த இவர் தனது 70 ஆவது வயதில் கடந்த 19ஆம் நாள் இயற்கை எய்தினார்.

இவரின் பூதவுடல் விசேட உலங்குவானூர்திமூலம் விகாரைக்கு எடுத்துவரப்பட்டு, முற்றவெளியில் அடக்கம் செய்வதற்கான நடவடிக்கையை சிறிலங்கா இராணுவம் மேற்கொண்டது.

முற்றவெளி அலங்கரிக்கப்பட்டு மரணச்சடங்குகளுக்கான ஆரம்பவேலைகள் பூர்த்தியாக்கபட்டுள்ளது. முற்றவெளி மையனம் அல்ல. பௌத்த துறவியை அடக்கம் செய்த பின்னர், வரலாற்றுப் பெருமைகொண்ட முற்றவெளியின் ஒரு பகுதி பௌத்தர்களின் புனிதப் பிரதேசமாக்கப்படும்.

பேரினவாதத்தை எவ்வாறு தமிழ் வாக்குகளாகவும் சிங்கள வாக்குகளாகவும் மாற்றிக்கொள்வது என தமிழ் சிங்கள அரசியல்வாதிகள் திட்டமிடுவதை மட்டுமே இன்றைய இலங்கையின் அரசியலின் அவலக்குரலாகக் காணலாம்.

தமிழ் இனவாதத்தை வாக்குகளை நோக்கமாகக் கொண்டு தூண்டாமலும் சிங்களப் பேரினவாதிகளுக்கு வாய்ப்பளிக்காமலும் இப் பிரச்சனையைத் தொலை நோக்கோடு அரசியல்வாதிகள் அணுகுவது மட்டுமல்ல, மக்களை அணிதிரட்டி புதிய மக்கள் சார்ந்த அரசியலை முன்வைத்தால் மட்டுமே சுய நிர்ணைய உரிமைக்கான குரலை வலுவாக்க முடியும்.