கிளிநொச்சியில் அடையாள அழிப்பை மேற்கொள்வதற்கு துணைபோகும் சிறிதரன்!

தமிழீழ விடுதலைப் புலிகள் காலத்தில் ஆதரவற்ற ஆண் குழந்தைகளுக்கென உருவாக்கப்பட்ட காந்தரூபன் அறிவுச்சோலை எஸ்.கே. அறிவுச்சோலையாக பெயர் மாற்றம்செய்யப்பட்டு அடையாள அழிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த அடையாள அழிப்பானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் அனுசரணையுடன் நடந்தேறியுள்ளது.

1993ஆம் ஆண்டு, தனது பெற்றோரைச் சிறுவயதில் இழந்த மேஜர் காந்தரூபனின் வேண்டுகோளுக்கமைய,  பெற்றோரை இழந்த சிறுவர்களின் கல்விக்காக விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனால் உருவாக்கப்பட்டது காந்தரூபன் அறிவுச்சோலை.

2009 ஆண்டு யுத்தம் நிறைவடைந்த பின்னர் திருவையாறு 2ஆம் பகுதியில் விடுதலைப் புலிகளின் கணினிப் பிரிவு இயங்கிவந்த 14 ஏக்கர் காணியில் இச்சிறுவர் இல்லத்தை அமைப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனை எஸ்.கே. என அழைக்கப்படும் சுவிஸ் வர்த்தகரான கதிர்காமநாதன் அணுகியுள்ளார்.

குறித்த 14 ஏக்கர் காணிகளும் பொதுமக்களுக்குச் சொந்தமானவை என்பதுடன்,  சிறுவர் இல்லம் அமைப்பதற்காக விடுதலைப் புலிகளினால் அக்காணிகளின் சொந்தக்காரர்களுக்கு பணம் கொடுத்துப் பெறப்பட்டது. அதன் பின்னர் குறித்த நிலப்பரப்பில் சிங்களப் பொறியியலாளர்கiளால் சிறுவர் இல்லங்களுக்கான கட்டடங்கள் அமைக்கப்பட்டது. இருப்பினும் அதில் குறித்த சிறுவர் இல்லம் இயங்கவில்லையென்பதுடன், விடுதலைப்புலிகளின் கணினிப்பிரிவு இயங்கி வந்தமையும் குறிப்பிடத்தக்கது.

யுத்தம் நிறைவடைந்தபின், இக்காணிகள் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. அக்காணிகளைப் பெறுவதற்கு  காணி உரிமையாளர்களால் கரைச்சிப் பிரதேச சபையில் வேண்டுகோள் விடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இந்த 14 ஏக்கர் நிலப்பரப்பும் கரைச்சிப் பிரதேச சபையினால் கதிர்காமநாதனுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஒரு பிரதேச சபையினால் தனியொருவருக்கு 14 ஏக்கர் காணியை வழங்கமுடியாது. இதற்காக, அக்கிராமத்தில் சிறிதரனின் ஆதரவாளர்கள் சிலரின் பெயரை இணைத்து, தமது கிராமத்துக்கு சிறுவர் இல்லம் அமைப்பதற்கான அனுமதியை வழங்குமாறு கோரி கரைச்சிப்  பிரதேச செயலகம், மாவட்டச் செயலகம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவுக்கு கதிர்காமநாதனூடாக அனுப்பிவைக்கப்பட்டது.

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இதற்கான அனுமதியும் வழங்கப்பட்டது.

இந்நிலையில், காணி உரிமையாளர்களில் இருவர் சிறிதரனிடம் முறையிட்டபோது, உங்களது காணிகளைப் பெற்றுத் தருவதாக இருந்தால், முன்னாள் போராளிகளுக்கு உதவுவதற்கு தலா இரண்டு இலட்சம் ரூபா வழங்கவேண்டுமெனவும், இல்லாவிட்டால் உங்கள் காணியைப் பெற்றுத் தரமுடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து உரிமையாளர்களான கணபதிப்பிள்ளை சண்முகசுந்தரம் மற்றும் திருநாவுக்கரசு பொன்னம்பலம் ஆகியோர் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

யுத்தம் நிறைவடைந்த பின்னர், செஞ்சோலை மற்றும் காந்தரூபன் அறிவுச்சோலைப் பிள்ளைகள் வவுனியாவில் இயங்கும் சிவன் ஆலயத்தினரால் பராமரிக்கப்பட்டு வந்தனர். பின்னர் செஞ்சோலை சிறுவர் இல்லம் கிளிநொச்சியில், கே.பி என அழைக்கப்படும் குமரன் பத்மநாதனால் இயக்கப்பட்டு வருகின்றது.

இதைவிட, கிளிநொச்சியில், கருணா நிலையம், மகாதேவா சிறுவர் இல்லம், காந்தி நிலையம் போன்ற சிறுவர் இல்லங்கள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், கிளிநொச்சியில் சிறுவர் இல்லம் ஒன்று அமைப்பதற்கு அவசியமேதுமில்லை.

அத்துடன், அரச சட்டத்தின்படி கண்டபடி சிறுவர் இல்லங்கள் அமைக்கமுடியாது. இந்நிலையிலேயே, சிறிதரன் அவர்கள் அரசாங்கத்திலுள்ள சில அதிகாரிகளுக்கூடாக, காந்தரூபன் அறிவுச்சோலை பதிவெண்ணில் எஸ்கே. அறிவுச்சோலைக்கான அனுமதியைப் பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், மக்களுக்கு தன்னையொரு விடுதலைப் புலிகளின் விசுவாசியெனக் காட்டுவதற்காக மாவீரர் தினம், முள்ளிவாய்க்கால் நினைவு தினம் என்பவற்றைக் கொண்டாடிக்கொண்டு மறுபக்கம், இவ்வாறு அடையாள அழிப்புகள் செய்துவருகின்றமை கண்கூடு.

கூட்டமைப்பை நாடிபிடித்துப் பார்க்கும் ரணில்!

உள்ளூராட்சித் தேர்தல் சூடுபிடித்திருக்கும் நிலையில், முக்கிய கட்சிகளான சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கியதேசியக் கட்சி உட்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்ற கட்சிகளிலிருந்து கட்சித் தாவல்கள், பேச்சுவார்த்தைகள் என தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு தொடர்பாக ரணில் விக்கிரமசிங்க நாடிபிடித்துப் பார்க்கும் செயலில் இறங்கியுள்ளார்.

ஏற்கனவே மைத்திரி தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சியானது மகிந்த அணியுடன் இணைந்து போட்டியிடுவதற்கு சில நிபந்தனைகளை விதித்துள்ளதாகவும், அந்த நிபந்தனைகளுக்கு மைத்திரி தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவு வழங்குமாயிருந்தால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு வழங்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையிலேயே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆசனப் பங்கீட்டில் முக்கியமாக முல்லைத்தீவு மற்றும் மடடக்களப்பு மாவட்டங்களில் முரண்பாடுகள் உருவாகி தமிழரசுக் கட்சியைத் தவிர அனைத்துக் கட்சிகளும் இந்தியாவின் நிகழ்ச்சிநிரலுக்கேற்ப ஆனந்தசங்கரியின் தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்துள்ளன.

இதனையடுத்து சிறிலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்குத் தொலைபேசி அழைப்பெடுத்து, பிரிந்து சென்ற கட்சியினை ஒன்றிணைக்குமாறு பணிப்புரை விடுத்திருந்தார்.

இந்நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தனித்தனியாக சந்தித்துப் பேசி வருவதுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றிக்காக தான் எந்த விட்டுக்கொடுப்புக்கும் தயார் என அறிவித்துள்ளார்.

இதனையடுத்து, ரணில் – கூட்டமைப்பு இணைப்பு உறுதியாகியுள்ள நிலையில், சிறிலங்கா சுதந்திரக்கட்சி அரசாங்கத்திலிருந்து விலகும் பட்சத்தில் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஆட்சி உறுதியாகியுள்ளது.

இத்தேர்தலில் ரணில் – கூட்டமைப்பு இணைப்பினாலோ, அல்லது ஏனைய தமிழ்க் கட்சிகளின் இணைவினாலோ தமிழ் மக்களுக்கு எந்தவித நன்மையும் கிடைக்கப்போவதில்லை என்பதே நிதர்சனமாகும்.

ஆசனப் பங்கீட்டு மோதலால் தனிமரமாகிப்போன தமிழரசுக் கட்சியும், இந்தியாவின் சூழ்ச்சிக்குப் பலியாகிய தமிழர் விடுதலைக் கூட்டணியும்!

உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகளுக்குள் இடம்பெற்ற முரண்பாடினால், தமிழரசுக் கட்சியைத் தவிர அனைத்துக் கட்சிகளும் தமிழத் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகி, ஆனந்தசங்கரியின் தலைமையிலுள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைந்துள்ளன.

இதனால் தனிமரமாகிப்போன தமிழரசுக் கட்சி, தனது இருப்பைத் தக்கவைத்துக்கொள்வதற்காக அங்கத்துவக் கட்சிகளில், மக்களின் செல்வாக்கினைப் பெற்றுள்ள உறுப்பினர்களைத் தமிழரசுக் கட்சிக்குள் இணைப்பதற்கு வெளிப்படையாகவே பேரம்பேசி வருகின்றது.

இதற்குச் சான்றாக அண்மையில் ஈபிஆர்எல்எவ் கட்சியைச் சேர்ந்தவரும், முல்லைத்தீவு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் தமிழரசுக் கட்சியின் சலுகைகளுக்கு விலைபோய் அக்கட்சியில் இணைந்துள்ளார்.

இந்த அற்ப சலுiகைகளை மறைப்பதற்காக ‘தலைவர் பிரபாகரன் கைகாட்டிய கட்சியைவிட்டு விலகுவதற்கு தான் தயாரில்லையெனவும் அறிக்கையும் விடுத்திருந்தார்.

இலங்கை அரசியலில் தேர்தல் காலங்களில் விடுதலைப் புலிகளே பேசுபொருள். அதற்கமையவே ரவிகரனும் தனது சுயலாபத்துக்காக விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரiனை ஓர் ஆயுதமாகக் கையாண்டுள்ளார்.

இந்நிலையில், தமிழரசுக் கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் எதேச்சதிகாரப் போக்குடன் செயற்படுவதாகவும், அக்கட்சியின் கொள்கையான வடக்குக் கிழக்கு இணைப்பு, சமஷ்டியாட்சி முறை என்பவற்றையெல்லாம் கைவிட்டுவிட்டு, அரசாங்கத்தின் நலனுக்காக செயற்படுகின்றது எனக் குற்றம சாட்டிய அங்கத்துவக் கட்சிகள் அனைத்தும் ஆனந்தசங்கரியின் தமிழர் விடுதலைக் கூட்டணியின்கீழ் அணிதிரண்டுள்ளனர்.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் கொள்கையாக ஒற்றையாட்சியின்கீழ், 13ஆவது அரசியலமைப்பின்படி ஆட்சியமைப்பதே. இதனைத்தான் 1990ஆம் ஆண்டு இந்தியா தமிழ் மக்கள் மீது திணித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் மக்கள் எந்த உரிமைக்காக காலம் காலமாகப் போராடினார்களோ, அவற்றையெல்லாம் கைவிட்டுவிட்டு, தற்போது ஆரம்ப கட்டத்திற்கே  அரசியல்வாதிகள் மக்களை இழுத்துச் சென்றுள்ளனர். இதனால் ஆதாயமடைவது இந்தியாவும், சிறிலங்கா அரசுமேயொழிய, தமிழ் மக்கள் இல்லையென்பதை இந்த அரசியல்வாதிகள் புரிந்துகொள்வார்களா?

வடமாகாணத்தின் அடுத்த முதலமைச்சராக இந்தியாவின் வளர்ப்புப் பிள்ளை வரதராஜப்பெருமாள்?

அடுத்த வடமாகாண முதலமைச்சராக இந்தியாவின் வளர்ப்புப் பிள்ளையென அழைக்கப்படுபவரும், மறைந்த இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியினால் வடக்குக் கிழக்கு முதலமைச்சராக நியமிக்கப்பட்டவருமான வரதராஜப்பெருமாளை நியமிக்க இந்தியாவினால் திரைமறைவில் காய்கள் நகர்த்தப்படுகின்றமை தெரியவந்துள்ளது.

மலையக வம்சாவளியைச் சேர்ந்தவர் எனக் கூறப்படும் வரதராஜப்பெருமாள் யாழ். பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகக் கடமையாற்றிக் கொண்டிருந்தபோது, பத்மநாபா தலைமையிலான ஈபிஆர்எல்எவ் கட்சியுடன் இணைந்து செயற்பட்டுக்கொண்டிருந்தார்.

பின்னர் இந்திய அரசின் றோ அமைப்பினால் மூளைச்சலவை செய்யப்பட்ட இவர், 1990 – 1998 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் இந்திய அரசாங்கத்தினால் வடக்குக் கிழக்கில் அமைக்கப்பட்ட பொம்மை அரசாங்கத்தின் முதலமைச்சராக நியமிக்கப்பட்டார்.

இப்பொம்மை அரசாங்கத்தின்மூலம் இந்தியா தனது நலன்களைச் சாதித்துக்கொண்டிருந்ததே தவிர தமிழ் மக்கள் தொடர்ச்சியாக ஒடுக்கப்பட்டுக்கொண்டிருந்தனர்.

இதன்பின்னர், விடுதலைப்புலிகளின் அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவுக்குத் தப்பிச்சென்ற வரதராஜப்பெருமாள் இந்தியாவின் பாதுகாப்பில் வாழ்ந்து வந்த நிலையில், 2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்ததும் இந்தியாவினால் மீண்டும் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.

சுமார் 23 ஆண்டுகளாக இந்தியாவின் பாதுகாப்பில் வாழ்ந்து வந்த வரதராஜப்பெருமாள் மீண்டும் பத்மநாபா தலைமையிலான ஈபிஆர்எல்எவ் கட்சிக்குத் தலைமை தாங்கி வருவதுடன், தீவகப் பகுதிகளில் தன்னுடன் அணிதிரளுமாறு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்நிலையில், ஈபிடிபி கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா வரதராஜப் பெருமாளைத் தன்னுடன் கூட்டுச் சேருமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.

இருப்பினும் 1990 ஆம் ஆண்டு இலங்கையில் இந்திய இராணுவம் நிலைகொண்டிருந்த காலப்பகுதியில், இந்திய இராணுவத்தின் பாதுகாப்பில் மக்களின் வாக்களிப்பின்றி வரதராஜப் பெருமாளை முதலமைச்சராக நியமித்து எவ்வாறு இந்தியா தனது நலன்களைச் சாதித்ததோ அவ்வாறானதொரு நிலையை மீண்டும் கொண்டுவருவதற்கே இந்தியா திரைமறைவில் காய்களை நகர்த்துகின்றது.

உதய சூரியன் சின்னமும் பணமும் கொள்கைக்கு அப்பாற்பட்டது!

ஈ.பி.ஆர்.எல்.எப் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்ணனி ஆகிய வாக்குக் கட்சிகளுக்கு இடையேயான தேர்தல் கூட்டு முறிவடைந்தமைக்குக் கொள்கை அளவிலான காரணங்கள் கிடையாது என ஈ.பி.ஆர்.எல்.எப் செயலாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்ற பெயரில் செயற்படும் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் என்ற கட்சியும் ஈ.பி.ஆர்.எல்.எப் உம் பொதுவான தேர்தல் சின்னமாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதய சூரியனை ஏற்றுக்கொள்வது தொடர்பான முரண்பாடே கூட்டு முறிவடைந்தமைக்கான காரணம் என்று கூறும் பிரமச்சந்திரன்த ற்காலிகமாக அச்சின்னத்தை ஏற்றுக்கொண்டு தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்புக்களை நிராகரிக்க முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் வன்னியில் ஆட்சி செலுத்திய காலத்தில் இந்திய அரசின் நேரடி முகவராக இலங்கையில் செயற்பட்டவர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி. தமிழர் விடுதலைக் கூட்டணி என்பது தமிழரசுக் கட்சி, அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கூட்டாகவே ஆரம்பிக்கப்பட்டது. இக் கூட்டணியை நிராகரித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற புதிய கூட்டமைப்பு தமிழீழ விடுதலை புலிகளின் ஆதரவில் ஆரம்பிக்கப்பட்டது.

அப்போது உருவான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இந்திய இராணுவத்துடன் இணைந்து செயற்பட்டவரும் மகிந்த ராஜபக்ச மீன்பிடித்துறை அமைச்சராக பதவி வகித்த போது அந்த அமைச்சின் செயலாளராகவும் செயற்பட்ட சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எப் உம் இணைந்துகொண்டது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்ற கஜேந்திரகுமர் குழுவினர் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை பின்னதாக உருவாக்கினர்.

தமிழீழ விடுதலப் புலிகளின் காலத்தில் இந்திய அரசினதும், இலங்கை அரசினதும் பாதுகாப்பிலிருந்த ஆனந்த சங்கரியின் தமிழர் விடுதலைக் கூட்டணி  பெருந்தொகைப் பணத்தை வங்கியில் வைப்பிட்டிருக்கும் கட்சிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

மக்களுக்கு ஏற்கனவே அறிமுகமாகியிருக்கும் உதய சூரியன் சின்னமும், வைப்பிலிருக்கும் பணமும் கொள்கைரீதியான பிரச்சனைகளுக்கு அப்பால் பட்டது என்பது வாக்கு வங்கி அரசியலில் இயல்பானதே.

மீண்டும் சுனாமி அபாயத்திற்கான சந்தேகங்கள் – முரளி வல்லிபுரநாதன்

கடந்த 2 தினங்களாக மட்டக்களப்பு மீனவர்களினால் அவதானிக்கப்படும் கரைவலையில் பெருமளவு கடல் பாம்புகள் / விலாங்கு மீன்கள் அகப்படும் அசாதாரண நிகழ்வானது மேலதிக கவனத்துக்கும் ஆய்வுக்கும் உட்படுத்தப்படவேண்டும். கடல் வளத்துறை அதிகாரிகளின் கருத்துப்போல் இந்த அசாதாரண நிகழ்வு கடலின் உப்புச் செறிவில் ஏற்படும் மாற்றம் மற்றும் நீரோட்டத் திசை மாற்றம் காரணமாக ஏற்படுமாயின் ஒவ்வொரு வருடமும் இந்த நிகழ்வு ஏற்பட்டிருக்கவேண்டும். ஆனால் உள்ளூர்  மீனவர்களின் கருத்துப்படி 2004 சுனாமி ஆழிப்பேரலை  தாக்குதலுக்கு சில தினங்களுக்கு முன்பாகவே இத்தகைய மாற்றத்தை முதல் தடவையாக அவதானித்திருப்பதாகவும் இப்போது இரண்டாவது தடவையாக அவதானிப்பதாக  தெரிவித்திருப்பதை முக்கியமான அபாய அறிகுறியாக கருத வேண்டியுள்ளது. கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்தில் இருந்தே வரலாற்றியலாளர்கள் பூமி அதிர்ச்சி மற்றும் சுனாமி தாக்கம் ஏற்படுவதற்கு முன்னராக பாம்புகளும் ஏனைய விலங்குகளும் அசாதாரண நடத்தையைக் காட்டுவதையும் அனர்த்தம் ஏற்படும் பகுதியில் இருந்து தப்பிச் செல்வதையும் பதிவு செய்திருக்கிறார்கள்

(1). குறிப்பாக பாம்புகளுக்கு அதிர்வுகளை உணரும் நுண்ணாற்றல் (1)

(2) மிகவும்  விருத்தி அடைந்து இருப்பது விஞ்ஞானிகளினால்  அவதானிக்கப்பட்டு இருக்கிறது. பாரிய பூமி அதிர்ச்சி அல்லது சுனாமி ஏற்படுவதற்கு பல தினங்களுக்கு முன்னரேயே பல சிறிய அதிர்வுகள் பூமித்தட்டில் ஏற்படுகின்றன. மேலும் 2014 இல் புவியியலாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள்  இலங்கை மற்றும் சூழ்ந்திருக்கும் இந்து சமுத்திர பகுதியும் கடந்த காலத்தை போலல்லாது அதிகரித்த பூமி அதிர்ச்சி மற்றும் சுனாமி தாக்கத்துக்கு உட்படக்கூடிய அபாயத்தில் இருப்பதைக் காட்டுகின்றன

(3). இதைவிட இந்திய வானிலை அறிக்கையின்படி அந்தமான் தீவுகளை அண்டிய பகுதியில் தாழமுக்கம் ஏற்பட்டு வருவதாகவும் அடுத்த சில தினங்களில் இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளை அண்டிய பிரதேசங்களில் கடும் மழை பொழியும் என்றும் எதிர்வு கூறப்பட்டுள்ளது

(4). எனவே அடுத்த சில தினங்களுக்கு வடக்கு கிழக்கில்  மீனவர்கள் மற்றும் சுனாமியினால் தாக்கப்படக் கூடிய கடல் கரையை அண்டிய பகுதிகளில் வசிப்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளவேண்டும். அடுத்த சில தினங்களுக்கு மீன் பிடிக்க செல்வதை தவிர்ப்பது பாதுகாப்பானது என்று கருத வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. 2016 ம் ஆண்டு வெளியிடப்பட்ட வறுமைக்கான புள்ளிவிபரங்களின் படி மட்டக்களப்பில் தமிழர்கள் ஏழ்மையில் உழல்வதாக காட்டும் நிலையில்

(5) வாழ்வாதாரம் இன்றி பாதிக்கப்பட்டுள்ள இந்த மீனவர்களுக்கு உதவுமாறு தமிழர் பிரநிதிகளை கேட்டுக் கொள்ளும் அதே வேளையில் அனைத்து துறைசார் நிபுணர்களையும் கிழக்கில் அனர்த்தம் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு பணிவாக கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி
Dr முரளி வல்லிபுரநாதன்
MBBS, PGD (Population Studies), MSc, MD (Community Medicine), FCCP (SL), FRSPH (UK)
சமுதாய மருத்துவ நிபுணர்

அரிசியிலிருந்து மதுபான உற்பத்திக்கு அரசு அனுமதி -ஒரு கிலோ அரிசி 200 ரூபாவிற்கு அதிகரிக்க வாய்ப்பு!

அரிசியிலிருந்து மதுபானம் உற்பத்தி செய்வதற்கு அரசாங்கம் அனுமதியளித்துள்ளமையால் தற்போது 100 ரூபாவிற்கு விற்கும் ஒரு கிலோ அரிசியின் விலை 200 ரூபாவிற்கு விற்கும் நிலை உருவாகும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் 9ஆம் நாள் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தின்போது அரிசி, சோளம் மற்றும் பழ வகைகளிலிருந்து மதுபானம் தயாரிப்பதற்கு மதுவரிச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்த ஆண்டின் ஆரம்பத்தில் சிறிலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அறிவுறுத்தலுக்கமைய மட்டக்களப்பு மாவட்டம் கல்குடாவில் சிறிலங்காவிலேயே அதிகளவு மதுபானம் உற்பத்தி செய்யக்கூடிய மிகப் பெரிய மதுபான உற்பத்தி நிலையம் ஒன்று மக்களின் எதிர்ப்பையும் மீறிக் கட்டப்பட்டுக்கொண்டிருக்கின்றது.

இதற்கு மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வந்த நிலையில், மட்டக்களப்பு மாவட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கவே இவ்வுற்பத்தி நிலையம் கட்டப்படுவதாக அரசியல்வாதிகளால் மக்களுக்குத் தெரிவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இத்தொழிற்சாலை இயங்க ஆரம்பித்ததும், தற்போது 100 ரூபாவிற்கு விற்கப்படும் ஒரு கிலோ அரிசி 200 ரூபாவாக உயரும் வாய்ப்புள்ளது. இதனால் நாட்டில் சோற்றுக்குப் பதிலாக மதுபானமே முன்னிலை வகிக்கவுள்ளது.

ஏற்கனவே, மாவட்டமொன்றில் இருக்கவேண்டிய மதுபான நிலையங்களின் எண்ணிக்கையை விட மட்டக்களப்பு மாவட்டத்தில் மதுபான நிலையங்களின் எண்ணிக்கை அதிகமென்பதுடன், மது அருந்துபவர்களின் எண்ணிக்கையும் மட்டக்களப்புமாவட்டத்திலேயே அதிகமென அரசாங்க புள்ளிவிபரம் தெரிவித்துள்ளது.

அத்துடன், மது அருந்துபவர்கள் அனைவரும், வறுமைக்கோட்டக்குட்பட்ட மக்கள் எனவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே, கல்குடாவில் பாரிய மதுபான உற்பத்தி நிலையம் கட்டப்பட்டுக்கொண்டிருக்கின்றது. இந்த மதுபான உற்பத்தி நிலையத்தைக் கட்டும் வர்த்தகரின் மனைவியும், மத்திய வங்கி பிணை முறி மோசடியில் ஈடுபட்ட அர்ஜூன் மகேந்திரனின் மனைவியும் சகோதரிகள் என்பதும்குறிப்பிடத்தக்கது.

எல்லாவற்றுக்கும் மேலாக, மதுவை ஒழிப்போம் எனும் வேலைத்திட்டம் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் முன்னெடுக்கப்பட்டுக்கொண்டிருப்பதும் வேடிக்கையான விடயம்.

ஒருபுறம் அரசாங்கத்திலிருக்கும் ஆட்சியாளர்கள் கொள்ளையடித்துக்கொண்டிருப்பதுடன், மறுபுறம் மக்களைச் சீரழித்து, போதை, மது வகைகளுக்கு அடிமையாக்கும் நடவடிக்கையை அரசாங்கமே மேற்கொண்டுவருகின்றமை கண்கூடு.

வட-கிழக்கில் வேலையில்லாப் பட்டதாரிகள் தொடர் போராட்டம், அரசாங்கத்திடம் வேலை தாருங்கள் எனக் கேட்கமுடியாதென சம்பந்தன் தெரிவிப்பு!

வட-கிழக்கிலுள்ள வேலையற்ற பட்டதாரிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், தாம், இப்பட்டதாரிகளுக்கு வேலை தருமாறு அரசாங்கத்திடம் கேட்கமுடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலையைக் கேட்டுப் பெற்றுக்கொண்டால் தன்னால் உரிமையைப் பெற்றுக்கொள்ளமுடியாதுபோகும் என அதற்கான காரணத்தையும் தெரிவித்திருந்தார்.

வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலை வாங்கிக்கொடுப்பது சம்பந்தரின் உரிமையில்லையா? நாட்டின் வறுமைக்கோட்டுக்குட்பட்ட மாகாணங்களாக வடக்குக் கிழக்கே உள்ளன. வடக்குக் கிழக்கில் தமிழ் பேசும் மக்களின் உரிமைக்காக குரல்கொடுக்கவேண்டிய சம்பந்தன் போன்றவர்கள் வேலையற்ற பட்டதாரிகளுக்கு அரசாங்கத்திடம் வேலை கேட்டால் உரிமையைக் கேட்கமுடியாது என தெரிவித்துள்ளமை வேடிக்கையானதே?

அரசாங்கத்தின் கைக்கூலிகளாகச் செயற்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு  அண்மையில், வரவுசெலவுத் திட்டத்திற்கு நிபந்தனையில்லாது ஆதரவளிப்பதற்கு அரசாங்கத்திடமிருந்து 2 கோடியினை இலஞ்சமாகப் பெற்றுக்கொண்டது.

அத்துடன், அவர்களுக்கு வேண்டிய வீடுகள், சொகுசு வாகனங்கள், அதைவிட பாதுகாப்புக்காக 30 விசேட அதிரடிப்படையினர் என பல்வேறு சலுகைகளைப் பெற்று உல்லாச வாழ்க்கை வாழும் சம்பந்தன் போன்றவர்களால் எப்படி கூலித்தொழில் செய்து அன்றாடம் தமது வாழ்க்கைக்காக போராடிக்கொண்டிருக்கும் மக்களைப் பற்றிச் சிந்திக்கமுடியும்?