கருணா திரும்பினால்? : இணைத்துக்கொள்வோம் -பிள்ளையான்

கருணா நாடு திரும்பினால் அவரைத் தமது இயக்கம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என தமிழீழ விடுதலைப்புலிகள் அறிவித்துள்ளனர். இந்த செய்தியை இலங்கையின் டெய்லி மிரர் தமிழீழ விடுதலைப்புலிகளின் படைத்துறை பேச்சாளர் ராசையா இளந்திரையனை கோடிட்டு வெளியிட்டுள்ளது.
கருணாவைப் பற்றிப் பேசுவது நேரத்தை வீணடிக்கும் விடயம் என ராசையா இளந்திரையன் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை வடக்கிலும் கிழக்கிலும் படையினர் கைப்பற்றிய இடங்களை விரைவில் மீண்டும் கைபற்றுவதற்கு உதவிப்படைகள் எவையும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு அவசியம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் இலங்கை வான்படையினர் ஓமந்தையில் உள்ள சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் சாவடிக்கு அருகில் குண்டுவீச்சு தாக்குதலை நடத்தியதன் காரணமாக, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினர் அங்கிருந்து வெளியேறியுள்ளமையால், ஓமந்தையூடாக பயணம் செய்யும் மக்கள் பாரிய சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இது இவ்வாறிருக்க, கருணா மீண்டும் இலங்கைக்கு வந்தால் தாம் அவரை ஏற்றுக்கொள்ளத்தயார் என பிள்ளையான் குழு அறிவித்துள்ளது.

அச்சுறுத்தல்? : அகதி அந்த்தஸ்து கோர!-காவற்துறைப் பேச்சாளர்

அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி வெளிநாடுகளில் குடியேறுவதற்கே அநேகர் முயற்சிப்பதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார். தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வியொன்று பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் காணப்பட்டால் அவற்றை காவற்துறையினருக்கு தெரியப்படுத்த வேண்டும் எனவும், அவ்வாறு செய்யாது ஊடக நிறுவனங்களுக்கு அறிவிப்பதில் எவ்வித பயனும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்

கேரள பாடப் புத்தகத்தில் கம்யூனிஸ்ட் சித்தாந்தம்

கேரள பாடப் புத்தகத்தில் கம்யூனிஸ்ட் சித்தாந்தம்
 கேரள மாநில கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள பள்ளி பாடப் புத்தகத்தில் கம்யூனிஸ்ட் சித்தாந்தம் இடம் பெற்றுள்ளதால், அதனை திரும்ப பெறக் கோரி பிரதான கட்சிகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளன.
இதையடுத்து, கேரள மாநிலம் முழுவதும் ஆங்காங்கே போராட்டம் வெடித்துள்ளது. கேரள மாநிலத்தில் 7-ம் வகுப்புக்கான சமூக அறிவியல் பாடத்தில் கம்யூனிஸ்ட் சித்தாந்தம் பற்றி உயர்வாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, சர்ச்சைக்குரிய பாடத்தை அந்தப் புத்தகத்திலிருந்து நீக்குவதுடன், புத்தகத்தையே திரும்ப பெற வேண்டும் என்றும் காங்கிரஸ் மாணவர் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. மேலும், இதனை திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.
பாஜக ஆதரவு: மற்றொரு முக்கிய கட்சியான பாஜகவும், இதே கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் குதித்துள்ளது.
இந்நிலையில், இது குறித்து பேசிய கல்வித் துறை அமைச்சர் பேபி, “அந்தப் புத்தகத்தை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை. ஆட்சேபத்துக்குரிய பகுதி இருப்பின், அது குறித்து வேண்டுமானால் அரசு பேச்சு நடத்தத் தயார்’ என தெரிவித்தார்.
அமைச்சரின் இந்தப் பேச்சை புறக்கணித்துள்ள எதிர்க்கட்சிகள், தங்களது போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளன. இதையடுத்து, ஆளும் இடதுசாரி கட்சியின் மாணவர் அமைப்பும் பதிலுக்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இதனால் மாநிலத்தின் பல பகுதிகளில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறை மோதலில் 100-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
இடதுசாரிகள் நடத்திய போராட்டத்தின் போது போலீஸ்காரர்கள் மற்றும் செய்தியை சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்கர்கள் தாக்கப்பட்டனர்.
இவ்விவகாரம் அம்மாநில சட்டப் பேரவையிலும் எதிரொலித்தது. அரசின் இந்த அணுகுமுறையைக் கண்டித்து, எதிர்க்கட்சிகள் அவையிலிருந்து வெளிநடப்புச் செய்தன.
எதிர்க்கட்சிகளின் போராட்டம் தீவிரமடைந்துள்ளதால், இவ்விவகாரத்தில் ஆளும் இடதுசாரி அரசு செய்வதறியாமல் திகைத்துப் போயுள்ளது.
முஸ்லிம் லீக் போராட்டம்: சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் உள்ள சர்ச்சைக்குரிய பகுதியை திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி அறிவித்துள்ளது.

இந்தியா ஆயுத விநியோகத்துடன் இலங்கை படைக்கு இராணுவப் பயிற்சி

இன நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கான அரசியல் முயற்சிகளை மீள ஆரம்பிக்குமாறு கொழும்புக்கு புதுடில்லி அழுத்தம் கொடுத்துவருவதாக தெரிவிக்கப்படுகின்ற அதேசமயம் இலங்கைப் படையினருக்கு இந்தியாவின் பல்வேறு நிறுவனங்களில் பயிற்சியளிப்பதற்கு அந்நாடு முன்வந்துள்ளது. 2008 2009 காலப் பகுதியில் மட்டும் சுமார் 500 படை அதிகாரிகள் இந்திய நிறுவனங்களில் பயிற்சி பெறவுள்ளனர். இவர்கள் பல்வேறு தரத்தினை சார்ந்தவர்களாகும். மிசோரம் மாநிலத்திலுள்ள கிளர்ச்சி எதிர்ப்பு, வனயுத்தம் தொடர்பான பாடசாலையிலும் மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள பீரங்கிப் படைக் கல்லூரி என்பவனவற்றிலும் இலங்கைப் படையினருக்கு பயிற்சியளிக்கப்படவுள்ளது. இதனைவிட ஏற்கனவே துவக்கு சுடுதல், கடல் நடவடிக்கைகள், தொடர்பாடல், நீர்மூழ்கி கப்பலில் சண்டையிடுதல் போன்றவற்றில் பயிற்சி வழங்கப்பட்டுவருவதாக தகவலறிந்த வட்டாரங்களை மேற்கோள்காட்டி “ரைம்ஸ் ஒவ் இந்தியா’ பத்திரிகை நேற்று செவ்வாய்க்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கைப் படையினருக்கு அதிகளவிலான ஆயுதங்கள், யுத்த தளபாடங்களை விநியோகிப்பதற்கான நடவடிக்கைகளை முடுக்கிவிட்டிருக்கும் தருணத்தில் பயிற்சியும் வழங்கப்படவுள்ளது.

இலங்கைக்குள் சீனா தந்திரோபாய ரீதியில் ஊடுருவுவதற்கு பதில் நடவடிக்கையாகவே புலனாய்வுத் தகவல் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்புடன் கடல் ரோந்து என்பனவற்றுடன் ஆயுத விநியோகம் மற்றும் பயிற்சி வழங்குதல் என்ற இரட்டை உபாயத்தையும் இந்தியா முன்னெடுக்கவுள்ளது.

பத்து நாட்களுக்கு முன்னர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், வெளிவிவகார செயலாளர் சிவ்சங்கர் மேனன், பாதுகாப்பு செயலாளர் விஜேசிங் ஆகியோரடங்கிய தூதுக்குழுவினர் ஆயுதங்களுக்காக சீனா மற்றும் பாகிஸ்தான் பக்கம் இலங்கை அதிகளவுக்கு நாடிச் செல்வது குறித்து விசனத்தை வெளியிட்டிருந்தனர்.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உத்தேச பாதுகாப்பு உடன்படிக்கையானது நீண்டகாலமாக கிடப்பில் உள்ளது. தமிழ் நாட்டு மக்களின் உணர்வுகளை இந்த உடன்படிக்கை தட்டி எழுப்பிவிடுமென்று அஞ்சியே புதுடில்லி இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திடவில்லை. ஆனால், கொழும்புக்கு ஆயுதங்கள் வழங்குவதில்லை என்ற நிலைப்பாட்டை புதுடில்லி இப்போது மாற்றிக்கொண்டுள்ளது.

உண்மையிலேயே 2002 இல் சுகன்யா ரோந்துக் கப்பலுடன் ஆயுத விநியோகம் ஆரம்பமாகிவிட்டது. இப்போது அண்மைக் காலமாக ஆயுத விநியோகம் விரைவுபடுத்தப்பட்டிருப்பதுடன் தற்போது பயிற்சியும் அளிக்கப்படவுள்ளது.

மாலைதீவு, மொரீசியஸ், மெங்கோலியா, வாட்ஸ்வானா, தஜிஜிஸ்தான் போன்ற நாடுகளைச் சேர்ந்த படையினருக்கு இந்தியா பயிற்சியை வழங்கிவருகின்ற போதும் இலங்கைக்கு அளிக்கப்பட்டுவரும் வசதிகள் ஏனையோரிலும் பார்க்க அதிக அளவினாதாகும்.

உதாரணமாக தெஹ்ராடூனிலுள்ள இந்திய இராணுவக் கல்லூரியில் 2008 2009 இல் இரு விசேட பாடநெறிகள் நடத்தப்பட்டு வருகிறது. இலங்கையிலிருந்து 100 இற்கும் அதிகமான படையினருக்கு இங்கு பாடநெறிகள் நடத்தப்படுகின்றன.

இதற்கு மேலதிகமாக 39 இலங்கைப் படை அதிகாரிகளுக்கு பூனே இராணுவ பொறியியல் கல்லூரியில் பாடநெறிகள் போதிக்கப்படவுள்ளன. தேங்காலியிலுள்ள பீரங்கிப் படைப் பாடசாலையில் 15 பேருக்கும் அஹமத் நகரிலுள்ள காலாப்படை நிலையத்தில் 29 பேருக்கும் ஜபால்பூரிலுள்ள உபகரணங்கள் முகாமைத்துவக் கல்லூரியில் 25 பேருக்கும் வடோராவிலுள்ள இலத்திரனியல், பொறியியல் பாடசாலையில் 30 பேருக்கும் கௌவிலுள்ள இராணுவ தொலைத்தொடர்பு பொறியியல் கல்லூரியில் 14 பேருக்கும் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.

நன்றி : தினக்குரல்

 

 

வடபோர் முனைக்கான கனரக ஆயுதங்கள் : கொழும்பு வந்து சேர்ந்தது

புதன்கிழமை, 02 யூலை 2008, 09:34 பி.ப ஈழம்] [ப.சண்முகம்பிள்ளை]
வடபோர் முனையில் பயன்படுத்துவதற்கான பெருந்தொகையான ஆயுத தளபாடங்கள் அடங்கிய தொகுதி ஒன்று செக் குடியரசிடமிருந்து கடந்த வாரம் கொழும்பு வந்து சேர்ந்திருப்பதாக சிறிலங்கா இராணுவ வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது.
செக் தயாரிப்பான 40 குழல்கள் கொண்ட ஆர்.எம். 70 பல்குழல் பீரங்கிகளுக்கான 122 மில்லி மீற்றர் ஏவுகணைகள், பி.எம்.பி.-3 தொடர் இலக்க துருப்புக்காவிகளுக்கான உதிரிப்பாகங்கள் உட்பட பெருந்தொகையான ஆயுத தளபாடங்கள் கடந்த சனிக்கிழமை கொழும்பு வந்து சேர்ந்திருப்பதாக மேற்படித்தகவல் மேலும் தெரிவித்தது.

கடந்த வருடம் நவம்பர் மாதம் செக் நாட்டுக்குச் சென்ற சிறிலங்கா இராணுவ உயரதிகாரிகள் அடங்கிய குழு, இந்த ஆயுத தளபாடக்கொள்வனவை இறுதி செய்து செய்து விட்டு வந்தமை தெரிந்ததே.

இதேவேளை, ஸ்லோவோக்கியா நாட்டிடமிருந்து ஆர்.எம். 70 பல்குழல் பீரங்கிகளுக்கான ஏவுகணைகளை கொள்வனவு செய்வது தொடர்பான முயற்சிகளில் ஈடுபட்டிருந்த சிறிலங்கா இராணுவம் கடந்த மாதம் அவற்றினைப் பெற்றுக்கொண்டதாக தெரியவருகின்றது.

சிங்கப்பூரில் கைது:இலங்கைப் பெண்ணிடம் குடிவரவு முத்திரைகள்

இலங்கையைச் சேர்ந்த 29வயது பெண்ணொருவரிடம் இருந்து குடிவரவு ரப்பர் முத்திரைகள் நேற்று கைப்பற்றப்பட்டதுடன் அவர் கைதுசெய்யப்பட்டதாகவும் சிங்கபூர் விமான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உடைகளை வைத்திருந்த பொதி ஒன்றில் இரண்டு காற்சட்டைகளில் இவை மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் அந்த அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். சிங்கபூரில் குடியிருப்பதை உறுதிசெய்ய கூடிய குவரவு முத்திரைகள் இதில் காணப்பட்டதாக சிங்கபூர் குடிவரவு அதிகாரிகள் கூறியுள்ளனர். சிங்கபூரில் விசா அனுமதி முடிந்த நிலையில் தங்கியிருப்போருக்கு அபராதம், அல்லது 6 மாத சிறைத்தண்டனை, அல்லது மூன்று மாத சிறைத்தண்டனையுடன் மூன்று பிரம்படிகள் தண்டனைகளாக வழங்கப்பட்டு வருகின்றன.

விசேட திட்டம் :தலைவர்களுக்குப் பாதுகாப்பு -பொலிஸ் மா அதிபர்

புதன்கிழமை, 02 யூலை 2008, 12:26.53 PM GMT +05:30 ]
சார்க் மாநாட்டில் கலந்து கொள்ளும் வெளிநாட்டு பிரதிநிதிகளின் பாதுகாப்புக்கென விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகப் புதிய பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். பதவியைப் பொறுப்பேற்றுக் கொண்டு உரையாற்றிய சந்தர்ப்பத்தில் அவர் இந்தத் தகவல்களை வெளியிட்டார்.
இலங்கைப் பொலிஸ் திணைக்களத்தின் 31 ஆவது பொலிஸ் மா அதிபர் நேற்றைய தினம் உத்தியோகபூர்வமாகக் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

திட்டமிடப்பட்ட குற்றச் செயல்கள் நாட்டில் தலைதூக்கியுள்ளதாகவும், அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொலிஸ் சேவையைக் கௌரவமான சேவையாக மாற்றுவதற்கு சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என புதிய பொலிஸ் மா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் தொடரும் தமிழர்களின் கைதுகள்: ராதாகிருஸ்ணனிடம் முறையிடப்பட்டுள்ளது.

கொழும்பின் புறநகரான ஹொரனையி;ல் வைத்து ஒரு வயது குழந்தை உட்பட்ட ஐந்து பேரடங்கிய தமிழ் குடும்பம் ஒன்றை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர் இவர்கள் கல்முனையில் இருந்து திருமணம் ஒன்றுக்காக ஹொரணைக்கு வந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பிரதி அமைச்சர் பி ராதாகிருஸ்ணனிடம் முறையிடப்பட்டுள்ளது. பேர்த் தோட்டத்தை சேர்ந்த ராஜரட்ணம், கிரிஸ்தோப்பர் பிரிநித் பிரசாலினி, சொலமன் மற்றும் ஒரு வயதான தெசேரா ஆகியோரே கைதுசெய்யப்பட்டுள்ளவர்கள். இதேவேளை எழுதுவினைஞர் சேவைக்கான பரீட்சைக்காக கொழும்புக்கு நேற்று இரவு வந்த மட்டக்களப்பு மற்றும் அம்பாறையை சேர்ந்த 15 இளைஞர்கள் கறுவாக்காட்டு காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு இன்று மாலை விடுவிக்கப்பட்டுள்ளனர்