நெற்றியில் விபூதியுடன், இஸ்லாம் சமய பரீட்சை எழுதிய மாணவன்: திருகோணமலையில் சம்பவம்!

தற்போது நாட்டில் க.பொ.த.சாதாரணதரப் பரீட்சை நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இந்நிலையில், சமயபாடப் பரீட்சையில், இந்து மதத்தைச் சேர்ந்த மாணவன் ஒருவன் இஸ்லாம் மதப் பரீட்சை எழுதியமை தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பாகத் தெரியவருவதாவது, திருகோணமலை மாவட்டத்திலுள்ள பின்தங்கிய தமிழ் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் முஸ்லிம் பாடசாலைகளிலேயே கல்வி கற்று வருகின்றனர். இப்பாடசாலைகளில் சைவ சமயம் கற்பிக்கப்படுவதில்லை.

அதற்குப் பதிலாக இஸ்லாம் சமய பாடமே கற்பிக்கப்படுகின்றது. அத்துடன், சைவ சமயம் கற்பிப்பதற்கான ஆசிரியர்களும் நியமிக்கப்படுவதில்லை.

இந்நிலையில், குறித்த பாடசாலைகளில் கல்வி கற்கும் இந்து சமய மாணவர்கள் அடக்குமுறைக்குள்ளிருந்தே கல்வி கற்று வருகின்றனர்.

 

அனந்திக்கு மரியாதை செலுத்தாததால் பணிநீக்கம் செய்யப்பட்ட காவலாளி!

வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரனுக்கு மரியாதை வழங்காத வயதான காவலாளி ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள அவமானகரமான சம்பவமொன்று யாழ். மேலதிக செயலாளரினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த வாரம் 2018ஆம் ஆண்டுக்கான வடமாகாண சபையின் வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிலையில், மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் யாழ். மேலதிக செயலாளரின் அலுவலகத்துக்கு பயணம் மேற்கொண்டிருந்தார்.

இந்நிலையில், அங்கிருந்த காவலாளி அனந்தியைக் கவனிக்காததுபோல் கதிரையில் அமர்ந்திருந்தார்.

இதனை அவதானித்த அனந்தி, காவலாளியைப் பார்த்து , ‘ஐயா என்னை உங்களுக்குத் தெரிகிறதா என வினவியுள்ளார்’. அதற்கு அந்தக் காவலாளி ‘இல்லைப்பிள்ளை, எனக்குத் தெரியாது. நீ யாரம்மா? என வினவியுள்ளார்.

அதற்கு அனந்தி இவ்வாறான இடங்களில் வேலைசெய்யும் நீங்கள் பத்திரிகைகள் வாசித்து உங்களதுபொது அறிவினை வளர்த்துக்கொள்ளவேண்டுமெனத் தெரிவித்துவிட்டு அலுவலகத்திற்குள்ளே சென்றுவிட்டார்.

குறித்த காவலாளி தொடர்பாக அனந்தி பிரதம செயலாளரிடம் முறையிட்டதையடுத்து குறித்த காவலாளி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக அனந்தி கருத்துத் தெரிவிக்கையில், குறித்த காவலாளி மரியாதையில்லாமல் என்னுடன் நீயெனக் கதைத்தார் . ஆகையால் நான் குறித்த பிரச்சனை தொடர்பாக பிரதம செயலாளரின் கவனத்திற்குக் கொண்டுசென்றேன் எனத் தெரிவித்துள்ளார்.

ஒருவருக்கு இன்னொருவர் மரியாதை செலுத்துவது ஒவ்வொருவரினதும் தனிப்பட்ட உரிமை. அனந்தி அமைச்சர் என்ற காரணத்திற்காக காவலாளி எழுந்துநின்று மரியாதை செலுத்தவேண்டுமென்ற தேவையெதுவுமில்லை. அனந்திக்காக காவலாளியை வேலையை விட்டு நீக்கியது பிரதம செயலாளரின் தவறே.

முல்லைத்தீவில் மர்மக் காய்ச்சலால் 20 நாட்களுக்குள் 9பேர் பலி!

முல்லைத்தீவு மாவட்டம், முல்லைத்தீவு நகரத்தில் வேகமாகப் பரவிவரும் ஒருவித காய்ச்சலால் கடந்த 20 நாட்களுக்குள் 9பேர் பலியாகியுள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

மேலும், இது தொடர்பில் கொழும்பு சுகாதாரப் பிரிவுக்கு அறிவிக்கப்பட்டு, காய்ச்சலுக்கான காரணத்தை ஆராய்வதற்காக கொழும்பிலிருந்து மருத்துவக் குழுவொன்று முல்லைத்தீவில் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருவதுடன் தடுப்பு நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றது.

இந்நிலையில், இக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட மேலும் இருவர் முல்லைத்தீவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக வடமாகாண சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் கேதீஸ்வரன் கருத்துத் தெரிவிக்கையில், இக்காய்ச்சல் தொடர்பாக மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டு நாம், அதற்கான காரணத்தை ஆராய்ந்துவரும் நிலையில், கொழும்பு சுகாதாரத் திணைக்களத்திற்கும் அறிவித்திருந்தோம்.

எமது மருத்துவக் குழுக்கள் இணைந்து இக்காய்ச்சலுக்கான வைரஸை இனங்காணும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன எனவும் தெரிவித்தார்.

இந்தியாவின் வளர்ப்பு மகன் வரதராஜப்பெருமாள் தனித்துப் போட்டி!

இந்தியாவின் வளர்ப்பு மகன் வரதராஜப் பெருமாளை தமிழரசுக் கட்சிக்குள் இணைத்து எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட இணக்கம் காணப்பட்ட து.

இந்நிலையில், வரதராஜப்பெருமாளும் அவரது கட்சிக்காரர்களும் தமிழர் சமூக ஜனநாயக கட்சி என்ற பெயரில் தனித்துப் போட்டியிடுவதற்காக சாவகச்சேரி நகர சபையில் வேட்பு மனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாகத் தெரியவருவதாவது,

தமிழர் சமூக ஜனநாயக கட்சியை தமிழரசுக் கட்சியுடன் இணைப்பதற்கு மாவை சேனாதிராஜா வரதராஜப்பெருமாளுடன் பேச்சு நடத்தியிருந்தார்.

பேச்சில் இணக்கம் காணப்பட்டநிலையில், தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் பட்டியலினை தமிழரசுக் கட்சியிடம் ஒப்படைக்குமாறு மாவை சேனாதிராஜா வரதராஜப்பெருமாளிடம் தெரிவித்திருந்தார். இதனையடுத்து தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியிடமிருந்து 50பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.

இதன்பின்னர், தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் தலைவர் வரதராஜப்பெருமாள் மாவை சேனாதிராஜாவை பலமுறை தொடர்புகொண்டபோதிலும் மாவை சேனாதிராஜா பதிலளிக்கவில்லை.

இந்நிலையில், கடந்த 12ஆம் நாள் தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி தனித்துப் போட்டியிடப்போவதாக அறிவித்ததுடன், அதற்கான கட்டுப்பணத்தையும் கட்டியுள்ளனர்.

சங்கானைக்காக மாவை சேனாதிராஜாவை மிரட்டும் சரவணபவன்!

உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழரசுக் கட்சிக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளுக்குள்ளும் வேட்பாளர் நியமனத்தில் சர்ச்சைகளும், அடிதடிகளும் நடைபெற்றுவரும் நிலையில், வட்டுக்கோட்டைத் தொகுதிக்குள் சங்கானை பிரதேசம் வருவதால் அதனை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்காக சரவணபவன் மாவை சேனாதிராஜாவுக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.

வட்டுக்கோட்டைத் தேர்தல் தொகுதியானது முதல் இரண்டு வருடங்களும் புளொட்டுக்கும், அடுத்த இரண்டு வருடங்களும் தமிழரசுக் கட்சிக்குமென தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், வட்டுக்கோட்டைத் தொகுதியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் புளொட் அமைப்பிற்கு விட்டுக்கொடுக்கத் தயாரில்லை.

அதன்காரணமாக, வட்டுக்கோட்டைத் தொகுதியைத் தனக்குத் தராவிட்டால், சரவணபவனின் நாளிதழான உதயன் நாளிதழ் தமிழரசுக் கட்சிக்கு எதிராகச் செய்திகளை வெளியிடும் என மிரட்டியுள்ளார்.

இதனையடுத்து, மாவைசேனாதிராஜா, புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தனுடன் பேச்சு நடத்தியுள்ளார். இருப்பினும் இதற்கு சித்தார்த்தன் இணங்கியதாகத் தெரியவில்லை.

இந்நிலையில், யாழ். மாநகர முதல்வராக சி.வி.கே. சிவஞானத்தை போட்டியிடுமாறு மாவை சேனாதிராஜா அழுத்தம் கொடுத்ததற்கு சி.வி.கே.சிவஞானம் மறுப்புத் தெரிவித்துள்ளார். இருப்பினும் ஆர்னோல்டை மாநகர முதல்வராக நியமிக்க சுமந்திரன் வற்புறுத்தி வருகின்றார்.

இந்நிலையில், ஜெயசேகரம் தன்னை யாழ். மாநகர முதல்வராக நியமிக்குமாறு தொடர்ச்சியாக வற்புறுத்தி வரும் நிலையில், ஆர்னோல்ட்டை நியமிக்கவே சம்பந்தன், சுமந்திரன் தரப்பு விரும்புவதாகத் தெரியவந்துள்ளது.

 

மலையகப் பாடசாலைகளுக்கு இந்திய ஆசிரியர்களை நியமிப்பதற்கு வேலையில்லா படடதாரிகள் எதிர்ப்பு!

மலையகப் பாடசாலைகளில், விஞ்ஞானம், கணித பாடங்களைக் கற்பிப்பதற்கு ஆசிரியர் பற்றாக்குறை நிலவி வருகின்றது.

இந்நிலையில், இந்தியாவிலிருந்து ஆசிரியர்களை வரவழைப்பதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதனையடுத்து பந்தரமுல்லையில் அமைந்துள்ள கல்வியமைச்சின் அலுவலகத்துக்கு முன்னால் வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினர்  கடந்த 12ஆம் நாள் போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.

மலையகப் பாடசாலைகளில் விஞ்ஞானம், கணிதம் ஆகிய பாடங்களைக் கற்பிப்பதற்கு வடக்குக் கிழக்கில் வேலையற்ற பட்டதாரிகளிலிருந்து தகுதியானவர்களை நியமிப்பதாக கல்வி இராஜாங்க அமைச்சர் பொ.இராதா கிருஷ்ணன் தெரிவித்திருந்தார்.

கல்வி இராஜாங்க அமைச்சர் மேடைகளில் கூறி வந்தாரே தவிர அதற்கான எந்தவித நடவடிக்கையையும் அவர் முன்னெடுக்கவில்லை.

நாடு தழுவிய ரீதியில் 50ஆயிரம் வேலையற்ற பட்டதாரிகள் உள்ளனர். யுத்தத்தினால் பாதிப்படைந்த வடக்குக் கிழக்கில் 8ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேலையற்ற பட்டதாரிகள் உள்ளனர். இவர்கள் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்துவருவதுடன், பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையிலேயே, மலையகப் பாடசாலைகளில் கல்வி கற்பிப்பதற்கு இந்தியாவிலிருந்து ஆசிரியர்களை வரவழைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.

நாட்டில் 53ஆயிரம் வேலையற்ற பட்டதாரிகள் வேலை தேடி இன்னல்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் அரசாங்கம் இந்தியாவிலிருந்து ஆசிரியர்களை வரவழைப்பதன் பின்னணி என்ன? என்ற கேள்வியே மக்கள் மத்தியில் தொக்கி நிற்கின்றது.

பியர் விலைக்குறைப்பால், கள்ளு விற்பனையில் வீழ்ச்சி!

பியர் விலைக் குறைப்பினால் நாட்டில் கள்ளுவிற்பனை வீழ்ச்சியடைந்துள்ளதாக வடமாகாண பனை அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன் 50 வீதமான கள்ளுப்போத்தல்கள் விற்பனையின்றி தேங்கிக் கிடப்பதாகவும் அக்கூட்டுறவுச் சங்கம் அறிவித்துள்ளது.

இது தொர்பாக பனை அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்களின் வலிகாமப் பிரதேசத்தின் தலைவர் செல்வராசா தெரிவிக்கையில்,

பியரின் விலையை அரசாங்கம் குறைத்துள்ளதால் உள்ளூர் உற்பத்திக் கள்ளின் நுகர்வு குறைவடைந்துள்ளதுடன், தென்பகுதிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த கள்ளின் அளவும் குறைவடைந்துள்ளது எனத் தெரிவித்தார்.

இதனால் கள்ளு இறக்கி தமது வாழ்வாதாரத்தை முன்னெடுத்துச் செல்லும் பல குடும்பங்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், மைத்திரிபால சிறிசேன ‘போதையற்ற நாட்டினை ‘ உருவாக்குவோம் எனக் கூறிக்கொண்டு நாடுபூராகவும் பல நிகழ்வுகளை நடத்தி வருகின்றார்.

ஆனால் மறுபுறம் வரவு-செலவுத் திட்டத்தில் பியரின் விலைiயைக் குறைக்கின்றது அரசாங்கம்.

ஒருபுறம் மக்களுக்கு போதையற்ற நாட்டை உருவாக்குவதற்கு தாம் போராடுவதாகக் காட்டிக்கொண்டு மறுபுறம் பியரின் விலையைக் குறைத்து மக்களை போதைக்கு அடிமையாக்கும் நடவடிக்கையில் அரசாங்கம் இறங்கியுள்ளது.

நாட்டைக் கடனில் தள்ளிய அரசாங்கம், ஒருபுறம் மக்களின் பணத்தினைக் கொள்ளையடித்து, மக்களை போதைக்கு அடிமையாக்குவதுடன், ஆட்சியிலுள்ளவர்கள் தமது அதிகாரங்களைப் பயன்படுத்தி சொத்துக்களைக் கொள்ளையடிப்பதுடன், கொள்ளை இலாபம் ஈட்டுவதற்காக நாடுதழுவிய ரீதியில் பல மதுபான உற்பத்தி நிலையங்களைத் திறந்து வருகின்றனர் என்பது வெளிப்படை.

அத்துடன், உள்ளூரில் உற்பத்தி செய்யப்பட்டு வரும் கள்ளுக்கு வரி விதிக்கும் அரசாங்கம், இயற்கையான கள்ளுக்கு தடைவிதித்து அத்தொழிலில் ஈடுபட்டு வரும் மக்களை மேலும் வறுமைக்கோட்டுக்குப்படுத்தும் நடவடிக்கையிலும் இறங்கியுள்ளது.

வித்தியாதரனை யாழ். மாநகர முதல்வராக்கினால் உதயன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராகச் செய்தி வெளியிடும் – சரவணபவன்!

வித்தியாதரனை யாழ். மாநகரசபையின் முதல்வராக்கினால் யாழிலிருந்து வெளிவரும் உதயன் நாளிதழ் தமிழ்த் தேசியக்கூட்டமைப்புக்கு எதிராகச் செய்தி வெளியிடும் என அப்பத்திரிகையின் ஸ்தாபகரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான சரவணபவன் இரா.சம்பந்தனுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உள்ளூராட்சித் தேர்தலின் ஆசனப் பங்கீட்டுப் பிரச்சனை ஓரளவு தீர்த்தபின்னர், தற்போது, யாழ். மாநகர முதல்வர், தெரிவில் வித்தியாதரனுக்கு எதிராக அவரது மைத்துனரான சரவணபவன் எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைவதற்கு வித்தியாதரன் எடுத்த முயற்சி தோல்வியில் முடிவடைந்தது.

இதனால், அவர் முன்னாள் போராளிகள் என சிலரை இணைத்து ஜனநாயகப் போராளிகள் கட்சியை உருவாக்கி அதில் போட்டியிட்டு படுதோல்வியைச் சந்தித்திருந்தார்.

இந்நிலையில், வித்தியாதரனை யாழ். மாநகர முதல்வராக நியமிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும்சுமந்திரன் ஆகியோர் விருப்பம் தெரிவித்த நிலையிலேயே சரவணபவன் இதற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.

இதனால் வித்தியாதரனின் யாழ். மாநகர முதல்வராகும் கனவும் பொய்த்துப்போய்விட்டது.