தீபன் படத்தின் அரசியலைப் புரிந்துகொள்ளல் பற்றி….. : வாசுதேவன்

dheepanmovie
தீபன் திரைப்படத்திற்காக புலம்பெயர் சூழலிலிருந்து உள்வாங்கப்பட்ட சோபாசக்தி(இடது)

2014 ம் ஆண்டு ஒக்ரோபர் மாதமளவில் ஜக் ஓடியார் “எரான்”; எனும் புதிய திரைப்படத்தை நெறியாள்கை செய்ய உள்ளார் என்ற பத்திரிகைச் செய்தி ஓடியாரின் ரசிகர்களுக்கு மகிழ்வளித்திருந்தது. 2015ம் ஆண்டின் கான் திரைப்பட விழாவை முன்நிறுத்தி இப்படப்பிடிப்பு நிகழ உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.

18ம் நூற்றாண்டின் பிரபல பிரஞ்சு அரசியல் தத்துவமேதையான மோந்தெஸ்கியோவின் “பாரசீகக் கடிதங்கள்” எனும் நூலின் பாணியிலான அரசியல் கருத்தோவியமாக திரைப்படம் அமையும் எனவும் ஓடியார் தெரிவித்திருந்தார்.

இத்திரைப்படத்தின் நோக்கத்தை முழுதாகப் புரிந்து கொள்ள “பாரசீகக் கடிதங்கள்” பற்றிய முன்னறிவு இன்றியமையாததாகும்.

நேரடியாகவும், வெளிப்படையாகவும் தன் அரசியற் கருத்தை முன்வைக்க முடியாத ஒரு முடியாட்சிச் சூழலில், புனைபெயரில் மோந்தெஸ்கியோ இந்நூலை எழுதியிருந்தார்.

அதாவது, பாரசீகத்தில் இருந்து இரண்டு குடிமக்கள் ஐரோப்பா விற்கும், குறிப்பாக பிரான்சுக்கும் வருகை தந்து அவர்கள் தமது நண்பர்களுக்கு எழுதும் கடிதங்களாக அந்நூல் அமைந்திருந்தது.

உண்மையைச் சொல்லுவதானால், தனது தாய் நாட்டின்பால் கொண்ட அக்கறையால், அதன் அரசியல், சமூக, மதச் சூழ்நிலைகளின் மீதான தனது காட்டசாட்டமான விமர்சனத்தை அவர் இரண்டு பாரசீக இஸ்லாமியர்களின் பார்வையாக முன்வைத்தார். திட்டமிட்ட வகையிலும், பிரஞ்சு மக்களுக்கு அரசியற் பிரக்ஞையை ஊட்டும் வகையிலுமாக இந்நூல் பிரஞ்சு தேசத்தை அந்தியர்களின் பார்வையில் இழிவுபடுத்தியிருந்து.

இந்தப்பாணியில்தான், ஒடியாரும் தனது “எரான்” (பின்னாளில் “தீபன்” ஆக்கப்பட்ட) திரைக்காவியத்தை இயக்குவதாக முன்கூட்டியே அறிவித்தார். இவ்வியம் பலருக்குத் தெரியாமலிருந்தது ஒன்றும் ஆச்சரியப்படக்கூடியதல்ல.

பாசிசக் கட்சியான தேசிய முன்னணியின் தலைவர் மரீன் லூ பென்
பாசிசக் கட்சியான தேசிய முன்னணியின் தலைவர் மரீன் லூ பென்

அடுத்து, கடந்த சில வருடங்களாக பிரான்சின் அரசியல்வாதிகள் போட்டிபோட்டுக்கொண்டு அரபோ-இஸ்லாமிய எதிர்ப்புவாதத்தை முன்னிலைப்படுத்தி, அதற்குப் பசளையிட்டு வளர்த்தெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். பொருளாதார நெருக்கடிச் சூழ்நிலையானது பாசிசக் கட்சியான தேசிய முன்ணணியை முதன்மைக்கட்சிகளுள் ஒன்றாக மாற்றிவிட்டது. அடுத்து வரும் ஆண்டுகளில் இக்கட்சி ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றும் எனும் அச்சம் ஜனநாகயவாதிகள் மத்தியில் தோன்றாமலுமில்லை.

பொருளாதாரப் பிரச்சனைகளின் உண்மைவேரை மறைக்கும் பெருநிதியங்களின் சதிவலைப் பின்னல்களின் பகுதியாக முதன்மையூடகங்களும் மாறிவிட்டன. தினமும் இவ்வூடகங்கள் சிறிது சிறிதாக இஸ்லாமிய எதிர்ப்பு வாதத்தை நஞ்சாக மக்கள் மத்தியில் ஊட்டிக்கொண்டிருக்கின்றன. அவ்வப்போ நடைபெறும் பயங்கர வாதச் சம்பவங்களும் இவ்வாறான ஊடகங்களுக்குத் தீனி போட்டுக்கொண்டிருக்கின்றன.

முன்னொரு காலத்தில், பாசிசக் கட்சியான தேசிய முன்னணிக்கு ஆதரவு தெரிவிப்பதை வெட்கத்துக்குரிய விடயமாகக் கருதிய பிரஞ்சுக்காரர்கள் தற்போதெல்லாம் அதையொரு தேசிய விடுதலைக்கான கட்சியாகப் போற்றிப் புகழ்கிறார்கள். இதில், பல புத்திஜீவிகளும் அடங்குகிறார்கள் என்பது தான் அச்சத்திற்குரிய விடயம்.

உவெல்பெக்
உவெல்பெக்

பிரான்சில், ஐரோப்பாவில் என்றும் கூடச்சொல்லலாம், இஸ்லாமியர்களில் வெறுப்பை உமிழும், இஸ்லாமை இழிவுபடுத்தும் படைப்புகளுக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் அளித்து அவற்றை முன்தள்ளிவிடுகின்றன என்பது ஒரு இரகசியமான விடயம் அல்ல. உவெல்பெக் எனப்படும் சர்ச்சைக்குரிய பிரஞ்சு எழுத்தாளர் இஸ்லாம் பிரான்ஸை ஆக்கிரமிக்கபோகிறது எனும் பாணியிலான ஒரு நாவலை எழுதினார். அது மில்லியன் கணக்கில் மேற்குலகெங்கும் விற்கப்பட்டது. எரிக் ஸெமூர், அலன் பங்கியல்குரொத் போன்ற மற்றும் பல யூதஇனப் புத்திஜீவிகள் அடிக்கடி சர்ச்சைக்குரிய இஸ்லாமிய எதிர்ப்புக் கோசங்களை அள்ளி கொட்டிக்கொண்டேயிருக்கிறார்கள்.

தொலைக்காட்சியில் அவர்கள் இல்லாத நிகழ்ச்சிகளே இல்லையெனும்அளவிற்கு அவர்களின் பிரசன்னம் அச்சமூட்டுவதாக உள்ளது.

இஸ்லாமிய எதிரப்பு வாதமென்பது தற்போது பிரான்சில் பெரும் முக்கியத்ததுவத்தைப் பெற்றுவிட்டதுடன், பொதுவாக வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை சகிக்கமுடியாத அளவிற்கு அதிகரித்துவிட்டது எனும் கருத்து மிகப்பெரும்பாலான பிரஞ்சு மக்களின் மனதில் விசாலித்து விட்டிருக்கும் இந்நிலையின்தான் “தீபன்” திரைப்படம் உருவாக்கப்பட்டது என்பதை மனதிருத்தியே இந்தப்பிரஞ்சுப் படத்தை அணுகுதல் வேண்டும்.

மேலும், பிரான்சில் அண்ணளவாக பத்து வீதமானவர்கள் இஸ்லாமிய மார்க்கத்தைப் பின்பற்றுபவர்கள். அவர்களில் மிகப்பெரும்பான்மையினர் சாத்வீகமாக வாழ்பவர்கள். அனதை;து ஐரோப்பியப் பெருநகரங்களிலும் போன்று பிரான்சின் பெருநகரங்களின் புறநகர்ப்பகுதிகளும் உழைக்கும் வர்க்கத்திற்காக ஒதுக்கப்பட்ட நவீன சேரிகளாகக் காணப்படுகின்றன. இங்கு வாழ்பவர்களின் மிகப்பெரும்பான்மையினர் வெளிநாட்டுக் குடிமக்கள். இப்புறநகர்கள் திட்டமிட்டமுறையில் அபிவிருத்தி செய்யப்படாத இடங்களாகவே காணப்படுகின்றன.

சாதாரண ஒரு பாடசாலையில் உள்ள வசதிகள் இப்பகுதிகளில் கல்விகற்கும் மாணவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. இப்பகுதிக்கட்டடங்கள் கூட பிரஞ்சுக்காரர்களால் முயற்கூடுகள் என்று அழைக்கப்படுகின்றன.

எல்லாவற்றையும் மீறி கல்வி கற்று உயர்பட்டங்களைப் பெற்றபோதும் அரபோ-இஸ்லாமியர்களுக்கு அவரவர் தகுதிக்கேற்ற வேலை எடுப்பது என்பது மிகமிகக் கடினமானது.

அண்ணனுக்கு நடக்கும் சிறுமைப்படுத்தல்களைப் பார்த்து தம்பி படிப்பில் அக்கறை கொள்வது சாத்தியமற்ற விடயமாகியது. இன்னும் இன்னும் பல்வேறு காரணங்களால், புறநகரங்கள் வன்முறையின் உறைவிடங்களாகவும், போதை வஸ்து வியாபார மையங்களாகவும் உருப்பெற்றன. இவ்விடயத்தை பொதுமைப்படுத்தி எல்லாப் புறநகரங்களும் இவ்வாறுதான்உள்ளன என்றும் கூறிவிடமுடியாது. ஐரேப்பா முழுவதிலுமே இவ்வாறான புறநகரங்கள் உள்ளன. (சுவிசைத் தவிர்க்கலாம்என நினைக்கிறேன்).

அடுத்து,ஒன்றரை நூற்றாண்டுக்களுக்கும் அதிகமான காலத்தைய காலணித்துவ ஒடுக்குமுறையுறவு வட ஆபிரிக்க அரபுலகிற்கும் பிரான்சுக்குமிடையில் உள்ளது. அல்ஜீரிய யுத்தத்தின் தளும்புகள் இன்னமும் ஆறாதிருக்கிறது. முதலாம், இரண்டாம் உலக யுத்தங்களின் போது ஏராளமான கறுப்பின மற்றும் அரபுப் போராளிகள் பிரான்சுக்காக, பிரஞ்சு மக்களின் விடுதலைக்காகப் போராடி மாண்டார்கள். அதற்குரிய உரிமையும் அந்தஸ்த்தும் தங்களுக்கு வழங்கப்படவில்லை என்ற சினமும் , வெறுப்பும் மேற்குறிப்பட்டவரகளின் வழித்தோன்றல்களின் மனத்திலேயூறியுள்ளன.

தன் பிரதேசத்தில் அடிமை முறைமை நீக்கப்பட்டபோது பிரஞ்சுக்காரன் தென்னிந்தியத் தமிழர்களைத்தான் தன் தீவுகளுக்குக் கூட்டிச்சென்று அடிமைகள் போல் வேலை செய்ய வைத்தான்.

அல்ஜீரியர்கள் மீது தாக்குதல் நடத்தும் பிரஞ்சுப் படைகள்
அல்ஜீரியர்கள் மீது தாக்குதல் நடத்தும் பிரஞ்சுப் படைகள்

ஓழுங்கான முறையில் மொழியறிவும், உரிமைசார்ந்த பிரக்ஞையும் கொண்ட அரபு மற்றும் ஆபிரிக்க இளைஞர்களை வேலையிலிருந்து நிறுத்தி பரிசின் உணவகங்கள் எல்லாம் தமிழர்களை வேலைக்கமர்த்தியபோது முன்யைவர்கள் தமிழர்கள் மீது வெறுப்புற்றார்கள் என்பதை எத்தனைபேர் அறிந்திருக்கிறீர்கள். வேலைச் சட்டங்களை அறியாது அடிமைகளாக வேலைசெய்வதற்கு எம்மவர்கள் வேறு வழியின்றி ஒத்துக்கொண்டபோது அவர்கள் பாதிக்கப்பட்டார்கள். தற்போது தமிழர்களுக்குப் பதிலாக பங்காளதேசிகள் வேலைகெடுக்கப்படுகிறார்கள் என்பது வேறொரு கதை.

ஒருபகுதி வெளிநாட்டவரை வைத்து இன்னொரு பதியினரைக் “காய்வெட்டுவதில்”பிரஞ்சுக் குட்டி முதலாளித்துவத்தினர் கைதேர்ந்தவர்கள்.

மேற்குறிப்பிட்ட அனைத்து விடயங்களையும் உள்வாங்கினால் மாத்திரம் அன்றி தீபன் படத்தின் அரசியல் நோக்கத்தை யாரும் விளங்கிக்கொள்ள முடியாதென்பது வெள்ளிடை மலையாகும்.

தீபன் திரைப்படத்துள்……..

ஓடியார்
ஓடியார்

“தீபன்” திரைக்கதையமைப்பு மற்றும் அதன் படத்தொகுப்பு அல்லது படத்தொடுப்பு ஓடியார் எத்தனை தூரம் தன் இலக்கைத் துல்லியமாக அடைந்துள்ளார் என்பதைக் காட்டுகிறது.

இலங்கையின் யுத்தமுடிவில் ஆரம்பமாகும் திரைக்கதையானது, ஆரம்பத்தில் தன் பயணத்தை வேகமாக ஆரம்பிக்கின்றது (திரைக்கதையை ஏற்கெனவே தெரிந்திருந்த படியால் விழிப்பு நிலையிலிருந்து படத்தைப் பார்க்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது). மிகக்குறுகிய நேரத்தில் கதை பிரான்சுக்கு வந்து சேர்ந்துவிட்டதை அவதானிக்கவும் முடிந்தது.

அதாவது, ஓடியார் சொல்ல வந்த விடயத்திற்கான சுருக்கமான முன்னுரையாகவே கதையின் இந்தப்பகுதி விரைந்து சென்றது. மூன்றாவது மண்டல நாடொன்றின் யுத்தத்தின் விளைவு ஐரோப்பாவை நோக்கி, குறிப்பாக, தீபனின் பிரான்சுக்குச் செல்லும் விருப்பை வெளிப்படுத்தி விரைகிறது.

சிலவருடங்களுக்கு முன், முக்கியமான அமைச்சர் ஒருவர் “உலகின் வறுமையனைத்தையும் பிரான்சுக்குள் ஏற்கமுடியாது” என்று கூறிய பிரபல்யமான கூற்று இன்னமும் அரசியல்வாதிகளினால் ஞாபகப்படுத்தப்படும் ஒரு கூற்றாக காணப்படுகிறது. இதில் பிரஞ்சு மொழியில் வறுமை (la misère) என அவர் சொல்லும் பல அர்த்தங்களைக் கொண்டது.

தீபன் படத்தின் இந்த முதற்தொடக்கம், பிரஞ்சுக்காரர்களுக்கு இந்த வாக்கியத்தை அல்லது அதையொத்த ஒரு உளவியல் படிமத்தை இன்றை அரசியல் சூழலில் கொடுத்திருக்கும் என நான் எண்ணுகிறேன். இதுவே ஓடியாரின் இலக்காக அமைந்தது எனவும் எண்ணுகிறேன்.

அடுத்து, அகதிகளை வரவேற்று, அவர்களைத் தன் சமூக, கலாச்சார மற்றும் பொருளாதாரக் கட்டமைப்பினுள் உள்வாங்கும் நடவடிக்கையில் பிரான்ஸ் அக்கறை கொள்வதில்லை என்பதையும் அதனால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களையும் ஓடியார் முன்வைக்கிறார்.

செயற்கைக் குடும்பம் (அதாவது யாரும் எந்த அடையாளத்துடனும், பொய்களுடனும் பிரான்சுக்குள் நுழையலாம் எனும் கருத்தை முன்னிறுத்தி) அரசியலமைப்பினால் வழங்கப்பட்டுள்ள அகதியுரிமையைப் பெற்று அவர்கள் வேலை பெற்றுக்கொண்டு செல்வதிலிருந்து திரைக்கதை தன் வேகத்தைக் குறைத்துக்கொள்கிறது.

செயற்கைக் குடும்பம் வேலைக்கமர்தப்பட்டு, அங்கு வசிப்பதற்குச் செல்லும் இடத்தின் பெயர்: “பசும் புல்வெளி”.

அதாவது ஓதுக்குப்புறமான, சட்டத்தாலும் நிர்வாகத்தாலும் கைவிடப்பட்ட, அந்நியர்களுக்காகக் கட்டப்பட்ட, வன்முறையும் போதைவஸ்தும் குடிகொண்டுள்ள இடத்திற்கு ஓடியார் இட்ட பெயர் “பசும் புல்வெளி”.

ஓடியார் இந்தப்படத்தை பிரஞ்சுக்காரர்களை இலக்கு வைத்துத்தான் இயக்கினார் என்ற விடயம் மிகவும் முக்கியமானது. கதைக்காக அவர் தெரிந்து கொண்ட “கடுகு சீரகம்” தான் தமிழர் பிரச்சனை.

எடுத்த எடுப்பிலேயே செயற்கைக் குடும்பம் “பசும் புல்வெளி” க்கு வரும்போதே காட்சிகள் அச்சமூட்டும் வகையிலாக அமைக்கப்பட்டுள்ளன. இக்குடும்பம், மொழியறியாது, விழிபிதுங்க, இளையாளின் மொழி பெயர்ப்புடன் “பசும் புல்வெளி” க்குள் நுழைகிறது.

“போரை வெறுத்த போராளியில் மீளெழுந்தது போர்க்குணம்” எனும் மகுடவாக்கியம் திரைப்படம் வெளியாகுவதற்கு முன்னரே விளம்பர யுக்தியாகப் பயன்படுத்தப்பட்டதால், படம் எப்படி முடியப்போகிறது என்பதை முன் கூட்டியே ஊகிக்கக் கூடியதாக இருந்தது படத்தின் ஒரு பலவீனமான அம்சமாகவே பார்க்கப்படவேண்டும்.

வாழ்க்கையின் ஒவ்வொரு படிநிலையிலும் வன்முறையின் பிரசன்னம் உள்ளதாக ஓடியாரினால் காட்டப்படும் “அந்நியர் சேரி” அச்சமூட்டுவதாக உள்ளது.

அங்கு வாழ்பவர்கள் அனைவரையும் போதைவஸ்து டீலர்களின் கட்டுப்பாட்டில்வாழ்பவர்கள் போலவும், ஆபிரிக்க, அரபு இளைஞர்கள் அனைவருமே கட்டற்ற வன்முறையாளர்கள் போலவும், அதுவே இயல்பானதும், அவர்கள் சார்பில் நியாயப்படுத்தக் கூடியதுமான ஒன்று என்பது போலவும் கதையும் காட்சிகளும் கட்டமைக்கப்பட்டுள்ளது.

பிரான்சில் அந்நியனாக “அந்நியர் சேரியில்” வாழ்ந்தவன் என்ற வகையில் ஒரு அதிர்ச்சியைக் கொடுக்கும் காட்சியாவே நான் இதைப்பார்க்கிறேன். இந்தக் காட்சிகளினால் பிரஞ்சுக்காரர்களுக்குக் கடத்தப்பட்டிருக்கும் செய்தி என்ன என்பதை இப்படத்தைப் பார்த்த சில பிரஞ்சுக்காரர்களுடன் உரையாடியபோது புரிந்து கொண்டேன். ஓடியார் தனது இலக்கில் வெற்றிகொண்டுள்ளார் என்பதை சந்தேகமறப்புரிந்து கொள்கிறேன்.

“அந்நியர் சேரியின்” பாடசாலையில் வகுப்பறைகள் பிரஞ்சுப் பிரசன்னமேயற்ற இடங்களாகக் காட்டப்படுகின்றன. பாடசாலையென்பதும் வன்முறையின் உற்பத்தி மையமாகக் காண்பிக்கப்படுகிறது.

தீபனின் செயற்கைக் குடும்பத்தில் காதலின் ஊற்றுக்கண் திறப்பதைக் காட்டும் காட்சிகள் செறிவற்றுக் காணப்படுவதுபோல் தோன்றினாலும், நடிகர்களின் நடிப்புத்திறமை அதை ஈடுசெய்கிறது என்று சொல்லலாம். ( இது பற்றி மூன்றாவது ஒரு பகுதியில் கூறுகிறேன்)

DHEEPAN_Stillயாழினியின் தணியாத லண்டன் கனவுக்கு மத்தியிலும், செயற்கைக் குடும்பத்துடன் ஒட்டமுடியாத ஒரு மனேநிiலியிலும், அவளுக்கு ஒரு வேலை வாய்ப்பு எட்டுகிறது. முன்கட்டடத்தில் உள்ள ஒரு முடக்குவாதம் கொண்ட, பேசுந்தன்மையிழந்த ஒரு வயோதிபரைப்பராமரித்தல் மற்றும் அவருக்கு சமைத்துப்போடல்.

அதையடுத்து, அந்த வயோதிபரின் சகோதரியின் மகனின் மீள்வருகை. பல மாதங்களாகச் சிறைவாசம் அனுபவித்து விட்டுவரும் ஓரு போதவஸ்து வியாபார குட்டித்தலைவனின் வருகை. “அந்நியர் சேரியின்” இளசுகளின் பட்டாசுக் கொண்டாட்டம். தீபனின் கையறு நிலை. கடமையுணர்வும், விருப்பும் இருந்தும் தன்வேலையைக் கூடச் சரியாகச் செய்ய முடியாது தவிக்கும் குழப்பநிலை. எங்கும் வன்முறையின் வியாபகம்.

யாழினிக்கும், தீபனுக்குமான காதலின் “நிறைவேற்றம்” ஆலய வழிபாட்டுக்கு அழைத்துச் செல்கிறது. ஆலயம், வழிபாடு பூஜை என எல்லாம் முடிந்தபின் காலாச்சார ஆடைகளுடன் ஒரு பூங்காவின் ஏரிக்கரையில் “தமிழர் கூட்டம்” பிக்-நிக் செய்கிறது. ஓடியார் பிரஞ்சுக்காரர்களுக்கு அனுப்பிய இன்னொரு முக்கிய செய்தி.

பிரஞ்சு தேசம் அச்சமுற்றிருக்கும் ஒரு நிலையில் அந்நியர் தங்கள் அடையாங்களைக் காவிக்கொண்டு தங்களை ஆக்கிரமிக்கிறார்கள் என்ற கோசம் ஓங்கியுள்ள நிலையில் அதற்குத் தூபமிட்டுள்ளார் ஓடியார். இந்த நாட்டிலே என்ன நடக்கிறது என்பதை கிஞ்சுத்தும் அறியாவர் இதைக்காணுதல் கடினம். ஆம் பிரான்சின் சமூகக்குழுமங்கள் தம்மைச் சுற்றிக் கலாச்சார வேலிபோட்டு தம்மை பிரஞ்சு தேசத்துடன் கலந்துகொள்ளாது வாழ்கிறார்கள். ( “தமிழர்கள் பிரஞ்சுக்காரர்களை மார்ச் கிரக வாசிகள்போல் பார்க்கிறார்கள்” – வானொலிப் பேட்டியில் ஓடியார் கூறியது.)

fnபிரஞ்சு தேசம் “சமுகக் குழுமங்களாகிக்” கொண்டிருக்கிறது. தேசத்தின் கலாச்சார, அடையாள ஒருமைப்பாடு அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது என்ற பாசிசக் கட்சியான தேசிய முன்ணியின் சுலோகங்களுக்கான நிறைவேற்றுச் சாட்சியங்களாக ஓடியார் இக்காட்சியை முன்வைத்துள்ளார் என்று நான் எண்ணுகிறேன். தேசிய முண்ணணி ஆதரவாளர்கள் மத்தியில் இப்படத்திற்கு உள்ள ஆதரவை வேறு விதமாகப் புரிந்து கொள்ளமுடியாதுள்ளது.

முப்பதாம் ஆண்டுகளில் ஜேர்மனியில் நிலவிய அரசியல் காலநிலை தற்போது பிரான்சில் காணப்படுகிறது என்று முற்போக்கு வாதப் பிரஞ்சுக்காரர்கள் கூறுவதை இப்போ நான் நினைந்து கொள்கிறேன்.

மான் வேட்டையாட நாம் ஓடுகையில் சிங்கம் எங்களைக் கலைப்பதைக் காணாமல் இருப்பது எத்தனை ஆபத்தானது.

யூதர்களை இலக்குவைத்த “மூன்றாவது ராச்சியம்” யார்யாரையெல்லாம் மாய்த்தது என்பதை நாம் எல்லோரும் அறிவோம். “அடை-கறுவல்” என்று நாம் கூறும் மக்களை இலக்கு வைக்கும் பிரஞ்சுப் பாசிசம் எங்களை உய்விக்கும் என நினைப்பவர்களே கண்ணைத் திறவுகங்கள். பெருநிதியங்கள் பிரஞ்சு மக்களின் பொருளாதார நெருக்கடிக்கு எதனைப் பலியிட எண்ணுகிறார்கள் என்பதன் அறிகுறிகள் உங்களுக்குத் தென்படவேயில்லையா ? 2017 ம் ஆண்டு வரையும் பொறுத்திருங்கள்.

ஒரு திரைப்படத்தின் காட்சிகள் ஒவ்வொன்றும் நுணுக்கமாக ஆராயப்பட்டு, ஒவ்வொரு படிமங்களும் குறித்த ஒழுங்கில் தொடுக்கப்பட்டு, பலதடவைகள் பார்வையிடப்பட்டபின்னர்தான் காட்சிக்கு வருகின்றன. இது யாருக்கும் தெரிந்த விடயம்.

ஒரு காட்சியை எடுக்கிறேன்…

எழுத்தாளரும் கவிஞரும் மொழிபெயர்பாளருமான வாசுதேவன்
எழுத்தாளரும் கவிஞரும் மொழிபெயர்பாளருமான வாசுதேவன்

யாழினிக்கும், இளையாளுக்குமிடையிலான முரண்பாட்டையடுத்து, அவர்களுக்கிடையில் ஒரு பாச உரையாடல் நடைபெறுகிறது. அந்த உரையாடலில் இளையாள் அணிந்திருக்கும் ரி-சேட்டை மறக்காமல் உற்று நோக்குங்கள். அதில் “NEW WORLD ORDER” எனும் வாக்கியம் பொறிக்கப்பட்டிருக்கிறது. இது எதேச்சையானது என என்னை நம்பவைக்க யாராலும் முடியாது. இதுவே இப்படத்தின் முத்திரையும் வெற்றியும்.

நான் பிரான்சில் வாழும் தமிழனல்ல. நான் இங்கு வாழும் ஒரு அந்நியன்.

(தொடரும்)

உலகமயமாதலும் சினிமாவும் (1) : ரதன்

சந்தைப்படுத்தல்

masaladosaரொரண்ரோவில் உள்ள சீனரின் கடையில் இதயம் நல்லெண்ணெயை வாங்கக் கூடியதாகவுள்ளது. மசாலத் தோசை சாப்பிட விரும்பின் நியு யேர்சியில் பல நல்ல கடைகள் உள்ளன. சமோசாவை வட அமெரிக்காவில் சகல கடைகளிலும் பெற்றுக்கொள்ளலாம். அது மட்டுமல்ல பல வகை சமோசாக்களையும் பெறலாம். என்னுடன் வேலை செய்யும் சக இத்தாலிய பெண் யோகா ஆசிரியை. யோகாவின் மகிமையை விளக்கி எனக்கே பாடம் நடாத்துகின்றார். ரொரண்ரோ ஹாபர் புரண்ட்டில் நடைபெறும் திருச்சி சங்கரனின் கச்சேரியை கேட்கும் பார்வையாளர்களில் பெரும்பாலோனோர் தெற்காசியர் அல்லாதோராக உள்ளனர்.

உலகமாயதலின் வளர்ச்சி எங்கும் எதனையும் பெற்றுக் கொள்ளும் நிலைக்குத் தள்ளிவிட்டது. “யாதும் ஊரே யாவரும் கேளீர்” என கணியன் ப+ங்குன்றனார் பாடியதை இன்று புலம் பெயர்வுகள் நிரூபிக்கின்றன. இந்திய தொலைக் காட்சி நிறுவனங்கள் புலம் பெயர் இந்தியர்களையும், தெற்காசியர்களையும் குறிவைக்கின்றது. புலம் பெயர் மேற்கத்திய நாடுகளின் பணத்தின் பெறுமதியின் வலிமை அதிகமானது. குறைந்த நுகர்வு கூட இவர்களுக்கு அதிக வருமானத்தை பெற்றுக் கொடுக்கும். இந்திய திரைப்பட விருது விழாக்கள் மலேசியாவிலும:;, லண்டனிலும், லொஸ் ஏஞ்சலிலும், ரொரண்ரோவிலும் நடாத்தப்படுகின்றன.

175இந்தியாவில் ஒரு வாரத்துக்கு குறைவாகவே ஓடிய ரெரரிஸ்ட் திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாக்கள் மூலமே சர்வதேச விநியோகிஸ்தரைப் பெற்றது. இதன் தயாரிப்புக்கான செலவை விட பல மடங்கு வருமானத்தைப் பெற்றது. 2015ம் ஆண்டு Sundance திரைப்படவிழாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து குறுந்திரைப்படங்களில் ஒன்றான 175 கிராம் குறும் படம் பத்தாயிரம் அமெரிக்க டொலர்களை பரிசாகப் பெற்றுள்ளது.

இந்திய திரை மற்றும் பார்வை ஊடகம் வளர்முக நாடுகள் மூலம் அதிக வருமானத்தை குவிக்க, மறு புறம் கலையினூடான ஊடுருவல்களும் நடைபெறுகின்றன. ஆப்கானிஸ்தானில் 2008ல் அமெரிக்கா பாதுகாப்பு வழங்கிக் கொண்டிருந்த போது அப்போதைய ஊடக மற்றும் கலாச்சார அமைச்சு ஐந்து இந்திய தொலைக்காட்சித் தொடர்களை தடைசெய்தது Kyunki Saas Bhi Kabhi Bahu Thi (English: Because a mother-in-law was once a daughter-in-law)) (அத்தையால் அல்லது மாமியாரினால்)உட்பட்ட ஐந்து தொடர்களே தடைசெய்யப்பட்டன. இத் தொடர்கள் இஸ்லாமிய கலாச்சாரத்தையும் மதத்தையும் பாதிப்படையச் செய்யும் என குற்றஞ்சாட்டப்பட்டது.

India’s Daughter
India’s Daughter

லெஸ்லி யுட்வினின் பாலியல் வல்லுறவு சம்பந்தப்பட்ட இந்தியாவின் மகள் என்ற விவரணத்திரைப்படம் பற்றி சி.பி.சி வானொலியில் கலந்துரையாடப்படுகின்றது. கருத்துரையாளர்களில் ஒருவர் மும்பையிலும், மற்றவர் லண்டனிலுமிருந்து கருத்துக்களைக் கூறுகின்றனர். புதிய தொழில்நுட்ப வளர்ச்சி ஊடகப் போக்கை மாற்றிவிடுகின்றது. தடைசெய்யப்பட்ட இப் படம் யுரிபின் ஊடாக உலகின் பார்வையாளர்களைச் சென்றடைகின்றது. தடைசெய்யப்பட்ட பிரதேசத்தில் உள்ள மக்களுக்கும் ஏதாவது ஒரு வடிவத்தில் சென்றடைய சந்தர்ப்பங்கள் உண்டு.

ஈரானில் கலாச்சார மாற்றங்கள் சமூக வலைத்தளங்களின் ஊடாகவும் சற்றைலைட் தொலைக்காட்சியினூடாகவும் நடைபெறுகின்றன. இவற்றில் பல சட்டத்துக்கு புறம்பானவை. இவற்றை கட்டுப்படுத்துவதில் உள்ள சிரமங்கள் இவ் ஊடகங்கள் உலகின் மூளை முடுக்குகளை சென்றடையச் செய்கின்றது. தொழில் நுட்ப மாற்றம் திரைப்படங்களையும் அதன் விநியோகஸ்தத்தையும் பாதித்துள்ளது. இதனை எவ்வாறு எதிர்கொள்கின்றார்கள்? இதனால் லாபமடைவர்கள் யார்? உலகமயமாதலுக்கு தொழில்நுட்ப வளர்ச்சி உதவிபுரிந்துள்ளதா?

முதன் முதலில் பிரென்ச் திரைப்படத் தயாரிப்பாளர்கள் தங்களது அலுவலகங்களை அமெரிக்காவில் திறந்தார்கள். 1903ல் இது நடைபெற்றது. George Melies தனது சகோதரன் ஹஸ்ரனை நியு யோர்க்கிற்கு அனுப்பினார். 1905ல் Charles Pathe க்கும் அமெரிக்காவில் அலுவலகம் இருந்தது. முதலாம் உலகப்போரின் பின்னர் ஐரோப்பிய திரைப்படச் சந்தை சரிவைச் சந்தித்தது.

ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க
ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க

1920களில் ஐரோப்பிய சந்தையில் ஹொலிவ+ட் படங்களின் நுகர்வு மிக அதிகமாகவே இருந்தது. இங்கிலாந்தில் 90 வீதமாகவும், பிரான்ஸ், இத்தாலியில் 80 வீதமாகவும் இருந்தது. இடதுசாரி சார்பு அரசுகள் கோட்டா முறையைக் கூட திரைப்பட இறக்குமதி மீது ஏற்படுத்தியது. இலங்கையில் 70களில் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க பிரதமாரக இருந்த பொழுது திரைப்பட இறக்குமதி மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இது உள்@ர் உற்பத்தியை அதிகரித்தது. சிங்கள திரைப்படங்கள் சர்வதேச அங்கீகாரம் பெறுவதற்கு இக் காலகட்ட மாற்றமே முக்கிய காரணியாகும்.

அப்போதைய இலங்கை அரசு ஓர் இடதுசாரி கூட்டணியாகும். உலகப் போர்களின் பின்னர் பிரென்ச் நியுவேவ், இத்தாலியின் நவயதார்தவாத திரைப்படங்கள் உருவாகிய பின்னரும் ஹொலிவ+ட்டின் ஆட்சி ஐரோப்பாவில் தொடர்ந்து கொண்டேயிருந்தது.

அமெரிக்காவின் அண்டைய நாடான மெக்சிக்கோவில் ஹொலிவ+ட் ஏற்படுத்திய மாற்றம் ஆச்சரியத்துக்குரியது. 1950களில் வருடத்துக்கு 150படங்கள் மெக்சிக்கோவில் வெளிவந்தது. இன்று 25க்குட்பட்ட படங்களே தயாரிக்கப்படுகின்றன. அமெரிக்காவின் ஒரு பகுதியினரின் தாய் மொழி ஸ்பானிஸ் ஆக இருப்பதனால் லத்தீன் அமெரிக்க மற்றும் மெக்சிக்கோ படங்களின் விநியோக கட்டுப்பாட்டை அமெரிக்கா தன்னகம் வைத்துள்ளது.

பிரேசிலிய தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சரா சில்விரியா “எங்களுக்கு மற்றைய லத்தீன் அமெரிக்க நாடுகளின் திரைப்படங்கள் பற்றி எதுவுமே தெரியாது”, எங்களுக்கு அருகில் அண்டைய நாடான ஆர்ஜன்ரீனாவின் படங்களையே பார்க்கும் சந்தர்ப்பம் எங்களுக்கு கிட்டுவதில்லை” என குற்றஞ்சாட்டுகின்றார். ஒஸ்காருக்கு பரிந்துரைக்கப்படும் படங்களே லத்தீன் அமெரிக்க மக்கள் பார்க்கக் கூடியதாகவுள்ளது.

திரைப்பட விழாக்களில் லத்தீன் அமெரிக்க படங்களை பார்க்கும் அமெரிக்க விநியோகஸ்தர்கள் அங்கேயே படத்தை வாங்கி அமெரிக்கா மற்றும் சர்வதேச சந்தைக்கு விநியோகிக்கின்றார்கள். பிரேசில் திரைப்படங்களில் முதலீடு செய்யும் தனிநபர்களும் நிறுவனங்களும்; முதலீட்டுத் தொகையை தங்களது மொத்தவருமானத்தில் இருந்து குறைத்து அதற்கேற்ப வருமான வரியைச் செலுத்தலாம் என 1996ல் சடடம் ஒன்றை நடைமுறைப்படுத்தியது. எனினும் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. ஆர்ஜன்ரீனாவில் தொலைக்காட்சி நிறுவனங்கள் கிடைக்கும் லாபத்தில் ஆறிலிருந்து எட்டுவீதம் வரையிலான பகுதியை திரைப்படத்தயாரிப்பில் முதலிடவேண்டும் என இதே காலப்பகுதியில் சட்டமியற்றியப்பட்டது. ஆனால் திட்டமிட்டு அமெரிக்கா தனது சந்தையை ஆரம்பத்திலிருந்தே விரிவுபடுத்திவிட்டது.

r-rahmanதிரைப்படங்களை சந்தைப்படுத்தலுக்கு ஏதுவாக 1929ல் ஒஸ்கார் விருது வைபவங்களை தொடங்கினர். மக்களை கவரும் வண்ணம் இங்கு கவர்ச்சிக்கு முக்கியத்துவமளித்தனர். விருதுகளுக்கு அப்பால் ஊடகங்கள் கலைஞர்களின் உடைகளுக்கு முக்கியத்துவமளித்தன. விழாவின் பின்னர் நடைபெறும் விருந்துபசாரங்கள் பெரியளவில் புகைப்படங்களாக ஊடகங்களை அலங்கரித்தன. ஓஸ்காரைத் தொடர்ந்து 1932ல் முதல் திரைப்படவிழா வெனிஸில் ஆரம்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கான்ஸ், பின்னர் ஐம்பதுகளில் பேர்ளின் திரைப்படவிழாக்கள் ஆரம்பிக்கப்பட்டன. வட அமெரிக்காவின் இரு பெரும் திரைப்படவிழாக்களான ரொரண்ரோ மற்றும் Sundance திரைப்பட விழாக்கள் முறையே 1976, 1978ம் ஆண்டுகளில் ஆரம்பிக்கப்பட்டன.

திரைப்படவிழாக்களும் சந்தைப்படுத்தலில் பெரும்பங்காற்றின. திரைப்பட விழாக்களில் விமர்சகர்களால் கவனிப்புக்குள்ளாகும் படங்கள் சர்வதேசச் சந்தையில் வரவேற்பை பெற்றன. கடந்த பல வருடங்களாக ரொரண்ரோ திரைப்பட விழாவில் மக்களால் மிகச் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்ட படம் ஒஸ்காரில் சிறந்த படவிருதைப் பெற்றது அல்லது பெறவைக்கப்பட்டது. ஒஸ்காருக்கு பரிந்துரைக்கப்படும் படங்கள் « பரிந்துரைப்பு » என்ற விளம்பரம் மூலம் மீண்டும் மக்களால் நுகரப்படுகின்றன. விருதுகள் பெற்ற பின்னர் மீண்டும் திரையரங்குகளில் காட்சியளிக்கப்படுகின்றன. இவற்றிக்கென வீடியோ வியாபாரம் அதிகளவில் உள்ளது. தொலைக்காட்சி நிறுவனங்களும் அதிகளவு விலை கொடுத்து வாங்குகின்றன.

இந்தியாவின் முதல் திரைப்பட விழா 1952ல் தொடங்கப்பட்டாலும் ஒப்பீட்டளவில் ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் அதிகளவு திரைப்படவிழாக்கள் நடைபெறுகின்றன. சனத்தொகை மிக மிகக் குறைவான கனடாவில் மட்டும் அங்கீகரிக்கபட்ட 89 திரைப்பட விழாக்கள் நடைபெறுகின்றன. ஐரோப்பிய வட அமெரிக்க திரைப்பட விழாக்கள் உள்@ர் திரைப்படங்களுக்கு முக்கியத்துவமளிக்கின்றன. இது சுயாதீன திரைப்படங்களின் வருகையை அதிகரிக்கின்றன. தொலைக்காட்சியின் வருகை ஹொலிவ+ட்டை சர்வதேச அரங்கிற்கு கொண்டு செல்லுவதற்கு மேலும் வலுவ+ட்டியது. உள்@ரில் திரையரங்குகளிற்கு செல்வோரின் எண்ணிக்கை குறையத்தொடங்கிய போதும் அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் தொழில்நுட்ப வளர்ச்சியால் திரைப்படத்தை ஒரு திரையரங்கு கலையாக ஹொலிவ+ட் நிரூபித்துக் கொண்டிருந்தார்கள். அதிகரித்த சுயாதீன திரைப்படங்களுக்கான சந்தையை சர்வதேச அரங்கில் ஏற்படுத்த பார்வை ஊடகங்கள் உதவின. தொலைக்காட்சியும் பின்னர் தோன்றிய சமூக வலைத்தளங்களும் மேற்கத்திய கலாச்சாரத்தை உலகிற்கு கொண்டு சென்றன.

மத்திய கிழக்கு உட்பட்ட நாடுகளில் மேற்கத்திய தொலைக்காட்சிகள் தடைசெய்யப்பட்ட போதும் சற்றலைட் மூலம் சட்டத்திற்கு மாறாக இவை மக்களை சென்றடைந்தன. ஈரானில் இவை ஏற்படுத்திய மாற்றங்களை பல விவரணத்திரைப்படங்கள் பதிவு செய்துள்ளன

மோசன் பிக்சர்ஸ் அமெரிக்காவின் ; (Motion Picture Association of America Inc.) பிரகாரம் 2013ம் ஆண்டு ஹொலிவ+ட் படங்களின் வருமானம் -அமெரிக்கா-களடா வருமானம் 10.9 பில்லியன் டொலர்கள். சர்வதேச நாடுகள் மூலம் பெறப்பட்ட வருமானம் 25 பில்லியன் டொலர்கள். அதாவது மொத்த வருமானத்தில் 69.64 வீதம் சர்வதேச வியாபாரத்தின் மூலம் பெறப்பட்டது. இதில் ஆசிய பசுபிக் நாடுகளில் இருந்து மட்டும் பெறப்பட்ட வருமானம் 11.1 பில்லியன் டொலர்கள். மொத்த வருமானத்தின் 31 வீதமிது. 1932ல் வெளிவந்த Gone With the Wind (1939)(MGM) திரைப்படத்தைப் பார்த்தோர் தொகை 225.7 மில்லியன் ஆகும். 1997ல் வெளிவந்த ரைரானிக்கைப் பார்த்தோர் தொகை 128.4 மில்லியன் ஆகும். 2009ல் வெளிவந்த அவற்றாரைப் பார்த்தோர் 78.3 மில்லியனாகும். 1939ல் இருந்த அமெரிக்க சனத்தொகையை விட 1997ல், 2009ல் சனத்தொகை அதிகம். பார்வையாளர்களின் வீழ்ச்சியை நீண்ட காலமாகவே ஹொலிவ+ட் தயாரிப்பாளர்களும் விநியோகஸ்தர்களும் அவதானித்து வந்துள்ளனர்.

2005ல் இந்தியாவில் இருந்து வெளிவந்த படங்கள் 1041. 2006ல் அமெரிக்காவில் இருந்து வெளிவந்த படங்கள் 599. ஜப்பான் 417, சீனா 330 ஆகும். உலகின் அதிக சனத்தொகையைக் கொண்ட நாடாக சீனா இருந்த போதும் சினிமாப் பார்வையாளர்களின் தொகை அதிகமான நாடு இந்தியாவாகும். உள்@ர் சந்தையின் படி இந்தியா 94.1 வீதம்(2005), அமெரிக்கா 93.4 வீதம், சீனா 60 வீதம். அதாவது உள்@ரில் எடுக்கப்படும் படங்கள் ஏற்படுத்தும் வருமானத்தையே இது சுட்டுகின்றது. இதன் பிரகாரம் இந்தியா அமெரிக்கா போன்ற நாடுகளில் இறக்குமதி செய்யப்படும் சர்வதேச படங்கள் மூலம் பெரும் வருமானம் சுமார் ஆறு வீதமாகும். ஆனால் நுகர்வு வலு இந்தியாவை விட அமெரிக்கா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளுக்கு அதிகமாக உள்ளது.

criuching
முதன் முதலாக 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாகப் பெற்ற படம்

2000ம் ஆண்டில் வெளிவந்த Crouching Tiger, Hidden Dragon படம் தான் முதன் முதலாக 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாகப் பெற்ற வெளிநாட்டுப்படமாகும். அமெரிக்காவில் ““Block Booking”” என்ற திட்டம் 1930களில் நடைமுறையில் இருந்தது. அதாவது தயாரிப்பு நிறுவனங்கள் அரங்குகளுக்கு தாங்கள் தயாரிக்கும் படங்களை தொடர்ந்து திரையிட தொகுதி நாட்களை கட்டாயப்படுத்தலாகும். இதனால் தயாரிப்பு நிறுவனங்கள் தயாரிக்கும் குப்பை படங்களை அதாவது மக்கள் பார்க்க விரும்பாத படங்களையும் திரையிட வேண்டிய கட்டாயத்திலும் தயாரிப்பாளர்களிடமிருந்து வாங்க வேண்டிய கட்டாயத்திலுமிருந்தார்கள். இதனால் சுயாதீன தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டார்கள். இவர்களின் படங்கள் மூலை முடுக்குகளில் திரையிடப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. வெளிநாட்டுப் படங்களின் இறக்குமதியே இல்லாத நிலையே ஏற்பட்டது. இது பின்னர் அமெரிக்காவில் சட்டப+ர்வமற்றதாக மாற்றப்பட்டது.

உலகமயமாதல் திரைப்படத் தயாரிப்பில் பல மாற்றங்களை ஏற்படுத்தின. திரைப்படத்துறையிலான பொருளியல் சிக்கல் நிலை, திரைப்பட நுகர்வு, திரைப்படத் தயாரிப்பு, ஒழுங்குபடுத்தப்பட்ட தயாரிப்பு நிறுவனங்கள் போன்ற விடயங்களில் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. ஆமெரிக்க நிறுவனங்கள் கவர்ச்சிக்கும், தொழில்நுட்பத்துக்கும் அதிகளவு முக்கியத்துவமளிக்கின்றனர். பாலியல் மற்றும் வன்முறை சார்ந்த படங்களில் அதிகம் கவனம் செலுத்துகின்றனர். மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்க எதிர்ப்பு அதிகரித்து போன போதும் கெய்ரோவில் இருந்து பாக்தாத் வரை ஹொலிவ+ட் படங்கள் அரங்குகளை நிறைக்கின்றன. அமெரிக்கத் திரைப்படக் கல்லூரிகள் திரைப்பட சந்தைப்படுத்தலை தமது பாடத்திட்டத்தில் உள்ளடக்கியுள்ளன. இது உலகின் மற்றைய நாடுகளில் உள்ள திரைப்படக் கல்லுர்ரிகளில் இருந்து வேறுபடுகின்றது.

ஐரோப்பாவில் டென்மார்க், சுவிற்சிலாந்து, ஐஸ்லாந்து போன்ற நாடுகள் ஹொலிவ+ட்டின் சந்தைப்படுத்தலை உள்@ரில் குறைக்க புதிய முயற்சிகளை மேற்கொண்டு உள்@ர் திரைப்படங்களின் நுகர்வை அதிகரிக்க முயற்சிக்கின்றன. உள்@ர் தொலைக்காட்சி ஊடகங்களில் மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் இதனை சாத்தியப்படுத்த முயற்சிக்கின்றன. அதே சமயம் உலகில் புதிய திரைப்படத் தயாரிப்பு சந்தைகள் உருவாகின்றன. கொரியா, மெக்சிக்கோ, பிரேசில் போன்ற நாடுகளின் படங்கள் சர்வதேச சந்தைகளில் விற்கப்படுகின்றன.

சந்தை மாற்றத்தை உணர்ந்த அமெரிக்கா தனது தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களில் நடிகர்கள், கலைஞர்களில் மாற்றங்களை கொண்டு வருகின்றன. Aishwarya-Rai-Bachchan-Rules-The-Red-Carpet-At-Cannes-2015இந்திய, சீன நடிகர்கள் பல தொலைக்காட்சி தொடர்களிலும், திரைப்படங்களிலும் நடிக்கின்றனர். முக்கிய பாத்திரங்களில் இல்லாத போதும் குறிப்பிடத்தக்களவு நிமிடங்கள் திரையில் தோன்றுகின்றனர். மேற்கத்திய நாடுகளில் அதிகரித்த குடிவரவு மாற்றங்கள் புதிய குடிவரவாளர்களை கொண்டு வருகின்றன. இவர்களுக்கான சந்தைப்படுத்தல் இதன் மூலம் சாத்தியப்படுகின்றது. திரைப்படவிழாக்களில் வழமைக்கு மாறாக இந்திய மசாலாப்படங்கள் திரையிடப்படுகின்றன. ஐஸ்வராய் போன்றவர்களுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கப்படுவதன் மூலம் மேலும் மேற்கத்திய படங்களை இலகுவாக விற்றுவிடுகின்றனர்.

பல ஹொலிவ+ட் திரைப்படங்கள் வேறு நாடுகளில் படமாக்கப்படுகின்றன. இது திரைப்படத்தயாரிப்பு செலவையும் கட்டுப்படுத்துகின்றது. அமெரிக்க உள்@ர் நுகர்வையும் அதிகரிக்கின்றது. மொத்தமாக அமெரிக்காவில் 20வீதமானோரே கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) வைத்திருக்கின்றனர். இவர்களில் 10வீதமானோரே வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர். வெளிநாடுகளை திரைப்படங்களில் பார்க்கும் சந்தர்ப்பத்தை இந்த 90 வீதமானோருக்கு ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம் உள்@ர் நுகர்வை அதிகரிக்கலாம். கூட்டுத் தயாரிப்புக்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. Viacom18யாரிப்பு நிறுவனம் பொஸ், இன்கார் Bhaag Milkha Bhaag, சொனி ,Saawariya. பொக்ஸ் ஸ்ரார் மை நேம் இஸ் கான், மும்பை வெல்வெட், யுரிவி மோசன் பிக்சர்ஸ் சென்னை எக்ஸ்பிரஸ், சாகிட் Utt Patang, Phas Gaye Re Obama, Jaane Kahaan Se Aayi Hai வோல்ட் டிஸ்னி ஹெய்டர், ரோட்சைட் ரோமியோ போன்ற படங்களை தயாரித்துள்ளன. இவை இரண்டு விதத்தில் இந் நிறுவனங்களுக்கு உதவுகின்றன. ஒன்று இந் நிறுவனங்கள் தயாரிக்கும் படங்கள் இந்தியாவில் சந்தைப்படுத்தப்படுகின்றன. இரண்டாவது மேற்குறிப்பிட்ட இந்தியப் படங்கள் மேற்கு நாடுகளில் அதிகரித்துள்ள தெற்காசிய சமூகத்தால் அதிகளவு நுகரப்படுகின்றன. பல சமயங்களில் இந்திய நுகர்வை விட மேற்கு நாடுகளில் உள்ள தெற்காசிய சமூகத்தின் நுகர்வால் பெறப்படும் வருமானம் அதிகம். அதற்கான மற்றொரு காரணம் டொலர் மற்றும் யுரோ, பவுன்சின் மதிப்பதிகம். இவற்றைவிட ஹொலிவ+ட் படங்களின் பின் தயாரிப்பை இந்தியாவில் செய்வதன் மூலம் தயாரிப்புச் செலவையும் குறைக்கக் கூடியதாகவுள்ளது. தெற்காசியாவில் அமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் சாதகமாக ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்ட சட்டதிட்டங்கள் சந்தைப்படுத்தலை இலகுவாக்குகின்றன. 2008ல் அமெரிக்க திரைப்படங்களின் ஏற்றுமதியானது இறக்குமதியைவிட பத்து மடங்கு அதிகமாகவிருந்தது. 1986ல் இருந்து 2000 வரையிலான காலப்பகுதியில் ஏற்றுமதி வருமானம் 426வீதத்தால் அதிகரித்துள்ளது புதிய தொழில் நுட்ப வளர்ச்சி பல வேற்று மொழிப்படங்கள் ஆங்கில உதவிக் குறிப்புக்களுடன் ஐரோப்பிய மற்றும் ஆசிய சந்தையில் விற்கப்படுகின்றன.

பி.பி.சி நீண்ட காலமாக தெற்காசிய நாடுகளிலும் மத்திய கிழக்கு நாடுகளிலும் பிரசித்தி பெற்ற நிகழ்வாக இருந்தது. பி.பி.சி பல மொழிகளில் தனது வானொலி நிகழ்ச்சியை ஒலிபரப்பியது. இன்று நிலைமை மாறிவிட்டது. சி.என்.என், அல்சீரா, என்.பி.சி போன்ற பல தொலைக்காட்சி நிறுவனங்களின் நிகழ்ச்சிகள் தெற்காசிய நாடுகளின் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்படுகின்றன. இவற்றின் தொலைக்காட்சித் தொடர்கள் ஒளிபரப்படுகின்றன. லெபனானியர் அமெரிக்கர்களை மோசமானவர்கள், பெருமாசை கொண்டவர்கள், வன்முறையாளர்கள் எனக் குறிப்பிடுகின்றனர். ஆச்சரியமான விடயமென்னவெனில் லெபனானியர் அதிகளவு அமெரிக்க தொலைக் காட்சி தொடர்களை பார்க்கின்றனர். மத்திய கிழக்கில் அதிகளவு மக்கள் அமெரிக்க தொலைக்காட்சிகளை லெபானிலேயே பார்க்கின்றனர். செக்ஸ் அன்ட் சிற்றி, சவுத் பார்க், பிரண்ட்ஸ், ஒபாரா போன்ற தொடர்களை லெபனானியர் அதிகளவு பார்க்கின்றனர். மற்றொரு முக்கியமான விடயத்தையும் இங்கு கவனிக்க வேண்டும் அமெரிக்க திரைப்படங்களும் தொலைக்காட்சித் தொடர்களும் கலாச்சாரத்தை மட்டும் மூன்றாம் உலக நாடுகளில் திணிக்கவில்லை. நடிகர்கள் பாவிக்கும் பொருட்களும் இங்கு அறிமுகப்படுத்தப்படுகின்றன. இவற்றிற்கான நுகர்வாகவும் இவையுள்ளன. ஒரு வகையில் அமெரிக்க வர்த்தக மொழியை பேசும் ஊடகமாகவே திரைப்படங்களும் தொலைக்காட்சித் தொடர்களும் செயற்படுகின்றன.

சி.என்.என் அமெரிக்கா மீதான சார்பான பிம்பத்தை மக்கள் மீது திணிக்கின்றது. அது மட்டுமல்ல உள்@ர் அரசியல் சமூக நிலைகள் மீதான தவறான கருதுகோள்களை மக்கள் உள்வாங்க உதவுகின்றது. அமெரிக்க அரசியல் முடிவுகள் சரியானவை என நிறுவ தேர்ந்தெடுக்கப்பட்ட காட்சிப் பிம்பங்கள் மூலம் நிறுவுகின்றது. இன்று சி.என்.என் கூறுவதுதான் உலக மந்திரம் என்ற நிலைக்கு மாற்றப்பட்டுவிட்டது.

Obama-Hand-to-Ear2009ல் ஒபமா ஆட்சிக்கு வருவதற்கு முன்பு அமெரிக்காவின் பெயர் சர்வதேசத்தில் கெட்ட நிலையிலேயே இருந்தது. ஒபமா ஒரு கறுப்பினத்தவர். வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களின் துயரங்களை அறிந்தவர் போன்ற விடயங்கள் அமெரிக்கா மீது மக்கள் மீண்டும் நம்பிக்கை வைக்க காரணமாகியது. மூன்றாம் உலக நாடுகள் தங்களில் ஒருவராகவே ஒபமாவை கருதியது. ஓபமா ஆட்சிக்கு வந்தது தற்செயலாக நடைபெற்றிருக்கலாம். அல்லது திட்டமிட்டு நடைபெற்றிருக்கலாம். ஆனால் அமெரிக்காவிற்கு நல்ல பெயரை மீண்டும் பெற சிறிதளவாவது உதவியது. இது திரைப்பட சந்தைப்படுத்தலுக்கும் உலகமயமாக்கலுக்கும் மேலும் உதவியது.

நாங்கள் யார் எப்படிப்பட்டவர்கள் என்பது முக்கியமல்ல. நாங்கள் எங்களை எப்படி மற்றவர்கள் முன் பிரதிபலிக்கின்றோம் என்பதே முக்கியம் என்பதை அமெரிக்கர்கள் உணர்ந்துள்ளார்கள்.

அதனை வெளிப்படுத்துவதற்கு ஹொலிவ+ட் திரைப்படங்கள், யுரியுப், இசை கோர்வைகள், சி.என்.என் போன்ற தொலைக்காட்சிகள் உதவிபுரிகின்றன. படைப்பாற்றல் ஒரு தனிமனிதனை ஊக்கப்படுத்தலாம் ஆனால் படைப்பாற்றலை எப்படி வருமானமாக மாற்றலாம் என்பதே முக்கியம். இதனை ஹொலிவ+ட் தயாரிப்பாளர்கள் உணர்ந்துள்ளனர். அவர்கள் மாற்றங்கள் ஒவ்வொன்றையும் வருமானம் பெறும் பொருளாக மாற்றுவதில் கைதேர்ந்தவர்களாக உள்ளனர். உலகமயமாதலின் வெற்றியை அவர்கள் அனுபவித்துவருகின்றனர்.

எப்பிடி எடுப்பியள் தீர்வு? : ஈழமாறன்

கஜேந்திரன் பொன்னம்பலம் அண்ணை இரண்டு தேசdeadendத்தில ஒண்டை கொண்டுவந்து தாறன் என்ர கட்சிக்கு அள்ளிப் போடுங்கோ என்று களம் இறங்கியிருக்கிறார். பாராளுமன்றத்துக்குள் போய்விட்டால் காணும் அதுக்குப் பிறகு இரண்டில ஒண்டு பாக்கஇறதாச் சொல்லுறார். வெளியில இருந்து ரண்டில ஒண்டை எடுக்கேலாதோ என்று மக்கள் கேட்டாலும் உள்ளை இருந்து கேக்கிறமாதிரி வருமோ என்று அண்ணை அள்ளி வீசியிருக்கிறார்.

மக்களின் தீர்வை பெற்றுக் கொடுக்க ஏன் பாராளுமன்றம் போகவேண்டும்? தமிழ் மக்களது எந்த உரிமை பாராளுமன்றத்தில பேசியதால கிடைச்சது? செல்வநாயகம் ,அமிர்தலிங்கம், சம்பந்தன் இவை எல்லாரும் பாராளுமன்றத்தில பாய் விரிச்சுப் படுத்தோ கிடந்தவை? அவை உரிமை வேணும் எண்டு கேட்டு ஒண்டுமே பேசவே இல்லையோ? அப்பிடிப் பேசியிருந்தால், கேட்டும் குடுக்கேல்லை எண்டா, கஜேந்திரன் எப்புடி ரண்டில ஒண்ட வாங்குவார்?

பாராளுமன்றத்தில போய் அழுது அழுது கேட்பாரோ? நேற்று ஊரில் இருக்கும் பெரியவர் ஒருவரிடம் கஜேந்திரன் சொல்லுறதை செய்வான் போல கிடக்கு அவருக்கே புள்ளடி போடலாமே என்று கேட்டன். அதுக்கு அவர் சொன்னார் “தம்பி, உழுற மாடு ஊருக்குள்ளையே உழும், பாராளுமன்றத்தில போய் உழவேண்டியதில்லை “என்று.

இன்னொருவரிடம் கேட்டேன் விலை போகாத தலமை , தூய்மையிலும் தூய்மை என்றெல்லாம் சொல்லுறாங்களே அவங்களை ஏன் நீங்கள் நம்பிப் புள்ளடி போடக்கூடாது என்று. அதுக்கு அந்த மனுசன் சொன்னபதில் எனக்கு கன்னத்தில விளாசினது போல இருந்திது. ஒருத்தன் நல்லவனோ கெட்டவனோ எண்டிறது அவன் விடுற விடுகையில இல்லைத் தம்பி அவன்ர வரலாறைப் பாருங்கோ எண்டார். அதுக்குப் பிறகு சொன்னார், அடி ஆமணக்கு நுனி நொச்சி மரம் எண்டு சொன்னா நம்புறதுக்கு நான் என்ன தம்பி அடி முட்டாளோ என்று.

விலை போகாத தலைமை ஏன் அமெரிக்காவின்ர நிதி நிறுவனத்தோட நிக்குது? விலை போகாத தலைமை ஏன் அமெரிக்கன் உயர்ஸ்தானியத்துக்கு அடிக்கடி போட்டு வருது.

இரண்டு தேசம் ஒரு நாடு. சொல்லும்போது நல்லாத்தான் இருக்கு ஆனா எப்பிடி இதை எடுப்பியள் எண்டு சொல்ல வேணும் தானே. பாராளுமன்றத்தில பறந்து பறந்து சுப்பர் மான் போல அடிச்சுக் கேப்பியளோ இல்லை, நல்லூர் கோயில் வாசலில நிண்டு நாதஸ்வரத்தில ஊதிக் கேப்பியளோ இல்லை, இரணமடுக் குளத்தில குதிச்சு செத்திடுவன் ஒரு தேசத்தை தா எண்டு கேப்பியளோ இல்லை, வடமாகாண சபைக்கு முன்னாலை அவித்துப் போட்டு ஆடுவம் தீர்வு வைக்கேல்லை எண்டா எண்டு மிரட்டுவியளோ அல்லது வடிவேல் பாணியில் அமெரிக்காவுக்கு போய் கடுப்பேத்திறார் மை லோட் என்று முழங்கிக் கேப்பியளோ? எப்பிடி எடுப்பியள். சொல்லத்தானே வேணும். அக்காக்கு பிடிச்சது ஆலமரப் பேய் எண்டு சொல்லுறமாதிரி தீர்வு சொல்லுறதே? பேய் பிடிச்சா ஒரு கட்டு வேப்பிலை. குறுக்கால போவாரே நீங்கள் சொல்லுறதுக்கு பலி குடுக்க வன்னில இனிச் சனம் இல்லை.

தாத்தன் பிரசா உரிமை பறிச்சு மிஞ்சிப்போன சனத்தில கொஞ்சம் வன்னியில இருக்கு அங்கை போய் எப்பிடி ராசா வாக்குக் கேட்பியள். உங்களை நாயை விரட்டிறமாதிரி நாட்டை விட்டு விரட்டின கட்சி அள்ளிப் போடுங்கோ என்று கேப்பியளோ?

வன்னியில சனம் அடுத்த வேளைச் சாப்பாட்டுக்கு அலையுதுகள். இவங்கள் அங்கை போய் வீரம் பற்றிக் கதைக்கிறாங்கள். முல்லைத்தீவுக்குப் போன் போட்டு கேட்டேன் ஒரே கஜேந்திரன் அலை போலகிடக்கு உண்மையோ என்று. அந்தாளுக்கு கோவம் வந்திட்டுப் போல. சொல்லிச்சு அப்பன் கிடந்தானாம் கோவணத்தோட மகன் சொன்னானாம் இழுத்துப் போத்துவிடப்பா என்று. நாங்கள் பட்ட காயம் ஆறேல்லை கொழும்பில சொகுசாப் படுத்துக் கிடந்திட்டு இரண்டு கொட்டை ஒரு பழம் எண்டு வாறாங்கள் என்று.

உண்மையாய் சொல்லுங்கோ. அம்மாவாணை இரண்டு தேசம் ஒரு நாடு எண்டா என்ன? கோதாரி விழ கூட்டமைப்பை விட இவங்கள் பெரும் கில்லாடிகளாய் எல்லோ கிடக்கு. வெளிநாட்டுக் காசு. அமெரிக்காவில இருந்து அட்வைசு, எலக்சன் கேட்க முன்னாள் போராளியள். உண்ணாணை சொல்லுங்கோ இந்த முன்னால் பின்னால் போராளியள் யாரவை? மகிந்தவுக்குப் பின்னால போனவையா, சனத்துக்கு முன்னாலை போய் சரண்டைந்தவையா? அமெரிக்காவோட நிண்டு காட்டிக் குடுத்தவையா, கேபியோட போனவையா, விமான நிலையத்தில பாப்போவோட நிண்டு தப்பிப் போகாமல் கோத்தாவுக்கு காக்கா பிடிச்சவையா? யார் ராசா இந்த முன்னாள் போராளியள்?

உது என்ன விளையாட்டு? மக்கள் உயிரை வைச்சு என்ன விளையாட்டு வேண்டிக் கிடக்கு? பகிடி விட உங்களுக்கு இரண்டு தேசம் ஒரு நாடு தான் கிடைச்சுதோ? விளையாடுங்கோ. கொழும்பில இருந்து வந்து எவ்வளவு காலத்துக்குத்தான் ஆடுறியள் எண்டு பாப்பம்.

ஐயனாரே ஒரு ஆட்டுக் கிடாய் நேந்து விடுறன் இருக்கிற மீதிச் சனத்தை நீதான் காப்பாத்தோணும்

கிரேக்கத்திலும் ஐரோப்பாவிலும் புரட்சி தோன்றலாம் – ஐரோப்பிய ஒன்றியம்

Capitalism-Crisis-logoஐரோப்பிய ஏகாதிபதியமும் அதன் அதிகாரவர்க்கமும் இப்போது முழு நிர்வாணமாக மக்கள் முன்னால் தம்மை வெளிக்காட்டியுள்ளன. முதலாளித்துவம் அதன் ஆரம்ப நாட்களான 16 ஆம் நூற்றாண்டில் போதித்த பாராளுமன்ற ஜனநாயகம் கூடச் சாகடிக்கப்பட்டுவிட்டது என பெரு முதலாளிகளின் நிர்வாகிகள் வெளிப்படையாகக் கூற ஆரம்பித்துவிட்டனர். ஜனநாயகம் என்பதெல்லாம் இனிமேல் சாத்தியமற்றது என கூச்சலிட்டு தமது முகத்திரையைக் கிழித்தெறிந்துள்ளனர்.

இதுவரை காலமும் வறிய மூன்றாமுலக நாடுகளில் வாழும் நாகரீகமடையாத மனிதர்கள் மத்தியில் தமது ஜனநாயகத்தை நடைமுறைப்படுத்தப் போகிறோம் எனக் கூறியவர்கள் ஐரோப்பாவின் கொல்லைப் புறத்திலேயே அது சாத்தியமற்ற கேலிக்கூத்து என கூற ஆரம்பித்துவிட்டனர். சர்வாதிகாரம். பாசிசம், நிறவாதம், இனவாதம் போன்றவை மட்டுமே அவர்களிடம் எஞ்சியிருக்கும் ஆயுதங்கள். அவைகூட மக்கள் மத்தியில் இனிமேல் சாத்தியமற்ற ஒன்றாகிவிடும் என முதலாளித்துவ அதிகாரவர்க்கத்தின் நிர்வாகிகள் கைவிரிக்கும் நிலை உருவாகி வருகின்றது.

கிரேக்க மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமையைக் குழி தோண்டிப் புதைத்துவிட்டு விரல்விட்டு எண்ணக்கூடிய பெரு முதலாளிகளின் நலன்களுக்காக மட்டுமே ஜனநாயகம் என்று அதிகாரவர்க்கம் வெளிப்படையாகக் கூற ஆரம்பித்துள்ளதை மக்கள் அவதானிக்கின்றனர்.

மிரண்டுபோயுள்ள அதிகாரவர்க்க நிர்வாகிகள்

டொனால்ஸ் ரஸ்க் : புரட்சி தோன்றலாம் என அச்சம்
டொனால்ஸ் ரஸ்க் : புரட்சி தோன்றலாம் என அச்சம்

கிரேக்கத்தில் நடைபெற்ற பொதுசன வாக்கெடுப்பில் மக்கள் தீர்மானித்திற்கு மாறாக அவர்களைத் தொடர்ந்தும் கொள்ளையிடுமாறு ஐரோப்பிய ஒன்றியம் கிரேக்க அரசுடன் ஒப்பந்தம் ஒன்றிற்கு வந்துள்ளது. அதற்கு எதிராக மக்கள் தொடர்ந்து போராடிவருவது அதிகாரவர்க்கத்திற்கு அச்சத்தைத் தோற்றுவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவரும் முன்னைநாள் போலந்துப் பிரதமரும் கிரேக்க அரசுடன் ஒப்பந்தம் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தியவருமான டொனால்ட் ரஸ்க் (Donald Tusk) தான் சார்ந்த அதிகாரவர்க்கம் மிரட்டப்படுவதை எந்தக் கூச்சமுமின்றி வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.

“கிரேக்கத்தில் தோன்றியுள்ள நிதி நெருக்கடி குறித்து நான் அச்சமடையவில்லை, அங்கு தோன்றியுள்ள கருத்தியல் மற்றும் அரசியல் குறித்தே நான் அதிக அச்சமடைகிறேன். 1968 ஆம் ஆண்டின் பின்னர் ஐரோப்பாவில் உருவாகிவரும் புரட்சிகரச் சூழலே ஆபத்தானது.” என்கிறார்.

86 பில்லியன் யூரோக்களை கிரேக்கத்தின் வங்கிகள் ஊடாகக் கடனாக வழங்குவதற்கு தனது பாராளுமன்றத்தைக் கேட்டுக்கொண்ட ஜேர்மனிட அதிபர் அஞ்சேலா மர்கெல் Angela merkel), “கிரேக்கத்திற்குக் கடன் வழங்காவிட்டால் அங்கு வன்முறைப் புரட்சி வெடிக்கும் அபாயம் உள்ளது” என்று உரையாற்றினார்.

marxஇந்த நிலமைகள் தொடர்பக குறிப்பு எழுதிய பிஸ்னஸ் இன்சைடர் என்ற சஞ்சிகை “கார்ல் மார்க்ஸ் வாழ்ந்த போது புன்னகையுடன் அவதானித்தது போல இன்று ஐரோப்பியத் தலைவர்கள் வன்முறை குறித்தும் புரட்சி குறித்தும்வெளிப்படையாகவும் வழமைக்கு மாறாகவும் துயரடந்து காணப்படுகின்றனர்.” என்கிறது.

கிரேக்க மக்களின் தீர்ப்பு…

கிரேக்கத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைப் பயன்படுத்தி அந்த நாட்டைச் சூறையாடிய வங்கிகளும் பல்தேசிய நிறுவனங்களும் கிரேக்க அரசை கடனாளி அரசாக மாற்றியிருந்தன. பல் தேசிய வியாபார நிறுவனங்களுக்கு வரிக் குறைப்பு செய்த அதே வேளை மக்களிடமிருந்து அதிக வரி அறவிடப்பட்டது.

சமூக உதவித் தொகை மற்றும் ஓய்வூதியம் போன்றன குறைக்கப்பட்டன. ஐரோப்பிய மத்திய வங்கியும், உலக நாணய நிதியமும் வழங்கிய கடன் தொகையில் பெரும் பகுதியை வங்கிகளும், பல்தேசிய வியாபார நிறுவனங்களும் சூறையாடிக்கொள்ள உழைக்கும் மக்கள் வறிய நிலைகுத் தள்ளப்பட்டனர். இந்த நிலையில் சிரிஸா (Syriza) என்ற இடதுசாரிக் கட்சிகளின் கூட்டமைப்பு கடந்க ஆண்டு ஆட்சியை கையகப்படுத்தியது.

தொடர்ச்சியாகச் சூறையாடப்பட்ட மக்களைப் பொறுத்தவரை ஏகாதிபத்தியங்களுக்கு எதிரான முழக்கங்களோடு முன்வந்த சிரிஸா மட்டுமே ஒரே தெரிவாகக் காண்ப்பட்டது.

சிரிஸா ஆட்சியமைத்ததும், ஐரோப்பிய ஒன்றியம் மேலும் கடன் வழங்க முன்வந்தது. மறுபடி உழைக்கும் மக்கள் மீது வரிச்சுமைகளை அதிகரித்து பல்தேசிய நிறுவனங்களை வியாபாரத்திற்கு அனுமதிக்கும் வகையில் சட்டங்களை மாற்றியமைக்குமாறு கிரேக்க அரசைக் கோரியது. மூன்று யூரோக்களாகவிருந்த கிரக்க உழைக்கும் மக்களின் குறைந்தபட்ச ஊதியத்தை நீக்கக் கோரியது. ஓய்வு பெறும் வயதெல்லையை அதிகரித்து ஓய்வூதியத்தைக் குறைக்கக் கோரியது.

இதனை தனது நாட்டின் மீதான மிரட்டல் என்று கூறிய கிரேக்கப் பிரதமர் சிப்ராஸ் மக்களிடமே முடிவை விட்டுவிடுவதாகக் கூறி 5ம் திகதி ஜூன் மாதம் சர்வசன வாக்கெடுப்பு ஒன்றிற்கு அழைப்பு விடுத்தார்.

அழைப்பு விடுத்த முதல் நாளே பல்தேசியக் கோப்ரட் ஊடகங்களிலிருந்து ஐரோப்பிய அரசுகள் வரை அனைத்து ஏகாதிபத்தியக் கூறுகளும் பொது வாக்கெடுப்பில் சிப்ராசிற்கும் சிஸ்ராவிற்கும் எதிராக வாக்களித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளுமாறு பிரச்சாரம் மேற்கொண்டன.

அவ்வாறு ஏற்றுக்கொள்ளாவிட்டால், கிரேக்கம் வறுமையின் பிடிக்குள் தள்ளப்பட்டு அழிவது உறுதியென்று மக்களை மிரட்டின. கிரேக்கத்தில் வெளியாகும் பெரும்பாலான ஊடகங்களும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஆதரவு வழங்குமாறு மக்களைக் கோரின. தீவிர இடதுசாரி அரசு கிரேக்கத்தில் பொருளாதார அவலத்தை ஏற்படுத்த முனைவதாக 24 மணி நேரப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

எல்லாவற்றிற்கு மேலாக ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் உலக நாணய நிதியத்திற்கு ஆதரவான கிரேக்க மக்களே அதிகம் என்றும், ஆக எதிர்த்தரப்பு வாக்களிப்புத் தோல்வியடையும் என்றும் போலியான கருத்துக்கணிப்புக்களை வெளியிட்டு மக்களை குழப்பத்திற்கு உள்ளாகின.

தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருந்த ஐந்தம் திகதி மாலை வரை ஊடகங்கள் அனைத்தும் இதனையே திரும்பத்திரும்ப பிரச்சாரம் மேற்கொண்டன. பரபப்புச் செய்திகளால் மக்களின் சிந்தனையில் வலிந்து மாற்றாத்தை ஏற்படுத்தாத இடதுசாரி ஊடகங்கள் மட்டும் உண்மையை வெளிப்படுத்தின.

இவர்கள் அனைவரதும் முகத்தில் அறைந்து பதில் சொன்ன கிரேக்க மக்கள் ஐரோப்பிய ஒன்றியம், ஐரோப்பிய மத்திய வங்கி, உலக நாணய நிதியம் ஆகியவை முன்வைத்த நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள மறுத்தனர். 62 வீதமான கிரேக்க மக்கள் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என வாக்களித்தனர்.

2001 – 2007 இற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் கிரேக்கத்தில் பணப்புழக்கம் அதிகரித்தது. பல்தேசிய வியாபார நிறுவனங்கள் தமது நடவடிக்கைகளை அதிகரித்தன. பல்தேசிய அங்காடிகள், உணவகங்கள், குடிபானங்கள், மருந்து நிறுவனங்கள், உல்லாசப்பயண நிறுவனங்கள் போன்றன கிரேக்கத்தை வளப்படுத்துவதாகக் கூறி தமது சூறையாடலை ஆரம்பித்திருந்தன. இந்த நிறுவனங்களுக்கான வரிவீதம் ஏனைய நாடுகளோடு ஒப்பிடும் போது குறைவாகக் காணப்பட்டதால் கொப்ரட்களின் சொர்க்கபுரியாகக் கிரேக்கம் திகழந்தது.

சூறையாடலை அங்கீகரித்த ஐரோப்பிய ஒன்றியம் பணப் பற்றாக்குறையை நிவர்த்திசெய்ய வியாபார நிறுவனங்களிடம் வரி அறவிடுமாறு கூறவில்லை. மாறாக அரசிற்கு கடன் வழங்கிற்று. கடன் தொகைக்கான வட்டியைத் திருப்பிச் செலுத்த மக்களைச் சூறையாடுமாறு கிரேக்க அரசை ஐரோப்பிய ஒன்றியம் கோரியது.

2008 ஆம் ஆண்டு உலகப் பொருளாதார நெருக்கடியில் கிரேக்கமும் சிக்கியது. நிதிவளம் ஒரு சில தனி நபர்களிடமும், நிறுவனங்களிடமும் குவிந்துவிட மக்களின் கொள்வனவுத் திறன் குறைவடைந்தது. இதனால் சிறிய வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டன. பல்தேசிய நிறுவனங்கள் அசுர பலத்தைப் பெற்றுக்கொண்டன. அரசுகளை அவர்களே தீர்மானித்தார்கள்.

2010 ஆம் ஆண்டில் £169 பில்லியன் தொகையை கிரேக்க அரசிற்கு வழங்கிய ஐரோப்பிய ஒன்றியமும், உலக நாணய நிதியமும் கிரேக்க அரசைச் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அழைப்புவிடுத்தன. மீண்டும் உழைக்கும் மக்களின் ஊதியத்தைக் குறைக்குமாறும், வேலையற்றோருக்கான உதவித்தொகையிலிருந்து ஓய்வூதியம் வரைக்குமான அனைத்து உதவித்தொகைகளையும் அரைவாசியாகக் குறைக்குமாறு கிரேக்க அரசைக் கோரின. அதற்கு இணங்கிய கிரேக்க அரசு மக்களை வறுமையின் பிடிக்குள் தள்ளின. பல்தேசிய வர்த்தக நிறுவனங்களும் வங்கிகளும் பணக்காரர்களும் தமது சலுககைகளைப் பெற்றுக்கொண்டு கிரேக்க அரசை ஆதரித்தனர்.

2014 ஆம் ஆண்டு சிஸ்ரா வெற்றிபெற்றதும் பல்தேசிய நிறுவனங்கள் முன்னிலும் அதிகமாகத் தமது பணத்தைக் கிரேக்க வங்கிகளிலிர்ந்து பெற்றுக்கொண்டு வெளியேறின. இந்த நிலையில் ஐரோப்பிய ஒன்றியம், ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் உலக நாணய நிதியம் ஆகியன முன்வைத்த நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள மறுத்த சிஸ்ரா அரசு வாக்கெடுப்பை நடத்தி வெற்றிபெற்றது.

போலிப் பிரச்சாரங்கள் மிரட்டல்கள் போன்றவற்றின் மத்தியில் மக்கள் வெற்றிபெற்றனர்.

மக்கள் தீர்ப்பை நிராகரித்த அதிகாரவர்க்கத்தின் சர்வாதிகாரம்

அதன் பின்னர் கிரேக்க மக்கள் மீது ஐரோப்பிய அதிகாரவர்க்கம் யுத்தம் ஒன்றை கட்டவிழ்த்துவிட்டது. கிரேக்கப் பிரதமர் சிப்ராஸ் உடன் பேச்சு நடத்திய ஐரோப்பிய ஒன்றியம் புதிய திட்டம் ஒன்றை ஏற்றுக்கொள்ளுமாறு மிரட்டியது. உழைக்கும் மக்களின் அடிப்படை ஊதியத்கைக் குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரியது.

புதிய ஒப்பந்தத்தின் அடிப்படையில், மின்சார சபை, விமான நிலையம் போன்ற பல்வேறு அரச சேவைகளைத் தனியார் மயமாக்குமாறு கோரப்பட்டுள்ளது. பொதுத் துறை ஊழியர்களைக் கண்காணித்து அதிக வேலை வாங்குமாறு அரசு கோரப்படுகின்றது. ஓய்வூதியத்திற்கான வயதெல்லையை அதிகரிக்குமாறு கோரப்படுகின்றது. பல்தேசிய வர்த்தக நிறுவனங்களின் கொள்ளைக்கு மேலும் வழியைத் திறந்துவிடுவதற்கு உணவு விடுதிகள், ஹொட்டேல்கள், நீர், மின்சாரம், மருந்துவகை போன்றவற்றிற்கான வரியை அதிகரிக்குமாறு கோரப்படுகின்றது.

மாற்று வழிகளை நிராகரிக்கும் சிப்ராஸ்..

கிரேக்கப் பிரதமரிடம் ஐரோப்பியக் கடனை நியாய விலையில் பெற்றுக்கொள்வதைத் தவிர வேறு திட்டங்கள் இருக்கவில்லை. இதனால் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு கடனுக்காகக் காத்திருக்கிறார். சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் மக்களின் அடிப்படை வசதிகளை அழிக்கும் இத்திட்டத்தை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. கிரேக்கத்தில் பல போராட்டங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொள்ளைக்கு எதிராக ஆரம்பித்தன.

புதிய சிக்கன நடவடிக்கை தோல்வியடையும் : முன்னை நாள் நிதியமைச்சர்
புதிய சிக்கன நடவடிக்கை தோல்வியடையும் : முன்னை நாள் நிதியமைச்சர்

ஆளும் இடதுசாரிக் கட்சியில் சிப்ராசின் சரணடைவிற்கு எதிரான போக்கு அதிகரித்தது. வாக்கெடுப்பு வெற்றிபெற்ற முதல் நாளிலேயே தனது பதவியைத் துறந்த நிதியமைச்சர் ஐரோப்பிய ஒன்றியத்தால் திணிக்கப்பட்ட மறுசீரமைப்புத் திட்டம் தோல்வியடையும் என எச்சரித்துள்ளார். கிரேக்கப் பிரதமர் சிப்ராஸ் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளும் நிலை காணப்பட்டதாலேயே பதவியை விட்டு விலகியதாகக் குறிப்பிடுகிறார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைகளுக்கு எதிராக கிரேக்கத்தில் மக்கள் போராட ஆரம்பித்துள்ளனர். தாம் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்த மக்கள் இன்றைய தமது தேவைகளைப் புறக்கணித்து தமது எதிர்காலத்திற்காகப் போராடுகின்றனர்.

ஐரோப்பிய முதலாளித்துவத்திடம் சரணடைந்த சிறுபான்மை கிரேக்க அரச உறுப்பினர்கள் கிரேக்கத்தின் பல பகுதிகளில் அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளனர்.

தாம் நிராகரித்த திட்டங்களை மீண்டும் திணிக்க முயலும் அரசுகும் ஐரோப்பிய முதலாளித்துவத்திற்கும் எதிராக மக்கள் மட்டுமல்ல ஆளும் சிஸ்ரா கட்சியிலும் பலர் குரல்கொடுக்க ஆரம்பித்துள்ளனர். ஆளும் இடதுசாரிக் கூட்டமைப்பில் 38 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐரோப்பிய ஒன்றியம் திணித்துள்ள நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள முடியது என வாக்களிக்க மறுத்துள்ளனர்.

ஐரோப்பிய அதிகாரவர்க்கத்தின் சதி…

கிரேக்க மக்கள் அமைதியாக ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். தமது அணிகளைப் பலப்படுத்திக்கொண்டு பல்தேசிய வியாபார நிறுவனங்களின் கொள்ளைக்கு எதிராக உழைக்கும் மக்களின் ஆட்சியை நிறுவும் நோக்கில் தம்மைத் தயார்படுத்திக்கொள்கின்றனர். அதற்கு எதிராக ஐரோப்பிய அதிகாரவர்க்கம் செயற்பட ஆரம்பித்துள்ளது. ஊடகங்கள் கிரேக்கர்களின் வன்முறை குறித்து அவதூறுப் பிரச்சாரங்களை துரிதகதியில் முடுக்கிவிட்டுள்ளன.

police violenceகிரேக்கத்தில் பொதுச் சொத்துக்களை நாசப்படுத்தியமைக்காக 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் கிரேகத்தைச் சார்ந்தவர்கள் அல்ல என அரசு அறிவித்துள்ளது. ஜேர்மனி, உக்ரையின், அவுஸ்திரியா, பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து சென்றவர்களே அவர்கள் என அடையாளம் காணப்படுள்ளதாக அந்த அறிவித்தல் கூறுகின்றது.

வேறு வழிகளற்ற அதிகாரவர்க்கத்தின் அடுத்த திட்டம்...?

ஐரோப்பிய ஒன்றியமும் அதிகாரவர்கமும் மக்களின் கோரிக்கைக்கு அடிபணிந்தால் இத்தாலி, ஸ்பெயின், போர்த்துக்கல் போன்ற நாடுகளில் மட்டுமல்ல, பிரித்தானியா பிரான்ஸ் ஜேர்மனி போன்ற நாடுகளிலும் பல்தேசிய நிறுவனங்களின் நலனுக்கான சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான மக்கள் போராட்டங்கள் அதிகரிக்க வாய்ப்புண்டு, இதனால் கிரேக்க மக்கள் மீது தமது திட்டத்தைத் திணிக்கவே ஐரோப்பிய அதிகாரவர்க்கம் முயல்கிறது.

அதற்கு எதிரான போராட்டங்கள் மீது வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிடவும், சதித்திட்டங்கள் மூலம் அழிக்கவும் ஐரோப்பிய அதிகாரம் முயற்சிக்கும். குறிப்பாக நிறவாதிகளையும், தேசிய வெறியர்களையும், அன்னிய மாபியாக்களையும் களத்தில் இறக்கும்.

சுயநிர்ணைய உரிமைக்கான தமிழ்ப் பேசும் மக்களின் போராட்டம் இனவாதப் போரட்டமாக மாற்றப்பட்டு சிதைக்கப்பட்டதைப் போன்று கிரேக்க மக்களின் போராட்டங்களையும் அழிப்பதற்கு அதிகாரவர்க்கம் முயற்சிக்கும்.

kajan_ponnampalamஒரு புறத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடாகச் சரணாகதியைப் போதிக்கும் ஏகாதிபத்தியங்கள் மறுபுறத்தில் மகிந்த ராஜபக்ச, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றவர்கள் ஊடாக இனவாதத் தீயை அணையாமல் பாதுகாக்கின்றன. கிரேக்கத்தில் தங்க விடியல் என்ற நிறவாதப் பாசிசக் கட்சி தங்குதடையின்றிச் செயற்படுகின்றது. மக்கள் அக்கட்சிக்கு எதிராக எழுச்சி பெற்றால் கிரேக்கத்தில் ஜனநாயகம் செத்துவிட்டதாக ஐரோப்பிய அதிகாரவர்க்கம் கூச்சலிடும்

எது எவ்வாறாயினும் ஏற்கனவே போராட்டங்கள் ஊடாக உரிமைகளைப் பெற்றுக்கொண்ட, அறிவியல் வளர்ச்சியில் முன்னணியிலுள்ள ஐரோப்பிய உழைக்கும் மக்களை ஈழத் தமிழர்களைப் போன்று ஏமாற்ற முடியாது.

தவிர ஐரோப்பிய நாடுகள் முழுவதும் முதலாளித்துவக் கொள்ளைக்கு எதிரான போராட்டங்கள் ஒரு வகையான ஜனநாயக ஐக்கிய முன்னணி ஊடாக எழுச்சி பெற்றுள்ளன. ஸ்பெயினில் 2014 ஆம் ஆண்டு பல்கலைக் கழகப் பேராசியரியரான லெகிலெசியாஸ் என்பவரால் ஆரம்பிக்கப்பட்ட பொடெமொஸ் என்ற இடதுசாரி முன்னணி, ஒரு வருடத்திற்கு உள்ளாக அந்த நாட்டின் இரண்டாவது பெரும் கட்சியாக மக்கள் ஆதரவைப் பெற்றுள்ளது. கிரேக்க மக்களுக்கு ஆதரவாக அக்கட்சி பல ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளது.

அதேவேளை இத்தாலியில் ஐந்து நட்சத்திர இயக்கம் என்ற அமைப்பு இத்தாலியின் இரண்டாவது பெரும் கட்சியாகப் பரிணாமம் பெற்றுள்ளது. நடிகரும் இணையச் சஞ்சிகை ஒன்றின் ஆசிரியருமான பீப்பே கிரில்லோ இனால் ஆரம்பிக்கப்பட்ட இடதுசாரி முன்னணி எதிர்கால இத்தாலியப் புரட்சியின் முகவுரையாகக் கருதப்படுகின்றது. இத்தாலி முழுவதும் செல்வாக்குப் பெற்றுள்ள ஐந்து நட்சத்திர இயக்கம் கிரேக்க மக்களின் போராட்டத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கி வருகிறது.

ஆக, ஐரோப்பிய முதலாளித்துவமும் உலகின் அதிகாரவர்க்கங்களும் மிரண்டுபோயுள்ள சூழல் சமூக மாற்றத்திற்கும், விடுதலைக்கும், புரட்சிக்கும் புதிய உத்வேகத்தை வழங்கிவருகின்றது. பழமைவாதப் பிற்போக்கு அரசியல் பிழைப்பு வாதிகளின் கைகளில் சிக்கிச் சிதைந்துபோன தமிழ்ப் பேசும் மக்களின் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டம் இந்த வெளிச்சத்தில் வெற்றிக்கான அடித்தளத்தை நிறுவிக்கொள்ளலாம்.

Merkel: Grexit could bring “chaos and violence”

Donald Tusk told the FT

Greece just taught capitalists a lesson about what capitalism really means

இசைப்பிரவாகம் மெல்லிசைமன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் : T.சௌந்தர்

MSVதமிழ் இசைத்தொன்ம ராகங்களில் ஆழ்ந்து மெல்லிசையின் உன்னதங்களை நமக்குக் காட்டிய முன்னோடி இசை மேதை எம்.எஸ்.விஸ்வநாதன் மறைந்து விட்டார்.

1940 களில் குடும்ப வறுமையால் சினிமாவில் நுழைந்து , அநதக் கால இசையமைப்பாளர்களின் அரவணைப்பை பெற்று, இசை உதவியாளராக உயர்வு பெற வெறும் அனுதாபம் மட்டும் காரணமாக இருக்கவில்லை. இயல்பான ஆற்றலும் , இசை மீதான தீராத காதலுடன் தான் அவரது இசை வாழ்வு தொடங்கியது.

“புது வசந்தமாமே வாழ்வில்
இனிதாய் சுகமே காண்போமே ” என்ற பாடலுக்கு மெட்டமைக்கப் போராடிக்கொண்டிருந்த இசையமைப்பாளர் எஸ்.எம்.சுப்பையாநாயுடுவுக்கு இன்று நாம் கேட்கும் அந்தப்பாடலின் மெட்டுக்கு இதமாய் மெட்டமைத்து காட்டி பாரட்டுப்பெற்றவர் எம்.எஸ்.விஸ்வநாதன்.திருச்சி லோகநாதன் பாடிய அந்தப் புகழ் பெற்ற பாடலே மெல்லிசை மன்னரின் முதல் பாடல்.

அன்றைய புகழ் பெற்ற அத்தனை இசையமைப்பாளர்களின் அறிமுகமும் ,அவர்களது இசைக்கு உதவியாளனாக பயணிக்க வைத்தாலும் இசைமேதை சி.ஆர்.சுப்பராமன் என்ற இசையமைப்பாளரின் உதவியாளனாக மட்டுமல்ல பிரதான ஹார்மோனியக் கலைஞனாக உயர்ந்தமை அவரது இசை வாழ்வுக்கு புதிய பரிமாணத்தைக் கொடுத்தது.சி ஆர் சுப்பராமன் மரணத்தால் இடையில் நின்று போன அவரது படங்களான தேவதாஸ்,சண்டிராணி போன்ற படங்களை மெல்லிசைமன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி இணைந்து முடித்தார்கள்.

எனினும் தனியே இசையமைக்கும் ஆர்வம் நடிகர் எம் .ஜி ஆர் நடித்த ஜெனோவா [1953] என்ற திரைப்படத்தின் மூலம் நிறைவேறியது.அந்தக்காலத்தில் புகழ் பெற்ற இசையமைப்பாளர்களான எம் .எஸ். ஞாமணி , டி.ஏ.கல்யாணம் போன்ற இசையமைப்பாளர்களும் இணைந்து இசையமைத்தார்கள். அந்தப்படத்தில் இடம் பெற்ற பாடல் பெரிய வெற்றியைத் தரமுடியவில்லை எனினும் ” பரலோக மாத பரிதாபம் இல்லை “[பி .லீலா ] , ” நானறிவேனே உங்கள் ஜாலம் ” [ஏ .எம் .ராஜா +பி. லீலா ], “ஆசையே அலை மோதுதே ” [ஏ .எம் .ராஜா +பி. லீலா ], போன்ற பாடல்கள் குறிப்பிடத்தக்கவை.

பின்னாளில் இரட்டையர்களாக என் .எஸ் .கிருஷ்ணன் அவர்களால் அறிமுகம் செய்யப்பட்ட
மெல்லிசைமன்னர்கள் என்ற இணை 1950 களின் இறுதியிலும் 1960 பத்களிலும் உச்சம் பெறத் தொடங்கியது.

மெல்லிசையில் உச்சங்களைத் தொட்டுக்கொண்டிருந்த ஹிந்தி திரைப்பட இசை போல தமிழ் திரையிசையையும் மெல்லிசைப்பக்கம் திருப்பியவர்களில் முதன்மையானவர்கள் மெல்லிசைமன்னர்கள்.

சம்பிரதாயமான ராகங்களிலேயே மரபு மாறாத இனிமையும் புதுமையும் மிக்க பாடல்களைத் தந்த அவர்கள் ,தமது காலத்தின் போக்காக அமைந்த உலக வெகுஜன இசையின் [பொப் இசையின் ] போக்குகளை எல்லாம் தமிழ் சினிமாவின் காட்சிக்கு ஏற்பசையை இசை தந்தார்கள்..

கர்னாடக இசை ராகங்களுடன் , ஹிந்துஸ்தானிய சங்கீத ராகங்களையும் ,ஹிந்துச்தானிய வாத்தியக்கருவிகளையும் இணைத்து பிரமிக்க வைக்கும் பாடல்களை அநாயாசமாகத் தந்து நம்மாலும் ஹிந்திப் பாடல்களுக்கு நிகராக இசையமைக்க முடியும் என நிரூபித்தார்கள்.

சாக்ஸபோன் , கிடார் ,ஹார்மோனிகா, ஒபோ , ட்ரம்பெட் ,கிளாரினெட்,பொன்கொஸ் போன்ற மேலைத்தேய , லத்தீன் அமெரிக்க இசைக்கருவிகளை இசை மேதை சி.ராமசந்திரா ஹிந்தி திரைப்படங்களில் பயன்படுத்தி புதுமை செய்தது போல ,அவற்றை தமிழ் திரை இசையில் புகுத்தி வெற்றிகண்டவர் மெல்லிசைமன்னர்கள்.

“உணர்ச்சியில்லாமல் நல்ல இசையை வழங்குதல் சாத்தியமற்றது..” என்பார் வயலின் இசை மேதை யகூடி மெனுகின் [Yehudi Menuhhin ] கூற்றுக்கு இணங்க உணர்வுகளை கிளறிவிடும் அற்புத கானங்களை தன்ன்னிகரற்று தந்தவர்கள் மெல்லிசைமன்னர்கள் என்பது இசைரசிகர்கள் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளும் கருத்தாகும்.

அவர்கள் இணைந்து இசையமைத்த பந்தபாசம் ,பாலும் பழமும் , பாகப்பிரிவினை ,பாசமலர் போன்ற படங்கள் மட்டுமல்ல பல்வேறு படங்களிலும் அவர்களின் இசை சோடை போனதில்லை.சாகாவரம் பெற்ற பாடல்களின் சொந்தக்கார்ரர்கள் மெல்லிசைமன்னர்கள்.

M+S+Viswanathan+msviswanathanதமில்செவ்வியல் இசையில் பாண்டித்தியம் பெற்ற ராமமூர்த்தியும் , உலக இசையின் மீதும் பேரரவம் கொண்ட தேடல்மிக்க விஸ்வநாதனின் கூட்டிணைவு தந்த வெற்றிக்கனிகளை தமிழ் மக்கள் பரிபூரணமாக அனுபவித்தனர்.

1950 களில் வெளிவந்த ” வான் மீதிலே இன்பத் தேன் மாரி பெய்யுதே” சண்டிராணி ], தென்றல் உறங்கிய போதும் திங்கள் உறங்கிய போதும்[பெற்ற மகனை விற்ற அன்னை ] , கண் மூடும் வேளையிலும் கலை என்ன கலையே , துள்ளி துள்ளி அலைகள் எல்லாம் என்ன பேசுவது[ , நான் அன்றி யார் வருவார் [ மாலையிட்ட மங்கை ] போன்ற சில பாடல்களும் ,பின் 1960 களில் வெளிவந்த பாடல்களை விபரிப்பது அவசியமற்றது.இருந்தாலும் சில பாடல்களை சொல்லியே ஆக வேண்டும்

மலர்ந்தும் மலரத பாதி மலர் போல [பாசமலர் ]
மாலைப்பொழுதின் மயக்கத்திலே நான் [ பாக்கியலக்சுமி ]
ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன் [ பாலும் பழமும் ]
ஒரு நாள் இரவில் கண் உறக்கம் பிடிக்கவில்லை [ பணத்தோட்டம் ]
கண்கள் எங்கே நெஞ்சமும் அங்கே [ கர்ணன் ]

இது போன்ற பாடல்களை பதத்திற்கு கூறி செல்லலாம்.எங்கெல்லாம் நல்லிசை கிடைக்குமோ அங்கெல்லாம் தேனிக்கள் போல சேகரித்து படைத்தவர்கள் மெல்லிசைமன்னர்கள்.

1965 மனக்கசப்பால் இரு மேதைகளும் பிரிந்தமை தமிழ் இசை ரசிகர்களுக்கு பேரிழப்பானதாகும்.தனித்து இசையமைத்தபின்னரும் வெற்றிக்கொடி நாட்டிக் காண்பித்தவர் விஸ்வநாதன்.

கனதிமிக்க ராகங்களைக் கையாண்டு வெற்றிகண்டு பாமரர்களை மட்டுமல்ல இசை அறிஞர்களையும் வியக்க வைத்தவர் விஸ்வநாதன்.

எத்தனை எத்தனைஇனிய மெட்டுக்கள் , இடையிசைகள் , எத்தனை எத்தனை வாத்தியங்கள் ,அதில் எத்தனை ,எத்தனை வியக்க வைக்கும் பிரயோகங்கள்!

பாட்டு என்றால் பாடுகிற படி இருக்க வேண்டும் என்பதின் இலக்கணமாக அமைந்த வகையில் பாட்டு வரிகளுக்கு உயிரோட்டமான இசையை தந்த நல்லிசையின் முன்னோடி விஸ்வநாதன்.

தனியே பிரிந்து இசையமைத்த சாகாவரமிக்க பாடல்களுக்கு சில உதாரணங்கள்..

பொன்னெழில் பூத்தது புது வானில் [கலங்கரை விளக்கம் ] இந்தப்பாடலின் இடையிசைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம்.
நிலவே என்னிடம் நெருங்காதே [ ராமு [
மௌனமே பார்வையால் ஒரு பாட்டு பாட வேண்டும் [ கொடிமலர் ]
நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா [ உயர்ந்த மனிதன் ]
பூமாலையில் ஓர் மல்லிகை [ ஊட்டி வரை உறவு ]
முத்துக்களோ கண்கள் [ நெஞ்சிருக்கும் வரை ]

1960 கள் மட்டுமல்ல 1970 களில் எத்தனை ,எத்தனை இனிமையான பாடல்கள்,,அப்பப்பா ,,!

இயற்க்கை என்னும் இளைய கன்னி [ சாந்தி நிலையம் ]
நிலவே நீ சாட்சி மன நிம்மதி நாடும் [ நிலவே நீ சாட்சி ]
சித்திரை மாதம் பௌர்ணமி நேரம் [ராமன் எத்தனை ராமனடி ]
பொட்டு வைத்த முகமோ
வசந்தத்தில் ஓர் நாள் மணவறை ஓரம் [ மூற்று தெய்வங்கள் ]
மஞ்சளும் தந்தாள் மலர்கள் தந்தாள் [தேனும் பாலும் ]

1970 களின் மத்தியில்

தென்றலுக்கு என்றும் வயது பதினாரன்றோ [பயணம்]
அதிசயராகம் ஆனந்த ராகம் [ அபூர்வ ராகங்கள் ]
வீணை பேசும் அதை மீட்டும் விரல்களைக் கண்டு [ வாழ்வு என் பக்கம் ]
ஏழு சுரங்களுக்குள் எத்தனை பாடல் [ அபூர்வ ராகங்கள் ]

மெல்லிசைமன்னரின் தனித்துவம் வாய்ந்த சிறப்பு என நான் கருதுவது அவரது தனித்துவமிக்க இசை ஆளுமையை பாடக,பாடகிகள் மீது பதிய வைப்பதே!அவரது ஆளுமை பாடும் பாடகர்களின் குரலிலும் துல்லியமாக துருத்தி நிற்கும் வண்ணம் பாதிப்பை ஏற்படுத்தி விடுவதை நாம் கேட்கலாம்.

எந்த பெரிய பாடகர் பாடும் பாடலிலும் விஸ்வநாதனின் இசை ஆன்மா வெளிப்பட்டு நிற்கும்.

திரைபாடங்களுக்கு மட்டுமல்ல ,பக்திப்பாடல்கள் , தனிப்பாட்டல்கள் போன்றவற்றிற்கும் இசையமைத்தவர் மெல்லிசைமன்னர்.வாத்திய இசையாக அவர் வடித்த Thrilling Thematic Tunes என்கிற இசை வடிவம் இசைஞானி போன்றோர் பின்னாளில் செய்த வாத்திய இசை வடிவங்க்ளுக்கு ஆதர்சமாக இருந்தது எனலாம். அவர் இசையமைத்த பக்திப்பாடல்களில் சில ..

புல்லாங் குழல் கொடுத்த மூங்கில்களே
ஆயர் பாடி மாளிகையில்

இலங்கை வானொலியில் ” பொங்கும் பூம்புனல் ” என்ற நிகழ்ச்சியின் முன்னிசை மெல்லிசை மன்னரின் Thrilling Thematic Tunes இல் வருகின்ற அழகிய இசைத்துணுக்காகும்.பிரமிக்கத்தக்க வகையில் அமைக்கப்பட்ட புல்லாங்குழல் இசையை நாம் அதில் கேட்டு மகிழ்ந்தோம்.

மெல்லிசையின் வற்றாத ஊற்றாக பொங்கி பிரவாகித்த மெல்லிசைமன்னரின் கற்பனை வளம் விரிந்து சென்றது.தன்னெழுச்சியாக மெட்டுக்களை அள்ளி வீசுவதும் , சளைக்காமல் புதிய புதிய சந்தங்களை அள்ளி வீசுவதிலும் அவருக்கு அவரே நிகராக இருந்தார்.

அவருடன் இணைபிரியா சகபாடியாக இருந்த கவிஞர் கண்ணதாசன் மெல்லிசைமன்னர் பற்றி இப்படி நினைவு கொள்கிறார் ..

” அவனுக்கு இசையை தவிர வேறு ஒன்றும் தெரியாது.அவன் அரசியல், உலக நடப்புக்கள் பற்றி கேட்டால் சிரிப்பாக இருக்கும். ஆனால் இசை என்று வந்தால் , உலகெங்கிலும் என்னென்ன இசை உண்டு என்பது அவனுக்கு தெரியும். Light Music இல் அவன் INTERNATIONAL .”

அவர் இசையமைத்த அற்புத பாடல்களை எப்படி சீரழித்து விட்டார்கள் என்பதை இப்போது காட்சிகளாகக் காண சகிக்க முடியவில்லை.பாடல்களின் சிறப்புக்களால் தங்களை நிலைநிறுத்திக் கொண்டவர்கள் நடிகர்கள் மட்டுமே.

அவர் படைத்த அற்புத கானங்களால் காண சகிக்காத காட்சிகள் உலாவிக்கொண்டிருக்கின்றன.சகிக்க முடியாத வானொலிகள் , தொலைக்காட்சிகள் உயிர் பெற்றுக்கொடிருக்கின்றன.

இப்பட்டிப்பட்ட ஓர் அபூர்வ இசைமேதையை தகுந்த முறையில் கௌரவிக்காத ஒரு நாட்டில் ,இசை வீணர்களுக்கு டாக்டர் பட்டங்களும்,கௌரவங்களும் கொடுத்து விருதுகளை கேவலப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

“நீராரும் கடலுடுத்த நிலமடந்தை ” தமிழ் நாட்டின் அடையாளப்பாடலை பண்டைத் தமிழர் பொற்றி வளர்த்த முல்லைப்பண்ணான இன்றைய மோகனத்தில் நம் மரபிசையின் மேன்மையை நெகிழ தந்த இசை மேதையை ,வீணாய் போன இந்த சகட்டுமேனி விருதுகள் கொடுத்து கேவலபடுத்த முடியாது.

அது போன்ற விருதுகளைப் பெறுவது நல்லிசை மேதைகளுக்கு பெருத்த அவமானமானதாகும் .

பிறப்பால் மலையாளியாகப் பிறந்து தமிழ் திரை இசையை தன ஆற்றலாலும் ,கடின உழைப்பாலும் வளர்த்த இசை மாமேதை எம் எஸ் விஸ்வநாதன் அவர்கள் பற்றி இசைஞானி சொல்வது நமக்கும் சாலப்பொருந்துகிறது.

” அவரது இசை என் நாடி , ஊறிக்கிடக்கிறது ” !

அவருடைய பாடல்கள் நல்ல இசை ரசிகர்களின் நாடி ,நரம்புகளிலெல்லாம் ஊறித்தான் கிடக்கிறது.

பாசமலர் படத்தில் அவர் பாடும் ” அன்பு மலர் ஆசை மலர் ” தமிழர்கள் காதுகளில் என்றென்றும் ரீங்காரமிட்டுக் கொண்டே இருக்கும்.


கோமா சக்தி – சிறுகதை : சு அகரமுதல்வன்

அடிப்படைத் தர்மங்களில் இருந்து மாறுபட்டவனிடம் நியாயம் கேட்க முடியாது.

கிரேக்க பழமொழி

இலக்கியப் பத்திரிகையின் அட்டைப் படமாகவே புகைப்படம் போடப்பட்டு கோமா சக்தியின் வரலாற்றுச் சிறப்பு மிக்க நேர்காணல் ஒன்று வெளி வந்திருப்பதாக திரு.முடுலிங்கவிடம் அவரது வேலைக்காரன் போய்ச் சொல்லிய போது அவர் குரல் வளைத் தாடி மயிரை சேவ் எடுத்துக் கொண்டிருந்தார். நல்ல காலம் முடுலிங்க கோபம் கொள்ளும் ஆள் கிடையாது என்பதால் தனது குரல் வளையை தன்னிடமிருந்து காப்பாற்றிக் கொண்டு கண்ணாடியில் தனது முகத்தைக் கழுவினார். முகம் எப்போதும் போல வடிவாயிருந்தது என்றாலும் முகத்தில் எடுபடாமல் தவறவிடப்பட்ட மயிர்கள் அவரெழுதும் சிறுகதைகளைப் போல தீவிரமற்று பயணச் சோம்பலில் கிடந்தது. ரோஸ் நிறத் துவாயால் முகத்தைத் துடைத்தபடி வேலைக்காரனைப் பார்த்து வாங்கி வந்தனியா அந்தப் புத்தகத்தை என்று கேட்டதும் வேலைக்காரன் என்னவோ முடுலிங்கத்திற்கு விருது கொடுப்பவன் போல புத்தகத்தை இரண்டு கைகளும் நிமிர்த்திப் பிடித்து கொடுத்தான். முடுலிங்கத்திற்கே விருதா என்று நீங்கள் கேட்கும் கேள்வி நியாயமானது என்றாலும் வேலைக்காரன் தோட்டத்தில் தானே வேலை செய்கிறான் அவனுக்கும் ஒரு தோட்ட விருதை வழங்கும் உரிமை இருக்குத்தானே.

முடுலிங்கவின் முகத் தோற்றம், வயது உயரம் எல்லாம் உங்களுக்கு தேவை இல்லாதது. முடுலிங்கம் சிறுகதை எழுதும் புலம்பெயர்ந்த ஈழத் தமிழ் எழுத்தாளர். நீங்கள் தமிழர்களின் தனி நாட்டுக் கோரிக்கைக்கு எதிரானவர் என்றாலும் இவரின் கதைகளை படிக்கலாம். அவரின் கதைகளில் சொந்த நாடு பற்றி நாட்டம், ஏக்கம் கூட இருக்காது. அவர் கண்டதையும் வாழ்ந்ததையும் எழுதும் தார்மீக எழுத்து அறம் கொண்டவர். கதைகளுக்காக முடுலிங்கம் யதார்த்தத்தில் சிறு புனைவை கொண்டு வருவாரே தவிர கதைகளையும் சம்பவங்களையும் மாற்றுவது கிடையாது. முடுலிங்கத்திடம் அயோக்கியத்தனம் கிடையாது. மகா பொய் சொல்லி தன்னையொரு இடதுசாரி புரட்சியாளனாகவும் புரட்சியாளர்களின் சிந்தனைகளை அப்படியே பின் பற்றி நடப்பவன் போலவும் கதைக்கத் தெரியாது. தானும் புலிகள் இயக்கத்தில் இருந்தவன் என்றோ அல்லது பிரபாகரனுக்கு ஆலோசாகராக இருந்தனான் என்றோ ஒரு பொய்யை சொல்லிக் கொண்டு அடையாளம் பெறவும் அவருக்கு விருப்புக் கிடையாது. அவருக்கு படிச்சதுக்கு ஏற்ற தொழில் இருக்கிறதால ஒரு பிரச்னையும் இல்லை.

அவர் சிரிச்சு முடியத் தான் வேலைக்காரன் தேத்தண்ணியைக் கொடுத்தான், முடுலிங்கம் தேத்தண்ணியை வாங்கிக் குடிச்சுக் கொண்டு வேலைக்காரனுக்கு இரண்டு அப்பிள்களை துண்டு துண்டாய் வெட்டிக் கொண்டு வரும்படி கேட்டுக்கொண்டதோடு பக்கம் 30ல் தொடங்கும் கோமா சக்தியின் நேர்காணலை வேலைக்காரனுக்கு வாசிச்சுக் காட்டுவதாகவும் வேகமாய் வந்து கதிரையில் இருக்கும் படியும் முடுலிங்கம் சொன்னது தான் தாமதம் வேலைக்காரனுக்கு குண்டியில அடிச்ச புளுகம். இரண்டு அப்பிளையும் தோல் சீவி துண்டு துண்டாய் வெட்டிக் கொண்டு வந்து மேசையில் வைத்து விட்டு கதிரையில் இருந்து விட்டான். முடுலிங்கம் வீபூதியை பூச மறந்து இருக்கிறார் எண்டதையே வேலைக்காரன் சொல்லவே இல்லை. அவன் கள்ள மவுனத்தை பூசாத வீபூதியில் பழகிக்கொண்டான்.

சுங்கப்பனை விருது புலிகள் இல்லாமல் போனதினாலேயே சாத்தியமாகியது, முடுலிங்கம் வாசிக்கத் தொடங்கும் நேர்காணலின் தலைப்பு இப்படி இருந்தது.

நேர்காணலை முடுலிங்கம் வாசிக்கும் தொனியை என்னால் உங்களுக்கு உணர்த்தமுடியாது. அவர் ஒரு அதியுச்ச கோபத்தோடு ஒருவனை தூசணத்தால் ஏசுவதைப் போன்று வாசித்தார். அந்த நேர்காணலே உங்களுக்காக.

கே – ஈழத்தில் நடந்த இனப்படுகொலை தொடர்பாக உலக அரங்கில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் தமிழர்க்கு சாதகமானதாக அமையும் தருணங்களில் கீபன் படத்தையும் எடுத்துக்கொள்ளலாமா?

கோ – புலிகள் இல்லாமல் போனதே ஈழத் தமிழர்களுக்கு சாதகமானது தானே. பாசிசத்தையும் அராஜகத்தையும் மக்கள் மீது நடாத்திக் கொண்டிருந்த புலிப் பாசிஸ்டுகள் மக்களுக்கு எதையும் செய்யமாட்டார்கள் என்பதை எமது தோழர்கள் கடந்த காலங்களில் சொன்னதை நான் நினைவு கூற வேண்டும். இன்றைக்கு உலகளவில் ஈழம் வல்லரசுகளின் பசியைப் போக்கவல்ல இரையாக மாறியிருக்கிறது. என்றாலும் பிரான்ஸ் மக்களிடம் ஈழத் தமிழர்கள் தொடர்பாக ஒரு இரக்கம் இருக்கிறது. அதன் வெளிப்பாடு தான் கீபன் திரைப்படம். அதற்கு உலகளவில் உயரிய விருதான கோண் விருது வழங்கப்பட்டிருப்பது சாதகமான சூழலைத் தான் காட்டுகிறது. சுங்கப்பனை விருது புலிகள் இல்லாமல் போனதினாலேயே சாத்தியமாகியது.

கே – உண்மை தான், நீங்கள் ஒரு எழுத்தாளாராக உலகப் பெயர் பெற்றவர், புலிகள் இயக்கத்தில் இருந்து பின்னர் அதிலிருந்து வெளியேறி குறித்த இயக்கம் மீதே பல்வேறு விமர்சனங்களை முன் வைத்தவர். இப்பொழுது உலகப் புகழ் பெற்ற நடிகர், எதுவாக இருப்பது சுலபம்?

கோ – எல்லாவற்றுக்கு தேவை இருப்பதாகவே நான் உணர்கிறேன். புலிகளை விமர்சனம் செய்வதின் ஊடாக நான் சத்தியத்தின் பக்கம் நிற்க ஆசைப்படுகிறேன், சாதியை ஒழிக்க அரும்பாடு படுகிறேன். எழுதுவதன் ஊடாயும் இதனையே நடிப்பதின் ஊடாகவும் இதனையே செய்ய விரும்புகிறேன். நடிப்பு என்பது இங்கு கமல்ஹாசன் செய்வதோ எம்.ஜி.ஆர் செய்ததோ அல்ல, பிரான்சின் புகழ் பூத்த பெரிய நடிகரான சூர்ஜ் எனக்கு சொல்லிக் கொடுத்தது தான் நடிப்பு.

கே – நீங்கள் கீபன் திரைப்படத்துக்கான கோண் விருதைப் பெற்ற அந்தத் தருணம் குறித்து சொல்ல முடியுமா?

கோ – ஒரு கதாசிரியராக எனக்கு கோண் விருது முக்கியமானது. மாபெரும் மேடையில் கீபன் திரைப்படத்துக்கு தான் பத்து நிமிடங்களுக்கு மேலே கை தட்டினார்கள், இதைவிட என்ன வேண்டும் அந்தத் தருணத்துக்கு.

கே – இந்தத் திரைப்படத்தில் நீங்கள் பல்வேறு ரீதியாக பங்களிப்பு செய்திருக்கிறீர்கள், உங்கள் இயக்குநர் ஜோக் போடியார் குறித்து சொல்லுங்களேன்?

கோ – அவர்கள் பிரான்சின் பரம்பரை சினிமாக்காரர்கள் அவரது அம்மாவும் அப்பாவும் கூட இயக்குனர்கள் தான். படப்பிடிப்பில் ஒரு கோணத்தில் சரியான ஷாட்ஸ்களை ஓகே என்றாலும் அதே ஷாட்ஸ்சை பல தடவை வேற மாதிரி எடுப்பார்.

கே – எந்த மாதிரியான பாத்திரம் ஏற்று இந்த படத்தில் நடித்திருக்கிறீர்கள்?

கோ – நான் கடல் வழியாக தமிழ்நாட்டிற்கு வரும் ஒரு புலிப் பாசிஸ்டாகவே நடித்திருக்கிறேன், அந்த இயக்கத்தில் நான் இருந்ததினால் எனக்கு அதனை நடிப்பதில் எந்த பிரச்னையும் இல்லை. ஒரு புலிகள் இயக்கத்தவன் எப்படியான உடல் மொழிகளை கொண்டிருப்பான் என்றெல்லாம் எனக்குத் தெரியுமென்பதால பிரச்னை கிடையாது.

முப்பதாவது பக்கத்தின் முடிவில் இந்தக் கேள்வி தான் இருந்தது. முடுலிங்கத்திற்கு நீண்ட நாட்களின் பின் தூசணத்தால் பேசவேண்டும் என்று தோன்றியதும் மனிசன் பிரஞ்சு தூசணம் ஒண்டை பேசினார். கோமா சக்தி ஆங்கில படமொன்றில் நடித்திருந்தால் Fuck என்று எல்லோருக்கும் தெரிந்த ஒரு தூசணத்தை தான் முடுலிங்கம் பேசியிருப்பார். நல்ல காலம் அது தமிழ்ப் படமாய் இருக்கவில்லை. பத்திரிக்கையை ஸ்டூலில் வைத்துவிட்டு தட்டில் இருந்த அப்பிள் துண்டொன்றை கடித்துக் கொண்டே வேலைக்காரனையும் சாப்பிடும் படி கையால் காட்டினார். அப்பிள் துண்டை கையில் எடுத்த வேலைக்காரனுக்கு முகப்பு அட்டையை மீண்டும் ஒரு தடவை பார்த்து விடவேண்டும் போல தோன்றியது. புத்தகம் வாசிக்கப்படவிருக்கும் 31வது பக்கத்தை மடித்து குப்புற வைக்கப்பட்டிருந்தது. தட்டில் அப்பிள்கள் முடிந்து போய்விட்டதையடுத்து போத்தலில் இருந்த தண்ணியை அட்டனக்கால் போட்ட படி குடித்த முடுலிங்கம் மீண்டும் ஒரு தடவை தூசணம் ஒன்றை பேசினார். அது எந்த மொழியிலானது என்று தெரியாவிட்டாலும் அது தூசணம் தான் என்பதை வேலைக்காரன் விளங்கிக் கொண்டான்.

koma_shakthiஉள்ளி கண்ட இடத்தில பிள்ளைப் பெறும் பழக்கத்தை உலகத்துக்கு சொல்லிக் கொடுக்க இவனை விட ஆள் இல்லையெண்டு முடுலிங்கம் சொன்னதை கையில் கிடந்த கடைசி அப்பிளைக் கடிச்சுக் கொண்டே வேலைக்காரன் கேட்டுக் கொண்டேயிருந்தான். உலக வல்லாதிக்கத்தையும் காலனி ஆதிக்கத்தையும் மார்க்ஸ்சுக்கு பிறகு தான் தான் எதிர்க்கிறவன் போல கதைச்சு எழுதின நடிப்பை விட இவன் இதில நடிக்க வாய்ப்பில்லை. மார்க்ஸ் என்றால் கா.மார்க்ஸ் என்று மீண்டும் முடுலிங்கம் அழுத்திச் சொன்னார். இரண்டு நாள் இயக்கப் பொடியளோட பேசிகுள்ள போய்ட்டு வந்திட்டு நானும் புலிகள் இயக்கத்தில இருந்தவன் எண்டு சொன்னால் நம்புறதுக்கு எல்லாரையும் என்ன குறுப்பு பரிதி ரசிகர்கள் என்று நினைச்சிட்டார் போல,

வெளியில் அவ்வளவு கொடும்பனி பெய்து கொண்டிருந்தாலும் முடுலிங்கத்தின் முகத்தில் தீக்குழம்பு பெருகுவதை பார்த்து குட்டி ஆடு விறைத்திருப்பதைப் போல வேலைக்காரன் இருந்ததையும் அவர் பொருட்படுத்தவில்லை. குப்புற மடித்துக் கிடந்த முப்பத்தோராவது பக்கத்தை எடுத்து மீண்டும் வாசிக்கத் தொடங்கினார்.

கே – ஒரு நடிகராக ஆகிவிட்டீர்கள்? ஈழப் பிரச்னை குறித்த தமிழ்த் திரைப்படங்களில் நடிக்க கேட்டால் ஒப்புக்கொள்வீர்களா?

கோ – தமிழ் நாட்டு சினிமாக்காரர்களுக்கு ஈழப் பிரச்னை குறித்து ஒரு மொட்டையான கருத்துத் தான் இருக்கிறது. அவர்கள் சீமான் மேடைகளில் பேசுவதையே குறிப்பாக எடுத்து ஈழத் திரைக்கதையை வடிவமைக்கிறார்கள். மாபெரும் பாசிச அமைப்பான புலிகள் அமைப்பை அவர்கள் கொண்டாடத் துடிக்கிறார்கள். என்னால் ஒரு தமிழ்ப் படத்தில் நடிக்க முடியுமெனில் அது குழந்தைப் போராளிகளை பாலத்காரமாக சேர்த்தது குறித்தோ புலிகள் வழங்கிய மரணதண்டனைகள் குறித்தோ எடுக்கப்படவேண்டும்.

கே – கீபன் திரைப்படத்தில் உங்கள் படைப்புகளில் வந்த பாத்திரங்கள் ஏதேனும் வந்திருக்கிறதா?

கோ – நான் எனது படைப்புகளில் வந்தவன் தானே. அதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு திரைக்கதையில் மாற்றங்களை செய்யும் அதிகாரம் எனக்கு வழங்கப் பட்டிருந்தது. கடைசிச் சண்டையின் போது என்னோட மட்டக்களப்பு கடைக்கு மேல ஷெல் விழுந்தது என்று ஒருவர் சொல்வதாக அந்த வசனம் இருக்கும். ஆனால் இறுதிச் சண்டை மட்டக்களப்பில் நடக்கவில்லை என்று நான் இயக்குனரிடம் சொன்னதன் பின்னர் அந்த வசனம் மாற்றப்பட்டது. அது போல யாழ்ப்பாணச் சண்டையில 2006ம் ஆண்டு காயப்பட்டனான் எண்டு ஒரு வசனம் இருக்கும் அதையும் மாத்தினான்.1996க்கு பிறகு யாழ்ப்பாணத்தில் யுத்தமே நடக்கவில்லை. இதைப் போல என்னால் இயன்றவற்றை செய்தேன்.

கே – அடுத்து உங்களின் படைப்புத் திட்டம் என்ன நீங்கள் ஏன் ஒரு திரைப்படத்தை இயக்கக் கூடாது ?

கோ –. படைப்பு என்றால் அடுத்து என் நாவல் ஒன்று வெளிவரவிருக்கிறது. அதன் பெயர் Fox குதைப் புத்தகம். மிக விரைவில் நீங்கள் கேட்பது சாத்தியமாகலாம். அப்படி இயக்கும் பட்சத்தில் ஈழத்தில் 37 முட்டாள் இயக்கங்களும் செய்த மனிதப் படுகொலைகள் குறித்தும் இஸ்லாமியர்களை புலிகள் வெளியேற்றியமை குறித்தும் ஒரு நல்ல திரைக்கதையை படமாக்குவேன்.

முடுலிங்கம் புத்தகத்தை மூடி ஸ்டூலில் வைத்தார். வேலைக்காரன் முகப்பு அட்டைப் படத்தை இன்னொரு தடவை பார்க்கிறான். அந்தப் புகைப்படத்தில் உள்ள எழுத்தாளனின் ஜெல் பூசப்பட்டு மேவி இழுக்கப்பட்ட ஒவ்வொரு தலைமயிரிலும் பேன்களைப் போல பொய் ஓடிக்கொண்டேயிருந்தது. அது ஈர்களைப் போல குஞ்சுகளைப் பொரிக்காமல் கிபிர் குண்டுகளைப் போல பொய்களைப் வெடித்துக் கொண்டேயிருந்தது. பொய்கள் அவ்வளவு பெருத்துப் போய் தலையெங்கும் ஊர்ந்து கொண்டேயிருந்தது.

இது வேலைக்காரனின் கண்கள் தான். இந்த மயிர்,பொய் எல்லாமே அவன் சொன்ன வார்த்தைகள் தான். அவன் ஒரு அல்ஜீரியன் என்றாலும் அவனுக்கு தமிழ் அத்துப்படி.முடுலிங்கத்தோடு பதினஞ்சு வருஷம் இருந்து அவன் ஆங்கிலத்தையும் தமிழையும் கரைச்சுக் குடிச்சிட்டான். ஈழப் பிரச்சனையில இருந்து பாலஸ்தீன பிரச்னை வரைக்கும் அரசியலில மிகத் தெளிவு. பிரபாகரன் குறித்து தமிழ்நாட்டில் எழுதப்படும் புத்தகங்களில இருக்கிற சம்பவ பிழைகளையே சொல்லிக் கவலைப்படுகிற ஆள் எண்டால் பாருங்கோ. தானொரு இஸ்லாமியன் என்பதில் அவன் பெருமைப்பட்டுக்கொள்கிறவன். மேற்குலக பார்வையில இஸ்லாமியர்கள் எவ்வாறு பார்க்கப்படுகின்றனர் என்பது குறித்த கவலையையும் கோபத்தையும் முடுலிங்கவோடு பகிர்ந்திருக்கிறான். அவனின் பெயரை வேண்டுமென்றால் உங்களுக்கு சொல்லலாம் முகமத் நூர்.

ஆபிரிக்காவிலும் ஆசியாவிலும் மனிதப் படுகொலைகளை செய்து இன்றைக்கு வரைக்கும் மன்னிப்புக் கேட்காத பிரான்ஸின் செங்கம்பள விரிப்பில நிண்டு கொண்டு சனநாயகம் பற்றி கதைக்கிற இவன் எல்லாம் மனிசனே கிடையாது என்று முடுலிங்கம் காலை ஸ்டூலில் தூக்கி வைத்துக் கொண்டே சொன்னார். பாலஸ்தீனத்தில் இண்டைக்கும் மக்களை குண்டு போட்டுக் கொல்கிற யூதர்களின் தேர்வில விருது வாங்கிக் கொண்டு என்னெவெல்லாம் கதைக்கிறார் எண்டு பார்த்தீரே. உலகச் சந்தைகளுக்கு படம் பண்ணிக்கொண்டு உலகமயமாதல் பற்றிக் கதைக்கிறதெல்லாம் எவ்வளவு பெரிய அவமானம்.

முகமத் நூர் எதுவும் சொல்லவில்லை, அவன் முடுலிங்க பேசுவதை கைகளை கட்டிக் கொண்டு கேட்டபடியே இருக்கிறான். விடுதலையும் புரட்சியையும் உலகுக்கு சொல்லிக் கொடுத்த பிரான்ஸ் ஆசியாவுக்கும் ஆபிரிக்காவுக்கும் விடுதலையை கொடுத்ததே கிடையாது நூர். எங்களுக்கு நடந்த இன ஒடுக்குமுறை குறித்து பிரான்ஸ் வாயே திறக்கவே இல்லை.இண்டைக்கு மைத்திரியை ஆதரிக்குது. மைத்திரி கீபன் விருது வாங்கியமைக்கு வாழ்த்து தெரிவிச்சு அறிக்கை விடுகிறான். அந்தப் படம் ஒரு குப்பை. மேற்குலகத்தின் இஸ்லாமிய எதிர்ப்பு பிரச்சாரத்துக்கு தாளம் போடுது. அதில நடிச்சுப் போட்டு இஸ்லாமிய வெளியேற்றம் குறித்து படம் பண்ணப் போறேன் எண்டு சொலுறது தான் சிரிப்பாய்க் கிடக்கு.

பிரான்ஸ்ஸில் வாழும் எல்லாம் இஸ்லாமியர்களையும் வேற்றின மக்களையும் மாபியாக்கள் எண்டு சொல்லும் படத்தில நடிச்சுப் போட்டு நாளைக்கு மார்க்ஸ் எங்கெல்ஸ் லெனின் மாவோ அம்பேத்கர் பெரியார் என்று எல்லா புரட்சியாளர்களையும் புகழ்ந்து ஒரு கட்டுரை எழுதக் கூடும்.

37 ஈழ இயக்கங்கள் முட்டாள் தனமாய் இருந்தது என்றும் பிரபாகரன் பாசிஸ்ட் என்றும் கதை எழுதிக் குவிக்க இனி பிரபாகரனும் இல்லை புலியும் இல்லை. உண்மையா கொழும்பு ஆட்சியாளர்களுக்கு புலிகள் இல்லாதது அவங்கட அரசியலுக்கு எப்படி பின் அடைவா இருக்கோ அப்படி கோமா சக்திக்கும் பின் அடைவு தான்.

தமிழ்நாட்டில இவர் சொல்லுறது தான் சத்தியத்தின் தேவ வாக்காய் நம்புகிறதுக்கு இன்னும் ஆக்கள் இருக்கிறது தான் கவலையாய் இருக்கு என்று சொல்லி முடித்த முடுலிங்கவிடம் நூர் இப்படிச் சொல்லத் தொடங்கினான்.

31வது பக்கத்தில வாற கேள்வியொன்றில கடைசிச் சண்டை மட்டக்களப்பில நடக்கவில்லை எண்டு சொல்லிச் சொல்லுவதும், யாழ்ப்பாணத்தில 96க்கு பிறகு சண்டை நடக்கவில்லை எண்டு சொல்லுவதும் சரியான பிழை. கடைசிச் சண்டை என்று இவர் நினைக்கிறது மே -18ம் திகதியைப் போலத் தான் கிடக்கு. கிழக்கு மாகாணத்தில இருந்து தானே கடைசிச் சண்டையை மகிந்த தொடங்கினவன். 96க்கு பிறகு யாழ்ப்பாணத்தில சண்டை நடக்கவில்லை எண்டு சொல்லுறார். உண்மையா இவர் சிறிலங்காவின் மூன்று மூன்று சனாதிபதிகளுக்கு ஒழுங்கே சந்திரிக்கா ,மகிந்த ,மைத்திரி என்று உலகளவில் சனநாயக சாயம் பூசுறார். அவருக்கு விருது வாங்கவேணுமெண்டு ஆசை உங்களுக்கு விருது குடுக்க வேணுமெண்டு ஆசை. நீங்கள் இந்த சம்பவத்தை வைச்சு ஒரு கதை எழுதுங்கோவன் என்றான் நூர்.

நூரின் வேண்டுகோளின் படி முடுலிங்கம் எழுதிய கதை இந்தக் கதை தான், ஆனால் தலைப்பு மட்டும் நான் வைத்துக் கொண்டது

“கூலித்தமிழும்” அதன் “அரசியலும்” !:அசோக்

nithi (1)வரலாறுகளுக்கும் , ஆய்வுகளுக்கும் எப்பொழுதும் வர்க்க -சாதிய நலன் உண்டு.

ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களின் வரலாறுகளும் ஆய்வுகளும் நேரியமுறையில் எழுதப்படுவது மிகக் குறைவு

சமீபத்தில், மு.நித்தியானந்தன் அவர்களின் “கூலித்தமிழ்” நூலை படித்தபோது, இந்த எண்ணமே எழுந்தது.

nithiyanமலையக மக்கள் ,ஆங்கில காலனித்துவ தோட்டத்துறைமார்களினால் துயர் உற்ற வாழ்வை இந் நூல் விபரிக்கின்றது.

மலையக மக்களின் துயரங்களுக்கு ஆங்கிலத்துரைமார்களே காரணம் என நிறுவ முற்படுவதன் மூலம், இன்னொரு அதிகார சுரண்டல் வர்க்கத்தை காப்பாற்றும் முயற்சியும், அவர்களுக்கு முற்போக்கு முலாம் பூசும் “ஒரு தந்திரோபாய புத்திஜீவித் தனத்தையும்” இந் நூல் செய்கின்றது.

மலைய தோட்டத் தொழிலாளர்கள் பிரிட்டீஸ் ஆங்கில காலனித்துவ வாதிகளால் துயர் உற்றதைவிட , தமிழ் பெருந்தோட்ட முதலாளிமார்களாலும், இவர்களின் அடியாட்களாலும், கொடுமைப்படுத்தப்பட்டதும், சுரண்டப்பட்டதுமே பெரும் வரலாறு.

ஆங்கிலப் பெரும் முதலாளிகளால் மலையக மக்கள் வர்க்க ரீதியாக சுரண்டப்பட, நமது தமிழ் பெரும் முதலாளிகள் இம் மக்களை வர்க்க ரீதியாகவும், சாதிய ரீதியாகவும் கொடுமைப்படுத்தி சுரண்டினார்கள்.
இவ்வாறான தமிழ் பெரும்தோட்ட முதலாளிமார்களின் அனைத்து ஒடுக்குமுறைகளையும் இந் நூல் மூடிமறைத்துவிடுகின்றது.

மலையக மக்களின், ஒடுக்குமுறைகளின் கொடூர சக்தியாக விளங்கிய பெருந்தோட்ட முதலாளிகளான தமிழக செட்டிமாரின் அனைத்து செயல்களும் இந் நூலில் இருட்டடைப்பு செய்யப்படுகின்றது.

இவ் ஒடுக்குமுறை வர்க்கங்களின் சாதியங்களின் பிரதிநிதியான மு.நித்தியானந்தன் போன்றவர்களின் “ஆய்வுகள் ” இவ்வாறாகத்தான் அமைய முடியும்.

20150702_112753கடந்தகால துயரங்களை துன்பங்களை பேசுவதற்கூடாக இன்றைய மலையக மக்கள் எதிர்கொள்ளும் ஒடுக்குமுறைகளும், சுரண்டல்களும் ,சாதியக் கொடுமைகளும் ,இரண்டாம் பட்சமாக கருதவைக்கும் “அதிகார நுண்ணரசியலே” இந் நூலின் மையப் புள்ளியாக அமைகின்றது.

இந் நூலைப் படித்தபோது, பி.ஏ.காதர் எழுதிய ‘இருபதாம் நூற்றாண்டின் நவீன அடிமைகள்’ என்னும் மலையகம் பற்றிய ஆய்வு நூல் ஞாபகம் வந்தது.

caderஇவ்வாறான, தமிழ் பெரும்தோட்ட முதலாளிமார்களின் வர்க்க -சாதிய ஒடுக்குமுறைகளையும் ,பெரும் கொடுமைகளையும் மூடிமறைக்கும் கூலித்தமிழ் போன்ற நூல்கள் வரும் காலகட்டத்தில் ;

ஆய்வுத்திறனும், நேரிய பார்வையும்கொண்ட ‘இருபதாம் நூற்றாண்டின் நவீன அடிமைகள்’ என்ற இந்த நூல் மீள் பிரசுரம் செய்யப்படவேண்டிய இன்றைய காலத்தின் அவசியம் என கருதுகிறேன்.

“கூலித்தமிழ்” நூல் படிக்கப்படவேண்டியது முக்கியம்.

படிப்பதன் ஊடாகவே, இந் நூலினுள் புதைந்திருக்கும் சாதிய – வர்க்க அதிகார மனோபாவத்தை அதன் அரசியலை நாம் புரிந்துகொள்ள முடியும்.இந் நூலை க்ரியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

குறிப்பு: மேற்கண்ட விமர்சனம் அனைத்தும் ,பாரீசில் நடைபெற்ற கூலித்தமிழ் வெளியீட்டு நிகழ்வில் மு.நித்தியானந்தன் அவர்களிடம், என்னால் முன்வைப்பட்டவை.’தரவுகள் தமக்கு கிடைக்கவில்லை’ என்பதே நித்தியானந்தம் அவர்களின் பதிலாக அமைந்தது.

வாசிப்பின் சுகம்: அம்மாவின் ரகசியம் : தேவகாந்தன்

Book-rizhanவாசிக்கவென எடுத்துவைத்த நூல்களில் இன்று அதிகாலை என் கையில் அகப்பட்ட நூல் ‘அம்மாவின் ரகசியம்’. சுநேத்ரா ராஜகருணநாயகவின் இச் சிங்கள மொழியிலான படைப்பை தமிழில் தந்திருப்பவர் எம்.ரிஷான் ஷெரீப். வாசிப்பை இடறல் செய்யாத மொழிபெயர்ப்பு. எம்.ரிஷான் ஷெரீப்பை இதற்காக பாராட்டலாம்.

சிங்கள மொழியிலான ஆக்கங்களின் பரிச்சயம் ஈழத் தமிழர்களுக்கு மிகமிகக் குறைவு. சிங்கள மக்களின் வாழ்க்கைகூட மேலோட்டமாகவே தெரிந்திருக்கிறது அவர்களுக்கு. வாழ்க்கை அழைக்கும் பக்கங்களுக்கெல்லாம் ஓடிக்கொண்டிருக்கும் தேவை மூன்றாம் உலகினைச் சேர்ந்த பெரும்பாலானவர்களின் விதியாகியிருக்கிற இன்றைய காலகட்டத்தில், தார்மீக நியாயங்களின் காரணமாய் தம் தேசத்து அரசியலை வெறுத்து பல படைப்பாளிகளும் தம் தேசத்திலேயே அடையும் துன்பங்களும், புலம்பெயர்ந்து எதிர்கொள்ளும் மனநோக்காடுகளும் பெரும்பாலும் கவனமற்றே இருக்கின்றன. இதை மிக வன்மையாக பிரக்ஞைப் படுத்தியிருக்கிறது இப் படைப்பு.

இவ்வாண்டு(2015) கான்ஸ் சர்வதேச திரப்பட விழாவில் திரையிடப்பட்ட ஒரு விவரணப் படத்தை எழுதி இயக்கிய சர்மினி பெலி என்கிற இலங்கைப் பெண் ஏப்ரல் மாத ‘தி சிறீலங்கா றிப்போர்ட்டர்’ பத்திரிகைக்கு கொடுத்துள்ள அறிமுகப் பேட்டி, இதுபோல் அறநெறிகளின் மீதாக தம் வாழ்க்கையை நிறுத்தியுள்ள பல்வேறு படைப்பாளிகள், விமர்சகர்கள், ஊடகவியலாளர்களின் மனநிலையின் ஒட்டுமொத்தமான வெளிப்பாடாக இருப்பதை காணமுடியும். அவர், முப்பதாண்டுகளுக்கு மேலாக தான் இலங்கையில் வசித்த காலத்தில் பல கொலைகளையே கண்கூடாகக் கண்டதாகவும், இலங்கை அரசாங்கத்தின் அவ்வகையான ஒவ்வொரு கொடுமை நிகழ்த்தலுக்கும் தானும் ஒருவகையில் காரணமென்பதை தான் உணர்ந்திருப்பதாகவும் அதில் கூறுகிறார்.

எம்.ரிஷான் ஷெரீப்
எம்.ரிஷான் ஷெரீப்

‘அம்மாவின் ரகசியம்’ ஒரு பெண்ணிலை நோக்காகவே விரிகின்றது. ஆனாலும் அது மறைமுகமாய் சுட்டுகிற விஷயமும் குறுநாவலில் உண்டு. எந்த அரசும் சரி, அரசாங்கமும் சரி மக்களைப் பார்ப்பதில்லை, அவை தமக்கு முன்னாலுள்ள வர்க்க சார்பான நலனைமட்டுமே பார்த்துக்கொள்கின்றன என்ற உண்மையை பெரும்பான்மையின அனுபவங்களினூடாக வெளிப்படுத்தியுள்ள படைப்பாகவும் இது இருக்கிறது. இக் குறுநாவலின் வேறு அம்சங்களைவிட இதுவே முக்கியமானதாக என் பார்வையில் பட்டது.

முத்துலதாவுக்கு நேரும் படையினரின் கொடுமைகள் அவள் ஒரு பெண்ணாகவிருப்பதால் விளைகிறது. ஆனால் தமது வர்க்க நலனுக்கு அச்சுறுத்தலாகும் சமயத்தில் தமது சமூகத்தவளாயினும்கூட அரசு அழித்தொழிக்கத் தயங்குவதில்லையென்பதையும் அது துல்லியமாக எடுத்துக்காட்டுகின்றது.

கலாபூர்வமான அம்சங்களிலும் இக் குறுநாவல் குறிப்பிடத்தக்கதாக உள்ளதைச் சொல்லவேண்டும். ஒரு கயிற்றில் பிணைத்து பறக்கவிடப்பட்ட பறவை தன் எல்லைவரை பறந்து கயிற்றின் நீளத்துக்கு மேலே செல்ல முடியாது ஒரு அதைப்புடன் திரும்புவதுபோலத்தான், ‘அம்மாவின் ரகசிய’மும், குறுநாவல் என்ற தன் எல்லைக்கு மேல் செல்லமுடியாது அதைப்புடன் திரும்பும் வெளிகள் இப்படைப்பில் மிகுதியாக உள்ளமையை குறிப்பாகச் சொல்லவேண்டும்.

முத்துலதாவுக்கு ஏற்பட்ட பாலியல்ரீதியிலான கொடுமை சிங்கள சமூகத்தில் அவள் ஒருத்திக்கு மட்டுமே ஏற்பட்டதாக இருக்கமுடியாத பட்சத்திலும், அவள் தன் குடும்பம் சார்ந்து அடையும் துயரங்கள் அதன் காரணமாகவே இருக்கிறபட்சத்திலும், அவளுக்கு நேர்ந்தவை பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களாக வரும்வரை ரகசியமாகவே இருப்பது குறுநாவலில் பலஹீனமான அம்சமாகவே தோன்றுகிறது. வளர்ந்த பெண்ணின்மீது அவ்வளவு அக்கறை காட்டும் அவளது அம்மாவுக்குமே அவளது சிதைவு தெரியாமல் போனது அதிசயம். ஆயினும் அவளது தனக்குள்ளான ஒடுங்குகையே முத்துலதாவை அவளது இரண்டு பெண்பிள்ளைகளிடமிருந்தும் அந்நியமாக்குகிறது. அதை உடைக்கிற கணத்திலேயே பிள்ளைகளும் ரகசியம் வெளித்து தாயாக முத்துலதாவைக் கண்டு அன்பு செலுத்துகிறார்கள்.

இக் குறுநாவல் முக்கியமாகத் தெரிவிக்கும் அம்சம் ஒன்றே ஒன்றுதான். அது எந்த அரசுக்கும், எந்த அரசாங்கத்துக்கும் இன, மத, மொழி சார்ந்து எந்த பேதமும் இல்லையென்பதுவே. அடங்கியிருப்பவர்கள் மக்களென்றும், தன் நலனை அச்சுறுத்துபவர்களோ, அச்சுறுத்தக்கூடியவர்களோ தன் எதிரிகளென்றும் அது திட்டமாக அபிப்பிராயம் கொண்டிருக்கிறது.

இலங்கையின் மும்மொழிகளின் இலக்கிய ஊடாட்டத்தை இதுபோன்ற மொழிபெயர்ப்பு நூல்களால் வளர்க்கமுடியுமென்பதை இங்கே ஆணித்தரமாகச் சொல்லமுடியும்.

– தேவகாந்தன்
http://devakanthanswriting.blogspot.com