மக்கள் நல அரசு(Welfare State) : தோற்றமும் மறைவும் வரலாற்றுப் பின்புலம்

கல்வி, சுகாதாரம், உள்ளிட்ட மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்யும் பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டு அவை அனைத்தையும் தனியார் கொள்ளைக்குத் திறந்துவிடுகிறது அரசு. இந்தியாவில் மட்டுமின்றி, மேற்கத்திய நாடுகளிலும்கூட இதுதான் நடக்கிறது. ஏற்கெனவே பெற்றிருந்த சலுகைகளை இழந்து, வாழ்க்கைத் தரத்தில் மென்மேலும் கீழே தள்ளப்படும் மக்கள் இந்நாடுகளிலெல்லாம் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
இன்று மக்கள் நலத்திட்டங்களை மறுக்கின்ற அமெரிக்க ஐரோப்பிய அரசுகள், அன்று சோசலிச நாடுகளில் அமல்படுத்தப்பட்ட மக்கள்நலத் திட்டங்களால் அச்சுறுத்தப்பட்ட காரணத்தினால்தான், தமது நாடுகளில் மக்கள்நலத் திட்டங்களை அமல்படுத்தினர் என்பதை விளக்குகிறார் அமெரிக்க இடது சாரி சிந்தனையாளரான ஜேம்ஸ் பெட்ராஸ்.
‘ஸ்டாலினிய எதிர்ப்பு’ பேசிய மேற்குலக அறிவுத்துறையினர் முதலாளித்துவத்தின் கைக்கருவிகளாகச் செயல்பட்டு, தொழிலாளி வர்க்கத்தின் உரிமைகள் பறிக்கப்படுவதற்கும், முதலாளித்துவத்தின் கொடூர ஆட்சி அரங்கேறுவதற்குமே துணை நின்றிருக்கின்றனர் என்று சாடுகிறார். அவரது கட்டுரையின் சாரத்தை மட்டும் இங்கே தொகுத்து தருகிறோம். முழு கட்டுரையின் ஆங்கில வடிவம் அவரது இணைய தளத்தில் கிடைக்கிறது.
[The Western Welfare State: Its Rise and Demise and the Soviet Blochttp:// petras. lahaine. org/?p=1902]

முதலாளித்துவம் பக்குவமடைந்து மென்மேலும் முன்னேறும்போது, உயர் தொழில்நுட்பங்களும் முன்னேறிய சேவைகளும் வளரும்போது, மக்கள் நலனும் அவர்களது வாழ்க்கைத் தரமும் மேம்படும் என்று மரபுவழிப்பட்ட முதலாளித்துவப் பொருளாதார வல்லுநர்கள் கூறுவார்கள். நாம் தற்போது காண்கின்ற மக்கள் நல அரசின் அழிவு, அவர்களது கருத்தைத் தகர்த்து விட்டது. கணக்கு வைத்துக் கொள்வது, உற்பத்தி மற்றும் நிர்வாகச் செலவுகளைக் கட்டுப்படுத்துவது, அதிகபட்ச இலாபத்தைத் தேடிப்பாயும் ஊக வணிகத்தின் வேகத்தை அதிகப்படுத்துவது ஆகியவற்றுக்கும், சமூகநலத் திட்டங்களுக்கான செலவுகளை இரக்கமின்றி வெட்டுவதற்கும்தான் பொருளாதாரத்தின் கணினிமயமாக்கம் என்ற தொழில்நுட்ப முன்னேற்றம் பயன்பட்டிருக்கிறது.

பின்னோக்கிய பாய்ச்சல் துவங்கியது எப்படி?

‘மக்கள்நல அரசு’ என்ற கருத்தாக்கத்தின் மரணம், மக்களுடைய வாழ்க்கைத் தரத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி ஆகியவற்றுக்கான பின்புலத்தைப் புரிந்து கொள்ள நாம் இரண்டு கோணங்களில் ஆராய வேண்டியிருக்கிறது. முதலாவது, சர்வதேச நிலைமைகளில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றங்கள் பற்றியது ஒருபுறம் கிழக்கத்திய முகாமின் மக்கள்நல அரசுகள், இன்னொருபுறம் ஐரோப்பிய முதலாளித்துவ அரசுகள் மற்றும் அமெரிக்கா என்ற இரட்டைத் துருவப் போட்டி நிலையிலிருந்து, தமக்குள் போட்டியிட்டுக் கொண்டிருக்கும் முதலாளித்துவ நாடுகள் செலுத்துகின்ற ஏகபோக ஆதிக்கத்திற்கு வந்திருக்கிறோம்.

இரண்டாவதாக நாம் பரிசீலிக்க வேண்டிய விசயம், முதலாளித்துவ நாடுகளுக்குள்ளேயே நிலவும் சமூக உறவுகள் பற்றியது. தீவிர வர்க்கப்போராட்டம் என்பதிலிருந்து நீண்டகால நோக்கிலான வர்க்க சமரசம் என்பது அங்கே மூலதனத்துக்கும் உழைப்புக்குமான உறவைத் தீர்மானிப்பதாக ஆகியிருப்பது. இவ்விரண்டு போக்குகளும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை.

மேற்கத்திய மக்கள்நல அரசின் தோற்றமும் வளர்ச்சியும்:

நாஜி ஜெர்மனியின் தோல்வியையும் முதலாளித்துவ பாசிச ஆட்சிகளின் தோல்வியையும் தொடர்ந்து, சோவியத் யூனியனும் அதன் கிழக்கு ஐரோப்பிய கூட்டாளி நாடுகளும் பிரம்மாண்டமான மறுகட்டுமானப் பணிகளில் இறங்கின. சமூகப் பொருளாதார நலனை மையமாகக் கொண்ட சீர்திருத்தங்களே இந்த மறுகட்டுமானப் பணிகளின் அடிப்படையாக இருந்தன. இதைப் பார்க்கின்ற மேற்கு நாடுகளின் தொழிலாளி வர்க்கம், சோவியத் முன்மாதிரியைப் பின்பற்ற (புரட்சி – மொர்) விரும்பக் கூடும் அல்லது குறைந்தபட்சம் தனது நாட்டில் முதலாளித்துவம் மீண்டு எழுவதைத் தடுக்கின்ற கட்சிகளையும், அத்தகைய நடவடிக்கைகளையும் ஆதரிக்கக்கூடும் என்று மேற்குலக முதலாளித்துவ அரசுகள் பெரிதும் அஞ்சின.

மேற்குலக முதலாளி வர்க்கம் நாஜிகளுடன் வைத்திருந்த கூட்டின் காரணமாகவும், பாசிசத் தன்மை கொண்ட முதலாளித்துவத்திற்கு அவர்கள் காட்டிய எதிர்ப்பு பெயரளவினதாகவும், மிகவும் தாமதமாக காட்டிய எதிர்ப்பாகவும் இருந்த காரணத்தினால், மேற்கத்திய முதலாளித்துவ அரசுகள் அரசியல் ரீதியில் மக்கள் மத்தியில் மதிப்பிழந்திருந்தன. இதன் காரணமாக மக்கள் மீது அவர்களால் அடக்குமுறைகளை ஏவமுடியவில்லை.

எனவே, சோவியத்தின் கூட்டுத்துவ மக்கள் நலச் சீர்திருத்தங்களை எதிர்கொள்வதற்கு அவர்கள் ஒரு உத்தியைக் கையாண்டார்கள். உள்நாட்டில் உள்ள கம்யூனிஸ்டுகள் மற்றும் தீவிர இடதுசாரிகளை மட்டும் ஒடுக்குவது; மக்கள்நலத் திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் சமூக ஜனநாயகக் கட்சிகள், தொழிற்சங்கங்களின் விசுவாசத்தை விலைக்கு வாங்குவது. இதுதான் அவர்கள் வகுத்த தந்திரம்.

அனைவருக்கும் வேலை, வேலை உத்திரவாதம், அனைவருக்கும் மருத்துவம், இலவச உயர்கல்வி, சம்பளத்துடன் கூடிய ஒரு மாதச் சுற்றுலா விடுப்பு, முழுச் சம்பள ஓய்வூதியம், தொழிலாளர் குடும்பங்களுக்கு இலவச ஓய்வு விடுதிகள், பெண்களுக்கு நீண்ட பேறு கால விடுப்பு என சோவியத் முகாமின் அரசுகள், தனிநபர் நுகர்வைக் காட்டிலும் சமூகநலத் திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்தன.

இதனால் சோவியத் முகாமின் மக்கள்நல நடவடிக்கைகளைத் தானும் அமல்படுத்த வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு முதலாளித்துவ மேற்குலம் ஆளாக்கப்பட்டது. அதேநேரத்தில், முன்னேறிய தனது பொருளாதாரத்தின் வலிமையைக் கொண்டு, குறைந்த வட்டிக்குக் கடன் கொடுத்தும் தவணை முறைகள் மூலமும் தனிநபர் நுகர்வுப் பண்பாட்டை விரிவுபடுத்தியது.

1940களின் மத்தியிலிருந்து 1970களின் நடுப்பகுதி வரையிலான காலத்தில் மேற்குலகம் இரண்டு இலக்குகளைக் குறிவைத்து சோவியத் முகாமுடன் போட்டியிட்டது. உள்நாட்டில் தொழிலாளி வர்க்கத்தின் விசுவாசத்தைப் பாதுகாத்துக் கொள்கின்ற அதேநேரத்தில், அதன் போர்க்குணமிக்க பிரிவைத் தனிமைப்படுத்துவது; சோவியத்தைப் போன்ற மக்கள்நலத் திட்டங்கள் மட்டுமின்றி, மேலதிகமான தனிநபர் நுகர்வுக்கும் மேற்குலகில் வாய்ப்புண்டு என்று ஆசை காட்டி, கிழக்குலகின் (சோவியத் முகாம்) தொழிலாளி வர்க்கத்தைக் கவர்ந்திழுப்பது இவையே அந்த இரு இலக்குகள்.

இந்தப்புறம் கூட்டுத்துவம் (ரசிய,கிழக்கு ஐரோப்பிய நாடுகள்), அந்தப்புறம் முதலாளித்துவம் (அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகள்) என்று இந்த இரு பிரிவுகளுக்கும் இடையே நிலவிய போட்டியின் காரணமாக, மக்கள்நலத் திட்டங்களைத் திரும்பப் பெறுவதென்ற பேச்சுக்கே இடமில்லாமலிருந்தது. இருப்பினும், அறுபதுகளிலும் எழுபதுகளிலும் நடைபெற்ற மக்கள் எழுச்சிகள் தோல்வியடைந்தன. மக்கள் நலத் திட்டங்கள் அதிகரிக்காமல் தேங்குவதற்கு இது காரணமானது.

மிகவும் முக்கியமாக மேற்குலகிலும் சரி, கிழக்குலகிலும் (போலி சோசலிச நாடுகள் – மொர்) சரி, ஆளும் வர்க்கங்களுக்கும் தொழிலாளி வர்க்கத்துக்கும் இடையிலான உறவு ஒரு தேக்கநிலை அல்லது முட்டுச்சந்தை எட்டிவிட்டது. பொருளாதாரத் தேக்கம் வந்தது. தொழிற்சங்கங்கள் அதிகாரவர்க்கமயமாகியிருந்தன. மக்கள்நல அரசு என்ற கருத்தாக்கத்தையே நிர்மூலமாக்கவும், கூட்டுத்துவ (போலி சோசலிச) முகாமுக்குச் சவால் விடவும் ஆற்றல் படைத்த ஒரு புதிய அரசியல் தலைமை வேண்டுமென்ற கோரிக்கையை முதலாளித்துவ வர்க்கங்கள் எழுப்பத் தொடங்கின.

பின்னோக்கிய பயணம்: ரீகன், தாட்சர் முதல் கோர்ப்பசேவ் வரை:

கூட்டுத்துவ முகாமின் (போலி சோசலிச நாடுகள் – மொர்) மக்களை ஒரு மிகப்பெரிய மாயை பற்றியிருந்தது. தாங்கள் நீண்டகாலமாக அனுபவித்து வருகின்ற, அசைக்க முடியாத, மக்கள்நலத் திட்டங்களுடன், மேற்குலகம் ஆசைகாட்டுகின்ற மாபெரும் நுகர்வியத்தையும் இணைத்துக் கொள்ளலாம் என்று அவர்கள் நம்பத் தொடங்கினார்கள். ஆனால், மேற்குலகிலிருந்து வந்த அரசியல் சமிக்ஞைகளோ இந்த நம்பிக்கைக்கு எதிர்த்திசையில் நகர்ந்து கொண்டிருந்தன.

அமெரிக்காவில் ரீகனும், பிரிட்டனில் தாட்சரும் அதிகாரத்துக்கு வந்துவிடவே, சமூக இயக்கத்தின் திசையைத் தீர்மானிக்கும் சுக்கான் முதலாளி வர்க்கத்தின் முழுக்கட்டுப்பாட்டுக்கு வந்துவிட்டது. தொழிற்சங்கங்களின் போர்க்குணம் ஒடுக்கப்பட்டது. ஆயுதப் போட்டியில் சோவியத் யூனியனை இழுத்து விட்டு, அதனைத் திவாலாக்கும் திட்டம் தொடங்கியது.

அதேநேரத்தில் கிழக்குலகிலேயே மேல்தட்டு வர்க்கமாக வளர்ந்து கொண்டிருந்தவர்கள், படித்த மேன்மக்கள், அதிகாரவர்க்கப் பெருச்சாளிகள், புதிய தாராளவாதிகள், மொத்தத்தில் மேற்கத்திய விழுமியங்களைப் போற்றிய பிரிவினர் அனைவரும் மக்கள்நலத் திட்டங்களைத் தூற்றத் தொடங்கினார்கள். இவர்களுக்குத் தேவையான அரசியல், பொருளாதார ரீதியிலான ஆதரவை மேற்கத்திய உளவு நிறுவனங்களும், அறக்கட்டளைகளும், வாடிகனும் வழங்கினர். இதற்குத் தேவைப்பட்ட ஒரு சித்தாந்த ரீதியான மேற்பூச்சினை, ‘ஸ்டாலினிய எதிர்ப்பு இடதுசாரிகள்’ என்று தம்மை அழைத்துக் கொண்ட நபர்கள் மேற்குலகில் வழங்கினர்.

சோவியத் முகாமின் மக்கள்நலத் திட்டங்கள் அனைத்தும் மேலிருந்து அமல்படுத்தப்பட்டவை. அவற்றின் மீது அதே நாட்டைச் சேர்ந்த அதிகாரவர்க்கப் பெருச்சாளிகள், கொள்ளையர்கள், பாதிரிகள், புதிய தாராளவாதிகள் அடங்கிய ‘ஸ்டாலினிய எதிர்ப்பு முகாம்’ தாக்குதல் தொடுத்தபோது, தம் உரிமைகளைப் பாதுகாத்துக்கொள்ளும் அரசியல் பார்வையும், வர்க்க உணர்வும், வல்லமையும் கொண்ட போர்க்குணமிக்க வர்க்க அமைப்புகள் எதுவும் அந்நாடுகளில் இல்லை.

அதேபோல, மேற்குலகின் சமூகநலத் திட்டங்கள் எல்லாம், ஐரோப்பிய சமூக ஜனநாயக கட்சிகள் மற்றும் அமெரிக்க ஜனநாயகக் கட்சியுடன் அரசியல் ரீதியில் பிணைக்கப்பட்டிருந்தன. இக்கட்சிகள் சார்ந்த தொழிற்சங்கத் தலைமைகளுக்கு வர்க்க உணர்வோ, வர்க்கப் போராட்டத்தில் ஈடுபாடோ கிடையாது. அவை சந்தா வசூலித்துத் தின்னும் அதிகார வர்க்கத் தலைமைகளாகவே இருந்தன.

சோவியத் ஒன்றியம் உடைந்தது. கோர்ப்பசேவ் வார்சா ஒப்பந்த நாடுகளை நேட்டோவின் கையில் ஒப்படைத்தார். இந்நாடுகளிலிருந்த கம்யூனிஸ்டு அதிகாரவர்க்கம் புதிய தாராளவாதிகளாகவும், மேற்குலக கையாட்களாகவும் புதுப்பிறவி எடுத்து, பொதுச்சொத்துகளைத் தனியார்மயமாக்கியதுடன் தொழிலாளர் உரிமைகள் மீது தாக்குதல் தொடுத்தது. போலந்தின் சாலிடாரிட்டி இயக்கத்துக்குப் பின்பலமாக இருந்த கப்பல்கட்டும் துறைத் தொழிலாளர்கள் வேலைநீக்கம் செய்யப்பட்டார்கள். மேற்கத்திய உளவுத்துறையின் சன்மானங்களால் உருவாக்கப்பட்ட அவர்களது தலைவர்கள் (லெக் வாலேசா போன்றோர்) வசதியான அரசியல்வாதிகளாயினர், முதலாளிகளாயினர்.

‘ஸ்டாலினிசத்தை ஒப்பிடும்போது வேறு எதுவானாலும் தேவலாம்’ என்ற முழக்கத்தை முன்வைத்து, ‘ஸ்டாலினிய எதிர்ப்பு இடதுசாரிகள்’ எனப்படுவோர் (சமூக ஜனநாயகவாதிகள், டிராட்ஸ்கியவாதிகள் மற்றும் இவர்களுக்கு இடைப்பட்ட பல்வேறு அறிவுத்துறை நீரோட்டங்களைச் சேர்ந்தவர்கள்) கூட்டுத்துவ அமைப்புகளை ஒழித்துக் கட்டியது மட்டுமின்றி, கோடிக்கணக்கான தொழிலாளர்களுக்கும், ஓய்வூதியக்காரர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் வாழ்வளித்த மக்கள்நலக் கட்டமைப்பையும் ஒழித்துக் கட்டியதன் மூலம் முதலாளி வர்க்கத்துக்கு இணையற்ற முறையில் சேவை செய்திருக்கின்றனர்.

கூட்டுத்துவ மக்கள் நல அமைப்புகள் ஒழிக்கப்பட்டு விட்டதனால், அவற்றோடு ஈடுகொடுத்து மக்கள் நலத் திட்டங்களை அமல்படுத்த வேண்டிய அவசியம் மேற்கத்திய முதலாளி வர்க்கத்துக்கு இல்லாமல் போய்விட்டது. எனவே, மாபெரும் பின்னோக்கிய பாய்ச்சல் முழு வேகத்தில் தொடங்கிவிட்டது.

அடுத்த இரண்டு பத்தாண்டுகளில், லிபரல்கள், பழமைவாதிகள், சமூக ஜனநாயகவாதிகள் என்று மேற்குலகில் ஆட்சிக்கு வந்த ஒவ்வொருவரும் தம் பங்குங்கு மக்கள்நலச் சட்டங்களை வெட்டிக் குறைத்திருக்கிறார்கள். பென்சன் குறைக்கப்பட்டது, ஓய்வு பெறும் வயது நீட்டிக்கப்பட்டுச் சாகும் வரை உழைக்க வேண்டுமென்பது கொள்கையாகிறது, வேலை நிரந்தரம் காணாமல் போய்விட்டது, தொழிலாளியை வேலைநீக்கம் செய்வது எளிதாக்கப்பட்டிருக்கிறது, முன்னாள் கூட்டுத்துவ நாடுகளில் குவிந்திருக்கும் திறன் வாய்ந்த உழைப்பாளிகளை குறைந்த கூலிக்குச் சுரண்டுவது சாத்தியமாகியிருக்கிறது.

‘ஸ்டாலினிய எதிர்ப்பில்’ ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு இரண்டு உலகங்களின் தீமைகளும் கிட்டியிருக்கின்றன. அவர்கள் தமது கிழக்குலகின் மக்கள்நலத் திட்டப் பாதுகாப்பை இழந்தார்கள். மேற்குலகின் தனிநபர் நுகர்வு மற்றும் வளத்தையும் அவர்கள் பெறவில்லை.

ஸ்டாலினிய எதிர்ப்பு இடதுசாரிகள் என்று கூறப்படும் அறிவுத்துறைப் பேடிகள் படையினரோ, தத்தம் பல்கலைக்கழகங்களில் சொகுசாக அமர்ந்துகொண்டு, புதிய தாராளவாதத்தின் தாக்குதலுக்கு எதிராக, தொண்டை கட்டும் வரை சவுண்டு விட்டார்கள்; பிறகு, “முதலாளித்துவ எதிர்ப்பு போர்த்தந்திரம் ஒன்றின் தேவை” குறித்துப் பேசினார்கள். தொழிலாளி வர்க்கத்துக்குக் கல்வியளித்து, உணவளித்து, வேலைவாய்ப்பும் அளித்த ஒரு மக்கள்நல அமைப்பை இழிவுபடுத்தி ஒழித்துக் கட்டுவதற்குத் தாங்கள் ஆற்றிய பாத்திரம் பற்றி மட்டும் கடுகளவுகூட அவர்கள் பரிசீலிக்கவில்லை.

ஸ்டாலினின் மறைவுக்குப் பிந்தைய பத்தாண்டுகளில், ஏதேச்சாதிகாரமும் மக்கள் நலனும் இணைந்த ஒரு ஒட்டுரகமாக சோவியத் சமூகம் உருவாகி வளர்ந்தது. இருப்பினும் இந்த அரசுகளை இவர்கள் ‘ஸ்டாலினிஸ்டு‘ அரசுகள் என்றே அழைத்தனர். ஸ்டாலினிசம் ஒழிந்தால்தான் புரட்சிகர ஜனநாயக சோசலிசத்துக்கு மிகப்பெரிய பாதை திறக்கும் என்று வாதிட்டனர்.

உண்மையில் நடந்தது என்ன? மேற்கிலும் கிழக்கிலும் மக்கள் நல அரசு என்பதே ஒழிந்தது. வெறிகொண்ட புதிய தாராளவாத முதலாளித்துவம் ஏற்றம் பெற்றிருக்கிறது. ஒரு புதிய தாராளவாத எதிர்ப்புரட்சியின் உந்து பலகையாக, மக்கள் நலச் செலவினங்கள் அனைத்தையும் வெட்டுவதற்கு, மேற்கத்திய முதலாளிகள் நடத்திய போராட்டத்தில் அவர்களுடைய துருப்புச் சீட்டாகத்தான் பயன்பட்டிருக்கிறார்கள் இந்த ஸ்டாலினிய எதிர்ப்பாளர்கள்.

‘ஸ்டாலினிய எதிர்ப்பு இடதுசாரிகள்’ கனவு கண்டதைப் போல, ‘ஸ்டாலினிசத்துக்குப் பிந்தைய சோசலிச ஜனநாயகம்’ எங்கேயும் மலரவில்லை. முந்தைய மக்கள் நல அரசைத் தூக்கி எறிந்தவர்கள் கோடீசுவரர்கள், போதை மருந்து வியாபாரிகள், ஆள்கடத்தல் பேர்வழிகள் ஆகியோர்தான். அவர்களுடைய ஆட்சிதான் மலர்ந்திருக்கிறது.

மக்கள் நல அமைப்பின் அழிவினால் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் பெண் தொழிலாளர்கள்தான். வேலை, பேறுகால விடுப்பு, குழந்தைப் பாதுகாப்பு அனைத்தையும் இழந்தார்கள். பொதுமருத்துவம் அழிந்ததால், குழந்தைகள் சாவு அதிகரித்திருக்கிறது. மணமுறிவும் மரண விகிதமும் அதிகரித்திருக்கிறது. தமது சொந்தச் சகோதரிகளை அடிமைகளாக்குவதற்கும் சீரழிப்பதற்கும் தாங்கள் ஆற்றியிருக்கும் பாத்திரம் பற்றி ‘ஸ்டாலின் எதிர்ப்பு பெண்ணியவாதிகளும்’ மூச்சுவிடுவதில்லை.

‘ஸ்டாலினிசத்தைக் காட்டிலும் வேறு எதுவானாலும் பரவாயில்லை’ என்ற அயோக்கியத்தனமான இவர்களது முழக்கத்தால் கிழக்கு ஐரோப்பியத் தொழிலாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தின் ஒரு தலைமுறையே அழிந்து விட்டது. எத்தனை இலட்சம் பேருக்கு வேலையில்லை; காசநோயும் எயிட்ஸும் எத்தனை இலட்சம் பேருக்கு; டெல் அவிவ், புகாரெஸ்ட், ஹாம்பர்க், பார்சிலோனா, புரூக்லின் விபச்சார விடுதிகளில் உருத்தெரியாமல் சிதைந்திருக்கும் இளம் பெண்கள் எத்தனை பேர் என்று இவர்கள் எண்ணிப் பார்க்கட்டும்.

ஸ்டாலினிசத்தின் மீது தாங்கள் பெற்ற வெற்றி குறித்து மேற்கத்திய அறிவுத்துறையினர் இன்னமும் பீற்றிக் கொண்டிருக்க, கிழக்கு ஐரோப்பாவில் இன்று உண்மையாக உயிர்வாழும் தொழிலாளிகளோ, ஓய்வூதியம், பொதுச்சுகாதாரம், வேலை, கல்வி உள்ளிட்ட ‘ஸ்டாலினிய மிச்சசொச்சங்களுக்காகப்’ போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

மக்கள்நலத் திட்டங்களுக்காக நடைபெறுகின்ற இந்த புதிய வெகுசனப் போராட்டங்கள், முந்தைய கூட்டுத்துவ அமைப்பின் அனுபவங்களைத்தான் நினைவு கூர்கின்றனவேயன்றி, ஸ்டாலினிச எதிர்ப்பு இடதுசாரிகளின் வெற்றுச் சொல்லாடல்களை அல்ல. இவர்கள் காலாவதியானவர்கள்.

ஒரு விசயம் மென்மேலும் தெளிவாகிக் கொண்டே வருகிறது. மக்கள்நலத் திட்டங்கள், தொழிலாளர்நலச் சட்டங்கள், சமூகநலத் திட்டங்கள் என எவையெல்லாம் சோவியத் முகாமின் தோற்றத்தை ஒட்டி கிடைத்தனவோ, அதன் அழிவை ஒட்டி பறிபோயினவோ, அவைதான் இன்றைய தொழிலாளர் போராட்டங்களை மட்டுமின்றி, எதிர்காலப் போராட்டங்களையும் உந்தித் தள்ளும் இலட்சியங்களாகத் திரும்ப வந்திருக்கின்றன.

**
(குறிப்பு: இக்கட்டுரையில் ஸ்டாலினுக்குப் பிந்தைய ரசிய, கிழக்கு ஐரோப்பிய அரசுகள் மற்றும் சமூகத்தைக் குறிக்கும் விதமாக “கூட்டுத்துவ அமைப்பு”, “மக்கள் நல அமைப்பு” போன்ற சொற்றொடர்களை பெட்ராஸ் பயன்படுத்தியிருக்கிறார். சோசலிச சமூகத்தில் மக்களுக்கு வழங்கப்பட்ட உரிமைகள் சில போலி சோசலிச சமூகத்திலும் தொடர்ந்திருக்க கூடும் எனினும், இவற்றை அதிகார வர்க்க ஆட்சியென்று அழைப்பதே சரியெனக் கருதுகிறோம்.)
***
அஜித்.
– புதிய ஜனநாயகம், ஆகஸ்டு – 2012

அடையாள அரசியல் சாதியையும் தீண்டாமையையும் ஒழிக்குமா? : தொரட்டி

மிழ்க்குடிதாங்கி”, “அம்பேத்கர் சுடர்” என்று விடுதலைச் சிறுத்தைகளால் கொண்டாடப்பட்ட ராமதாசு, தமிழகத்தின் ஆதிக்க சாதிவெறியர்கள் அனைவருக்கும் தலைவராக அவதரித்திருக்கிறார். “அனைத்து சமுதாயப் பாதுகாப்பு பேரவை” என்றொரு அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. சாதி மறுப்புத் திருமணத்தையும், வன்கொடுமை தடைச் சட்டத்தையும் எதிர்த்து ராமதாசு சண்டமாருதம் செய்கிறார். திருமாவளவனோ, “ராமதாசு என்னைச் சட்டையைப் பிடித்து இழுத்தாலும் நான் சண்டைக்குப் போக மாட்டேன்” என்கிறார்.

ராமதாசும், காடுவெட்டி குருவும் தூண்டி விட்ட சாதிவெறி ஆங்காங்கே தாழ்த்தப்பட்ட மக்களைக் காவு வாங்குகிறது. சேத்தியாதோப்பு பகுதியில், வன்னியர் சாதிப் பெண்ணைக் காதலித்த கோபாலகிருஷ்ணன் என்ற மாணவனைக் கழுத்தை அறுத்தே கொலை செய்து, குட்டைக்குள் வீசியிருக்கிறார்கள் வன்னிய சாதிவெறியர்கள். ஒரு வாரத்திற்குப் பின்னர், அழுகி நாறிய நிலையில் அந்த இளைஞனின் உடல் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. சாதி மறுப்புக் காதலுக்குப் பழிவாங்குவதற்காக, காந்தளவாடி கிராமத்தைச் சேர்ந்த பிரியா என்ற தாழ்த்தப்பட்ட பெண் வன்னிய சாதிவெறியர்களால் கொல்லப்பட்டிருக்கிறாள்.

திருமாவளவன் மட்டும் ராமதாசுடன் சமரசத்தை நாடுகிறார். “இப்போது அமைதி காப்பதுதான் வீரம்” என்கிறார். புதிய

குச்சு கொளுத்தி இராமதாசுக்கு அம்பேத்கர் சுடர் விருது வழங்கும் திருமாவளவன் (கோப்பு படம்)
குச்சு கொளுத்தி இராமதாசுக்கு அம்பேத்கர் சுடர் விருது வழங்கும் திருமாவளவன் (கோப்பு படம்)

தலைமுறை தொலைக்காட்சிக்கு நவம்பர்-24 அன்று திருமா அளித்திருக்கும் பேட்டி, அவர் சந்தர்ப்பவாத அரசியலில் மூழ்கி முத்தெடுத்தவர் என்று காட்டுகிறது.

தருமபுரி தாக்குதல் ராமதாசுக்குத் தெரியாமல் நடந்திருக்கும் என்றுதான் அவர் முதலில் நினைத்தாராம். இலண்டனிலிருந்து கோ.க. மணியுடனும், டாக்டர் செந்திலுடனும் தொலைபேசியில் பேசியபோது, ‘இந்தத் தாக்குதலில் பா.ம.க.வுக்குச் சம்மந்தமே இல்லை’ என்று அவர்கள் சொன்னார்களாம்; இவரும் நம்பி விட்டாராம். என்ன நடந்தது என்று ஒருமுறை கூட அவர் தன் சொந்தக் கட்சிக்காரர்களிடம் கேட்கவில்லை போலும். நம்புவோம்.

“சாதி மறுப்புத் திருமணம் செய்தால் வெட்டுவேன் என்று மாமல்லபுரத்திலேயே காடுவெட்டி குரு ஏற்கெனவே பேசியிருக்கிறாரே, உங்களுக்குத் தெரியாதா?” என்று பேட்டியாளர் ஜென்ராம் கேட்கிறார். “அது பற்றி கோ.க. மணியிடம் கேட்டேன். குருவை டாக்டரய்யா கண்டித்ததாகச் சொன்னார். நம்பினேன்” என்கிறார்.

கடைசியாக ராமதாசு தனது சொந்த வாயால் ஊடகங்களில் பேசிய பின்னர்தான், ‘இது மேலிருந்தே திட்டமிட்டு நடத்தப்படுகிறது’ என்ற உண்மை திருமாவுக்குப் புரிந்ததாம். அதாவது, விடுதலைச் சிறுத்தைகளை ராமதாசு தாக்குகிறார் என்பதை உலகமே பார்த்து விட்டதால், இனிமேலும் வலிக்காத மாதிரி நடிக்க முடியாது என்பது திருமாவுக்குப் புரிந்து விட்டது!

அதன் பிறகும் அவருக்குக் கோபம் வரவில்லை. திருப்பி அடிப்பதெல்லாம் இருக்கட்டும். “ராமதாசு அம்பேத்கர் சுடர் அல்லvc-kattai-panchayat, வன்னிய தீவட்டி” என்று சாடியிருக்கலாம். ராமதாசையும் குருவையும் வன்கொடுமைச் சட்டத்தில் கைது செய்யக் கோரிப் போராடியிருக்கலாம். செய்யவில்லை. “வன்னியப் பெண்கள் வயிற்றில் தலித் கரு வளர வேண்டும் என்று நான் பேசியதாக பொப்பிரச்சாரம் செய்கிறார்கள். ஒரு இடத்திலாவது நான் அப்படிப் பேசியதாக நிரூபித்தால், தூக்கில் தொங்கத் தயார்” என்று தருமபுரி ஆர்ப்பாட்டத்தில் ஆவேசமாக தன்னிலை விளக்கம் அளிக்கிறார் திருமா.

ஆனால், தனது கட்சியினர் மீது கூறப்படும் குற்றச்சாட்டை ஆவேசமாக மறுக்க அவர் முயலவில்லை. ‘காதல் திருமணங்களைப் பிரித்து காசு பறிப்பதாகச் சொல்கிறீர்களே, அப்படி ஒரேயொரு ஆதாரமாவது காட்ட முடியுமா?’ என்று கேள்வி எழுப்பவில்லை. ‘எங்கள் கட்சிக்காரர்கள் கட்டப்பஞ்சாயத்து செய்ததாகவோ, வன்கொடுமைச் சட்டத்தை வைத்துப் பணம் பறித்ததாகவோ ஒரு ஆதாரம் கொடுங்கள், அரசியலை விட்டே விலகுகிறேன்’ என்று சவால் விடவில்லை.

மாறாக, சமரசத்திற்கு இப்போதும் தயாராக இருப்பதாக அந்தப் பேட்டியின் முடிவில் பிரகடனம் செய்கிறார். “தம்பி, தேர்தல் அரசியல் வேண்டாம்; வா, நாம் இரு சமூக மக்களின் நல்லிணக்கத்துக்காக, உழைக்கும் மக்கள் ஒற்றுமைக்காகப் பாடுபடுவோம் என்று டாக்டரய்யா என்னை அழைத்தால், இந்த நிமிடமே கட்சியை விட்டுவிட்டு வரத் தயார். நாடாளுமன்ற அரசியல் எனக்குத் தேவையில்லை” என்கிறார். ஆனந்த விகடன் பேட்டியில் ராமதாசுக்கு அம்பேத்கர் சுடர் விருது கொடுத்ததை நியாயப்படுத்துகிறார். “எதிர்காலத்தில் தலித்துகளுக்கு ஆதரவாக ராமதாசு நடந்து கொண்டால், மீண்டும் அவருக்கு விருது கொடுப்போம்” என்கிறார்.

சமூக நல்லிணக்கத்தைப் பேணுவதற்காகவும், தமிழர் ஒற்றுமைக்காகவுமே தான் அமைதி காப்பதாகவும், பொறுப்புடன் நடந்து கொள்வதாகவும் தனது அணுகுமுறைக்கு விளக்கம் சொல்கிறார் திருமாவளவன். ஆனால், விடுதலைச் சிறுத்தைகளின் டிஜிட்டல் பானர் முழக்கங்களையும், மேடைப் பேச்சுகளையும் பார்த்து, திருமாவைப் போர்க்குணத்தின் உருவமாக எண்ணிக் கொண்டிருந்த இளைஞர்கள் திகைக்கிறார்கள். இப்படியொரு சரணடைவை அவர்கள் எதிர்பார்க்கவில்லை.

ராமதாசிடம் திருமா சரணடைவது ஏன்?

all-caste-meeting1
ராமதாசு தலைமையில் அணி திரண்டுள்ள ஆதிக்கசாதி வெறியர்களின் அனைத்து சமுதாய பாதுகாப்பு பேரவை சென்னையில் நடத்திய கூட்டம்

விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு தன்னைத்தானே சித்தரித்துக் கொள்வதைப் போலவோ, அல்லது முற்போக்காளர்கள் எனப்படுவோர் சிலர் நம்பிக் கொண்டிருப்பதைப் போலவோ, தலித் விடுதலைக்கான அமைப்பு அல்ல. மற்றெல்லா ஓட்டுக்கட்சிகளையும் போலவே, அது ஒரு சாதிய பிழைப்புவாதக் கட்சி. வன்னிய மக்களின் பெயரைச் சொல்லி பா.ம.க. என்ற பிழைப்புவாதக் கட்சியை ராமதாசு நடத்துவதைப் போலவே, தாழ்த்தப்பட்ட மக்களில் ஒரு பிரிவினருடைய பிரதிநிதியாகத் தன்னைக் கூறிக்கொண்டு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் அரசியல் பிழைப்பு நடத்துகிறது.

பா.ம.க.வால் ஏமாற்றப்படும் வன்னிய மக்கள் ஆதிக்க சாதி; சிறுத்தைகளால் ஏமாற்றப்படும் மக்கள் ஒடுக்கப்பட்ட சாதி என்பதுதான் வேறுபாடு. பா.ம.க.வுக்கும் சிறுத்தைகளுக்கும் வேறெந்த வேறுபாடும் இல்லை. 2001 தேர்தலில் தி.மு.க.வும் பா.ம.க.வும் கூட்டணி அமைத்திருந்தபோது, திருமாவளவன் போட்டியிட்ட தொகுதியில் பல ஊர்களில் நூற்றுக்கணக்கான வீடுகள் கொளுத்தப்பட்டன; நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் தாக்குதலில் காயம்பட்டனர். அப்போது, “இந்தச் சாம்பல் மேட்டின்மீது நின்று சொல்கிறேன். கொளுத்தியவர்களுடன் இனி கூட்டணி கிடையாது” என்று திருமா அறிவித்தார்.

அன்று அப்படிச் சொல்லி விட்டு மறுபடியும் பா.ம.க., தி.மு.க.-வுடன் கூட்டுச் சேர்ந்த சந்தர்ப்பவாதம் பற்றிக் கேட்டால், “அம்பேத்கர் ஆயுதப் போராட்டம் நடத்தச் சொல்லவில்லை. இருக்கின்ற அரசமைப்பில் பங்கேற்று அரசதிகாரத்தைப் பெறுமாறுதான் கூறியிருக்கிறார்” என்று கொட்டைப்பாக்குக்கு விலை சொல்கிறார். ‘தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் தலித்துகளை மைய நீரோட்டத்தில் இணைப்பதற்காகத்தான் வலியச் சென்று கைகுலுக்க வேண்டியிருப்பதாக’ நியாயப்படுத்துகிறார்.

தனிக்குடியிருப்பு, தனிக்கிணறு, தனிக்குவளை, தனிச்சுடுகாடு என்று தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் தாழ்த்தப்பட்ட மக்களை ஊரின் மைய நீரோட்டத்தில் சேர்த்துக் கொள்வதாக எந்தக் கட்சியாவது வாக்குறுதி கொடுத்ததா, அல்லது கூட்டணிக்கான முன்நிபந்தனையாக அப்படி ஏதேனும் ஒன்றை திருமா முன்வைத்திருக்கிறாரா? எதுவும் கிடையாது.

சமூகத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும்போதே, அரசியலில் தலித் பிழைப்புவாதிகளை காங்கிரசு, பா.ஜ.க., உள்ளிட்ட ஆளும் வர்க்கக் கட்சிகள் அனைவரும் மைய நீரோட்டத்தில் இணைத்துதான் வைத்திருக்கிறார்கள். ‘இப்படிப் பல்வேறு கட்சிகளிலும் தலித் வாக்குகள் சிதறடிக்கப்படுவதனால்தான் தலித்துகள் அரசியலதிகாரம் பெற முடியவில்லை’ என்று கூறித் தொடங்கப்பட்டவைதான் விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட தலித் கட்சிகள்.

வன்னியர்களிடம் இதே வாதங்களைச் சொல்லித்தான் ராமதாசும் தனிக்கட்சி தொடங்கினார்.

பல்வேறு கட்சிகளிலும் உள்ள வன்னியர் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களைப் பிரித்துத் தனியாக ஒரு சாதிய வாக்கு வங்கியை உருவாக்கிக் கொண்டு, தி.மு.க., அ.தி.மு.க. போன்றோருடன் பேரம் பேசுவதுதான் பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட எல்லா சாதிக் கட்சிகளின் நோக்கமும். தங்கள் சாதி வாக்காளர்களிடம் எந்த அளவுக்குச் சாதி உணர்வைத் தூண்ட முடிகிறதோ, அந்த அளவுக்கு இவர்கள் தமது சந்தர்ப்பவாதத்தை மறைத்துக் கொள்ள முடியும். தமது சாதி வாக்குகளை உறுதி செய்து கொள்ள முடியும்.

நீயும் நானும் ஒண்ணு, மக்கள் வாயில் மண்ணு!

thiruma-trusts-ramadossஇருப்பினும், திருமாவுக்கு என்ன காரணத்துக்காகவோ ராமதாசுடன் ஒரு நல்லிணக்கம் அவசரமாகத் தேவைப்படுகிறது. அதற்காகக் கொளுத்தப்பட்ட மக்களுக்கும் கொளுத்திய கிரிமினல்களுக்கும் நல்லிணக்கம் பேசுகிறார். ராமதாசோ, “நான் இருப்பதனால்தான் வட தமிழகம் அமைதியாக இருக்கிறது” என்று வெளிப்படையாகவே மிரட்டுகிறார்.

திருமா – ராமதாசு கூட்டணி, வன்னியர் – தாழ்த்தப்பட்டோரிடையேயான சமூக உறவில் எந்த சமத்துவத்தையும் கொண்டுவந்து விடவில்லை. வசூல் வேட்டை நடத்தவும், போலீசுக்குப் புரோக்கர் வேலை பார்க்கவும், கட்டப் பஞ்சாயத்து செய்யவும், காண்டிராக்ட் எடுக்கவும் மற்றெல்லா ஓட்டுப் பொறுக்கிகளும் பெற்றிருக்கும் ‘ஜனநாயக உரிமை’யை விடுதலை சிறுத்தைக் கட்சியின் ‘தளபதிகளுக்கு’த் தான் பெற்றுத் தந்தது. தாழ்த்தப்பட்ட உழைக்கும் மக்களுக்கு எதையும் பெற்றுத் தரவில்லை.

தாழ்த்தப்பட்ட மக்களைப் பொறுத்தவரை தனிக்குடியிருப்பும், தனிச்சுடுகாடும் அப்படியேதான் இருந்தன. அவ்வாறிருக்கும்போதே தாழ்த்தப்பட்டவர்களை ஏமாற்றுவதற்குத்தான் அம்பேத்கர் சிலை திறப்பு, தலித்துக்கு மந்திரி பதவி போன்ற ராமதாசின் தந்திரங்கள். பதிலுக்கு வன்னியர்களை தாஜா செய்வதற்குத்தான் ராமதாசுக்கு திருமா வழங்கிய தமிழ்க் குடிதாங்கி, அம்பேத்கர் சுடர் பட்டங்கள்.

வன்கொடுமை சட்டத்தில் உள்ளே தள்ள வேண்டிய காடு வெட்டி குருவுக்கு பொன்னாடை (கோப்பு படம்)

‘குச்சு கொளுத்தி’ என்று தாழ்த்தப்பட்ட மக்களால் வெறுப்புடன் ஏசப்பட்ட ராமதாசுக்கு, தாழ்த்தப்பட்ட மக்களையே ஓட்டுப்போட வைத்ததும், இப்போது நத்தம் காலனியைக் கொளுத்திய பின்னரும், தமிழர் ஒற்றுமை என்று கூறிக் கொண்டு ராமதாசுக்கு நல்லிணக்கத் தூது விடுவதும்தான் திருமாவின் சாதனை என்று சொல்ல வேண்டும்.

மறுகாலனியாக்கம் பெற்றெடுத்த புதிய புல்லுருவிகள்!

வன்கொடுமை சட்டத்தில் உள்ளே தள்ள வேண்டிய காடு வெட்டி குருவுக்கு பொன்னாடை (கோப்பு படம்)
வன்கொடுமை சட்டத்தில் உள்ளே தள்ள வேண்டிய காடு வெட்டி குருவுக்கு பொன்னாடை (கோப்பு படம்)

நத்தம் தாக்குதலைக் கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் படைப்பாளிகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பலரும் கலந்து கொண்டு பேசினர். நெருப்பு, கொள்ளை, துயரம், கண்ணீர் போன்ற சொற்கள் ஒலிபெருக்கியிலிருந்து தெறித்த வண்ணம் இருந்தன. ஆர்ப்பாட்டத்திற்கு ‘அண்ணன் திருமா’வுடன் வந்திறங்கி இருபுறமும் அணிவகுத்து நின்ற குவாலிஸ், இன்னோவா, சுமோ போன்ற வெள்ளை வண்டிகளில் சாய்ந்தபடி மினிஸ்டர் ஒயிட்டும், கழுத்தில் தங்கத் தாம்புக்கயிறு, கையில் பிரேஸ்லெட்டும் அணிந்த சிறுத்தைகள் பலர் நின்றிருந்தனர். அவர்கள் வாயிலிருந்து ‘லட்சம், கிரவுண்டு, அப்ரூவ்டு, எம்.எல்.ஏ’ போன்ற சொற்கள் உதிர்ந்து கொண்டிருந்தன. இந்த வர்க்கத்தினரை அதிகாரத்துக்கு அழைத்துச் செல்வதைத்தான் தலித்துகளை அதிகாரத்துக்கு அழைத்துச் செல்வது என்கிறார் திருமா.

ரியல் எஸ்டேட், மணல் கொள்ளை, லேபர் காண்டிராக்ட், உரிமங்கள் பெற்றுத் தருதல், தண்ணீர்வியாபாரம், செக்யூரிட்டி ஏஜென்சி, மெட்ரிக் பள்ளி, சுயநிதிக் கல்லூரி, வாடகைக்கார் தொழில், நிலம் சார்ந்த கட்டப் பஞ்சாயத்துகள், பன்னாட்டு நிறுவனங்களுக்கான துணைத் தொழில்கள், கருங்காலி தொழிற்சங்கங்கள் போன்று பொறுக்கித் தின்னவும், கொள்ளையடிக்கவுமான பல வாயப்புகளை மறுகாலனியாக்க கொள்கைகள் திறந்து விட்டிருக்கின்றன. இத்தகைய தொழில்களில் ஈடுபடுபவர்கள்தான் வி.சி. கட்சியின் தூண்கள். இவர்கள்தான் டிஜிடல் பானர் வைப்பவர்கள், தங்கக் காசு கொடுப்பவர்கள், கூட்டத்துக்கு ஆள் திரட்டுபவர்கள், அண்ணன் வந்தால் முன்னும் பின்னும் 50 வண்டிகளில் புழுதி கிளப்பிக் கொண்டு செல்பவர்கள்.

இதே வகையான தொழில்களில் ஈடுபட்டிருக்கும் பா.ம.க. உள்ளிட்ட பிற கட்சிகளின் உள்ளூர்த் தலைவர்களோடு இவர்கள் தொழில் கூட்டாளிகளாக, நண்பர்களாக, அன்றாடம் போலீசு ஸ்டேசன் முதல் கலெக்டர் ஆபீஸ் வரையில் பல இடங்களில் பழகுபவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் அனைவரின் வர்க்க நலனும் ஒன்றுதான். தொழில் தேவைக்காக வெவ்வேறு கட்சிகளில் இருக்கிறார்களேயன்றி, வேறு எந்தக் கொள்கையாலும் இவர்கள் பிரிந்து நிற்கவில்லை.

ஒரு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலோ, பொதுப்பணித்துறையிலோ இலஞ்சத் தொகை கீழிருந்து மேல் வரை தீர்மானிக்கப்பட்ட விகிதாச்சாரத்தின் அடிப்படையில் சுமுகமாகப் பிரித்துக் கொள்ளப்படுவதைப் போல, தனியார்மய- தாராளமயக் கொள்கைகள் வழங்கியுள்ள வாப்புகளைப் பயன்படுத்தி அடிக்கின்ற கொள்ளையை இவர்கள் தமக்குள் சுமுகமாகப் பிரித்துக் கொள்கிறார்கள். தேர்தல் அரசியல் கூட்டணி மாறுவதால், சில நேரம் இந்த அணியிலும், சில நேரம் அந்த அணியிலும் இருக்க நேர்ந்தாலும், இவர்களுடைய உறவின் சமநிலை அநேகமாகக் கெடுவதில்லை.

சென்ற மே மாதம் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வின் தோல்வியைத் தொடர்ந்து, ஜுலை மாதத்திலேயே திராவிடக் கட்சிகள் அல்லாத மூன்றாவது அணி அமைக்கப் போவதாக அறிவித்தார் ராமதாசு. உடனே அதை வழிமொழிந்தார் திருமாவளவன். தன்னை திடீரென்று ராமதாசு கழற்றிவிடுவார் என்பதைத்தான் திருமாவளவன் எதிர்பார்க்கவில்லை போலும். உழைத்துக் கஞ்சி குடிக்கின்ற தாழ்த்தப்பட்ட உழைக்கும் மக்கள் ராமதாசுடன் சமரசத்தைக் கோரவில்லை. விடுதலைச் சிறுத்தைகள் நடத்தும் அரசியல் இம்மக்களுடைய நலனுக்கானதும் அல்ல.

சாதிய பிழைப்புவாதத்தைப் புனிதப்படுத்திய அடையாள அரசியல்!

அ மார்க்ஸ்
அ மார்க்ஸ்

வெறுத்து ஒதுக்கப்படவேண்டிய இந்தச் சாதி அரசியலின் இரண்டாவது சுற்று, 90-களின் தொடக்கத்தில் ஆரவாரமாகத் தமிழகத்தில் தலையெடுத்தது. வன்னியர் வாக்குவங்கியை மையமாக வைத்துப் பாட்டாளி மக்கள் கட்சியைத் தொடங்கிய ராமதாசு, அம்பேத்கர் – பெரியார் – மார்க்ஸ் ஆகியோரது படங்களை உறுப்பினர் அட்டையில் போட்டுக் கொண்டதன் மூலம் சாதி-தீண்டாமை ஒழிப்பு, தமிழ்த்தேசிய விடுதலை, வர்க்க விடுதலை போன்ற எல்லா சரக்குகளும் கிடைக்கின்ற பல்பொருள் அங்காடியாக பா.ம.க.வைச் சந்தைப்படுத்தினார். அப்பட்டமான சாதிக் கட்சி என்று தெரிந்தபோதும், சமூக மாற்றத்துக்குக் குறுக்குவழி தேடிக் கொண்டிருந்த சில முன்னாள் புரட்சியாளர்களும், பின் நவீனத்துவ அறிவுத்துறையினரும், நரிக்கு சாயம் பூசிப் பரியாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.

பின் நவீனத்துவத்தின் நுண் அரசியலானது, சாதி, உட்சாதி, இனக்குழு, பாலினம் போன்ற அடையாளங்களை முதன்மைப்படுத்தி, வர்க்கப் போராட்டம் என்ற கருத்தாக்கத்தையும் கம்யூனிசத்தையும் தூற்றியது.

ஏகாதிபத்தியத்தால் உலகம் முழுவதும் ஸ்பான்சர் செய்யப்பட்டு, தன்னார்வக் குழுக்களால் கடைவிரிக்கப்பட்ட இந்த அடையாள அரசியலை, தலித்தியம், தலித் அரசியல் என்ற பெயர்களில் பின் நவீனத்துவ அறிஞர்கள் இங்கே முழங்கினர்.

‘கம்யூனிஸ்டு கட்சிகளும், நக்சல்பாரிக் கட்சியும் தலித்துகளை காலாட்படையாகப் பயன்படுத்திக் கொள்கின்றன. அக்கட்சிகளிலிருந்தெல்லாம் தலித்துகள் வெளியேறித் தமக்கென தனிக்கட்சி தொடங்கவேண்டும். தலித்துகளின் intellectuals-dishonestyஉணர்வுகளைத் தலித் அல்லாதவர்கள் ஒருக்காலும் உணர முடியாது. தீண்டாமைக்கு எதிராகத் தலித்துகளைத் தவிர, வேறு யாரும் போராடுவார்கள் என்று நம்ப முடியாது. வர்க்கம் என்ற பேரடையாளத்துக்குள் சாதியை அடக்குவதால் கம்யூனிசம் சாதியை ஒழிக்காது. கம்யூனிஸ்டுகள் அதற்காகப் போராடியதுமில்லை. எனவே, தலித்துகள் சிதறிக் கிடக்காமல் தனியொரு வாக்குவங்கியாகத் திரள வேண்டும். போலி ஜனநாயகம் என்று கூறி இந்தத் தேர்தலை புறக்கணிப்பது தவறு. தேர்தல் அரசியல் மூலம் கைப்பற்றும் அதிகாரத்தின் மூலமும், கல்வி – இட ஒதுக்கீடு முதலான வழிகளில் பொருளாதார முன்னேற்றம் அடைவதன் மூலமாகவும்தான் தலித்துகள் விடுதலை பெற முடியும்’ – இவையெல்லாம் அவர்கள் மேற்கொண்ட பிரச்சாரங்கள்.

நாய்க்கன் கொட்டாய் பகுதியில் நக்சல்பாரிகளின் செல்வாக்கு இருந்தவரை சாதி அரசியல் தலையெடுக்க முடியவில்லை. அவர்கள் இல்லாத காரணத்தினால்தான் இன்று இத்தாக்குதல் நடந்திருக்கிறது” என இன்றைக்கு நத்தம் காலனி மக்கள் கூறுவதை இந்த இடத்தில் பொருத்திப் பார்க்க வேண்டும்.

சாதி அமைப்பு என்பது ஒரு ஜனநாயக விரோத நிறுவனம். சாதி ஆதிக்கமும் தீண்டாமையும் தவறு என்று ஆதிக்க சாதி ravikumar

ரவிக்குமார்

உழைக்கும் மக்களை உணர வைத்து, சாதிக்கு எதிராக அவர்களைப் போராட வைப்பதுதான் ஜனநாயகப் புரட்சியின் கடமை. ஆனால், அடையாள அரசியலோ, ‘மற்றதன் இருப்பை அங்கீகரிப்பது’ என்று கூறிக்கொண்டு எல்லா சாதியினரும் தத்தம் அடையாளத்தைப் பேணிக்கொள்வதை ஒரு ஜனநாயக உரிமையாகக் கௌரவப்படுத்தியது.

அதே நேரத்தில், ‘சாதி அடையாளத்தைத் துறந்து பணியாற்றும் கம்யூனிஸ்டுகளை நம்பாதே’ என்று தலித் மக்களுக்கு அறிவுறுத்தியது. ‘மாயாவதி, பஸ்வான் உள்ளிட்ட அப்பட்டமான தலித் பிழைப்புவாதிகளைக்கூட யாரும் விமர்சிக்கக் கூடாது. விமர்சிப்பவர்கள் ஆதிக்க சாதிக்காரர்களாகவோ, அவர்களது எடுபிடிகளாகவோதான் இருக்க முடியும். தீண்டாமைக்குரிய தீர்வை ஒரு தலித்தைத் தவிர வேறுயாரும் கூறமுடியாது. தீண்டாமை எதிர்ப்புப் போராட்டத்துக்குத் தலித்தைத் தவிர வேறு யாரும் தலைமை தாங்க முடியாது, கூடாது’ என்றெல்லாம் பேசி, மற்ற சாதிகளில் பிறந்த ஜனநாயக சக்திகளை எதிர்நிலைக்குத் தள்ளியது தலித் அரசியல். பெரியாரைத் தலித் விரோதியாகச் சித்தரித்தார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ரவிக்குமார்.

இவ்வாறு, ஒரு மனிதன் கொண்டிருக்கும் கொள்கை, அவனது நடைமுறை ஆகியவற்றைப் புறந்தள்ளி விட்டு, ‘அவனுடைய பிறப்பை முதன்மைப்படுத்தியதன் மூலம்’, அடையாள அரசியல் பார்ப்பனியத்தை அப்படியே வழிமொழிந்தது. உழைக்கும் வர்க்கத்தைச் சாதிரீதியாகக் கூறுபோடுவது, கம்யூனிஸ்டு மற்றும் புரட்சிகர இயக்கங்களின் மீது தலித் இளைஞர்களுக்கு அவநம்பிக்கை ஏற்படுத்துவது என்ற ஆளும் வர்க்கத் திட்டத்தை நிறைவேற்றுவதே இதன் நோக்கமாக இருந்தது. ‘நம்ம சாதிக்காரனுக்கு ஓட்டுப் போடு’ என்று பச்சையாகக் கேட்கும் ஓட்டுப் பொறுக்கிகளின் சாதி அரசியலையே, பல்கலைக்கழகப் பேராசிரியர்களின் பம்மாத்து மொழியில், தன்னார்வக் குழுக்களின் தத்துவ விசார தோரணையில் முன்வைத்தது அடையாள அரசியல். மார்க்சிய – லெனினிய புரட்சிகர அரசியலிலிருந்து வெளியேறிய எஸ்.என்.நாகராசன், எஸ்.வி.இராஜதுரை, ஞானி, நிறப்பிரிகை குழுவினர் முதலானோரெல்லாம் அடையாள அரசியலில்தான் தஞ்சம் புகுந்தனர்.

சாதி சமத்துவம் என்பது சாத்தியமா?

இதன்படி, சாதியைக் கூறிக்கொள்வது நேர்மையான நடவடிக்கையாக போற்றப்பட்டது. “நான் வன்னியன் என்பதில் பெருமை கொள்கிறேன்” என்று அறிவித்தார் கவிஞர் பழமலய் (இன்றைக்கு அவர் ராமதாசின் கூற்றை அப்படியே வழிமொழிகிறார் என்பது குறிப்பிடத்தக்கது). பின் நவீனத்துவ அறிஞர்களால் ஆசீர்வதிக்கப்பட்ட மருத்துவர் ஐயாவோ, ‘காலையில் வன்னியராக இருந்து அக்கினி சட்டி கொடி ஏற்றுவது, மாலையில் தலித் விடுதலைக்காக அம்பேத்கர் சிலை திறப்பது’ என்று பொளந்து கட்டினார்.

pn-identity-politics1அடையாள அரசியல், சாதியை மட்டுமின்றி, உட்சாதி அடையாளங்களையும் போற்றிக் கொண்டாடியது. சாதி அடையாளங்களைப் பேணிக்கொண்டே, சாதி சமத்துவத்தைக் கடைப்பிடிப்பதுதான் ஜனநாயகம் என்று வியாக்கியானம் செய்தது. மொத்தத்தில் ‘சுயநலம், சுயசாதி அபிமானம், பிழைப்புவாதம், ஆளும் வர்க்க நிறுவனங்களை நத்திப் பிழைப்பது, கட்சி தாவுவது, பொறுக்கித்தனங்கள்’ போன்ற நடவடிக்கைகள்தான் உண்மையான கலகங்கள் என்றும், ‘புரட்சி, தியாகம், சாதி ஒழிப்பு, வர்க்கப் போராட்டம்’ போன்ற கருத்துகள் தலித் மக்களை ஏமாற்றுவதற்கு, கம்யூனிசப் புரட்சியாளர்கள் கடைவிரிக்கும் ‘பெருங்கதையாடல்கள்’ என்றும் பிரச்சாரம் செய்தது. எனவே, இத்தகைய அமைப்புகளிலிருந்து ‘தப்பித்து’ வெளியே வருமாறு தலித்துகளை அறைகூவியது.

தலித் மக்களை இப்படித் தப்பிக்கச் சொல்லி அறிவுறுத்தியவர்களில் ஒருவர்தான் பின்னாளில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் எம்.எல்.ஏ. பதவியைக் கைப்பற்றியவரும், சமீபத்தில் தனது மகன் திருமணத்தை மருத்துவர் ஐயா தலைமையில் நடத்தியவரும், இப்பொழுதும் நத்தம் தாக்குதலுக்கு நக்சல்பாரிகளைக் குற்றம் சாட்டி அவதூறு செய்து கொண்டிருப்பவருமான இரவிக்குமார். அவர் ‘தப்பி’ விட்டார், அவருடன் சேர்ந்து இவற்றையெல்லாம் பிரச்சாரம் செய்த நிறப்பிரிகை அறிஞர்களும் ‘தப்பி’ விட்டார்கள். அடையாள அரசியல் வைத்த நெருப்பிலிருந்து நத்தம் மக்கள்தான் தப்ப முடியவில்லை.

சாதி என்ற அடையாளத்தின் சாரமே ஏற்றத்தாழ்வுதான். படிக்கட்டில் எத்தனாவது படி என்பதுதான் சாதி என்ற அடையாளத்தின் சாரம். சமமான படி இருக்க முடியாது. சாதி சமத்துவமும் இருக்க முடியாது. இதனால்தான் பட்டியல் இன மக்களைக் குறிப்பதற்கு ‘தலித்’ என்ற சொல்லைப் பொதுவாகப் பயன்படுத்திக் கொண்டாலும், ‘தலித் ஒற்றுமை’ என்பது கானல் நீராகவே இருந்து வருகிறது. தமிழகத்தில் பள்ளர், பறையர், அருந்ததியர் என்ற மூன்று முக்கியப் பிரிவினரைக் கூட ‘தலித்’ என்ற பெயரில் ஒன்றுபடுத்த முயலவில்லை. ‘நாங்கள் தலித் அல்ல, தேவேந்திர குலம்’ என்கிறார்கள் பள்ளர் சமூகத்தினர். அருந்ததியர் சமூகத்துப் பையனைக் காதலித்த பறையர் சமூகத்துப் பெண் சொந்த சாதிக்காரர்களாலேயே கொல்லப்படுகிறாள். திருமாவளவன், கிருஷ்ணசாமி போன்றோர் தங்கள் கட்சியினரின் உட்சாதி மேட்டிமைத்தனத்துக்குத் துணையாகத்தான் நின்று வருகின்றனர். இதனை ஒழிக்க முயன்றால் இவர்களது கட்சியே ஒழிந்துவிடும் என்பதே உண்மை.

மங்கும் சாதியை புதுப்பிக்கும் சாதிய பிழைப்புவாதம்!

மொத்தத்தில், சமூகத்தின் வளர்ச்சிப்போக்கில் பண்பாட்டுரீதியாக மெல்ல மங்குகின்ற சாதி உணர்வை, சாதிய பிழைப்புவாத வாக்கு வங்கி அரசியல் புளி போட்டு விளக்கிப் புதுப்பித்திருக்கிறது. அடையாள அரசியல், சாதி மற்றும்

புதுச்சேரியில் நடந்த போராளி தலைவனுக்கு பொன் வழங்கும் விழா (கோப்பு படம்)
புதுச்சேரியில் நடந்த போராளி தலைவனுக்கு பொன் வழங்கும் விழா (கோப்பு படம்)

உட்சாதி உணர்வுகளுக்குக் கௌரவமும் அந்தஸ்தும் தேடித்தந்திருக்கிறது. இதன் தொடர்விளைவாக, ஒவ்வொரு சாதியிலும் உட்சாதியிலும் உள்ள படித்த நடுத்தர வர்க்கமும் மேட்டுக்குடி வர்க்கமும் முடிந்தவரை பார்ப்பனப் பண்பாட்டைத் தழுவுவதன் மூலம் தன்னை மேல்சாதியாகக் காட்டிக் கொள்ள முயற்சிக்கிறது. இராசராசன் மள்ளர், நந்தன் அரசன் போன்ற வரலாற்றுக் கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்படுகின்றன. வருங்கால முதல்வர் ஆக விரும்புகின்ற சாதியினர் அனைவரும் தாங்கள் நேற்றைய முதல்வர் பரம்பரை என்று கூறிக்கொள்ளவே விரும்புகிறார்கள். சாதிப்பெருமிதம் கெட்டிப்படுகிறது.

விவசாயம் அழிந்து, மறுகாலனியாக்கத்தால் சிதறடிக்கப்பட்டு, முறுக்கு போடவும் மூட்டை தூக்கவும் தோட்டவேலை செய்யவும் மாநிலம் மாநிலமாக ஓடிக்கொண்டிருக்கும் கள்ளருக்கும், முத்தரையருக்கும், வன்னியருக்கும், பள்ளருக்கும் ஒரு மயக்கத்தைக் கொடுக்கும் போலிப் பெருமித அடையாளமாக இப்போது சாதி புதுப்பிக்கப்படுகிறது. தேவர் ஜெயந்தி, மகாபலிபுரம் விழா போன்றவையெல்லாம் ஆண்டுதோறும் அவர்களுக்கு ஏற்றப்படும் மயக்க ஊசிகள். தனியார்மய – தாராளமயக் கொள்கைகள் காரணமாகத் தோன்றியிருக்கும் புதிய தரகு வர்க்கங்கள்தான் இன்று சாதிச் சங்கங்களுக்கும் சாதிக்கட்சிகளுக்கும் புரவலர்கள்.

நத்தம் தாக்குதல் மற்றும் கௌரவக் கொலைகள் என்று அழைக்கப்படும் சாதிவெறிக் கொலைகள் எதைக் காட்டுகின்றன? நகரமயமாக்கம், பெண் கல்வி ஆகியவற்றின் காரணமாக ஒரே இடத்தில் படிக்கின்ற ஆண்களும் பெண்களும் சாதிய எல்லை கடந்து அறிமுகமாகிறார்கள். பழைய சாதிய இறுக்கங்களும் மனத்தடைகளும் தகர்ந்து காதலிக்கிறார்கள். அவர்களுடைய எதார்த்த வாழ்க்கைக்கும் விருப்பத்துக்கும் சாதி பொருத்தமற்றதாக, அவர்களது சுதந்திரத்துக்குத் தடையாக இருக்கிறது. சாதி நிராகரிக்கப்படுகிறது. தாழ்த்தப்பட்ட சமூகங்களைச் சார்ந்த இளைஞர்களைக் காதல் மணம் புரிந்துள்ள பிற சாதிகளைச் சேர்ந்த பெண்கள் நக்கீரன் இதழுக்கு அளித்துள்ள பேட்டிகளில், அவர்களிடம் சாதி மறுப்பு ஜனநாயகக் கருத்துகள் இயல்பாக அரும்பியிருப்பதை காணமுடியும்.

ஒருபுறம் சாதியின் அடித்தளம் பலவீனப்பட்டு வந்த போதிலும், சாதி ஆதிக்க விழுமியங்கள் அழிந்து விடவில்லை. சாதி கடந்த திருமணங்களில், தொடக்கத்தில் பெற்றோர்கள் முரண்படுவது, பின்னர் மெல்ல ஏற்றுக் கொள்வது என்பதுதான் பெரும்பாலும் நடந்து வருகிறது. திவ்யாவின் தந்தை நாகராஜ் விசயத்திலும் அதுதான் நடந்திருக்கும். அவ்வாறு நடக்க விடாமல் அங்கே சாதிவெறியைத் தூண்டி, இத்தகைய கொடூரமானதொரு தாக்குதலை நடத்தக் காரணமாக இருந்திருப்பது பாட்டாளி மக்கள் கட்சி எ.னும் சாதிக்கட்சி. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் மீது குற்றம் சாட்டி, அக்குற்றச்சாட்டுகளுக்குத் தாழ்த்தப்பட்ட மக்கள் அனைவரையும் பொறுப்பாக்கி, இதன் அடிப்படையில் ஆதிக்கசாதி சங்கங்கள் அனைத்தையும் திரட்டி நிறுத்தியிருக்கிறார் ராமதாசு. சாதி கடந்த திருமணத்தை எதிர்ப்பது என்று தொடங்கி வன்கொடுமைச் சட்டத்தையே முடக்குவது, சாதி- தீண்டாமையைத் தங்கள் பிறப்புரிமையாக அறிவிப்பது என்ற எல்லைக்குச் செல்கின்றனர் சாதிவெறியர்கள்.

சாதியைப் பாதுகாக்கும் அரசு, தீண்டாமையை ஒழிக்குமா?

171 கோடி ரூபாய் பெறுமான ரியல் எஸ்டேட் மோசடி வழக்கில் சிக்கிய வேலாயுதம் (நடுவில்) 2009ல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விழுப்புரம் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின், கருணாநிதியிடம் ஆட்சி பெறும் திருக்காட்சி (கோப்பு படம்)
171 கோடி ரூபாய் பெறுமான ரியல் எஸ்டேட் மோசடி வழக்கில் சிக்கிய வேலாயுதம் (நடுவில்) 2009ல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விழுப்புரம் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின், கருணாநிதியிடம் ஆட்சி பெறும் திருக்காட்சி (கோப்பு படம்)

சாதியை ஒழித்து சமத்துவத்தைக் கொண்டுவருவதற்கான வழிமுறைகளாகச் சிபாரிசு செய்யப்பட்ட இட ஒதுக்கீட்டால் பதவியும் அதிகாரமும் பெற்ற ஆதிக்க சாதியினரின் சங்கங்கள், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக ஒன்றுதிரண்டு நிற்கிறார்கள். தாழ்த்தப்பட்டோர் மீதான வன்கொடுமைக்கு எதிராக இயற்றப்பட்ட சட்டங்களின் கீழ் தீண்டாமைக் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்படுவதே இல்லை. பதிவு செய்யப்படும் வழக்குகளும் குற்றவாளிகளுக்கு விடுதலை பெற்றுத்தரும் விதத்திலேயே சோடிக்கப்படுவதால் 3 சதவீதம் பேர் கூட தண்டனை பெறுவதில்லை. இன்று வன்கொடுமைச் சட்டத்தை முடக்க இதுவே ஆதாரமாக காட்டப்படுகிறது.

கீழிருந்து மேல் வரை தலித் போலீசு அதிகாரிகள் இருந்தபோதிலும், அவர்களே கயர்லாஞ்சி வழக்கை எப்படி முடக்கினர் என்று அம்பலப்படுத்துகிறார் ஆனந்த் தெல்டும்டெ. இட ஒதுக்கீட்டுக் கொள்கை என்பது தனிநபர்களின் முன்னேற்றத்துக்கு வழிவகுக்குமேயன்றி, சாதி எனும் சமூகக் கொடுமையை ஒழிக்க உதவாது என்பதுடன், அதுவே சாதிய பிழைப்புவாத, வாக்கு வங்கி அரசியலுக்கும் வழிதிறந்து விடுகிறது என்பதையே அனுபவங்கள் காட்டுகின்றன.

இந்திய நாடாளுமன்ற ஜனநாயகம் என்பது, ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தில் ஊடாகப் பிறந்ததோ, நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு ஜனநாயகப் புரட்சியின் மூலம் நிலைநாட்டப்பட்டதோ அல்ல. இது விடுதலைப் போராட்டத்தை நீர்த்துப்போகச் செய்வதற்கும், பிரித்தாளுவதற்கும், நிறுவனமயப்படுத்துவதற்கும் பிரிட்டிஷ் அரசு திட்டமிட்டு மேலிருந்து திணித்த, கறை படிந்த ஜனநாயக அரசு வடிவம்.

“போலீசும் உளவுத்துறையும் சரியாகத் தம் கடமையைச் செய்திருந்தால் நத்தம் தாக்குதலை தடுத்திருக்க முடியும்; வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்கத் தமிழக அரசு தவறிவிட்டது” என்ற வகையில் கூறப்படும் விமர்சனங்கள், தெரிந்தோ தெரியாமலோ இந்த அரசு குறித்த பிரமையை உருவாக்குகின்றன. ஆனால், சட்டங்கள் மூலம் சமுதாயத்தை மேலிருந்து ஜனநாயகப்படுத்தும் நோக்கத்தில் இந்த அரசு உருவாக்கப்படவில்லை. சாதி முதலான பிற்போக்கு விழுமியங்களை ஒழித்து இந்திய சமூகத்தை ஜனநாயகப்படுத்தக் கூடாது என்பதே அரசின் நோக்கம்.

ஜனநாயகப் புரட்சியின்றி சாதி – தீண்டாமை ஒழிப்பு இல்லை!

சாதி, தீண்டாமை, ஆணாதிக்கம் உள்ளிட்ட ஜனநாயக விரோத விழுமியங்களை மக்கள் மனங்களிலிருந்து அகற்ற வேண்டுமானால், சாதி – மத வேறுபாடுகளை நிராகரிக்கின்ற ஜனநாயகப் புரட்சிக்கான போராட்டத்தில் மக்கள் ஈடுபடுத்தப்பட வேண்டும். தீண்டாமையை ஒழிக்க வேண்டும் என்ற உணர்வை தாழ்த்தப்பட்ட மக்களிடம் யாரும் உருவாக்க வேண்டிய அவசியம் இல்லை. சாதி ஆதிக்கம் கூடாது என்ற உணர்வுக்கு ஒரு சாதி இந்துவைக் கொண்டு வருவது எப்படி என்பதுதான் கேள்வி.

திவ்யா போன்ற பெண்கள் இத்தகைய உணர்வுக்கு வருவதற்கு காதல் ஒரு காரணமாக இருக்கிறது. ஆனால், ஆதிக்க சாதி மக்களை ஒட்டுமொத்தமாக இந்த உணர்வுக்கு கொண்டு வருவது எப்படி என்பதே நம்முன் இருக்கும் கேள்வி. நக்சல்பாரி அமைப்புகள் அப்பகுதியில் செல்வாக்கு பெற்றிருந்த காலத்தில் சாதி உணர்வு தலையெடுக்கவில்லை என்று கூறப்படுவதன் பொருள், ஆதிக்க சாதிகளைச் சேர்ந்த அனைவரும் தண்டனை குறித்த அச்சத்தினால் ஒடுங்கியிருந்தனர் என்பதல்ல; சாதி பாராட்டுவது கூடாது என்று கருதும் ஜனநாயகப் பண்பும் மனநிலையும் உழைக்கும் மக்களிடம் உருவாக்கப்பட்டிருந்தது என்பதுதான் அதன் பொருள்.

பார்ப்பனிய சாதியப் படிநிலை அமைப்பின் ஆகத்தாழ்ந்த படிகளில் இருக்கும் தாழ்த்தப்பட்ட சாதிகளாக இருந்தாலும் சரி, ஆதிக்க சாதியாக இருந்தாலும் சரி, சாதியின் பெயரால் நடத்தப்படும் அரசியல் ஒருக்காலும் சாதியை ஒழிக்காது. அது சாதி அமைப்புகளையும், சாதியப் பிழைப்புவாதக் கட்சிகளையும் மேலும் வலுப்படுத்தவே பயன்படும். ஒரு புதிய ஜனநாயகப் புரட்சிக்காக மக்களைத் திரட்டும் போக்கில்தான், சாதி தம் வர்க்க நலனுக்கு எதிரானது என்பதையும், அது ஒரு தீயொழுக்கம் என்பதையும் ஆதிக்க சாதி மக்களுக்கேகூட உணர்த்த முடியும்.

  புதிய ஜனநாயகம், ஜனவரி – 2013 __________________________________________________

 

 

காசா முனை – பேரழிவு ஆயுதங்களைப் பரிசோதிக்கும் களமானது! : குப்பன்.

பாலஸ்தீன சுயாட்சிப் பகுதியான காசா முனை மீது நவம்பர் 14 தொடங்கி 22 முடிய, ஒரு வார காலம் மீண்டும் ஒரு முழு அளவிலான இராணுவத் தாக்குதலைத் தொடுத்தது, இசுரேல். இப்போர் நடந்த ஒரே வாரத்திற்குள், காசா முனை மீது ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறை வான்வழித் தாக்குதல்களை நடத்தி, நூற்றுக்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்களைக் கொத்துக்கொத்தாகக் கொன்றது, யூத மதவெறி இசுரேல் அரசு. கொல்லப்பட்டவர்களுள் பெரும்பாலோர் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட சாதாரண பொதுமக்கள் என்பது தற்பொழுது உலகெங்கும் அம்பலமாகிவிட்டது. இதுவொருபுறமிருக்க, காசா முனைப் பகுதியினுள் நுழைந்து தரைவழிப் போரை நடத்துவதற்கு 75,000 சிப்பாகள் தயாராக இருப்பதாகவும் இசுரேல் அறிவித்தது.

‘‘காசா முனை சுயாட்சிப் பகுதியில் ஆட்சி நடத்தி வரும் ஹமாஸ் இயக்கம், கடந்த நவம்பர் 10 அன்று தன் மீது ராக்கெட் தாக்குதலை நடத்தியது. அதனால் தனது நாட்டையும் குடிமக்களையும் தற்காத்துக் கொள்ளும் நோக்கத்தில்தான் இந்த இராணுவத் தாக்குதலை நடத்தியதாக’’க் கூறித் தனது ஆக்கிரமிப்புப் போர் நடவடிக்கைகளை நியாயப்படுத்தி வருகிறது, இசுரேல். இதுவொரு புளித்துப் போன காரணம் மட்டுமல்ல, நவம்பர் 10 அன்று ஹமாஸ் இயக்கம் நடத்திய ராக்கெட் தாக்குதலை இசுரேலின் மீது தொடுக்கப்பட்ட போர் போலக் குற்றஞ்சுமத்துவதற்கு எந்தவொரு அடிப்படையும் கிடையாது.
1990-களில் இசுரேலுக்கும் பாலஸ்தீன விடுதலை இயக்கத்துக்கும் கையெழுத்தான ஆஸ்லோ ஒப்பந்தப்படி காசா முனை சுயாட்சிப் பகுதியா0க அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், உண்மையில் காசா முனை இன்றும் இசுரேலின் ஆக்கிரமிப்பு-முற்றுகையின் கீழ்தான் இருந்துவருகிறது. காசா முனைப் பகுதியில் செல்வாக்குடன் உள்ள ஹமாஸ் இயக்கத்தினரை ஓடுக்க வேண்டும் என்பதற்காகவே, அப்பகுதி மீது 2008-ஆம் அண்டு தொடங்கி ஒரு சட்டவிரோதமான பொருளாதாரத் தடையை விதித்து, அத்தியாவசிய உணவுப் பொருள் போக்குவரத்தைக்கூடத் தடுத்து வருகிறது, இசுரேல். இப்பொருளாதாரத் தடை இனப்படுகொலைக்குச் சமமானது எனக் குற்றஞ்சுமத்தப்பட்ட பின்னும் இத்தடையை நீக்க மறுக்கிறது, இசுரேல். இது மட்டுமின்றி, காசா முனை மீது பீரங்கி கொண்டு தாக்குவது உள்ளிட்டு ஒரு தாழ்நிலைப் போரைத் தொடர்ந்து நடத்தியும் வருகிறது, இசுரேல்.

இசுரேலின் இந்தச் சட்டவிரோத ஆக்கிரமிப்பைப் புறக்கணித்துவிட்டு, ஹமாஸ் நடத்தி வரும் ராக்கெட் தாக்குதல்களைப் பயங்கரவாதமெனக் குற்றஞ்சுமத்துவது ஒருதலைப்பட்சமானது. குறிப்பாக, நவம்பர் மாதத் தொடக்கத்தில் இசுரேல் காசா முனை மீது அடுத்தடுத்து நடத்திய இரண்டு தாக்குதல்களில், வீதிகளில் சுற்றித் திரிந்த ஒரு மனநோயாளியும், ஒரு 13 வயதுச் சிறுவனும் மாண்டு போனார்கள். இதற்குப் பதிலடியாகத்தான் ஹமாஸ் இசுரேலின் மீது நவம்பர் 10 அன்று ராக்கெட் தாக்குதலை நடத்தியது.

காசா முனை மீது மீண்டும் ஒரு முழுநிறைவான இராணுவத் தாக்குதலைத் தொடுப்பதற்குக் காரணம் தேடிக் கொண்டிருந்த யூத மதவெறி பாசிச ஆட்சியாளர்களுக்கு இந்த ராக்கெட் தாக்குதல் சாக்காகக் கிடைத்தது என்பதே உண்மை. இந்த ராக்கெட் தாக்குதல் நடந்திருக்காவிட்டாலும் காசா முனை மீது இத்தகைய தாக்குதலை நடத்துவதற்கு இசுரேல் வேறொரு புளுகை அவிழ்த்துவிடவும் தயங்கியிருக்காது. ஏனென்றால், இசுரேலும், அதன் எஜமானனான அமெரிக்காவும் சில அரசியல்-இராணுவ நோக்கங்களுக்காக காசா முனை மீது இப்படியானதொரு விரிந்த தாக்குதலைத் தொடுக்கக் காத்திருந்தனர் என்பதும் தற்பொழுது அம்பலமாகியிருக்கிறது. குறிப்பாக, இத்தாக்குதல் தொடங்குவதற்கு முன்பாக இசுரேலும் அமெரிக்காவும் கூட்டாக நடத்திய இராணுவ ஒத்திகையைத் தற்செயலானதாக ஒதுக்கித் தள்ளிவிடவும் முடியாது.

லெபனான் நாட்டில் இயங்கிவரும் ஹிஸ்புல்லா குழுவுக்கும் இசுரேலுக்கும் 2006-ஆம் ஆண்டு நடந்த போரின்பொழுது, ஹிஸ்புல்லா குழு நடத்திய ராக்கெட் தாக்குதல்களை இசுரேலால் சமாளிக்க முடியாமல் போனது. இப்படிபட்ட ராக்கெட் தாக்குதல்களிலிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்வதற்காக, ராக்கெட்டுகளை இடைமறித்து அழிக்கும் ஏவுகணை பாதுகாப்பு கேடயத் தொழில்நுட்பத்தை, அப்போருக்குப் பின் அமெரிக்காவின் உதவியோடு உருவாக்கி வருகிறது, இசுரேல். இரும்பு மாடம் (ஐணூணிண ஈணிட்ஞு) என அழைக்கப்படும் இப்பாதுகாப்புக் கேடய செயல்திறனைப் பரிசோதித்துப் பார்ப்பதற்கான வாப்பாக இந்தத் தாக்குதலைப் பயன்படுத்தியது, இசுரேல். இரானின் அதிகதொலைவு சென்று தாக்கும் ராக்கெட்டுகளை இடைமறித்து அழிப்பதற்கு இந்த ஏவுகைணைத் தொழில்நுட்பம் அவசியமானது என அமெரிக்க-இசுரேல் கூட்டணி கருதுவதால், காசா முனை மீது நடத்தப்படும் இத்தாக்குதலை ஒரு ஒத்திகையாக, இரான் மீதான போர் தயாரிப்புக்கான முன்னோட்டமாகவே கருதி நடத்தியது, அமெரிக்க-இசுரேல் கூட்டணி.

ஹமாஸ் இயக்கம் இசுரேல் மீது ஏவும் ராக்கெட்டுகள், இசுரேலிடம் உள்ளது போன்ற பேரழிவு ஏற்படுத்தும் ஆயுதம் கிடையாது. இந்த ராக்கெட் ஒருவரைக் கொல்ல வேண்டும் என்றால், அது நேரடியாக அவர் தலை மீது விழ வேண்டும் என மதிப்பிடுகின்றனர், இராணுவ வல்லுநர்கள். இத்தகைய ராக்கெட்டுகளை ஏவுவதற்கு காசா முனையில் அமைக்கப்பட்டுள்ள ஏவுதளங்களை அழிப்பது மற்றும் ஹமாஸ் இயக்கத்தின் முக்கியத் தலைவர்களைக் குறிவைத்துத் தாக்கிக் கொன்று, அவ்வியக்கத்தை இராணுவரீதியாகப் பலவீனப்படுத்துவது இத்தாக்குதலின் முக்கிய நோக்கமாகும். இதன் அடிப்படையில், ஹமாஸ் இயக்கத்தின் முக்கிய தளபதியான அகமது ஜாபாரி காரில் சென்றுகொண்டிருந்தபொழுது, விமானக் குண்டுவீச்சு மூலம் கொல்லப்பட்டார். ஹமாஸின் இராணுவக் கிடங்குகளை அழிப்பது என்ற போர்வையில் காசா முனையின் பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட முக்கிய அரசு அலுவலகங்கள், பத்திரிகை அலுவலகங்கள் என கேந்திரமான மையங்கள் அனைத்தையும் விமானக் குண்டுவீச்சு மூலம் தரைமட்டமாக்கியிருக்கிறது, இசுரேல். பொது மக்களின் குடியிருப்புகள் மட்டுமின்றி, காசா முனையில் ஐ.நா. மன்றம் நடத்தும் அகதி முகாம்கூட இசுரேலின் விமானத் தாக்குதலுக்கு இலக்காகியிருக்கிறது.

அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இசுரேல் நாடாளுமன்றத்திற்கான தேர்தல்கள் நடைபெறவுள்ளன. தற்பொழுது அதிகாரத்திலுள்ள பிரதமர் நேதன்யாஹு, தனது அரசின் தோல்விகளை மூடிமறைக்கவும், எதிர்க்கட்சிகளின் வாயை அடைக்கவும், மீண்டும் ஆட்சியைப் பிடிக்கவும் தற்பொழுது காசா முனை மீது நடத்தப்பட்ட தாக்குதலைத்தான் முன்னிறுத்திப் பிரச்சாரம் செதுவருகிறார். இந்த வகையிலும் இசுரேலின் ஆளுங்கட்சிக்கு இத்தாக்குதல் அவசியமானதாக இருக்கிறது.

வழமை போலவே, அமெரிக்காவும் இங்கிலாந்தும் இசுரேல் நடத்திவரும் இந்த அடாவடித்தனமான தாக்குதலை, பாறை போல” ஆதரித்து நிற்கின்றன. ஒபாமா, இரண்டாவது முறையாக அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற கையோடு, இசுரேல் தன்னைத் தற்காத்துக் கொள்ள நடத்தும் போர் இது” என அறிக்கை விடுத்து, யூத மதவெறி பயங்கரவாதத்துக்குக் கொம்பு சீவிவிட்டார். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இசுரேலின் ஒருதலைப்பட்சமான இத்தாக்குதலைக் கண்டித்து ஒரு காகிதத் தீர்மானம் இயற்ற முன்வந்ததைக்கூடப் பொறுத்துக் கொள்ள முடியாமல், தனது ரத்து அதிகாரத்தைப் பயன்படுத்தித் தடுத்து நிறுத்தியது, அமெரிக்கா. ஜார்ஜ் புஷ் இராக், ஆப்கானில் தொடங்கி வைத்த ஆக்கிரமிப்புப் போரை லிபியா, சிரியா என விஸ்தரித்த ஒபாமா என்ற ஓநாயிடமிருந்து இந்தப் போர் வெறியைத் தவிர, சமாதானத்தையோ, நல்லிணக்கத்தையோ எதிர்பார்க்க முடியாது.

ஒருபுறம் இசுரேல் காசா முனை மீது விதித்துள்ள பொருளாதாரத் தடையினையும், அதன் விமான மற்றும் கப்பற்படைத் தாக்குதலையும் ஆதரித்து நிற்கும் அமெரிக்க அரசு, மறுபுறம் இசுரேல் காசா முனை மீது தரைப்படை தாக்குதலை நடத்தக் கூடாது என உபதேசிக்கிறது. மேற்குலக ஏகாதிபத்திய நாடுகள் தரைவழித் தாக்குதலை ஆதரிக்க மறுப்பதால், இசுரேலும் எல்லைப்புறத்தில் படைகளைக் குவித்து உதார் விடுவதற்கு அப்பால் செல்லவில்லை.

அரபுலக நாடுகளில் ஏற்பட்டுள்ள சில அரசியல் மாற்றங்கள்தான் அமெரிக்க-இசுரேல் கூட்டணி காசா முனை மீது உடனடியாகத் தரைவழித் தாக்குதலை தொடங்க முடியாமல், அவற்றின் கைகளைக் கட்டிப் போட்டுள்ளன. அமெரிக்க அடிவருடியும் இராணுவ சர்வாதிகாரியுமான ஹோஸ்னி முபாரக் பதவியிறக்கப்பட்ட பின் எகிப்தில் நடைபெற்ற தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடித்துள்ள சன்னி பிரிவைச் சேர்ந்த முசுலீம் சகோதரத்துவக் கட்சிக் கூட்டணி, ஹமாஸ் இயக்கத்தை ஆதரிப்பதோடு, இசுரேல் தனது தாக்குதலை உடனடியாக நிறுத்திவிட்டு ஹமாஸுடன் ஒரு சமாதான ஒப்பந்தத்தைப் போட்டுக் கொள்ள வேண்டும் எனக் கோரியது. எகிப்தின் இக்கோரிக்கையை துனிசியா, துருக்கி, கத்தார் ஆகிய அரபு நாடுகள் மட்டுமின்றி, அரபு லீக் அமைப்பும் ஆதரித்தன.

அமெரிக்காவை எதிர்த்து வரும் இரான், சிரியா மற்றும் ஹிஸ்புல்லா இயக்கத்தோடு நெருக்கமாக இருந்துவரும் ஹமாஸ் இயக்கம், தற்பொழுது அமெரிக்காவின் நட்பு நாடுகளான எகிப்து, துருக்கி, கத்தார் ஆகியவற்றை நோக்கித் திரும்புவது ஒரு திருப்பு முனையாகக் கருதப்படுகிறது. எகிப்து அமெரிக்காவை மீறிச் செயல்படாது என்றபோதிலும், கடந்த இரண்டாண்டுகளில் அந்நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள், பாலஸ்தீனத்துக்கு எதிரான இசுரேலின் போர் நடவடிக்கைகளை முன்னைப் போல வெளிப்படையாக ஆதரித்து நிற்க முடியாத நிலைமைக்கு அந்நாட்டைத் தள்ளியிருக்கிறது. இந்த நிலைமைகளைக் கருத்தில்கொண்டுதான் அமெரிக்காவும் எகிப்தின் சமாதான முயற்சிகளுக்கு வெள்ளைக்கொடி காட்டியது.

காசா முனை மீது இசுரேல் விதித்துள்ள பொருளாதாரத் தடைகளை முற்றிலுமாக நீக்குவது, இசுரேலின் போர்க் குற்றங்களுக்காக அதனின் ஆட்சியாளர்களைத் தண்டிப்பது, காசா முனை மீது இசுரேல் இழைத்துள்ள நாசங்களுக்கு நட்ட ஈடு வழங்குவது, பாலஸ்தீன மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பது பற்றியெல்லாம் பேசாத எந்தவொரு சமாதான ஒப்பந்தமும் உண்மையானதாக, நியாயமானதாக இருக்கப் போவதில்லை. ஆனால், ஐ.நா.-எகிப்து-அமெரிக்கக் கூட்டணியோ, ஹமாஸ் தனது ராக்கெட் தாக்குதலை நிறுத்த வேண்டும்; இசுரேல் தனது வான்வழித் தாக்குதலை நிறுத்த வேண்டும்” என்ற மொன்னையான ஒப்பந்தத்தைத்தான் பாலஸ்தீன மக்களின் மீது திணித்தது. அதாவது, இசுரேல் தனது இராணுவத் தாக்குதல்களுக்குச் சற்று ஓவு கொடுப்பதையே மாபெரும் சமாதானமாகக் காட்டி ஏத்துவிட முயலுகின்றன. பாம்பும் சாகக் கூடாது; தடியும் நோகக் கூடாது” என்ற தந்திரத்தோடு தயாரிக்கப்பட்டு முன்வைக்கப்படும் இத்தகைய சமாதான ஒப்பந்தங்கள் யூத மதவெறி பாசிச இசுரேல் அரசை மேலும் மேலும் பலப்படுத்தவே பயன்பட்டுள்ளன என்பதுதான் கடந்த கால அனுபவங்கள் உணர்த்தும் உண்மை.

 நன்றி : புதிய ஜனநாயகம் DEC- 2012

புலிகள் இயக்கத்தின் மீதான தடை நீட்டிப்பு : பாசிச ஒடுக்குமுறைக்கான இன்னுமொரு ஆயுதம்

Pஇது ஒரு மீள்பதிவு : published on: Nov 17, 2010 @ 22:12

ராஜீவ் கொலைக்குப் பழிவாங்கும் நோக்கத்தோடு கடந்த 1992-ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்ட பின்னர், மத்திய அரசு இத்தடையை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தொடர்ந்து நீட்டித்து வருகிறது. கடந்த மே மாதத்தில் பிறப்பிக்கப்பட்ட இத்தடை நீட்டிப்பு உத்தரவு, நடுவர் மன்றத்தில் ஆறு மாதங்களுக்குள் உறுதி செய்யப்பட வேண்டும். இச்சடங்கின்படி, தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி விக்ரமஜித் சென் தலைமையில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு நடுவர் மன்றம் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

இலங்கை அரசே புலிகளை முற்றாக அழித்து விட்டோம் என்று கூறிவிட்ட நிலையில், இங்கு மீண்டும் புலிகள் இயக்கத்துக்குத் தடை விதிக்க எந்த நியாயமுமில்லை. அமெரிக்காவில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சார்பில், நாடு கடந்த தமிழீழ அரசை அமைப்பதாக அமெரிக்காவின் பிலடெல்பியா மாகாணத்தில் கூட்டம் நடத்தப்பட்டுத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போதிலும், இதை அமெரிக்க அரசு தடுக்கவோ அவ்வமைப்பின் செயல்பாடுகளை முடக்கவோ இல்லை. ஆனால், அவ்வமைப்பையும் அபாயகரமானதாகச் சித்தரிக்கிறது, இந்தியா.

பிளவுவாத, பிரிவினைவாத, பயங்கரவாத, தீவிரவாதப் பீதியூட்டி அரசியல் ஆதாயமடைவதே பார்ப்பன பாசிச சக்திகளின் நிரந்தரக் கொள்கையாக உள்ளது. தேவையானபோது அரசியல் எதிரிகள் மீது கருப்புச் சட்டங்களை ஏவிவிட்டுப் பழிவாங்குவதே அவற்றின் நடைமுறையாக உள்ளது.

தமிழகத்தில் ஈராண்டுகளுக்கு ஒருமுறை தடையை நீட்டிப்பதற்கான முகாந்திரங்களை உருவாக்கும் நோக்கத்தில் புலி ஆதரவாளர்கள் மீது பொய்வழக்குகள் போட்டு, முதல் தகவல் அறிக்கை தயாரித்து அதைக் காட்டியே பயங்கரவாத அபாயமாகச் சித்தரிப்பதை உளவுத்துறை போலீசார் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். புலி ஆதரவாளர்கள் மீது போடப்பட்டுள்ள எந்த வழக்கும் எந்த நீதிமன்றத்திலும் நிரூபிக்கப்படவில்லை. புலிகள் இயக்கத்தைத் தடை செய்வதற்கு ராஜீவ் கொலை மட்டுமே ஒரே காரணமாகக் காட்டப்படுகிறதே தவிர, தகுந்த தடயங்கள் – ஆதாரங்கள் இதுவரை முன்வைக்கப்படவுமில்லை.

இத்தடை விதிக்கப்பட்டதிலிருந்து ஈழம் என்று பேசினாலே குற்றமாகி, தடா – பொடா சட்டங்களின் மூலம் தமிழனின் வாயை மூடியது இந்திய அரசு. ஈழ அகதிகள் அனைவரும் புலி ஆதரவாளர்களாகச் சித்தரிக்கப்பட்டு வதைக்கப்பட்டனர். பொடா சட்டத்தின் கீழ் சிறையிடப்பட்ட பழ.நெடுமாறன் உள்ளிட்டு, ஈழத் தமிழருக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கும் இயக்கத்தினர் அனைவரும் தொடர்ந்து ஒடுக்கப்பட்டு வருகின்றனர். பொதுகூட்டம் நடத்தக்கூட ஈழ விடுதலை ஆதரவாளர்கள் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து அனுமதி பெறவேண்டியுள்ளது. 19 ஆண்டுகளாகியும் ராஜீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ள நளினி, இன்னமும் விடுதலை செய்யப்படாத கொடுமை தொடர்கிறது.

காஷ்மீர் மற்றும் வடகிழக்கிந்திய தேசிய இன உரிமைப் போராட்டங்களை மட்டுமின்றி, இலங்கை, நேபாளம், பூடான் முதலான அண்டை நாடுகளிலும் தலையிட்டு விடுதலைப் போராட்டங்களையும் இயக்கங்களையும் ஒடுக்கி வரும் தெற்காசியாவின் பிற்போக்கு எதிர்ப்புரட்சி கோட்டையான இந்திய அரசு, இந்தியத் தமிழினத்துக்கும் ஈழத் தமிழினத்துக்கும் எதிரிதான். ஆனால், நெடுமாறன் முதலான தமிழினவாதிகள் இதை மறுத்து, இலங்கையின் இனவெறி பாசிச ராஜபக்சே அரசு சீனாவின் பக்கம் சாவதால் இந்தியாவுக்கு ஆபத்து என்றும், சில மலையாள அதிகாரிகளின் பேச்சைக் கேட்டு காங்கிரசு ஆட்சியாளர்கள் தவறான முடிவுகள் எடுப்பதாகவும் கூறி இந்தியாவைத் தாஜா செய்வதையே நடைமுறையாகக் கொண்டுள்ளனர். எதிரி யார், நண்பன் யார் என்பதை வரையறுப்பது ஓர் அரசியல் இயக்கத்துக்கு அடிப்படையான – அவசியமான உயிர்நாடியான விசயம். தமிழினவாதிகளின் எல்லா தவறுகளும் இங்கிருந்துதான் தொடங்குகின்றன.

இச்சந்தர்ப்பவாதப் போக்குகளை அம்பலப்படுத்தி, ஈழ விடுதலை ஆதரவாளர்களையும் புரட்சிகர-ஜனநாயக இயக்கங்களையும் ஒடுக்குவதற்கான இன்னுமொரு ஆயுதமாகவே பயன்படுத்தப்படும் இத்தடை நீட்டிப்புக்கு எதிராக தமிழக மக்கள் தொடர்ந்து போராட வேண்டும்.

நன்றி :  புதிய ஜனநாயகம்

அமெரிக்கத் திமிருக்கு விழுந்த அடி! : அழகு

ஜூலியன் அசாஞ்சே ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பத்திரிகையாளர். இவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், விக்கிலீக்ஸ் இணையதளம் மூலம் அமெரிக்க இராணுவத்தின் போர்க் குற்றங்களையும், மற்ற நாடுகளில் உள்ள தனது தூதர்களைக் கொண்டு அந்நாடுகளில் அமெரிக்கா செதுவந்த உளவு/சதி வேலைகளையும் அம்பலப்படுத்தினார். இதன் மூலம் அமெரிக்காவின் பகையைச் சம்பாதித்துக் கொண்ட அசாஞ்சே, தான் சதித்தனமான முறையில் அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படுவதைத் தவிர்க்க தற்போது போராடிக் கொண்டிருக்கிறார்.

அசாஞ்சே மீது அமெரிக்காவில் பல வழக்குகள் பதியப்பட்டுள்ளன. அசாஞ்சேயை, உளவாளி எனக் குற்றஞ்சாட்டும் டெயன் பெயின்ஸ்டன் என்ற அமெரிக்க செனட்டர், மரண தண்டனை விதிக்கப்படக்கூடிய பிரிவுகளின் கீழ் அவரை விசாரிக்கவேண்டும் என வன்மத்தோடு கூச்சல் எழுப்பி வருகிறார். அமெரிக்கத் துணை அதிபர் ஜோபிடன் அசாஞ்சேவைப் பயங்கரவாதியென்றே சாடியிருக்கிறார்.

அசாஞ்சேவிற்குத் தகவல்களைக் கொடுத்ததாகக் குற்றஞ்சுமத்தி, பிராட்லி மேனிங் என்ற இளம் இராணுவ வீரரைக் கைது செது வைத்திருக்கும் அமெரிக்க அரசு, அவரை மிருகத்தைவிடக் கேவலமான முறையில், கொடூரமான முறையில் சிறையில் அடைத்து வைத்திருப்பதை ஐ.நா. வின் சித்திரவதைகளைக் கண்காணிக்கும் அமைப்பு உறுதி செதிருக்கிறது. எனவே, அசாஞ்சே அமெரிக்காவிடம் அகப்பட்டால், அவரது நிலை பிராட்லியைவிட மோசமாகும் என்பது உறுதி.

அசாஞ்சே, அமெரிக்காவின் போர்க் குற்றங்களை ஒன்றன்பின் ஒன்றாக இணையதளம் மூலம் அம்பலப்படுத்திக் கொண்டிருந்த வேளையில், அவர் மீது சுவீடன் நாட்டில் இரண்டு பாலியல் வன்தாக்குதல் வழக்குகள் தொடுக்கப்பட்டன. வழக்குகள் தொடுக்கப்பட்ட சமயத்தில், தனது நாட்டில் தங்கியிருந்த அசாஞ்சேவை இவ்வழக்குகளுக்காக சுவீடனிடம் ஒப்படைக்கப் போவதாக இங்கிலாந்து அரசு உடனடியாக அறிவித்தது. தன்னை சுவீடனிடம் ஒப்படைப்பதை எதிர்த்து அசாஞ்சே தொடுத்த வழக்கினை இங்கிலாந்து நீதிமன்றம் தள்ளுபடி செதுவிட்ட நிலையில், அவர் தற்பொழுது இங்கிலாந்திலுள்ள ஈகுவடார் நாட்டின் தூதரகத்தில் அரசியல் தஞ்சமடைந்திருக்கிறார்.

அசாஞ்சே, தன் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்கு விசாரணையை இங்கிலாந்தில் வைத்தே நேரடியாகவோ அல்லது வீடியோ கான்ஃபிரன்சிங் வசதி மூலமாகவோ சுவீடன் போலீசாரும் நீதிமன்றமும் நடத்திக் கொள்ள முன்வந்ததை, சுவீடன் அரசு அடாவடித்தனமாக மறுத்துவிட்டது. “இப்படி சுவீடன் அரசு மறுத்திருப்பது, அசாஞ்சேவைத் தன்னிடம் ஒப்படைக்கச் சோல்வதற்கு ஏற்றபடி சுவீடனில் அசாஞ்சே மீது இதுவரை எந்தவொரு வழக்கும் புனையப்படவில்லை என்பதைத்தான் காட்டுகிறது” என ஸ்டாக்ஹோம் மாவட்டத் தலைமை அரசு வழக்குரைஞர் கூறியிருப்பதாக செதிகள் வெளிவந்துள்ளன. இவற்றின் அடிப்படையில் அசாஞ்சே மீது சுவீடன் நாட்டில் தொடரப்பட்டுள்ளதாகக் கூறப்படும் இரண்டு வழக்குகளும் சோடிக்கப்பட்டவையாகவும்; சுவீடன் வழியாக அவரை அமெரிக்காவிடம் ஒப்படைப்பதற்கான சதித்திட்டமாகவும் இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தைப் பல்வேறு சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் ஆர்வலர்களும் எழுப்பியிருக்கின்றனர்.

அமெரிக்காவின் தலையாட்டிகளான ஆஸ்திரேலியாவும், ஐரோப்பா கண்டத்து நாடுகளும் அசாஞ்சேவிற்குத் தஞ்சமளிக்க மறுத்துவிட்டன. இப்படிபட்ட நிலையில்தான், தென்அமெரிக்கக் கண்டத்தைச் சேர்ந்த ஏழை நாடுகளுள் ஒன்றான ஈக்வடார் அரசு அசாஞ்சேவிற்கு அரசியல் தஞ்சமளிக்க முன்வந்தது.

இப்படி அரசியல் தஞ்சமளிக்கப்பட்டவர்களை, தஞ்சமளிக்கப்பட்ட நாட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்பது சர்வதேச மரபு. ஆனால், இங்கிலாந்து அரசோ வீட்டுக் காவலில், போலீசு கண்காணிப்பின் கீழ் வைத்திருந்த அசாஞ்சேவைத் தனது நாட்டிலிருந்து ஈக்வடாருக்கு அனுப்பி வைக்க மறுத்துவிட்ட நிலையில், அசாஞ்சே தந்திரமான முறையில் வீட்டுக் காவலிலிருந்து தப்பி, இங்கிலாந்திலுள்ள ஈக்வடார் தூதரக அலுவலகத்தில் தஞ்சமடைந்தார்.

அசாஞ்சேவைத் தங்களிடம் ஒப்படைக்காவிட்டால், தூதரகத்தைத் தாக்கப்போவதாக இங்கிலாந்து ஈகுவடாரை மிரட்டியது.

ஆனால், இங்கிலாந்தின் மிரட்டலுக்கு ஈகுவடார் அடிபணிய மறுத்துவிட்டது. இதனால் தூதரகத்தைவிட்டு அசாஞ்சே வெளியே வந்தால், அவரை உடனடியாகக் கைது செது சுவீடனிடம் ஒப்படைக்கும் திட்டத்தோடு, தூதரகத்தைச் சுற்றி உளவாளிகளையும் போலீசாரையும் குவித்து வைத்திருக்கிறது, இங்கிலாந்து அரசு. அசாஞ்சேயும் கடந்த மூன்று மாதங்களாக ஈகுவடார் தூதரகத்திற்குள்ளேயே அடைபட்டுக்கிடக்கிறார்.

ஜெனிவா ஒப்பந்தத்தின்படி, தன்னிடம் அரசியல் தஞ்சம் கோருபவர்களுக்கு அடைக்கலம் கொடுக்க எல்லா நாடுகளுக்கும் உரிமை உண்டு. அமெரிக்காகூட பலருக்கும் தஞ்சமளித்துள்ளது; அளித்துவருகிறது. ஆனால், அமெரிக்கா அளிக்கும் அரசியல் தஞ்சத்திற்குப் பின்னால் உலக மேலாதிக்கம் எனும் மிகப் பெரிய சதிதான் ஒளிந்து கொண்டிருக்கிறது.

முன்னாள் சோவியத் யூனியனிலிருந்து தப்பியோடிய சோல்ஜெனிட்சின் போன்ற சோசலிச எதிரிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததுடன், அவர்கள் சோசலிசத்திற்கு எதிராகச் செயல்பட அமெரிக்கா தளமமைத்துக் கொடுத்திருக்கிறது. சீனாவின் தியான்மென் சதுக்க போராட்டக்காரர்கள் உள்ளிட்டு, சீன அரசிற்கு எதிரானவர்கள் பலருக்கும், மனித உரிமைப் போராளிகள்”, ‘ஜனநாயகக் காவலர்கள்’ எனப் பட்டமளித்து, அவர்களுக்கு அரசியல் தஞ்சமளிப்பதை அமெரிக்கா வாடிக்கையாகக் கொண்டுள்ளது.

இவர்கள் மட்டுமின்றி, கியூபாவின் பாடிஸ்டா, ஈரானின் ஷா, தென் அமெரிக்க நாடுகளின் முன்னாள் சர்வாதிகாரிகள் உள்ளிட்ட ஜனநாயக விரோத சக்திகளுக்கும் அமெரிக்காதான் அன்றும் இன்றும் புகலிடமாக விளங்குகிறது. இப்படிபட்ட மனித குல விரோதிகளுக்குத் தஞ்சமளிக்க அமெரிக்காவிற்கு உரிமையுண்டென்றால், ஒரு மனித உரிமை செயல்வீரருக்குத் தஞ்சமளிக்க ஈகுவடாருக்கு எல்லா வகையிலும் உரிமையும் உண்டு; தார்மீக நியாயமும் உண்டு.

அசாஞ்சே மீது புனையப்பட்டுள்ள வழக்குகளும், அவரது தற்போதைய நிலையும், அவரது தனிப்பட்ட பிரச்சனைகள் அல்ல. உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்திவரும் அமெரிக்காவை எதிர்ப்பவர்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், அவர்களைச் சர்வதேச சட்டவிதிகள்-மரபுகளை மீறித் தண்டிக்க முயலும் அமெரிக்காவின் மேலாதிக்க வெறியைத்தான் அம்பலப்படுத்திக் காட்டுகிறது.

புதிய ஜனநாயகம்

தென்னாப்பிரிக்காச் சுரங்கத் தொழிலாளர் படுகொலை: ஆப்பிரிக்கத் தேசிய காங்கிரசின் சாயம் வெளுத்தது! : குமார்

தென்னாப்பிரிக்காவில், கடந்த ஆகஸ்ட் 16 அன்று வேலை நிறுத்தம் செய்த பிளாட்டினச் சுரங்கத் தொழிலாளர்கள் மீது அந்நாட்டு போலீசுப் படை கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச் சூடு நடத்தி 34 தொழிலாளர்களைப் படுகொலை செய்துள்ளது.78 தொழிலாளர்கள் படுகாயமடைந்துள்ளனர். 259 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜாலியன்வாலாபாக்கில் நடந்த படுகொலையை நினைவூட்டும் வகையில், நாற்புறமும் அரண்களை ஏற்படுத்தி தப்பி ஓட முடியாதபடி சுற்றிவளைத்துக்கொண்டு, தானியங்கித் துப்பாக்கிகள் மூலம் ஒரு சில நிமிடங்களில் இந்தப் பயங்கரவாதப் படுகொலையை நடத்தி முடித்திருக்கிறது தென்னாப்பிரிக்கக் கொலைகாரப் போலீசுப் படை.

ஜோகன்ஸ்பர்க்கிலிருந்து ஏறத்தாழ 100 கி.மீ. தொலைவிலுள்ள ரஸ்டன்பர்க் அருகில் மரிக்கானாவிலுள்ள இந்த பிளாட்டினம் சுரங்கத்தைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் லோன்மின் நிறுவனம், உலகத்தில் பிளாட்டினம் உற்பத்தி செய்யும் ஏகபோக நிறுவனங்களில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. பிளாட்டினத்தின் விலை உயர்வால் அந்நிறுவனத்தின் வருமானம் பல மடங்கு உயர்ந்துள்ள போதிலும், தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வு கொடுக்க மறுக்கிறது. கடந்த ஆண்டில் மட்டும் 40 தொழிலாளிகள் விபத்துகளில் கொல்லப்பட்டுள்ள போதிலும், இலாபம் குறையும் என்பதால் சுரங்கத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேம்படுத்தாமல் தொடர்ந்து புறக்கணித்து வருகிறது.

இவற்றால் குமுறிக் கொண்டிருந்த தொழிலாளர்கள், மாதச் சம்பளத்தை தென்ஆப்பிரிக்க ராண்ட் 4000லிருந்து 12,500 ஆக உயர்த்துமாறும், பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் வேலை செய்யுமாறு நிர்வாகம் கட்டாயப்படுத்துவதை எதிர்த்தும் ஆகஸ்டு 10ஆம் தேதி முதலாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் இறங்கினர் .

இச்சுரங்கத்தில், ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரசு அரசுக்கு ஆதரவான, ஆளும் காங்கிரசு கட்சியின் சுரங்கத் தொழிலாளர்களின் தேசிய சங்கம் (NUM) எனும் கருங்காலி சங்கத்தின் துரோகத்தை எதிர்த்து, சுரங்க மற்றும் கட்டுமானத் தொழிலாளர் சங்கங்களின் கூட்டமைப்பு (ACMU) என்ற சங்கம் பெரும்பான்மைத் தொழிலாளர்களை அணிதிரட்டி இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்துகிறது. ஆளும் கட்சியின் கைக்கூலி சங்கத்தினர் போராடும் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்த, போராடும் தொழிலாளர்கள் தற்காப்புக்காகத் திருப்பித் தாக்க, இந்த மோதலில் 8 தொழிலாளிகளும் இரு போலீசாரும் கடந்த ஆகஸ்ட் மாதத் தொடக்கத்தில் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து, ஆட்சியாளர்களின் கைக்கூலி சங்கத்தின் தாக்குதலிலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ளப் போராடும் சங்கத்தின் தொழிலாளர்கள் 3000 பேருக்கு மேல் திரண்டு, சுரங்கத்தை ஒட்டியுள்ள சிறிய குன்றின் மீது தடிகளுடன் அமர்ந்து வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்தபோது, அவர்களைச் சுற்றிவளைத்துக் கண்மூடித்தனமாகச் சுட்டுக் கொன்றுள்ளது போலீசு.

வெள்ளை நிறவெறி அரசாங்கத்தை அகற்றிவிட்டு கருப்பினத்தவரின் ஆப்பிரிக்க தேசிய காங்கிரசு ஆட்சிக்கு வந்த போதிலும், நாட்டின் தங்க, வைர, பிளாட்டினச் சுரங்கங்களும் பொருளாதாரமும் ஏகாதிபத்திய நிறுவனங்களின் இரும்புப் பிடியில்தான் உள்ளன. ஏகாதிபத்திய முதலாளிகளுக்குச் சேவை செய்வதில் முந்தைய நிறவெறி ஆட்சிக்கும், தற்போதைய ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் ஆட்சிக்கும் சாராம்சத்தில் எந்த வேறுபாடும் இல்லை. தென்னாப்பிரிக்க கருப்பின அதிபர் ஜாக்கோப் ஜுமா, போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களை வன்முறையாளர்கள் என்று சாடி, அவர்களைக் கைது செய்யுமாறு போலீசுக்கு உத்தரவிட்டுள்ளார்.

ஆட்சியாளர்களின் விசுவாசக் கருங்காலி சங்கம், போலீசுக்கு ஆள்காட்டி வேலையைச் செய்து கொண்டிருக்கிறது. இப்படுகொலையின் மூலம் தொழிலாளி வர்க்கத்தின் மீது அப்பட்டமாக பாசிச பயங்கரத்தை ஏவிவிட்டு, மறுகாலனியாக்கக் கொள்ளைக்குத் தேவையான உத்திரவாதத்தை நிலைநாட்டி, தன்னைப் பன்னாட்டு நிறுவனங்களின் விசுவாச எடுபிடிதான் என்பதைக் கருப்பினத்தவரின் ஆப்பிரிக்க தேசிய காங்கிரசு அரசும், அதன் கொலைகாரப் போலீசுப்படையும், ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் தொழிற்சங்கமும் மீண்டும் நிரூபித்துக் காட்டியுள்ளன.

இப்பயங்கரவாதப் படுகொலையை எதிர்த்து தென்னாப்பிரிக்கா மட்டுமின்றி, லோன்மின் நிறுவனத்தின் தலைமையகமான இலண்டனிலும் உலகின் பல நகரங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்கின்றன. 1960இல் வெள்ளை நிறவெறி அரசை எதிர்த்துப் போராடிய 69 கருப்பின மக்கள் போலீசால் கொல்லப்பட்ட ஷார்ப்வில்லே படுகொலைக்கு நிகரான இந்தப் பச்சைப் படுகொலையானது, முதலாளித்துவ பயங்கரவாதத்தை உலகெங்கும் வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது.

– புதிய ஜனநாயகம், செப்டம்பர் – 2012.

 

தாழ்த்தப்பட்ட மக்கள் வேண்டுவது சீர்த்திருத்தமா? புரட்சியா? : ஆர்.கே

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக ஆதிக்க சாதியினரின் வன்கொடுமைத் தாக்குதல்கள் நாள்தோறும் பன்மடங்கு பல்கிப் பெருகி வருகின்றன. இதில் மாறுபட்ட கருத்தோ இருவேறு கருத்தோ கிடையாது. அத்தாக்குதல்களைத் தொடுப்பவர்களின் தரப்பை பல்வேறு வகைகளிலும் அளவுகளிலும் நியாயப்படுத்துபவர்களும் கூட, இந்த உண்மையை ஒப்புக் கொள்கிறார்கள். ஆதிக்க சாதியினரின் வன்கொடுமைத் தாக்குதல்களுக்கு இணையாக அரசு எந்திரத்தின் ஆயுதப் படையாகிய போலீசும் இந்தக் கிரிமினல் குற்றச் செயல்களை நடத்துகின்றன.

இத்தாக்குதல்கள் எல்லாம் இப்போது புதுப்புது, ஆபாசமான, வக்கிரமான, குரூரமான பயங்கரவாத வடிவங்களை எடுக்கின்றன. தாழ்த்தப்பட்ட பெண்களானால் நிர்வாணப்படுத்தித் தெருத்தெருவாக இழுத்துச் செல்வது; பலர் கூடி நிற்க கும்பலாகத் திரண்டு பாலியல் வன்புணர்ச்சி கொள்வது; ஆண்களானால் மலம் திண்ண வைப்பது, மூத்திரம் குடிக்க வைப்பது என்று நடக்கிறது. சிறுவர் சிறுமிகளைப் படுகொலை செய்வதோ, கால்களைப் பிடித்து பாறைகளில் மோதி அடித்துக் கொன்ற காட்டுமிராண்டி கால இனக்குழுச் சண்டைகளின் வெறிச் செயலை நினைவுபடுத்துகின்றன.

முற்போக்கு எண்ணம் கொண்டவர்களுக்கு மட்டுமல்ல; மனித உணர்வு கொண்ட நாகரிக காலத்து மனிதர்கள் எவரையும், அதிர்ச்சியும் ஆத்திரமும் பொங்கச் செய்வன இந்த வன்கொடுமைச் செய்திகள். ஆனால், வன்கொடுமைக் குற்றச் செயல்களுக்கு போலீசும், அதிகார வர்க்கமும் காட்டும் பாராமுகமும், குற்றவாளிகளைத் தண்டனையின்றி விடுவிப்பதற்கு உயர்நீதி, உச்சநீதிமன்ற நீதியரசர்கள் கூறும் விளக்கங்களும் மேலும் அதிர்ச்சியும் ஆத்திரமும் பொங்கச் செய்வனவாக உள்ளன. சாதிவெறியர்களால் வெட்டப்படும் தாழ்த்தப்பட்ட மக்களின் காயங்களில் அமிலத்தை ஊற்றுவதாக உள்ளன.

ஆதிக்க சாதிவெறியர்கள் கலப்பு மண இணையர்களைப் படுகொலை செய்யும் கொடுங்குற்றங்களுக்கு “கௌரவக் கொலைகள்” என்று நீதியரசர்கள் பட்டஞ் சூட்டிக் கொண்டாடும் வெட்கக்கேடுகள் இந்த நாட்டில்தான் நடக்கின்றன. இவ்வாறான போக்கால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான வன்கொடுமைகளை கிரிமினல் குற்றச் செயல்களாகக் கருதி சாதி வெறியர்கள் அஞ்சி இரகசியமாகச் செய்வதில்லை. சமூக மதிப்புக்குரிய வீரதீரச் செயல்களாகவும், தாழ்த்தப்பட்ட சமூகம் முழுவதையும் அஞ்சி நடுநடுங்கச் செய்யும் பயங்கரவாத நடவடிக்கையாகவும் கருதி நடத்துகின்றனர்.

புதிய பொருளாதாரக் கொள்கை புகுத்தப்பட்ட பிறகு, பொருளாதாரத் துறையிலும் வேறு பிற துறைகளிலும் நாடு மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருவதாக ஆட்சியாளர்கள் கூறிக் கொள்கிறார்கள். அவர்கள் கூறும் வளர்ச்சி முன்னேற்றத்துக்கு ஏற்ப தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நேர் விகிதத்தில் அதிகரித்து வருகின்றன. சாதிவெறிச் சக்திகளும் ஆதிக்க பலம் பெற்று வருகின்றன. பொதுவில் பழங்குடியினர், பெண்கள், மதச் சிறுபான்மையினருக்கு எதிரான வன்கொடுமைகளும் அளவிலும் தன்மையிலும் பெருகி வந்தாலும், குறிப்பாக, சாதிய அடுக்குகளின் படிநிலையில் அடித்தட்டில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்கள்தாம் தமக்கு மேலிருக்கும் அனைத்துச் சாதிகளாலும் வன்கொடுமை ஆதிக்கத்துக்குப் பலியாகின்றனர்.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான தாக்குதல்கள் குறித்து மதுரையில் உள்ள ‘எவிடன்ஸ்’ (சாட்சியம்) என்ற தன்னார்வக் குழு நடத்திய ஆய்வுகளின் அடிப்படையில், “தமிழ்த் தேசத்தில் சேரித் தமிழர்களின் நிலை!” என்ற கட்டுரையை டிசம்பர், 2011 “தலித் முரசு” இதழ் வெளியிட்டிருக்கிறது. அதில் காணக் கிடைக்கும் ஆதாரங்களின்படி, 2008ஆம் ஆண்டு 34 படுகொலைகளையும் 30 பாலியல் தாக்குதல்களையும் உள்ளடக்கிய 1545 வன்கொடுமைகள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக நடந்துள்ளன. 2009ஆம் ஆண்டு 27 படுகொலைகளையும் 30 பாலியல் தாக்குதல்களையும் உள்ளடக்கிய 1264 வன்கொடுமைகள் நடந்துள்ளன. 2010ஆம் ஆண்டு முதல் ஒன்பது மாதங்கள் 22 படுகொலைகளையும் 24 பாலியல் தாக்குதல்களையும் உள்ளடக்கிய 1633 வன்கொடுமைகளைக் கண்டுள்ளன. 2011ஆம் ஆண்டு 44 படுகொலைகளும் 20 பாலியல் வல்லுறவும், 12 பாலியல் வல்லுறவு முயற்சிகளும் உள்ளடக்கிய 336 வன்கொடுமைத் தாக்குதல்கள் நடந்துள்ளன. அந்த ஆண்டு படுகொலை செய்யப்பட்ட 44 பேரில் 4 வயது, 6 வயது, 11 வயது, 16 வயது சிறுமிகள் உட்பட 8 பேர் சிறுவர் சிறுமியர். இந்த ஆண்டு முதல் மூன்று வாரங்களில் மட்டும் எட்டு தாழ்த்தப்பட்டவர்கள் ஆதிக்க சாதியினரால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

“தமிழகத்தில் நடக்கக்கூடிய சாதியரீதியான வன்கொடுமை வழக்குகளின் எண்ணிக்கை குறைந்த அளவே பதிவு செய்யப்பட்டாலும் தண்டனை வெறும் 5 சதவிகித@ம உள்ளன. குறிப்பாக, கொலை (3.9%), பாலியல் வன்கொடுமை (5.8%) உள்ளிட்ட கொடுங் குற்றங்களில் ஈடுபடுகிற குற்றவாளிகளில் 95 சதவிகிதத்தினர் தப்பித்துக் கொள்கின்றனர்.
“இத்தகைய துயரப் போக்கிற்கு காவல் துறையும், நீதித்துறையும் முக்கியப் பொறுப்பு என்றாலும் அத்துறைகளை சரியாக இயக்க வைப்பதற்கான அரசியல் அழுத்தம் அண்மைக் காலங்களில் பெரிய அளவில் இல்லை.

“தலித் அரசியல் கட்சிகள், இயக்கங்களாக இருக்கின்ற போது இத்தகைய படுகொலைக்கு எதிராக வீறுகொண்டு ஜனநாயகப் போராட்டங்களை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நடத்தி வந்தனர். ஆனால், தற்போது இதுபோன்ற எதிர்ப்பு போராட்டங்களோ, குறைந்தபட்சம் இப்படுகொலைகளைக் கண்டித்து அரசுக்குக் கொடுக்கக்கூடிய அழுத்தங்களோ முற்றிலும் இல்லாமல் போனது கெடுவாய்ப்பானது. தலித் படுகொலைகளை தலித் அல்லாத அரசியல் கட்சிகளும் கண்டிக்க வேண்டும் என்கிற ஜனநாயகப் பண்பு இருந்தாலும், தலித் தலைமையிலான அரசியல் கட்சிகளுக்குக் கூடுதல் கடமையும் பொறுப்பும் உள்ளது. ஆனால், இன்று அரசு நிறுவனங்களோடு சமரசம் செய்து கொண்டு, விலை போய்க் கொண்டு அல்லது இத்தகைய படுகொலைகளைக் கண்டிக்கிற செயல்பாட்டில் ஒருவிதமான சலிப்போடு தலித் அரசியல் கட்சிகள் உள்ளன. இந்நிலையில் இதுபோன்ற படுகொலைகளைக் கண்டித்து ஆங்காங்கே பாதிக்கப்பட்ட மக்களும் மக்கள் இயக்கங்களும் வலிமையான அளவில் குரல் கொடுத்தாலும் அத்தகைய போராட்டங்கள் வெளியே தெரியாமல் போய் விடுகின்றன.” (தலித் முரசு, டிசம்பர் 2011)

இவையெல்லாம் நம்முடைய சொந்த ஆய்வு முடிவுகள் அல்ல. தலித் அரசியல் கட்சிகள் மீதான கருத்துக்களும்‘எவிடன்ஸ்’ அமைப்பின் செயல் இயக்குநர் ஆ.கதிர் எழுதி, “தலித் முரசு” ஏட்டில் வெளிவந்திருப்பவை. இதே கருத்தை “புதிய ஜனநாயகம்” ஏட்டில் நாம் எழுதியிருந்தால், “தலித் அரசியல் தலைவர்கள்” என்று சொல்லிக் கொள்பவர்கள் நம்மீது பாய்ந்து குதறியிருப்பார்கள்.

1989ஆம் ஆண்டு வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டு 22 ஆண்டுகள் கடந்த பின்னரும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக ஆதிக்க சாதிவெறியர்களின் வன்கொடுமைத் தாக்குதல் தடுத்து நிறுத்தப்பட்டதாகவோ அல்லது குறைந்ததாகவோ சொல்ல முடியாது. மிகக் கடுமையான இச்சட்டத்தால்கூடத் தாழ்த்தப்பட்ட மக்களின் உயிருக்குப் பாதுகாப்பையும் வாழ்வுரிமையையும் உறுதிப்படுத்த முடியவில்லை.

அதேசமயம், வன்கொடுமைத் தாக்குதல்களைவிட மோசமாக தாழ்த்தப்பட்ட மக்களை அடக்கி ஒடுக்கி வைக்கக்கூடிய புதிய சூழ்ச்சிகளையும் தந்திரங்களையும் ஆதிக்க சாதிகள் இப்போது மேற்கொண்டு வருகின்றன. அதாவது, தீண்டாமைக்குப் புதிய வடிவம் கொடுக்கப்படுகிறது.

• மதுரை மாவட்டம் உத்தபுரத்தில் சேரிக்கும் ஊருக்கும் இடையில் எழுப்பப்பட்டிருந்த தீண்டாமைச் சுவர் நீண்ட “போராட்டம்” முயற்சிக்குப் பிறகு அகற்றப்பட்ட போதும் அங்கு இன்னமும் ஆதிக்க சாதியினர் தாழ்த்தப்பட்ட மக்களுடன் “இணைந்து வாழ முடியாது” என்று அடம் பிடிக்கின்றனர். அருகிலுள்ள மலைமீது குடிபுகுந்து ஊர்ப் “புறக்கணிப்பு” என்ற புதிய முறையில் தீண்டாமையைத் தொடர்ந்தனர். அதேமுறையில் இப்போது ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகே உள்ள நகப்பாளையம் கிராமத்தில் ஒரு தீண்டாமைச் சுவர் எழுப்பப்பட்டிருக்கிறது.

• திருவண்ணாமலை மாவட்டம் ஆடையூர் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட இரு குழந்தைகளை ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் சேர்த்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆதிக்க சாதியினர் தங்கள் குழந்தைகளை அந்தப் பள்ளிக்கு அனுப்பாமல் நிறுத்திக்கொண்டனர். இதனால் அந்தப் பள்ளியையே மூடிவிடும்படி நிர்ப்பந்தித்தனர்.

• விருதுநகர் மாவட்டம் கம்மாபட்டி பஞ்சாயத்து ஒன்றியப் பள்ளியில் மதிய உணவு சமைப்பதற்கு இரு தாழ்த்தப்பட்ட பெண்கள் நியமிக்கப்பட்டனர். இதை அறிந்த அவ்வூர் கம்பளத்து நாயக்கர் சாதியினர் தமது 50 சிறுவர்களைப் பள்ளிக்கு அனுப்புவதை நிறுத்திக் கொண்டனர். பிற சாதியினர் சமைத்த உணவை உண்ணுவதில்லை என்பது தமது சாதிவழக்கம் என்பதால் (உணவு விடுதிகளில் என்ன செய்வார்களோ; கோவில் பிரசாதத்தைக்கூட உண்ணமாட்டார்களோ!) இப்படிச் செய்கிறோம் என்று கம்பளத்து நாயக்கர்கள் செய்த முறையீட்டின் பேரில், அத்தாழ்த்தப்பட்ட பணியாளர்களை இடமாற்றம் செய்துள்ளார் வட்டார வளர்ச்சி அதிகாரி. “இது அந்த சமூகத்தின் தனிச்சிறப்பான வழக்கம்தான்” என்று நியாயப்படுத்தும் மாவட்ட ஆட்சியர், அடுத்தமுறை கம்பளத்து நாயக்கர் சாதியினரையே பணியமர்த்தப் போவதாக வாக்குறுதியும் கொடுத்திருக்கிறார்.

* சமூகத்தின் பொதுவான கோவில்களில் தாழ்த்தப்பட்ட மக்களின் வழிபாட்டு உரிமையை ஏற்கும்படி நிர்பந்திக்கப்படும் கிராமங்களில், ஆதிக்க சாதியினர் தமக்கெனத் தனியார் கோயில்களைக் கட்டிக் கொள்வதும், அக்கோவில்களில் தாழ்த்தப்பட்ட சாதியினர் நுழைவதற்குத் தடை விதிப்பதும் இப்போது புதுப் போக்காகத் தலையெடுத்துள்ளது. இந்த வகையான கோவில்கள் தனியாருக்குச் சொந்தமானவை என்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் வழிபாட்டுரிமையை அரசு உட்பட யாரும் கோரமுடியாது என்றும் ஆதிக்க சாதியினர் வாதிடுகின்றனர்.

தாழ்த்தப்பட்ட மக்களுடனான காதல்மண உறவை மறுப்பதற்காகவும், சாதியத்தின் இறுக்கத்தைத் தக்கவைத்துக் கொள்ளவும் ஆதிக்க சாதிகளைச் சேர்ந்தவர்கள் நடத்தும் சாதிவெறிக் “கௌரவக் கொலைகள்” அப்பட்டமான பயங்கரவாதவன்கொடுமைப் படுகொலைகள் என்றால், மேற்கண்டவை மாதிரியான ஆதிக்க சாதிகளின் நடவடிக்கைகள் தாழ்த்தப்பட்ட மக்களைச் சமூக விலக்கம் செய்யும் வக்கிரமான, நரித்தனமான தீண்டாமைக் குற்றங்கள் ஆகும்.
• • •

தாழ்த்தப்பட்ட மக்களின் சமூக, பொருளாதார “அவலநிலை” கண்டு, கிறித்தவப் பாதிரியார்கள் கண்டுபிடித்தத் தீர்வுதான் இலவசக் கல்வி வாய்ப்பு. கிறித்தவ மதத்தைப் பரப்பவும் மதமாற்றம் செய்யவும் ஒரு வாய்ப்பாக அது அமைந்தது. ஆங்கிலேயக் காலனிய ஆட்சியாளர்கள் கண்டுபிடித்த இன்னொரு தீர்வுதான் இடஒதுக்கீடு. ஆங்கிலேயக் காலனிய ஆட்சியாளர்கள் புகுத்திய இந்த இடஒதுக்கீடு கொள்கையைத்தான் “சமூக நீதிக் கொள்கை” என்ற பெயரில் “பார்ப்பனரல்லாத இயக்கம்” நிறுவிய வேளாள, வேளம, நாயர், வொக்கலிகா, லிங்காயத்து, நாயுடு, ரெட்டி ஆகிய சாதி இந்துத் தலைவர்கள் கையிலெடுத்துக் கொண்டார்கள். (ஆதாரம்: 1945 சேலம் திராவிடர் கழக நிறுவன மாநாட்டு அண்ணா உரை. பார்த்தசாரதி எழுதிய தி.மு.க.வின் வரலாறு) பின்னாளில் இதையே “சமூகப் புரட்சிக் கொள்கை”யாக பெரியாரியவாதிகளும் அம்பேத்கரியவாதிகளும் வரித்துக் கொண்டார்கள்.

சமூக நீதி, சமூகப் புரட்சிக் கொள்கையை மேலும் விரிவு படுத்துவது ஆழப்படுத்துவது என்கிற பெயரில் புகுத்தப்பட்டவைதாம் வன்கொடுமை தடுப்புச் சட்டம், மண்டல் பரிந்துரை அமலாக்கம், உள்ளூராட்சி அமைப்புகளுக்கும் இடஒதுக்கீடுகள், வன்கொடுமை தடுப்புச் சட்டம், கல்வி உரிமையை அடிப்படையாக்கும் சட்டம் ஆகியன. இவற்றில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் அமலாக்கப்படும் இலட்சணத்தை இதுவரைப் பார்த்தோம்.

கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு அமலாக்கப்பட்டு ஒரு நூற்றாண்டுக்கு மேலாகிறது. புதிய பொருளாதாரக் கொள்கை புகுத்தப்படும் வரை, தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீடு கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் ஓரளவு இருந்தது. அதிலும் உயர் கல்வியிலும், ஆசிரியர் மற்றும் நிர்வாகத்திலும் தாழ்த்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் தொடர்ந்து வஞ்சனை செய்யப்படுவதை கிருஷ்ணசாமியும் திருமாவளவனும் பலமுறை சுட்டிக் காட்டி வெள்ளை அறிக்கை கோரி வருகின்றனர். ஆனால், அரசுகள் எதுவானாலும் செவி சாய்ப்பதே கிடையாது.

புதிய பொருளாதாரக் கொள்கை புகுத்தப்பட்ட பிறகோ கல்வித்துறையில் அரசின் பொறுப்புகள் படிப்படியாக குறைக்கப்பட்டு, பள்ளி, கல்லூரி, தொழிற்கல்வி மற்றும் உயர்கல்வி ஆராய்ச்சி நிறுவனங்கள் அனைத்தும் தனியார்மயமாக்கப்பட்டு வருகின்றன. எங்கும் மேட்டுக்குடி ஆதிக்க சாதிப் பிள்ளைகள் மட்டு@ம படிக்கக் கூடிய ஆங்கில வழிப் பொதுப்பள்ளிகள் (மெட்ரிக்) அதையும் விட “உயர்தரம்”, “உலகத்தரத்தில்” சீமான்வீட்டுப் பிள்ளைகள் தங்கிப் படிக்கும் பள்ளிகள் பல்கிப் பெருகி வருகின்றன. கல்விக்கான அடிப்படை உரிமைச் சட்டத்தின் கீழ் இப்பள்ளிகளில் ஏழை மாணவர்க்கு 25 சதவீத இடஒதுக்கீடு என்பதும், தனியார் பொதுத்துறை கூட்டுப் பங்கேற்பு என்ற பெயரிலும் புதிய மனுதர்ம அடிப்படையில் நவீன தீண்டாமை பின்பற்றப்படுகிறது. பழைய அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்கப்பட்டு பாழடைந்த நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டன. அடிப்படைக் கட்டுமான வசதிகளும் இல்லை; தகுதி வாய்ந்த ஆசிரியர்களும் இல்லை. அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும் இதே நிலையில்தான் உள்ளன. இந்த வகைப் பள்ளிகள் கல்லூரிகளில் பயின்ற மாணவர்கள் தனியார்துறைத் தொழில் மற்றும் நிர்வாகக் கல்வியிலும் வேலைகளிலும் பணிகளிலும் புறக்கணிக்கப்பட்டு, ஒருவகைத் தீண்டாமைக் கொள்கை பின்பற்றப்படுகிறது.
பொறியியல், மருத்துவம், நிர்வாகம், சட்டம் போன்ற தொழிற்சார் கல்வி நிறுவனங்கள், மிகப் பெரும்பாலும் சுயநிதித் தனியார் துறையில் புற்றீசல்களாகப் பல்கிப் பெருகி வருகின்றன. இக்கல்வி நிறுவனங்களில் அரசுக்கான இட ஒதுக்கீடுகள் இருப்பினும், சாமானிய தாழ்த்தப்பட்ட மாணவர்கள் தொடர்ந்து கல்வி பயில முடியாதவாறு கட்டாயக் கட்டணம் கடுமையாக வசூலிக்கப்படுகிறது. பொதுத்துறைத் தொழில்கள் தனியார்மயமாக்கப்படுவதோடு, உள்நாட்டு வெளிநாட்டு கார்ப்ப@ரட் தரகு முதலாளிகளின் ஏகபோகமாக தொழிற்துறை மாறிவிட்டது. ஆகவே, தாழ்த்தப்பட்டோருக்குத் தொழில்துறை வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு என்பது வெறுங்கனவாகி வருகிறது. மேற்படிக் கல்வியிலும் பணிகளிலும் தனிநபர் என்கிற முறையில் ஒரு சிலரின் “சாதனைகள்” முன்னேற்றங்கள் மட்டும் எடுத்துக்காட்டுகளாக செய்தி ஊடகங்களில் பிரபலப்படுத்தப்படுகின்றன. மற்றபடி ஒரு சமூகம் என்கிற முறையில் பெரும் எண்ணிக்கையில் தாழ்த்தப்பட்ட மக்கள் பலனடைந்து வருவதாகக் கூற முடியாது. ஆக, தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் இடஒதுக்கீடு மூலம் சமூக நீதி என்பது கானல் நீராக உள்ளதென்பதே உண்மையாகும்.

ஆனால், கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு பெற்றதன் மூலம் தாழ்த்தப்பட்ட மக்கள் முன்னேறிவிட்டதாகவும், சமூக நீதி நிலைநாட்டப்பட்டு விட்டதாகவும், அதை அரசியல் ரீதியில் விரிவுபடுத்த வேண்டியதுதான் குறைபாடாக நிலவுவதாகவும் கற்பிக்கும் ஆளும் கட்சிகள் ஜனநாயகத்தைப் பரவலாக்குவது, சமூக நீதியை உறுதி செய்வது என்ற பெயரில் உள்ளூராட்சி வரை தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் பெண்களுக்கும் இடஒதுக்கீடு செய்து அதிகாரப் பகிர்வு கொண்டு வந்தன. உள்ளூராட்சிகளில் அதிகாரப் பகிர்வு, இடஒதுக்கீடு என்ற ஏற்பாட்டைக் கேலிக்கூத்தாக்கி விடும் வகையில் ஆதிக்க சாதியினர் கடும் எதிர்ப்பைக் காட்டி வருகின்றனர். முக்குலத்தோரின் கடும் எதிர்ப்பையும் மீறி உள்ளூராட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற மேலவளவு முருகேசன் படுகொலை நாடு தழுவிய அளவில் தெரிந்த விவகாரம். கீரிப்பட்டி, பாப்பாபட்டி, நாட்டார்மங்கலம் உள்ளூராட்சித் தேர்தல்களை நடத்தவிடாமல் ஆதிக்க சாதியினர் தடுத்து நிறுத்தியிருந்ததும் அனைவரும் அறிந்ததே. ஆனால், தேர்தல்கள் நடத்தப்பட்டு உள்ளூராட்சித் தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னரும் தாழ்த்தப்பட்ட மக்கள் “ஆட்சி” நடத்த முடியாமல் முடக்கி வைத்து அவமானத்துக்குள்ளாக்கும் நிகழ்வுகள் பலவும் நடந்து வருகின்றன.

நெல்லை மாவட்டம் தாழையூத்து ஊராட்சி மன்றத் தலைவர் கிருஷ்ணவேணி, ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஊராட்சி மன்றத் தலைவர் வள்ளி தெய்வானை போன்றவர் மீது ஆதிக்க சாதியினர் நடத்திய தாக்குதல் வன்முறைகள் தொடர்கதைகளாக உள்ளன. விருதுநகர் மாவட்டம் கொட்டக்கச்சியேந்தல் கிராம ஊராட்சித் தலைவர் கருப்பன் கொடுத்துள்ள புகாரின்படி, அவர் தொடர்ந்து சாதியின் பெயரால் இழிவுபடுத்தப்படுகிறார்; மன்றக் கூட்டங்களின்போது தரையில் உட்கார வைக்கப்படுகிறார்; தொகை நிரப்பப்படாத காசோலைகளில் கையொப்பமிடும்படி நிர்பந்திக்கப்படுகிறார்; மன்ற ஆவணங்கள், கணக்கேடுகள் காட்டப்படுவதில்லை; ஆதிக்க சாதியைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் துணைத் தலைவரின் கணவனும் அலுவலக எழுத்தருமே தலைவரை ஒடுக்கி வைக்கின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் கருவடத்தெரு ஊராட்சி மன்றத் தலைவர் அ.கலைமணியை குடியரசு நாளில் தேசியக் கொடி ஏற்றவிடாமல் தடுத்துத் தாக்கியுள்ளனர், ஊராட்சி மன்ற ஆதிக்கசாதித் துணைத்தலைவரின் மகனும் 20 ரௌடிகளும். இவ்வாறு செய்வதென்று கள்ளர் சாதியினர் திட்டமிட்டிருந்ததை அறிந்து போலீசிடம் முன்கூட்டியே கலைமணி புகார் அளித்தும் பாதுகாப்புக் கோரியதும் அலட்சியப்படுத்தப்பட்டுள்ளது.

ஊராட்சிமன்றத் தலைவர்கள் கருப்பனுக்கும் கலைமணிக்கும் கிருஷ்ணவேணி மற்றும் வள்ளி தெய்வானைக்கும் நேர்ந்துள்ளது தனிப்பட்ட ஒரு சில சம்பவங்கள் அல்ல. தமிழ்நாடு மகளிர் பஞ்சாயத்துத் தலைவர்கள் கூட்டமைப்பு, தமிழ்நாடு புதுச்சேரி தலித் பஞ்சாயத்துத் தலைவர்கள் கூட்டமைப்பு ஆகியவை சார்பாக உண்மை அறியும் குழு கடந்த இரண்டாண்டுகள் மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் தலித் ஊராட்சித் தலைவர்கள் மீது ஆதிக்கச் சாதியினர் தொடுக்கும் வன்கொடுமைத் தாக்குதல்களைப் பற்றிப் பல உண்மைகளை அம்பலப்படுத்தியிருக்கிறது. பல கிராமங்களில் ஆதிக்க சாதிகளைச் சேர்ந்த துணைத் தலைவர்கள், எழுத்தர்கள், மக்கள் நலப் பணியாளர்களே அதிகாரத்தைப் பறித்துக் கொள்கிறார்கள். தாழ்த்தப்பட்ட மக்கள் முன்னேற்றத்துக்கென்று அரசு ஒதுக்கும் நிதியை அம்மக்களுக்கென்று தாழ்த்தப்பட்ட பஞ்சாயத்து தலைவர்களேகூட பயன்படுத்த முடியாத நிலைதான் உள்ளது. அவர்கள் கொடுக்கும் புகார்களைப் பதிவுகூட செய்ய மறுக்கும் அதிகாரவர்க்கமும் போலீசும் நீதித்துறையும் ஆதிக்க சாதியினரின் முழுக் கட்டுப்பாட்டிலும் உள்ளன. இவையே ஒடுக்குமுறை வன்கொடுமை அமைப்புகளாகவும் உள்ளன.

இடஒதுக்கீடு மூலம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சமூக நீதி என்ற ஏற்பாடு கொண்டு வரப்பட்டு ஒரு நூற்றாண்டு காலத்துக்கு மேலாகி விட்டது. காந்தி அம்பேத்கருக்கிடையே ஏற்பட்ட பூனே ஒப்பந்தம், தாழ்த்தப்பட்ட மக்களுக்கான பிரதிநிதித்துவ ஜனநாயக உரிமையைக் கொண்டு வந்து முக்கால் நூற்றாண்டு கால சாதனையாகப் போற்றப்படுகிறது. உள்ளூராட்சி அமைப்புகளில் தாழ்த்தப்பட்ட மக்கள், பழங்குடியினர், மகளிருக்கான இடஒதுக்கீடு செய்யும் 73வது அரசியல் சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டு முப்பதாண்டுகளுக்கும் மற்றும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டு 22 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. இத்தனை ஆண்டுகளில் இத்தகைய சட்டங்களும், அவற்றின் அமலாக்கங்களும் தாழ்த்தப்பட்ட மக்கள் வாழ்வில் ஏற்படுத்தியுள்ள மாற்றங்கள், விளைவுகள், முன்னேற்றங்கள் பற்றிய ஆய்வும் தொகுப்பும் செய்யப்படவே இல்லை.

அரசும், அரசு சார்பு அமைப்புகளும் இதைச் செய்யாததில் வியப்பு ஒன்றும் இல்லை. இந்த வகையில் அவற்றின் தோல்வியையும் செயலற்ற தன்மையையும் சார்புத் தன்மையையும் அத்தகைய ஆய்வும், தொகுப்பும் சொல்லிவிடும். தாழ்த்தப்பட்டோருக்கான கட்சிகள், அமைப்புகள், தொண்டு நிறுவனங்களும்கூட இதைச் செய்வதில்லை. தனிப்பட்ட சம்பவங்களாக மட்டுமே இவை கையாளுகின்றன. தமது கையாலாகாத்தனம் அப்பட்டமாகி விடும் என்பதாலேயே தொகுப்பான ஆய்வுகளுக்கும் முடிவுகளுக்கும் இவை வர மறுக்கின்றன. முற்போக்கு சிந்தனையாளர்களாகக் காட்டிக் கொள்ளும் பின்நவீனத்துவ, பின் மார்க்சிய அறிஞர்கள், இவை பற்றிய தொகுப்பான ஆய்வுகளுக்கும் முடிவுகளுக்கும் வருவதே தவறான அணுகுமுறை என்றும், பெருங்கதையாடல் என்றும் ஒதுக்கிவிட்டுத் தனித்தனி நிகழ்வுகளாக மட்டுமே பார்த்து, மனித உரிமை மீறல்களாகக் கருதி, உண்மை அறியும் குழுக்களை அமைத்துக் கொண்டுபோய் ‘கள’ நிலைமைகளை ஆய்வு செய்து அரசுக்கு சில கோரிக்கைகளை முன்வைத்தாலே போதும் என்றிருக்கின்றனர்.

இதுவரை இத்தனை ஆண்டுகளாக தாழ்த்தப்பட்ட மக்களுக்காக அரசு மேற்கொண்ட சமூகநீதிக்கான இடஒதுக்கீடுகள் போன்ற ஏற்பாடுகளும், சீர்திருத்தச் சட்டங்களும், வளர்ச்சிமுன்னேற்றத்துக்கான திட்டங்களும் நிதி ஒதுக்கீடுகளும் இம்மக்கள் வாழ்வில், சமூகத்தில் பாரிய மாற்றங்களைக் கொண்டு வந்துவிட்டன என்று யாராலும் துணிந்து கூற முடியாது. மாறாக, இத்தகைய முயற்சிகள் மூலம் சாதிய சமத்துவத்தை ஒருக்காலும் ஏற்படுத்தி விட முடியாது என்பதையே நாட்டில் நாளும் பெருகிவரும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான வன்கொடுமைத் தாக்குதல்கள் திரும்பத் திரும்பக் காட்டுகின்றன.

புகார்களும், முறையீடுகளும் முன்வைக்கப்படும் இடங்களில், விவகாரங்களில் மட்டுமே பிரச்சினைகள் இருப்பதாகவும் அவற்றில் தலையிட்டுச் சரிசெய்து விட்டால் போதுமானது என்றும் அரசு மாய்மாலம் போடுகிறது. மற்ற இடங்களில், விவகாரங்களில் பிரச்சினைகள் ஏதும் இல்லாமல், தாழ்த்தப்பட்ட மக்கள் சீரான முன்னேற்றம் கண்டு வருகிறார்கள் என்றதொரு தோற்றம் உருவாக்கப்படுகிறது.

“தாழ்த்தப்பட்ட மக்களைப் பாதுகாப்பதற்கான சட்டங்களை மேலும் கடுமையாக்க வேண்டும். சமூக நீதிக்கான இடஒதுக்கீடுகளை மேலும் உறுதியாக்க வேண்டும், இம்மக்களின் நலன்களுக்கான திட்டங்களையும் நிதி ஒதுக்கீடுகளையும் அதிகமாக்க வேண்டும்” என்பதற்கு மேல் செல்வதில்லை. “தலித்” அமைப்புகளின் முறையீடுகள், புகார்கள் எல்லாம் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் ஆகியோரின் பாராமுகச் செயல்பாடுகள் மீது குறை காண்பதோடு நின்று விடுகின்றன. ஆனால், இத்தகைய கோரிக்கைகள், முறையீடுகள், புகார்கள் எல்லாமும் ஒட்டு மொத்த அரசு அமைப்பின் மீது நம்பிக்கை ஏற்படுத்துவதாகவே உள்ளன.

“தலித்” அமைப்புகளுக்கு மட்டுமல்ல; அவற்றின் பேராசானாக கருதப்படும் அம்பேத்கருக்கே கூட அரசு மூலமாக மேற்கொள்ளப்படும் சட்டபூர்வ, அதிகாரபூர்வ நடவடிக்கைகளைக் கொண்டு தாழ்த்தப்பட்ட மக்கள் சமூக, அரசியல் ,பொருளாதார முன்னேற்றத்தைக் கண்டு விட முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. அம்பேத்கரியவாதிகள் ஒவ்வொரு விவகாரத்திலும் திரும்பத் திரும்பக் கூறும் குற்றச்சாட்டு, “தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்துக்கும் பாதுகாப்புக்கும், உரிமைக்கும் பெரும் இடையூறாகவும் கேடு விளைவிப்பதாகவும் இருப்பது ஆதிக்க சாதிகளைச் சேர்ந்த அதிகார வர்க்கத்தினரும் காவல்துறையினரும்” என்பதுதான்.

ஆங்கிலேயக் காலனியவாதிகளால் கட்டியெழுப்பப் பட்டு, ஆதிக்க சாதிகள் மற்றும் தரகு முதலாளிகள் அடங்கிய ஆளும் வர்க்கங்களின் அரசியல் பிரதிநிதிகளான காந்திநேரு காங்கிரசினால் வரித்துக் கொள்ளப்பட்ட இந்திய அரசுக் கட்டமைப்பு என்பது, சாதிய சமுதாய அமைப்பு குலைந்து போகாமல் காப்பதற்கானதுதான். இதன் அங்கங்களான அதிகார வர்க்கம், இராணுவம், போலீசு, நீதிமன்றங்கள் எல்லாம் சாதிய சமுதாய அமைப்பைக் கட்டிக் காப்பதற்காக உள்ளவைதாம்.
இந்த நோக்கத்துக்காகவே போதனையும் பயிற்சியும் அளிக்கப்பட்டு, ஊட்டி வளர்க்கப்படும் மேற்படி அரசு அமைப்பினரே ஒரு தனிவகை சாதியினர். சமத்துவத்தையோ, ஜனநாயகத்தையோ இந்தத் தனிவகை சாதிய அமைப்பு ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது. இத்தகைய அரசு அமைப்பை, தனி ஒரு சாதியினை தாக்கித் தகர்த்து விட்டு, தமக்கென ஒரு புதிய அரசுக் கட்டுமானத்தை நிறுவிக் கொள்வதுதான் அரசியல் புரட்சி; இவ்வாறான அரசியல் புரட்சி ஒன்றின்றி சமூகப் புரட்சி சாத்தியமே கிடையாது. பழைய கட்டுமான அமைப்பை அப்படியே தக்க வைத்துக் கொண்டு உழைக்கும் மக்கள் ஒடுக்கப்படும் சாதியினர் தமது நலன்களுக்கான சமத்துவம், ஜனநாயகம், சமூக நீதியை நிறுவுவதற்குப் பயன்படுத்திக் கொள்ள முடியாது.

இதுதான் புரட்சிகரக் கண்ணோட்டம். ஆனால், புரட்சி பற்றிய இத்தகைய பார்வையின்றி, நமது நாட்டில், தமிழகத்தில் எத்தனையோ ‘புரட்சிகள்’ அவதாரமெடுத்துள்ளன. அம்பேத்கர் தலைமையில் கொண்டு வரப்பட்ட அரசியல் சட்டமும், அதன் பிறகு இடஒதுக்கீட்டை உறுதி செய்த முதலாவது அரசியல் சட்டமும்கூட இந்திய அரசியலமைப்பின் மேற்படி குணத்தை (சாதிய வர்க்கத் தன்மையை) மாற்றி அமைத்துவிடவில்லை. ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சாதியினர் இடஒதுக்கீடு ஏற்பாடு மூலம் இந்த அரசு இயந்திர அமைப்பில் சேருவதனால், அவ்வாறான மாற்றம் எதுவும் ஏற்பட்டு விடுவதில்லை. மாறாக, இவர்களும் அந்தப் புதிய, தனிவகை சாதியினராக மாறிவிடுகின்றனர். அவர்களுக்கான போதனை, பயிற்சி, குடியிருப்பு, வாழ்க்கைமுறை, பண்பாடு, அதிகாரம் எல்லாமும் இத்தகைய மாற்றத்தைக் கொண்டு வந்துவிடுகின்றன. குடியரசுத் தலைவரான கே.ஆர். நாராயணன், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் முதல் தமிழகத் தலைமைப் போலீசு அதிகாரிகளான காளிமுத்து, முத்துக்கருப்பன் வரை இதுதான் பொதுவிதியாக உள்ளது. அரசு அமைப்புக்குள்ளாகவே ஆதிக்க சாதி அதிகாரிகளால் ஒடுக்கப்படும் சாதி அதிகாரிகள் சமமாக நடத்தப்படுவதில்லை, இழிவுபடுத்தப்படுகிறார்கள் என்கிற உண்மையும் கூட இந்தப் பொதுவிதியை மறுப்பதில்லை. சாதிய அமைப்பைக் கட்டிக் காப்பதற்காக நிறுவப்பட்டுள்ள அரசு அமைப்புக்குள் மட்டும் சாதிய சமத்துவம் நிலவுமா, என்ன? உமாசங்கர், சிவகாமி போன்றவர்களுக்கு மட்டும் நீதியும் சமத்துவமும் கொடுக்கப்படுமா, என்ன?

தாழ்த்தப்பட்டவருக்கான இடஒதுக்கீடு மூலம் சமூக நீதி ஏற்பாடுகள், முன்னேற்றத்துக்கான திட்டங்கள், நிதி ஒதுக்கீடுகள், பாதுகாப்புக்கான சட்டங்கள், ஆட்சி அதிகாரப் பகிர்வுக்கான உள்ளூராட்சி ஒதுக்கீடுகள் இவை எல்லாமும் ஏற்கெனவே உள்ள அரசியல், சமுதாய, பொருளாதாரக் கட்டமைவுக்குள்ளாகவே செய்யப்படும் சீர்திருத்தங்கள் தாமே தவிர, இக்கட்டமைப்பைத் தகர்ப்பதற்கான, இதற்கு வெளியே மேற்கொள்ளப்படும் முயற்சிகள் எதுவும் கிடையாது. பெரியார், அம்பேத்கார் முதலியவர்களுக்கு எவ்வளவுதான் நேர்மையான, உயரிய நோக்கங்கள் இருந்தபோதும், அவர்கள் முன்வைத்த தீர்வுகள் இந்தக் கட்டமைவைத் தகர்த்துப் புதிய கட்டுமானத்தை நிறுவுவதற்கான புரட்சிகர உள்ளடக்கத்தையும் வழிமுறைகளையும் கொண்டவையாக இல்லை. அம்பேத்கர் உயர்த்திப் பிடித்த சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், ஜனநாயகத் தத்துவம்கூட மேற்கத்திய முதலாளியக் கண்ணோட்டம்தானே தவிர, உழைக்கும் மக்களின் ஜனநாயகம் அல்ல.

மார்க்சிய ஆசான்களாலேயே முன்வைக்கப்படாத, உலகில் வேறெங்கும் இல்லாத தனிச்சிறப்பான சாதியாதிக்க சமூகத்தைக் கொண்டது இந்திய நாடு என்கிற பேருண்மையைப் பெரியாரும் அம்பேத்கரும் மட்டுமே கண்டுபிடித்து விட்டதாக அம்பேத்கரிய, பெரியாரியவாதிகளால் உரிமை பாராட்டப்படுகிறது. ஆனால், அச்சாதி ஆதிக்க சமூகத்தைத் தகர்க்கவும், சமத்துவ, ஜனநாயக சமுதாயத்தை உருவாக்கவும் கூடிய, உலகில் வேறெங்கும் இல்லாத தனிச்சிறப்பான புரட்சிகரமான தீர்வுகளையும் வழிமுறைகளையும் அவர்கள் முன்வைத்துள்ளார்களா?

அடுக்கடுக்கான படிநிலை சாதிய சமுதாயத்தில், சாதி இந்துக்களுக்கு மட்டுமே சாதி ஆதிக்கமும் அதிகாரமும் உள்ளது. அவை பலவீனமடைவதாக உணரும்போதெல்லாம் ஆதிக்க சாதிகள் கூட்டுச் சேர்ந்து புதுப்புது நடைமுறைகளைக் கண்டுபிடித்து மீண்டும் அதிகாரத்தையும் ஆதிக்கத்தையும் நிலைநிறுத்திக் கொள்கிறார்கள். ஆகவே, வேண்டுவது மேலும் மேலும் சீர்திருத்தங்கள் அல்ல! கெட்டி தட்டிப் போயிருக்கும் சாதியாதிக்க சமுதாயத்தை உலுக்கித் தலைகீழாகப் புரட்டிப் போடும் உழைக்கும் மக்கள் தலைமையிலான சமூக அரசியல் புரட்சி! ‘தலித்’ தலைவர்களும் அமைப்புகளும் அத்தகைய புரட்சிக்குத்தான் பணியாற்றுகிறார்களா?

புதிய ஜனநாயகம்

ஒபாமாவுக்கு எதிராக ஒரு சலாம் வரிசை!

புழுதி பறக்கக் கம்பைச் சுழற்றி, புழுதி அடங்குமுன் அப்படியே குனிந்து வாத்தியாருக்கு சலாம் வைப்பதை, சிலம்பத்தில் சலாம் வரிசை என்பார்கள். அமெரிக்க அதிபர் ஒபாமா சமீபத்தில் பி.டி.ஐ. செய்தி நிறுனவத்துக்கு அளித்த பேட்டி ஒன்றில், இந்தியாவின் வர்த்தகச் சூழல் பற்றித் தெரிவித்திருந்த கருத்துகளால், ஆத்திரம் கொண்ட மத்திய அமைச்சர்களும், எதிர்க்கட்சியினரும் அவர்களுடன் இந்தியத் தரகு முதலாளிகளும்கூடச் சாமியாடி சலாம் வரிசை எடுத்து விட்டார்கள். பத்திரிகைகளைப் படிக்கின்ற வாசகர்கள், அடேயப்பா ஒபாமாவுக்கு பலத்த அடிதான் போலும் என்று எண்ணியிருக்கக் கூடும். புழுதி கிளப்பிவிட்டதால், காலில் விழுந்த காட்சியை யாரும் கண்டிருக்க முடியாது.
இந்தியாவில் முதலீட்டுச் சூழல் மோசமாகிவருகிறதென்று அமெரிக்க முதலீட்டாளர்கள் தன்னிடம் பெரிதும் கவலை வெளியிட்டார்களென்றும், பல துறைகளில், எடுத்துக்காட்டாக சில்லறை வணிகத்தில் வெளிநாட்டு முதலீடு தடை செய்யப்பட்டிருக்கிறது என்றும் ஒபாமா அந்தப் பேட்டியில் கூறியிருக்கிறார்.
பிறகு, “தன்னுடைய பொருளாதார எதிர்காலத்தை இந்தியா எப்படி அமைத்துக் கொள்ளவேண்டும் என்று வழிகாட்டுவது எங்கள் வேலை அல்ல, அதைத் தீர்மானிக்க வேண்டியது இந்தியர்கள்தான்” என்று யோக்கியர் போலக் கூறிவிட்டு, அடுத்த வாக்கியத்திலேயே, “பொருளாதாரச் சீர்திருத்தங்களைக் கட்டவிழ்த்து விடுவதற்கு இதுதான் தருணம் என்ற கருத்து உங்கள் நாட்டில் வளர்ந்து வருவதாகத் தெரிகிறது” என்று ஒரு கொக்கியைப் போட்டு, “அப்படி பிரச்சினைக்குரிய சீர்திருத்தங்களை இந்தியா அமல்படுத்தத் தொடங்குமானால், அமெரிக்கா இந்தியாவுக்குத் துணை நிற்கும்” என்றும் கூறியிருக்கிறார். “சில்லறை வணிகம், பென்சன் நிதி, காப்பீடு மற்றும் கல்வித்துறையை திறந்துவிடு. ஒத்துவராதவர்கள் இருந்தால் நான் அவர்களைச் சரிக்கட்டுகிறேன்” என்பதுதான் ஒபாமாவுடைய கூற்றின் பொருள்.
ஒபாமாவுக்குக் கண்டனம் தெரிவித்த சூரர்கள் என்ன கூறினார்கள்? ஐ.நா. (UNCTAD) வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தின்படி அந்நிய முதலீட்டாளர் களை ஈர்ப்பதில் இந்தியா உலகளவில் மூன்றாம் இடத்தில் இருப்பதாகவும், இது தெரியாமல் இந்தியாவைப் பற்றி யாரோ ஒபாமாவுக்குத் தவறான தகவல் கொடுத்திருப்பதாகவும் பிரதமர் அலுவலகமும் வர்த்தகத்துறை அமைச்சர் ஆனந்த் சர்மாவும் அறிக்கை வெளியிட்டனர். “அமெரிக்கா சொன்னதற்காக நாம் சில்லறை வணிகத்தைத் திறந்து விட முடியுமா?” என்றார் பா.ஜ.க.வின் யஷ்வந்த் சின்கா. சி.ஐ.ஐ. எனும் இந்திய தரகு முதலாளிகள் சங்கமோ, “நம்முடைய அரசுக்கு யாரும் உத்தரவிட முடியாது” என்று தலைப்பு போட்டு தொடங்கி, சில்லறை வணிகம், காப்பீடு, இராணுவத் தளவாடங்கள் ஆகிய துறைகளைத் திறந்துவிட்டால், அந்நிய முதலீட்டாளர்களின் நல்லெண்ணத்தைப் பெற முடியும் என்று அறிக்கையை முடித்திருக்கிறது.
இவையெல்லாம் நாட்டுப்பற்று, இறையாண்மை, தன்மானம் கொண்ட இந்தியர்கள் தெரிவித்திருக்கும் கண்டனங்களாம்! ஒபாமாவின் கருத்துக்களை ஒபாமாவைவிடத் தீவிரமாக முன்வைத்து விட்டு, தங்களது அடிமைத் தனத்தையே அமெரிக்காவின் மீதான கண்டனமாகவும் காட்டி, கைதட்டலும் வாங்க முடிகிறது என்றால், நமது மக்களின் பாமரத்தனத்தை என்னவென்று சொல்வது?

__________________________________________________
– புதிய ஜனநாயகம், ஆகஸ்டு – 2012
__________________________________________________