செங்கடல் – என்னோடு பயணிக்கவில்லை : கவிதா (நோர்வே)

sengadal2011 ஆம் ஆண்டு நோர்வேயில் பல சர்ச்சைகளுக்கு மத்தியில் செங்கடல் திரையிடப்பட்டபோது என்னால் சமூகமளிக்க முடியவில்லை. நேற்று மீண்டும் ஒஸ்லோவில் திரையிடப்பட்ட முழுநீள திரைப்படத்தைப் பார்த்துவிடுவதென்ற எண்ணத்தோடு சென்றிருந்தேன். படத்தின் இயக்குனர், நடிகை லீனா மணிமேகலை மற்றும் நடிகர் வசன கர்த்தா ஷோபாசக்தியும் சமூகமளித்திருந்ததால் அவர்களின் கருத்துக்களையும் எண்ணங்களையும் அறியும் ஆவல் என்னிடமிருந்தது. இந்திய, இலங்கை அரசுகளை கையில் எடுத்திருப்பதால் தணிக்கைக் குழுவினால் தடை செய்யப்பட்டு கூடுதல் கவனம் பெற்ற படம் என்பதாலும் செங்கடலைப் பார்ப்பதில் கூடுதல் ஆர்வம் ஏற்பட்டிருந்தது.

கதையின் களம் மீனவக் குடும்பங்கள் வாழும் தனுஷ்கோடி. கதையின் காலம் 2009 ஆரம்பத்தில் கடல்கடந்து கரையிரங்கும் இலங்கைத் தமிழ் அகதிகளோடு தொடங்குகிறது. ஒரு ஊடகப்பெண்ணின் நாட்குறிப்பிலிருந்து கதைகள் தொகுக்கப்பட்டு காட்சிப்படுத்தப்படுவதாக எனக்குப்படுகிறது.

வாழ்க்கையைப் பணயம் வைத்து கடலுக்குள் களமிறங்கும் மீனவர்களின் வாழ்க்கையை வெளியுலகிற்குக் கொண்டுவரவேண்டும் என்ற ஆர்வம் திரைமுழுதும் இளையோடியிருக்கின்றது. இப்படியான கதைக்களங்கள் அரிது. பாராட்டப்படவும் எம் சமூகத்திடம் எடுத்துச்செல்லவேண்டிய தேவையையும் உணர்த்துகிறது. நடிகர்களைக் கொண்டு அல்லாது, மீனவர் சமூகத்து மனிதர்களையும், அகதிகளையும் வைத்தே கதைக்கு உடல் கொடுத்திருப்பது சிறப்பு. இந்தியத்திரைகளில் பேசப்படும் இலங்கைத்தமிழ் ஏற்படுத்தும் சலிப்பைச் செங்கடல் திரைபடம் தரவில்லை என்பதும் கூடுதல் பாராட்டிற்குரியது.

இப்படியான சிறப்புகளைக் கொண்டிருக்கும் செங்கடலில் ஆரம்பித்து முடியும்வரை ஏதோ ஒன்றை மனம் தேடிக்கொண்டிருந்தது. சரி இது வழமையான திரைப்படம் இல்லை அதனால் அதன் அழகியலோடும், எதார்த்தத்தோடும் பார்க்கும் முயற்சியை மேற்கொண்டேன். இருந்தும் ஏதோ ஒரு வெறுமை 90 நிமிடங்களிலும் ஓடிக்கொண்டிருப்பது போலவே இருந்தது எனக்கு. இது திரைப்படமா, ஆவணப்படமா என்ற கேள்வியும் ஆரம்பத்திலிருந்தே ஒருபக்க மூளையும் குடைந்து கொண்டிருந்தது. என் மூளைக்கு எட்டியவரை இது திரைக்கதையுள்ள ஒரு திரைப்படமல்ல. அப்படியானால் ஆவணப்படமா என்று பார்த்தால் அதுவும் அல்ல என்றே சொல்ல வேண்டும். சரி எப்படி இருந்தால் என்ன பார்வையாளர்களிடம் எதிர்பார்த்த உணர்வை ஏற்படுத்தும் விதம் படமாக்கப்பட்டிருக்கிறதா என்றால் அதுவும் இல்லையோ என்றே தோன்றுகிறது. உண்மை என்பதற்காக 90 நிமிடங்கள் உட்கார்ந்து பார்க்கவேண்டும் என்று பார்வையாளர்களை கட்டிப்போட முடியாதுதானே.

செங்கடலின் பேசுபொருள் என்பது பேசப்படாத பொருள் அல்ல. தொலைக்காட்சிகளிலும், செய்திகளிலும் பார்க்கும் போது ஏற்பட்ட உணர்வை இந்த உண்மை ஆவணங்களை சேகரித்து திரைப்படமாக்க எடுத்த முயற்சி என்று சொல்லக்கூடிய செங்கடல் என்னுள் ஏற்படுத்திவிடாமலேயே முடிந்து போகிறது. பெரும் துயரங்களைக் காட்சிப்படுத்தும் செங்கடல் உண்மையாகத் தூண்டப்பட வேண்டிய உணர்ச்சிகளை தீண்டவில்லை என்பது எனது கருத்து. இலங்கை, இந்திய அரசியல் ஆர்வலர்கள் தெரிந்திருக்கக்கூடிய அரசியல்தான் என்பதால் இது பேசாப்பொருள் அல்ல. இலங்கை, இந்திய அதிகாரவர்க்கத்தினை பயப்பட வைக்கும் அளவு இதில் அமைந்த காட்சிகள் எவை என்பதும் புரியவில்லை. ஆனாலும் துணிச்சலான கருத்துக்களை துணிந்து முன் வைத்தமை மிகவும் வரவேற்கத்தக்கது.

அகதிகளின் அவலம், மீனவர்களின் வாழ்வுநிலை, ஊடகத்துறை சார்ந்தவர்களுடைய சுதந்திர மறுப்பு, ஒரு மனநிலைபாதிப்புக்குள்ளானவன் என்று பல பாத்திரங்கள் வந்து போய்கொண்டிருக்கின்றவே ஒழிய எந்த ஒரு பாத்திரத்தினூடும் கதை பயணிக்கவில்லை. தொலைக்காட்சி செய்தித் தொகுப்புகள் போல ஒன்றோடு ஒன்று மாறி மாறி காட்சிப்படுத்தப்படுத்துவதும், பேசுபொருளுக்குத் தேவையற்ற காட்சிகளை (கருத்துகளை) வலிந்து திணித்திருக்கும் காட்சியமைப்புகளானதும் செங்கடலுக்குள் என்னைச் முழுமையாகச் செல்லவிடாமல் குழப்பிக்கொண்டிருந்தது. இப்படியான காட்சிகள் கதையின் கருப்பொருளைத் தாண்டி பார்வையாளனை வழிமாற்றிக் கொண்டு செல்லத் தொடங்கும் அபாயம் திரைக்கதைமுழுதும் கோர்க்கப்பட்டிருக்கிறது.

செங்கடலில் வரும் பைத்தியக்காரன் பாத்திரம் அழகாக செதுக்கப்பட்டிருக்கின்றது. அவனோடு பயணிக்கும் பாட்டுப்பெட்டியும் ஒரு கதாபாத்திரமாகியிருந்ததும் அதன் அழிவைத் தொடர்ந்து ஒரு பாட்டுப்பெட்டி மீண்டும் கிடைப்பதும் நம்பிக்கை ஊட்டுபவையாக இருக்கின்றது. முதலாவது காட்சியில் «பிரபாகரன் செத்திட்டான்» என பல முறை கூறிக்கொண்டுவரும் ஒரு தீர்க்கதரிசி மனநலகுறைபாடுள்ள பாத்திரம், பின்பு வரும் காட்சி ஒன்றில் இறுதி யுத்தத்தில் கொஞ்சப் புலிகளுடன் தலைவர் வேறு ஒரு தீவிற்கு தப்பிச் சென்றுவிட்டார் என்று சொல்கிறது. இவைகள் மனநலக்குறைபாடுள்ளவரால் சொல்லப்படுவது இயக்குனரின் ஒருவித தப்பிப்பா? மக்களின் இப்படியான பேச்சுக்கள் பைத்தியக்காரத்தனமானவை என்று சொல்வதாக எடுத்துக்கொண்டாலும், பிரபாகரன் உயிருடன் இல்லை என்றும் அதே பைத்தியக்காரன் சொல்வது குழப்புகிறது. மக்களின் குழப்ப நிலைக்கு இது குறியீடாக கொள்ளலாம். இறுதியாகக் காண்பிக்கப்படும் பிரபாகரனின் இறந்த உடல் போன்ற காட்சிகள் அனைத்தும் பிரபாகரன் இறந்துவிட்டார் என்று சொல்வதில் அழுத்தம் கொடுக்கும் அரசியல். எப்படி «தலைவர் இருக்கிறார்» என்று ஒரு குழு அரசியல் நடத்துகின்றதோ அதன் எதிர்த்தரப்பு அரசியல் இங்கே சொல்லப்படுகிறது என்பதே உண்மை. மீனவர் சமூகத்தின், மற்றும் இலங்கை அகதிகளின் உண்மையை மட்டுமல்ல, இலங்கை, இந்தியா மீது அரசியல் விமர்சனம் வைக்கும் செங்கடல், தனக்கென்ற ஒரு அரசியலையும் பேசுகிறது.

மீனவச்சமூகத்தை ஆவணப்படுத்த வரும் ஊடகப்பெண் பாத்திரத்தின் கனம் பலவீனமாக உள்ளதை குறிப்பிட்டே ஆக வேண்டும். தான் தனியே நின்று ஒரு சமூகத்தினை ஆவணப்படுத்த முயற்சிக்கும் ஒரு பெண்ணின் துணிவை பல இடங்களில் பதிவு செய்திருக்கிறார் இயக்குனர். முற்போக்கு குணம் கொண்ட துணிச்சலான ஒரு பெண் ஏன் தான் ஆவணப்படுத்திய அத்தனை பதிவுகளையும் ஒரு எதிர்ப்பும் காட்டாமல் அதிகாரிகளிடம் ஓப்படைக்கிறார் என்பது புரியவில்லை. தனித்து ஒரு சமூகத்தின் பதிவை ஆவணப்படுத்தும் ஒரு துணிவுப்பெண் ஏன் அதில் சிலவற்றையேணும் அதிகாரிகளிடமிருந்து காப்பாற்ற சிறிதும் முயற்சிக்கவில்லை?

கதை நெடுகிலும் மணிமேகலைப் பாத்திரத்துடன் பயணிக்கிறது ஒரு ஆமை. சித்தார்த் என்னும் இந்த ஆமை, மணிமேகலைப் பாத்திரத்துடன் பொருந்துவதேதோ உண்மைதான். ஏன் அதற்குச் சித்தார்த் என்ற பெயர் வைத்தார் என்பதை விட்டு நாம் ஆமையின் குணத்தை பார்தோமானால். ஆமை எதிர்ப்புத்தன்மையற்றது. யார் சீண்டினாலும் தன்னை உள்இழுத்துக்கொள்ளும் தன்மையுடையது அப்போது அதை யாரும் புரட்டிப்போட்டால் செயலற்ற நிலைக்குப் போய்விடும். அதைப்போலவே மணிமேகலைப்பாத்திரம் சித்தரித்த விதமும், ஏதுமில்லாமல் கண்ணீருடன் ஊரைவிட்டுப் போவதும் தன்னுடன் தானே முரண்பட்டு நிற்கின்றது. புகைத்தல், உடல் சார்ந்த பால் பிரிவினையை மறுத்தல் போன்ற எண்ணங்களைக் கொண்ட ஒரு பெண்ணிடம் போர்க்குணம் அற்றுப் போனது ஏமாற்றம். எதையும் துணிந்து எறியத் தயாராயிருக்கும் முற்போக்குப் பாத்திரமான மணிமேகலைப் பாத்திரம் கடைசியில், பெண்கள் துறக்கத் தகுந்த கண்ணீரைக் கட்டிக்கொண்டு போவது இவ்வளவுதானா என்று சொல்ல வைக்கின்றது. (புகைத்தல்தான் முற்போக்குத் தன்மை என்று நான் குறிப்பிட வரவில்லை)

டெல்லியில் எழுத்தாளர்கள் நடத்தும் போராட்டம் எந்த வகையில் பிற (அரசியல்) போரட்டங்களைவிட உயர்ந்து நிற்கின்றது, மணிமேகலை என்ற பாத்திரம் அதில் கலந்து கொண்டதாலா? அல்லது இந்தப் போராட்டம் மூலம் அரசியல், சமூக மாற்றங்கள் ஏதும் நடந்திருக்கின்றதா? மனிதச் சங்கிலி, அரசியல்வாதிகளின் போராட்டங்கள், கண்டனப் பொதுக்கூட்டங்கள், ஜெயலலிதா, சீமான், நெடுமாறன், கருணாநிதி வரை எடுக்கப்பட்ட போராட்டங்களைவிட, எழுத்தாளர்களுடைய போராட்டத்திற்குக் மட்டும் அழுத்தம் கொடுத்தது போன்ற விளம்பரங்களைத் தவிர்த்திருந்தால் மீனவர்களின் வலி மேலும் காத்திரமாக வந்திருக்கலாம். செங்கடல் திரைப்படமா, ஆவணப்படமா என்ற குழப்பங்களைக் கொண்டுவருவது இப்படியான காட்சிகள் எனலாம். சாதாரணப் பார்வையாளர்களுக்கு திமுக வின் போராட்டமோ, ஆதிமுக வின் போராட்டமோ, அல்லது எழுத்தாளர்களின் போராட்டமோ எதுவும் மாற்றத்தை கொண்டுவராத நிலையில் எல்லாமே ஒன்றுதான். அனைத்திலும் அவர்களுக்கேயான அரசியல் இருக்கத்தான் செய்கிறது.

செங்கடலில் என் மனதைத் தொடவும் வலிக்கவும் செய்த காட்சி சில நொடிகளாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை குறிப்பிட விரும்புகின்றேன். படகிற்காக காத்திருக்கும் ஈழத்தமிழ் அகதிகள் கடற்கரையில் குந்தியிருக்கின்றார்கள். அப்போது ஒரு விமானம் அவர்களது தலைக்கு மேலாகப் பறக்கிறது. அங்கே குந்தியிருந்த சிறுவன் தனது விரல்களால் அந்த விமானத்தை நோக்கிச் சுடுகிறான். அடுத்த தலைமுறையினரிடமும் வன்முறை துளிர்விடுவதை காட்டும் இக்காட்சியானது இன்னமும் மனதோடு வலிக்கின்றது.

மக்களின் வேதனையை நகைச்சுவையோடு கூறினாலும் வலி அதிகமாகவே வரும் நகைசுவைக்காட்சிகள் செங்கடலில் தரமானவை. ”சிங்களம் படிச்சு முடிச்சு இனி ஹிந்தியும் படிக்க வேணுமோ?” என்பதும், பிணத்தை புதைக்க வரும் பாதரியாரிடம் குறைந்த கட்டணத்தொகையைக் கொடுக்கும் போது ”பரவாயில்லை அவர் அடிக்கடி வாரார்தானே இப்ப” என்பதும், இலங்கை அரசிடம் ரசாயன குண்டு இருக்கா என்றதற்கு ”நீங்க குடுத்தா அங்க இருக்கும்” , ”போர்முடிஞ்சதும் நாங்க போயிடுவோம்” என்று சொல்லும் அகதியிடம் ”நாங்க முடிச்சு வைச்சிடுவோம்” என்று காவல்த்துறை பேசும் வரிகள் காத்திரமானவை. இப்படியான வீரியமான சோபாசக்தியின் வரிகள் திரையில் உரமுட்டுகின்றன.

இந்தியத் திரையில் வரும் வில்லன்களைப்போல மொத்தமாய் இந்திய அரசஊழியர்களை ஒட்டுமொத்தமாக ஒரே சட்டியில் போட்டு வில்லத்தனமாகவே பார்வையாளனுக்குக் காட்டுவது எந்தவகையில் சரியானது என்று சொல்வதற்கில்லை.

இந்தப்படத்தை இயக்குவதற்கு இருந்த நிதிபோதாமை தொழில்நுட்ப ரீதியாகவும் படத்தை முழுமை பெறமுடியாமல் செய்திருக்கின்றது என்ற காரணங்களுக்காக படைப்பின் தரத்தை நாம் உயர்த்திப்பேச முடியாது. திரைப்பட இயக்குனர்கள் பாதிப் பேரின் பிரச்சனை நிதி என்ற நிலமைதான் எங்கும் நிலவுகிறது. உளி வாங்கப் பணமில்லை என்பதற்காக ஏதோ இருந்ததை வைத்து செதுக்கியுள்ளேன் என்று சரிவரச் செதுக்காத சிற்பத்தை தரமானது என்று சொல்லிவிட முடியாது.

படம் நெடுக வரும் குறியீடுகள் தேர்ந்த பார்வையாளனை நோக்கியே தொகுக்கப்பட்டிருக்கிறது. குறியீடுகளும், கவித்துவமும் மாற்று சினிமா வேறு மக்கள் சினிமா வேறா என்ற கேள்வியை எனக்குள் புதிதாக எழுப்பியிருக்கின்றது. வணிக நோக்கமில்லாத இம்முயற்சியில் திரையின் கருப்பொருள் பார்வையாளனக்குக் கொடுக்க வேண்டிய ரசத்தைத் தரமுடியாத நிலையில் நெடுங்காட்சிகளாய் முடிந்துபோகிறது. நசுக்கப்படும் இரு சமூகத்தின் துன்பதை எடுத்துவரும் கதை என்பதற்காகவே மக்களிடம் போய்ச்சேர வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

ஈழமக்கள் மற்றும் மீனவர்ச்சமூகத்தின் மரண வேதனையை, தமிழர் என்பதற்காகவே கொல்லப்படும் இந்திய மீனவர்களின் அவலத்தை, ஈழஅகதிகளின் இயலாமையை மக்களிடம் கொண்டு செல்லும் திரைக்காவியமான செங்கடல், மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்கவேண்டிய படகின் உந்துஅலைகளை விட்டுவிட்டு பயணிக்கிறது.

ஒட்போர் சின்னத்தோடு, புலிககொடிகளோடு பாரதிராஜா அவமானப்படுத்திய மக்களின் போர்குணம்

otpor1‘புரட்சி வியாபார’ அமைப்பான ஒட்போர் இன் சின்னத்தோடு அழைப்பு விடுக்கப்பட்டு நூற்றுக்கணக்கான புலிக்கொடிகளோடு ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டம் நேற்று -05.04.2012- லண்டனில் நடைபெற்றது. தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடாத்தக்கோரியும், 65 ஆண்டுகால இன அழிப்பிற்கு நீதி வழங்கும் வகையில் ஐ.நா. சர்வதேசசுயாதீன விசாரணையை நடாத்த வலியுறுத்தியும் இந்த்த்ச் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நேற்று பி.ப 2:30 மணிக்கு ரவல்கர் சதுக்கத்தில் இருந்து புறப்பட்டு பிரித்தானியப் பிரதமரின் வாசஸ்தலம் முன்பாக ஆர்ப்பாட்டத்தோடு பி.ப 4:00 மணிக்கு நிறைவடைந்தது. இப் பேரணியில் கலந்துகொண்ட்அ மக்கள் முன்னிலையில் தென்னிந்திய தமிழ் திரைப்பட இயக்குனரான பாரதிராஜா உரையாற்றினார்.

அறுபது வருடங்களுக்கும் மேலாக சூறையாடப்பட்டு இரத்தம் படிந்து உறைந்து கிடக்கும் இலங்கையின் சிறுபான்மைத் தேசிய இனங்களான தமிழ்ப் பேசும் மக்களின் சுய நிர்ணய உரிமைக்கான போராட்டம் வியாபாரிகளின் கரங்களில் விழுந்து சீரழிக்கப்பட்டுள்ளது.

துயரம்படிந்த தேசத்தின் ஒலியும் அழுகுரலும் அவர்களின் காதுகளுக்கு எட்டுவதில்லை. புலம் பெயர் நாடுகளில் தமது உடலை உருக்கி உழைப்பாக்கிய பணத்தின் கணிசமான பகுதியைப் போராட்டத்திற்கு வழங்கியவர்கள், போராடுவதற்காகவே வாழ்ந்தவர்கள், இன்றும் போர்க்குணத்தோடும் போராடும் உணர்வோடும் வாழ்கிறார்கள்.
நேற்றைய போராட்டத்தில் பங்காற்றியவர்களும் அவர்கள் தான்.

இவர்களின் உணர்வுகளை விற்பனை செய்து தமது அடையாளங்களையும் பாதுகாக்கும் தலைமைகள் ஒரு சந்ததியையே அழித்துக்கொண்டிருக்கும் கொலையாளிகள்.

bharathirajaஈழத்தில் முப்பது வருடங்களின் தவறான போராட்ட வழிமுறைகளின் தவறுகளை விமர்சிப்பதையும் புதிய வழிமுறைகளைக் கண்டறிவதையும் கூட துரோகம் எனக் கூறும் இந்தக் கூட்டத்தின் ஒரே குறி தமது இருப்பு மட்டுமே.
மகிந்த ராஜபக்சவின் கிரிமினல் அரசு இனப்படுகொலையை வெற்றிகரமாக நடத்தியதும் இன்றும் இனச் சுத்திகரிப்பை வெற்றிகரமாக நடத்திக்கொண்டிருப்பதற்கும் அவமானகரமான இந்த வியாபாரிகள் துணை போகிறார்கள். போர்க்குணம் மிக்க மக்கள் இவர்களின் கபட நாடகத்திற்குப் பலியாகிறார்கள்.

ஒட்போர் என்ற புரட்சி வியாபார அமைப்பு நேற்று நடைபெற்ற போராட்டத்தின் பின்புலத்தில் செயற்பட்டதா என்பது குறித்துத் தெளிவில்லை. ஆனால் ஒட்போரின் சின்னம் பயன்படுத்தப்பட்டிருப்பது சந்தேகத்திற்குரியது.

தாம் வாழ்ந்து உயர்ந்த ஈழ மண்ணில் மனித் விழுமியங்களை மக்களின் அவலங்களோடு இணைத்துக் கண்டுகொண்ட மக்கள் கூட்டம் போர்க்குணத்தோடு பங்குபற்றிய போராட்டம் ஒன்றில் இந்தியாவின் கடைந்தெடுத்த சினிமா வியாபாரி சேறடித்த நிகழ்வு அருவருப்பானது.

protest_uk_tamilsபுலிகளின் எந்தத் தவறையும் நாம் விமர்சிக்கத் தயாரில்லை என்று கூறுவதற்காக புலிக் கொடிகளைப் பறக்கவிடுகின்றவர்கள் போர்க்குணம் மிக்க மக்கள் அல்ல. இலங்கையில் சிறுபான்மைத் தேசிய இனங்கள் தாம் பிரிந்து செல்லும் உரிமைக்காகப் போராடுவதைத் தவிர வேறு தீர்வுகள் கிடையாது.

அந்தப் போராட்டத்தின் அழிவின் சாம்பல்களிலிருந்து கூடக் கற்றுக்கொள்ள மறுக்கும் ஒரு கூட்டம் போராட்டத்தின் தன்மையைத் திசைதிருப்பி அழிப்பதை எல்லாம் மக்கள் போராட்டம் என்று அழைப்பது மக்கள் போராட்டத்திற்கு அவமானமாகும்.

துனீசியாவில் ஆரம்பித்து எகிப்து ஈறாக இன்று சிரியா வரை தூண்டப்படும் எழுச்சிகளின் பின்புலத்தில் ஒட்போர் என்ற அமைப்பே செயற்பட்டிருக்கிறது. மில்லியன் கணக்கில் அமரிக்க உளவு நிறுவனங்களிடமிருந்து பணம் பெற்றுக்கொள்ளும் இந்த நிறுவனம் அமரிக்க அரசின் ஆணைப்படி எழுச்சிகளை ஆரம்பித்து அவற்றை அழித்துவிடுகின்றன.

இவற்றை எல்லாம் புரிந்துகொண்டும் இந்த நூற்றாண்டின் கோரமான மனித அழிவின் பின்பும் தமது சொந்த நலனுக்காக மக்களின் உணர்வுகளத் தவறாகப் பயன்படுத்திக்கொள்ளும் வியாபாரிகளும் தமிழ்ப் பேசும் மக்களின் எதிரிகளே.

மேலும் படிக்கவேண்டிய பதிவுகள்:

‘புரட்சி’ வியாபாரம் – The revolution business
தமிழக மாணவர் போராட்டங்களின் வெற்றி, உலகத்திற்கு முன்னுதாரணம் 
NGO களால் கடத்தப்பட்ட வால் ஸ்டிரீட் போராட்டம் – ஓராண்டு நிறைவு-கற்றுக்கொள்ளல் 
The Drawback Of Nepal’s Revolution : The NGO’s Harvest
ஒட்போர் (OTPOR) புரட்சி வியாபார அமைப்பில் தமிழகப் பேராசிரியர்

 

அமரிக்க அரசு டெல்லி மாணவிக்கு வீரமங்கை விருது : அரசியல் பண்டமாக்கப்பட்டார்

டெல்லியில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்த மருத்துவ மாணவிக்கு அமெரிக்க அரசின் சர்வதேச வீர மங்கை விருது வழங்கப்பட்டது.
அழிந்துகொண்டிருக்கும் அமரிக்க சாம்ராஜ்யம் இப்போது ஆசிய நாடுகளைக் குறிவைக்கிறது. நாடுகளின் கலாச்சார அரசியல் கூறுகளிலும் அமரிக்க அரசு நேரடித் தலையீட்டை மேற்கொள்கிறது.
தலைநகர் டெல்லியில் கடந்த ஆண்டு ஓடும் பேருந்தில் 6 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக கற்பழிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த மருத்துவ மாணவிக்கு அரசின் சர்வதேச வீர மங்கை விருது வழங்கப்பட்டது. இவ்விருதை அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி மற்றும் அதிபர் ஒபாமாவின் மனைவி மிச்சேல் ஒபாமாவும் வழங்கினார்கள்.
ஆசிய ஆபிரிக்க நாடுகளின் பெண்கள் நிலப்பிரபுத்துவ அடிமைகளாக முடக்கிவைக்கப்படும் அதேவேளை அமரிக்கா போன்ற நாடுகளில் பாலியல் பண்டங்களாக விற்பனை செய்யப்படுகிறார்கள்.

மோடியின் உரை ரத்து

அமெரிக்காவில் வார்டன் பள்ளி (Wharton school ) எனும் பல்கலைக்கழகத்தில் இந்திய மாணவர்களால் இம்மாதம் 22 மற்றும் 23 தேதிகளில் இந்தியப் பொருளாதாரம் குறித்த மாநாடு நடத்தப்பட உள்ளது.
அதில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்து, “வீடியோ கான்பரன்ஸ்’ மூலம், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பேசுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது.
குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான இனப்படுகொலையைத் தலைமை தாங்கிய காரணத்தை முன்வைத்து மோடியின் உரைக்கு மாணவர்கள் எதிர்ர்புத் தெரிவித்தனர்.
எனவே நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களால் நரேந்திர மோடியின் உரை ரத்துச் செய்யப்பட்டுள்ளது.இந்தியாவின் திட்டக்குழு துணைத்தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா 23 ஆம் தேதி அங்கு உரையாற்றுவார் எனத்தெரிகிறது.

ராஜபக்சவுக்கு பாடம் புகட்டவேண்டும் : சமூகவிரோதியின் குரல் நிறுத்தப்பட வேண்டும்

இந்தியாவை மிரட்டும் இலங்கை அதிபர் ராஜபக்சவுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் மகன் பாலச்சந்திரனை இலங்கைப் படையினர் கொடூரமாக கொலை செய்ததை அறிந்து உலகம் முழுவதும் தமிழர்கள் கொந்தளிப்பில் இருக்கின்றனர். ஆனால் நாங்கள் படுகொலை செய்யவில்லை என்று முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்க முயன்றுள்ளார் ராஜபட்ச.
ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களித்தால், காஷ்மீர் மனித உரிமை மீறல் தொடர்பாக ஐ.நா.வில் நாங்கள் பேச வேண்டியிருக்கும் என்று ராஜபட்ச பேசியுள்ளார். இது கண்டிக்கத்தக்கதாகும்.
சீனா பக்கம் இலங்கை சாய்ந்து விடக் கூடாது என்ற சொத்தைக் காரணத்தைக் கூறி ராஜபட்ச அரசுக்குச் சாதகமாகவே மத்திய அரசு நடந்துகொள்கிறது.
ஈழத்தில் உள்ள தமிழர்களின் உடைமைகளைப் பறித்துக்கொண்டு, அவர்களை விரட்டியடிக்கும் வேலையில் இலங்கை அரசு ஈடுபட்டிருக்கும் நிலையில், அந்த அரசுக்கு ரூ.500 கோடியை நிதியுதவியாக மத்திய அரசு அளித்துள்ளது.
ஈழத் தமிழர்களின் மறுவாழ்வுக்காக இந்தியா வழங்கும் நிதி முழுவதையும் சிங்களர்களுக்கு வீடுகள் கட்டித் தரவும், சிங்களப் படையினருக்குச் சிறப்பு வசதிகளைச் செய்து தரவும் இலங்கை அரசு செலவழித்து வருகிறது.
இந்நிலையில் இலங்கைக்கு இந்தியா மேலும் நிதியுதவி அளிப்பது தமிழர்களுக்கு எந்த வகையிலும் பயனளிக்காது. தமிழர்கள் பகுதிகள் சிங்களமயமாக்கத்தான் பயன்படும்.
எனவே, இந்தியாவை மிரட்டும் ராஜபட்சவுக்குச் சரியான பாடம் புகட்ட வேண்டுமே தவிர, அவருக்குப் பணிந்து ரூ.500 கோடி பரிசு வழங்கக்கூடாது.
இலங்கைக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிதி உதவியை ரத்து செய்ய வேண்டும். இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை நடத்துவதற்கான தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் கொண்டுவந்து நிறைவேற்றத் தேவையான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
ஆதிக்க சாதி வெறியரும் தமிழ் நாட்டில் ஆதிக்க சாதி வெறியர்களை இணைத்து வன்முறையைத் தூண்டி வருபவருமான பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தனது பிழைப்பிற்காக ஈழப்பிரச்சனையில் அடிக்கடி தலையிட்டு வருகிறார். தாழ்த்தப்பட்டோரை ஆதிக்க சாதிகள் திருமணம் செய்வது, காதல் திருமணம் போன்ற அடிப்படை உரிமைகளைக் கூட எதிர்க்கும் சமூகவிரோதியான ராமதாஸ் போன்றோர் சிக்கல்கள் நிறைந்த ஈழப் பிரச்சனை குறித்துப் பேசுவது நிறுத்தப்பட வேண்டும்.

ராமதாஸ் மீண்டும் சாதி வெறியைத் தூண்டும் போராட்டத்தை அறிவித்தார்

“”வன்கொடுமை தடுப்பு சட்ட பாதிப்பை கண்டித்து, மாவட்ட தலைநகரங்களில் ஏப்.,30ல் போராட்டம் நடத்தப்படும்,” என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிவித்தார்.

தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான வன்முறைகளுக்கு எதிரான இந்தச் சட்டத்தை எதிர்த்து சாதி வெறியரான ராமதாசு போராட்ட நடத்துகிறார்.
ஈழத்தில் இனவாத அரசுகள் சிறுபான்மைத் தேசிய இனங்களுக்கு எதிரான உணர்வைத் தூண்டி வாக்குப் பொறுக்குவது போன்று ராமதாஸ் போன்றவர்களின் கட்சிகள் ஆதிக்க சாதி வெறியைக் கட்டவிழ்த்து அழிவுகளை ஏற்படுத்துகின்றன.
தாழ்த்தப்பட்ட சாதியினரில் யாரும் ஆதிக்க சாதியினரைத் திருமணம் செய்தால் கொலை, சூறையாடல் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவோம் எனக் கூறும் ராமதாஸ் குழு இந்திய மக்களின் அவமானச் சின்னம்.

ஐதராபாத் தொடர் குண்டுவெடிப்பு : குண்டுபோடும் அமரிக்காவின் அக்கறை

ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் நடந்துள்ள தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தை அடுத்து, இதிலிருந்து மீண்டு வர இந்தியாவிற்கு உதவ தயாராக உள்ளாதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் விக்டோரியா நுலண்ட் தெரிவித்துள்ளார்.
ஐதராபாத்தில் நேற்று இரவு நடந்த தீவிரவாத தாக்குதலில் 10-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.100 க்கும் மேற்பட்டோர் படு காயமடைந்துள்ளனர்.
சிரியா, ஈராக் உட்பட மத்திய கிழக்கு நாடுகளிலும் உலகம் முழுவதும் வேவ்வேறு நாடுகளிலும் குண்டுகள் வெடிப்பதற்கு காரணமான அமரிக்க அரசு இந்தியவில் குண்டுவெடிப்பிற்கு எதிரக உதவிக்கரம் நீட்டுவது வேடிக்கையானது.

அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் விக்டோரியா நுலண்ட் கூறுகையில்,
“ஐதராபாத்தில் நடந்துள்ள கோழைத்தனமான தாக்குதலை அமெரிக்கா வன்மையாகக் கண்டிக்கிறது. இந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளோரின் குடும்பத்தாருக்கு எங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துகொள்கிறோம். மேலும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் தீவிரவாதத்திற்கு எதிராக செயல்படும் இந்தியாவுடன் அமெரிக்கா என்றென்றும் துணை நிற்கும். இதில் இந்தியாவிற்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் அளிக்க அமெரிக்கா தயாராகவுள்ளது” என ஒப்புவித்தார்.

வீரப்பனின் சகாக்கள் எனக் கருதப்பட்டவர்களுக்கு தூக்குத் தண்டனை

தேர்தல்நெருங்கும் வேளையில் நெருக்கடிகளைச் எதிர்கொள்ள முடியாத இந்திய அரசும் ஆளும் வர்க்கமும் கொலைகளூடாகத் தம்மைப் புனிதப்படுத்திக்கொள்கிறது. அப்சல் குரு என்ற அப்பாவியைத் தூக்கிலிட்டுக் கொலைசெய்தமை அறிந்ததே. அதன் பின்னதாக வீரப்பன் சகாக்கள் எனக் கருதப்பட்ட சிலரை தூக்கில் போடுவதாக இந்திய அரசு அறிவித்துள்ளது. ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட இந்த நால்வரின் தண்டனையையும் தூக்குத் தண்டனையாக மாற்றி கொலைசெய்ய நாள்குறித்துள்ளது இந்திய அரசு.
சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த தமிழக,கர்நாடக எல்லைப்பகுதியான பாலாறு அருகே கடந்த 1993ம் ஆண்டு ஏப்ரல் 9ம் தேதி போலீசார் வீரப்பன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நடந்த கண்ணி வெடி தாக்குதலில் போலீசார், வனத்துறையினர் உள்பட மொத்தம் 22 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இந்த வழக்கில் 127 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கர்நாடக மாநிலம் மைசூர் தடா கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது. இதில் குற்றமற்றவர்கள் என 108 பேர் விடுதலை செய்யப்பட்டனர். குண்டு வெடிப்பு சம்பவத்தில் முக்கிய குற்றவாளிகளாகக்கருதப்பட்ட வீரப்பன் கூட்டாளிகள் ஞானபிரகாசம், சைமன், பிலவேந்திரன், மீசை மாதையன் ஆகிய 4 பேருக்கும் மைசூர் தடா நீதிமன்றம் ஆயுள் தண்டனை மேல் முறையீடு செய்யப்பட்ட நிலையில் இவர்கள் நால்வருக்கும் விதித்த ஆயுள் தண்டனை செல்லும் என கர்நாடக உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்தது.
இதையடுத்து இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டு விசாரணைக்கு வந்த போது, வீரப்பன் கூட்டாளிகளுக்கு ஆயுள் தண் டனை விதித்தது குறைவானது என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். மேலும் இந்த நான்கு பேருக்கும் கடந்த 2004ம் ஆண்டு ஜனவரி 29ம் தேதி ஆயுள் தண்டனையை தூக்கு தண்டனையாக மாற்றி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதையடுத்து நான்கு பேரும் குடியரசுத் தலைவரிடம் கருணை மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் கடந்த 9 ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வந்தன. இந்நிலையில், இந்த நான்கு பேரின் கருணை மனுக்களையும் ஜனாதிபதி நிராகரித்தார். இதையடுத்து இந்த நான்கு பேரின் தூக்கு தண்டனையும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நான்கு பேரும் தற்போது கர்நாடக மாநிலம் பெல் காம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கர்நாடகா சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி ககன்தீப் கூறுகையில், ‘கருணை மனு நிராகரிக்கப்பட்ட 4 பேருக்கும் இன்னும் 14 நாட்களில் தண்டனை நிறைவேற்றப்படும். எந்த தேதியில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என்பதை மாஜிஸ்திரேட் முடிவு செய்வார்,‘ என்று தெரிவித்தார். இவர்கள் நான்கு பேரும் பெல்காம் சிறையிலேயே தூக்கிலிடப்படுவார்கள் என்று தெரிகிறது. அப்படி தூக்கிலிடப்பட்டால் 21 ஆண்டுகளுக்குப் பிறகு பெல்காம் சிறையில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட உள்ளதாக சிறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.