முகங்கள் – முகமூடிகள் – இலக்கிய சந்திப்பு: துடைப்பான்

ஞானம்(எம்.ஆர்.ஸ்டாலின்)-பிள்ளையான்
gp

வன்னியில் மனிதக் கொலைகளின் அகோரம் தந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் முற்றாக விடுபட்டிராத ஜுலை 2009 இல் வெளியான கட்டுரை. காலத்தின் அழுத்தத்தால் மீள் பதிவிடுகிறோம்.

Published on: Jul 5, 2009 @ 17:00

சில நாட்களுக்கு முன் என் நண்பர் ஒருவர், மிகவும் என்னோடு குறைபட்டுக் கொண்டார். இம் முறை நடந்த இலக்கிய சந்திப்புக்கு நான் வரவில்லையென்றும் , எதிர்பார்த்த எவருமே சமூகம் தரவில்லையெனவும் கவலைப்பட்டார். நண்பருக்கு  அவரின் கவலை நியாயமாக இருக்கலாம். எமக்கு? என்ன செய்வது ?

நண்பரிடம் கேட்டேன்; நான் மற்றும் நீங்கள் எதிர் பார்த்தவர்கள் இலக்கிய சந்திப்பை நிராகரித்ததிற்கு என்ன காரணமாக இருக்கும்?  யோசித்துப்பார்த்தீர்களா என்றேன்.  இனியாவது வீட்டிற்கு சென்று ‘நிதானமாக’ இருக்கும் நிலையில் யோசியுங்கள் எனக் கூறினேன்.

90 களில், புகலிட இலக்கிய அரசியல் களம், ஒரு  தேடலை நோக்கிய ஆரோக்கியமான ,அனைத்து வகைப்பட்ட சிந்தனைப்போக்குகளிலும், ஆர்வமும் விமர்சன ரீதியான கருத்தாடல்களும் கொண்ட சூழலை தோற்றுவித்திருந்தது.  தமிழ்தேசிய விடுதலை இயக்கங்களில் ஏற்பட்ட பல்வகைப்பட்ட முரண்பாடுகள் , தோல்விகள் , விழ்ச்சிகள்  , புலம்பெயர்ந்த நண்பர்களை இவற்றிற்கான காரணங்களை நோக்கிய தேடலாக , விமர்சன ஆய்வுகளாக  ,தங்களுடைய சுயவிமர்சனங்களாக வெளிக்காட்ட இக் களங்களை இவ் வெளிகளை பயன்படுத்திக் கொள்ளும் வண்ணம் அமையப்பெற்றிருந்தது

இக்காலம்  பல்வேறு சிறு சஞ்சிகைகளை , சந்திப்புக்களை , விவாத கருத்தாடல்களை உருவாக்கின.  குறிப்பாக சுவீஸ் நண்பர்களின் மனிதம் குழு , கனடா நண்பர்களின் தேடகம் முதலானவற்றின் செயல்பாடுகள் அர்த்தம் கொண்டதாக அமைந்திருந்தது. வன்முறைகளுக்கு எதிரான அவர்களின் மனோபாவம் , ஜனநாயக அக்கறை , மனித விழுமியங்கள் மீதான நேசிப்பு , இவற்றை நண்பர்கள் வாழ்விலும் செயலிலும் நேர்மையாக உண்மையாக தொடரவேண்டும் என்ற போராட்ட முனைப்பு , நண்பர்கள் மத்தியில் ஊக்கம் மிக்கதாக அமைந்திருந்தது.

தாயகத்தில் அனைத்து தரப்பினராலும் மறுக்கப்பட்ட கருத்துச் சுதந்திரங்களை மீட்க்கும் அவா எழுத்துக்களிலும் ,பேச்சுகளிலும் வெளிப்பட்டன. இயல்பாகவே நண்பர்கள் ஒடுக்கப்ட்ட மக்களின் அரசியல் , பொருளாதார , சமூக விடுதலை நோக்கிய பார்வை கொண்டவர்களாக இருந்தார்கள்.

இக் காலங்களில் தோழர் பரா போன்ற சமூக அக்கறையாளர்களினால் முன் முயற்சினால் தொடரப்பட்டுக்கொண்டிருந்த இலக்கிய சந்திப்புக்களில் இவ்வகைப்பட்ட  நண்பர்களின் தோழர்களின் பிரசன்னம் இயல்பாய் அமைந்திருந்தது. ஆரோக்கிமான கருத்தாடல்கள்  நடந்தன.

இக்காலங்களில் புகலிடச் சூழலில் குறிப்பாக ஐரோப்பாவில் குறைந்தது 25 சிறு சஞ்சிகைகளாவது வந்திருக்குமென நினைக்கிறேன். இலக்கிய சந்திப்பு மக்கள் மீதான அனைத்து வன்முறைகளையும் எதிர்த்தியங்கும் மாற்று தளமாக செயல்பட்டது. எனினும் இவ் இலக்கிய சந்திப்புக்குள் திரைமறைவில் கண்ணுத்தெரியாமல் ஒரு அதிகார போட்டியும் , ஆளுமையை யார் செலுத்துவதென்ற பனிப்போரும் இடம்பெற்றுக்கொண்டிருந்தன. இவற்றின் சூத்திர தாரிகளாக ‘வெறும் இலக்கியவாதிகளாக’  புகலிடத்தில் அந்நேரத்தில் ‘அனைத்து செளபாக்கியங்களுடனும்’ வாழ்வை வளம்படுத்திக்கொண்டிருந்த ஒரு சிலர் இருந்தனர். இவர்கள் சமூக அக்கறை அற்று தங்கள் பிழைப்புவாத வாழ்வுக்காக எந்த சரணாகதியையும் யாருடனும் செய்யத்தயாரானவர்களாக இருந்தார்கள். இயல்பாக இடதுசாரி எதிர்ப்பாளர்களாகவும் இவர்கள் இருந்தனர்.

காலம் செல்லச் செல்ல இவர்களின் ஆளுமை அதிகரிக்க

EPDP அமைப்பாளர் ராமமூர்த்தி,  ராகவன்
rag

ஆரோக்கியமான கருத்தாடல்கள், விவாதங்கள் குன்றிப்போய் தனிநபர் விவாதங்களாக குறுகத் தொடங்கியது. வெறுப்புற்ற பல நண்பர்களும் , தோழர்களும் இலக்கிய சந்திப்பைவிட்டு ஒதுங்கத் தொடங்கினர். எனினும் சமுக அக்கறை கொண்ட தோழர்கள் பரா  ,கலைச்செல்வன்  ,புஸ்பராஐh போன்றவர்கள் இந்த பிழைப்புவாத நபர்களோடு மல்லுக்கட்டி , மல்லுக்கட்டி இலக்கிய சந்திப்பை தொடர்ந்த வண்ணம் இருந்தனர். மாற்றுக்கருத்துக்கான உரையாடல்களுக்கான தளமாக தக்கவைத்துக் கொள்வதில் மிகுந்த போராட்டத்தை எதிர்கொண்டனர்.

இவ் மூன்று தோழர்களின் அடுத்தடுத்த மரணங்கள் இவை தந்த வெற்றிடம் சுயநல சந்தர்ப்பவாத பிழைப்புவாதிகளுக்கு சாதகமாக அமைந்துவிட்டது. அதன் பின்னான இலக்கிய சந்திப்பு தனக்கான அடையாளங்களை முழுமையாக இழக்கத் தொடங்கியது. இதன் முடிவு வன்முறையாளர்களின், அரச ஆதரவாளர்களின் ,வன்முறை குழுக்களின் ஆராதிப்பாளர்களின் உறைவிடமாக   தொங்கி நிற்கிறது.

இன்று, இலக்கிய சந்திப்பு பரிதாபகரமான தன்  இறுதி நிலையை ஈபிடிபியின் பிள்ளையானின் அரச எடுபிடிகளின் சந்திப்பாய் மாற்றி தன் விழ்ச்சியை பறைசாற்றிக் கொண்டது.

மக்களின் மீதான அனைத்து வன்முறைகளையும் எதிர்க்கின்ற , ஜனநாயக விழுமியங்களை நேசிக்கின்ற ,மானிட உரிமைகளை கோருகின்ற நாங்கள் எங்கஙம் ஒடுக்குமுறையாளர்களோடும் , அவர்கள் பிரதி நிதிகளோடும் ஒன்றாய் அமர்ந்து மனிதநேயம் பற்றிப் பேசமுடியும். ?

கருணாவின் முன்னாள் கூட்டாளி இன்னாள் பிள்ளையானின் ஆலோசகன்   பிள்ளையானின் ரி.எம்.வி.பி யின் ஐரோப்பிய அமைப்பாளன் சின்னமாஸ்ரர் என்ற ஸ்ராலினின் அருகமர்ந்து மனித விழுமியங்கள் பற்றி மனித உரிமைகள் பற்றி ஜனநாயகம் பற்றி எவ்வாறு பேசுதல் முடியும். ?

திருகோணமலையிலும்  ,மட்டக்களப்பிலும் சின்னஞ்சிறு பாலகிகள் வர்ஸா , தினுஸா இருவரினதும் மீதும் செலுத்தப்பட்ட வன்முறைகளினதும்,  கொலைகளினதும் துயரம் தந்த ஈரம் மாறு முன்
பிள்ளையானின் ஆலோசகனோடு அருகிருந்து மனித நேயம் பற்றி  பேசும் கொடுமையை நாம் என்னவென்பது?

எவ்வாறு சித்திரவதைக்குள்ளானவர்களும், சித்திரவதையாளர்களும் ஒரே இடத்தில் அமர்ந்து

pousar

சமாதானம்பற்றியும் ஜனநாயகம் பற்றியும் பேச முடியும்? ஒடுக்குமுறையால் பிதீயூட்டப்பட்ட இலங்கையில், வெளிப்படையாக பேசுவது பற்றிய பயம் இன்றளவும் எங்கெங்கும் நிறைந்திருக்கும் தருணத்தில், ஒடுக்குமுறையாளர்களின் ஏகபிரதிநிதிகளோடு எவ்வாறு உண்மைகளை, மனித உரிமைகளை பேணமுடியும்?

இலக்கிய சந்திப்பில் ஏன் நான் கலந்கொள்ளவில்லை, ஏனைய நண்பர்கள் ,தோழர்களின் வருகையும் வெறுமையாகிவிட்டதே என்ற அந்த நண்பரின் ஆதங்கத்துக்கு இவை சமர்ப்பணங்கள்!

“புத்துணர்ச்சியும் புதுவேகமும்”:துடைப்பான்

thதுடைப்பானின் குறிப்புக்களை வாரா வாரம் எழுதவே திட்டமிட்டிருந்தேன். இன்றைய இலங்கை -புகலிட அரசியல் நிகழ்வுகள் என்னை மிகவும் சோர்வடையச் செய்வதாக இருக்கிறது. நினைக்கின்றவற்றை எழுத நினைப்பதன் ஊடாக எந்தவித சமூக பிரதிபலன்களும் என் எழுத்தால் ஏற்படப்போதில்லை என்ற யதார்த்தமான அறைதல் என்னை பலவீனப்படுத்தகின்றது. எனினும் நான் சமீபத்தில் எழுத நினைத்தவிடயத்தை நண்பர் சிறீரங்கனின் கட்டுரை விரிவாகப்பேசியுள்ளது. என்னைவிட மிகவும் அரசியல் மயப்பட்ட கண்ணோட்டத்தில் பிரச்சனையை சிறீரங்கன் அனுகியுள்ளார். அதனை இங்கு நான் பதிவிட்டுள்ளேன்.
 
புலிகளின் தோல்விக்குப்பின் சமீப காலங்களாக புகலிடத்தில் தங்களை ‘புத்திசீவிகளாக’ அடையாளம் இட்டுக்கொள்ளும் நபர்கள் மத்தியில் “புத்துணர்ச்சியும் புதுவேகமும்” பரவியுள்ளதை அவதானிக்க முடிகின்றது. அனைத்தும் மகிந்த ராஜபக்சாவின் ஆசீர்வாதங்களும் நன்கொடைகளும்தான். மகிந்தாவின் சிந்தனையின் பின் அணிசென்று இலங்கை தமிழ் பேசும் மக்களின் துயர்துடைக்க கிளம்பியுள்ளதாக ‘கதை சொல்லும’ இந்த முன்னைநாள் என் நண்பர்கள் இந்த அணிகட்டல்களுக்கூடாக அந்த மக்களுக்கு குறைந்தபட்ச உயிர்வாழ்வதற்கான ஜனநாயகத்தை பெற்றுக்கொடுப்பார்களானால் நான் மிகவும் சந்தோசம் கொள்வேன்.
 
இனி நண்பர் சிறீரங்கனின் கட்டுரையை படியுங்கள்.

புலம்பெயர் வாழிலங்கையர்கள் சந்திப்பு
“இலங்கையர்கள்”

   
“ஈழப்போருக்கு”பின்னான இலங்கையில்,பெரும்பகுதி உழைக்கும் மக்கள்,இன அடையாளப்படுத்தப்பட்ட அரசியலில்,சிறுபான்மையாகவும் பெரும்பான்மையாகவும் பிளவுபட்டுக்கிடக்கும் இன்றைய சூழலில்,இலங்கையில் சிறுபான்மை இனங்களே கிடையாதென்றும்,”நாம் அனைவரும் இலங்கையர்களே”என்றும், மகிந்தாவிடும் குரலில் மாறிவரும் பொருளாதாரச் சூழலில் இலங்கையை முற்றுகையிடும் அந்நியப் பொருளாதார ஆர்வங்கள் இருக்கக் காணக்கடவது.இவை, இன்றைய ஆசிய மூலதனத்தோடான உறவில் பின்னிப்பிணைந்து இலங்கையிலுள்ள இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளைத் தமது இலக்குக்கேற்பச் சொல்லுகின்றன.
 
“புலம்பெயர்வாழிலங்கையர்கள்”சந்திப்பு:
 
அன்று, காலனித்துவக் காலக்கட்டத்தில்-இலங்கையின் சமூக வளர்ச்சிக்காலக் கட்டத்தை மறுத்து, முரண்பாடுகளை மழுங்கடித்த காலனித்துவம்,இலங்கையில் தீடீர் முதலாளித்துவத்தைத் தோற்றுவித்து அதையே அரச முதலாளியமாக விட்டுவைத்துச் சென்றது.அதன் மீள் வருகையில் நவ காலனித்துவம் தொடர்ந்து இருப்புக்குள்ளாகியது.இதுவே,இப்போதும் இலங்கையின் பொருளாதார முரண்பாடுகளால் வளர்வுறும் சமூக வளர்ச்சிப்பாதையில் இனங்கள் உதிர்ந்து”இலங்கையர்கள்”எனும் கோசம் வலுப்பெறுவதற்கு முன்பே சமூக வளர்சியை மறுத்தபடி, அதன் இயல்பான வளர்ச்சிக்குக் குறுக்கே நின்றகொண்டும், திடீர்”இலங்கையர்கள்”எனும் தேசிய இன அடையாளத்தை, முழுமொத்த இலங்கை வாழ் இனக் குழுமத்துக்கும் பொருத்திவைத்துத் தமது நிதியாதாரத்தை இலங்கையில் பெருக்கும் பெரு முயற்சியில் மகிந்தாவினது குரலாக அனைவருக்குமான இலங்கை என்கிறது.இது சிங்கள ஆளும் வர்க்கத்துக்கு மிகச் சாதகமான குறுகிய இலாபங்களை வழங்கிக்கொள்வதால் இலங்கையில் வாழும் சிறுபான்மை இனங்களை ஒட்ட மொட்டையடித்து அவ்வினங்களைப் பெரும்பான்மைச் சிங்கள ஆதிக்கத்துள் உள்வாங்கி அழிப்பதற்கு மிக நேர்த்தியான சூழலை உருவாக்குகிறது.
 
உலக ஏகாதிபத்தியங்கள் தமது பொருளாதார மற்றும் புவிகோள அரசியல் ஆதாயங்களுக்காகப் பொது அமைப்புகள் எனும் வடிவில் “அரசுசாரா”அமைப்புகளை உருவாக்கி வைத்து அவற்றை இயக்குவதுபோன்று, இன்றைய இலங்கை புலிகள் அழிப்புக்குப் பின் இலங்கைத் தேசத்தில் சிறுபான்மை இனங்களை ஒட்ட மொட்டையடிக்க இத்தகைய “அரசுசாரா”அமைப்புகளைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்து இயக்கத் தக்கபடி உள்ளுர் அமைப்புகளைத் தோற்றுகிறது.இது மிகவும் ஆபத்தானவொரு மேற்குலக ஏகாதிபத்தியங்களின் அரசியல் வியூகத்தின் தொடர்ச்சியாக நம்முன் கொணரப்படுகிறது.இங்கே,இலங்கை அரசானது தனது அரசியல் நிகழ்ச்சி நிரலை மையப்படுத்தபட்ட இலக்குக்கமைய முன்நகர்த்துவதற்கு இத்தகைய அமைப்புளது ஒத்துழைப்புகளுடாகப் பொதுக் கருத்தை ஏற்படுத்தி, அதையே மக்களுக்கு நன்மை பயப்பதாகவும் இவ்வமைப்புகளுடாகச் சொல்கிறது. இன்று, புலம் பெயர்ந்து மேற்குலகில் வாழும் தமிழ் மக்கள் மத்தியில் இலங்கை அரசுக்குச் சார்பான அரசியலை முன்தள்ளும்-முன்னெடுக்கும் இக் குழுக்கள், பல்வேறு வடிவங்களில் தமது முகமூடியைத் தயார்ப்படுத்தி வைத்திருக்கிறது.இதுள் தலித்துக்களுக்காகக் குரல் கொடுக்கும் அமைப்புகளாகவிருந்தாலுஞ்சரி அல்லது வன்னி மக்களுக்கு உதவும் அமைப்புகளாகவிருந்தாலுஞ்சரி இவையாவும் இலங்கை அரசினது இன்றை இனவழிப்பு அரசியல் வியூகத்துக்கு வலுச் சேர்ப்பதற்கான கூறுகளாகவே இனம் காணத்தக்கன.

THUUUUUUUU

 

 

 

 

 

“புலம்பெயர் வாழ் இலங்கையரின் ஒன்றுகூடல்” என்பதுகூட ஒரு கோணற்றனமான வாசகம்தாம்.புலம்பெயர் என்பது ஒரு நாடோ அல்லது தேசங்களையோ குறிப்பிட முடியுமா?அதற்குள் வாழவும் முடிகிறது?
 
தமிழர்கள் புலம் பெயர்ந்து வாழும் தேசங்களில் இத்தகைய தலைப்புகளில் நடாத்தும் “இலங்கையர்கள்”என்ன சொல்ல வருகிறார்கள் என்பது மிக அவசியமாக இனங்காணத்தக்கது!
 
இலங்கையைவிட்டுப் புலம்பெயர்ந்து மேற்குலகில் வாழும் இலங்கையர்களுக்குள் பற்பல கூறுகள்,பிளவுகள் இருக்கும்போது”இலங்கையர்கள்”எனும் பொது அடையாளம் அவசியமாக இருக்கிறதென்றால் பிறகெதற்குத்”தலித்துவ அடையாளம்”,பிரதேச அடையாளம்,மதஞ்சார்ந்த குழும அடையாளம்?கலாச்சாரத் தேசியம் பேசுபவர்கள் எதற்காக”இலங்கையர்கள்” எனும் அடையாளத்துக்குள் ஒரு இனத்தின் தனித்துவத்தையும்,உரிமையையும் மறைப்பது?தமிழ்த் தேசிய இன அடையாளத்தை மறுபவர்கள் பின்பு தலித்துவ அடையாளத்தை எதற்காகத் தூக்கிப்பிடிப்பது?-மலையகத் தேசியத்தையும்,இஸ்லாமியத் தேசியத்தையும் பற்றிப் பேசுவது?ஒடுக்குமுறைகள் யாவும் ஒடுக்குமுறைகளாகவே இருக்கும்போது அதில் ஒரு கூறை முறைத்துவிட்டு மறுகூறைத் தூக்கிப்பிடித்து எந்தவுரிமையையும் பெற்றுவிட முடியாது.இத்தகைய நடாத்தையானது சிங்கள ஆளும் வர்க்கத்தினது கனவை நிறைவேற்றும் கயமைக்குப் பலியான அரசியல் வாழ்வாகும்.
 
இலங்கையர்களுக்கு இலங்கைத் தேசியம் என்ற அடையாளந்தாம் இருக்கமுடியும்.இதன் அடிப்படையில்தாம் சிங்கள இனவெறி அரசானது தமிழர்கள் என்பதற்காக அனைவரையும் இனவொடுக்குமுறைக்குள் உட்படுத்தியது.அங்கே, தலித்தோ அல்லது பிரதேசப் பிரஜைகளோ முதற்தெரிகளாகவும்-சிறப்பாகவும் பார்க்கப்படவில்லை.எனினும்,இந்தச் செயற்கையான”இலங்கையர்கள்”எனும் அடையாளத்துக்கூடாக இயங்கும் அரசியலை முன்னெடுக்கும் இந்த ஓடுகாலிக் கூட்டங்கள் இலங்கை அரசினது கைக்கூலிகளானவர்கள் என்பதை நாம் புரிந்தாகவேண்டும்.இவர்களுக்கு முகமூடி தயாரித்து,வால்கட்டி இயக்கும் இலங்கையின் இன்றைய தெரிவுக்கு உலக ஏகாதிபத்தியங்களது அதே பிழைப்புவாத அரச தந்திரமே வழிகாட்டுகிறது.உலக நாணய நிதியத்திடம் வட்டிக்குக் கடனைப்பெற்று, இத்தகைய அமைப்புகளையும் வளர்த்து இதன் பக்கத்துணையோடு இலங்கையின் இனங்களுக்கிடையிலான முரண்பாட்டைத் திசை திருப்பித் தமது அதிகாரத்தைத் தொடர்ந்து பேணும் இலங்கைச் சிங்கள ஆளும்வர்க்கமானது மிகவும் அபாயகரமான அரசியல் சூழ்ச்சியல் சிறுபான்மை இனங்களை வீழ்த்தி வேட்டையாடுகிறது.
   
2

தினமும் வறுமையோடும் வேலைப் பளுவோடும் ஜந்திரமாக வேலைவேண்டிப் பாவிக்கப்படும் ஒரு கருவியாகவே உலகத்தில் உழைக்கும் மனிதரை இன்றைய பொருளாதார அமைப்பு-உலக ஏகாதிபத்தியத் தொழிலகங்கள் உருவாக்கி வைத்து அடிமையாக்கியுள்ளது.இது ஒருவகையில் மறைமுகமான அடிமையுடமைச் சமுதாயமாகவே இருக்கிறது.இந்தச் சமுதாயத்தில் உலக நாணய நிதியம்-உலக வங்கிகள் யாவும் இவ்வடிமைச் சமுதாயத்தைத் தொடர்ந்து இருத்தி வைக்கும் மேற்காணும் தொழிற்கழகங்களது எடுபிடிகளாகவே இருக்கின்றபோது,அரேபிய எண்ணை வயல்களைத் தமது குடும்பச் சொத்தாக்கிய அரேபிய நிலப்பிரபுக்களின் பதுக்கற் பணமோ”எண்ணை டொலர்களாக”இவ் நாணய நிதியத்திடமும்,உலக வங்கியிடம் முடங்கிக்கிடக்க, இதன் ஆதிக்கம் மேற்குலகப் பொருளாதார நலன்களைச் சுற்றிய வியூகமாக விரிகிறது.
 
இலங்கையினது மக்கள்கூட்டம்,இலங்கைப் பாசிச அரச ஜந்திரத்துக்குள் தொடர்ந்து மாட்டப்பட்டிருப்பதற்காக வழங்கப்படும் கடன் நிதிகள் திட்டமிடப்பட்ட இனவழிப்புக்கும் அதுசார்ந்த முரண்பாடுகளுக்கும் பாவிக்கப்படும்போது குடிசார் உரிமைகளைக் குழிதோண்டிப் புதைக்கும் ஒரு அரசாகவே இலங்கை தொடர்ந்திருக்கும்.இனங்களுக்கிடையிலான முரண்பாட்டை வெறும் பயங்கரவாதமாகக் காட்டும் சிங்கள ஆளும் வர்க்கத்து அபாயகரமான அரசியலின் விளைவால்,அவை கொண்டுள்ள பொருளாதார ஆதிக்கமானது இனங்களுக்கிடையிலான முதலாளித்துவ வளர்ச்சியை மட்டுப்படுத்தி இலங்கையை மேலும் உரிமைகளற்ற தேசமாகவே சிறுபான்மை இனங்களுக்கு விட்டுவைக்கும்.இதனால், தமிழ்,முஸ்லீம் மற்றும் மலையகத் தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலமானது தத் தமது அரசியல்-பொருளியல் அபிலாசைகளோடு தனித்துவமான தேசிய முன்மொழிவுகளைக் கோரிக் கொண்டே இருக்கப் போகிறது.
 
இந்த முன் மொழிவுகள் இனத்துவ அடையாளத்தை மையப்படுத்திய பேரெழிச்சியாக மாறுந் தறுவாயில் இலங்கையில் பிரிவினை அரசியல் நிலவரம் செறிவேற்றப்படுகிறது.இந்தச் செறிவேற்றலைச் செய்து முடிக்கும் இனவொடுக்குமுறையானது அப்பாவி மக்களை அழித்துத் துவசம் செய்யும்போது அங்கே அவர்களின் அத்துமீறிய வன்முறைகளைக் கோரி நிற்கிறது.இது தனக்கேற்படும் அழிவுகளுக்கான அத்துமீறிய எதிர்ப்புப் போராட்டமாக விரியும்.இந்த எதிர்ப்பு வன்முறையாக விரிந்து ஆயுதத்தை ஏந்தும்போது அங்கே மீளவும் பிரபாகரன்கள் உருவாவது தவிர்க்க முடியாத வினையாகிறது.இதைக் குறித்தான அரசியலை மையப்படுத்துகிற சிங்கள ஆளும்வர்கத்தின் தெரிவானது இலங்கையைப் புரட்சிகரச் சக்திகள் அரசியல்ரீதியாகக் கைப்பற்றதாவொரு சூழலை நோக்கியதாகும்.
 
இலங்கைத் தேசத்தின் பாரிய பின்னடைவாக தமிழ்த் தேசிய இனத்தைக் கணித்திருக்கும் சிங்கள ஆளும் வர்க்கத்தின் பொருளாதார அறிவானது அந்நிய சக்திகளிடம் கண்டுண்டு கிடக்கும் தமது இழிநிலையை உதாசீனப்படுத்தப்படுகிறது.இன முரண்பாட்டைத் தொடர்ந்து யுத்தங்களால் கூர்மைப்படுத்தி இனச் சுத்திகரிப்பை மெல்ல செய்த இந்த ஆளும் வர்க்கமானது, இலங்கையின் இறைமையை எப்போதோ அந்நிய எஜமானர்களுக்குத் தாரைவார்த்துக் கொடுத்துவிட்டது.இதுதாம் இன்றைய அனைத்து முரண்பாட்டையும் சிக்கலுக்குள் மாட்டி மேற்குலக நிதி ஆளுமையுடைய நாடுகளால் தமிழ்பேசும் மக்களுக்கு விடிவு வரும் என்பதாகவும் இன்னொரு பொய்மையை அவிழ்த்துவிட்டுத் தப்பிக்கிறது.
 
தென்கிழக்காசியாவில் பேரளவில் தன்னிறைவானவொரு அரசாக இலங்கை மிளிரக்கூடிய அரிய வாய்ப்புகளை-வளங்களை இலங்கை கொண்டுள்ளது.அதன் சனத்தொகையும் வளமும் இதை மெல்லச் சாத்தியப் படுத்தியிருக்கும்.எனினும் அடாப்பிடியான இனவொடுக்குமுறையைக் கடைப்பிடிக்கும் சிங்கள ஆளும் வர்கத்தை உசுப்பிவிடும் இந்திய-அமெரிக்க மற்றும் ஐரோப்பிய அரசியல் நலன்கள் இலங்கையைப் படுகுழியில் தள்ளி அதன் வலுவான வளர்ச்சியை,தேசியவொருமைப்பாட்டைத் தொடர்ந்து உடைத்தெறிந்து,இனப்படுகொலையைச் சமீபம்வரை நடாத்தியது.இந்த நிலையில்,மேலும் சர்வதேச நாணய நிதியமும் மற்றும் உலக வங்கியும் அதன் எஜமானர்களும் நமது மக்களுக்கும்,அவர்களது விடிவுக்கும் தார்மீக ரீதிய உதவுவதாகக் கருத்துக்கட்டும் சந்தர்ப்பாவதமானது இலங்கைச் சிறுபான்மை இனங்களை ஏமாற்றுஞ் சதி நிறைந்தது.
 
 
இவ்வண்ணமேதாம் இன்றைக்குப் புலம் பெயர்ந்து மேற்குலகில் வாழும் மக்களுக்குள் உருவாக்கப்படும் திடீர் அமைப்புகள்-குழுக்கள் யாவும் இத்தகைய அந்நியச் சக்திகளுக்குச் சோரம்போன இலங்கைச் சிங்கள ஆளும் வர்க்கத்தின் கைக்கூலிகள்.இவர்கள் சிங்கள அரசினது பாசிச அரசியலைக் கேள்விக்குட்படுத்தாமல்-இனவழிப்பை இனங் காட்டாமல்-தமிழ்தேசிய இனத்துக்கு எதிராகச் செயற்படுத்தப்படும் திட்டமிடப்பட்ட சிங்களக் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தாமல், வன்னியில் வதங்கும் மக்களுக்கு உதவுவதற்காவும்,தலித்துக்களின் விடிவுக்காகக் குரல் கொடுப்பதென்பதும் வடிகட்டிய அயோக்கியத்தனத்தின் அரசியலே.
 
 
இத்தகைய குழுக்கள் யாவும்”பொதுவமைப்புகள்-அரசுசாரத் தன்னார்வ அமைப்புகள்”எனும் போர்வையில் இலங்கைச் சிங்கள ஆளும் வர்க்கத்தினது எடுபிடி அமைப்புகள்-கட்சிகள் என்பது உண்மை.இதை, நாம் இனங்கண்டாக வேண்டும்.இலங்கையில் புரட்சிகரமான அரசியலை முன்னெடுப்பதற்கான முட்டுகட்டைகளில் முதன்மையான தடைக்கற்கள் இத்தகைய கைக்கூலிக் குழுக்கள் என்பதை முதலில் வரையறுக்க வேண்டும்.
 
 
ப.வி.ஸ்ரீரங்கன்
02.08.09
http://srisagajan.blogspot.com/2009/08/blog-post.html

நண்பர்காள், நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?: துடைப்பான்

 

டேவிட் ஐயா
im1

சுமார் 30 வருடகால இலங்கை தேசிய இனப்பிரச்சினையின் ஆயுதப்போராட்டம், அது சுட்டி நின்ற நியாயமான காரணங்கள், புலிகளின் அழிவோடு முடிவுக்குவந்துவிட்டதாகவும், எனவே இனிமேல் இலங்கை அரசோடு ஒட்டி உறவாடி அது தருகின்ற, அல்லது இன்னறய வாழ்வோடு இரண்டறக்கலந்து வாழ்தலே ‘சுபீட்சமானது’ எனக்கருதும் ஒரு சாரார்.

இல்லை, இல்லை தொடர்ந்து புலிகளின் பாணியில் செல்லுதல், ‘தமிழ் ஈழக்’ கனவு சுமந்து மக்களை இன்னும் மந்தைகளாக இட்டுச் செல்லுதல் என்ற இரண்டாம் நிலைச்சாரார்.

மேற்கண்ட இருநிலைச் சாரார்கள் மத்தியில் செயல்படுகின்ற, மூன்றாம் நிலைச்சாரார்கள் என குறிப்பிடப்படும் ஒரு பகுதியினரின் மனநிலையோட்டம் என்னவாக உள்ளது?.

மூன்றாம் நிலைக்ச்சாரார்கள், இரண்டு நிலைக்ச்சாரார்களின் அரசியல் சித்தாந்த நடைமுறைகளோடு முரண்கொண்டவர்கள். ஒடுக்கப்பட்ட தமிழ்பேசும் மக்களின் விடுதலை இன்னும் சாத்தியமாகவில்லை, எனவே வெவ்வேறு போராட்ட வடிவங்களினூடாக இவை முன்னெடுத்து வளர்க்கப்படவேண்டுமென கருதுபவர்கள்.

இவர்கள் மூன்று நிலைகொண்டவர்கள்.

1.தமிழ்ஈழம் சாத்தியமானது. புலிகளின் இராணுவ மயப்பட்ட im2அரசிலைத் தவிர்த்து ஜனநாயக வழிப்பட்ட அரசியல் அமைப்பொன்றின் ஊடாக ஆயுதப்போராட்டத்தை முன் எடுத்தல். இவர்கள் ஆயுதப்போராட்டமே இறுதிவடிவமென கருதுபவர்கள்.

2. ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு காணல். ஒடுக்கப்பட்ட தமிழ் , im3சிங்கள ,முஸ்லீம், மலையக மக்களோடு கைகோர்த்து ஒன்றிணைதல். ஆயுதப்போராட்டத்தில் நம்பிக்கை வைத்தல். இலங்கை அரசுக்கு எதிரான அரசியல் கிளாச்சியை ஆயுதப்போராட்டத்தை முன்னெடுத்தல்.

3. ஒனறுபட்ட இலங்கைக்குள் தீர்வு காணல். தமிழ் ,சிங்கள ,முஸ்லீம் ,மலையக மக்கள் மத்தியிலும் சர்வதேச ரீதியிலும் ஜனநாயகப்போராட்டங்களை, மக்கள் எழுச்சிகளை, தாக்கங்களை ஏற்படுத்துதல். ஆயுதப்போராட்டத்தை நிராகரித்தல்.இலங்கை தழுவிய, அரசுக்கு எதிரான வெகுஜன அமைப்புக்களை உருவாக்குதல்.

சமீப நாட்களாக மேற்கண்ட மூன்று நிலை சிந்தனை கொண்ட ,செயற்பட ஆர்வம் கொண்டிருக்கும் பல நண்பர்கள், தோழர்கள் இவை பற்றி என்னோடு உரையாடுகின்றனர். இவற்றின்பால் என் சார்பு, செயற்பாட்டு நிலையை கோருகின்றனர். நானோ???

என் அரசியல் சமூக செயற்பாட்டுவாழ்வு 13வயதில் தொடங்கியது. என் தகப்பனாரும் என் அம்மாவும் அன்றைய தமிழரசுக் கட்சியின் தீவிர அபிமானிகளாக இருந்தனர். காலமும், im4நேரமும் ,பொருளாதாரமும் தமிழரசு கட்சிக்கே தாரைவார்க்கப்ட்டது. சத்தியாக்கிரகப் போராட்டத்தில் என் தகப்பனும் அம்மாவும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்தார்கள் என்பதிலிருந்தே இதனை புரிந்துகொள்ளமுடியும். என் அரசியல் சித்தாந்த ஈடுபாடு என் குடும்பத்தோடு முரண்பாடு கொண்டதாகவே அமையப்பெற்றிருந்தது.

சோவியத் ரசிய வெளியீடுகளோடும், நாவல்ளோடும், அப்போது வெளிவந்துகொண்டிருந்த சோவியத் செய்தி பத்திரிகையோடும் என்காலம் கடந்தது. இவற்றின் தீவிர வாசகனாக நான் இருந்தேன். நானும், என் வயதொத்த நண்பர்களும் ‘இளந்தளிர் வாசகர் வட்டம்’ எனும் அமைப்பினைத் தொடங்கி பல்வேறு அரசியல் கருத்தரங்குகளையும், மாணவர் கல்வி சம்பந்தமான இலவச வகுப்புக்களையும், கிராமத்தில் சமூக செயல்பாடுகளையும் முன் எடுத்தோம். அன்றைய காலத்தில் என் கிராமத்தில் என் நண்பர்கள் குழாம் ஊரில் முன் மாதிரியாக காட்டப்பட்டோம். வார்த்தைக்கும் ,வாழ்க்கைக்கும் ,செயலுக்குமான நெருக்கமான உறவை நாம் பேணுவதில் கண்டிப்பாய் இருந்தோம். வெற்றியும் பெற்றோம்.

எமது ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான நேசிப்பும் ,விடுதலை ஆர்வமும், மாக்ஸியமே அனைத்துவிடுதலைக்குமான தீர்வு என்ற திடமான நம்பிக்கையும், எங்கள் நண்பர்கள் குழாத்தை ஜனதா விமுத்தி பேரமுன என்ற JVPயிடம் கொண்டுசென்றது. இலங்கையின் வர்க்கப்போராட்டமே தமிழ் பேசும் மக்களுக்கான ஒரே தீர்வு என்று JVP சொன்னது. அவர்கள் வார்த்தைகளை நம்பினோம். எமது நண்பர் குழாம் JVP யோடு சங்கமாயிற்று. சுமார் இரண்டு வருடங்கள் இவர்களோடு தீவிரமாக செயல்பட்டோம். பாசறைகளில் கலந்துகொண்டோம். காலம் முரண்பாட்டை தோற்றுவித்தது. அவர்களின் கோட்பாட்டிற்கும் ,செயற்பாட்டிற்கும் இடையில் பாரிய இடைவெளியை கண்டோம். உட்கட்சி போராட்டங்களை நடாத்தினோம். இறுதியில் தோல்வி நிலையோடு வெளியே வந்தோம். எனினும் அவர்களோடு உறவு கொண்டிருந்த அக் காலங்கள், ஒரு சில நல்ல நட்புக்களை, மாக்ஸிய வழிப்பட்ட கல்வியை தேடல்களை வழங்கியிருந்தன.

மீண்டும் எமது “இளம்தளீர் வாசகர்வட்டத்தை” செயல்படுத்தத் தொடங்கினோம். 1980ம் ஆண்டு காந்திய அமைப்பின் தொடர்பு எங்களுக்கு கிடைத்தது. காந்திய வழிப்பட்ட சிந்தனைகள் மீது அப்போது எங்களுக்கு அவ்வளவு மரியாதை கிடையாது. எனினும் டேவிட் ஐயாவின் வழிகாட்டலில் செயல்பட்ட காந்திய அமைப்பினரின் செயல்பாடுகளும், வேலைத் திட்டங்களும், மலையக மக்கள் மீது குறிப்பாக அவர்களின் கல்வி, im6சமூக ,பொருளாதார மேம்பாடுகளில் கொண்டிருந்த அக்கறை எம்மை அதன்பால் ஈர்த்தது. அதனோடு இணைந்து செயல்படத் தொடங்கினோம். இங்கேதான் தமிழ் ஈழ மக்கள் விடுதலைக்கழகம் என்ற புளொட் அமைப்பின் தொடர்பு கிடைக்கப்பபெற்றது. அவர்களின் அரசியல் கலந்துரையாடல்கள், கருத்துப் பரிமாறல்கள், சந்திப்புக்கள் என தொடர்ந்தன. தமிழ் ஈழம், பிரிவினை என்ற அரசியல் வார்த்தைகளோடு உடன்பாடு அற்று இருந்த எம் நண்பர் குழாத்தை “தேசிய விடுதலைப் போராட்டத்தோடு வர்க்கப்போராட்டம்” என்ற புளொட்டின் போராட்ட சித்தாந்த வடிவம் எம்மை கவர்ந்து இழுத்தது.  . எம்மைத் தொடர்ந்து எமது ஏனைய நண்பர்களும் எம்வழி தொடரலானார்கள்.

இக்காலங்களில் நாங்கள் “இலங்கை தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின்” செயல்பாடுகளில், விளையாட்டு முகாம்களில் முக்கிய செயல்பாட்டாளர்களாக இருந்தோம். நிறைய தொடர்புகளையும், நட்புக்களையும் கிழக்கிலங்கை பூராகவும் பெற்றிருந்தோம். பெருவாரியான இந்த நண்பர்கள் எம் மீது நம்பிக்கைகொண்டு புளொட்டினுள் எம்மைத் தொடர்ந்தார்கள். நாங்கள் எல்லோரும் நம்பிக்கையோடு இருந்தோம். ஒடுக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் விடுதலை கிடைக்குமென நம்பினோம். எமது குடும்பம் ,எதிர்கால தனிப்பட்ட நலன்சார்ந்த வாழ்வு ,கல்வி ,அனைத்தையும் விடுதலையின் பால் கொண்ட நம்பிக்கையினால் தூக்கியெறிந்தோம். ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையே எமது வாழ்வு நெறி என பயணித்தோம்.

முடிவில், ஏமாற்றத்தின் விளிம்புநிலையில் கொண்டு விடப்பட்டோம்.

மீண்டும் புகலிடத்தில் நண்பர்களோடு அதேவகைப்பட்ட உரையாடல்கள்…. ! உரையாடல்கள்!! உரையாடல்கள்!!!

என்வாசக நண்பர்காள் நீங்கள் என்ன சொல்கிறீர்கள்

ஜனநாயகமும் நண்பர்களும்! : துடைப்பான்

p11 இன்றைய நாளில் பலராலும் பேசப்படுகின்ற மலினப்பட்ட சொல்லாடல்கள் எவையென நாம் நோக்கின் அவை ஜனநாயகம்,  மனித உரிமை ,மாற்றுக்கருத்து போன்ற வகைப்பட்டதாகவே அமைந்துள்ளது. குறிப்பாக எமது நண்பர்கள் குழாம் எனப்பட்டடோர் எழுதுகின்ற பேசுகின்ற ஜனநாயகம் மனித உரிமைகள் மாற்றுக்கருத்துக்கள் புதுப்புது வியாக்கியானங்களோடு எம்மை புல்லரிக்க வைத்துவிடுகின்றது.
 
 
புலிகளிலிருந்து கருணா என்ற முரளிதரன் பிரிந்த பின்னாலான காலத்திலிருந்தும் இன்று இலங்கை அரசினால் புலிகள் அழித்தொழிக்கப்பட்ட பின்னாலான காலத்திலும் புகலிடச் சூழலில் எமது ஜனநாயக  நண்பர்களிடம் ஏற்பட்ட ‘அதிகார ஆசை’  மேலான அதிக பட்ச காதலை,  மோகம் பற்றிய எம் அவதானிப்பை பெரியதொரு ஆய்வாகவே செய்ய முடியும்.  வேண்டாம் அதனை விட்டுத்தள்வோம்.
 
புலிகளிலிருந்து கருணா பிரிந்தவுடன் கருணா “இலங்கை ஜனநாயகக் குடியரசின்” தலைசிறந்த ஜனநாயக சக்தியாக, தமிழ்பேசும் மக்களின் அரசியல் காவலானாக, மனித உரிமைகாப்பாளனாக கிழக்கின் விடிவெள்ளியாக புகலிட ஜனநாயக நண்பர்களால் அடையாளம் காட்டப்பட்டார்.       அதுவரை காலமும் புலிகளின் அனைத்து அதிகாரங்களையும் தன்னகத்தே வைத்திருந்து, பிரபாகரனின் செல்லக் குழந்தையாய் இருந்து தமிழ் பிரதேசங்களில் கருணாவால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் மனித உரிமை மீறல்கள் அனைத்துவகை ஜனநாயக அழிப்புக்கள் அனைத்தும் மறக்கடிக்கப்பட்டு ஜனநாயக காவலனாக நண்பர்களால் முடிசூடப்பட்டார்.
 
அதிகார ஆசைகளை உள்ளொடுக்கி பதுக்கி வைத்திருந்த நண்பர்களின் ‘அதிகார ஆசை’ கருணாவின் பின்னால் சென்றடைய கருணாவின் பிரிவுக்கு தத்துவார்த்த காரணங்களை மெழுகிட வேண்டிய சூழ்நிலை நண்பர்களுக்கு  உருவாகிற்று. கிழக்கு அபிவிருத்தியோடு இரண்டறக்கலந்த கிழக்குவாதம் இவர்களுக்கு அருமையான அதி மருந்தாக அமைந்துவிட்டது. அதுவரை கிழக்கில் பாதிக்கப்பட்ட நலிவுற்ற மக்களின் பக்கம் எந்தப்பார்வையையும் கரிசனையையும் அற்றிருந்த இந்தக் கூட்டம் மக்கள் நலம் பற்றி புலம்பத் தொடங்கிற்று.
 
இக் காலங்களில் இப் புலம்பல்களின் பின்னால் நானும் சேர்ந்து ஓலமிடவேண்டுமென எமது p21நண்பாகள் குழாம் விரும்பிற்று.  கருணாவின் ஆதரவு நிலை நண்பர்கள் குழாத்தை தீவிர அரச ஆதரவு நிலைப்பாட்டை நோக்கி தள்ளியது. இவை அனைத்தையும் அங்கீகரிப்பாளனாக நான் மாறவேண்டுமென அப்பாவித்தனமாக நண்பர் குழாம் விரும்பியது .கூட்டத்தோடு கோவிந்தா போடுவதில் எந்தவித உடன்பாடற்றவனாக நான் இருந்தேன்.
 
இக் காலங்களில் கலை இலக்கிய அரசியல் தளங்களில் மிகுந்த செயல்பாட்டாளாகளாக நாமிருந்தோம்.  இலக்கிய சந்திப்பென்றும், நண்பர்கள் வட்டமென்றும் ,சமூக அசைவிற்கான எழுத்தியக்கம் என்றும் பல்வேறு தளங்களில் இயங்கிக்கொண்டிருந்தோம். 
 
பிரான்சின் நண்பர்கள் வட்டத்தின் சார்பில் வருடத்தில் சாராசரி எட்டு கருத்தரங்குகளை நடாத்தினோம். இதுவரை சுமார் தொண்ணூறு கலந்துரையாடல்கள் கருத்தரங்குகளை பிரான்சில் நடாத்தியுள்ளோம்.  இவ் அனைத்து உரையாடல்களிலும் பிரதான தொனியாக ஒலித்தவை, அதிகாரத்திற்கும் மக்கள் மீதான அனைத்து ஒடுக்குமுறைகளுக்கும் வன்முறைகளுக்கும் எதிரானவையாகவே அமைந்தவை. 
 
 இன்று எங்களால் பேசப்பட்ட, எழுதப்பட்ட ,நடாத்தப்பட்ட இவை அனைத்தும் p41கேலிக்குரியதாக்கப்பட்டு அதிகார மோகத்திற்காக அனைத்து ஒடுக்குமறையாளர்களினதும் தொங்கு தசைகளாக மாறிவிட்டது.
 
சமூகத்தில் நாம் பேசுகின்ற எழுதுகின்ற அக்கறைகளுக்கு ஏற்றவாறு வாழவேண்டுமென்ற கருத்தின் மீது மிகுந்த அக்கறைகொண்டவனாக நான் இருக்கிறேன். இந்த ஐரோப்பிய முதலாளித்துவ சூழலில் இவை மிகுந்த நெருக்கடி நிறைந்த சவாலான சூழல் எனினும் குறைந்த பட்சமாவது நம் அக்கறைக்குரிய சமூக விடயங்களில் நேர்மையும் உண்மையும் கொண்டு வாழ முயலுதல் வேண்டுமென்பதே என் அவாவாகின்றது. p3இவைகளின் முரண்பாடுகளே நண்பர்களைவிட ‘அ’  நண்பர்களை நான் கூடுதலாக உருவாக்கி கொள்கிறேன். நண்பர்கள் எதிரியாகும் இத் தருணங்கள் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையே கொடுக்கிறது. நாம் கோட்பாடு சார்ந்த வாழ்வியலில் உண்மையோடும் நேர்மையோடும் வாழ ஆயிரக்கணக்கான எதிரிகளோடு முரண்பாடு கொண்டு வாழ்வில் போராடுவதில் உள்ள மகிழ்ச்சி அளப்பெரியது என்பேன் நான்.

நாடுகடந்த அரசு – துர்க்கனவின் தொடக்கம்: துடைப்பான்

p1ராணுவ ரீதியில் விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்ட பின்னாலான வெளியில் புலிகளால் பல்வேறுவகைப்பட்ட சொல்லாடல்களுக்கூடாக புலிகளின் வேறு வேறு தரப்பினரால் வேறு வேறு அரசியல் பாதைகள் முன்னெடுக்கப்படுகின்றன. புகலிடத்தில் நாடுகடந்த நிலையிலான அரசு என்றும், வன்னி முகாம்களிலுள்ள மக்களைக் காப்பதற்கான போராட்டம் என்றும், பொப்ரேயை முன்வைத்து கனடிய அரசின் மரியாதையைக் காப்பதற்கான போராட்டம் என்றும் பல முனையிலான போராட்டங்களை விடுதலைப் புலிகள் முன்வைக்கிறார்கள்.
விடுதலைப் புலிகளின் இந்தப் போராட்ட வடிவங்கள் அனைத்தும் சோர்ந்து போயிருக்கும் புலிகளின் மக்கள் ஆதரவுத் தளத்தை உத்வேகத்துடன் வைத்திருக்கும் உணர்ச்சிகரமான ‘உசுப்பல்களாக’ அமையுமே அல்லாது, நடைமுறையில் இந்தப் போராட்டங்கள் எந்தவிதமான ஆக்கவிளைவுகளையும் உருவாக்கிட முனையும் சாத்தியமற்றது என்பது தெளிவானது. இதே வகையிலான புகலிட விடுதலைப் புலிகளின்; முன்னைய தொடர்போராட்டங்கள் அவர்கள் எதிர்பார்த்த வகையிலான எந்த விதமான ஆக்க விளைவுகளையும் உருவாக்கவில்லை என்பது அப்பட்டமான உண்மையாக இருக்கிறது என்பதனை அவர்கள் பார்க்க மறுத்துவிடுகின்றார்கள்.

புலிகளின் ராணுவ வீழ்ச்சிக்குப் பின்னான காலகட்டத்தில், தமது மனித உரிமை மீறல்கள், சுத்த ராணுவவாதம், படுகொலை அரசியல் பற்றிய எந்தவிதமான சுயவிமர்சனமும் அற்ற நிலையில், p2தமது வழமையான கடந்த முப்பதாண்டுகால சுத்த இராணுவவாத மனோநிலைபோக்கிலான ‘அரசியல்அற்ற அரசியலின்’ தொடர்ச்சியாகவே தமது மோதல் போக்கிலான அரசியலை தொடர்ச்சியாக, தொடர்ந்தும் விடுதலைப் புலிகள் தமது போராட்ட வடிவங்களாக முன்னெடுத்துச் செல்ல முனைகின்றனர்.
விடுதலைப் புலிகளின் அரசியலை அங்கீகரிக்கிற நாடுகள் உலகில் ஒன்று கூட இல்லை என்கிற அரசியல் யதார்த்தத்தை அவர்கள் காணத் தவறிவிடுகின்றார்கள். எந்தவிதமான நாட்டினது அங்கீகாரமும் இல்லாமல், எந்த அரசினதும் அணுசரணையும் இல்லாமல் புலிகள் முன்வைக்கும் நாடுகடந்த நிலையிலான தமிழீழ அரசாங்கம் என்பது செயலளவில் ஒரு கனவுலகமாகவே இருக்கும்.

வரலாற்று ரீதியில் இரண்டாம் உலகப் போர்க்கால கட்டத்தில் கிட்லரால் ஆக்கிரமிக்கப்பட்ட பல ஐரோப்பிய நாடுகள் நாடுகடந்த அரசுகளை அமைத்திருந்தன. கிட்லரை எதிர்த்து நேசநாட்டுப் படைகளும் செஞ்சேனையும் போராடி வெற்றி பெற்றபின் அந்த அரசுகள் மறுபடி எழுந்தன. முன்னர் ஆட்சியில் இருந்து, பாசிசத்தின் கீழ் இல்லாது போன அரசுகள், மறுபடி முகிழ்த்தன. அரசியல் ரீதியில் அன்றைய யதார்த்தத்தின் அடிப்படையில் இது சாத்தியமாயிற்று.
பிறிதொரு வகைகயில் மக்கள் எழுச்சிகளால் நாட்டை விட்டோடிய மன்னராட்சிகள் தாம்தான் இன்னும் நாட்டின் அதிகாரத்துக்கு உரியவர்கள் எனும் நோக்கில் நாடு கடந்த அரசை அமைத்திருந்தார்கள். ஈரானது மன்னர் ஷா இப்படி அமெரிக்காவில் நாடு கடந்த ஈரானிய அரசை அமைத்தார். தென்வியட்நாமியர்கள் ஹோசிமினுக்கு எதிராக, ஒரு தென் வியட்நாமிய அரசை அமெரிக்காவில் அமைத்தார்கள்.

கம்யூனிச எதிர்ப்பாளர்கள் போலந்து சோவியத் ஆளுகைக்கு உட்பட்ட காலத்தில் அமெரிக்காவில் நாடு கடந்த போலந்து அரசை அமைத்திருந்தார்கள். எண்பதுகளின் போது லெச்வலேசாவின் ஆட்சியை இவர்கள் அங்கீகரித்துத் தமது நாடு கடந்த அரசைக் கலைத்தார்கள். தலாய்லாமா இந்தியாவிலிருந்தபடி நாடுகடந்த திபெத்திய அரசை அமைத்துக்கொண்டிருக்கிறார் . அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகள் தலாய்லாமாவுக்குத் தார்மீக ஆதரவை வழங்கினாலும், உலகில் எந்தவொரு நாடும் தலாய்லாமாவின் நாடுகடந்த அரசை அங்கீகரிக்கவில்லை என்பது கவனத்தில் கொள்ளப்படவேண்டியது.

சர்வதேசிய சட்டங்களின்படி இத்தகைய நாடுகடந்த அரசுகளை எவரும் அமைத்துக் கொள்ளலாம். சர்வதேசிய நாடுகளினது அங்கீகாரம் என்பது, தத்தமது சொந்த நாடுகளில் இந்த அரசுகளின் p4நிர்வாகிகள் சென்று அதிகாரத்தைக் கைக்கொள்ளும் போதே சாத்தியமாகும். அப்போதே நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு நாடாகவும், சட்டபூர்வ அரசாகவும் இது பரிணாமம் பெறும். அதுவரையிலும் பெயரளவில் மட்டுமே இருக்கும் இந்த அரசுகள் செயலளவில் ஏதுமற்ற இன்மைகளாகவே இருக்கும்.

இன்றைய நிலைமையில் இருபதுக்கும் மேற்பட்ட இத்தகைய நாடுகடந்த அரசுகள் அமெரிக்காவிலும் மேற்கிலும் இந்தியாவிலும் இருந்து கொண்டுதான் இருக்கின்றன.

நாடுகடந்த அரசாங்கம் என்பது, எந்த நாட்டைத் தமது அரசினது நிலமாகக் கோரிக் கொள்கிறதோ அந்த நிலத்திலுள்ள செயலூக்கமுள்ள அரசியல் சக்தியின் அல்லது இயக்கத்தின் பகுதியாக இருக்க வேண்டும்என்பது முக்கியமாகின்றது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்பது தூரநோக்கிலான அரசியல் அடிப்படையில் இரு விதங்களிலேயே சாத்தியப்படும். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் இலக்கை ஒப்புக் கொள்ளும் ஒரு அரசியல் சக்தி அங்கு இயங்க வேண்டும். அல்லவெனில் என்றேனும் ஒரு நாள் குறிப்பிட்ட நிலப்பரப்பினை தமது அதிகாரத்துக்குள்ளும் கட்டுப்பாட்டிற்குள்ளும் கொண்டுவரக் கூடிய ஒரு ராணவ சக்தி அங்கு இயங்கிவருதல் அவசியம்.

இலங்கையில் இந்த இரண்டு சாத்தியங்களும் புகலிடத்தில் இயங்கி வரும் விடுதலைப் புலிகளுக்குச் சாதகமாக இல்லை. விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பொறுப்பாளரான கே.பத்மநாதன், நாடுகடந்த தமிழீழ அரசின் முன்னோடி வழக்குரைஞரான உருத்திரகுமார் போன்றோரின் கருத்தின்படி, புகலிட விடுதலைப் புலிகளின் அரசியல் இலக்கையும் செயல்போக்கையும் ஒப்புக்கொள்கின்றவர்களாக இலங்கையில் இயங்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் சுட் டிக்காட்டப்பட்டார்கள்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான சிறிகந்தா திட்டவட்டமாக புகலிட விடுதலைப் புலிகளினதும், நாடு கடந்த தமிழீழ அரசு எனும் இலக்கையும் முற்றிலுமாக மறுதளித்திருக்கின்றார். ஓன்றுபட்ட இலங்கைக்குள் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதே தமது அரசியல் திசைவழி என்பதையும் அவர் தெளிவுபடுத்தியிருப்பதோடு, தாம் எவரது கட்டளைப்படியும் செய்பட முடியாது எனவும், தமது முடிவுகளின்படியே தாம் செயல்படமுடியும் என்பதையும் தெளிவாக முன்வைத்திருக்கின்றார். இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசின் நிலம்சார்ந்த அரசியல் அடிப்படை தகர்ந்துபோகிறது.

ராணுவரீதியிலும் கடந்த முப்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்ததான போராட்டமுறைக்கு மறுபடி திரும்புவது இனி சாத்தியமில்லை என்பதனை முன்பாகவே விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பொருப்பாளர் கே. பத்மநாதன் ஒப்புக் கொண்டிருக்கின்றார். நிலம் சார்ந்த அரசியல் அடிப்படையும் இல்லாமல், ராணுவ அடிப்படையும் முற்றிலும் இல்லாத நிலைமையில், நாடு கடந்த தமிழிழ அரசு என்பது ஒரு துர்க்கனவாக முடிகிற சாத்தியமே இன்றைய நிலையில் அதிகமாக இருக்கிறது என்பதே யதார்த்தமான வெளிப்பாடாக அமைந்திருக்கிறது.