யாருக்காய் பொங்குபோம் இனி?? : நோர்வே நக்கீரா

பொங்கல்களுக்கு என்றும் புதிரெடுப்பு
புதிர் புதிராய் புதிர்போட்டும் கதிரெடுப்பு ஏதுமில்லை
எல்லாமே களையெடுப்பு….வெறும் களையெடுப்பு

களை களை என்று களைந்து தள்ளி
கொலை கொலையாய் கொன்று குவிந்து- கடசியில்
களைக்காது களையாய் நின்றது களைகள்தானே
துரோகி துரோகியென உரமாய் விளைந்தது துரோகம்தானே.
மகிந்தரின் படுக்கையறையிலும் துரோகத்தின் தலைவன்.

வடக்கும் கிழக்காய் பொங்கல் சரிய
பொங்குதமிழ்களாய் எத்தனை நெருப்பு வைப்புக்கள்
நிலத்திலும் புலத்திலும் பொங்கியதமிழ் சரிந்தது எங்கே?

ஈசானமூலையில் (வடகிழக்கு)பொங்கிச்சரிவது நற்பயன்
நந்திக்கடலும் ஈசானமூலை வடகிழக்காகி என்ன பயன்?
எதிர்காலம் தமிழனுக்காய் பொங்கிப் படைக்குமா?
பொங்கித்தான் சிதைக்குமா? பொங்கிக் கருக்குமா?

பொங்கலோ பொங்கல் என்று தமிழையும் பொங்கினோம்.
இந்தியனும் சீனனுமாய்
கலைத்துக் கலைத்து பொங்கினார்களே
முள்ளிவாய்கால் வரை

தலைகளை அடுப்பாக்கி
தலைகளுவலுக்கு அடைவாகி
உடல்பானையில் உசுப்பேத்தி…உதிரமேற்றி
உப்புக்காய் மக்களின் கண்ணீர்ரை ஊற்றி
துப்பாக்கிகளை விறகாக்கி
சுடுகலங்களால் தீபமேற்றி
30வருடமாய் பொங்கினோமே தமிழ்பொங்கல்.
பொங்கிப் பெருகியதே நந்திக்கடலில்
எந்தக்கடலுக்காய் பொங்குவோம் இனி;????

அமெரிக்காவை அழைத்து விருந்துவைக்க
ஈசானமூலையில் பொங்கல் சரித்தோம்
பொங்கித்தள்ளியதையா நந்திக்கடலில்
கப்பல் கப்பலாய் அள்ளவந்தது அமெரிக்கா
கப்பென்ற போனபின் சப்பெனப்போனது அமைதி
அமைதியே அமைதியானது அடிமைகளாக

ஊரிலே பொங்கிட உலகெல்லாம் அரிசி சேர்த்து
ஊரில் உழைக்க மறுத்து
ஊருக்குவெளியே பொங்கியதால்
பொங்கலும் அரையவியல்
நந்திக்கடலில் பிணக்குவியல்
எந்தச்சூரியனுக்கு பொங்குவோம் இனி?

போருக்குப் பிச்சையெடுத்து பதுக்கிய பணத்திலே
யார்யாருக்கே பத்து பத்துவீடு
தங்கப்பானையில் பொங்கும் பேறு
வீறுகொண்டு எழுந்த மக்கள்- இன்று
நாறிப்போன நிலத்தின் முட்கள்.
யாருக்காய் பொங்குவோம் இனி?

வன்னியில் தூறினால்
வெளிநாட்டில் வெள்ளம்
கன்னியொருத்தி கருவுற்றால்
கண்ணீரில் இங்கே வள்ளம்
ஆடுக்குட்டிக்கு ஓநாய் காவல்.

ஊரில் ஒருத்தி கற்பிணி
புலத்தில் அது கற்பழிப்பு
அரசியலில் கொந்தழிப்பு
புலத்திலே நிதிதிரட்டி –தம்
பிள்ளைக்கு வீடுகள்கட்டி
கற்புக்கொடுக்கக் கற்றுக்கொடுப்பார்
யார்வீட்டில் பொங்குவோம் இனி??

ஊரை அடித்து உலையில் போட்டபணம்
வீடு கடை என்று எழும்புகிறது தினம் தினம்
மனைவி மக்கள் கழுத்தில் நகைகளின் கனம்
ஊரையடித்த பணத்தில் கெலிக்கொப்டரில் திருமணம்
பால்குடித்த மகனே மார்பிலுதைத்த போது
அன்னியனை நம்பி இனி பொங்கல் எமக்கேது?

உணவு ஊட்டிய கைகளில்
மூட்டிய நெருப்பு
காட்டிய ஒளியில் நாம் கண்டது அனைத்தும்
அரக்கர்களின் இருப்பில் துரோகத்தின் தளைப்பு.
மனிதத்தின் மறுப்பில் மானிடரின் வெறுப்பு

நம்பி நம்பி தோற்ற தம்பி
நம்பி எப்படிப் பொங்குவது இனி
நம்பிக்கையில் கை வைத்து- நீங்களே
தன்னம்பிக்கையை பொங்கிடுங்கள்
பொலிந்திடும் வாழ்க்கை உங்கள் கைகளில்

பொங்கல் கொண்டு வரும்
 

ரிசானா, இஸ்லாத்தின் பெயரால் இனி அழவேண்டாம்.. : கலீல்

மரணத்தின் விழிம்பில் மனிதகுலம்
உனக்கும் சேர்த்தே அழுதுகொண்டிருந்தது.
மேசிடேஸ் காரில் பயணித்துக்கொண்டே பன் கீ மூனும்,
இரத்தக்காற்றை சுவாசித்தவாறே ராஜபக்சவும்,
இஸ்லாத்தின் பெயரால் அழுகிப்போனவனும் கூட,
உனக்கும் சேர்த்தே அழுதாகக் கூறிக்கொண்டான்..

உம்மாவின் தாய்பால் சற்று நேரத்தின் பின்னால்
உன் வாய்வழியே இரத்தமாக வழிந்தது…
உனது கண்ணீர்
வரண்டுபோன நிலத்தைச் சுடும் முன்னமே
உணர்வுகள் எரிந்தன,
இப்போதும் மனித குலம் மட்டுமே
உனக்காக அழுதது..
ரிசானா,
இஸ்லாத்தின் பெயரால் இனி அழவேண்டாம்..
அல்லாஹ் சொன்னதாக அமரிக்க அடிமைகள்
ஒப்புவிபதைக் கேட்கவேண்டாம்….
மகிழ்ச்சியைத் தெரியாத இவர்கள்
எங்கள் இன்பத்தை ஒழித்துவைத்திருக்கிறார்கள்..
கொத்துக்குண்டுகள் துளைக்காத ஆழத்திற்கு
மனிதத்தின் ஆணிவேர்களை
அனுப்பிவைப்போம்…

உம்மாநான் சவூதிக்கு போறேன்…! : கவிஞர் பொத்துவில் அஸ்மின்

இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் வாழும் முஸ்லிம்களில் குறிப்பாக தென்கிழக்கு முஸ்லிம்களின் பேச்சுவழக்கில் இக்கவிதை அமைந்துள்ளது.
”ரிசான நபீக்குகளுக்கு” இந்த கவிதை சமர்பணம்.
-கவிஞர் பொத்துவில் அஸ்மின்-

இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் வாழும் முஸ்லிம்களில் குறிப்பாக தென்கிழக்கு முஸ்லிம்களின் பேச்சுவழக்கில் இக்கவிதை அமைந்துள்ளது.
”ரிசான நபீக்குகளுக்கு” இந்த கவிதை சமர்பணம்.

-கவிஞர் பொத்துவில் அஸ்மின்-

உம்மாநான் சவூதிக்கு போறேன்-எங்கட
கவலைகள் கரச்சல்கள் கலஞ்சோடிப்போக…!
உம்மென்று இருக்காதே நீயும்-என்ட
உசுரப்போல் எப்போதும் புள்ளநான் பாப்பேன்!

வாப்பாநீங்க ஒழச்சது போதும்-ஒங்கட
பெரச்சின லாத்தையும் நானினி பாப்பேன்…!
சாப்பாட்டுக் கினியென்ன பஞ்சம்…?-ஒங்கள
மௌத்தாகும் வரைக்கும்நான் மனசாற பாப்பேன்..!

கலியாண வயசுள்ள என்ன-நீங்க
கரசேக்க படுகிற பாட்ட நான் அறிவேன்…!
என்னகா செய்றநான் உம்மா
பொம்புளயா பொறந்தது யாரோட குத்தம்..?

அப்பம் வித்து காக்கா படிச்சார்
கடசியில் நமக்கெல்லாம் என்னத்த கிழிச்சார்…?
கொமர நெற வேத்த முந்தி-காக்கா
கொறுக்காட பேத்திய கலியாணம் முடிச்சார்…

புழிஞ்ச தேங்காப் பூவப் போல
புளிச்சித்தான் போனோம் அவருக்கும் நாங்க-என்ட
கிழிஞ்ச ‘சல்வார” மாத்த-உம்மா
ஒங்கிட்ட காசில்ல யார்ட்ட வாங்க…?

படிச்சாக்கள் இப்பெல்லாம் கூட-இஞ்ச
படிப்புத்தான் உசிரென்றோர் சோத்துக்கு வாட-நான்
பட்டங்கள் படிச்சதும் வீந்தான்-இப்ப
தொழிலின்றி இருந்திட்டா கெடைக்குமோ தீன்தான்…?

அரசாங்க தொழிலையும் காணோம்-நாங்க
அலையாலும் மழையாலும் அழிஞ்சிதான் போனோம்
‘எம்பி”மார் பொய்கள கேட்டா – உம்மா
இதவிட மோசமா அழிஞ்சுதான் போவோம்…!

அதுவரும் இதுவரும் என்பார்-எம்பி
ஆனைய குடுத்தாலும் சோத்தோட திம்பார்
ஊட்டுக்கு தேடிநாம் போனா-‘சேர்”
எடுபிடி அனுப்பி ‘பிஸி” எனச்சொல்வார்…

ரோட்டுல கண்டாலும்கூட
தெரிஞ்சாலும் தெரியாத மாதிரி போவார்
வோட்டுத்தான் அவருக்கு வேணும்-நாங்க
ஏமாந்து ஏமாந்து அழுதது காணும்…

வக்கின்றி வாக்குகள் கேட்டு-ஊட்ட
வருவோர்க்கு உம்மாநீ வாருகள் காட்டு
எருமைங்க கதையல கேட்டு
ஏமாந்து இனிமேலும் போடாதே ஓட்டு….

ஒழைக்காட்டி ஒசந்தவர் யாரு? -நாங்க
ஒழைக்காம தின்டிட்டா மதிக்குமா ஊரு?
ஒழச்சத்தான் கக்கிஷம் போகும்-இத
ஒணராட்டி எப்புடி சோகங்கள் சாகும்..,?

நெனச்சமாரி நாங்க உடுக்க-இழிவா
நெனச்ச மச்சானுக்கு சீதனம் குடுக்க
சவூதிக்கு உம்மாநான் போறேன்-எல்லாம்
சரியாக வந்திடும் சிலநாளில் பாரேன்.

சொளையாக அனுப்புறன் காசி- ஊட்டில்
சொகமாநீ வாழலாம் பூட்டும்மா ‘ஏசி’
தொணையாக இருக்கிறேன் உம்மா-நீயும்
கொளராத கக்கிஷம் போய்விடும் சும்மா…

சொர்க்கத்த வாங்கிட்டு வருவேன்-அந்த
மக்கத்து சொகமெல்லாம் ஒனக்குத்தான் தருவேன்
சொத்துக்கள் உம்மாநீ வாங்கு-எங்கட
சொர்க்கத்தில் இனியாச்சும் சொகமாக தூங்கு…!

மனம்வெச்சி என்னநீ அனுப்பு-சவூதி
நானிப்ப போனாத்தான் எரியும்நம் அடுப்பு..!
போஎன்டு செல்லித்தான் பாரு..-சொட்டு
நாளைக்குள் ஓடும்மா தங்கத்தில் ஆறு…..

ஒயித்தாட புள்ளநான் என்று
ஒதுக்கித்தான் பாக்காக ஊராக்கள் இன்று
அவியலின் முன்னால நாங்க
ஆரேண்டு காட்டித்தான் வாழனும் ஓங்க…

உம்மாநான் சவூதிக்கு போறேன்-எங்கட
கக்கிஷம் எல்லாமே காத்துல போகும்-என்ன
சும்மா நெனைக்காதே நீயும்-நாங்க
சொகுசாக வாழலாம் சொமையெல்லாம் தீயும்…!!

பாவனை : கவிதா (நோர்வே)

pavanai

பாவனை

பகற்பொழுதின் அணுக்களை

கொத்தி முழுங்கும் இருள் அலகுகள்  போல

விழுங்கிச் செமிக்கும்

பல பாவனைச் செயல்களினின்று  கழன்றால்

நான் இப்படியானவள் அல்ல

 ஒரு மர்மம் அவிழ்த்து,

சகுணம் பாராமல்

பரிகசிக்கும் பார்வைகளில்

பதுக்கிய தன்னிலிருந்து

முகத்தினை நோண்டி எடுக்க

நின்று எரிகிறது எனது சுயத்தின்  கடல்

 

பாவனைகள் பலவிதம்

ஆற்றாத பொழுதெல்லாம்

கைச்சட்டைப் பொத்தான்களை  சரிசெய்யும்

அப்பாவின் பாவனை

அக்கறையென அதட்டிப் போகும்

ஒரு அம்மா பாவனை

தெரியாதது போல நகர்ந்து  செல்லும்

அப்பாவி பாவனை

ஒதுங்கி ஒடுங்கும்

ஒரு நல்ல பெண் பாவனை

பாவனைப் பாதாளத்தில்

குடுகுடுவென குதிக்கத்  தயாராகும்

நாளைய என் குழந்தையை

பேரோசையின்றி எப்படிப்  பூக்கவைப்பேன்

 

சிலருக்கு

வாழ்க்கை, பணயம்

பலருக்கு

பரிணாம வக்கிரம்

 

தோழரே!

விலைமகளின்  ஒப்பனைக்காட்டிலும்

கேவலமான

உனதும் எனதுமான

பாவனை,  கடப்பின்..

தொங்குகிறோம் சிலுவையில் இன்னும் : நோர்வே நக்கீரா


யேசுவே!
மாரி மழையில்
மாட்டுத் தொழுவத்தில்
மாரியம்மனுக்கு (மாரியாள்)மகனானாய்

உனக்கு
மாட்டுத்தொழுவமாவது இருந்தது

திறந்தவெளித் தெருக்களிலும்
அடர்ந்த புதர்காடுகளிலுமே
எம்பிள்ளைகளின் பிறப்புகள்

கண்ணுக்குத்தெரியா
கணவனல்லாக் காளையன் ஒருவன்
கலவிகொண்டதால் – நீ
கர்த்தரின் குழந்தை

ஈழத்தில் உன்னைப்போல்
எத்தனை குழந்தைகள்
எத்தனை எத்தனையோ யேசுக்கள்- ஆம்
அத்தனையும் உன் சகோதரங்கள்
எண்ணிலடங்கா மாரியம்மன்கள்
உங்களுக்கு உலகெங்கும் ஆராதனை
எம்மக்களுக்கு மட்டுமேன் பெருவேதனை?

மாரியை
மறுமணம் முடிக்க
யோசப்பு
தமிழ்விதவைகளுக்கு…..யாரப்பு?

முற்போக்குவாதிகள்
முந்தானை கேட்கிறார்கள்.

சமூக ஆவலர்கள்
கசமுசா பண்ணுகிறார்கள்.

இசக்காரர்கள்
நிசம் பேசவில்லை.

அரசியல்வாதிகளோ
அடித்தொட்டையால் அகிலம் அளந்து
வோட்டுக் கேட்கிறார்கள்

விபச்சாரிகள் என்று
விலைபேசுகிறார்களே
மகிந்தனின் மைந்தர்கள்.

மாவீரர்களை வணங்கிய மக்கள்கூட
வீரத்தைத் தேடுகிறார்கள்
மாவீரிகளின் மடிகளில் இன்று.

நீ மதத்தினுள் நின்று பேசினாய்
மானிடவிடுதலை
பரிசாகக்கிடைத்தது …..!!!
சவுக்கடி…
தோழில் சிலுவை….
தலையில் முள்முடி….

பிறப்புரிமை விடுதலை
விரும்பிய எமக்கு
கிடைத்த பரிசோ
உன்னைவிட பெரிசே.

வெள்ளையனும்
கொள்ளை அரசியல்வாதிகளும்
எம்மைச் சிங்களவர்களுக்கு
விற்றகாலம் தொட்டு
நாம் சிலுவைகளிலேயே தொங்குகிறோம்

மூன்றாம் நாளில் உனக்கு மோட்சம்
எமக்கு எப்போ….?
சொல்லையா சொல்….?

நீ மேய்ப்பனானாய்
தவறிய ஓராட்டை தேடிப்போனாய்
நாம் தவறவிட்டது எத்தனையோ இலட்சம்
உன்னால் எண்ணித்தான் பார்க்க முடியுமா?

மேய்ப்பன் நீயென்று எண்ணி
புலி சிங்கங்களால் மேய்க்கப்பட்டோம்
முள்ளிவாய்க்கால்வரை.

கொலைவெறியில் தின்றது போக
மீதம் நந்திக்கடலினுள் நாறியபோதும்
உலகிற்கே மணக்கவில்லை ஐயோ!!
உனக்குமா யேசுவே!!!!

ஆயுதங்களுடன் மௌனித்துப் போனது
எம்வார்த்தைகளும்
வாழ்வும்….மானிடமும்
எம்செத்தவீட்டில் உனக்கு
பிறந்ததினவிழாவா?

பாராளுமன்றப்பலிபீடத்தில்
மகிந்தன் முன்னிலையில்
தமிழ் உயிர்கள் பலி
உடல்கள் படையல்கள்
கொல்லாமை கூறிய புத்தனின்
பல்லை பிடுங்கியபின்
வெசாக்விழா கொண்டாடி
நரமாமிசம் படைக்கிறார்களே
புத்தனும் புசிக்கிறானே
நிறைமாமிசம்.

யேசுவே!!
அண்ணன் புத்தனிடம்
நீயும் தோற்றுவிட்டாயா?

உலகெங்கும் விழா உன்பிறப்புக்கு
கலகங்களின் வாழ்வுதானா என் இருப்புக்கு

யேசுவைத் தேடும்
நோர்வே நக்கீரா
24 12 2012

சிருஷ்டி கர்த்தாக்கள் !!!!!! : மா.சித்திவினாயகம்

ஆரம்பகாலக் கவிஞர்களில் ஒருவராகக் கணிப்பிடப்படும் இவரின் கவிதைகள் “மரணத்துள் வாழ்வோம்” கவிதைத்தொகுதியில் இடம் பெற்றுள்ளது.

பின் இவர் புலம் பெயர் நாடுகளில் பல புனை பெயர்களில் எழுதினார். ஜேர்மனியில் இளம் அருவி சஞ்சிகையின் ஆசிரியராக இருந்து 1984ல் அதனை வெளியீடு செய்தவர். அங்கிருந்த காலத்தில் “தீ” என்னும் கவிதைதொகுப்பு இவரால் வெளிக்கொணரப்பட்டது. இவரின் சில கவிதைகள் மாற்று மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. பிறகு இவர் கனடாவிற்குப் இடம்பெயர்ந்து வாழ்ந்தார். அங்கு தமிழ் எழுத்தாளர் இணையத்தால் வெளியீடு செய்யப்பட்ட “அரும்பு” சிறுகதைத் தொகுதியில் இவரின் “குறி” சிறுகதை பலராலும் விமர்சிக்கப்பட்டது. கவியரங்குகளின் தலைமைக் கவியாகிப் பயன் பாடுமிக்க கவிதையரங்குகளை நடத்தினார். இணையங்கள், பத்திரிகைகள், வானொலிகள், தொலைகாட்சிகள், சஞ்சிகைகள் எனப் பலவற்றில் கவிதைகள் எழுதினார்.

பத்திரிகையில், தமது பதினெட்டாவது வயதில் எழுதத் தொடங்கிய சித்தி அவர்கள், நவீன தமிழ்க் கவிதையுலகில் தனி அடையாளம் கொண்டவர். அஞ்சுவது அஞ்சாமை பேதமை என்னும் இவரின் கவிதைதொகுப்பு ஒன்று  சென்னையில் வெளியீடு செய்யப்பட்டது.

ஊர் தீப்பற்றிப் பிடிக்கையில்

ஒதுங்கி நின்று ஓட்டுப் பார்த்த

இவனை அவனும், அவனை இவனும்

மாறி மாறி சிருஷ்டி கர்த்தாக்கள் என்கின்றார்கள்.

செத்துக் கிடந்தவரின் பெயரில்

போட்டி போட்டுத் தங்களுக்குத் தாங்களே

நினைவு கொள்கின்றார்கள்

நியாயம் கேட்கின்றார்கள்

…..

அர்ச்சனை செய்கின்றார்கள்

….

அபிசேகம் நடாத்துகின்றார்கள்

…….

பிடில் வாசிக்கின்றார்கள்.

நாட்டியம் ஆடுகின்றார்கள்.

வாயசைத்துக் கீதமிசைக்கின்றார்கள்

ஆளுக்காள் மலர்மாலை போட்டு

மகிழ்ந்துவிட்டு மலரஞ்சலி என்கின்றார்கள்.

இனப்பகை உந்த இன்னும்

இரத்தச் சேறாய் குழைந்து கிடக்கிறது மண்.

எரியும் நெருப்பில் கருக்கிக்கிடந்த

பிணங்கள் எழுந்தா சாட்சிக்கு வரும்???

தத்துவங்களைத் தைரியத்தோடு அவிழ்க்கின்றார்கள்

அவசர அவசரமாக

ஆவணங்களைச் செருகுகின்றார்கள்

.

நரக லோகத்தின் ஏழைப்பட்ட

இதயங்களைத் துடிக்க

வைக்கவென

தேவலோகத்தில் புதிய புதிய பத்திரிகைகள்

, வானொலிகள், தொலைக்காட்சிகள், இணையங்கள்

பளபளப்பாக்கிச்

சிருஷ்டிக்கின்றார்கள்.

எரித்தவனோடு கைகோர்த்திருந்து

பிணங்களைப் பாடிய ஒவ்வொருவனுக்கும்

விருது அறிவிக்கப்பட்டு இருக்கிறது

!!!!!!.

இன்னமும் வரும் சிருஷ்டிகர்த்தாக்களுக்காக

இணையத்தில் வெற்றுடம்போடு

இனவெறியனின் எச்சமாய் விறைத்துக் கிடக்கிறது என் தமிழிச்சிகளின் மானம்

!!!!!!.

தோள்த்துண்டைப் தொலையக்கொடுத்துவிட்டு

பொன்னாடையில் புத்தி பேதலித்து நிற்கிறது

புலம்பெயர் நிலம்.

ஏமாந்தவனின் எச்சத்தில்

ஏறுகிறது அவர்களின் கொடி!!!

இனப்பகை உந்த நாடு சுடுகாடாய்க் கிடக்கிறது

இவர்கள் ………

மூடுபனிக்குள் மூழ்கித் தவிக்கிற பாவி

மனிதனின் மீதி உயிரையும்

எடுக்கத் துடிக்கின்றார்கள்.

மறத்தலை மறுத்தல் : துளசி

மறந்துபோய்விட முயற்சிக்கிறேன்..
கடந்தனவும் நிகழ்வனவும்
கைகோர்த்துக்கொள்ள மறுக்கும்
ஒவ்வோரு இரவிலும்…
மறத்தலுக்கன போராட்டம்
உறக்கத்தின் ஒரு பாதியை தின்று தொலைக்கிறது.
கருகிப்போன பாலை மரத்தில்
தொங்கிய கைகுழந்தையின் கைகள்,
போர்முனைக்கு நடத்திச்செல்லப்பட்ட
மாலதி அக்கா,
மறந்துபோய்விட முயற்சிக்கிறேன்..
அணைக்கும் சுகத்திலும்
துப்பாக்கிகளின் வெம்மைய உணர்வதாய்
பெருமிதம் கொண்டவனின்
இல்லாமல் போதலை,
நாம் காலாற நடந்த
அந்த நிலத்தின் சுவடுகளில்
இரத்தம் கலந்த பச்சை மனிதர்களின்
உல்லாச உலாவை,
மறந்துபோய்விட முயற்சிக்கிறேன்..
நாளைய பொழுதை
அம்மாவும், நானும்
அப்பாவும், தாத்தாவும்
செத்துத்தொலைத்துவிடாமல்
கடத்தியாகவேண்டும்…
வயல் வரப்புக்கள் எங்கும்
சிவப்பு இரத்தமும் சதையும் நிறைந்த
பச்சை மனிதர்கள்..
நெற்கதிர்களுக்குப் பதிலாக..
என்னையே நான் மறந்துவிடச் சொல்கிறார்கள்..

தலைகளைப் பறி கொடுத்தோர்!! : மா.சித்திவினாயகம்

உண்மையிலேயே அந்தப் பலசரக்குக் கடை விளம்பரங்களைப்
படித்துப்பார்த்ததில்
மிக…மிக…சர்ச்சைக்குரியதாகவும்….சஞ்சலப்படுத்துவதாகவும்…
பயப்பட வைப்பதாகவும்…இருந்தது!

தலையுள்ள இறால்களை விட…………
தலையில்லா இறால்களுக்கும்
தலையுள்ள நெத்தலிகளை விட……………
தலையில்லா நெத்தலிகளுக்கும்
அதிக விலையும் அதிக மவுசும் என
அந்த விளம்பரங்கள் –என்னைக்குழப்பி விடுகின்றன !

தலைகள் இருப்பதே கேவலமாகவும்
கௌரவக் கோளாறாகவும் உணருகிற நாட்கள் இது !
மண்ணுள் புதைந்த பாறாங் கல்லெனச்
சிந்திப்பதையே மறுதலித்தெறிந்து

பழைய பித்தலாட்டக்காரர்கள்…
காலம் காலமாக விரித்துப் போட்டிருக்கிற
கட்டுக் கட்டான பொய்ப் பந்தல்களின் மேல்
தலையே இல்லாமல் – நீ தத்தி நடக்கலாம் !
படுத்து உறங்கலாம் ! குந்தியிருந்து பஞ்சாயத்து நடத்தலாம் !

செத்தபிணங்கள் முரசமொலிக்க‌
எலும்புக்கூடுகள் ஊர்வலம் போகுமாம்.
சிந்திய குருதியுள் நாடுகள் அமிழ்ந்து
நமக்கென ஒருபெரு உலகம் விரியுமாம்.
கதையளந்து, வெறும் வாய்ப்பந்தல் போடலாம்!
உரலில் போட்ட தானியம் போல உன் இனத்தை – நீயேகுத்தி அரிக்கலாம் !
அழுது புரண்டெழும் வாழ்விற்கு
அர்த்தமிருப்பதாய் புரட்டுக் கூறித்
தீபாவளி ,பொங்கல், புதுவருசம் எனச் சலிப்புகளை
உற்சாகங்களாக்கி வியாபாரமாய் விற்றுத் தள்ளலாம் !

பிரபஞ்சத்திற்கான புதிய சங்கீதங்களைச் சுடுகாடாக்கி விட்டு
அடுத்தவன் பிரக்ஞையை உன் பிரக்ஞை என்று வாதிடும்
உனக்கு – வட்டமாய் திரண்ட ஓர் தலையிருந்தென்ன ???
இல்லாமலிருந்தென்ன ??

ஆரம்பகாலக் கவிஞர்களில் ஒருவராகக் கணிப்பிடப்படும் இவரின் கவிதைகள் “மரணத்துள் வாழ்வோம்” கவிதைத்தொகுதியில் இடம் பெற்றுள்ளது.

பின் இவர் புலம் பெயர் நாடுகளில் பல புனை பெயர்களில் எழுதினார். ஜேர்மனியில் இளம் அருவி சஞ்சிகையின் ஆசிரியராக இருந்து 1984ல் அதனை வெளியீடு செய்தவர். அங்கிருந்த காலத்தில் “தீ” என்னும் கவிதைதொகுப்பு இவரால் வெளிக்கொணரப்பட்டது. இவரின் சில கவிதைகள் மாற்று மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. பிறகு இவர் கனடாவிற்குப் இடம்பெயர்ந்து வாழ்ந்தார். அங்கு தமிழ் எழுத்தாளர் இணையத்தால் வெளியீடு செய்யப்பட்ட “அரும்பு” சிறுகதைத் தொகுதியில் இவரின் “குறி” சிறுகதை பலராலும் விமர்சிக்கப்பட்டது. கவியரங்குகளின் தலைமைக் கவியாகிப் பயன் பாடுமிக்க கவிதையரங்குகளை நடத்தினார். இணையங்கள், பத்திரிகைகள், வானொலிகள், தொலைகாட்சிகள், சஞ்சிகைகள் எனப் பலவற்றில் கவிதைகள் எழுதினார்.

பத்திரிகையில், தமது பதினெட்டாவது வயதில் எழுதத் தொடங்கிய சித்தி அவர்கள், நவீன தமிழ்க் கவிதையுலகில் தனி அடையாளம் கொண்டவர். அஞ்சுவது அஞ்சாமை பேதமை என்னும் இவரின் கவிதைதொகுப்பு ஒன்று  சென்னையில் வெளியீடு செய்யப்பட்டது.