கனவும் காலமும் :     விஜி

கனவும் காலமும்
மீண்டும் ஒரு காட்டு வழி பயணம்
தொடரக் கூடும்
முன்னரை விட கடுமையானதாய்!
நெடுங் கனவுடன் இணைந்து
எஞ்சியிருப்பவர்களுடன்
வந்து போனகடற் பயணங்களும்
இருண்டு தெரிந்த பாதைத்தடங்களும் நினைவலைகளில்  அலையும்
பாதியில் நின்று போன பயணம் தொடர
சொந்த நிலத்தில்
மீண்டும் ஒரு தலைமறைவு காலம் வாய்க்கும்
எனில்
இந்த தடவை எமக்கு
ஒரு பிடி சோறிடுவது தென்னிலங்கை தாய்!
செண்பகங்கள் கண்களில் தென்படுவதாகவும்
வண்ணத்து பூச்சிகள் தைரியமடைந்துள்ளதாகவும்
அணில்களும் தவளைகளும் குதூகலித்து திரிவதாகவும்
மாற்றங்களை நண்பர்கள் பட்டியலிடுகையில்
முகங்களில் , மனங்களில்
ஒளி வழிவதை  மறைக்க முடிவதில்லை
யாருக்கு தெரியும் இது நம்பிக்கை நிறைந்த
வாழ்வுக்கான தொடக்கம் என்பது?
தெற்கின் இனிய காற்று மிக நுட்பமாய் வந்து
ஆழ்ந்த புரிதலுடன்
நலம் விசாரிக்க
வடக்கின் கிழக்கின் வெம்மை தணியும்
வழியெல்லாம் பூக்கள் மலர
கண்ணீரும் பசியும் உலவும்
வாழ்வு எனும் நெடு வீதியில்
தனித்த பயணம் இனி ஏது?
பறிபோகும் எதிர்காலத்தை பற்றிப் பிடிக்க
இனி அகதிகளாவதில்லை அனாதைகள் ஆவதில்லை
இனவாதிகளுக்காய் எங்கோ வாழும் தலைவர்களுக்காய்
இனி யாருக்காய்  வாழ்வதென்று
உயரும் கரங்கள் காற்றில் எழுகின்றன!

பெரியாரியமும் இந்து மதமும் : இராமியா

நாடாளு மன்றத் தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்ததில் இருந்து, ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களை மூளை வெளுப்பு செய்யும் பணியில் காவிக் கும்பலினர் சுறுசுறுப்பு அடைந்தனர். இப்பொழுது உத்தரப் பிரதேம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் மாநிலங்களில் ஆட்சியைக் கைப்பற்றிய பின் அவர்கள் அப்பணியில் தலை கால் தெரியாத வேகத்துடன் செயல்படத் தொடங்கி இருக்கிறார்கள்.

அவர்கள் இப்பொழுது முக்கியமாக முன்வைக்கும் வாதம், பெரியாரியவாதிகள் இந்து மதத்தை மட்டுமே எதிர்க்கின்றனர்; பிற மதங்களை எதிர்க்க அஞ்சுகின்றனர் என்பது தான். இதற்கு அவாளும், அவாளால் மூளை வெளுப்பு செய்யப் பட்ட மற்றவர்களும் கொடுக்கும் விளக்கம் இது தான்.

இந்துக்கள் சாதுவானவர்கள்; சகிப்புத் தன்மை உடையவகள்; இவர்களை விமர்சிப்பதால் எதிர்த் தாக்குதல் இராது; ஆகவே துணிவாக எதிர்க்கலாம். ஆனால் இஸ்லாமியர்களும், கிருத்துவர்களும் அப்படி அல்ல; அவர்கள் சிறிதும் சகிப்புத் தன்மை இல்லாதவர்கள்; தங்களை எதிர்ப்பவர்களை வன்முறையால் தாக்கிஅழிவை ஏற்படுத்தி விடுவார்கள். ஆகவே அவர்கள் மீது தாக்குதலைத் தொடுக்க அஞ்சுகின்றனர்.

அவாளின் இந்த விளக்கம் கலப்படம் இல்லாத பட்டவர்த்தமான பொய்யே. பெரியார் மூட நம்பிக்கைகளைக் கண்ட போது, இஸ்லாமிய, கிருத்துவ மதத்தினரை மட்டும் அல்ல; நாத்திகத்தை அடிப்படையாகக் கொண்ட புத்த மதத்தினரையும் விமர்சிக்கத் தயங்கவில்லை,

மாரியம்மன் தீமிதி விழாவைப் போல், இஸ்லாமியர்களிடையே சந்தனக் கூடு தீமிதி விழா நடைபெறுவதை விமர்சித்து இஸ்லாமியர்களிடையேயே பெரியார் பேசி இருக்கிறார். சகிப்புத் தன்மை இல்லாதவர்கள் என்று காவிக் கும்பலினால் சித்தரிக்கப் படும் இஸ்லாமியர்கள் இதைக் கேட்டு வெட்கப் பட்டார்களே ஒழிய வெகுண்டு எழவில்லை.

இந்நிகழ்வு குறித்து திருநெல்வேலி மாவட்டம், சாத்தான் குளத்தில் 28.7.1931 அன்று முகம்மது நபி பிறந்த நாள் விழாவில் பெரியார் பின் கண்டவாறு பேசினார்.

“சென்ற வருஷம் ஈரோடு அல்லாசாமிப் பண்டிகையைப் பற்றி ஈரோடு கூட்டத்தில் கண்டித்துப் பேசினேன். எனது ஈரோடு சகோதரர்கள் அதற்கு சிறிதும் கோபித்துக் கொள்ளாமல் வெட்கப் பட்டார்கள். அதன் பிறகு இந்த வருஷம் அந்தப் பண்டிகை நின்று விட்டது. எனக்கு மிக சந்தோஷம். கோபித்துக் கொண்டிருந்தால் இந்த வருடமும் நடத்தி இருப்பார்கள்”

இப்பேச்சு 2.8.1931 குடி அரசு இதழில் வெளி வந்து உள்ளது.

பெரியாரியவாதிகள் மூட நம்பிக்கைகளையும், மக்களின் சுதந்திரத் தன்மைக்கு விலங்கிடும் எந்தச் செயல்களையும் எதிர்க்கும் போது மதங்கள் அதற்குத் தடையாக எப்போதுமே இருந்தது இல்லை. மக்களுக்கு அவை யாரால், எவ்வளவு ஆழமாக, எவ்வளவு வலிமையாகப் பாதிக்கிறது என்பதைப் பொறுத்துத் தான் எதிர்ப்பின் தீவிரம் இருக்கிறது.

இது இந்தியவில் மட்டும் அல்ல; உலகம் எங்ககும் நிகழும் நிகழ்வு தான். பிரிட்டன் தத்துவ ஞானி பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் (Bertrand Russel) “நான் ஏன் கிருத்துவன் அல்ல?” என்று, தான் பார்க்கும் சமுதாயத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் கிருத்துவ மதத்தைத் தான் விமர்சித்தாரே ஒழிய, இந்து மதத்தையோ, இஸ்லாமிய மதத்தையோ விமர்சிக்கவில்லை.

வங்க தேச வீராங்கனை தஸ்லிமா நஸ் ரீன் இஸ்லாமிய மதத்தைத் தான் விமர்சித்தாரே ஒழிய, இந்து மதத்தையோ, கிருத்துவ மதத்தையோ விமர்சிக்கவில்லை,

அவாளுக்கு இவை எல்லாம் தெரியாதா? நன்றாகத் தெரியும். அது மட்டும் அல்ல. இஸ்லாமிய மக்களுடனும், கிருத்துவ மக்களுடனும் கலந்து பழகியது போல், இந்து மக்களுடனும் பெரியார் கலந்து பழகிய செய்திகளும் அவாளுக்கு நன்கு தெரியும்.

பழுத்த ஆத்திகரும், சைவ சமயத் தத்துவ ஞானியுமான மறைமலை அடிகள் பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கையை மறுத்தாலும், சமூக நலன்கள் என்று வந்த போது இருவரும் இணைந்து பணியாற்றி இருக்கின்றனர்.

அதே போல பழுத்த ஆத்திகரும், சைவ சமயத் தத்துவ ஞானியும், தேச பக்தருமான வ.உ.சி.யுடன் இணைந்து, பெரியார் சமூக நீதிக்காகப் பணி ஆற்றி இருக்கிறார். இதன் தொடர் நிகழ்வாக 5.11.1927 அன்று சேலம் நகரில், “எனது அரசியல் பெருஞ் சொல்” என்ற தலைப்பில் வ.உ.சி. உயர்நிலைகளில் பார்ப்பனர்கள் மட்டுமே இருப்பதைக் கண்டித்தும், விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம் வேண்டும் என்று கோரியும் பெரிய சொற்பொழிவையே ஆற்றி இருக்கிறார்.

இராமலிங்க சாமியின் பாடல் திரட்டு என்ற நூலைத் தனது குடி அரசு பத்திரிக்கையின் சார்பிலேயே வெளியிட்ட பெரியார், சமரச சன்மார்க்க சங்கத்தின் மீது விமர்சனம் செய்யவும் தயங்கவில்லை.

“சூத்திரன் என்றால் ஆத்திரம் கொண்டு அடி” என்ற சொற்றொடரை அவர் கைவல்யசாமியார் என்ற இந்து தத்துவ ஞானியிடம் இருந்து தான் பெற்றார்.

இவற்றை எல்லாம் கணக்கில் கொண்டு பார்த்தால், பெரியார், இஸ்லாமிய, கிருத்துவ நண்பர்களுடன் இணைந்து பணியாற்றியதை விட, இந்து மத நண்பர்களுடன் தான்அதிகமாக இணைந்து பணியாற்றி இருக்கிறார் என்று தெரியும்.

மக்கள் விடுதலைக்கு, நலன்களுக்கு எதிரானது எனும் போது, அவர் நாத்திக மதமான புத்த மதம் உட்பட அனைத்து மதத்தினரையும் சாடவே செய்தார். ஆகவே அவர் இந்து மதத்தை மட்டும் ஓர வஞ்சனையாக எதிர்த்தார் என்று கூறுவது கடைந்தெடுத்த அயேக்கியத்தனம்.

மத நம்பிக்கையாளர்களுடன் சேர்ந்து பணியாற்றுவதன் மூலம் மக்கள் விடுதலைக்கும், நலன்களுக்கும் பங்களிக்க முடியும் என்றால், அந்த வாய்ப்பை அவர் தவற விட்டது இல்லை. இதில் இந்து மத நம்பிக்கையாளர்களுடன் சேர்ந்து பணியாற்றவில்லை என்று கூறுவது முழுக்க முழுக்கப் பொய்.

,இன்று நம் நாட்டில் இந்து மதத்தால் நடக்கும் இழிவுகள் அனைத்துக்கும் அடிப்படை எது? அனைத்து வகுப்பு மக்களிலும் திறமைசாலிகளும், திறமைக் குறைவானவர்களும் இருக்கையில், பார்ப்பனர்கள் மட்டுமே உயர்நிலை வேலைகளுக்குத் தேர்ந்து எடுக்கப்படும் நிலை உள்ளது. இதனால் திறமைக் குறைவான பார்ப்பனர்களும் உயர்நிலைகளில் அமர்ந்து கொண்டு நிர்வாகத்தை நாசப்படுத்திக் கொண்டு இருக்கின்றனர். இதனால் நாட்டிற்கு அளவு கடந்த இழப்பு ஏற்படுகிறது.

பார்ப்பனர்களில் உள்ள திறமைக் குறைவானவர்கள் உயர்நிலை வேலைகளைப் பெற்று விடுவதால், அவர்கள் செய்ய வேண்டிய கீழ் நிலை வேலைகளை ஒடுக்கப்பட்ட வகுப்பில் உள்ள திறமைசாலிகள் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் மனித வளம் வீணாகிறது. இதுவும் நாட்டிற்குப் பெரும் இழப்பு ஆகும்.

இதைத் தவிர்த்து அனைத்து வகுப்புகளிலும் உள்ள திறமைசாலிகள் உயர்நிலை வேலைகளிலும், அனைத்து வகுப்புகளிலும் உள்ள திறமைக் குறைவானவர்கள் அடுத்த நிலை வேலைகளிலும் வேலை செய்யும் அமைப்பாக, பொதுப் போட்டி முறையை முற்றிலும் ஒழித்து விட்டு, விகிதாச்சாரப் பங்கீட்டு முறையைச் செயல் படுத்துவதற்கு, இந்துச் சகோரதரர்கள் அனைவரும் முன்வர வேண்டும். அப்படி முன் வருபவர்களுடன் பெரியாரியவாதிகள் நிச்சயமாக இணைந்து பணி புரிவார்கள். அப்பொழுது அவர்கள் இந்து மதத்தை மட்டுமே எதிர்க்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு கலப்படம் அற்ற பொய் என்று தெளிவாக விளங்கும்.

நீர்ப் பூக்குழி…: எம்.ரிஷான் ஷெரீப்

தொலைவிலெங்கோ

புகையிரதம் நகர்ந்தபடி ஊளையிடும் ஓசை

ஒரு பட்சியெனச் சிறகடித்துப் பறக்கும்

மலைமுகடுகளிடையே அமைந்திருந்தது

அந்த ஆதி மனிதர்களின்

நதிப்புறத்துக் குச்சு வீடு

ஊற்று..

ஓடையாகிப் பின்

நீர்த்தாரையாய் வீழ்ந்து

பெருகிப் பாய்ந்து

பரந்து விரிந்த பள்ளங்களில்

தரித்திராது ஓடும் ஆறு

கற்பாறைகளைத் தேய்த்துத் தேய்த்து

உண்டாக்கும் பூக்குழிகள்

நதியின் புராண தடங்களை

நினைவுறுத்தி வரலாறாக்கும்

தண்ணீரில் தம் இரைக்கென

காத்திருந்த பட்சிகளை

அலறிப் பறக்கச் செய்த

சிறுமியின் ஓலம்

அவளது குடிசையின்

மூங்கில் கதவு, களிமண் சுவர்களை

எட்டவிடாது துரத்தியது

அக் கணத்தில் தடதடத்துக் கூச்சலிட்ட ரயில்

குரூர வேட்டைக்காரனொருவனின்

கரம் தீண்டி சுவாசம் நின்றதிர்ந்த

பட்டு வண்ணத்துப் பூச்சியின் உடல்

ஒரு பூக்குழியில் மிதந்த நாளில்

கொக்குகளும், மீன்கொத்திகளும், நீர்க்காகங்களும்

அச் சின்னஞ்சிறிய பெண்ணின்

சடலத்துக்குக் காவலிருந்ததைக் கண்டன

சின்னவளைக் காணாது

வனமெங்கும் தேடிய விழிகள்

ஆந்தைக் குரல்

அபாயத்தின் ஒலி
பறவைச் சிறகின் உஷ்ணம்

பாதுகாப்பைக் குறிக்கிறதென
சொன்னாயெனினும்

சிறுமியின் கூரிய பற்களும் நகங்களும்
வேட்டைக்கானவை என அவளுக்கு

ஏலவே அறிவுறுத்த

மறந்து விட்டாய் அம்மா

நிர்பயா, சேயா, வித்யா, ஜிஷா, ஸ்வாதி, நந்தினி, ஹாஷினி, ரித்திகா மற்றும் பாலியல் வன்முறையில் படுகொலை செய்யப்பட்ட அனைத்து குழந்தைகள், சிறுமிகள், பெண்களுக்காக…

 

– எம்.ரிஷான் ஷெரீப்

mrishanshareef@gmail.com

மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் காலமும் படைப்புலகமும் : 04 : T .சௌந்தர்

பட்டுக்கோட்டையாருடனான இணைவும் , வாழ்வியல் பாடல்களும் :
===================================================

1950 களின் நடுப்பகுதியில் மெல்லிசைமன்னர்களின் இசைப்பயணத்தில் இணைந்து கொண்டு திரைப்பாடல் அமைப்பில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் !

மரபில் உதித்து , புதுமையில் நாட்டம் கொண்ட மெல்லிசைமன்னர்களின் இசையுடன் மரபில் நின்று கொண்டே சொல்லும் கருத்தில் புதுமையும் காட்டிய பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் இணைவும் புதிய அலையைத் தொடக்கி வைத்தது.

பாரதி, பாரதிதாசன் போன்ற மகாகவிகளின் தொடர்ச்சியே பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.

பாரதியின் அடியொற்றி பல கருத்துக்களை கூறியவர் என்ற முறையில் அதற்குப் பொருத்தமான இசை வடிவம் கொடுத்த இசையமைப்பாளர்களில் மெல்லிசைமன்னர்களுக்கும் தனியிடம் உண்டு என்பதை யாரும் மறுத்துவிட முடியாது.

பாட்டு என்பதை பாங்கோடு தந்த பட்டுக்கோட்டையாரின் பாடல்கள் சமூக நலன் , ,மக்கள் நலன் என்ற அடிப்படையில் நாட்டார் பாடலின் வேரில் முகிழ்த்தெழுந்தவையாகும்.மண்வளச் சொற்களை சினிமாப்பாடல்களில் அள்ளி,அள்ளிப் பூசியதுடன்,மண்ணின் உணர்ச்சி ததும்பும் பாமரப்புலமையை பண்டிதர்களும் வியக்கும் வண்ணம் புனைந்தவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். காவிய நடைகளிலிருந்து மாறி உயிர்த்துடிப்புள்ள பொதுஜனங்களின் மொழியில் பாடல்கள் பிறந்தன.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள் பற்றி பின்வருமாறு விவரிக்கிறார் அறிஞர் நா.வானமாமலை.

“சமூக மாறுதல், சமூக உணர்ச்சிகளுக்கேற்ப பாடலைகளைத் தோற்றுவிப்பவன் நாட்டார்கவி. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் போல.அவர்களுடைய உணர்ச்சிகள் , மதிப்புகள் நலன்களுக்கு ஏற்றார் போல அவர்கள் ஏற்றுக்கொள்ளத் தகுதியானவற்றை அவர் பாடினார்.அது ஏற்றுக்கொள்ளப்பட்டு , நாட்டாரது போர் முழக்கமாயிற்று.அது நாட்டார் ரசனைக்காக மட்டுமல்ல அது சினிமா பார்க்கிற எல்லா வர்க்கங்களுடைய அனுபவத்திற்காகவும் எழுதப்பட்டதால் , நாட்டார் பண்பாட்டுக்கருவை , நாட்டார் மொழியிலும் , சிறிதளவு இலக்கிய மொழியிலும் பாடினார்.நாட்டுப்பாடல் எழுத்தறிந்தவர் அனுபவிப்பதற்காக உருமாறுகிறது.இதுவும் நாட்டுப்பாடலே .கல்யாணசுந்தரம் பாடல்கள் நாட்டு மக்கள் உணர்வு , நாட்டு மக்கள் பண்பாடு மதிப்புக்கள் , அவர்கள் ஆர்வங்கள் இவற்றை வெளியிடுகின்றன.”
[தமிழர் நாட்டுப்பாடல் – பேராசிரியர் நா. வானமாமலை ]

ப.ஜீவானந்தம்

தமிழ் திரையைப் பொறுத்தவரையில் உடுமலை நாராயணகவி, கம்பதாசன் , மருதகாசி , தஞ்சை ராமையாதாஸ், கண்ணதாசன் போன்றவர்களை நாட்டுப்புறப் பாங்கில் பாடல்கள் புனைந்தவர்களில் முக்கியமானவர்களாகக் கருதலாம்.ஆயினும் இவர்களில் புதிய சகாப்தத்தை, சாதனையை படைத்தவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என்றால் மிகையில்லை.அவரின் பாட்டுத்திறத்தை சரியான வழியில் மதிப்பிடுகிறார் கம்யூனிஸ்ட் தலைவரும் சிறந்த கலைஞருமான தோழர் ப.ஜீவானந்தம் அவர்கள்.

/// சராசரி மனிதனின் சாதாரண விருப்பு வெறுப்புக்களையும் மன அசைவுகள் உணர்ச்சிப் பெருக்குகளையும் எளிமையாக நேர்பாங்காக உயிர் துடிப்பாகச் சொல்லும் மரபே நாடோடி மரபு. இதில் சிக்கலான கருத்துக்களுக்கும், உருவங்களுக்கும் இடமில்லை. எளிய விவசாய நாகரிகத்தின் அடிப்படையான உணர்வுகளை வெளியிட்டு வந்திருப்பதையே இந்த மரபில் பார்க்கிறோம்.
சிக்கல் நிறைந்த நிகழ்கால வாழ்க்கைத் தோற்றத்தை மிகச் சாதாரண கண்ணோட்டத்தில் வைத்துக் கூறுவதும், கேட்பவரின் நெஞ்சை உடனடியாகக் கவரும் விதத்தில் நேரான வழி வழியான ஆற்றலோடு வெளியிடுவதும் நாடோடி மரபின் இரட்டைக் கூறுகள்.
………சிந்து, காவடிச்சிந்து, கும்மி, குறவஞ்சி, பள்ளு, ஆனந்தக் களிப்பு, தெம்மாங்கு, கண்ணிகள் முதலிய பாடல் உருவகங்களின் தோற்றங்களும் சித்தர்கள், தாயுமானவர், இராமலிங்கனார், பாரதி, கவிமணி, பாரதிதாசன் போன்றோர் தத்துவ, சமய, லௌகிக, அரசியல், சமுதாயக் கருத்தோட்டங்களை வெளியிட மேற்படி உருவகங்களையெல்லாம் வளர்த்துப் பயன்படுத்திய முயற்சியும் நாம் கவனத்தில் கொள்ளத்தக்கவை.
…….
அவர் பாடல்களில் நான் மிகச் சிறந்த இரண்டு கூறுகளைக் காண்கிறேன். ஒன்று நாடோடிப் பரம்பரை,அதாவது வழிவழி மரபு மற்றொன்று நவீன முறையில் வெளியிடுதல்[ Modern எஸ்பிரஸின் ] வழிவழி மரபையும் நவீன உணர்வையும் இணைத்துப் பாட்டுத்திறம் காட்டுவது இன்று மிகமிக முக்கியத் தேவையாக அமைந்துவிட்டது.//
என்று விளக்குகிறார் ப.ஜீவானந்தம் .

அந்தவகையில் சிறப்பு மிக்க பட்டுக்கோட்டையின் பாட்டுத்திறம் கும்மி , பள்ளு , காவடி சிந்து , உழவர் பாட்டு , லாவணி , விடுகதை , தத்துவம் , கதைப்பாடல்,தாலாட்டு என நாட்டுப்புற மரபின் அத்தனை அம்சங்களையும் கொண்டு மண்வாசனையுடன் வெளிப்பட்டிருக்கிறது.

சினிமாப்பாடல்களில் பெரும்பான்மையானவை மெட்டுக்கு எழுதப்படும் வழமையில் ,அந்த மெட்டுக்களையும் தாண்டி, பாடல் வரிகளை வாசிக்கும் போது, பாடலின் கருத்தில் எளிமையும், சிக்கலின்றி புரிந்து கொள்ளும் தன்மையும், கருத்துத் தெளிவும் நிறைந்தவையாக இருப்பதை பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்களில் மிக இயல்பாய் காணலாம்.

மேற்குறிப்பிடட நாட்டுப்புறப் பாடல் வகைகளை மையமாக வைத்து மெல்லிசைமன்னர்களும் பட்டுக்கோட்டையாரும் இணைந்து தந்த பாடல்கள் ஒன்றையொன்று பிரிக்கமுடியாத வண்ணம் மிக இயல்பாய் அமைத்திருக்கின்றன.பாடல்களின் எளிமையும், கருத்துச்செறிவும் அவை மெட்டுக்கு எழுதப்பட்ட பாடல்கள் போலல்லாது எழுதப்பட்ட வரிகளுக்கு இசை அமைக்கப்படட பாடல்கள் போலவே திகழ்கின்றன.

மெல்லிசைமன்னர்களுடன் பட்டுக்கோட்டையாரின் அறிமுகம் பாசவலை படத்தில் ஏற்படுகிறது.

அந்தப்படத்திலேயே

குட்டி ஆடு தப்பிவந்தால்
குள்ளநரிக்குச் சொந்தம்!
குள்ளநரி மாட்டிக் கிட்டால்
கொறவனுக்குச் சொந்தம்!
தட்டுக்கெட்ட மனிதர் கண்ணில்
பட்டதெல்லாம் சொந்தம்….

என்று தொடங்கும் பாடலில் நாட்டுப்புற பழமொழியையும் ,

பாகப்பிரிவினை படத்தில்

“புள்ளையாரு கோயிலுக்குப் பொழுதிருக்க வந்திருக்கும்
புள்ளை யாரு _ இந்தப் பிள்ளை யாரு?

என்ற பாடலில் லாவணி பாடலையும் ,

அமுதவல்லி படத்தில் [1958]

ஆடைகட்டி வந்த நிலவோ – கண்ணில்
மேடை கட்டி ஆடும் எழிலோ.

என்ற பாடலில் காவடி சிந்து பாடலையும்,

பதிபக்தி படத்தில்

சின்னஞ்சிறு கண்மலர் செம்பவழ வாய்மலர்
சிந்திடும் மலரே ஆராரோ!
வண்ணத் தமிழ்ச்சோலையே! மாணிக்க மாலையே
ஆரிரோ… அன்பே ஆராரோ!

என்ற தாலாட்டையும்,

தமிழ் நாட்டின் கும்மிப்பாடலை

சின்னச் சின்ன இழைபின்னிப் பின்னிவரும்
சித்திரக் கைத்தறிச் சேலையடி – நம்ம
தென்னாட்டில் எந்நாளும் கொண்டாடும் வேலையடி
தய்யத் தய்யா தத்தத்தானா தய்யத் தத்தத்தானா…

என்ற பாடலை “புதையல் ” படத்தில் தந்ததுடன் , வேறு பல இனிய பாடல்களையும் இப்படத்தில் தந்தார்கள்.

தமிழ்திரையின் ஒப்பற்ற கவிஞனாகத் திகழ வேண்டிய மாகவிஞன், பாரதி,பாரதிதாசனுக்குப் பின்வாராது வந்த மாமணியான பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் வாழ்வு மிக இளவயதில் ஓய்ந்தது.

நாட்டார் பாடல்களின் வண்டலை தந்த மாகவிஞனின் எதிரொலி அவருக்கு முன்னிருந்த கவிஞர்களையும் அவர் போல எழுத வைக்குமளவுக்கு பாதிப்பு ஏற்படுத்தியே ஓய்ந்தது.

என்னதான் சிறப்பாகப் பாடல் எழுதினாலும் இனிய இசை இல்லையென்றால் காலத்தால் அடித்துச் செல்லப்பட்டு விடும்.லாவகமும் நுடபமும் ஒன்றுகலந்த அவர்களின் பாடல்கள் காலத்தை கடந்து நிற்கின்றன. இசையும் பாடலும் ஒன்றை ஒன்று பிரியாத அற்புத ஆற்றல்களின் இணைவு அதை சாதித்திருக்கிறது.அந்த இனிய இசையை தந்த புகழ் எல்லாம் மெல்லிசைமன்னர்களுக்கே !

பட்டுக்கோட்டை கலயாணசுந்தரம் பாடல்கள் பற்றி அதிகம் பேசப்பட்டிருக்கிறது.ஆனால் மெல்லிசைமன்னர்களுடனான அவரின் இணைவு குறித்தோ அவர்களது இணைவில் வந்த பாடல்கள் பற்றிய குறிப்புக்களை மிக அரிதாவே காண்கிறோம்.அது குறித்து மெல்லிசைமன்னர்களும் அதிகம் பேசியதில்லை.

1959 ஆம் வருட இறுதியில் காலம் மாகவிஞனுக்கு முற்றுப்புள்ளி வைத்தாலும் , தன் வசப்பட்ட காலத்தில் பலவிதமான உணர்வுகளையும் வெளிப்படுத்தும் பாடல்களை புனைந்தவர் பட்டுக்கோட்டையார்.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ,மெல்லிசைமன்னர்கள் இணைந்து தந்த புகழபெற்ற சில பாடல்கள்.

காதல் பாடல்களையும் அற்புதமாக எழுதும் ஆற்றல்மிக்கவர் என்பதை நிரூபிக்கும் சில பாடல்கள்:

01 கலைமங்கை உருவம் கண்டு காதல் கொண்டு – மகனே கேள் [1965 ]
02 முகத்தில் முகம் பார்க்கலாம் – தங்கப்பதுமை[1959 ]
03 இன்று நமதுள்ளமே பொங்கும் – தங்கப்பதுமை[1959]
04 அன்பு மனம் கனிந்த பின்னே -படம்: ஆளுக்கொரு வீடு ஆண்டு: 1960
05 கொக்கரக்கோ சேவலே படம்: பதிபக்தி [1958 ]
06 ஆடைகட்டி வந்த நிலவோ படம்: அமுதவல்லி [ 1959 ]
07 சலசல ராகத்திலே படம்: ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு : 19607
08 உனக்காக எல்லாம்… படம்: புதையல் [1957 ]
09 சின்னஞ்சிறு கண்… படம்: பதிபக்தி[ 1958 ] [தாலாட்டு]

தத்துவப்பாடல்களில் புகழ் பெற்ற சில பாடல்கள் :

01 தாயத்து… படம்: மகாதேவி | ஆண்டு: [1957 ]
02 குறுக்கு வழியில்… படம்: மகாதேவி :[ 1957 ]
03 உனக்கேது சொந்தம் – பாதாம் :பாசவலை
04 ஆறறிவில் ஓர் அறிவு அவுட்டு படம்: மகனே கேள் [1965 ]

பட்டுகோட்டை கல்யாணசுந்தரம் போன்ற பாடலாசிரியர்களுடன் இணைந்து சிறப்பாக நாட்டார் பண்புகளை தந்தமை மட்டுமல்ல , திரைக்கதையின் சூழ்நிலைகளுக்கு பொருத்தப்பாடான கருத்துக்களுக்கு , இயக்கப்போக்குகளுக்கு இசைந்து நாட்டார்மரபிசையையும் , மெல்லிசையையும் இசைவேட்கையுடன் தந்தவர்கள் மெல்லிசைமன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி இணையினர்!

தமிழ்நாட்டு அரசியல் தமிழ்திரையில் கடுமையாக எதிரொலித்துக்கொண்டிருந்த காலம் என்பதாலும் அதன் சூழல், போக்கு மற்றும் வீச்சுகளுக்கு ஏற்ப அதற்கீடு கொடுத்து உகந்ததொரு இனிய இசையை கொடுத்தார்கள்.

குறிப்பாக ,அக்கால திராவிட இயக்கத்தினரின் கருத்தோட்டப் போக்கின் முதன்மையான உணர்வாக வீர உணர்ச்சி வெளிப்பட்டது.அதன் இன்னுமொரு முக்கிய கூறாக தாலாட்டும் , தாய்பாசமும் அமைந்தது.தாலாட்டிலும் , வீர உணர்வு பாடலிலும் எழுச்சி ஊட்டும் வண்ணம் பாடல்கள் அமைக்கப்படடன.இதனூடே அக்கால இளைஞர்களுக்கு அரசியல் விழிப்புணர்ச்சியூட்டிடலாம் என்ற திராவிட முன்னேற்றக கழகத்தினரின் கொள்கைக்கு மெல்லிசைமன்னர்களின் இசை மிக வலு சேர்த்தது என்றால் மிகையில்லை.

தமிழ்த்திரைப்படப் பாடல்கள் வாழ்நிலையின் உணர்ச்சிகளை சித்தரித்தன என்ற வகையில் நோக்கும் போது நாட்டுப்புறவியலாளர்கள் கூறும் கருத்துக்கு ஒப்ப பாடல்கள் அமைந்திருப்பதையும் காண்கிறோம்.

மரியா லீச் [Maria Leach – [ 1892 – 1977 ] என்கிற நாட்டுப்புறவியலாளர் வகைப்படுத்தும் பாடல் வகைகள் போலவே திரையிலும் பாடல்கள் அமைக்கப்படடன.

மரியா லீச் [Maria Leach] நாட்டுப்புறப்பாடல்களை பின்வருமாறு வகைப்படுத்துகிறார்

1. உணர்ச்சிப்பாடல்கள் [ Emotional ]
2. வாழ்வியல் பாட்டு [ Daily Life ]
3. வாழ்வின் முக்கிய நிகழ்ச்சி பாடல்கள் [ Crucial Movement of life ]

இதில் உட்பிரிவுகளாக

01. பிறப்பு [ birth ]
02. மணம் [ marriage]
03. பிரிவு [parting]
04. இறப்பு [death]
05. தாயக நாட்டம் [ nostalgia]
06. போர்ப்பாடல் [ war ]

போன்றவற்றை குறிப்பிடுகின்றார்.

நாட்டுப்புறப்பாடல்களை வெவ்வேறு நாட்டுப்புற ஆய்வாளர்களும் வெவ்வேறுவகையாக வகைப்படுத்துகின்றனர்.எனினும் பொதுப்படையில் மரியா லீச் [ 1892 – 1977 ] வகைப்படுத்தும் பாங்கு பொதுமையாக விளங்குகிறது.மனித உணர்வுகள் பொதுமையாக இருப்பதால் நமக்கும் அவை பொருந்திப் போகின்றன.

இவை நாட்டுப்புற இசை சார்ந்த ஆய்வுகளே ஒழிய தமிழ் திரையிசையில் மெல்லிசைமன்னர்கள் தனியே நாட்டுப்புற இசைவடிவங்களில் தான் தமது பாடல்களை இசைத்தார்கள் என்று அர்த்தமல்ல.இந்தவகைப்படுத்தலில் அமைந்த பாடல்களை மெல்லிசைவடிவங்களிலேயே அமைத்து புதுமை செய்தார்கள்.நாட்டுப்புறப்பாங்கிலும் , செவ்விசைவடிவங்களிலும் ஜி.ராமநாதன் , எஸ்.எம்.சுப்பைய்யாநாயுடு , ஆர்.சுதர்சனம் கே.வி.மஹாதேவன் போன்றவர்கள் ஏலவே இசைத்திருக்கிறார்கள்.

மரியா லீச் குறிப்பிடும் “வாழ்வியல் பாடல்” வகையிலே நாட்டுப்புற இசையின் அடிநாதத்தோடு , அவற்றை மென்மையாகத் தழுவிக் கொண்டே, அவற்றில் மெல்லிசைச் சாயங்களைப் பூசி ஜாலவித்தை காட்டியவர்கள் மெல்லிசைமன்னர்கள். அதில் புதிய வாத்தியங்களை இணைத்து தந்த இசைக்கோலங்கள் எத்தனை,எத்தனை என்று ஆச்சர்யத்துடன் வியக்கிறோம்.

மெல்லிசை மெட்டில் விழும் எளிமைமிக்க இனிய சங்கதிகள் செவ்வியலிசையின் உச்சங்களைத் தொடும் வண்ணம் அமைக்கப்படத்திலிருந்து அவர்கள் ராக இசையின் ரசப்பிழிவுகளை தேவை கருதி பயன்படுத்தியதையும் காண்கிறோம்.

வாழ்வியல்பாடல்கள் என்ற பகுதியில் வரும் தாலாட்டு ,காதல் ,பிரிவு, திருமணம் , இறப்பு ,நாட்டுப்பற்று,வீர உணர்ச்சி போன்ற பலவிதமான உணர்வுகள் பாடல்களிலும் பிரதிபலித்தன.அதுமட்டுமல்ல ஒரு நிகழ்வின் பல படி நிலைகளுக்கும் பாடல்கள் பயன்படுத்தப்படடன.

தாலாட்டும் , வீரமும்

தாம் பெற்ற பிள்ளையை உறங்கவைக்க பாடும் பாடல் தாலாட்டாகும்.உலகெங்கும் தாலாட்டு என்பது நாட்டார்பாடல் வகையில் சிறப்பிடம் பெற்ற ஒன்றாகும்.தமிழிலும் அவ்விதமே! தாலாட்டைப பாடாத கவிஞர்கள் கிடையாது என்று கூறிவிடலாம். பெரும்பாலும் தாய்மார்கள் தாலாட்டை பாடுவது வழமையாக இருந்து வருகிறது.தாலாட்டுப் பாடும் தாய் தனது நிலையையும் , தன குடும்பத்து நிலைமையையும் , பெருமைகளையும் இணைத்துப் பாடுவது தமிழ்மரபு.

“தமிழ்நாட்டு பாமரர்பாடல்” என்ற நூலை எழுதிய பேராசிரியர் நா.வானமாமலை தாலாட்டுப்பாடலுடனேயே தொடங்குகிறார்.அந்நூலில் வர்க்க வேறுபாடுகளுக்கு ஏற்ப தாலாட்டு மாறுவதை கூறிச் செல்லும் ஆசிரியர் உழைப்போர் கண்ணோட்டத்தில் தாலாட்டு எவ்வாறு அமைந்தது என்பதனை உதாரணங்களோடு விளக்குகிறார்.

தாலாட்டு பற்றி கூறும் தமிழண்ணல் ” இருவர் கொள்ளும் காதலை விட , உடன்பிறந்தோர் கொள்ளும் வாஞ்சையைவிட,ஏன் உலகலக்கும் அருளினைவிட, பிள்ளைப்பாசமே ஆழமானது , வலிமைமிக்கது, உணர்ச்சிமயமானது. இத்தகைய தாயும் சேயும் என்ற உறவுப்பிணைப்பிலே இயற்கைக் கலைதான் தாலாட்டு ” என்பார்.[ காதல் வாழ்வு – தமிழண்ணல் ]

பிள்ளைத் தமிழ் என்பது தமிழிலக்கியத்தில் தனி இலக்கியவகையாகக் கருதப்படுகிறது “பழந்தமிழ் பாடல்களில் பிள்ளைத்தமிழ், உலா முதலிய பிரபந்தங்கள் தெய்வங்களை குழந்தையாகவும் , வீரர்களாகவும் பாடியதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.” என்பார் பேராசிரியர் க.கைலாசபதி.[ இரு மகாகவிகள் ]

தாலாட்டுப்பாடலை மிகச் சிறந்த முறையில் தமிழ் சினிமாப்பாடல்கள் வெளிக்கொண்டுவந்திருக்கின்றன.அதிலும் மெல்லிசைமன்னர்கள் உயிர்த்துடிப்பும் ,உணர்ச்சிப்பெருக்கும் , நெகிழ்சியுமிக்க சிறந்த பாடல்களை தமது தனித்துவ முத்திரையோடு அமைத்துத் தந்திருப்பது நம் கவனத்திற்குரியது.

தமிழ் திரையில் ஒலித்த தாலாட்டுப்பாடல்கள் என்றாலே அதில் எல்லோருக்கும் எடுத்த எடுப்பிலேயே நினைவுக்கு வருமளவுக்கு சில முக்கியமான பாடல்களைத் தந்த பெருமை மெல்லிசைமன்னர்களை சாரும்.இசைவளப்பெருமை வாய்ந்த பல பாடல்களை புது லாகிரியுடன் தந்திருப்பதையும் அவதானிக்கலாம். பழைய ராகங்களில் நவீனத்தின் பண்புகளை இணைத்து திரையிசையைத் தம் பக்கம் இழுத்துக் கொண்டவர்கள் மெல்லிசைமன்னர்கள்.

மெல்லிசைமன்னர்கள் இசையமைத்த தாலாட்டுப்பாடல்கள் சில :

01 சிங்காரப்புன்னகை கண்ணாரக் கண்டாலே – படம்: மகாதேவி [1957] – பாடியவர்கள்: எஸ்.ராஜேஸ்வரி + ஆர்.பாலசரஸ்வதிதேவி

அக்காலத்தில் வெளிவந்த தாலாட்டுப் பாடல்களில் புதிய பாங்கில் வந்த பாடல்.மரபாக வரும் ராகங்களில் அல்லாமல் ஆபேரி ராகத்தில் அமைத்ததுடன் அதனுடன் கைத்தட்டு , கோரஸ் , ஹம்மிங் போன்றவற்றை இணைத்து புதுநெறிகாட்டிய பாடல்.அதுமட்டுமல்ல தாலாட்டில் வீரமும் ,பாசமும் இன்றிணைத்தோடும் கருணை , இனிமை பொங்கும் பாடல்.பின்னாளில் ஆபேரியில் தாலாட்டுப் பாடல்கள் வெளிவரும் புதிய நெறியை அமைத்துக் கொடுத்த பாடல்.

இந்தப்படத்தின் வசனத்தையும் , இந்தப்பாடலையும் எழுதியவர் என்ற ரீதியில் கவிஞர் கண்ணதாசன் தனது அன்றைய தி.மு.க.அரசியல் சார்பான கருத்தியோட்டத்தையும் கதைக்கு பொருத்தமாக அமைந்துவிடும் நுடபத்தையும் காணலாம்.இப்பாடலில் காலத்திற்கேற்ற தனது அரசியல் போக்கின் தன்மையையும் காட்டுகிறார் கண்ணதாசன்.

தன்மானச் செல்வங்கள்
வாழ்கின்ற பூமியில்
வில்லேதும் வீரன் போலவே
மகனே நீ வந்தாய்
மழலைச் சொல் தந்தாய்
வாழ்நாளில் வேறென்ன வேண்டுமம்மா

02 மானம் ஒன்றே பெரிதெனக் கொண்டு வாழ்வது நமது சமுதாயம் – படம்: மகாதேவி [1957] – பாடியவர்கள்: டி.எஸ்.பகவதி

– மானத்தையும் வீரத்தையும் மிகுந்த உணர்ச்சிப்பாங்குடன் கூறும் தலை சிறந்தபாடல் இது.

“அபிமன்யூ போர்க்களத்தில் சாய்ந்துவிட்டான் ” என்று தொடங்கும் வரிகளில் ஹிந்தோள ராகத்தில் பீரிட்டெழும் உணர்ச்சிக் கொந்தளிப்பை மெய்சிலிர்க்கும் வண்ணம் மெல்லிசைமன்னர்கள் காண்பிப்பார்கள்.அதைத் தொடர்ந்து வரும்
” போதும் நிறுத்து ! பாண்டவர்கள் அழுது சோகம் கொண்டாடியிருக்கலாம் , கண்ணீர் வடிக்கும் கோழைப்பாட்டு எனக்குத் தேவையில்லை. என் மகன் வீரமரணத்திற்கேற்ற தாலாட்டு பாடு ! “…. மகாபாரதத்தின் அபிமன்யுவை தனது மகனுக்கு உவமையாக்கி பாடும் இப்பாடலில் இடையிடையே வரும் வசனங்களில் உணர்ச்சி பெருக்கெடுக்கிறது.மெல்லிசைமன்னர்களின் இசையோ உயிரை வதைக்கிறது.

03 தென்றல் வந்து வீசாதோ தெம்மாங்கு பாடாதோ – படம் சிவகங்கைச் சீமை [1959 ]- பாடியவர்கள் :எஸ்.வரலட்சுமி + டி.எஸ்.பகவதி

தாலாட்டுப்பு பாடலில் தனது நாட்டின் பெருமையையும் மன்னன் பெருமையையும் சோகம் பொங்க அமைக்கப்படட பாடல்.

வெள்ளியிலே தேர் பூட்டி
மேகம் போல மாடுகட்டி
அள்ளி அள்ளி படியளக்கும்
அன்பு நிலம் வாடுவதோ….

எனத் தங்கள் குடும்பத்தின் பெருமையை உணர்த்தி விட்டு , வரப்போகும் போரின் துயரத்தையும் அதன் விபரீதத்தையும் நெகிழ்ச்சியுடன் கூறும் பாடல்.

தவளை எல்லாம் குரவையிடும்
தாமரையும் பூ மலரும்
குவளையெல்ல்லாம் கவி இசைக்கும்
வந்து வந்து கூடும் வண்ண எழில் யாவும்
அண்டி வரும் போர் புயலில்
அழிந்து பட சம்மதமோ …….

ஆத்தாள் அருகினில்
அம்மான் மடிதனிலே
காத்திருக்கும் பாலகரும்
கண்ணான மங்கையரும்
போர் மேவி புறப்படுவார்
பொன்னாட்டின் புகழ் வளர்ப்பார்

யார் வருவார் யார் மடிவார்
யார் அறிவார் கண்மணியே

என சோகத்தின் உச்சிக்கு நம்மை அழைத்து செல்லும் பாடலை மெல்லிசைமன்னர்கள் முகாரி ராகத்தில் அமைத்து உணர்ச்சியை பிரதானப்படுத்துகிறார்கள் பாடல் அமைப்பும் பாடிய பாடகிகள் [எஸ்.வரலட்சுமி + டி.எஸ்.பகவதி ] பாடிய பாங்கும் தாய்மையின் குரலை ஓங்கவைக்கிறது. பாடல் வரியும் , இசையும் ஒன்றையொன்று தழுவி உயிர் பெறுகின்ற பாடல். முகாரி ராகத்தில் அமைந்த ஒரு சில பாடல்களில் இதுவும் ஒன்று.

03 சின்னஞ் சிறு கண்மலர் செம்பவள வாய் மலர் – படம்: பதிபக்தி 1959 – பாடியவர்: பி.சுசீலா

04 ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ – படம்: பாகப்பிரிவினை 1959 -பாடியவர்: டி.எம்.சௌந்தரராஜன்

05 மழை கூட ஒரு நாளில் தேனாகலாம் -படம் மாலையிட்ட மங்கை [1959 ]- பாடியவர் :எம்.எஸ்.ராஜேஸ்வரி

06 காலமகள் கண் திறப்பாள் கண்ணைய்யா – படம்:ஆனந்த ஜோதி [1963 ]- பாடியவர் :பி.சுசீலா

07 நீரோடும் வகையிலே நின்றாடும் மீனே – படம்:பார் மகளே பார் [1963 ]- பாடியவர் :சௌந்தரராஜன் பி.சுசீலா

08 பிள்ளைக்குத் தந்தை ஒருவன் – படம்:பார்த்தால் பசி தீரும் [1963 ]- பாடியவர்:டி.எம். சௌந்தரராஜன்

09 மாணிக்கத் தொட்டில் இங்கிருக்க — படம்:பணம் படைத்தவன் [1963 ]- பாடியவர் :பி.சுசீலா டி.எம். சௌந்தரராஜன் + எல்.ஆர்.ஈஸ்வரி

10 கண்ணன் வருவான் கதை சொல்லுவான் – படம்:பஞ்சவர்ணக்கிளி [1963 ]- பாடியவர் :பி.சுசீலா

11 அத்தைமடி மெத்தையடி ஆடிவிளையாடம்மா – படம்:கற்பகம் [1964 ]- பாடியவர் :பி.சுசீலா

12 காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே – படம்:சித்தி [1967 ]- பாடியவர் :பி.சுசீலா

13 செல்லக்கிளியே மெல்லப்பேசு – படம்:பெற்றால் தான் பிள்ளையா [1966 ]- பாடியவர்:டி.எம். சௌந்தரராஜன்

14 காதலிலே பற்று வைத்தால் அன்னையடா – படம்:இதுசத்தியம் [1963 ]- பாடியவர் :பி.சுசீலா

15 கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான் – படம்:பெற்றால் தான் பிள்ளையா [1966 ]- பாடியவர்:டி.எம். சௌந்தரராஜன் + பி.சுசீலா

16 செல்லக்கிளிகளாம் பள்ளியிலே – படம்:எங்கமாமா [1968]- பாடியவர்:டி.எம். சௌந்தரராஜன்

தாலாட்டில் பலவகைப்பட்ட உணர்வுகளை பிரதிபலித்த பேராற்றலைக் காண்பித்த மெல்லிசைமன்னர்கள் வீர உணர்வை வெளிப்படுத்தும் பாடல்களிலும் தங்கள் தனித்துவத்தைக் காண்பித்தார்கள்.

தமிழர் மரபில் தொன்றுதொட்டு வீரர்களின் பெருமை ,அவர்களுக்கு நடுகல் அமைத்துப் போற்றிய செய்திகளும் பழந்தமிழ் இலக்கியங்களில்
விரவிக்கிடக்கின்றன.வீரர்களைக் கொண்டாடியது மட்டுமல்ல அவர்களை வழிபாடும் செய்தனர்.

இனக்குழு சமுதாய அமைப்பு மாறி பின் தோன்றிய நிலமானிய காலத்து பாடல்கள் வீரயுகப்பாடல்கள் என்பார் பேராசிரியர்.க.கைலாசபதி.

” முதியோள் சிறுவன்
படைத்தழிந்து மாறின னென்று பல கூற
மண்டமர்க் குடைந்த னாயினுண்டவென்
முலை யறுத்திடு வென் “

புறநானூறு – 278

தனது மகனின் முதுகில் காயம்படவில்லை என்று தாய் பெருமைப்படும் பாடல். பெண்களும் வீரத்தில் சளைத்தவர்களில்லை ,போர்க்குணம் மிகுந்தவர்களாயிருந்தனர் எனக் காட்டுகிறது புறநானூறு பாடல்.

வீரர்கள் பற்றிய புகழாரங்களை கூறும் இம்மரபை பின்னாளில் அரசியல் இயக்கங்கள் சுவீகரித்து கொண்டன.குறிப்பாக தமிழ் தேசியத்தையும் , பிராமணீய எதிர்ப்பையும் மற்றும் சோஷலிஸக் கருத்துக்களையும் முழக்கமாகக் கொண்டு திரைப்படத்தை தங்கள் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தியவர்கள் அண்ணா தலைமையிலான திராவிட முன்னேற்றக கழகத்தினர்.தங்களை வீர தீரர்களாக காட்டிக்கொண்டிருந்த அன்றைய நிலையில் கட்சித் தொண்டர்களை உசுப்பேற்றவும் தாம் உய்யவும் வழி தேடினர்.

திரைக்கதையில் மட்டுமல்ல பாடல்களிலும் அவை கணிசமாகவே வெளிப்பட்டன. மரபாக இருந்த போக்கை திரைக்கதை , இசை போன்றவற்றின் உறவுகளின் அடிப்படையிலும், திரைப்படத்தை வெற்றிபெற வைக்கும் உத்தியாகவும் வீர உணர்வை வெளிப்படும் பாடல்களை பயன்படுத்தினர்.

1950 களின் ஆரமபத்தில் திராவிட முன்னேற்றக கழக கொள்கை பிரச்சாரப்பாடல்கள் இறந்தகாலத்தின் மீதான பிரேமையும்,ஏக்கமும் , அதோடு அதை புளங்காகிதப்படுத்தி புத்தாக்கம் செய்யும் வகையில் புனையப்பட்டதையும் காண்கிறோம்.

“தமிழன் என்றொரு இனமுண்டு ” என்று தொடங்கும் மலைக்கள்ளன் [ 1954 ] பட டைட்டில் பாடலை திராவிட முன்னேற்றக கழகத்தினரின் அன்றைய கொள்கை விளக்கப் பாடல் என்று சொல்லுமளவுக்கு அமைத்திருந்தார்கள். அது மட்டுமல்ல அதே படத்தில் “எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே ” என்ற பாடலும் அதி உன்னதமான கருத்துக்களை அள்ளி வீசிய பாடலாகும்.

வீர உணர்வை வெளிப்படுத்தும் பாடல்கள்

01 பறக்குது பார் பொறி பறக்குது பார் — படம்:நீதிபதி [1955 ]- பாடியவர் : கே .ஆர் . ராமசாமி

வீணரை வென்றுவந்த வீரராம்
வென்று வந்த சேரராம் – அந்த
வீராதி வீரராய் போல் சிரிக்குது பாராய்
பாண்டியன் சபையினிலே
பாய்த்தெழும் கண்ணகி போல்
பறக்குது பார் பொறி பறக்குது பார்

“பறக்குது பார் பொறி” பொறி என்று பூடகமாக தங்கள் கருத்தை வெளிப்படுத்தும் பாடல் இது.

02 வாழ்வது என்றும் உண்மையே — படம்:ராஜா மலையசிம்மன் [ 1959 ] – பாடியவர் :சீர்காழி கோவிந்தராஜன்

வெற்றியின் பாதை தெரியுதடா
வீணர்கள் கோட்டை சரியுதடா
எட்டுத் திசையும் கொண்டாடவே
எகிறிப் பாய்ந்து முன்னேறடா
முன்னேறடா முன்னேறடா

03 எங்கள் திராவிட பொன்னாடே — படம்:மாலையிடட மங்கை [1959 ]- பாடியவர் : டி.ஆர் . மகாலிங்கம்

விந்தியம் குமரியிடை விளங்கும் திருநாடே
வேலேந்தும் மூவேந்தர் ஆண்டிருந்த தென்னாடே..
எங்கள் திராவிடப் பொன்னாடே.

தி.மு.க இயக்கத்தின் கொள்கை விளக்கப்பாடல் என்ற அளவுக்கு புகழ் பெற்ற பாடல்.படத்தின் கதைக்கும் , இந்தப்பாடலுக்கும் ஏதும் தொடர்பில்லை.மக்களைக் கவர்வதற்கென்றே சேர்க்கப்படட பாடல் இது.

04 வீரர்கள் வாழும் திராவிட நாட்டை — படம்:சிவகங்கை சீமை [1960 ]- பாடியவர் :டி.எம். சௌந்தரராஜன்

மன்றம் மலரும் முரசொலி கேட்கும்
வாழ்ந்திடும் நம் நாடு – இளந்
தென்றல் தவழும் தீந்தமிழ் பேசும்
திராவிடத் தீருநாடு
வேலும் வாழும் தாங்கிய மறவர்
வீழ்ந்ததும் கிடையாது

05 அச்சம் என்பது மடமையடா — படம்:மன்னாதிமன்னன் [1960 ]- பாடியவர் :டி.எம். சௌந்தரராஜன் விளங்கினார்.

Errol Flynn

ஆங்கிலப் படங்களில் வீரதீர நாயகனாக திகழ்ந்த ஏரோல் பிளைன் [Errol Flynn ] என்ற நடிகரைப் போல தானும் நடிக்க வேண்டும் என்று விரும்பிய எம்.ஜி.ஆர் தனக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி கொண்டார்.குதிரை ஓட்டம், வாள்வீச்சு , கூட்டமாக வரும் வில்லனின் ஆட்களை அனாயாசமாக அடித்து வீழ்த்துவது , கொடியில் தாவி பாய்வது , உடையலங்காரம் என Errol Flynn பாணியை முழுதாக பின்பற்றியதென்பது தமிழ் சினிமாவில் யாரும் செய்யாத ஒன்றாக விளங்கியது.இவையெல்லாம் எம்.ஜி.ஆரை மிகப்பெரிய நட்ஷத்திரமாக வளர்ச்சி பெற உதவி புரிந்தன.

சாகசம் புரியும் நாயகனுக்கு [ எம்.ஜி.ஆர்] திராவிட முன்னேற்றக கழக பாணி வார்த்தை வீச்சுக்களும் கைகொடுத்தன.அதோடு மெல்லிசைமன்னர்களின் புதியபாணி இசையும் புது ரத்தம் பாய்ச்சியது என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.

திரைப்படத்தில் கதாநாயகன் அறிமுகம் ஆகும் காட்சிக்கு வகைமாதிரியான பாடல் எனபதற்கு முன்னுதாரணமாக அமைந்த பாடல் இது என்று துணிந்து கூறிவிடலாம்.

இந்தப்பாடலுக்கு முன்பே இது போலவே குதிரையில் அல்லது பயணம் செல்லும் போது பாடும்பாடல்கள் பல வெளிவந்த போதிலும் , அவை பயணத்தின் உல்லாசத்தில் எழும் இன்ப உணர்வை வெளிப்படுத்துவதாகவே அமைந்திருந்த நிலையில் ,1952 இல் வெளிவந்த தேவதாஸ் படத்தில் பயணத்தின் போது இயற்கையாக எழும் உற்சாகத்தை , ஊடுருவிச் செல்லும் இன்பத்தை வெளிப்படுத்துவதாக அமைந்த பாடல் ” சந்தோசம் தரும் சவாரி போகும் ” என்ற பாடலாகும்.இந்தப்பாடலையும் இசையமைத்தவர் மெல்லிசைமன்னர் என்பதும் குறிப்பிடத்தக்க செய்தியாகும்.

ஆயினும் கதாநாயகனின் உள்ளத்து வேட்கையை ,புத்துணர்ச்சியை அவனின் சமுதாயப்பார்வையை , அவனது இலட்சிய ஆவலை வெளிப்படுத்துவதாக நீலமலைத் திருடன் [1957 ] படத்தில் கே.வி.மகாதேவன் இசையமைத்த ” சத்தியமே லடசியமாய் கொள்ளடா ” என்ற பாடல் ஒரு கொள்கை முழக்கமாக அமைந்த முக்கியமான பாடல் என்று கூறலாம்.

இதே போலவே அரசிளங்குமரி [1961 ] படத்தில் ” ஊர்வலமாக மாப்பிள்ளை பொண்ணு சேர்ந்து வருகிறார் ” என்ற பாடலை டி.எம்.சௌந்தரராஜன் , சூலமங்கலம் ராஜலட்சுமி இணைந்து பாடிய பாடலை ஜி.ராமநாதன் இசையமைத்தார்.

இந்தப்பாடலின் பாதிப்பு பின்னாளில் இது போன்ற பாடல்கள் மூலம் கதாநாயகர்களை படத்தின் ஆரம்பத்திலேயே அறிமுகம் செய்யும் வழமை உருவானது.

நாடகத்தில் முன்பாட்டு [ Entrance Song ] என்று அழைக்கப்பட்ட கதாநாயகர்கள் அறிமுகமாகும் காட்சி போல , தமிழ்திரையிலும் நாயகர்கள் இது போன்ற பாடல்களுடன் அறிமுகமாவது ஒரு புதிய போக்காக அமைய மெல்லிசைமன்னர்களின் பாடல்கள் காரணாமாயிருந்தன.

வீரவுணர்ச்சி மட்டுமல்ல வெற்றிக்களிப்பில் உண்டாகும் உற்சாகத்தை ” ஏரு பூட்டுவோம் நாளை சோறு ஊட்டுவோம் ” என்ற பாடலை மகாதேவி படத்தில் மெல்லிசைமன்னர்கள் அமைத்தனர்.

இதே போன்றே திருமணம் மற்றும் அதுதொடர்பான நிகழ்வுகளைச் சிறப்பித்து காட்டும் வண்ணம் தமிழ் திரையிசை பாடல்கள் வெளிவந்திருக்கின்றன.திருமண பாடல் என்றதும் என் நினைவுக்கு வரும் முதல் பாடல் “வாராய் என் தோழி வாராயோ ” என்ற பாசமலர் திரைப்படப் பாடலே !

திருமண வைபவங்களில் பாடல்களை ஒலிபரப்பரப்புபவர்களுக்கு உடனடியாக கைவரக்கூடிய பாடலாக இந்தப்பாடல் அமைந்திருந்தது அந்தளவுக்கு திருமணத்தை பாடல்களில் வடித்துக் கொடுத்த முதன்மை இசையமைப்பாளர்கள் மெல்லிசைமன்னர்கள் என்பது மிகையல்ல.

இதுமட்டுமல்ல மணமக்களை பல சந்தர்ப்பங்களிலும் வாழ்த்திப்பாடும் அற்புதமான பாடல்களையும் தந்திருக்கிறார்கள்.

சில எடுத்துக்காட்டுக்கள்.

01 வாராய் என் தோழி வாராயோ – படம்: பாசமலர் [1961 ] -[ மணப்பெண்ணை அழைத்துவரும் பாடல் ]

02 போய் வா மகளே போய் வா மகளே – படம்: கர்ணன் 1964 ] – [ பிள்ளைபெறுவதற்கு தாய் வீடு செல்லும் போது பாடும் பாடல்.]

03 வளையல் சூட்டி – – படம்: கர்ணன் 1964 ] -[1964 ] – [ வளைகாப்புப் பாடல் ]

04 குங்குமப்பொட்டு குலுங்குதடி – – படம்: இது சத்தியம் [1964 ] – [ வளைகாப்புப் பாடல் ]

05 ஆயிரம் இரவுகள் வருவதுண்டு – – படம்: கற்பகம் [1964 ] – [ முதலிரவு நேரம் தோழி பாடும் பாடல்]

06 கல்யாண பொண்ணு கண்ணான கண்ணு – படம்: படகோட்டி 1964 ] – [ வளைகாப்புப் பாடல் ]

07 கெட்டி மேளம் கட்டுற கல்யாணம் – படம்: சந்திரோதயம் 1967 ]

08 தங்கமணி பைங் கிளியும் தாயகத்து நாயகனும் – படம்:சிவந்தமண் [ 1970 ] [ மணமக்கள் வாழ்த்துப்பாடல் ] – [ இசைத்தட்டில் வெளிவராத பாடல்.]

09 புகுந்த வீடு இனிமையான மல்லிகை பந்தல் – படம்: புண்ணியபூமி [1974 ] –

நாட்டார் பண்பியலில் அமைந்த சில பாடல்களை 1950 பாதிக் கூறிலிருந்து கொடுக்க முனைந்ததைக் காண்கிறோம்.நாட்டுப்புற இசையின் ஓசைநயங்களையும் தேவை கருதி அங்கங்கே மெல்லிசையில் இழைத்து வந்ததைக் காண்கிறோம்.

வீரம் , மானம் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் போது உணர்ச்சி கொந்தளிப்பையும் , தாலாட்டுப் பாடல்களில் தாயின் பாசத்தையும் , கண்ணீர் பெருக்கையும் , தாலாட்டின் வாய் மொழி ஓசையின்பத்தையும் அத்தோடிணைந்த மெல்லிசையின் சுகந்தத்தையும் மிக இயல்பாய் கொடுத்த பெருமை மெல்லிசைமன்னர்களை சாரும்.

எழுச்சியும் , கிளர்ச்சியும் மிக்க பாடல்களுடன் தங்களுக்கேயான,தனித்துவமிக்க இசையுலகத்தை படைத்துக்காட்ட 1960 களுக்கு நகர்கிறார்கள்.

[ தொடரும் ]

முன்னையவை:

மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் காலமும் படைப்புலகமும் : 03- T .சௌந்தர்

மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் காலமும் படைப்புலகமும் : 01 – T .சௌந்தர்

மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் காலமும் படைப்புலகமும் : 02 : T .சௌந்தர்

மனிதகுலத்தின் வரலாற்றை முன்னோக்கி நகர்த்திய ஜேர்மனிய மனிதன் பிறந்த நாள்:கோசலன்

Friedrich-Engelsபெரும் வியாபார நிறுவனங்களும், அதன் நிர்வாக அமைப்புக்களான அரசுகளும் அதன் உப கூறுகளான ஊடகங்களும், கலாச்சார சமூக அமைப்புக்களும் மக்களுக்கான தத்துவத்தை முன்வைக்க மறுத்தன. மக்கள் உண்மையை அறிந்துகொள்வதற்கான உரிமையை மறைத்தன. அதன் உச்ச வடிவமே இன்று நடைமுறைப்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது.

சீனாவையும் சோவியத் ரசியாவையும் அழிப்பதில் உலக முதலாளித்துவம் பெற்றது தற்காலிக வெற்றியே. முதலாளித்துவம் தோன்றி முன்னூறு வருடங்களுக்கு உள்ளாகவே அழிவைச் சந்தித்து இன்று தன்னைப் பாதுகாத்துக்கொள்ள இராணுவ உலகம் ஒன்றைக் உருவாக்க முனைந்துக்கொண்டிருக்கிறது.

ஒடுக்கும் அரசுகள் போலி அடையாளங்களை மக்கள் மீது திணித்து அவர்களை மோதவிட்டு இலாபம் சம்பாதித்துக்கொள்கின்றன. கருத்து மக்களைப் பற்றிக்கொள்ளாமல் அதனை உறை நிலையில் வைத்துள்ளன. மத வெறியையும் இன வெறியையும் தன்னிலை அடையாளங்களையும் ஆழப்படுத்தி ஒடுக்கப்படும் மக்களைப் பிழந்து கொன்று குவிக்கின்றன.

மனிதர்களின் சிந்தனைத் திறனை மழுங்கடிக்கும் தலைமை வழிபாட்டையும், துதிபாடலையும், அடையாள வெறியையும், குழுவாதத்தையும் சமூகத்தின் பொதுப் புத்தியாகக் கட்டமைத்து சரியான கருத்துக்கள் மக்களைப் பற்றிக்கொள்ளாமல் அதிகாரவர்க்கம் பாதுகாத்துவருகின்றது.

இன்று சமூகத்திற்கு துணிந்து உண்மையைக் கூறத் தவறினால் நாளைய சந்ததி அழிந்துபோகும்.

நாளையை முழு சமூகத்தின் அழிவின் ஆரம்பத்தையும் அறிந்துகொண்டு தமது சுய இலாபத்திற்காக உண்மைகளை உறை நிலையில் வைத்திருக்கும் ஒவ்வொரு மனிதனும் தனது சொந்த நலனை மனச்சாட்சி என அழைத்துக்கொள்கிறான். மனச் சாட்சி என்பதே வாழ் நிலையும் அவனைச் சுற்றியுள்ள புறச்சூழலும்  தீர்மானிக்கும் கருத்து என்பதைக்கூட உணர்ந்துகொள்ள மறுக்கிறார்கள்.

தாம் உண்மையைக் கூறினால் அன்னியப்பட்டுப் போய்விடுவோம் என அச்சமடையும் சுய இலாப நோக்கத்தைக் கடந்து, தாம் வாழ்ந்த சமூகத்தின் எதிர்ப்பிற்கு மத்தியில் நாளைய சந்ததிக்கு உண்மையைக் கூறியவர் சில மனிதர்களுள் ஏங்கல்சும் ஒருவர்.

மார்க்சும்  ஏங்கெல்சும் சமூகத்தில் ஏற்கனவே புதைந்துகிடந்த தத்துவங்களை தொகுத்து உலகத்திற்கு உண்மையைக் கூறினார்கள். வறுமை அவர்களைக் கொன்று தின்றது. வறுமயின் பிடியில் மார்க்ஸ் மரணித்துப் போனார்.

நூறு பூக்கள் மலரட்டும் நூறு கருத்துக்கள் மோதட்டும் என மாவோ உலகத்திற்கு அறைகூவல் விடுத்தார். கட்சியின் ஒவ்வொரு உறுப்பும் ஒவ்வொரு கணமும் மக்களின் கண்காணிப்பில் இருக்கவேண்டும் என்ற திட்டத்தை மாவோ நடைமுறைக்குக் கொண்டுவந்தார். கட்சி மக்களுக்கு எதிரானதாக மாறுமானால் அதனை உடைத்தெறியுங்கள் என்றார்.

மாவோ தலைமையில் உருவான உலகத்தின் மிகப்பெரும் நாடுகளில் ஒன்றான சீனாவை உடைத்தெறிய உலகம் முழுவதுமுள்ள ஏகாதிபத்திய ஆளும் வர்க்கங்கள் பில்லியன்களைச் செலவு செய்தன. தமது முழு வலுவையும் பல தசாப்தங்களாகப் பயன்படுத்தி சீனா – ரசியா போன்ற நாடுகள் மீதான தாக்குதல்களைத் தொடுத்தன.

புரட்சிக்கான தத்துவமான மார்க்சியத்திற்கு எதிரான இளம் சந்ததியை உருவாக்க பள்ளிகளிலிருந்தே பொய்களை கற்பித்தன.

இவற்றையெல்லாம் தாண்டி இன்றும் உலக மக்களின் விடுதலைக்கான இனம், மதம் போன்ற தன்னிலை அடையாளங்கள் அனைத்தையும் கடந்து தத்துவமாக மார்க்சியம் தலை நிமிர்ந்து நிற்கின்றது. மார்க்சியத்தையும் தகவல் தொழில் நுட்பத்தையும் நிராகரித்து இனி மனிதகுலம் வாழ முடியாது என்பதை பெரும்பாலான மக்கள் உணர்ந்துகொள்கிறார்கள்.

இவ்வாறு மார்க்சியம் நிலை பெறுகிறது என்றால் அதனை தோற்றுவித்தவர்களில் ஏங்கெல்ஸ் பிரதானமானவர்.

வர்த்தகத்தில் பெரும் பணமீட்டிய பருத்தி ஆலை உரிமையாளர் ஒருவரின் மகன் அரச படைகளால் தேடப்படுவதை அறிந்த தாய் பதைபதைதுப் போகிறார். “நான் நாளாந்த செய்திப் பத்திரிகையை எடுத்த போது எனது மகன் தேடப்படுவதைத் தெரிந்துகொண்டேன். கடவுளுக்கு மட்டும் தான் தெரியும் நான் எவ்வளவு வேதனையடைந்திருப்பேன் என்று” என்று அந்தத் தாய் மகனுக்கு எழுதிய கடிதத்தை இன்று உலகில் பலரும் படித்துவிட்டார்கள். பஞ்சு ஆலை உற்பத்தித் தொழிற்சாலைகள் 19ம் நூற்றாண்டின் பெரும் வருவாயை ஈட்டும் வர்த்தகம். ஜேர்மனியிலும் இங்கிலாந்திலும் ஆலைகளைக் விரிவுபடுத்தியிருந்த செல்வந்தர், தனது மகனையும் வியாபாரத்தில் ஈடுபடுத்த விரும்பினார்.

மகனிற்கோ வியாபாரத்தில் நாட்டம் வரவில்லை. சமூகக் கொடுமைகளைக் கண்டு கொதித்தெழுந்தார். அதற்கான அரசியல் தத்துவங்களைக் கற்க ஆரம்பித்தார். அவர் 17 வயதாகவிருக்கும் போது ஹேகல் என்பவரின் தத்துவம் சமூகத்தின் வளர்ச்சியை விபரிப்பதாக பல இளைஞர்களால் கருதப்பட்டது. ஜேர்மனியில் ஹேகலிய இளைஞர்கள் சமூகத்தில் கலகம் விளைவித்தனர். அவர்களோடு பருத்தி ஆலைச் செல்வந்தரின் மகனும் இணைந்துகொண்டார்.

அந்த இளைஞனின் சிந்தனை இல்லாமலிருந்தால் உலகம் இன்னும் நூற்றுக்கணக்கான வருடங்கள் பின் நோக்கிச் சென்றிருக்கும். துறை சார்ந்த கல்வி, பொருளியல், தத்துவம், விஞ்ஞானம், போன்றவை மட்டுமல்ல உலகின் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான போராட்டங்களும் அவரின் நிழல் படாமல் கடந்து செல்ல முடியாது. தான் வாழ்ந்த போது உலகில் அறியப்படாமலிருந்த அந்த மனிதன் தான் ஏங்கல்ஸ்.

ஏங்கெல்ஸ் 28.11. 1820 ஜேர்மனியில் பிறந்தார்.

வியாபரத்தில் ஏங்கல்சிற்கு ஈடுபாட்டை ஏற்படுத்த முனைந்த அவரது பெற்றோர்கள் அவரை இங்கிலாந்திற்கு பயணமாகக் கோரினர். ஏங்கல்ஸ் இற்கு 22 வயதாகும் போது அவரது தந்தை பங்குதாரராகவிருந்த நூல் நெய்யும் ஆலையில் வேலை செய்வதற்காக இங்கிலாந்திலுள்ள மன்செஸ்டர் என்ற இடத்திற்கு ஏங்கெல்ஸ் அனுப்பப்படுகிறர்.

விக்ரோரியா மில் என்று அழைக்கப்பட்ட அந்த ஆலை இன்று இன்று மூடப்பட்டுவிட்டது. பெரும்பாலான பகுதிகள் புனரமைக்கப்பட்டு வியாபார நிறுவனங்களுக்கான அலுவலகமாகப் பயன்படுத்தப்படுகின்றது. மன்செஸ்டர் செல்லும் வழியில் ஏங்கெல்ஸ் கார்ல் மார்க்சைச் சந்திக்கிறார். அப்போது கார்ல் மார்க்ஸ் ஜேர்மனிய ஊடகம் ஒன்றின் ஆசிரியராகப் பணி புரிகிறார்.

கார்ல் மார்க்ஸ் ஹேகலின் தத்துவத்தின் பிற்போக்கான பகுதிகளோடு முரண்பட்டிருந்த வேளையில் இருவருக்கும் இடையேயான கருத்து உடன்பாடு ஏற்படவில்லை. மன்செஸ்ரரில் மேரி பேர்ன்ஸ் என்ற பெண்ணை சந்திக்கும் ஏங்கல்ஸ் அவரோரு 20 வருட காலம் வாழ்க்கை நடத்துகிறார்.

மன்செஸ்டரில் தொழிலாளர் குடியிருப்புக்களின் அவலத்தைக் காண்கிறார். அடிப்படை வசதிகள் கூட இல்லாமல், சேரிகளில் வாழ்ந்த தொழிலாளர்களின் அவலங்கள் தொடர்பாகவும், குழந்தைத் தொழிலாளிகள் தொடர்பாகவும் ஏங்கெல்ஸ் எழுத ஆரம்பிக்கிறார். தனது ஆக்கங்களைக் கார்ல் மார்க்சின் ஊடகத்திற்கு அனுப்பி வைக்கிறார்.

24 மொழிகளைக் கற்றிருந்த ஏங்கெல்ஸ் இன் கட்டுரைகள் ஆங்கில ஊடகங்களிலும் பிரசுரமாகின்றன.

கார்ல் மார்க்சின் ஊடகம் ஜேர்மனியில் தடைசெய்யப்பட்டதும், அவர் பாரிஸ் நகரிற்குச் செல்கிறார். 1814 ஆம் ஆண்டில் ஏங்கெல்ஸ் ஜேர்மனிக்குச் செல்லும் வழியில் கார்ல் மார்க்சை பாரிசில் சந்திக்கிறார். இப்போது ஏங்கெல்ஸ் ஹெகலியன் அல்ல. மார்க்சின் கருத்துக்களோடு ஒன்று படுகிறார்.

அதன் பின்னான காலப்பகுதி முழுவதுமே ஏங்கெல்ஸ் கார்ல் மார்க்சுடன் இணைந்து பின்னாளில் உலகை மாற்றும் புரட்சிகரத் தத்துவங்களை எழுதினார். கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை கார்ல் மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸ் இணைந்து எழுதினர்.

ஒரு தனிமனிதனால் இவ்வளவு ஆய்வுகளையும் தத்துவங்களையும் எழுதி முடிக்க இயலுமா என மார்க்சின் தத்துவங்கள் வியப்பை ஏற்படுத்தின என்றால் அவற்றின் ஒவ்வொரு உருவாக்கத்திலும் ஏங்கெல்சின் பங்களிப்பு இருந்தது. கார்ல் மார்க்சின் வாழ்க்கைச் செலவைக் கவனித்துக்கொள்வதற்காக ஏங்கெல்ஸ் தொடர்ச்சியாக அவரது தந்தையின் ஆலையில் வேலை பார்த்தார்.

1883 ஆம் ஆண்டு கார்ல் மார்க்ஸ் மரணித்த பின்னர், அவரது எழுத்துக்களைத் தொகுப்பதிலேயே ஏங்கல்சின் வாழ்க்கையின் பெரும்பகுதி செலவானது. ஏங்கெல்ஸ் குடும்பம் தனிச்சொத்து அரசு என்ற பிரபலம் மிக்கி நூலை எழுதினார். ஏங்கெல்சின் நூல் பல்கலைக் கழகங்களில் அவரின் மரணத்தின் பின்னர் பல்வேறு வாதப் பிரதிவாதங்களுக்கு உள்ளாகியது. துறைசார் கல்வியில் மனிதவியல் என்ற கற்கை நெறி புகுத்தப்பட்டது.

ஏங்கெல்சின் நூலின் ஆய்வு தவறானது எனவும் வேறு ஆய்வு முறைகளை முன்வைக்கிறோம் என்றும் முதலாளித்துவ தத்துவ ஆசிரியர்கள் கூறினர்.

ஏறக்குறைய அரை நூற்றாண்டு ஆய்வுகளின் பின்னர் மனித குலத்தின் தோற்றம் வளர்ச்சி பற்றிய ஏங்கெல்சின் கருத்துக்கள் சரியானவை என கல்விச் சமூகம் ஏற்றுக்கொண்டது.

ஏங்கெல்சும் மார்க்சும் முன்வைத்த கருத்துக்கள் மக்களைப் பற்றிக்கொண்டு தீயாகப் பரவின. முதலாளித்துவ அதிகார மையங்கள் இவர்களின் எழுத்துக்களைக் கண்டு அஞ்சின.

மார்க்சினதும் ஏங்கல்சினதும் மரணத்தின் பின்னர் மார்க்சியம் சோவியத் ரஷ்யாவில் உழைக்கும் மக்களின் ஆட்சியை நிறுவியது. உழைக்கும் மக்களுக்கான ஜனநயகத்தை உலகிற்கு அறிமுகப்படுத்திற்று. தேசிய இனங்களுக்குப் பிரிந்து செல்லும் உரிமை சோவியத் ஆட்சியில் வழங்கப்பட்டது. சீனாவில் மார்க்சியத்தின் நடைமுறை புதிய ஜனநாயக முறைமையை உருவாக்கிற்று. உலகின் எந்த மூலையில் மக்கள் சார்ந்த போராட்டங்கள் நடந்தாலும் மார்க்சியத்தை நிராகரித்து வெற்றிபெற முடியாது என்பதை மக்கள் உணர்ந்துகொண்டனர்.

ஐரோப்பிய அதிகாரவர்க்கம் மார்க்சியத்திற்கு எதிரான சதி முயற்சிக்காக மில்லியன்களைச் செலவிட்டது. கல்லூரிகளில் மார்க்சியத்திற்கு எதிரான பிரச்சாரம் பாடத்திட்டத்திலேயே மேற்கொள்ளப்பட்டது. 2008 ஆம் ஆண்டு பல்தேசிய வியாபார நிறுவனங்கள் உருவாக்கிய பொருளாதார நெருக்கடியின் பின்னர் மார்க்சிம் மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது.

மோசூலில் முருகன் : எழிலன் தமிழ்

மோசூல் வட ஈராக்கிலுள்ள அழகிய நகரம். ஒன்றரை மில்லியன் மக்கள் அமைதியாக வாழ்ந்த அந்த நகரத்தின் ஆட்சி அதிகாரத்தை இஸ்லாமிய அரசு (IS or ISIS) என்ற இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பு கையகப்படுத்தி இரண்டரை வருடங்கள் கடந்துவிட்டன. ஸ்னோடென் உட்பட பலர் மக்கள் மத்தியில் முன்வைத்த அமெரிக்காவின் பயங்கரவாதம் தொடர்பான ஆவணங்களில் IS அமைப்பை அமெரிக்காவே தோற்றுவித்து வழி நடத்துவதாகத் தகவல்கள் வெளியாகின. மத்திய கிழக்கிலும் அதனைச் சூழ உள்ள நாடுகளிலும் அமெரிக்க ஏகாதிபத்தியம் நடத்தும் இராணுவ தர்ப்பாரில் சாட்சியின்றிக் கொல்லப்பட்டவர்கள் பல ஆயிரங்கள்.

மூல வளங்கள் மட்டுமின்றி, பல்வேறு பலன்களை போரின் விளைவாக அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் உள்வாங்கிக்கொண்டன. அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளின் பல்தேசிய நிறுவனங்களின் ஆயுத விற்பனை உச்சத்தை அடைந்தது. தவிர, மத்திய கிழக்கிலுள்ள செல்வந்தர்களை அகதிகள் என்ற பெயரில் அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் உள்வாங்கிக்கொண்டன. சிரியா, ஈராக் உட்பட்ட நாடுகளின் முதலீடுகள் மேற்கை நோக்கி இடம்பெயர்ந்தமையால் பொருளாதார நெருக்கடி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. கடற்கொள்ளையில் குவிக்கப்பட்ட மூலதனமே பிரித்தானியாவில் முதன் முதலாக முதலாளித்துவம் தோன்ற மூலதனமாக அமைந்தது. இன்றும் அப்பாவிகளின் அவலக் குரல்களே முதலாளித்துவம் தற்காலிகமாகத் தன்னைத் தக்கவைத்துக்கொள்ள பயன்படுகிறது.

மத்திய கிழக்கின் அழிவிற்கு அமெரிக்காவின் தலையீடும் ஆக்கிரமிப்புமே காரணம் என்று அப்பகுதி மகக்கள் நம்புவதாக 2008 ஆம் ஆண்டில் பதியப்பட்ட கருத்துக்கணிப்பு ஒன்று கூறியது. அந்தப் பிரதேசத்தில் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போர் ஒன்று தோன்றுவதற்கான அறிகுறிகளை அது கட்டியம் கூறிற்று. அதனை உணர்ந்துகொண்ட ஏகாதிபத்திய நாடுகள் அந்தப் போரைத் தனது அடியாள் அமைப்பின் ஊடாகவே நடத்தி அழித்துவிட எண்ணியதும் ஐ.எஸ் இருப்பிற்கு மற்றொரு காரணம்.

ஐ.எஸ் அமைப்பைத் தோற்றுவித்து அதனூடாக தனக்கும் எதிரான போரைத் தோற்றுவித்து அப்பாவிகளை நரபலியெடுத்துக்கொண்டிருக்கும் ஏகபோக நாடுகளே வன்னி இனப்படுகொலையையும் திட்டமிட்டு நடத்தின. இதையெல்லாம் இராசதந்திரம் என்று எளிதில் கடந்து சென்றுவிடுகிறது ஒரு கூட்டம்.

இவர்களின் மத்தியில் இறுதி யுத்தம் வரைக்கும் தன்னைப் போராளியாக அர்ப்பணித்த எழிலன் மோசூல் தொடர்பான தனது பார்வையை முன்வைக்கிறார். சரி, தவறு என்ற நியாய விசாரணைக்கு அப்பால் விவாத நோக்கில் அவரது கட்டுரையை இங்கு பதிகிறோம்

-இனியொரு.

மோசூலில் முருகன்

மோசூல்

மோசூல்
மோசூல்

மோசூல் ஈராக்கின் இரண்டாவது பெரிய நகரம். கடந்த இரண்டு வருடங்களாக உலகத்தின் அதிகாரங்கள் அத்தனையையும் தனித்து எதிர்த்து நின்றது.

இஸ்லாமிய தேச போராளிகளிடமிருந்து அந்த நகரை மீட்பதற்கான இறுதி நடவடிக்கை நேற்று தொடங்கபட்டு விட்டது. அமெரிக்க தரை மற்றும் விமானப்படையின் உதவியுடன் ஈராக்கிய இராணுவம் முன்னேறி வருகிறது.
மக்களை வீடுகளில் தங்கியிருக்குமாறும் பீரங்கி மற்றும் விமான குண்டு சத்தங்களை இடி மின்னல் சத்தம் என கூறி குழந்தைகளில் பயத்தை விரட்டுமாறும் இராணுவ தளபதி கூறியுள்ளார்.

இதே வேளை பயங்கரவாதிகள் மக்களை பணயக்கைதியாக மாற்றி சண்டை செய்வதாகவும் பயங்கரவாதிகளின் தலைவர் அபூபக்கர் பத்தாத்தி உலகில் இனி ஒழிந்திருக்க இடமில்லாததால் மோசூலில் சண்டை பிடித்து சாக உத்தேசித்துள்ளதாகவும் மேற்குலக ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
இன்றைய உலகின் தொழில் நுட்ப வசதியால் பயங்கரவாதிகள் தரப்பு செய்திகளும் சமூகவலைத்தளங்களில் வருகின்றன. மோசூல் வீதிகளில் பயங்கரவாதிகள் அமெரிக்காவை அடித்து விரட்டப்போவதாக சபதம் செய்யும் காட்சிகளும்; பத்து வயது நிரம்பிய சிறுவர்கள் முழு ஆயுததாரிகளாக வீதிகளை காவல் செய்யும் காட்சிகளும் வெளியாகியுள்ளன.

பிரம்படி

aanaசரியாக 30 வருடங்களுக்கு முன்னர் எனக்கு ஜந்து வயது. இலங்கை தீவில் யாழ்ப்பாண நகர். அதை அண்டிய கொக்குவில் என்ற ஒரு ஊர். சரியாக இதே ஒக்டோபர் மாதத்தின் நடுப்பகுதி. தொழில்நுட்பம் வளரவில்லை. சிலவீடுகளிலேயே தொலைக்காட்சி வானொலி இருந்தது.

கொக்குவிலில் ஒருசிறிய வீதி யாழ்ப்பாணத்தில் சிறிய வீதிகளை ஒழுங்கை என கூறுவார்கள். அதன் பெயர் பிரம்படி. அதற்கு ஏன் பிடிம்படி என்று பெயர் வந்தது என்று தெரியாது. ஆனால் அந்த ஒழுங்கையில் ஒருவீட்டில் எனக்கு ஒவ்வொரு நாளும் பிடிம்படி விழுந்திருக்கிறது.

அதற்கு அடுத்த ஒழுங்கையில் தான் எனது வீடு. இரண்டு ஒழுங்கைக்கும் இடையில் 200 மீற்றர்தான் இருக்கும். பிரம்படியில் ஒரு ஆரம்ப கல்விகூடம் அதை நாம் நேசரி என்று கூறுவோம். எனக்கு ஐந்து வயது இருக்கும் ஒரு விஜயதசமியில் எனது பெற்றோர் என்னை அங்கு கூட்டி சென்றனர். ஒரு சிடுமூச்சி ஆசிரியை அரிசி நிறைந்த பாத்திரத்தில் எனது விரலை பலவந்தமாக பிடித்து அ என்று எழுதினார்.

எனது பெற்றோருக்கு ஒரே பூரிப்பு ஆனால் எனக்கு திண்டாட்டம்;. நான் படிப்பில் சரியான மட்டம். ஒவ்வொரு நாளும் வீட்டில் இருந்து அழுது கொண்டு கிளம்புவேன். அம்மாவும் இன்று மட்டுந்தான் படிப்பிப்பார்கள்; என சமாதானப்படுத்தி அனுப்புவாள்;. ஏறத்தாள ஒரு ஆண்டுகளாக என்னால் என்ற ஒரு தமிழ் எழுத்தை மட்டுமே எழுதவும் வாசிக்கவும் புரிந்து கொண்டேன் என்பதை அடுத்த பந்தியின் நீங்கள் தெரிந்து கொள்வீர்கள்.

முருகன்

ipkf29 வருடங்களுக்கு முன்னர். சரியாக இதே ஒக்;டோபர் மாதத்தின் நடுப்பகுதி. அன்று காலை பாடசாலை போன நினைவு இல்லை. மாலை அளவில் கடுமையான குண்டு சத்தங்கள் தூரத்தே கேட்டன.

யாழ்ப்பாணத்தில் நிறைய படித்த மனிதர்கள் உள்ளதாக கூறுவார்கள்;. அப்படி எங்கள் ஒழுங்கையிலும் நான்கு படித்த மனிதர்கள் நெருங்கி வந்து கொண்டிருந்த குண்டு சத்தங்களை பற்றி விவாதித்து கொண்டிருந்தார்கள்.

‘இந்தியா ஒருநாளும் தமிழர் மீது குண்டு போடாது.’ ‘அது இரப்பர் குண்டுகளையே ஏவுகிறது.’ ‘புலியை பயமுறுத்த அது சத்தவெடி போடுகிறது.’ இப்படி பல அரிய தகவல்களை அவர்கள் வழங்கியதால் அடுத்த ஒழுங்கையில் நடைபெற்று வரும் சண்டையில் 40 பொதுமக்கள் கொல்லப்பட்டபோது கூட நாம் அன்றிரவு அமைதியாக உறங்கினோம்.

காலை நான் கண்விழித்த போது யுத்தம் அடுத்த ஒழங்கையில் கடுமையாக நடந்து கொண்டிருந்தது. புலிகளின் தலைவர் பிரபாகரனை பிடிக்க இந்திய இராணுவம் முயன்று கொண்டிருப்பதாக அயலவர் பேசிக்கொண்டனர். அப்போதுதான் எங்கள் வீட்டின் படலையை திறந்து கொண்டு சில புலிகள் நுழைந்தார்கள்

என்னைவிட மூன்று நான்கு வயது மட்டுமே அதிகமான ஒரு சிறுவன் கெந்திக் கெந்தி நடந்து வந்து கொண்டிருந்தான். அவன் காலில் ஏற்பட்டிருந்த காயத்துக்கு கட்டுப்போடப்பட்டிருந்தது. ஒரு வளர்ந்த போராளி அவனை எங்கள் வீட்டின் விறாந்தையில் இருத்;திவிட்டு தங்களுக்கு மதியம் ஒரு ஜந்து பாசல் உணவு வேண்டும் எனவும் தாம் இந்த ஒழுங்கையில் உள்ள வீடுகளில் தலா ஜந்து பாசல் உணவு கேட்டுள்ளதாகவும் எங்கள் வீட்டு பெரியவர்களிடம் கூறினார். உணவை பெற்றுக் கொள்ளும்போது இந்த சிறுவனை மீள அழைத்துக் கொள்வதாக மேலும் தெரிவித்துவிட்டு சென்றனர்.

சிறுவன் கையில் ஒரு சிறிய கறுத்த அழகான இயந்திர துப்பாக்கி இருந்தது. நான் நல்லூர் திருவிழாவில் அடம்பிடித்து அழுது வாங்கிய துப்பாக்கியைவிட (மொம்மை துப்பாக்கி) அது அழகாக இருந்தது. நானும் எங்கள் அயல் சிறுவர்களும் தூரத்தே நின்று அவனையும் துப்பாக்கியையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம்.

அவனுடன் பெரியவர்கள் பலதை கதைக்க முயன்றனர். அவன் எதற்குமே பதில் சொன்னதாக நினைவில்லை. அந்த சிறுவன் என்னைவிட நிறமாகவும் கட்டுறுதியான உடல் அமைப்பையும் கொண்டிருந்தான். அவனை முருகன் மாதிரி இருக்கிறான் என எனது ஆச்சி பலரிடம் கூறிக்கொண்டிருந்தாள். முருகன் என்பது கடவுள் என்று எனக்கு அன்றே தெரிந்தமையும், அனைவரும் அவனை மரியாதையுடன் நடத்தியமையும் என்னை அவன்மீது பொறாமை கொள்ள வைத்தது.

சண்டைபோடும் பெடியளுக்கு பலமான சாப்பாடு போடவேண்டும் என்று கூறிக்கொண்டிருந்த ஆச்சி அதற்கு முதல் நாள்தான் அடை காக்க வைத்திருந்த கோழியை எழுப்பிக்கலைத்துவிட்டு முட்டைகளை அவித்துக் கொண்டிருந்தது.

ஈழப்போரில் ஆச்சிகளை பற்றி கட்டாயம் சொல்ல வேண்டி உள்ளது. நடுத்தர வயதிரைவிட அறுபதை கடந்த அப்பு ஆச்சிகள் போராளிகள் மீது கடுமையான பாசமும் நம்பிக்கையும் கொண்டிருந்தனர். கடுமையான முற்றுகைக்குள்ளேயும் போராளிகளை காத்தல் ஆயுதங்களை மறைத்தல்; இன்னும் பலவற்றில் இந்த ஆச்சிகளின் பங்குகள் விபரிக்கபட முடியாதவை.
யாருடமும் பேசாத அந்த சிறுவனுக்கு பொழுது போகவில்லை போலும். வேலியிலிருந்து கம்பி ஒன்றை உருவி எடுத்து அவனது துப்பாக்கி பிடியின் கீழே எதையோ ஆழமாக எழுதிக்கொண்டிருந்தான். நான் அதை உற்று நோக்கினேன். அவன் அதில் எழுதிய முதல் எழுத்து அ அடுத்த எழுத்துகளை என்னால் படிக்க முடியவில்லை. ஏன் என்பதை நான் முதல் பந்தியில் தெரிவித்திருந்தேன்;. அதாவது எனக்கு என்ற தமிழின் முதல் எழுத்தை மட்டுமே வாசிக்கும் அறிவு இருந்தது.

மதியமளவில் சிலபோராளிகள் எங்கள் வீட்டுக்கு வந்து உணவு பாசலையும் அவனையும் கொண்டு சென்று விட்டார்கள். அதன்பிறகு முருகன் என்ன ஆனான் என்று எங்கள் எவருக்கும் தெரியாது. சில ஆண்டுகள் அவன் முகம் எனக்கு நினைவில் இருந்தது பின்னர் அதுவும் மறைந்து போனது.

வன்னி

ஆண்டுகள் உருண்டோடி விட்டன. இது 2003 ஒரு சுட்டெரிக்கும் மதியபொழுது. அது ஒரு சமாதான காலம். புலிகள் சண்iடையை நிறுத்திவிட்டு கொடி, குடை, ஆலவட்டம் என்பவற்றில் கூடிய கவனம் செலுத்திக்கொண்டிருந்த நேரம். நான் புலிகளின் சாள்ஸ் அன்னரி படையணியின் தளபதி கோபித் என்பவடன் உரையாடிக் கொண்டிருந்தேன். அவர் மிகவும் எளிமையானவர். எனினும் புலிகளின் அனைத்து பிரிவுகளை போலவே அவரும் சாள்ஸ் அன்னரி படைப்பிரிவுக்கு ஒரு படைய சின்னத்தை உருவாக்கும் எண்ணத்திலிருந்தார். அதை கணணியில் வடிவமைத்து தருமாறு என்னிடம் கேட்டார்.

storyநானும் அதில் ஒரு சிரமமும் இல்லை. எனக்கு ஒரு SMG தாருங்கள் அதை எனது ஒளிப்படக்கருவியால் ஒரு படம் எடுத்து அதை கணணிக்கு மாற்றி படைய சின்னத்தை அழகாக முடித்து தருவதாக கூறினேன். இதில் மேலதிகமாக ஒன்றை கூற வேண்டியுள்ளது. இந்த படைப்பிரிவின் பெயரை தாங்கிய மாவீரன் சாள்ஸ் அன்ரனிக்கும் SMG என்ற துப்பாக்கிக்குமான பந்தம் விபரிக்க முடியாத தனி அத்தியாயம்.

கோபித் சிறிது நேரம் சிந்தித்தார். இணையத்தில் இருந்து ஒரு SMG துப்பாக்கி படத்தை எடுத்து அதை செய்ய முடியாதா? என கேட்டார். ஏனெனில்; 1990 முற்பகுதிலேயே அந்த துப்பாக்கி வளக்கொழிந்து விட்டது. புலிகள் இன்று நவீன ஆயுதங்களுடன் இருந்தார்கள்.

13 வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் இணையத்தை பாவித்தவர்களுக்கு தெரியும் அதன் சிரமம். இன்று போல அதிக செறிவுடனான படங்களை எழுக்க முடியாது. எனவே நான் கண்டிப்பாக அந்த துப்பாக்கிதான் வேண்டும் என்று கூறிவிட்டேன்.

கோபித்தும் விடுவதாக இல்லை. பல சிரமங்களுக்கு பின்னர் புலிகள் தலைமை செயலகத்தினரிடமிருந்து சில வரைபடங்களை வாங்கி வந்தார். வரைபடத்தின் படி நானும் கோபித்தும் சில பேராளிகளுமாக முதல் இரு குழிகளை தோண்டினோம். பாவிக்க முடியாமல் போயிருப்பினும் புலிகள் ஆயுதங்களை எப்போதும் தூக்கி வீசி விடுவதில்லை. களிம்பு தடவி பொலித்தீன் பைகளில் இட்டு பூமிக்கு அடியில் புதைத்திருந்தனர். அந்த குழியில் நாங்கள் தேடிய துவக்கு இல்லை.

மூன்றாவது குழியை தோண்டி ஆயுதங்களை வெளியே எழுத்தபோது ஒரு துருப்பிடித்த SMG கிடைத்தது. அதை சுத்தம் செய்து வர்ணம்பூசி படம் எடுத்துவிடும் முழுவேலையும் என்னிடமே விழுந்திருந்தது.

அடுத்த நாள் நான் அந்த துப்பாக்கியை எடுத்து துருவை போக்க தொடங்கினேன். சட்டென்று ஒரு ஞாபகம் வந்தது. கைபிடிக்கு அருகில் கூர்ந்து நோக்கினேன். அதே என்ற எழுத்து. அவசர அவசரமாக ஏனைய எழுத்துக்களின் மேலிருந்த துருவை தட்டிவிட்டு வாசிக்க முயன்றேன். அ என்ற எழுத்தைவிட அடுத்த எழுத்துக்கள் படிக்க முடியாத வகையில் துருப்பிடித்து சேதமாகியிருந்தன.
இந்த சம்பவம் எனக்கு பேரச்;சரியத்தை உண்டாக்கியிருந்தது. அன்று முருகன் கையிலிருந்த அதே துப்பாக்கி அதே எழுத்து. வை தொடர்ந்து அடுத்து என்ன எழுதியிருப்பான்? அம்மா? அண்ணா? அல்லது அவனது பெயர்?

sigsபுலிகளின் பழைய பதிவுகளை அடுத்த சிலநாட்கள் ஆராய்தேன். அதில் எங்கும் அன்றைய பிரம்படி மோதலில் என தொடங்கும் பெயரில் பதின்ம வயது சிறுவன் இறந்த தடம் இல்லை. அன்றைய மோதலில் பங்குபற்றிய புலிகளில் பலர் இன்று இல்லை. இருந்த ஒரு சிலராலும் அவனை நினைவு படுத்த முடியவில்லை. சில இரவுகள் முருகன் எழுதிய மீதி சொற்கள் என்னவாக இருக்கும் என்ற கேள்வி என்னுள் எழுந்தது. ஒருவேளை எனது அறிவுக்கு அப்பாற்பட்ட ஏதோ ஒரு சங்கேத சொற்களாக இருக்குமோ என்றுகூட தோன்றியது.

அடுத்த சில ஆண்டுகளில் புலிகளுக்கும் அரசுக்கும் சண்டைதொடங்கி புலிகள் அழிந்து போயினர். சரணடைந்த மூத்த போராளிகளும் காணமல் போகடிக்கபட்டார்கள். இவர்களுடன் முருகனும் காணாமல் போய்விட்டான் என்று நினைத்து அவனை முழுமையாக மறந்து விட்டிருந்தேன்.

மோசூல்

மோசூலில் பாழடைந்த வீடொன்றில் முற்றத்தில் அந்த முருகனை இன்று நான் கண்டேன். அதே பத்து வயது தோற்றத்துடன் நேற்று நடந்த சண்டையில் காலில் ஏற்பட்ட காயத்துக்கு கட்டுப்போட்டபடி… ஏதோ ஒரு ஆச்சி கொடுத்த ரொட்டியை தின்றுவிட்டு தனது கையிலிருந்த துப்பாக்கியில் கூரிய ஆணியால் வக்கு அடுத்ததாக வரும் சொற்களை எனக்கு புரியாத அரபியில் எழுதிக் கொண்டிருந்தான்.

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு இறக்குமதியாகும் மாட்டிறைச்சி அரசியல் : வி.இ.குகநாதன்

modi_rssமோடி தலமையிலான சங்கபரிவாரங்களின்(RSS) பொம்மலாட்ட அரசு இரு விடயங்களில் திறம்படச் செயற்பட்டுவருகின்றது. ஒன்று இந்தியாவின் வளங்களையும், சந்தையையும் கார்பிரேட் நிறுவனங்களிற்கு விற்றல், மற்றையது நாட்டினை இந்துமயமாக்கல் என்ற பெயரில் பார்ப்பானிய ஆதிக்கத்தினை நிலை நிறுத்தல். அதன் ஒரு நோக்கமாக அரங்கேற்றப்பட்ட ஒரு நாடகமே மாட்டிறைச்சி அரசியல்.

முகமது அக்லாக்
முகமது அக்லாக்

இதன்படி இந்தியாவில்மாட்டிறைச்சிக்கு எதிரான போராட்டம் என இந்துவெறிக்கும்பல்களால் ஒரு வெறியாட்டமே நடைபெற்றுவருகின்றது. இதன் உச்சக்கட்டமாக உத்திரப்பிரதேச நகரிலுள்ள தாதரி நகரில் இடம்பெற்ற முகமது அக்லாக் என்பவர் கொல்லப்பட்டு, அவரது மகள் நிர்வாணப்படுத்தப்பட்டு கொடுமைபடுத்தப்பட்டதனை முழு ஊரே மதத்தின் மகுடியில் கட்டுண்டு வேடிக்கைபார்த்தது. பின்னர் போலிசும் குற்றவாளிகளைத் தண்டிப்பதனைவிட்டு உண்மையில் மாட்டிறைச்சிதான் இருந்ததா? என ஆய்வுசெய்வதில் காலத்தினைச் செலுத்தியது…இத்தனைக்கும் மாட்டிறைச்சி இந்தியாவில் தடைசெய்யப்படவில்லை..இறுதியில் அக்லாக் வீட்டிலிருந்தது ஆட்டிறைச்சயே என ஆய்வுகூட முடிவுகள் தெரிவித்தன.

இது ஒரு சிறு உதாரணமே. இதுபோன்று பல கொடுமைகள் மாட்டிறைச்சியினை முன்வைத்து குறிப்பாக முஸ்லீம் மக்கள் மீதும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீதும் இந்து வெறியர்களால் நிகழ்த்தப்பட்டன.

S_Shankaracharya-Lஇத்தனைக்கும் இந்து மதம் என்றுமே மாட்டிறைச்சியினை தவிர்த்துவந்துள்ளதா? என்றால் பதில் இல்லை என்பதே. யசூர் வேதத்தில் கோசவம், வாயவீயஸ் வேதபசு, ஆதித்ய வேதபசு என பலவகையான யாகங்கள் குறிப்பிடப்படுகின்றன. அவை ஒவ்வொன்றும் குறிப்பிடுவன யாதெனில் எத்தனை பசுக்களை என்ன நோக்கத்திற்காக பலியிடுவது என்பதே. உதாரணமாக அஷ்டதச பசுவிதானம் என்பது 18 பசுக்களை கொலை செய்து நடத்தும் யாகம். இதுபற்றி சங்காரச்சாரியாரிடம் கேட்டபோது அவர் கூறுவது “அவ்வாறான யாகங்களின் பின்பு பிராமணர்கள் மாட்டிறைச்சி உண்பது உண்மைதான், ஆனால் அப் பிராமணர்கள் காரம், புளி சேர்க்காது சிறிதளவே தேச நலனிற்காக உண்கிறார்கள் “. ஆக அவரது பிரச்சனை புளி காரமும், அளவுமே தவிர பசுக்கள் கொல்லப்படுவதல்ல. அந்தணர்கள் சாப்பிட்டால் தேச நலன், அக்லாக் சாப்பிட்டார் என்று சந்தேகிக்கப்பட்டால் கொலை இதுதான் பார்ப்பனிய நீதி.

beefஇன்று இந்தியாவில் வறிய மக்களின் உணவான மாட்டிறைச்சி அவர்களிற்கு மறுக்கப்படும் அதேவேளை இந்தியாவிலிருந்து இலட்சக்கணக்கான டன்களில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. உலகிலேயே மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியாதான் முன்னனி வகிக்கின்றது. இந்த ஏற்றுமதிக்கான அனுமதிப்பத்திரம் மிகச் சிலரிடமே உள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் இந்த உயர் சாதி இந்துக்களே. மாட்டிறைச்சி ஏற்றுமதியில் அல் கபீர் எக்ஸ்போர்ட் பிரைவேட் லிமிட்டெட், அரேபியன் எக்ஸ்போர்ட் பிரைவேட் லிமிட்டெட் என்பனவும் முக்கியமான நிறுவனங்கள். இவற்றின் பெயரினைப்பார்த்துவிட்டு இது ஏதோ இஸ்லாமியரிற்கு சொந்தமானது என நினைக்கத்தோன்றும்.

ஆனால் அவை முறையே சதீஸ், சுனில் கபூர் என்ற இந்துக்களிற்கே சொந்தமானது. அவ்வாறு பெயர் வைத்ததன் மூலம் இஸ்லாமியரே மாடுகளை கொன்று ஏற்றுமதி செய்கிறார்கள் என்ற மாயையினை இந்தியாவில் ஏற்படுத்துவதுடன் வளைகுடா நாடுகளிற்கு இலகுவாக ஏற்றுமதி செய்யலாம் என்பதேயாகும். எனவே இவ்வாறான மாட்டிறைச்சி ஏற்றுமதி பற்றி இந்துவெறியர்கள் அலட்டிக்கொள்வதில்லை, ஏனெனில் அந்த இலாபம் தனது எசமானர்களிற்கும், தரகுப்பணம் (கொமிசன்) அரசியல்வாதிகளிற்கும் செல்வதேயாகும்.

flagஇந்தியாவின் நிலை அவ்வாறிருக்க இலங்கையிலும் மாட்டிறைச்சியினைத் தடைசெய்யவேண்டும் என்று பொதுபலசேனா போன்ற பௌத்த அடிப்படைவாதிகள் கூச்சலிடத்தொடங்கினார்கள். புத்தனின் கொள்கைகளை எல்லாம் விட்டுவிட்டு அவரது பெயரினை மட்டும் இலங்கைக்கு கொண்டுவந்து மதத்தின் பெயரில் பிழைப்பு நடாத்தும் இவர்களும் மாட்டிறைச்சிக்குத் தடைவேண்டும் என கூச்சலிட்டுவந்தனர்.மகிந்தவின் ஆட்சியின்போதே இக் கோரிக்கை பலமடைந்திருந்தாலும் மகிந்த கூட வெளிப்படையாக இதனை ஆதரித்து கூறவில்லை.

ஆனால் அண்மையில் நல்லிணக்க முககமூடியினை மெதுவாக அகற்றிவரும் மைத்திரி பொதுபலசேனாவுடான மூடிய அறைச்சந்திப்பின் பின் இலங்கையில் மாடுவெட்ட maithreeதடைவிதிக்கப்போவதாகவும், வேண்டுமானால் இலங்கைக்கு வெளியிலிருந்து இறக்குமதி செய்துகொள்ளலாம் எனக்கூறியயுள்ளார். மகிந்தவே நிறைவேற்றாதனை மைத்திரி நிறைவேற்றுவதாக கூறியுள்ளதால் பௌத்த அடிப்படைவாதிகள் பெருமகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த அறிவிப்பினை தமிழர்சார் நிகழ்வில் அறிவித்தமைமூலம் தமிழர்-முஸ்லீம் முரண்பாட்டினை தூண்டுவதும் இதன் பின்னாலுள்ள சூட்சுமம். இதனையறியாமலோ அல்லது அறிந்து கொண்டோ யாழிலிருந்து வரும் தமிழ் பத்திரிக்கை ஒன்றும் மாட்டிறைச்சி தடையினை வலியுறுத்தி ஆசிரியர் தலையங்கம் எழுதி சங்கு ஊதுகிறது. (சும்மா சாதரண சங்கல்ல வலம்புரி சங்கு).

இதில் வேடிக்கை இந்தியாவில் மோடியின் ஆதரவு மதஅடிப்படைவாதிகள் மாட்டினை கொன்று ஏற்றுமதி செய்யலாம், ஆனால் சாதரண வறிய மக்கள் சாப்பிடக்கூடாது என்கிறார்கள். இலங்கையில் சிறிசேனாவோ மாட்டினை வேறு எங்காவது கொன்று பின் இறக்குமதி செய்துண்ணுங்கள் என்கிறார். இதனால் இலங்கையில் உள்ளூர் மாட்டுப்பண்ணைத்தொழில் பாதிக்கப்படுவதோடு, மாட்டிறைச்சி விலையும் அதிகரிக்கும். மறுபுறத்தில் மாட்டிறைசச்சி இறக்குமதி மூலம் பெருமுதலாளிகள் கொழுத்த இலாபடைவார்கள்.

அத்துடன் இலங்கை அரசியல்வாதிகளிற்கும் இறக்குமதி அனுமதிப்பத்திரமூலமாக தரகுப்பணம் கிடைக்கும். சாதரண மக்கள் மத முரண்பாடுகளிற்கு பலியாவார்கள். பலியாகும் அப்பாவிகளை காப்பாற்ற அவர்கள் யாருக்காக சண்டையிட்டு கொள்கிறார்களோ அந்த கடவுள்களும் வரப்போவதில்லை.

இப் பிரச்சனையினை முஸ்லீம்களும் வெறும் மதஅடிப்படையில் நோக்காது இதனால் பாதிக்கப்படும் பிறஇனத்தவர்கள் , பண்ணையாளர்கள், மானிடநேயமிக்கவர்களுடன் இணைந்து போராடவேண்டும்.

ஏனெனில் ஒடுக்குபவர்கள் என்றுமே தமது நலனில் ஒற்றுமையாகவிருக்க ஒடுக்கப்பபடுபவர்களே சாதி, மத அடிப்படையில் பிரித்துவைக்கப்பட்டடுள்ளார்கள்.
முடிவாகக்கூறின் பெரு முதலாளிகள் பொருட்கள், சேவைகளை மட்டுமல்ல கடவுளையும் கூட விற்று காசாக்க வல்லவர்கள், அரசியல்வாதிகள் அந்த கடவுள் விற்பனையிலும் தரகு பெறத்தெரிந்தவர்கள். பாமரர்கள் இது எதுவுமறியாமல் தங்களிற்குள் சண்டையிட்டு பலியாகத் தெரிந்தவர்கள். தேவை விழிப்புணர்வே.

உஷ்… ! இதெல்லாம் வெளியே சொல்லக்கூடாது : கவிதா லட்சுமி

– கருவறைக்கு வெளியே – நூலிலிருந்து-கவிதா லட்சுமி

the_mirrorஇந்த கண்ணாடி முன் நின்று என்னைப் பார்த்துக்கொண்டிருக்கின்றேன். தினமும் இப்படித்தான் பல நேரங்களில் நான் என்னைப் இப்படி நின்று நிதானமாக எந்த சலனமுமற்றுப் பார்ப்பதுண்டு. கண்ணாடியுள் விரியும் பெருவெளியின் வாடை, விறைத்த காற்று, மௌனத்தின் அலறல் என அனைத்தும் என்னால் மட்டுமே உணரக்கூடியது. வேண்டாம்! கண்ணாடியில் முகங்களை மட்டும் பார்க்கின்றவர்களுக்கான விம்பம் இல்லை இங்கு நான் காண்பது.

அறையின் சாளரக் கண்ணாடி வழியே சூரியகதிர்கள் முகக்கண்ணாடியில் தெறித்து விழுந்துடைகின்றன. இந்தக் கண்ணாடி இருக்கும் அறையில் ஒரு கட்டிலும் பக்கத்தில் ஒரு மேசையும் இருக்கின்றது. அவை தவிர இந்தக்கண்ணாடி மட்டும் தான் இந்த அறைச்சுவரில் தொங்கிக்கொண்டிருக்கும் பொருள். இந்த அறைச்சுவரின் நிறம் பொருட்கள் எல்லாமே வெளிர் நிறத்தில் இருப்பது எனக்கு முக்கியமானது. வெள்ளை தூய்மையின் நிறமென்றும், அமைதியின் நிறமென்றும், வெளிச்சத்தின் குணம் என்றும் எல்லா இடங்களிலும் வெண்மை பூசி வைத்திருக்கிறேன். பெரிய ஜன்னல்களில் இரவு நேரங்களிலும் வெளிச்சம் பரவ மின்விளக்குகள் எரிந்தபடியே இருக்கும். இரவுகள் பயங்கரமானவை. தூக்கத்தில் இருந்து திடுக்கிடெழுந்து கண்விழித்துப் பார்த்தால் எங்கும் இருட்டு. வானம், பூமி, அறை என் கண்ணாடி அதில் என் முகம் எல்லாம் இருட்டு. சில பகல் நேரங்களும் வெளிச்சம் விழுங்கிய பயங்கர இரவை ஒத்தவையாகவே பிறக்கிறது.

வேலைகளின் இடையிடையே எனது முகத்தைப் பார்ப்பது எனக்குத் தான்தோன்றித்தனமாக நடந்துகொண்டிருக்கும். எனது முகம் ஒன்றும் அத்தனை அழகில்லை என்பது எனக்குத் தெரியும். ஏனோ ஒரு நாட்கூட இந்த கண்ணாடியைப் பார்க்கும் போது நான் சிரித்ததில்லை. முப்பது வயதை எட்டக்கூடிய சின்னச் சின்னச் சுருக்கங்கள் சில இடங்களிற் தென்படுகின்றன. புன்னகையைச் செதுக்க மறுக்கப்பட்ட ஒரு சிதைந்த சிலையின் முகத்தைத்தான் இந்தக் கண்ணாடி பார்க்கிறது. இந்தக் கண்ணாடி உயிருள்ளது போல நான் பேசும் போது, என்னுடன் பேசுகிறது, அழும் போது என்னுடன் அழுகிறது. அதனாற்தான் இந்த முகக்கண்ணாடியில் எனக்கான விடை, இந்த உலகத்தில் நான் நடமாடுவதற்கான விடை வருமென்று நான் நினைத்துக்கொண்டிருக்கலாம்.

அது கண்ணாடிக்குத் தெரியுமா? இந்தக் கண்ணாடி முன் மட்டும்தான் நான் இப்படி ஒரு விசித்திரமானவளாய், கொஞ்சம் பைத்தியக்கராத்தனமானவளாய் எதையோ தேடுபவளாய் நிற்கிறேன். சூனியமாய், எதுமற்றதாய், வெறும் இருண்ட பிரபஞ்சமாய் தோன்றும் உலகத்தை சற்றே ஒதுக்கி வைத்தபின், மற்ற நேரங்களில் உங்களைப் போல ஒருத்தியாய் என்னை நான் காட்டிக்கொள்ளவும், நடமாடவும் கற்று வைத்திருக்கின்றேன்.

நான் அழகாய் இருப்பதாய்தான் இப்போதும் பலர் சொல்கிறார்கள். அந்த அழகை ஏனோ இந்தக்கண்ணாடி என்னிடம் இருந்து ஒளித்துவிடுகிறது. நானும் எனது புருவத்தை, கண்களிற் தீட்டப்படாத மைப்பகுதியை, காய்ந்த உதடுகளை ஈரப்படுத்தி, எனது மார்புகளின் இறுக்கத்தை, எனது பருமனில்லாத உடல் வாகுவை ஒவ்வொன்றாக கவனிக்கின்றேன். என்னால் ஒருபோதும் என்னை இரசிக்க முடிந்ததில்லை. ஏதோ பல குறைகள் எல்லா அங்கங்களிலும் தெரிகின்றது.

இப்போது சாயங்காலம்.

என்னை யாரும் விரும்புவதற்குரிய அறிகுறியை இன்றும் என் கண்ணாடியில்த் தேடுகின்றேன். என்னை யாரும் காதலிக்க மாட்டார்கள். யாராலும் காதலிக்கப்படுவதர்கோ, அன்புகாட்டப்படுவதற்கோ தகுதியற்றவளின் முகம் எப்படி இருக்கமோ அப்படித்தான் எனது முகம் இருக்கின்றது. யாரும் என்னோடு வாழச் சமத்திக்கமாட்டார்கள். அதற்குரிய தகுதியை நான் அடைந்தவளாக நான் பிறக்கவில்லை என்றும், என்னிடம் வாழ்வதற்கான தகுதி எப்போதும் இருந்ததில்லை என்று எனக்குள் யாரோ சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். சூரியனை அடித்து விரட்டிய இருளின் நிசப்தம் பரவும் வெளிபோல எனது தனிமை என்னைச் சுற்றிப் பரந்துகிடக்கின்றது. இருளை தின்று செமிக்கும் முயற்சியில் எனது வாழ்வு அனலை மென்று முழுங்கிக் கொண்டிருந்தது.

இந்த முகக்கண்ணாடியில் என்னைத் தவிர இன்னும் சில உருவங்கள் வந்து போகின்றன. அவர்கள் என்னுடன் பேசுவதுண்டு பழகுவதுண்டு. இவர்கள் எனக்கு மிக நெருக்கமுள்ளவர்களாக இருக்கின்றனர். இருந்தாலும் இவர்களில் எனக்குப் பிடிப்பில்லை. இவர்கள் முர்க்கமானவர்கள். என்னுடைய இந்த முப்பது வயது முகத்தை, அனுபவத்தை எனது வளர்ச்சியை அதன் சந்தோசத்தை அவர்கள் பிடுங்கிவிட்டிருக்கின்றார்கள். இவர்கள் வரும் போதெல்லாம் இந்தக் கண்ணாடியை உடைத்துவிடும் பலம் என் உடம்பில் ஏறும். கைகள் நடுங்கும். ஆனாலும் செய்கையிழந்து நான் பார்த்துக் கொண்டிருக்கின்றேன். சிறு வயதிலிருந்தே பிரியமுடியாத ஒரு பிணைப்பு இந்தக் கண்ணாடியில்த் தோன்றும் மனிதர்களோடு இருக்கின்றது.

இங்கே பாருங்கள் இதில் பருமனாக இருப்பவள்தான் அம்மா. பக்கத்தில் உள்ள முலையில் தலை வாறுப்படதா முகத்துடனுடம், எவ்வித சலனமுமற்று துடிப்பற்று இருப்பதுதான் நான்.

வெளிச்சம் விழுங்கிய பிந்திய அந்தி நேரம். எனக்கு இப்போது ஐந்து வயது.

நீளமான தலைமுடி காற்றில் பறந்து கொண்டிருக்கின்றது. எனது தோல் அதிக மண்ணிறத்தன்மையுடையதாக மாறிக்கொண்டிருக்கிறது. முழங்கால்களில் புண்ணும், சிவப்பேறிய சோகைபடிந்த கண்களும், சோர்ந்த உடற்கட்டும் உள்ள என்னை பார்த்து அதிக நேரம் குளித்திருக்கிறாய் அதுதான் இப்படி இருக்கிறது என்கிறாள் அம்மா. பாடசாலையில் யாரும் எனக்கு என்ன ஆயிற்று என்று விசாரிக்கும் போது நான் சொல்ல வேண்டிய பதில்களை அம்மா எனக்கு இப்படித்தான் ஏதோ ஒரு விதத்தில் சொல்லித் தருவாள். ஆனால் எனக்கு அது அப்படியில்லை அது பொய் என்று தெரியும் என்றாலும் நானும் அம்மா சொல்வதையே சொல்லிப் பழகினேன். நான் பயந்து போயிருக்கிறேன். இந்தப் பயத்திற்கு ஒரு வாடை இருக்கிறது. இந்த வாடையின் நிறம் கறுப்பு, படபடவென்று கேட்கும் ஒலி நிறைந்த இடங்களில் என்னால் இந்த வாடையை உணரமுடியும். வயது முதிந்தவர்களின் முச்சுக்காற்றில் இந்த வாடை வீசத்தொடங்குகிறது. பின் அவை இந்த இடம், அறை, சனம் நிறைந்த இடம், காற்று, வெளி என்று பரவி அசிங்மாய் மணக்கிறது இந்த உலகம். முக்கியமாக எனது முகக்கண்ணாடியில் இந்த வாடை வீசிக்கொண்டிருக்கும். அதை உங்களால் அறியமுடியாது.

எப்போதும் போல எனது சிறுபிராயத்து வீடு கலைந்து கிடக்கிறது.

என் அம்மா என்னைப் பார்த்து நான் குண்டாக இருப்பதாகவும், அசிங்கமாகவும், எனது தலைமுடி மிகக்கேவலமாக இருப்பதாகவும் சொல்லிக்கொண்டிருக்கிறாள். நான் எதற்கும் உதவாதவள் என்று எனக்கு அடிக்கடி ஞாபகப்படுத்திக்கொண்டிருப்பதும், என்னை எதுக்குமாகாத ஒரு பிறவியாக மனதில் பதியவைத்த காலங்களும் கடந்து விட்டிருக்கின்றது. அம்மா சொல்வதெல்லாம் இப்போது எனக்குப் பழகிவிட்டது. பாதுகாப்பற்ற இந்த வீட்டின் அமுக்கமும், வாடையும், மனதை முழுதாக அடைத்துவிட்டிருக்கின்றது. என்னைப் பற்றிய அக்கறை யாருக்கும் இல்லை என்பதை நான் அப்போதே உணர்ந்திருந்தாலும் அதை பற்றி நான் பெரிதாகத் அலட்டிக்கொள்வதில்லை. எனது அம்மா தூங்கிவிட்ட பிறகு எழப்போகும் பயங்கரக் கனவின் நினைவில் அதிர்ந்து போயிருப்பதில் மற்ற விடயங்கள் பெரிதாகத் தெரியாமல் போயிருக்கும்.

அந்தக் கனவு வரும் போதெல்லாம் அழுகை பலமாக வரும். அழும் சத்தம் வராமல் ஒரு சுட்டுவிரல் என் வாயை இறுகப் பொதியிருக்கும். அது ஒரு தனியான அறையோ, கழிப்பறையோ போன்ற இடம். சுற்றிலும் இருட்டு. என்னை எழுப்பி அழைத்து வந்த உருவம் என்னை மல்லாக்கப்படுத்தியோ அல்லது சுவரோடு சாத்தியோ வைத்து தனது முழு பலத்தையும் என்மீது வீழ்த்தும். அப்போது அந்தக் கண்கள் இரவில் ஒளிரும் காட்டு மிருகத்தின் கண்களை ஒத்து அகோரமாய் தெரியும். வயிற்றில் பயத்தையும் பசியையும் உண்டுபண்ணும். அந்தரங்க உருப்புகளில் எரிவு உண்டாகி, சிறுநீர்கழிக்க வேண்டும் போன்ற உணர்வு வரும். ஒரு முனகல் சத்தம் கூட வராமல் இந்தக் கனவை கடக்க வேண்டியது எனது கடமை என எனக்கு கட்டளையிடப்பட்டிருக்கிறது. இது ஒருபுறமிருக்க, இந்தக் கனவு முடிந்து நான் எழும் போது என் உடம்பின் பல பாகங்களில் நீலம் பூத்திருக்கும். கண்டிய காயங்களும், சிவந்த ரத்தக்கன்றல்களும், தூக்கமிழந்த இரவுகளின் தாக்கமாக கண்கள் சோகையும் படிந்திக்கும். உடல் அடித்துப்போட்டாற் போல வலி எடுக்கும். பாடசாலை போகவே பிடிப்பில்லாத மனநிலை உண்டுபண்ணியிருந்த காலமது.

நான் காணும் இந்தக் கனவு பற்றி யாருக்கும் சொல்ல எனக்கு அனுமதியில்லை. சொல்லும் தைரியமும் எனக்கு இல்லை. ஆனாலும் இந்த அகோரக்கனவு பற்றி எனது அம்மாவும், அப்பாவும், பாடசாலை ஆசிரியர்களும் மற்றும் அயல்வீட்டுக்காரர்களும் அறிந்தே இருந்தனர் என்று எனக்குத் தெரியும். அதனால்தான் யாரும் எனது வீட்டிற்கு வருவதில்லை. அந்தக் கனவு அவர்களையும் தொத்திவிடுமோ என்று அவர்கள் அஞ்சியிருக்கலாம். என் வயதுச்சினேகிதிகள் யாரும் என் வீட்டிற்கு வந்து நான் அறிந்ததில்லை. என்னையும் எங்கேயும் வெளியே அனுப்ப வீட்டில் அனுமதியில்லை. எல்லாம் இரவில் வரும் அகோரக் கனவுகளால் வந்த வினை.

என்னுடன் எப்போதும் இருக்கும் எனது கைப்பொம்மை என்னைப் போலவே கொஞ்சம் அழுக்காய்தான் இருக்கும். இருந்தாலும் தோட்டத்து மூலைகளிலும் கட்டிலின் அடியிலும், மேசையின் இடுக்கிலும் நாங்கள் அமர்ந்து பேசுவது அதிகம். எனது இரத்தக் காயங்களும், முக்குச்சலியும் வேர்வையும் ஒட்டிய இந்தபொம்மை எனக்கு முக்கியமானது. அதனுடன் தான் இப்போதும் நான் படுத்திருக்கிறேன். தூக்கம் என் இமையைப் பாரமாக்குகின்றது. நானும் ஒவ்வொரு இரவும் தூங்காமல் இருந்துவிடுவதென்று அசுரபலத்துடன் இமையை எதிர்த்துப் வழமைபோல போராடுகின்றேன். இந்த கனமான இருட்டும், உடற்சோர்வும் என்னை வழக்கம் போல உறக்கத்தில் ஆழ்த்தி விடுகிறது.

பல காலம் மாற்றப்படாத போர்வையின் நாற்றத்துடன் எனது கட்டிலில் நான் உறங்கிக்கொண்டிருக்கின்றேன்.

ஆழ்ந்த நித்திரையில் அந்த அகோரமான கை என்னை தட்டி உசுப்புகிறது. அரைத்தூக்கத்தில் எழுந்து அந்தக் கனவுக் கையோடு இழுபட்டுப்போகின்றேன். மனது வேகமாகத் துடிக்கத் தொடங்குகிறது. கால்களின் நடுக்கம் உடல் முழுதும் குளிரச்செய்கிறது. அதே கழிவறைக்கருகில் என்னை சுவரோடு சாத்திவைக்கும் அந்த பேயுருவத்தின் உடலில் இருந்து அருவருப்பான வாடை அடிக்கிறது. தடிமனான மீசையும், மது அருந்திய நெடியும் அருவருப்பை உண்டாக்கி வாந்தி வரும் போல வயிறெங்கும் குமட்டல் எடுக்கிறது.

“கனவா இது”

“ம்”

“எப்ப முடியும் கனவு. எனக்கு ஏலாது. ”

“கொஞ்ச நேரத்தில முடியும், சத்தம் போடகூடாது என்ன”

“ம்”

“இதெல்லாம் யாருக்கும் சொல்ல கூடாது என்ன? எல்லாரும் இப்படிதான் அவங்க வீட்டில செய்றது.. ம்”

ஒரு பெரிய விரல் எனது உதடுகளை இறுக்க மூடுகிறது. உதடுகள் வலிக்கின்றன. உடல்முழுதும் ஆயிரம் ஊசிகள் துளைத்தது போல பெருவலி கிளம்புகிறது. மயக்கம் கனவை மூடிக்கொள்கிறது. ஒரே இருட்டு. எங்கும் வெறும் கறுப்பு. அதே அசிங்க வாடை.

“விடுங்கப்பா… வலிக்குதப்பா… காணும்ப்பா”