வாக்குகளின் அடிப்படையில் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் அவசியமில்லை!

exit from the eurozone: golden star fallen from a blue wall
exit from the eurozone: golden star fallen from a blue wall

பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும் என்று 52 வீதமானவர்கள் பொதுசன வாக்கெடுப்பில் வாக்களித்திருக்கிறார்கள். அதனைத் தொடர்ந்து பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரன் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். அவரது அறிவிப்பைத் தொடர்ந்து இரண்டு மாதங்களுக்குள் நடைபெறவிருக்கும் கொன்சர்வேட்டிவ் கட்சியின் மாநாட்டில் புதிய பிரதமர் தெரிவு செய்யப்படுவார். புதிய பிரதமருக்கான வேட்பாளர் பட்டியலில், முன்னை நாள் லண்டன் மேயரும் அரசியல் கோமாளி எனச் சித்தரிக்கப்படும் பொரிஸ் ஜோன்சன், நீதித்துறைச் செயலாளர் மைக்கல் கோவ் ஆகியோர் பிரதான இடத்தை வகிக்கின்றனர்.

ஐரோப்பியப் ஒன்றியம் என்பது அந்தப் பிராட்ந்தியத்தைக் கட்டுப்பாட்டினுள் வைத்திருக்கும் பல்தேசிய வியாபார நிறுவனங்களின் நலனுக்காக அவர்களின் தலைமையில் உருவாக்கப்பட்டது. முதலாளித்துவ அமைப்பில் காணப்படும் அடிப்படை ஜனநாயக உரிமைகளைக் கூட மதிக்காத வெறுமனே நிர்வாகக் கூட்டாக ஐரோப்பியப் பாராளுமன்றம் செயற்படுகின்றது. கிரேக்க மக்களின் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிரான வாக்குகளைக் கூட மதிக்காமல் அந்த நாட்டின் உழைக்கும் மக்கள் மீது ஐரோப்பியப் பாராளுமன்றம் சர்வாதிகாரத்தைப் பிரயோகித்த வேளையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் போலி ஜனநாயகம் யாருக்கானது என்ற கேள்விக்கு உழைக்கும் மக்கள் விடை கண்டுகொண்டார்கள்.

எது எவ்வாறாயினும், வாக்களிப்பின் பின்னர் கூட சட்டரீதியாக ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டிய தேவை இல்லை என சட்ட வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். வாக்குகள் பிரித்தானிய அரசிற்கான மக்களின் ஆலோசனையாகக் கருதப்படுமே தவிர அது சட்டரீதியாகச் செல்லுபடியற்றதாக்கப்படலாம் என்பதே இன்று வரைக்கும் மக்களுக்குச் சொல்லப்படாத உண்மை.

பிரித்தானியாவின் பிரபல சட்ட வல்லுரனான டேவிட் அலன், Financial Times என்ற சஞ்சிகையில் குறிப்பிடும் போது பிரித்தானிய மக்களின் வாக்குகள் ஆலோசனையாகக் கருதப்படலாமே தவிர கட்டாயமானதாகக் கருதப்பட வேண்டிய தேவை இல்லை என்கிறார். இறுதியாக முடிவெடுக்கும் அதிகாரம் பாராளுமன்றத்திற்கே காணப்படுகிறது என்கிறார். (Brexit voting is “advisory,” not “mandatory.” Parliament has final say).

ஐரோப்பிய ஒன்றியத்தில் மட்டுமன்றி உலகப் பொருளாதாரத்தின் உச்ச பட்ச நெருக்கடி அதிகார வர்க்கத்தில் பிளவுகளை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் மக்கள் தமக்கு எதிராகத் திரும்பி விடாமல் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் மக்களுக்கு ஏற்பட்ட வெறுப்பையும் விரக்தியையும் மட்டுமன்றி இன்று வாழ்வாதாரம் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் பெரும்பான்மை உழைக்கும் மக்களின் வெறுப்பையும் நிறவாதிகளும், பிற்போக்குத் தேசியவாதிகளும் கையகப்படுத்திக்கொண்டார்கள்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானிய மக்கள் வெளியேறுவதற்காக வழங்கிய வாக்குகள் பிரித்தானிய அரச அதிகாரத்தின் மீதான வெறுப்பு என்பது ஒரு புறமிருக்க அதனை பிற்போக்கு தேசியவாதிகளும் நிறவாதிகளும் தலைமைதாங்க ஆரம்பித்துள்ளனர். இதனால் அதிகாரவர்க்கம் தற்காலிக மகிழ்ச்சியில் திழைக்கிறது.

இலங்கையில் பொருளாதார நெருக்கடியும், உழைகும் மக்களின் போராட்டங்களும் அதிகரிக்கும் போது பேரினவாதம் தூண்டப்படுவது போன்ற ஒரு புறச்சூழலே ஐரோப்பாவிலும் காணப்படுகின்றது.

brexit-இவ்வாறான சூழலில் மக்களின் எதிர்ப்புணர்வு ஐரோப்பாவில் புரட்ட்சிக்கான சூழலை தோற்றுவித்துவிடக் கூடாது என்பதில் அதிகாரவர்கம் திட்டமிட்டுச் செயற்படுகின்றது. வெளியேறவேண்டும் என்று பிரச்சாரம் மேற்கொண்ட பிரித்தானிய சுதந்திரக் கட்சியிக்கு பணம் வழங்கும் நிறுவனங்களில் பல்வேறு பல்தேசிய நிறுவனங்களும் அடங்கும். பிரித்தானியாவின் பணக்காரர்களும் ஒருவரான ஸ்ரூவார்ட் வீலர் இரண்டு லட்சம் பவுண்ஸ்களைப் பணமாக வழங்கியுள்ளார்.

இந்த நிலையில் பிரித்தானியாவின் அடுத்த பிரதமராக பொரிஸ் ஜோன்சனும் அவரைத் தொடர்ந்து நிறவாதிகளும் ஆட்சிக்கு வருவதற்கான சூழல் ஆபத்தானது.

அது நடைபெறுமானால் பிரித்தானியாவில் அதிகார வர்க்கத்திற்கு இடையிலான உள் முரண்பாடு அதிகரிக்கும்.

எது எவ்வாறாயினும் எதிர்வரும் குறுகிய காலம் பிரித்தானியாவில் ஆரம்பித்து பெரும் பொருளாதார நெருக்கடியை ஐரோப்பா சந்திக்கும் வாய்ப்புக்களே அதிகமாகக் காணப்படுகின்றன. ஐரோப்பாவிலிருந்து வெளியேற பிரித்தானியா மக்கள் வாக்களித்தமையே அவ்வாறான நெருக்கடிக்குக் காரணம் என குற்றச்சாட்டுக்களை முன்வைத்து முதலாளித்துவ – நவகாலனியப் பொருளாதார அமைப்பைப் பாதுகாக்க அதிகாரவர்க்கம் முயலும் என்பதில் எந்தச் சந்தேகமும் இருக்க முடியாது.

இந்த நிலையில் ஐரோப்பாவிலிருந்து பிரித்தானியா வெளியேற வேண்டுமானால் அது பாராளுமன்றத்தால் மட்டுமே தீர்மானிக்கப்படும். அவ்வாறான ஒரு பாராளுமன்றத்தை நிர்வகிக்கும் பொறுப்பு புதிய பிரதமருக்கு வழங்கப்படும். அதன் பின்னர் லிஸ்பன் ஒப்பந்த அடிப்படையில் இரண்டு வருடப் பேச்சுக்களின் பின்னர் பிரித்தானிய உடன்பாடுகள் முரண்பாடுகளின் அடிப்படையில் வெளியேறலாம்.

பொதுவாக உடன்பாடுகள் மக்களுக்கு எதிரானதாகவும், முரண்பாடுகள் மக்களுக்கு வழங்கப்பட்ட குறைந்தபட்ச ஜனனாயகம் சார்ந்தாகவும் அமையும் என்பதில் சந்தேகங்கள் இருக்க முடியாது.எது எவ்வாறாயினும் மக்கள் விரோத, ஐரோப்பியப் பாராளுமன்றத்துட பகைமுரண்பாட்டை ஏற்படுத்திக்கொள்ளாத, பல சட்ட அமைப்புக்களில் உடன்பாடுகொண்ட ஆட்சியமைப்பே பிரித்தானியாவில் தொடரும்.