தமிழீழக் கனவான்களது ஆசியுடன் பேரினவாதத்தின் நிலப்பறிப்பு: பறிபோகும் மட்டக்களப்பு

கிழக்கு மாகாணத்தில் கல்லோயா குடியேற்றத் திட்டத்தின் போது நடைபெற்ற நிலப்பறிப்புக்களே 1956 ஆம் ஆண்டு தமிழ்ப் பேசும் மக்கள் மீதான படுகொலைகளுக்கு வழிவகுத்தது. கல்லோயா குடியேற்றத் திட்டத்தைத் தொடர்ந்து தமிழ்ப் பேசும் மக்களின் பாரம்பரிய பிரதேசங்கள் திட்டமிட்டு அபகரிக்கப்பட்டதன் மறுபுறத்தில் சுய நிர்ணைய உரிமைக்கான கோரிக்கையும் வலுவடைந்து ஆயுதப் போராட்ட இயக்கங்களைத் தோற்றுவித்தது. நிலப்பறிப்பு இன்றும் தொடர்கிறது.

வெறுமனே தமிழ்ப் பேசும் மக்களின் செறிவைக் குறைப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டிராத புதிய வடிவில் தொடர்கின்றது. ‘சர்வதேசம்’ என்று புலம்பெயர் மற்றும் தமிழ் வாக்குப் பொறுக்கி அரசியல்வாதிகள் அழைத்துக்கொள்ளும் உலகின் பயங்கரவாத அதிகாரவர்க்கங்களது நலன்களை நோக்கமாகக்கொண்டும் அதே நிலப்பறிப்புத் தொடர்கின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தி; 1300 ஏக்கர் நிலப்பரப்பு இலங்கை அரசாங்கத்தால் சுவீகரிக்கப்பட்டு ஐரோப்பிய, அமெரிக்க பல்தேசிய வர்த்தக நிறுவனங்களில் சுரண்டலுக்காக கையளிக்கப்படவுள்ளது.

சுற்றுலாத் துறைக்குக்காகச் சுவீகரிக்கப்படும் இந்த நிலப்பரப்பில் அரச நிலம் மட்டுமல்ல தனியார் நிலமும் அடங்கும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. மட்டக்களப்புக் கடற்கரைப் பகுதியிலிருந்து 500 தொடக்கம் 100 மீட்டர் பகுதியிலிருந்து ஆரம்பிக்கும் இந்த நிலப்பறிப்பு மக்கள் குடியிருப்புக்களை ஊடறுத்துச் செல்கின்றது.

வரலாறு தெரிந்த காலம் முழுவதும் அங்கு வாழும் தமிழ்ப் பேசும் மக்கள் வெளியேற்றப்பட சுற்றுலா விடுதிகளும், களியாட்ட விடுதிகளும், மதுபான சாலைகளும் என மாபெரும் கலாச்சாரச் சிதைப்பும் இங்கு நடைபெறுவதற்கான கதவுகள் திறக்கப்பட்டுவிட்டன.

நிலப்பறிப்பு மட்டுமல்ல கலாச்சாரச் சிதைப்பையும் பேரினவாத இலங்கை அரசு பல்தேசிய வர்த்தக் நிறுவனங்களின் துணையோடு பாரிய அளவில் நடத்த ஆரம்பித்துவிட்டது. சுன்னாகத்தில் இலங்கை அரசு, வடமாகணத்தின் ‘தேசியத் தலைவர்’ சீ.வீ.விக்னேஸ்வரன், ஐங்கரநேசன் ஆகியோரால் நடத்தப்பட்ட சுன்னாகம் அழிவு குறித்து இன்றுவரை தமிழீழக் கனவான்கள் வாய் திறக்கவில்லை. மட்டக்களப்பின் நிலப்பறிப்பும் தமிழீழக் கனவான்களது ஆசியுடனேயே நடைபெறும்.