All posts by inioru admin

என்னதான் ஜெயலலிதாவின் நிலமை? : வி.இ. குகநாதன்

j-photoஜெயாவின் நிலை தொடர்பாக இரு கோணங்கள் முன்வைக்கப்பட்டடன. முதலாவது அரசின் கோணம். அதாவது காய்ச்சலில் அனுமதி, உடல்நிலை முன்னேற்றம் என்பதாகும். இதில் பல ஓட்டைகள் உள்ளன. சாதாரண காய்ச்சல், நீ்ர்ச்சத்து குறைவிற்கு 10 நாட்களிற்கு மேல் அப்போலவில் ஒரு மாடியினையே ஒதுக்கி சிகிச்சை ஏன்? உள்ளூராட்சித் தேர்தலிற்கான விண்ணப்ப பட்டியலிலோ, காவிரிப்பிரச்சனை தொடர்பான சட்டரீதியான மனுவிலோ ஜெயாவின் கையெழுத்து இல்லாமை. ஆளுனரின் அறிக்கையின் சொற்களே visit, wish என்றவாறு தெளிவற்றே உள்ளன, மாறாக ஜெயாவிடம் நேரடியாக பழக்கூடையினை கொடுத்ததாகவவோ அல்லது அவா ஏதாவது பதில் கூறியதாகவோ தகவல் இல்லை. இந்த ஓட்டைகள்

இரண்டாவது கோணமான ஜெயா மூளை மரணமடைந்து விட்டார் அல்லது கோமாவிலுள்ளார் என்ற தமிழிச்சியின் கோணத்தினை வலுப்படுத்தியது. இதுவும் நம்பும்படியாகவில்லை. ஏனெனில் அவ்வாறான ஒரு நிலையெனின் இப்போதே கட்சியின் முக்கியஸ்தர்களிடையே அடுத்த முதல்வரிற்கான காய்நகர்த்தல்கள் மறைமுகவாகவேனும் தொடங்கியிருக்கும். மற்றையது நீண்ட நாட்களிற்கு இவ்வாறான நிலையினை மறைத்துவைக்கமுடியாது. எனவே இந்த கருத்து ராம்குமார் விடயத்தில் ஓரளவிற்கு உண்மைகளை வெளிக்கொண்டுவந்த தமிழச்சியின் நம்பத்தன்மையினை இழக்கச் செய்வதற்காக வேண்டுமென்றே தமிழச்சிக்கு கசியவிடப்பட்டட வதந்தியாகவே இதுவாகவிருக்கலாம்.

மூன்றாவது சாத்தியம்:

j-photo2மேற்கூறிய இரு கருதுகோள்களும் பொய்த்துவிட்டதால் மூன்றவதாக ஒரு உண்மை இருக்கவேண்டுமே அதனை ஆராய்வதே இவ்வாக்கத்தின் நோக்கம். உண்மையில் ஜெயா சில காலமாகவே உடல்நலம் குன்றியயவராகவே (வயது, உடல்பபருமன் காரணமாக) உள்ளார். இதனை சென்ற தேர்தல் பிரச்சசாரத்தின்போதே அறிந்துகொள்ளமுடிந்தது. இதனுடன் காய்ச்சலும் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் இதனை மிகைப்படுத்தி நீண்டநாட்களிற்ககு இந்தப் பதட்டத்தினைத் தொடர்ந்துவைப்பதன் மூலம் மிகப் பெரிய அனுதாப அலையினைத் தோற்றுவிக்கமுடியும். அதன்மூலமாக வரப்போகும் உள்ளூராட்சித்தேர்தலில் அனுதாப வாக்குகளைப் பெருமளவில் பெறமுடியும்.

கடந்தமுறை சட்டசபைத்தேர்தலிலேயே வெறும் ஒரு வீத வாக்கு வித்தியாசத்திலேயே அதிமுக ஆட்சியினைப் பிடித்தது. இதனை விட முக்கியமான சொத்துக்குவிப்பு வழக்குத் தீர்ப்பு விரைவில் வரவுள்ளது. அந்தத் தீர்ப்பின் மீதான ஒரு அனுதாபரீதியான தாக்கத்தினைச் செலுத்துவது என்பதாகும். மீறியும் தீர்ப்பு பாதகமானால் சிறை செல்வதனைத் தவிர்க்கலாம் . தீர்ப்பு வந்த பின்பு மார்புவலி என்று மருத்துவமனையில் போய்ப்படுப்பது பழைய நடைமுறை , தீர்ப்பு எவ்வாறு வரும் என்பதனை முன்கூட்டியே ஊகித்து மருத்துவமனையில் மர்மமான முறையில் சிகிச்சை பெறுவது புதிய நடைமுறை (new style).

jayalalithaஇந்த நடிப்பின் மூலம் சிறைவாசத்திற்கு பதில் ஐந்து நட்சத்திர வசதியுடன் மருத்துவமனையில் இருந்துகொள்ளலாம். ஜெயலலிதாவிற்கு நடிப்பபதற்கு சொல்லியா கொடுக்கவேண்டும்.

அதேநேரம் திமுகவிற்கு இதனை வைத்து அரசியல் செய்யச் சொல்லிக் கொடுக்கத்தேவையில்லை. அவர்களின் திட்டம் பதட்டத்தினை அதிகரிப்பதன் மூலம் இரத்தத்தின் இரத்தங்களை வதந்திகள் மூலம் குழப்பி கலவரங்களிலீடுபட வைப்பதன் மூலம் சட்ட ஒழுங்குப் பிரச்சனையினை உருவாக்கி ஆளும் அரசினை மத்திய அரசின் மூலம் கலைக்கவைப்பது அல்லது மக்கள் மத்தியில் செல்வாக்கினை இழக்கச்செய்வது என்பதே இந்த அரசியல்.

மொத்தத்தில் அம்மா நன்றாக நடிக்க , கலைஞர் அதனை நன்றாகஅரசியல் செய்ய பாவப்பட்டு நிற்பது என்னவோ அப்பாவி மக்களே!

தமிழ்  அரசியல் தலைமைகளால் மலினப்படுத்தப்படும்  வட-கிழக்கு வெகுஜனப் போராட்டங்கள் :எஸ்.என்.கோகிலவாணி

kokilavany
கோகிலவாணி

ஒரு பொருளின் மீது அளவிற்கும் அதிகமான விசையினைப் பிரயோகிக்கும் போது அந்த அழுத்தத்தைத் தாங்க முடியாது  அதனை பிரயோகித்தவர் மீதே அந்த அழுத்தத்தினை அப்பொருள் திருப்பிச் செலுத்துவதைப் பல சந்தர்ப்பங்களில் நாங்கள் பார்த்திருக்கின்றோம். அவ்வாறே மக்கள் மீது ஆளும் அதிகார வர்க்கம் மேலும் மேலும் தனது அதிகாரத்தைச் செலுத்தி அடக்க விளையும்போது  அந்த அதிகாரவர்க்கத்திற்கு எதிராகத் தமது எதிர்ப்பினைக் காட்ட வேண்டிய கட்டாயத் தேவை அங்குள்ள மக்களுக்கு எழுகின்றது.

உலகம் தோன்றிய காலத்தில் இருந்து காலத்திற்குக் காலம் அடக்கு முறைகளிற்கும் ஆக்கிரமிப்புகளிற்கும், அநீதிகளுக்கும் எதிராக பல வெகுஜனப் போராட்டங்கள் நடாத்தப்பட்டு வந்திருக்கின்றன. தம்மை சிறந்த முறையில் ஒழுங்கமைத்து முன்னெடுக்கப்பட்டு வந்த பல  வெகுஜனப் போராட்டங்கள் வெற்றிகரமான வகையிலும் வினைத்திறனுள்ள வகையிலும் அமைந்திருந்தமையினை கடந்த கால வரலாறுகள் உணர்த்தி நிற்கின்றன.

உலகெங்கும் ஆக்கிரமிப்பு யுத்தம் நடத்திக்கொண்டிருந்த அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நெஞ்சில் மிதித்து உழைப்பாளர்களால் நடத்தப்பட்ட மக்கள் போராட்டத்தின் வெற்றியே எட்டு மணி நேர வேலையை உலகம் முழுவதும் அனுபவிக்கக்  காரணமாயிற்று. அறுபதுகளின் இறுதியில் பிரான்ஸ் நாட்டில் இடம்பெற்ற மாணவர் எழுச்சி அந்த நாட்டின் ஜனாதிபதியான சார்ள் டி கோல் ஐ ஜேர்மனியை நோக்கி அகதியாக அனுப்பிவைத்தது. அப் போராட்டத்தின் வெற்றியே ஐரோப்பாவில் சமூக நல அரசுகளின் தோற்றத்திற்குக் காரணமாயிற்று. வியட்னாமில் அமெரிக்க ஆக்கிரமிப்பை எதிர்த்து அமெரிக்க மக்கள் நடத்திய போராட்டங்களின் வெம்மையால் அந்த நாட்டிலிருந்து அமெரிக்க அரசு தனது இராணுவத்தை விலக்கிக் கொள்ளக் காரணமாயிற்று.

அமெரிக்காவினதும் ஐரோப்பிய நாடுகளதும் ஆதரவுடன் பலஸ்தீனத்தில் இஸ்ரேல் குண்டுமழை பொழியும் போது ஐரோப்பாவில் நடைபெறும் மக்கள் போராட்டங்களால் தான் இன்று வரை பாலஸ்தீனம் முழுமையாக ஆக்கிரமிக்கப்படாமல் தப்பித்திருக்கிறது. இலங்கையின் வடக்குக் கிழக்கினைப்  போன்றே இந்தியாவின் காஷ்மீரும் உலகில் அதிகமாக இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்கள் வரிசையில் சேர்க்கப்படுகின்றது. காஷ்மீர் மக்களின் நாளாந்த மக்கள் போராட்டங்கள் இன்று இராணுவத்திற்கு எதிரான தற்காப்பு யுத்தமாக விரிவடைந்துள்ளது. தென்னாபிரிக்க வெள்ளை நிறவாதச் சிறுபான்மை அரசுக்கு எதிராக இங்கிலாந்திலும் தென்னாபிரிக்காவிலும் நடைபெற்ற போராட்டங்களே அந்த நாட்டின் விடுதலைக்கு ஆதார சக்தியாக அமைந்திருந்தது. 1905 ஆம் ஆண்டு சுவீடனிலிருந்து நோர்வே பிரிந்து சென்றதற்கு அடி நாதமாக அமைந்தது சுவீடிஷ் தொழிலாளர்களின் நோர்வே மக்களுக்கு ஆதரவான போராட்டங்களே. ஜார் மன்னனின் கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக ரஷ்யத் தொழிற்சங்கங்களின் போராட்டங்களே அதே ஆண்டில் அங்கு ஜனநாயகப் புரட்சி ஏற்படக் காரணமாயிற்று.

இரண்டாம் உலகப் போரை வெற்றிகொள்ள அமெரிக்க இராணுவத்தை வழி நடத்தியவர் என அமெரிக்க மக்களால் போற்றப்படுவர் ஐந்து நட்சத்திர அமெரிக்க இராணுவத் தளபதி டக்ளஸ் மக் ஆர்தர்.  உலகத்தைத் தனது காலடியில் உட்காரவைத்த போது அமெரிக்காவின் கதானாயகனாகப் போற்றப்பட்ட டக்ளஸ் மக் ஆர்தர் வியட்னாமிய மக்களின் போராட்டங்களுக்கு முகம்கொடுக்க முடியாமல் தனது படையுடன் பின் வாங்கிய போது அப்போதைய ஜனாதிபதி ஜோன். எப். கெனடியினால் வலுவிழந்த பழைமைவாதி என விமர்சனம் செய்யப்பட்டார். அதற்குப் பதிலளித்த மக் ஆர்தர் மக்களின் எழுச்சிக்கு முன்னால் யுத்தம் புரியும் தந்திரம் தனக்குத் தெரியாது என வெளிப்படையாக ஒப்புதல் வாக்குமூலமளித்தார்

சிறந்த முறைகளில் ஒழுங்கமைக்கப்பட்ட  வகையில் முன்னெடுக்கப்படும் மக்கள் போராட்டத்தின் வெளிப்பாடுகள் எத்தகைய வினைத்திறனைக் கொண்டிருக்கும் என்பதற்கு மேற்கூறப்பட்டவை சிறந்த உதாரணங்களாகும்.

உலகம் முழுவதிலும் நடைபெற்ற மக்கள் போராட்டங்களின் வலிமையின் பின் புலத்தில் உறுதியான மக்கள் சார்ந்த அரசியலும் சமூகப் பற்றுமிக்க தலைமைகளும் இருந்திருக்கின்றன. என்பது வெளிப்படை. இந்தப் போராட்டங்கள் கூட்டு முயற்சிகளாலும்  அர்ப்பணிப்புக்கள் மிக்கவையாகவும் பொது நலன் என்ற ஒன்றே குறிக்கோளாகவும் முக்கியமாகத் தனிநபர் நலன்களைப்  புறந்தள்ளியமையாகவும் கொண்டமைந்தமைந்திருந்தமையாலே  இப்போராட்டங்கள் சாத்தியமாக அமைந்தன என்பது யாவருக்கும் தெரிந்த  வெளிப்படையான ஒரு விடயம்.

இலங்கையில் தமிழ் மக்கள் மட்டுமன்றி சிங்கள முஸ்லீம் மற்றும் மலையக மக்களும் கூட வெகுஜனப் போராட்டத்தில் வரலாற்றுப் பாரம்பரியத்தைக் கொண்டவர்கள். அறுபதுகளின் ஆரம்பத்தில் சண்முகதாசன் தலைமைவகித்த கம்யூனிஸ்ட் கட்சி யாழ்ப்பாணம் மாவட்டம் முழுவதும் தொடர்ச்சியாக நடத்திய சாதீய எதிர்ப்புப் போராட்டங்கள் ஒரு கட்டத்தில் ஆயுதம் தாங்கிய மக்கள் யுத்தமாக மாறும் அளவிற்கு வளர்ந்து சென்றது. சாதீய ஒடுக்குமுறையின் கொடுமை யாழ்ப்பாணத்தில் தணிந்துபோகுமளவிற்கு அதன் தாக்கம் அமைந்திருந்தது. மலையகத்தில் நடைபெற்ற சிவனு லட்சுமணன் போராட்டம் அங்கு தேசிய இன ஒடுக்குமுறையை தற்காலிகமாகவேனும் தணித்திருந்தது. தெற்கிலும் இவ்வாறான போராட்டங்களுக்கான உதாரணங்களை காணலாம்.

2009களில் போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதன் பின்னர் மக்கள் போராட்டங்களிற்கான தேவையென்பது அதிகரித்துள்ளது என்பது நிதர்சனமாகும். இலங்கைப் பேரினவாதிகளின் தேசிய இன ஒடுக்குமுறைக்கு எதிரான ஆயுதம் தாங்கிய போராட்டம் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையுடன் முடிவிற்கு வந்த பின்னர் ஒடுக்குமுறைக்கு எதிரான எதிர்ப்பு அரசியலின் தேவை மக்களால் உணரப்படுகின்றது. அதுவே மக்களின் தன்னிச்சையான எழுச்சிகளாக தற்போது வெளிப்பட்டு வருகின்றது. இங்கே ஒரு விடயத்தை உற்றுப் பார்த்தால், எந்த விதமான அரசியல் பின்புலங்களுமின்றி மக்கள் அமைப்புக்கள் தமது போராட்டங்களை முன்னெடுக்கையில் அவை வினைத்திறன் வாய்ந்ததாக அமைகின்றன என்பது மறுக்கமுடியாத விடயம்.

அந்த வகையில் இலங்கையின் வடக்குப் பகுதியினைப் பொறுத்தவரையில் சமீபத்தில் அநீதிக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வெற்றிகரமான வெகுஜனப் போராட்டமாக  சுன்னாகத்தில் இயங்கிக் கொண்டிருந்த நொதேர்ண் பவர் மின் வழங்கும் நிலையத்தினை மூடியமையினை நாங்கள் பார்க்கலாம். வலிகாமம் பகுதியில் நீலக்கீழ் நீரை வேகமாக மாசடையச் செய்துவரும் தனியாருக்குச் சொந்தமான சுன்னாகம் நொதேர்ண் பவர் நிறுவனத்திற்கு மூடுவிழா நடாத்தியமை என்பது தொடர்ச்சியான வெகுஜனப் போராட்டங்கள் மூலமாகவே சாத்தியமாயிற்று.

tamil_mpsஆனாலும் இறுதி யுத்தத்தின் பின்னர் இலங்கையில் குறிப்பாக வட கிழக்குப் புலங்களில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற மக்கள் அமைப்புக்களையும் அவை சார்ந்து முன்னெடுக்கப்படுகின்ற போராட்டங்களையும் உற்று நோக்கினால் அவற்றில் பெரும்பாலானவை உறங்கு நிலைகளில் காணப்படுகின்றனவாகவும் அரசியல் கட்சிகளால் இயக்கப்படுகின்றனவாகவும் காணப்படுகின்றன. அவ் அரசியல் கட்சிகள் தமது சுயலாபம் கருதிய செயற்பாடுகளுக்கு முன்னுரிமை கொடுப்பதற்கு இவ் மக்கள் அமைப்புக்களைப் பயன்படுத்துவதும் இவ் அமைப்புக்கள் முன்னெடுக்கும்  போராட்டங்கள் இத்தகைய அரசியல் கட்சிகளுக்கு பாதமாக அமையும் பட்சத்தில் அப் போராட்டங்களை தடுப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதும் ஒரு சாதாரண விடயமாக இங்கு கருதப்படுகின்றது. அதாவது மக்கள் அமைப்புக்கள் எனப்படும் கட்டமைப்புக்கள் எப்பொழுதும் அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப செயற்படுவதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளன என்ற கருத்தியலானது எழுதப்படாத விதியாகவே இங்கு கருதப்படுகின்றது. அரசியல் கட்சிகளால் ஒழுங்கமைப்படும் தனி நபர் மற்றும் கட்சிகளது இருப்பு சார்ந்து மேற்கொள்ளப்படும் ஆர்ப்பாட்டங்கள் ஊர்வலங்கள் என்பன  மக்கள் அமைப்புக்களால் மேற்கொள்ளப்படுகின்றன என வெளி உலகத்திற்குப் பறை சாற்றப்படுகின்றது.

இங்கே மக்கள் போராட்டங்களை அரசியல் கட்சிகள் வழி நடத்துவதாகவும், தலைமை ஏற்பதாகவும் கூறிக்கொண்டு அவற்றைச் சிதைக்கும் தன்மையினைக்  காணக்கூடியதாகவுள்ளது. முன்னும் பின்னும் தொடர்சியைக் கொண்ட மக்களை அணிதிரட்டுவதன் ஊடான எழுச்சிகளை ஏற்படுத்துவதற்குப் பதிலாக அடுத்த தேர்தலில் தமது வாக்கு வங்கியை நிரப்பிகொள்வதற்கான கருவியாகவே வெகுஜனப் போராட்டங்கள் பயன்படுத்தப்படுகின்றன. தனி நபர்கள் தம்மை முன் நிறுத்திக்கொள்வதற்கும், அரசியல் கட்சிகள் தமது வாக்கு வங்கியை உறுதிப்படுத்திக் கொள்ளவும் மக்களின் அவலங்களின் வெளிப்பாடான எழுச்சிகள் பயன்படுத்தப்படுகின்றன. வெகுஜனப் போராட்டங்கள் பரந்துபட்ட மக்கள் இயக்கங்களாக பரிணமிப்பதற்குப் பதிலாக அவை குறுகிய நோக்கங்களுக்காப் பயன்படுத்தப்படுகின்றன என்பது அரசியல் அழிவை ஆழப்படுத்துகின்றது.

Mullaitivu-protest-11நமது இன்றைய காலத்தின் தேவை மக்கள் போராட்டங்களே எனினும் மக்கள் மீது பற்றுக்கொண்ட அரசியல் தலைமைகள் இல்லை என்பதால் அப் போராட்டங்கள் தொடர்ச்சியான வழி நடத்தலுக்கு உட்படுவதில்லை. எங்காவது மக்கள் போராட்டம் நடைபெறும் சாத்தியங்கள் தென்பட்டால் கூட அதனைத் தமது வாக்கு வங்கியை நிரப்பிக்கொள்ள எப்படிப் பயன்படுத்தலாம் என்பதையே அரசியல் கட்சிகள் சிந்திக்கத் தொடங்கிகின்றன. அதனால் அப் போராட்டங்களை எழுச்சியை நோக்கி வளர்த்தெடுக்காது முடக்கி தமது கட்டுப்பாட்டினுள் கட்சிகள் வைத்துக்கொள்கின்றன.

யுத்த முடிவிற்குப் பின்னர் அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரையில் தமது இருப்பினைத் தக்கவைப்பதற்காக காலத்திற்குக் காலம் ஒரு சில மக்களைத் திரட்டி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள் மூலம் அதற்கான   நோக்கங்கள்  எட்டப்பட்டனவா என்று பார்த்தால் எதிர்மறையான பதில் தான் வெளிப்படையாகத் தெரியும். மக்களை வீதிக்கு இறக்கிப் போராட வேண்டும் என அரசியல் தலைவர்கள் கூறுவார்கள். ஆனால் அந்தப் போராட்டம் எந்தவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதற்கும் இதன் தொடர்ச்சி என்ன என்பதற்கும் அவர்களிடம் பதில் இல்லை. மக்களுக்காகவே அரசியல் கட்சிகள் என்ற நிலை போய் அரசியல் கட்சிகளின் இருப்பிற்காகவே மக்கள் என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது.   இதன் மூலம் மக்கள் அமைப்புக்களும் போராட்டங்களும் கேலிக்குள்ளாக்கப்படுகின்றன.

மக்கள் போராட்டங்கள் ஊடாக அவர்களை அணிதிரட்டுவதே நாளைய அரசியல் தலைமையைத் தோற்றுவிக்கும் நுழைவாசல். அதுவே எம்மைச் சுற்றி நாம் அமைத்துக்கொள்ளும் பாதுகாப்பு அரண். மக்கள் போராட்டங்கள் ஊடாகவே அவர்களை அரசியல் மயப்படுத்த முடியும். அதனூடாகவே அவர்களுக்கு தன்னம்பிக்கையை வழங்க முடியும். உண்மையான ஜனநாயகமும் சுய நிர்ணய உரிமையுடன் கூடிய சுதந்திரமான வாழ்க்கையும் அமைவதற்கு மக்கள் போராட்டங்களே வழிகளைத் திறந்துவிடும். இன்று அப்போராட்டங்களைத் தமது சுய இலாபத்திற்காகப் பயன்படுத்தும் வாக்கு வங்கி அரசியல் கட்சிகளுக்கு அப்பால் சமூகப் பற்றுள்ள ஜனநாயக மற்றும் முற்போக்கு அணிகள் தமக்கு இடையேயான குறைந்தபட்ச முரண்பாடுகளைக் களைந்து ஒன்றிணைய வேண்டும். இலங்கை அரசின் சமூகப் பொருளாதார ஒடுக்குமுறைகளும் பேரினவாத ஒடுக்குமுறையும் நாளாந்தம் உச்சமடைந்து செல்லும் நிலையில் அவற்றிற்கு எதிரான உறுதியான அரசியல் தலைமையைக் கட்டியெழுப்பவும் அவற்றிற்கு எதிரான பாதுகாப்பு அரணாக அமையவும் மக்கள் போராட்டங்கள் சரியான திசை வழியை நோக்கிச் செல்ல வேண்டும்.

2009 ஆம் ஆண்டின் பின்னர் அந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற மருத்துவத் தாதிகளின் போராட்டத்தில் ஆரம்பித்து வித்தியா படுகொலைக்கு எதிரான போராட்டங்கள் உள்ளிட்ட பல மக்கள் எழுச்சிப் போராட்டங்களைக் காணக் கூடியதாக இருந்திருப்பினும் அவை மக்கள் சார்ந்த அரசியல் தலைமைகளால் வழி நடத்தப்படாமையால் அவற்றின் பெறுமானம் முழுமையாக வெளிப்பட்டிருக்கவில்லை. . தமிழ் பேசும் மக்கள் மத்தியில் இன்றும் வெறிச்சோடிக் காணப்படும் அரசியல் தலைமையின் வெற்றிடம் இப் போராட்டங்கள் இடை நடுவில் நிறுத்தப்படக் காரணமாயிற்று. தமிழீழ விடுதலைப் புலிகள் நிரப்பிக்கொண்டிருந்த அரசியல் தலைமை இனக்கொலையாளிகளால் வேரறுக்கப்பட்ட பின்னர் தோன்றிய வெற்றிடம் வெகுஜனப் போராட்டங்களால் நிரப்பப்படவில்லை என்பது கண்கூடானது

வெகுஜனப் போராட்டங்கள் எனப்படுவது வெறுமனே சொல்லாடல்களையும் கோஷங்களையும் கொண்டிருக்காமல் எந்த  நோக்கத்திற்காக அந்தப் போராட்டங்கள முன்னெடுக்கப்படுகின்றனவோ அந்த pic 1இலக்கினை எட்டுவதனை மட்டுமன்றி அவை மக்களை அணிதிரட்டும் ஊக்கிகளாகவும் பயன்படுத்தபட வேண்டும். எந்த சக்திகளுக்கெதிராக அந்தப் போராட்டங்கள் நடாத்தப்படுகிறதோ அந்த எதிரான சக்திகள் மீது வினைத்திறன் வாய்ந்த தாக்கத்தினைப் பிரயோகிப்பதாக அமைய வேண்டும்.   பாராளுமன்ற வாக்குகள் போன்ற சுயலாப நோக்கத்திற்கு மக்களைக் கட்சி பயன்படுத்துவதற்கு அப்பால் மக்கள் கட்சியைக் கண்காணிக்கும் அளவிற்கு அவர்கள் உறுதியாக அணிதிரட்டப்பட வேண்டும். மக்கள் அமைப்புக்கள் மக்களுக்கானவை. மக்கள் நலன் சார்ந்தவை. அந்த மக்கள் அமைப்புக்கள் மக்கள் தலைமைகளால் வழி நடாத்தப்பட வேண்டும். மக்கள் அமைப்புக்களில் சுயாதீனத் தன்மை பேணப்பட வேண்டும். எந்தவொரு அரசியல் கட்சிகளின் சாயம் இந்த மக்கள் அமைப்புகள் மீது பூசப்படக் கூடாது என்பதில் இவ்வமைப்புக்கள் மிக்க உறுதியுடன் இருக்க வேண்டும். அரசியல் கட்சிகளினால் மக்கள் அமைப்புக்கள் கையாளப்படுகின்றன என்ற நிலைமை மாறி மக்கள் அமைப்புக்கள் அரசியல் கட்சிகள் மீது செல்வாக்கு செலுத்துகின்றன என்ற நிலை ஏற்பட  வேண்டும். அநீதிகளுக்கும், அக்கிரமங்களுக்கும் எதிராக பெரியதொரு மாற்றமானது மக்கள் அமைப்புக்களின் கூட்டிணைவால் மாத்திரமே சாத்தியமாகும்.  ஆகவே மக்கள் அமைப்புக்கள் தங்களது சமூகம் சார்ந்த பாரிய பொறுப்புணர்வை உணர்ந்து அதற்கேற்ப செயற்பட வேண்டும் என்பது காலத்தின் இன்றியமையாத தேவையாகும்.

நன்றி,

தினக்குரல் – ஞாயிறு (04.09.2016)

பகடைகளாக்கப்படும் முன்னாள் விடுதலைப் புலிப் போராளிகள்.

anandhi_int

போராளிகளுக்கு ஏற்றப்பட்ட நச்சு ஊசிகள் தொடர்பில் பலரிடம் விசாரணை நடாத்தியதன் அடிப்படையில் போராளிகள் மீது நச்சு ஊசிகள் ஏற்றப்பட்டிருப்பது உண்மை எனத் தான் அறிந்திருப்பதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளதாக சில இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சமீப காலமாக  மக்களிடையே பரபரப்பு மற்றும் அதிர்ச்சியூட்டக் கூடிய விடயமாகக் கருதப்பட்ட இந்த நச்சு ஊசி விடயம் தொடர்பில் பொறுப்பற்ற வகையில் அரசியல்வாதிகளும் ஊடகங்களும் மனம் போன போக்கில் கருத்துக்களை வெளியிட்டுவந்துள்ளனர். அந்த வரிசையில் அண்மையில் இணைந்துள்ளார் அனந்தி சசிதரன்.

கடந்த ஏழு வருடங்களில் நோய்களினால் சாவடைந்த முன்னாள் போராளிகளின் எண்ணிக்கையினை ஆராய்ந்து பார்த்தால் அதன் விகிதம் இயல்பானது எனப் பல முன்னை நாள் விடுதலைப் புலிப் போராளிகள் தெரிவித்துள்ள நிலையில் புனர்வாழ்வு என்ற பெயரில் தடுத்து வைக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட பன்னிரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஆண் பெண் போராளிகளின் வாழ்க்கை தங்களது சுய நல அரசியல் இருப்பினைத் தக்க வைத்துக் கொள்ள முயலும் இத்தகைய அரசியல்வாதிகளின் ஆதாரமற்ற கதைகளால் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.

யுத்தம் முடிவுக்கு வந்து ஏழு வருடங்கள் கடந்த பின்னரும் இன்று வரை அப் போராளிகளின் வாழ்வியல் நிலையில் எந்த விதமான மாற்றங்களும் ஏற்படுத்தப்படவில்லை. இந்த நிலையில் அவர்களை வைத்து அரசியல் லாபமடைய நினைக்கும் மக்கள் பிரதிநிதிகளின் செயல் மிகவும் ஈனத்தனமானது என்பதுடன் கண்டிக்கத்தக்கது.  மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் தமக்கான அவைகளில்  நாற்காலிகளை சூடேற்றுவது மட்டும் தான் தமக்கான பணி என்பதை விடுத்து மக்களோடு மக்களாக இணைந்து செயற்படுவது அவசியம். அவ்வாறு இணைந்து செயற்படும் போது மேற்கூறப்பட்டது போன்ற ஆதாரமற்ற கட்டுக் கதைகளை வெளியிடுவதற்கான அவசியங்களோ அல்லது அவற்றில் தங்கியிருக்க வேண்டிய தேவைகளோ குறித்த மக்கள் பிரதிநிதிகளுக்கு வேண்டியிராது.

பெரும் சர்ச்சையினைக் கிளப்பியிருக்கும் இவ்விடயம் தொடர்பில் மருதமடு, நெலுக்குளம் தொழில் நுட்பக் கல்லூரி, பம்பைமடு, பூந்தோட்டம், பட்டாணிச்சூர் முஸ்லீம் மகாவித்தியாலயம், வவுனியா தமிழ் மகாவித்தியாலயம், ஒமந்தை மத்திய மகாவித்தியாலயம், வவுனியா வாணி வித்தியாலயம் உள்ளிட்ட பல தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட  போராளிகளிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் மேற்குறித்த விஷ ஊசி விவகாரம் ஆதாரமற்ற தகவல்களின் அடிப்படையில் குறித்த சில சக்திகளின் பின்னணியில் பின்னப்பட்டுள்ளது என்பது நிரூபணமாகியுள்ளது.

 

திருகோணமலையில் அமெரிக்கக் கடற்படை முகாம்! மூச்சுவிடாத தேசியங்கள்!! : வியாசன்

US_Navyதெற்காசியாவின் தெற்கு மூலையின் சந்தியாகக் கருதப்படும் இலங்கை மீண்டும் உலக ஏகாதிபத்தியங்களின் ஆடுகளமாக மாறி வருகிறது. ஆசியா பிவோட் ஆசிய நாடுகளை இராணுவமயப்படுத்துவதற்கான அமெரிக்காவின் புதிய திட்டம். இதற்கான ஈர்ப்பு மையமாக இலங்கை மாறி வருகின்றது. அமெரிக்காவின் பசிபிக் நூற்றாண்டு |America’s Pacific Century| என்ற கோட்பாட்டை முன்வைத்து ஆசிய நாடுகளை இராணுவமயப்படுத்தும் திட்டத்தை அமெரிக்காவின் புதிய வெளி நாட்டுக் கொள்கையாக முமொழிந்த ஹில்லாரி கிளிங்டன் இன்று அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படுவார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆக, எதிர்வரும் அரசியல் நாள் காட்டியில் அமெரிக்காவின் அரச பயங்கரவாத்திற்கு இலங்கையும், அங்கு வாழும் உழைக்கும் மக்களும், தமிழ்ப் பேசும் சிறுபான்மைத் தேசிய இனங்களும் பலியாவதற்கான உச்சபட்ச சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றன.

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக அமெரிக்காவின் மிகப்பெரும் கடற்படைக் கப்பல் நன்கு திட்டமிடப்பட்ட அரசியல் நோக்கத்தை முன்வைத்து அந்த நாட்டில் நங்கூரமிட்ட சம்பவம் கடந்த மார்ச் மாதம் 26ம் திகதி நடைபெற்றது. ஏழாவது கடற்படையின் தளபதி தமது வருகை தொடர்பாகக் கூறுகையில் ‘ஆசியப் பசிபிக் பிராந்தியத்தில் சமாதானத்தை நிறுவும் நோக்கத்தில் இலங்கை உடனான இராணுவ மற்றும் பாதுகாப்பு உறவுகளை இறுக்கப்படுத்திக்கொள்கிறோம் என்றார்’.

புலம்பெயர் நாடுகளில் அமெரிக்காவின் அனுசரணையுடன் இலங்கை இராணுவத்தைத் தண்டிப்பதே தமது ஒரே நோக்கம் என மேடை மேடையாக தமிழர்களின் தலைமைகள் முழங்கிக்கொண்டிருக்கும் போது இலங்கையில் இராணுவத்திற்கு அமெரிக்கா வாழ்த்துத் தெரிவித்துக்கொண்டிருந்தது. யாழ்ப்பாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் இலங்கை அரசிற்கு எதிராக சர்வதேசத்திடம் முறையிடப் போவதாக அறிக்கை விடுத்துக்கொண்டிருந்தார். அமெரிக்காவின் முன்னை நாள் துணை ராஜாங்கச் செயலாளர் ரிச்சாட் ஆர்மிதேஜ் இன் வழி நடத்தலில் இயங்கும் பேர்ள் என்ற தமிழ் அமைப்பும் அவுஸ்திரேலியாவிலிருந்து நிமலன் கார்த்திகேயனும் விக்னெஸ்வரனைக் கையாண்டுகொண்டிருக்க அமெரிக்கா எதிர்ப்பின்றி தனது திட்டங்களை நிறைவேற்றிக்கொண்டிருந்தது. அடுத்த ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைக் கூட்டத்திற்குச் சென்று அமெரிக்காவிடம் பதினாறாவது தடவையாக முறையிடுவதற்காக தமிழ் அரசியல் தலைவர்கள் தம்மைத் தயார்படுத்திக்கொண்டிருந்தனர்.

மத்திய கிழக்கில் சமாதானத்தை ஏற்படுத்தப் போவதாகத் தலையிட்ட அமெரிக்கா இன்று அந்தப்பிரதேசம் முழுவதையுமே யுத்த களமாக மாற்றியுள்ளது. இலங்கை யுத்த களமாக மாறுவதற்கும் அமெரிக்க ஆயுதங்களின் நச்சுக் காற்றின் ஊற்று மூலமாக உருவெடுப்பதற்கும் இன்னும் அதிக நாட்கள் இல்லை.

உலகில் எங்கு அமெரிக்கா தலையிட்டாலும் அங்கு எதிர்ப்புகளும் எழுச்சிகளும் ஏற்படுவது வழமை. உலகின் கொல்லைப்புறங்களில் முகவரி தெரியாமலிருந்த நாடுகள் கூட அமெரிக்க இராணுவத்தை ஓட ஓட விரட்டியிருக்கின்றன. அணு ஆயுதங்களைப் பயன்படுத்திக்கூட வியற்னாம் யுத்தத்தை அமெரிக்காவால் வெற்றிகொள்ள முடியவில்லை. லத்தீன் அமெரிக்க நாடுகளில் அமெரிக்கா எபோதுமே தனது இராணுவ வெறியைச் செயற்படுத்த முடியவில்லை.

உலகின் பல நாடுகளை அமெரிக்கா ஆக்கிரமித்திருக்கிறது. அங்கெல்லாம் எதாவது ஒரு மூலையில் ஆக்கிரமிப்பிற்கு எதிரான எதிர்ப்பு ஆரம்பித்து அது மக்கள் எழுச்சியாக மாற்றமடையும். வியட்னாம், நிக்கரகுவா போன்ற குட்டி நாடுகள் கூட அமெரிக்க ஆக்கிரமிப்பை அடியோடு தகர்த்திருக்கின்றன. அணு ஆயுதங்களை எதிர்கொண்ட வியட்னாமிய மக்களின் போராட்டம் அமெரிக்க இராணுவப் பயங்கரவாதிகளை நாட்டைவிட்டு துரத்தியது. ஆர்மிதேஜ் போன்றவர்களால் உருவாக்கப்பட்ட துணை இராணுவக் குழுக்களை எதிர்கொண்ட அமெரிக்க அரச பயங்கரவாதத்திடம் வெற்றிபெற்றது நிக்கரகுவா மக்களின் போராட்டம்.

தனது ஆதிக்கத்திற்கு உட்பட்ட நிறுவனங்களான ஐக்கிய நாடுகள் சபை, மனித உரிமை அமைப்புக்கள் போன்றவற்றை அரணாகப் பயன்படுத்தி மகிந்த ராஜபக்சவின் பின்னணியில் செயற்பட்ட அமெரிக்க அரசு மக்களைச் சாரி சாரியாகக் கொன்று குவிக்கத் துணை சென்றது. அதே அமெரிக்க அரசைப் பயன்படுத்தி போர்க்குற்றவாளிகளைத் தண்டிக்கப் போவதாக தமிழர்களின் தலைமைகள் இன்னும் நாடகமாடிக்கொண்டிருக்கின்றன.

ஏற்கனவே முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ காரணமான தமிழ்த் தலைமைகள் இன்னொரு பெரும் அழிவிற்கான அத்தனை வழிகளையும் திறந்துவிடுகின்றனர். அமெரிக்க இராணுவம் தங்கியிருந்த அத்தனை நாடுகளிலும் படுகொலைகளும், இரத்தக் களரியும் வழமையான நிகழ்வு. தவிர பாலியல் தொழிலாளிகளைத் தோற்றுவிப்பது போன்ற அதி உச்ச சமூகச் சீரழிவுகளுகு அமெரிக்க இராணுவம் காரணமாக இருந்திருக்கின்றது. பாலியல் தொழில் நாட்டின் வருமானத்தின் ஒரு பகுதியாக மாறுமளவிற்கு தாய்லாந்தை மாற்றியமைத்த ‘பெருமை’ அமெரிக்காவையே சாரும்.

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாகும் வாய்புள்ள ஹில்லாரி கிளிங்டன், மத்திய கிழக்கிற்கு அடுத்ததாக ஆசியாவை மையப்படுத்தி அமெரிகாவின் நடவடிக்கைகள் அமைந்திருக்க வேண்டும் எனத் தனது புதிய வெளியுறவுக் கொள்கையை முன்வைக்கிறார். ஆசிய பிவோட் என்ற அமெரிக்காவின் ஆசியாவை இராணுவ மயப்படுத்தும் கோட்பாட்டின் மூல கர்த்தாக்களுள் ஒருவர். மத்திய கிழக்கைச் சுற்றியே தமது செயற்பாடுகள் அமைந்திருந்தாகவும் அது ஆசியாவை நோக்கி நகர்த்தப்பட வேண்டும் என்றும் கூறும் ஹில்லாரியின் வெளியுறவுக் கொள்கை இலங்கையில் நடைமுறைப்ப்படுத்தப்படுகிறது. முள்ளிவாய்க்கால் அழிவிலும் அதிகமான சேதங்களை ஏற்படுத்தவல்ல அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகள் தொடர்பாக இலங்கை அரசியல்வாதிகளும் தமிழ்த் தேசியம் பேசும் வாக்குப் பொறுக்கிகளும் கண்டுகொள்வதில்லை.

சமசமாஜக் கட்சியின் தலைவர் திஸ்ஸ விதாரண திருகோணமலையில் அமெரிக்கக் கடற்படைத் தளம் அமைக்கப்படுவதற்கான பேச்சுக்கள் இலங்கை அரசுடன் நடத்தப்படுகின்றன எனக் கூறியமைக்கு இலங்கை அரசியல்வாதிகள் எந்தப் பதிலும் கூறாமல் மௌனித்துப் போயிருந்தனர். தமிழ் அரசியல் வாதிகள் தமது தேசத்தின் கொல்லைப்புறத்தில் ஆக்கிரமிப்பு இராணுவம் முகாமிடப் போகிறது என்றும் மிகப்பெரும் அழிவுகள் ஆரம்பமாகப் போகிறது என்றும் குரல்கொடுக்கவில்லை. மக்களின் இரத்தம் குடிக்கும் காட்டேரிகளைப் போல மூச்சுவிடாமல் கோளைத்தனமாக தமது கூடுகளுக்குள் பதுங்கிவிட்டனர். இவர்களுக்கு உலக அரசியல் தெரியாமலிருப்பது வியப்பிற்குரியதல்ல. தமது சொந்த நிலத்தின் எல்லையில் அன்னிய உலகையே அழிக்கும் அன்னிய இராணுவம் குடியேறுவதற்கான அரசியல் வெளியை ஏற்படுத்திக்கொடுக்கும் வரலாற்றுத் துரோகத்தைக் கண்டு எதிர்கால சந்ததியாவது இவர்களைத் தண்டிக்கும். தங்களுக்கு என்று கட்சிகளும் அவற்றின் இடைச் செருகல்களில் தேசியம் என்ற வார்த்தையும் நுளைக்கப்பட்டால் வாக்குப் பொறுக்கிப் பாராளுமன்றம் செல்லப் போதுமானது என எண்ணும் இவர்கள் எந்தக் கூச்சமுனின்றி பிணங்களை வைத்து வியாபாரம் நடத்தும் பிரகிருதிகள்.

அமெரிக்கக் கடற்படைக் கப்பல் இலங்கை சென்ற போது அங்கு உரையாற்றிய அமெரிக்கத் தூதுவர் இலங்கை ‘சர்வதேசத்தின்’ எதிர்பார்ப்புக்களைப் பூர்த்தி செய்திருப்பதாகத் தெரிவித்திருந்தார். சர்வதேசம் என்று தமிழ்த் தலைமைகளும் அவர்களும் அழைத்துக்கொள்வது உலகின் அதிகார மையங்களை ஆள்பவர்களையே தவிர மக்களை அல்ல. இலங்கையில் யாப்பு மாற்றத்தை ஏற்படுத்தப்படுகிறது என்றும் நல்லிணக்கத்திற்கான முயற்சிகள் நடைபெறுகிறது என்றும் அவர் அங்கு உரையாற்றிய கையோடு யாழ்ப்பாணம் ஜெட் லிங் நட்சத்திர விடுதியில் வடக்கின் ‘தேசியவாதிகளை’ அழைத்து விருந்து வைத்தார். அழைப்புக் கிடைததுமே அனைத்து அரசியல் வாதிகளும் விழுந்தடித்துக்கொண்டு அமெரிக்கத் தூதுவரின் தரிசனம் பெறச் சென்றுவிட்டனர்.

அமெரிக்காவும் அதன் துணை நாடுகளும் ஏற்படுத்திய அழிவிற்கு எதிராகவும் இனிமேல் நம்மீது திணிக்கப்படும் அழிவிற்கு எதிராகவும் எந்தத் தமிழ் அரசியல்வாதிகளும் துரும்பைக்கூட அசைத்ததில்லை. கருதளவிலாவது மக்களை அணுக அவர்கள் தயாரில்லை.

மேற்கில் மூன்றாவது உலகப் போருக்காகத் திட்டமிடும் அமெரிக்காவும் அதன் துணை அதிகார மையங்களும் தெற்காசியாவில் இலங்கையை இராணுவ மயப்படுத்துவது சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்திற்கும் தேசிய அரசியலுக்கும் நிரந்தர அழிவு என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இலங்கையில் தோற்றுவிக்கப்பட்டுள்ள அமெரிக்கத் தரகு அரசிற்கு எதிராகவும் தமிழ் அரசியல் வாதிகளுக்கு எதிராகவும் முன்வைக்கப்படும் அரசியல் மட்டுமே மக்கள் சார்ந்ததாக அமையும்.