முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் சூத்திரதாரிகளில் ஒருவர் சம்பந்தனைச் சந்தித்தார்

armitageஅமெரிக்காவின் முன்னாள் பிரதி இராஜாங்க செயலாளர் ரிச்சர்ட் ஆர்மிதாஜ் , எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தனை, இன்று பாராளுமன்றில் உள்ள எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
இந்த சந்திப்பில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளருமான எம். ஏ. சுமந்திரனும் கலந்து கொண்டிருந்தார்.
வன்னிப் படுகொலைகளை நிகழ்த்துவதில் மிகப்பெரும் பங்குவகித்த ஆர்மிதாஜ் 2009 ஆண்டு காலப்பகுதியில் புலம்பெயர் அமைப்புகளின் நெருங்கிய நண்பர். வணங்கா மண் கப்பலை வன்னிக்கு அனுப்ப வேண்டும் என ஏமாற்றிய குழுவிற்கு ஆர்மிதாஜ் ஆலோசகராகச் செயற்பட்டார். இன்று ரீ.சீ.சீ அமைப்புடன் நெருக்கமாகச் செயற்படும் சுதா நடராஜா ஆர்மிதாஜின் கடந்தகால ஆதரவாளர். முள்ளிவாய்க்கால் மனிதப்படுகொலைகள் நடைபெற்ற மறுநாளே ஆர்மிதாஜ் கொலையாளி கோதாபாயாவைச் சந்தித்து நன்றி கூறினார்.
பல்வேறு நாடுகளில் போராட்டங்களை அழித்துச் சிதைப்பதில் ஆர்மிதாஜின் பங்களிப்பைக் காணலாம்.

புலம்பெயர் குழுக்களுடன் ஆர்மிதாஜ் இணைந்து திட்டமிட்டார்…

சமாதானப் பேச்சுவார்த்தை ஆரம்பித்ததும், இலங்கை இராணுவத்திற்கு ஆதரவாகச் செயற்பட்ட, “வன்னி சேவைய” என்ற உள்ளூர் தன்னார்வ நிறுவனத்தை, அகற்றிய நோர்வே அரசு, அதனை தனது நிறுவனங்களால் பிரதியிட்டது. அதே சமயத்தில், புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள், ஊடுருவும் நடவடிக்கையும், மறு புறத்தில், தமிழ் செயற்பாட்டாளர்களின் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்டது. சமாதானப்பேச்சுவார்த்தைகளின் போது, இலங்கை முழுவதும், நூற்றுக் கணக்கான தன்னார்வ நிறுவனங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தாலும், Christian Michelsen Institute (CMI) என்கிற தன்னார்வ நிறுவனமே, வன்னிப் பகுதியில் முதலில் பணியில் ஈடுபட அனுமதிக்க‌ப்பட்ட தன்னார்வ நிறுவனமாகும். இந்த நிறுவனம்,1997ஆம் ஆண்டிலிருந்து, சமாதானம் என்ற கொள்கையினை பயன்படுத்தி, பல்வேறு நாடுகளில் தலையிடுவது மட்டுமன்றி, போராட்டங்களை அழிப்பதிலும் ஈடுபட்டுள்ளது. நோர்வே அரசின், நோரெட் என்ற நிதிவழங்கும் நிறுவனத்தின் நிதியுதவியுடன் இயங்கும், இந்த நிறுவனம், வன்னியில், உதவி ஆய்வு என்ற பெயரில் உட்புகுந்த‌து. சமாதானத்திற்கான புறச்சூழலை ஏற்படுத்துவதுடன், அரச அமைப்புக்களையும், புலிகளையும் தமது கட்டுக்குள் கொண்டுவருவதுடன் ஊடாக‌, இரு தரப்புக்களுக்குள்ளும் தமது உறுப்பினர்களை உட்செலுத்தி, இரு அமைப்புக்களிற்குள்ளும் தமது ஆதிக்கத்தை செலுத்துவதன் ஊடாக, இரு பக்கங்களையும் சீரழித்து, அதன் கட்டமைப்பினை அழிப்பதன் ஊடாக, தமக்கு தேவையானவற்றை சாதிப்பதே, இவ் அமைப்பிற்கு வழங்கப்பட்ட மிக முக்கிய பணியாகும்.
இந்நிறுவனத்தின் ஆதரவுடன், ஒஸ்லோவில் ஒரு ஒன்று கூடல் நடத்தப்பட்டது. 2002ஆம் ஆண்டு, நடைபெற்ற அவ் ஒன்று கூடலில், இலங்கையில் சமாதானத்தினை நிலை நாட்டுவது எனும் நிகழ்ச்சி நிரல் தொடர்பாக பேசப்பட்டது. அவ்வேளையில், இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட‌ சமாதான நடவடிக்கைக்காக, நோர்வே அரசு, 70 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியது. பத்தொன்பது நாடுகளும், அமெரிக்க ஏகாதிபத்திய அரசின் அரச துறை உதவிச் செயலாளரான, ரிச்சார்ட் ஆர்மிதாஜ்ஜும் கலந்துகொண்ட அந்த நிகழ்வில், தமிழீழ விடுதலைப் புலிகளின் பல பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
richard_armitage_rajapaksaபுலிகளின் தலைமை பேச்சுவார்த்தை இணைப்பாளராகச் செயற்பட்ட, அன்டன் பாலசிங்கமும், உரை நிகழ்த்திய, அந்நிகழ்வை, நோர்வேயின் துணை வெளியுறவு அமைச்சர், விதார் கல்சிசன், தலைமை தாங்கினார். அவ் ஒன்று கூடலின் முடிவில், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், அமெரிக்கா, நோர்வே, பிரித்தானியா ஆகிய நாடுகளிடையேயான கூட்டம் ஒன்று, மூடிய அறைக்குள் நடைபெற்றது. இந்த அனைத்து சந்திப்புக்களிலும், அன்டன் பாலசிங்கத்துடன், சுதாகரன் நடராஜாவும் பிரதானமாக கலந்துகொண்டார். வெளிப்படையாக நடைபெற்ற ஒரு கூட்டத்தில், உரையாற்றிய ரிச்சார்ட் ஆர்மிதாஜ், புலிகள் பயங்கரவாதத்தைக் கைவிட வேண்டும் என்றும், வன்முறையை கைவிட்டு ஜனநாயக வழிக்குத் திரும்ப வேண்டும் என்றும் குறிப்பிட்டார். அக்கூட்டம் நடைபெற்று முடிந்த மறு நாளே, தமிழ் கார்டியனில், கட்டுரை எழுதிய சுதாகரன் நடராஜா, ரிச்சார்ட் ஆர்மிதாஜின் புகழ் பாடினார்.
ஆர்மிதாஜ் ஊடான இன்றைய தலையீடு தொடர்கின்றது. புலம்பெயர் அமைப்புக்கள் சில அமெரிக்க இராஜாங்க அமைச்சின் நேரடி நிதி வழங்கலில் இயங்க ஆரம்பித்துள்ளன. அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தேசியப் பிரச்சனைகள் சிலவற்றை முன்வைத்து கூட்டங்கள் நடத்திவரும் அமைப்புக்கள் ஆர்மிதாஜின் நேரடிக் கட்டுப்பாட்டினுள் இயங்கிவருகின்றன.