இலங்கை அரசின் புதிய கைதுகளின் பின்புலம் – ஒரு பார்வை

நகுலன் , ராம்
நகுலன் , ராம்

வட மாகாணத்தில் பல்வேறு கைதுகள் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் நடைபெறுகின்றறன. இக்கைதுகளின் பின்புலம் குறித்த வாதப் பிரதிவாதங்கள் பல்வேறு தளங்களில் நடைபெற்றாலும் அக் கைதுகளின் உள் நோக்கம் வெவ்வேறானதாக அமைந்திருக்கலாம். வன்னிப் படுகொலைகளின் பின்னர் சில போராளிகள் இலங்கை அரசுடன் இணைந்து செயற்படும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். அவர்களின் பெரும்பாலானவர்கள் தொடர்பான விமர்சனத்தை முன்வைப்பதற்கான போதிய தகவல்கள் இன்று கிடைக்கப்பெறவில்லை.

புலம்பெயர் நாடுகளில் அரசியல் வியாபாரம் நடத்தும் குழுக்களும் தனி நபர்களும் முன்வைக்கும் துரோகி முத்திரைக்கு பலியான போராளிகள் இன்று மீண்டும் கைதாகியுள்ளனர். குறிப்பாக நகுலன் என்பவர் வன்னிப்படுகொலைகளின் பின்னர் புலம்பெயர் நாடுகளிலுள்ள பலரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு, மீண்டும் புதிய அரசியல் வழிமுறையைக் கண்டறிந்து போராடப்போவதாகக் கூறியவந்த போதும், மகிந்த ராஜபக்சவின் இராணுவத்தின் நிர்பந்ததின் அடிப்படையிலேயே அவரின் உரையாடல்கள் அமைந்திருந்தாகப் பின்னர் பலரும் அறிந்துகொண்டனர்.

நகுலனைப் போன்றே ‘கேணல்’ ராம் என்பவரும் பலரோடு தொடர்பிலிருந்து

பின்னர் காணாமல் போனவர்களில் ஒருவர்.
வன்னிப் படுகொலைகளின் பின்னர் வடகிழக்கில் தோன்றக்கூடிய எழுச்சியைத் தற்காலிகமாக பின்னடவிற்கு உட்படுத்தியதில் புலம்பெயர் பினாமி அமைப்புக்களுக்குக் கணிசமான பாத்திரம் இருந்துவந்தது. புலம்பெயர் நாடுகளிலிருந்து ராஜபக்சவைத் தூக்கில் போடுவோம் என்றும் தமிழீழத்தை மேற்கு நாடுகள் அங்கீகரிக்கின்றன என்றும் புலம்பெயர் குழுக்கள் மக்களை ஏமாற்றி வந்தன. அமெரிக்கா உட்பட மேற்கு நாடுகள் தமிழர்களின் நண்பர்கள் என்றும் போராட்டத்தை சர்வதேசமயப்படுத்திவிட்டோம் என்றும் மக்களை நம்பக்கோரின.

இன்று நிலைமை முற்றாக மாறிவிட்டது. நாட்டில் வாழும் தமிழ்ப் பேசும் மக்களை புலம்பெயர் மக்கள் ஏமாற்ற முடியாது என்ற நிலை தோன்றிவிட்டது. அமெரிக்காவும் அதன் நேச அணிகளும், ஐக்கிய நாடுகள் நிறுவனம் போன்றவையும் இலங்கை அரசிற்கே ஆதரவு வழங்கிவருகிறது என்பது வெளிப்படையாகத் தெரிந்துவிட்டது. இந்த நிலையில் இலங்கையில் எஞ்சியிருக்கும் முன்னணி சக்திகள் அல்லது போராட வேண்டும் என்ற உணர்வுள்ளவர்களின் தன்னிச்சையான எழுச்சி தோன்றலாம் என இலங்கை அரசு அச்சமடைந்துள்ளதன் விளைவே இக் கைதுகள் எனக் கருத இடமுண்டு.

இரண்டாவதாக ராஜபக்சவின் இராணுவ வலையமைப்புத் தொடர்பான தகவல்களைப் பெறுவதற்காகவும் கைதுகள் நடைபெறுகின்றன எனக் கருதவும் இடமுண்டு. குறிப்பாக ராம், நகுலன் போன்றோரின் கைதுகளை இந்த வகைகளுக்குள் உட்படுத்தலாம்.

மூன்றாவதாக தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணிச் செயலாளர் சூப்பிரமணியம் சிவகரன் கைதாகியுள்ளர். விடுதலைப் புலிகள் அமைப்புடன் குறிப்பான தொடர்புகள் எதுவும் சிவகரனுக்கு இருந்ததில்லை. அந்த அமைப்புடன் அவர் எப்போதும் இணைந்து செயற்பட்டதில்லை. ஆக, தமிழரசுக் கட்சியின் இழந்துவரும் செல்வாக்கை மீண்டும் நிலை நிறுத்தும் நோக்கத்துடன் கூட இக் கைதுகள் இடம்பெற்றிருக்கலாம்.

சாவகச்சேரி பகுதியை சேர்ந்த இருவரும் , கிளிநொச்சி , கல்வியங்காடு , நீர்வேலி , மற்றும் மானிப்பாய் ,ஆகிய பகுதிகளை சேர்ந்த தலா ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கிறன.
எது எவ்வாறாயினும் வடக்குக் கிழக்கில் தோன்றியுள்ள அரசியல் வெற்றிடத்தைப் பிரதியிடக் கூடியவர்களாகக் கருதப்படுபவர்கள் மேலும் கைதாக வாய்ப்புக்கள் உண்டு. அங்கு புலம்பெயர் வியாபார மாபியாக்களின் எடுபிடிகள் போன்று செயற்படுபவர்கள் இலங்கை அரசின் ஆபத்து வலையத்தில் இல்லை என்பது இப்போது தெளிவாகியுள்ளது.