மூலதனத்தை வாசித்தல் பகுதி 4 : சபா நாவலன்
கார்ல்ல் மார்க்ஸ் அனைத்தையும் இயங்குவதாகவே கூறுகிறார். ஒன்றின் இயக்கம் நிறுத்தப்படுகின்ற நிலையை நோக்கி நகரும் போது புதிய ஒன்றின் உருவாக்கத்தைக் காண்கிறோம். பரிவர்த்தனை மதிப்பு என்பது கூடப் பொருளின் இயக்கத்தோடு தொடர்புடையது. ஒரு பண்டம் இன்னொன்றிற்குச் சமனாகப் பரிமாறப்படுகின்றது. பின்னர் அது மற்றொன்றோடு பரிமாறப்படுகின்றது. இவ்வாறு அது தொடர்ச்சியான இயக்கத்திற்கு உட்படும் போதே அந்தப் பண்டம் பரிவர்த்தனை மதிப்பு உடையதாகின்றது.
சமூகத்தின் ஒவ்வோரு கூறுகளிலும் இந்த இயக்கத்தை நாம் காணமுடியும். இலங்கையில் இனப்படுகொலை நடந்து முடிந்தபோது சமூகத்தின் இயக்கம் தடைப்பட்டிருந்தது. அந்த இயக்கம் தடைப்படும் போது சமூகம் புதிய சமூக மாற்றத்தை நோக்கிய இயக்கத்தை ஆரம்பிக்கும். இதை உணர்ந்து கொண்ட முதலாளித்துவ சங்கிலியின் உச்சத்திலிருந்த ஏகபோக நாடுகள் பல அபிவிருத்தித் திட்டங்களை உருவாக்கின. அந்த அபிவிருத்தித் திட்டங்கள் இறுதியில் நாட்டைச் சுரண்டுவதற்கானவை என்றாலும். படுகொலைகளின் பின்னர் தடைப்பட்ட இயக்கத்தை மீளமைப்பதற்கான ஆரம்பமாக அவை அமைந்தன.
ஆக, பண்டங்களின் இயக்கம் என்பது பரிவர்த்தனை மதிப்பை உருவாக்குகின்றது. பண்டங்களின் பரிவர்த்தனை மதிப்பு என்பது அதன் இயங்கும் திறனைப் பிரதிநிதித்துவம் செய்கிறது. ஒரு பண்டம் மற்றொன்றோடு பரிவர்த்தனை செய்யப்பட முடியாத நிலையை எட்டும் போது அதன் இயக்கம் அற்றுப் போகிறது. அதன் பரிவர்த்தனை மதிப்பும் அற்றுப் போகிறது.
10 ஆண்டுகளின் முன்னர் நான் வாங்கிய கணணி இப்போது பயனற்றதாகிவிட்டது மட்டுமன்றி அது விற்பனை செய்யமுடியாததாகிவிட்டது. அதனால் பரிவர்த்தனை உலகில் அது இன்னொன்றோடு பரிமாற இயலாத நிலையிலுள்ளது. அதன் இயக்கம் பரிவர்த்தனை உலகில் நிறுத்தப்பட்டுவிட்டது. அதன் மதிப்பும் அற்றுப்போய்விட்டது.
எனது கணனிக்கு பயன் மதிப்பு அற்றுப் போய்விட்டது மட்டுமன்றி, அதாவது அதன் பாவனைக்கு உரிய தரம் அற்றுப் போய்விட்டது. இதனால் எவ்வள குறைந்த மதிப்புள்ள பொருளுக்கும் அதனைப் பரிமாற்றிக்கொள்ள முடியாது. அதே வேளஒ எனது புதிய கணணியை வேண்டுமானால் இரண்டு கைத் தொலைபேசிகளுக்கு ஈடாகப் பரிமாறிக்கொள்ள முடியும். ஆக, பயன் மதிப்பு என்பது பண்டங்களின் தரத்தோடும் அதேவேளை பரிவர்த்தனை மதிப்பு என்பது அதன் அளவோடும் தொடர்புடையது. அதே வேளை பண்டங்களின் இந்த இரண்டு இயல்புகளும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை.
இப்போது பரிவர்த்தனை மதிப்பை அளவிடுவது எப்படி என்பது பிரதானமானதாகும். அந்த அளவீடு பொதுவான ஒன்றாக அமையவேண்டும். அந்த பொதுவான ஒன்று என்பது பயன் மதிப்பினால் உருவாக்கப்படுவது அல்ல. அனைத்துப் பண்டங்களினதும் பொதுவான இயல்பு என்பது மனித உழைப்பு என்பதே. எல்லாப் பண்டங்களும் மனித உழைப்பினால் உற்பதிசெய்யப்படுவதே. ஆக பண்டங்களின் மதிப்பை அளவிடுவதற்கு மனித உழைப்புப் பொதுவானதாக அமைகிறது. எனது கணனியை உருவாக்குவதற்கு தேவைப்பட்ட மனித உழைப்பின் அளவே அதன் பெறுமானமாகக் பிரதியீடு செய்யப்படுகிறது.
அடம் சிமித் பண்டங்களின் மதிப்பு என்பது குறித்த நேரத்தில் பண்டம் என்பது சமூகத்திற்குத் தேவைப்படுகின்ற அளவையும் அதன் வினியோகத்தையும் சார்ந்தே நிர்ணயிக்கப்படும் என மனித உழைப்பின் பெறுமானத்தை நிராகரிக்கின்றார். பணத்தை மூலதனமாகக் கொண்டு செயற்படும் சட்டரீதியான சூதாட்டமான பங்கு சந்தை வியாபாரம் அடம் சிமித்தின் கோட்பட்டை அடிப்படையாகக் கொண்டே உருவானது.
ரிகார்டோ போன்ற பல பொருளியலாளர்கள் மனித உழைப்பு என்பதே பண்டங்களின் மதிப்பு என்பதைக் குறிப்பிடுகின்றனர்.
டேவிட் ரிக்கார்டோவை கார்ல் மார்க்ஸ் முற்றாக நிராகரிக்கவில்லை. பண்டங்களின் மதிப்பு என்பது மனித உழைப்பே என்பதை ஏற்றுக்கொள்ளும் கார்ல் மார்க்ஸ், அந்த மனித உழைப்பு என்பது சமூக அளவில் தேவையான உழைப்பு என்கிறார். இந்த உழைப்பு என்பதே பண்டங்களில் உள்ளடங்கியுள்ள மதிப்பாகும். பண்டங்களின் பரிவர்த்தனை மதிப்பு என்பது மனித உழைப்பினாலான பண்டங்களின் மதிப்பினாலேயே உருவாகின்றது. நாம் பண்டங்களை வாங்கும் போது உழைப்பு என்பது அதனுள் அடங்கியிருபதைக் காணமுடியாது.
எனது கணணியை 300 இற்கு வாங்கிய போது அதனுள் உள்ளடங்கியிருக்கும் மனித உழைப்பக் காணவில்லை. அந்த உழைப்பே பரிவர்த்தனை மதிப்பாகப் பிரதிநிதித்துவப்படுததப்ட்டது.
இப்போது பண்டங்களைப் பொறுத்தவரை மூன்று முக்கிய இயல்புகள் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன. அவை, பயன் மதிப்பு, பரிவர்த்தனை மதிப்பு மற்றும் மதிப்பு.
இங்கு பரிவர்த்தனை மதிப்பு என்பது பண்டங்களின் மதிப்பை வெளிப்படுத்துவதற்குத் தேவையான முறைமையாகக் காணப்படுகிறது.
பண்டங்களை நாம் ஒவ்வொரு நாளும் வாங்குகின்றோம், விற்பனை செய்கிறோம். மூலதனம் என்ற மிகப் பெரும் ஆய்வகத்தின் மூலைக் கல்லே பண்டங்கள். அதற்குள் மறைந்திருக்கும் மர்மமான பகுதி தான் மனித உழைப்பு உருவாக்கும் பெறுமானம் அல்லது மதிப்பு. பண்டங்கள் பரிவர்த்தனைக்கு உட்படக் கூடியதாகவும், ஒரு பண்டம் மற்றொன்றோடு அளவிடத் தக்கதாகவும் அமைவதற்கு மனித உழைப்பால் அளவிடப்படும் மதிப்பு என்பதே அடிப்படைக் காரணமாக அமைகிறது.
இந்த மனித உழைப்பால் உருவாகும் பண்டங்களின் பெறுமானம் என்பதே பரிவர்த்தனை மதிப்பால் பிரதியீடு செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றது.
ஒவ்வொரு பண்டங்களையும் வாங்கும் போது அவற்றில் பொதிந்துள்ள மனித உழைப்புத் தொடர்பாக ஒரு கணமேனும் எண்ணிப் பார்ப்பதில்லை. எதனால்? எமக்கு உடனடியாகத் தெரிவதெல்லாம் அதன் பரிவர்த்தனை மதிப்புத் தான். மனித உழைப்புத் தான் பரிவர்த்தனை மதிப்பாக பிரதியிடப்பட்டுவிட்டதே.
இங்கு மிக குறிப்பிடத் தக்க ஒன்று, மதிப்பு என்பது பரிவர்த்தனை மதிப்பால் பிரதிநிதித்துவப் படுத்தப்படுகிறதே தவிர, மதிப்பு என்பது பரிவர்த்தனை மதிப்பிற்குச் சமனான ஒன்றல்ல. இரண்டும் வேறுபட்டவை. பண்டங்களை உற்பத்தி செய்வதற்கான உழைப்பு சக்தி அதிகரிக்கும் போது அதன் மதிப்பு அதிகரிக்கும். அதே வேளை பரிவர்த்தனை மதிப்பும் ஒப்பீட்டளவில் அதிகரிக்கும்.
மனித உழைப்பு என்ற பண்டங்களை உற்பத்தி செய்யும் செயற்பாடு சந்தைக்குப் போவதற்கு முன்பதாக அவற்றின் பெறுமானத்தை அல்லது மதிப்பை க் அளவிடுவதற்கான முறை.
உழைப்பின் அளவு எவ்வளவு என்பதில் இருந்தே பண்டங்களின் மதிப்பு உருவாகிறது. சரி, எவ்வளவு உழைப்பு என்றால் என்ன? அது பண்டங்களை உற்பத்தி செய்ய மனித உழைப்புத் தேவைப்படும் நேரத்தை அடிப்படையாகக் கொண்டது. முதலாளித்துவ உற்பத்தி முறையில் காலம் என்பது உழைப்பின் உள்ளே அடங்கியிருக்கும் அடிப்படையகும் பிரதான காரணியாக அமைகிறது.
நம் சந்தித்த, இன்று அழிந்து கொண்டிருக்கும் நவ-தாராளவாதப் பொருளாதாரம் மனித உழைப்பை வேறு வகைகளில் கையாள்வதிலிருந்தே ஆரம்பிக்கப்படுகிறது. ஐரோப்பாவில் 7 யூரோக்களை ஒரு மணி நேர வேலைக்கு ஊதியமாகப் வழங்கும் ஒரு பல்தேசிய முதலாளி, இந்தியாவிலோ இலங்கையிலோ ஒரு யூரோக்களே ஊதியமாக வழங்குகிறார்.
ஆக, உழைப்பு நேரம் என்று மட்டும் மொட்டையாகக் குறிப்பிட முடியாது என்று கார்ல் மார்க்ஸ் அன்றே எதிர்வு கூறியிருந்தார்.
(தொடரும்…)
அடுத்த வாரத் தொடரில் முதலாவது பாகத்தின் முதலாவது அத்தியாயம் முடிவடையும். அத்தோடு முதலாவது அத்தியாயத்தின் முழுமையான மொழிபெயர்ப்பும் இணைக்கப்படும். முன்னைய தொடர்களில் ஆக்கபூர்வமான பங்களிப்புக்களை வழங்கிய அனைவருக்கும் நன்றிகள். இன்றை அவசியமானதும் அவசரமானதுமான மனித குலத்தின் தேவையான மூலத்தனம் குறித்த மீள் வாசிப்பு கூட்டு முயற்சியாக முன்னெடுத்தாலே முழுமை பெறும்.
முன்னைய பகுதிகள் :
மூலதனத்தை வாசித்தல் பகுதி 3 : சபா நாவலன்
மூலதனத்தை வாசித்தல் பகுதி 2 : சபா நாவலன்
மூலதனத்தை வாசித்தல் பகுதி 1 : சபா நாவலன்











