பலவீனமான சமுதாயங்களுக்கு உதவாமல், முரண்பாடுகளுக்கு தீர்வு காணாமல் பொருளாதார நெருக்கடியைச் சமாளிப்பதில் அரசுகள் கவனம் செலுத்துவதால் மனித உரிமை மீறலுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் உள்ளது என்று சர்வதேச பொது மன்னிப்பு அமைப்பு எச்சரித்துள்ளது.
உலகப் பொருளாதார நெருக்கடியுடன் இணைந்து சமுதாயம் மற்றும் அரசியல் பிரச்சனைகளையும் கவனிக்கத் தவறினால் உலகில் நிலையற்ற தன்மை, வறுமையும் வேதனைகளும் மேலும் அதிகரிக்கும் என்று அமைப்பின் ஆண்டறிக்கை சுட்டிக் காட்டுகிறது.
பொருளாதார நெருக்கடிக்குள்ளே மனித உரிமைப் பிரச்சனை வெடித்துச் சிதறும். முறையற்ற பயன்பாடுகள், அவற்றிலிருந்து திசை திரும்பும் கவனம் ஆகியவற்றை பொருளாதார நெருக்கடி ஆழமாக்கியுள்ளதுடன் புதிய பிரச்சனைகளையும் உருவாக்கியுள்ளது என்று சர்வதேச பொது மன்னிப்பு அமைப்பின் செயலாளர் ஜரின் கான் குறிப்பிட்டார். பாதுகாப்பு என்ற போர்வையில் மனித உரிமைகள் மிதிக்கப்படுகின்றது. தற்போது பொருளாதார நெருக்கடி என்ற காரணம் கூறி மனித உரிமைகள் பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டன என்றும் அவர் கூறினார்.
பொருளாதார நெருக்கடியைக் காட்டி வளர்ச்சி நிதி உதவிகளை வெட்டாமல், பொருளாதார வளர்ச்சி முத லீடுகள் போல் மனித உரிமையிலும் முதலீடு செய்ய வேண்டும் என்று அறிக்கை ஆலோசனை அளித்துள்ளது. ஆப்கன் மற்றும் பாகிஸ்தானில் ராணுவ நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. அதனால் உருவாகும் மனித உரிமை அபா யங்கள் ஓரங்கட்டப்படுகின்றன என்றும் அறிக்கை கூறுகிறது. உலகில் உள்ள 81 நாடுகளில் கருத்துரிமை மறுக்கப்பட்டுள்ளது என்றும் அறிக்கை கூறுகிறது.







