தமிழ் சினிமாஇசையில் அகத்தூண்டுதல் 3 : T .சௌந்தர்
மரபு ரீதியான சங்கீதத்தையும் ,நாட்டுபுற இசையையும் தமிழ் இசையமைப்பாளர்கள் பயன்படுத்தி வந்தாலும் மெல்லிசை நோக்கிய பயணத்தில் வேற்று இசைகளின் கலப்பின் அவசியத்தையும் உணர்ந்தார்கள்.மேற்கத்தேய கலை வடிவமாக சினிமா அறிமுகமாகியதும் , பின் இசைத்தட்டு கண்டுபிடிப்பின் வளர்ச்சியும் , மேலைத்தேய பொழுது போக்கு இசைத்தட்டுகளின் [ GRAMMOPHONE RECORDS ] வருகையும் , அந்த இசையில் அவர்கள் ஈடுபாடு காட்ட காரணங்களாக அமைந்தன.எனினும் இந்திய மரபிசையில் நல்ல தேர்ச்சி மிக்கவர்களாக இருந்த அவர்கள் , இந்திய தன்மைக்கு தீங்கு விளைவிக்காமல் பார்த்துக் கொள்ளுவதிலும் கவனம் செலுத்தினர் என்று துணிந்து கூறத் தக்கவகையில் பாடல்களைத் தந்தார்கள்.
உலகில் சிறந்த படைப்புக்கள் எல்லாம் தமிழுக்கு வர வேண்டும் என ஆவலுற்ற பாரதி தன பங்கிற்கு அடியெடுத்துக் கொடுத்தது போல தாகூரின் சிறுகதைகளை மொழிபெயர்த்திருக்கிறான்.ஷெல்லி என்கிற ஆங்கில கவிஞனின் படைப்புக்களால் உந்துதல் [ Inspiration ] பெற்ற பாரதி , தனக்கு ஷெல்லிதாசன் என்று புனை பெயரை சூட்டிக் கொண்டான்.செல்லியை அப்பட்டமாக ” கொப்பி” பண்ணியதே பாரதியின் குயில் பாட்டு என கவிஞர் நா. காமராசன் கூறியிருப்பதும் நினைவுக்கு வருகிறது.
ஆங்கில இலக்கியங்களில் இருந்து தழுவல் முறையை கையாண்ட கல்கியின் எழுத்துக்களை சிறுகதை சிற்பி புதுமைப்பித்தன் ஏற்றுக் கொள்ளவில்லை.இது தொடர்பான கடுமையான கருத்து மோதல்கள் அவர்களிடையே நடைபெற்றுள்ளது. தமிழ் இலக்கியத்தில் மட்டுமல்ல வெளி நாட்டு இலக்கியத்திலும் பரீட்சயம் பெற்றிருந்த புதுமைப்பித்தன் ” தழுவல் முறையை தீங்கானது என்றும் அதையிட்டுப் பெருமைப்பட முடியாது ” என்றும் கூறியிருக்கிறார்.மொழி பெயர்ப்புக்களை ஊக்குவிப்பதே சிறந்தது என்று புதுமை பித்தன் கருதினார்.
புதுமைப்பித்தனின் சம காலத்தவரும் சிறந்த சிறுகதைகளை படைத்தவர் என வர்ணிக்கப்படும் கு.ப.ரா. புதுமைப்பித்தனின் கருத்துக்கு மாறான கருத்தைக் கொண்டிருந்தார்.
ஒரு படைப்பு அதன் மூல வடிவத்தை கலை அம்சங்களால் தாண்டுவதும் , மூல வடிவத்தை சிதைப்பததும் கையாளும் கலைஞனின் ஆற்றலை வெளிப்படுத்தும். ஆற்றல் மிக்க கலைஞர்கள் மூல வடிவத்தின் அழகுகளை காட்டி அதனை புதிய தளத்திற்கு கொண்டு செல்வர். இலக்கியத்தில் இவ்விதமான சண்டைகள் , சச்சரவுகள் நடைபெற்றாலும் இசைத்துறையில் மேற்கத்தேய இசையின் கலப்பு இனிமை சேர்த்திருக்கிறது என்பதை நாம் அறிவோம்.
பொதுவாக மேற்கத்தேய இசையை தமிழ் சினிமாவில் பயன்படுத்திய முன்னோடி சி.ஆர் சுப்பராமன் என்பார்கள்.ஆயினும் அவருக்கு முன்பு மேற்கத்தேய இசை அங்காங்கே பாடல்களில் பயன்பட்டு வந்துள்ளது. குறிப்பாக எஸ். ராஜேஸ்வர ராவ் (10 10 1922 – 25 .10 . 1999)என்ற புகழ் பெற்ற இசையமைப்பாளர் பல்வகை இசை தெரிந்தவர் என பெயர் பெற்று விளங்கியவர்.அன்று ஜெமினி நிறுவனத்தால் மிகப் பொருள் செலவில் எடுக்கப்பட்ட, பிரமாண்டமான தயாரிப்புக்களான சந்திரலேகா , மங்கம்மா சபதம் , அபூர்வ சகோதரர்கள் போன்ற பாடல்களின் இசையமைப்பாளராக இருந்தவர். சந்திரலேகா படத்தில் என்.எஸ்.கிருஷ்ணன் + மதுரம் பாடும் ” ஐயோ பாகிரியாமா…” என்ற அர்த்தமற்ற சொற்களை மேலைத்தேய முறையில் பாடலாக்கியவர்.அந்தப் படத்தில் வருகின்ற மேள நடனம் [ Drum Dance ] காட்சிக்காக ஆபிரிக்கதாளங்கள் பயன்படுத்தப்பட்டன. அதற்காக ஈரான் ,எகிப்து மற்றும் ஆபிரிக்காவிலிருந்து கலைஞர்கள் வரவழைக்கப்பட்டனர்.அதற்க்கான இசை அமைப்பு பணியும் , ஒத்திகையும் ஒரு வருடம் நடைபெற்றது.
மங்கம்மா சபதம்[ 1943 ] படத்தில் ” ஐய்யய்யோ சொல்ல வெட்கமாகுதே ..” என்று வசுந்தராதேவி பாடிய பாடலை Carmen Mirandaa என்ற hollywood இல் புகழ் பெற்ற பாடகியின் ” I LIKE YOU VERY MUCH..” என்ற பாடலிலிருந்து நேரடியாக பிரதி எடுத்திருந்தார்.
ஜிப்சிப் பெண் நடனகாட்சிக்கு அமைக்கப்பட்ட பாடல அது. இது போன்ற பாடல்கள் அன்று பரபரப்பை ஊட்டியிருக்கலாம்.ஆனால் கால வெள்ளத்தில் அவை மறக்கடிக்கப்பட்ட பாடலகள் ஆகி விட்டன என்பதே உண்மை.அவற்றை விட இந்திய தன்மையாக் அமைக்கப்பட்ட பாடல்கள் இன்றும் ஒலித்துக் கொண்டுதானிருக்கின்றன. கிட்டத்தட்ட அதே காலத்தில் வந்த அபூர்வ சகோதரர்கள் படத்தில் வந்த “மானும் மயிலும் ஆடும் சோலை ” என்ற பாடல் இன்றும் இலங்கை வானொலியில் நெஞ்சில் நிறைந்த பாடல்கள் நிகழ்ச்சியில் ஒலித்துக்கொண்டே இருக்கின்றது.
பின்னாளில் கடன் வாங்கிக் கல்யாணம் 1958 , மிஸ்ஸியம்மா 1955 ,அலாவுதீனும் அற்புத விளக்கும் 1957 , விக்ரமாதித்தன் , பிரேமபாசம் போன்ற படங்களில் இனிமையான பாடல்களை தந்தவர் எஸ்.ராஜேஸ்வரராவ். அவற்றில் …
1 . வாராயோ வெண்ணிலாவே என்ற பாடல் மிகவும் புகழ் பெற்றது. [ படம் :மிஸ்ஸியம்மா ] இந்த படம் ஹிந்தியில் [ Miss Mary 1957 ] மொழி மாற்றம் செய்யபட்ட போது ஹிந்தியில் இசையமைத்தவர் இசை மேதை ஹேமந்த் குமார். எல்லாப் பாடல்களையும் மாற்றினார்கள்.ஆயினும் இந்தப் பாடலை ஆதாரமாக வைத்துக் கொண்டு ,தன்னுடைய வித்தைகளைக் காண்பித்திருப்பார் ஹேமந்த் குமார். வாராயோ வெண்ணிலாவே பாடலின் சாயல்கள் அங்கங்கே மின்னி மின்னி மறையும்.inspiration என்பதற்கு நல்ல எடுத்துக் காட்டாகும்.O..Raat ke musafir re chanda என்பது அந்த பாடலின் பெயர்.முகமத் ராபியும் ,லதா மங்கேஸ்கரும் பாடியிருப்பார்கள்.ஆபேரி ராகத்தில் அமைக்கப்பட்ட அருமையான பாடல்.
2 . பிருந்தாவனமும் நந்தகுமாரனும் [ மிஸ்ஸியம்மா 1955 ] இந்த பாடலும் அதே படத்தில் வருகிறது.இந்த பாடல் எந்த விதமான மாற்றமும் இல்லாமல் வருகிறது.மிகச் சிறப்பாக அமைந்த பாடல் .இந்தப் பாடலுக்கான அனுமதியைப் பெற்று அப்படி வைத்தார்கள். இந்த பாடல் ஹிந்தியில் Brindavan Ke Krishna Khanya என்று ஆரம்பிக்கும்.சுத்த சாவேரி ராகத்தில் அமைக்கப்பட்ட இனிமையின் உச்சத்தில் இருக்கும் காலத்தால அழியாத பாடல்களில் ஒன்றாகும்.ஹிந்தி பாடல்களை காப்பியடித்த அந்த காலத்தில் இங்கிருந்து அங்கு போய் நிலைபெறுவது அபூர்வமாக நிகழ்ந்ததே.
3 . வெண்ணிலவே கொஞ்ச நேரம் நில்லு [விக்ரமாத்திதன் ] பி. சுசீலா
4 . எங்கிருந்து வீசுதோ இதமாகவே தென்றல் [கடன் வாங்கிக் கல்யாணம் 1958 ] A.M. ராஜா + P.லீலா
3 . கையும் கையும் கலந்திடவா ஜாலியாகவே [கடன் வாங்கிக் கல்யாணம் 1958 ] A.M. ராஜா + P.லீலா பி. சுசீலா போன்ற பல நல்ல பாடல்களைத் தந்தவர் எஸ்.ராஜேஸ்வரராவ் .
” மல்லிகைப்பூ ஜாதி ரோஜா ” [ படம்: ராஜி என் கண்மணி - 1954 ]என்ற இனிமையான பாடலை யாரால் மறக்கமுடியும் ? மென்மையான குரல் வளம் கொண்ட R.பாலசரஸ்வதிதேவி என்ற பாடகியால் பாடப்பட்ட பாடல்.சார்லி சாப்ளின் இசையமைத்த CITY LIGHT [ 1931 ] என்ற படத்தில் குருட்டுப் பெண் வரும்
காட்சியில் [ blind girl theme ] பின்னணி இசையாக வரும் மெட்டை தழுவி இசையமைக்கப்பட்ட பாடல். “La Violetera” என்றழைக்கப்பட்ட இந்த இசை Jose Padilla Sanchez என்பவரால் இசையமைக்கப்பட்டது. இதன் மூல வடிவம் ஸ்பெயின் நாட்டுப்புற இசையிலிருந்து கிடைத்தது. மேலைத்தேய இசையை தழுவிய பாடலாக இருந்தபோதும் இந்திய தன்மையை வழங்கியிருப்பார் இசையமைப்பாளர் எஸ்.ஹனுமந்தராவ். இந்தப் பாடலின் இனிமை நம்மை புது உலகத்திற்கு அழைத்துசெலவது போன்ற உணர்வை ஏற்ப்படுத்தும் அதிசயப்பாடலாகும் .இவர் இசையமைப்பாளர் எஸ்.ராஜேஸ்வரராவின் சகோதரராவார்.மிக சில தமிழ் படங்களுக்கே இசையமைத்தவர் எஸ்.ஹனுமந்தராவ்.
சி.ஆர் .சுப்பராமன் யுகம்
1950 களில் மேற்கத்தேய ஹார்மானி இசையை பயன் படுத்தி தமிழ் திரை இசையை புதிய திசைக்குத் திருப்பிய பெருமை இசைமேதை சி.ஆர் .சுப்பராமன் [ 1924 - 1953 ] என்பவரையே சாரும்.கிராம போன் [ HMV ] இசைக் கம்பனியில் பதினாறு வயதில் ஹார்மோனியக் கலைஞராகப் பணியாற்றியவர் சி.ஆர். சுப்பராமன்.பின் அந்த தொடர்பால் சினிமாவுக்குபத்தொன்பது வயதில் வந்தவர். நடிகை பானுமதியின் படங்களுக்கு இசையமைத்த போது மேலைத்தேய
இசைத்தட்டுக்களை அதிகம் கேட்க்கும் வாய்ப்பு பெற்று அதில் ஈடுபாடு காட்டியவர்..மேற்க்கத்திய இசையின் ஆற்றலை தமிழ் சினிமாவில் இணைத்த முன்னோடி அவர் தான். குறிப்பாக லத்தீன் அமெரிக்க இசை தான் அவரது முக்கிய INSPIRATION ஆகும்.அவரது வழித்தடத்தை பின்பற்றியே விஸ்வநாதன் ராமமூர்த்தி , டி.ஜி. லிங்கப்பா டி.ஆர் .பாப்பா ,கண்டசாலா, எஸ்.தட்சிணாமூர்த்தி,கோவர்த்தனம் போன்றவர்கள் மெல்லிசையில் புது பரிமாணங்கள் காட்டினார்கள்.
சி.ஆர் .சுப்பராமன் இசையமைத்த நல்லதம்பி படத்தில் ” எனதுயிர் எயிப்துப் ..” [ நல்லதம்பி ] ,” பிரேமைதான் தான் பொல்லாதா ..” [ லைலா மஜ்னு 1949 ] இந்த பாடல் ஹாம்லெட் [ Hamlet 1948 ] படத்தில் வரும் ஒரு பாடலின் சாயல்களை கொண்டிருக்கும்.லத்தீன் அமெரிக்க இசையின் தாள லயமும் ,பின்னணி இசையும் பாடலை அழகாக,மென்மையாக நகர்த்திச் செல்லும். லத்தீன் அமெரிக்க இசையால் வசீகரிக்கப்படவர் சி.ஆர். சுப்பராமன்.கிடைக்கும் வாய்ப்புக்களில் அதைப் பயன் படுத்தியும் கொண்டார்.செவ்வியல் இசையிலும் பாண்டித்தியம் பெற்றவராகவும் இருந்தார்.நவீன திரையிசையின் தொடக்கப்புள்ளி சி.ஆர் சுப்பராமனிலிருந்தேஆரம்பமாகியது எனலாம்.
ராஜமுக்தி [ 1948 எம்.கே.தியாகராஜபாகவதர் நடித்தது ]
நல்லதம்பி [ 1949 ]
கன்னியின் காதலி [ 1949 ]
வேலைக்காரி [ 1949 ]
லைலா மஜ்னு [ 1950 ]
மர்மயோகி [ 1950 ]
மணமகன் [ 1951 ]
காதல் [ 1952 ]
ராணி [ 1952 ]
தேவதாஸ் [ 1953 ] [அவரது கடைசிப் படம் ]
போன்ற படங்களுக்கு இசையமைத்து புகழ் பெற்றார்.காதல் ,ராணி ,தர்ம தேவதா, லைலா மஜ்னு போன்ற படங்களில் மெல்லிசையில் மனதை மயிலிறகால் வருடும் இனிய பாடல்களை அவர் தந்திருக்கிறார். நாடுப்புற இசையில் இவர் இசையமைத்த பாடலகளும் மிகச் சிறப்பானவை என்பதற்கு என்.எஸ்.கிருஷ்ணன் நடித்த ” நல்லதம்பி ” படத்தில் வரும் ” நாட்டுக்கு சேவை செய்ய நாகரீக கோமாளி வந்தேனய்யா ” என்ற பாடல் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
ராஜமுக்தி [ 1948 ]எம்.கே.தியாகராஜபாகவதர் நடித்த படத்தில் எம்.எல்.வசந்தகுமாரியை அறிமுகம் செய்தார்.இந்தப் படத்தில்
1 .என்ன ஆனந்தம் M.K.தியாகராஜ் பாவதர் . + வசந்தகுமாரி [ராகமாலிகை ]
2 . மனம் நினைந்து ஏங்கினேன் M.K.தியாகராஜ் பாவதர் காம்போதி ராகம்
3 . உன்னையல்லால் ஒரு M.K.தியாகராஜா பாகவதர் சாருமதி ராகம்
போன்ற கர்னாடக இசையிலமைத்த பாடல்களை தந்தார்.
“ஆகா இவர் யாரடி ” [படம் : மோகினி 1948 ] என்ற மிகச் சிறந்த ராகமாலிகைப் பாடலை இசையமைத்தார். அந்த பாடலின் ராக அமைப்பை ரசித்த ஜி.ராமநாதன் அவர் வீடு சென்று பாராட்டினார் என்பார்கள் அவர் குறித்து எழுத்தாளர் கி.ராஜநாராயணன் தன்னிடம் கூறியதாக இளையராஜா சொல்கிறார்.
” அப்படிப்பட்ட கம்போசருக்கு மனசிலே ஒரு குறை இருந்தது தன்னை ஒரு இசை தெரிந்தவனாக இசையுலகத்தில் இருக்கக் கூடியவர்கள் மதிக்கவில்லை என்ற ஆதங்கம் இருந்தது.இதை எப்படி வெளிப்படுத்துவது என்று உள்ளுக்குள்ளேயே வருந்திக்கொண்டிருந்தார்.இதை எப்படியோ அறிந்து கொண்ட கலைவாணர் என்,எஸ் கிருஷ்ணன் அவர்கள், அவருக்குள்ளே இருக்கக் கூடிய புலமையை வெளிப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திற்காக ஒரு படத்தைத் தயாரித்தார்.அந்தப் படத்தின் பெயர் மணமகள் என்பதாகும்.அதில் வரக்கூடிய எல்லாப் பாடல்களும் கர்னாடக சங்கீதத்தை வைத்து எழுப்பப்பட்ட பாடல்கள்.
1. பாவியினும் படு பாவி
2. எல்லாம் இன்ப மாயம்
3. சின்னஞ் சிறு கிளியே கண்ணம்மா
” இந்த சின்னஞ் சிறு கிளியே கண்ணம்மா என்ற பாடல் பாடாத கர்னாடக கச்சேரிகளே கிடையாது. கி.ராஜநாராயணன் அவர்கள் குறிப்பிட்டு சொன்னார்கள், பாரதி எவ்வளவோ பட்டு எழுதியிருக்கிறாரு ஆனா இந்த சின்னஞ் சிறு கிளியே கண்ணம்மா என்ற பாடல் எப்படி மக்களிடத்தே போய்சேர்ந்தது என்று சொன்னால் அதற்க்குக் காரணம் அந்த வர்ண மெட்டுதான். அதைக் கொண்டு சேர்த்தது ” – இளையராஜா
தமிழ் திரை இசையுலகின் மெல்லிசைப் பாங்கான பாடல்களின் முன்னோடியே அவர் தான்.லைலா மஜ்னு படத்தில் சிறந்த மெல்லிசைப் பாடல்களைத் தந்தார்.
1 .எனது உயிர் உருகும் நிலை சொல்லுவாய் வான் மதி- லைலா மஜ்னு – பாடியவர்கள் :கண்டசாலா +பானுமதி
2 . உன்னை பார்க்க போகின்றேனோ
3 . வாராயோ எனை மறந்தனையோ- லைலா மஜ்னு – பாடியவர்கள் :கண்டசாலா +பானுமதி
சமீபத்தில்[ December 2011 ]நடந்த இசைஞானி இளையராஜாவின் இசை நிகழச்சியில் இந்த பாடலை [ வாராயோ எனை மறந்தனையோ ] பற்றி ,அதில் எப்படி வெஸ்டர்ன் ஹார்மனி இசையை சி.ஆர். சுப்பராமன் பயன் படுத்தியுள்ளார் என்பதை இசைத்துக் காட்டி அவரைப் பெருமை படுத்தினார்.
தமிழ் ராகமான கீரவாணி கனமான ராகங்களில் ஒன்று. மேற்கத்தேய இசையிலும் பயன்படக்கூடிய ராகம். குறிப்பாக கிரீஸ் , இத்தாலி ,கிரேட்டா போன்ற மத்திய தரை நாடுகளில் சாதாரணமாக ஒலிக்கின்ற ராகம். கிழக்கையும் ,மேற்கையும் இணைக்கின்ற தன்மையினை கொண்ட கீரவாணி ராகத்தை மெல்லிசையில் அமர்த்திக் காட்டிய முன்னோடி சி.ஆர். சுப்பராமன்.இந்த ராகத்தின் சிறப்புக்களில் ஒன்று வேகம் [ speed ] .வேகத்தை வெளிப்படுத்த ஏதுவான ராகம் என்பதாகும்.
அந்த வேகத்தை ” மனதுக்கிசைந்த ராஜா …” மர்மயோகி [ 1950 ] என்ற பாடலில் ,மகிழ்சியை , உல்லாசத்தை வெளிப்படுத்துவதாக அமைத்திருப்பார்.” ஓரிடம் தனிலே ” [ படம் வேலைக்காரி } என்ற பாடலிலும் மிக புதிய கோணத்தில் இசையமைத்திருப்பார்.பின்னாளில் இந்த இசையின் நுட்பங்களை எல்லாம் இளையராஜா சத்தம் போடாமல் செய்து காட்டுகிறார்." போவோமா ஊர் கோலம் பூலோகம் எங்கெங்கும் " என்ற பாடலில் இந்த வேகம் காண்பிக்கப்படுகிறது.கீரவாணி ராகத்தில் "பூவே செம்பூவே உன் வாசம் வரும் " என்கிற பாடலில் இளையராஜா மேற்க்கதேய இசையையும், ஹிந்துஸ்தானி இசையையும் ,கர்னாடக இசையையும் இணைத்து கலப்பிசைக்கு [ FUSION MUSIC] எடுத்துக்காட்டான பாடலைத் தந்து தன்னை மேதை என் நிரூபிக்கின்றார். கீரவாணி ராகத்தில் நூற்றுக்கணக்கான பாடல்களை , வித, விதமாக பாடல்களை இளையராஜா தந்திருக்கிறார்.
இரண்டு ,மூன்று இசையமைப்பாளர்களும் ஒரு படத்தில் பணியாற்றி காலத்தில் ஜி.ராமனதனுடனும் , எஸ்.எம். சுப்பையா நாயுடு எஸ்.வீ.வெங்கட்ராமன் உடனும் சேர்ந்து பணியாற்றியவர் சி.ஆர். சுப்பராமன்.சில படங்களில் யார் எந்த பாடலை இசையமைத்தார்கள் என்பதை அறிய முடியாத நிலை இருக்கிறது.உள்ளத்தில் பொங்கும் உணர்வுகளை தனது பாடலகளில் வடித்துத் தந்தவர்.புத்துணர்ச்சியையும் ,வேகத்தையும், ஆனந்தக் களிப்பையும் அந்த ராகங்களின் எல்லைகளை மீறாமல் மேலைத்தேய இசையின் கலப்பு என்றாலும் ,அது நமது பாரம்பரிய இசையுடன் இசைவாக்கிய அற்புதங்களை பரிசோதனைகளாக செய்து பார்த்தவர்.அந்தவகை பாடலாக் மர்மயோகி படத்தில் T.V ரத்தினம் பாடும் ” மனசுக்கிசைந்த ராஜா என்னை மயக்கும் முகவிலாசா ” என்ற பாடலில் காதலின் வேகமும் , களிப்பும், ஆனந்தமும் , இன்பத்தை அனுபவிக்கத் துடிக்கின்ற உணர்வையும் வெளிப்படத்தும் பாடலாக இந்த பாடல் அமைக்கப்பட்டுள்ளது.மெடுக்குப் பாட்டா ? இல்லை பாட்டுக்கு மெட்டா ? என்பதை இந்தப் பாடலில் சொல்லமுடியாதளவு இரண்டும் ஒன்றிப் போய் இருக்கும். பாடலைக் கவனியுங்கள் .சந்தத்தில் உருண்டும் வழுக்கியும் ஓடும் சொற் கட்டமைப்பு.மெட்டுக்குள் அடங்குமா ? சந்தத்தை வாசித்துப்பாருங்கள். மிக மிக வேகமாகப் பாடப்படும் பாடல் இது.
மனசுக்கிசைந்த ராஜா என்னை
மயக்கும் முக விலாசா
மங்கள சுபகரம் எங்கும் நிறைந்து
சுகம் பெறவோம் நேசா
சிந்தை களிக்கு விருந்தென பற்ப்பல
விந்தை மிகுந்திடும் எழில் சித்திர கூடம்
அதில் அந்த மிகுந்த சுகந்தம் நிறைந்திடும்
அந்தப்புரம் ஒரு விசேடம்
நல முத்துடன் ரத்தினம் வைத்துப் பதித்த
விசித்திர செப்பிள மஞ்சம்
அதில் நித்தமும் மெத்த சுகத்தில்
திளைத்த ஒருமித்த மனத்துடன் வாழ்ந்திடுவோம்
கிண்கிணி தண்டை சதங்கை சிலம்பொலி
எங்கும் இசையுடன் முழங்க
கால்கள் தகதிமி தக திமி தக என தாளம் போட
மைவிழி கை வழி ஆட மரகத மணி விளையாட
அலுக்கி குலக்கி மினுக்கி சிலுக்கி ஆடுவேன்
உன்னுடன் பாடுவேன் புது மலர் சூடுவேன்
குழவி மனம் மகிழ குழவி அனுதினமும்
புதுமலர் அணைதனில் இதமுடன் கூடிடுவேன்
இந்திர போகமும் சொர்க்கமும்
நான் தரும் இன்பத்தின் முன் நிற்குமோ
மலரும் மனமும் போல் நகமும் சதையும் போல்
உயிரும் உடலும் போல் இணை பிரியோம்
நம் காதல் வாழ்வில் வானம்பாடிம போல
பிரேமா கீதம் பாடி மகிழ்ந்திடுவோம்
அதே படத்தில் அதே பாடகி [ T.V ரத்தினம் ] பாடிய இன்னுமொரு இனிய பாடாலான ” இன்பம் இதுவே இன்பம் ” மெல்லிசையின் சிகரம் என துணிந்து கூறலாம்.தென்றலின்இதமும், நிலவின் குளுமையும் ,காதலின் களிப்பும், பரவசமும் பொங்கி பிரவாக்க்கும் பாடலாக இந்த பாடல் அமைக்கப்பட்டுள்ளது.அதுமட்டுமா தர்மதேவதா [1951] ஜிக்கியுடன் அவர் பாடிய ” ஜோரான மின்னல் போலே …. ” , ” வாராய் ராணி… ” போன்ற பாடல்கள் அவரை நல்ல பாடகர் எனநிரூபிக்க்த்தக்கவை.அவரின் சில பாடல்களில் எஸ்.டி.பர்மன் என்ற ஹிந்தி திரைப்பட இசை மேதையின் தாக்கமும் உண்டு. ” அவர் ஒரு CREATIVE GENIUS ” என்பார் பானுமதி. லத்தீன் அமெரிக்க இசையின் தாக்கத்தில் வெளிவந்த பாடல்கள் சில.குறிப்பாக லத்தீன் அமெரிக்க தாளம் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.அதற்க்குச் சான்றாக சில பாடல்கள் :
* இனி என்றும் இன்பம் தான் – படம்:ராணி [1951 ] – பாடியவர்: ஜிக்கி
* என் வாழ்வில் இன்பம் நீயே – படம் : தர்மதேவதா (1952 ) – பாடியவர்: K.ராணி
* சும்மா சும்ம சும்மா சும்மா – படம் : தர்மதேவதா (1952 ) – பாடியவர்: K.ராணி
* பாடுவேன் பாருங்கோ தில்லானா – படம் : தர்மதேவதா (1952 ) – பாடியவர்: K.ராணி
மேலைத்தேய இசையை படைப்பாற்றலுடன் படைத்தவர் சி.ஆர் .சுப்பராமன்
காதல் ,தேவதாஸ் போன்ற படங்களில் அவர் தந்த சாக வரம் பெற்ற பாடல்கள் பின்னால் வந்த பல இசையமைப்பாளர்களுக்கு மிக பெரிய உந்துதலாக [ Inspiration ] இருநதன.
குறிப்பாக ஒ ..ஒ. ஒ.. தேவதாஸ் என்ற சுப்பராமனின் பாடல் , பின் வந்த பல பாடல்களுக்கு உந்துதலாக [ INSPIRATION ] இருந்தது. இந்த ஒரு பாடலை அகத்தூண்டுதாலாகக் [ INSPIRATION ] கொண்டு வெளி வந்த பாடலகள் சிலவற்றை தருகிறேன்.
1. தேன் உண்ணும் வண்டு மாமலரைக் கண்டு [ அமரதீபம் 1953 ] A.M. ராஜா + P. சுசீலா இசை: T .சலபதிராவ்
2. கண் மூடும் வேளையிலும் கலை என்ன கலையே [ மகாதேவி 1957 ] A.M. ராஜா + P. சுசீலா இசை :விஸ்வநாதன் ராமமூர்த்தி
3. அடி வான்மதி [ சிவா ] S.P. பாலசுப்ரமணியம் + சித்திரா இசை : இளையராஜா
4. ஒ ..ஒ பார்ட்டி நல்ல பார்ட்டி தான் [ இதயம் 1991 ] S.N. சுரேந்தர் + மலேசியா வாசுதேவன் இசை : இளையராஜா
5. பாரியாதப் பூவே அந்த தேவ லோக தேனே [ என் ராசாவின் மனசிலே 1991 ] S.N. சுரேந்தர் + சித்திரா இசை : இளையராஜா
6. தென்மாங்கு தேனே குற்றால குளிரே என் மீது ஏன் கோபமோ [ ________1994__ ] மனோ + சித்திரா இசை :தேவா
7. உனது விழியில் நானே [ __________1994__ ] அருண்மொழி + உமாரமணன் இசை: காண்டீபன்
சி.ஆர் .சுப்பராமனின் ஒ ..ஒ. ஒ.. தேவதாஸ் என்ற பாடலை ஆதாரமாக வைத்துக்கொண்டே பின் வந்த பாடல்களை எல்லாம் ஒரு மாலையாக தொடர்ந்து பாடிக்கொண்டே இருக்கலாம்.இந்தப் பாடல்கள் எல்லாம்
Inspiration என்பதற்கு மிகச் சிறந்த உதாரணங்களாகும்.இவை எல்லாம் நான் பாடிப் பார்த்ததில் கிடைத்தவை.இவை எல்லாம் நாம் இளையராஜாவின் பாடல்கள் மூலம் கேட்டு பெற்ற அனுபவங்களின் விளைவே.இசை பற்றிய ஓர் விழிப்புணர்வு இளையராஜாவின் வருகைக்கு பின் தான் வந்தது என்பது எனது கருத்தாகும்.
ஆனாலும் இதற்க்கு முன்பே பொதுவாக நான் எனது நண்பர்களுடன் பாடல் பற்றி பேசும் போது ஒரு ராகத்தில் அமைந்த வெவ்வேறு விதமான பாடல்களை பற்றிப் பேசுவதுண்டு.ஒரே ராகமாக் இருந்தாலும் வெவ்வேறு சுருதியில் , தாளத்தில் , வெவேறு உணர்வுகளில் பாடப்பட்டாலும் அதில் ஊடுபாவமாக விளங்கும் ராகத்தில் பாடல்களுக்கிடையே பொருந்தக்கூடிய சங்கதிகளால் பாடல்களை இணைத்து மாலையாக பாடிக்கொண்டே இருக்கலாம்என்பதை அறிந்திருந்தோம்.1986 இல் டென்மார்க்கில் நண்பன் தேவனும நானும் இசை பற்றி நிறைய பேசியது நினைவுக்கு வருகிறது.இதற்க்கு ஆதாரமாக விளங்கியது இலங்கை வானொலியில் அன்று ஒளிபரப்பான ” திரை தந்த இசை ” நிகழ்ச்சி. அந்த நிகழ்ச்சியில் தமிழ் திரை பாடல்களில் ராகங்களில் அமைந்த பாடல்களின் ராகங்களை சொல்வார்கள்.அதை தொடக்கி வைத்தவர் திரு.எஸ்.கே .பரராஜசிங்கம் என்ற இசைநிகழ்ச்சி தயாரிப்பாளர்.இவரது இந்த நிகழ்ச்சி தந்த உந்துதல் தமிழ் நாட்டு தொலை காட்சிகளில் உருவான ” சப்தஸ்வரங்கள் ” , “ராக மாலிகா ” போன்ற இசை நிகழ்ச்சிகளுக்கு ஆதாரமாக அமைந்தது எனலாம் . இசைத் தேடல் மிக்க திரு .எஸ்.கே .பரராஜசிங்கம் தொடக்கி வைத்த அந்த நிகழ்ச்சி இசை ரசனையை வளர்ப்பதாக இருந்தது.இந்த இசைரசனையை சரியான திசையில் அவருக்குப் பின் வந்தவர்கள் அதனை வளர்க்கத் தவறியது வருந்தத்தக்கதாகும். இசைஞானமில்லாத தயாரிப்பாளர்கள் / அறிவிப்பாளர்கள் இசை ரசனை என்பதை பாட்டுக்குப் பாட்டாக சுருக்கியதும் , பின்னர் அது குறில் , நெடிலில் சிக்கி தவிப்பதும் வருந்ததக்கது.
இசைஞானி இளையாராஜா தான் இசையமைப்பின் சூட்சுமங்களை இந்த “இசை வித்தைகளை ” நமக்கு வெளிப்படையாகச் செய்துகாட்டியவர்.இது இசையுலகில் யாரும் செய்யாத காரியமாகும்.இளையராஜா சொல்வார் ” என் கனவும் நினைவும் இசையே ” என்று..அது தற்ச்செயலானதும் அல்ல. அவர் குருவிக்கு ஏற்ற சீடன் என்பதை இங்கே நிரூப்பித்து விடுகிறார். இளையராஜாவின் அவரது மானசீகக்குரு !! அவரது அபிமான கம்போசர் சிம்பொனி இசை மேதை JOHANN SEBASTIAN BACH [1685 - 1750 ]என்பவராவார்.
இவர் [ பாக் ] தனக்கு முன்பிருந்த இசையமைப்பாளர்களின் இசைகுறிப்புக்களை மிகவும் ஆர்வத்தோடு பல சிரமங்களுக்கு மத்தியிலும் , கஷ்டப்பட்டு பிரதி எடுத்ததுமட்டுமல்ல அவற்றை அதீத ஈடுபாட்டுடன் ஆராய்ச்சி செய்து , அவற்றை மைய்யமாக வைத்துக் கொண்டு தனது படைப்புக்களை பரிசோதனை செய்துமிருக்கிறார்.இசையில் நேர்த்தியை இதன் மூலமே அவர் வந்தடைந்தார் என்பார்கள். இதன் மூலம் அவருக்கு முன்னிருந்த இசையமைப்பாளர்களின் படைப்புக்கள் எல்லாம் அத்துப்படியாக இருந்தன.
சிம்போனி இசையை அடிப்படியாக வைத்துக் கொண்டு Orchestration இல் சில மாற்றங்களை செய்து நவீன இசையாக அமைத்து புகழ் பெற்ற இசைக்கலைஞர் பால்மாரியா [ PAUL MAURIAT , 1925 -2006 ] இளையராஜாவிடம் சொன்னது .
” You see ! இப்போது அவர் [ பாக் ] கம்போஸ் செய்த TOCCATA IN “D” MINOR ஐ நான் Orchestration பண்ணிக் கொண்டிருக்கிறேன் . I CAN’T CHANGE EVEN A SINGLE NOTE ! ” பாகின் இசையில் ஒரு சுரத்தையும் மாற்ற முடியாது , அவ்வளவு நேர்த்தியானவை அவருடைய இசைக்குறிப்புக்கள் “
இதை இளையராஜா தனது நூலில் பதிவு செய்திருக்கிறார். இது போன்ற சிறப்புக்களாலேயே அவரது [ JOHANN SEBASTIAN BACH ] இசை காலம் பல கடந்து இன்றும் இசை அறிஞர்கள் எல்லாம் ஏகமனதாக பாராட்டும் இசை மேதையாக,தலைசிறந்த இசையமைப்பாளராக விளங்குகிறார். தமிழ் சூழலில் இசைஞானி இளையராஜா செய்ததும் பாக் போலவே.மேலே குறிப்பிட்ட பல இந்திய இசையமைப்பாளர்களின் படைப்புக்களை நன்கு அறிந்து வைத்திருந்தும், பரிசோதனைகளாக பாடல்களை நன்கு பரீட்சித்தும் பார்த்திருந்ததாலேயே அவரால் பாடல்களை அனாயாசமாக , வித விதமான முறைகளில் [ Patterns] தரக்கூடியதாக இருந்தது.
தனது 28 ஆவது வயதில் சுப்பராமன் இறந்து விடுகிறார்.அவர் சினிமாவில் எட்டு ஆண்டுகளே இருந்தார்.நல்ல இசை ரசிகர்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.ஆனாலும் அவர் காட்டிய வழியில் அவரிடம் உதவியாளர்களாகிய விஸ்வநாதன் – ராமமூர்த்தி , டி.ஆர்.பாப்பா , டி.ஜி.லிங்கப்பா மற்றும் கண்டசாலா , ஏ.எம்.ராஜா , எஸ்.தட்சிணாமூர்த்தி , ஜி.கே. வெங்கடேஷ் , கோவர்த்தனம், போன்றோர் 1960 களில் ஆச்சர்யமிக்க இனிமையான பாடல்களை தந்தார்கள். இந்த காலப்பகுதியில் எழுந்த இசையிலே பலவகையான இசைகளின் தாக்கம் [INSPIRATION] ஏராளம் நடைபெற்றுள்ளது.
தொடரும்….
முன்னைய பதிவுகள்:











