தமிழரசுக் கட்சி தோல்விகண்ட அதே வழிமுறையில் எழுக தமிழ்

tulf-415x260தமிழ் மக்கள் பேரவை என்ற புதிதாகத் தோன்றியிருக்கும் அமைப்பின் ஊடக எழுக தமிழ் என்ற ஆர்ப்பாட்டம் எதிர்வரும் 24ம் திகதியன்று நடைபெறுகிறது. சுரேஷ் பிரேமச்சந்திரன், சித்தார்த்தன் போன்ற கடந்த காலங்களில் இலங்கைப் பேரினவாதிகளின் அடி கூலிகளாகச் செயற்பட்ட தனி நபர்களின் தலைமையில் நடை பெறும் இந்த நிகழ்வின் ஊடாக இலங்கை அரசிற்கு அழுத்தம் கொடுத்து மாற்றங்களை ஏற்படுத்தப் போவதாக இதன் ஏற்பாட்டாளர்கள் கூறி வருகின்றனர். மக்கள் மீதான ஒடுக்கு முறைகள் எந்த வடிவத்தில் ஏற்பட்டாலும் அதற்கு எதிரான எதிர்ப்புப் போராட்டங்கள் வரவேற்கத்தக்கதே. ஆனால் எழுக தமிழ் போன்ற நிகழ்வுகள் இலங்கையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தப்  போவதில்லை. இலங்கையின் ஒற்றையாட்சி அமைப்பில் சில சீர்த்திருத்தங்களை மேற்கொண்டு குறைந்த பட்ச உரிமைகளைப்  பெற்றுவிடலாம் என்கிறது ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருக்கும் இக் குழு.
மக்கள் போராட்டங்கள் தோற்றதில்லை அவை அரசுகளுக்கு அழுத்தங்களை வழங்கி ஆளும் வர்க்கத்தை மாற்றிவிடும் என்றும், ஆர்ப்பாட்டத்தில் மக்கள் அணியணியாகக் கலந்துகொண்டால் தமிழ் மக்கள் மத்தியில் பாரிய மாற்றங்கள் ஏற்படும் என்றும் இவர்கள் கூறுகின்றனர்.
மக்கள் அலையலையாக இந்த ஏற்பாட்டாளர்களின் பேரணியில் கலந்துகொண்டார்கள் என்று ஒரு பேச்சுக்கு வைத்துக்கொண்டால், மக்களின் தொகையைக் கருத்தில் கொண்டு இலங்கை அரசாங்கம் அடிபணிந்து உரிமையைக் கொடுத்து ஆசீர்வதிக்குமா என்ன?
இலங்கையின் இன்றைய அரசு எதிர்ப்புக்களற்ற, எதிர்க்கட்சி கூட இல்லாத, தனிக்காட்டு ராஜாவாகத் திகழ்கிறது, அடுத்து வருகின்ற தேர்தலில் இன்றைய ஆளும் கட்சி உறுப்பினர்கள் மெலிதாக இழையோடும் பேரினவாதக் கருத்துக்களை முன்வைத்தே வெற்றிபெற்றுவிடுவார்கள். இந்த நிலையில்  வாக்கு வங்கி அரசியலை முன்வைத்து பாராளுமன்றத்தின் அடுத்த தேர்தலுக்காகக் காத்திருக்கும் கட்சிகளே எழுக தமிழ் நிகழ்வை நடத்துகின்றன. இக் கட்சிகளைப் பொறுத்தவரை பராளுமன்றத்தை உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்கான ஆயுதமாகப் பயன்படுத்துவோம் என எஸ்.ஜே.வி.செல்வநாயகம் மற்றும் அமிர்தலிங்கம் காலங்களில் முன்வைத்த அதே முழக்கங்களை இத்தனை அழிவுகளின் பின்னரும் முன்வைக்கின்றனர்.
ஆக, எழுக தமிழ் அடுத்த தேர்தலுக்கு அவர்களைத் தயார்படுத்தி ஒற்றையாட்சிப் பாராளுமன்றத்தில் உள் நுளைப்பதற்கான ஆதரவுத் தளத்தை உருவாக்கிக்கொள்ளும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் மக்கள் சார்ந்த அரசியலின் ஆரம்பம் இன்னும் வெகு தொலைவிலேயே காணப்படுகிறது என்பதற்கு இந்த நிகழ்வினதும் அதன் பின்னணியிலும் நடைபெறும் நிகழ்வுகள் சாட்சி!
மக்கள் போராட்டம் என்றால் என்ன அதன் புரட்சிகர வடிவங்கள் எவ்வாறு காணப்பட்டன என்ற குறைந்தபட்ச அடிப்படைகளுமற்று வெறும் உணர்ச்சிவசப்படுத்தும் பேரணியாக இது ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. மக்கள் போராட்டம் என்பது முன் பின் தொடர்ச்சியற்ற தற்காலிக நிகழ்வல்ல. அதற்கான அரசியல் தெளிவாக முன்வைக்கப்பட வேண்டும். இவை அனைத்தையும் நிராகரிக்கும் எழுக தமிழ் ஏற்பாட்டாளர்களின் இறுதி இலட்சியம் பாராளுமன்றம் செல்வதே.
மக்கள் போராட்டத்தின் ஒவ்வொரு கட்டமும் அடுத்த படி நிலைக்கு மக்களை அணிதிரட்டுவதற்கான முதலாவது அடிப்படையாகப் பயன்படுத்தப்பட வேண்டும். அவர்கள் மத்தியிலான முரண்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு பொதுவான பிரச்சனையை நோக்கிய ஐக்கிய முன்னணியின் தற்காப்பு யுத்தமாக இந்த மக்கள் இயக்கங்கள் வளர்ச்சியடையும்.
இன்று உதிரிகளான மக்களை ஓரிடத்தில் கூடுமாறு விடுக்கப்படும் அழைப்பு அவர்களை மீண்டும் உதிரிகளாகப் பேணுவதற்கும், பாராளுமன்ற அரசியல் வாதிகளை பலமானவர்களும் ஆக்கும் முயற்சிக்கு வழிதிறந்துவிடும்.
தவிர, மக்களின் மாபெரும் எழுச்சி பாரிய மாற்றங்களை ஏற்படுத்தி தமிழர்களுக்கு உரிமைகளைப் பெற்றுத்தரும் எனவும் மக்கள் போராட்டங்கள் தோற்றதாக வரலாறு இல்லை என்றும் ஏற்பாட்டாளர்களில் ஒருவர் கூறுகிறார்.
பேரினவாத ஒடுக்குமுறை இன்றளவிற்குத் தீவிரமாக இல்லாத ஒரு சூழலில் தமிழரசுக்  கட்சி உணர்ச்சி பூர்வமாக நடத்திய உப்புச் சத்தியாக்கிரகப் போராட்டத்திலிருந்து 80 களின் ஆரம்பம் வரை நடத்தப்பட்ட இவ்வாறான உணர்ச்சிப் போராட்டங்களை  நாம் கண்டிருக்கிறோம்.
இவை அனைத்தும் தோற்றுப் போன சூழலே தற்காப்பிற்காக மக்கள் ஆயுதமேந்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்படக் காரணமாயிற்று. எண்பதுகளின் முன்னர் வாக்குப் பொறுக்குவதற்காக தமிழரசுக் கட்சியும் தமிழர் விடுதலைக் கூட்டணியும் நடத்திய போராட்டங்கள் தெளிவான அரசியலற்ற உணர்ச்சிவசப்பட ஆயுதக் குழுக்களை ஆரம்பிக்கக் காரணமாயின.
எந்தக் குறிப்பான மாற்றமும் இப் பேரணியால் நடைபெறப் போவதில்லை எனத் தெரிந்தும் மக்களுக்கு நம்பிக்கைகளை வழங்கி பேரணியை நோக்கி அழைக்கிறார்கள். இறுதியில் பலனற்றுப் போன தமது போராட்டத்தால் விரக்தியடையும் மக்கள் மீண்டும் போராட்டத்தில் நம்பிக்கை இழந்துவிடுவார்கள். இது ஆபத்தான பின் விளைவுகளைத் தோற்றுவிக்கும்.
மக்களின் கைகளில் வழங்கப்படும் முதலாவது பலமான எதிர்ப்பு ஆயுதம் அவர்கள் உதிரிகளாக இல்லாமல், உறுதியான வெகுஜன அமைப்புக்களாக அணிதிரள்வதே. ஏழு வருடங்கள் முள்ளிவாய்க்கால் அழிவின் பின்னர் கடந்து சென்றுவிட்டன இன்னும் மக்களை அணிதிரட்டுவதற்கான அடிப்படை அரசியல் கூட முன்வைக்கப்படவில்லை.
மக்களின் எரியும் பிரச்சனைகளை முன்வைத்து அவர்கள் அணிதிரட்டப்படுவதற்குப் பதிலாக அப் பிரச்சனைகளையே இக் கட்சிகள் கண்டுகொள்வதில்லை. சுன்னாகத்தில் நடத்தப்பட்ட அழிப்பாகட்டும், முன்னை நாள் விடுதலைப் புலிகளின் போராளிகள் மீது நடத்தப்படும் தாக்குதலாகட்டும், சம்பூர்ப் பிரச்சனையாகட்டும், நாளாந்த உழைப்புத் தொடர்பான பிரச்சனையாகட்டும் இவர்கள் கண்டுகொள்வதில்லை.
வட-கிழக்கில் குடி நீரிலிருந்து, குளிர்பானங்கள், உணவு வகைகள், கல்வி, கலை கலாச்சாரம் போன்ற அனைத்தையும் பல்தேசிய வர்த்தக நிறுவனங்கள் ஆக்கிரமித்து மக்களை வறுமையின் பிடிக்குள் இழுத்து வருகின்றன, உள்ளூர் உற்பத்தி அன்னிய நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படுகின்றன. இவை அனைத்தினதும் தாக்கததால் மக்கள் துன்பத்தில் உழலும் போது மூச்சுவிடக் கூட திரணியற்றவர்கள் இன்று எழுக தமிழ் என்ற நிகழ்வின் ஊடாக மாற்றத்தை ஏற்படுத்தப் போவதாக மக்களுக்குப் போலி நம்பிக்கையை வழங்கத் தலைப்படுகின்றனர்.
உதிரிகளாக மக்களை ஓரிடத்தில் கூடுமாறு அழைக்கும் போராட்டம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் இயக்கப்படும் இலங்கை அரசை அசைத்துக்கூடப் பார்க்காது. இன்று வரை ஈழப் போராட்ட அழிப்பின் பின்னணியில் செயற்பட்ட அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும், அதன் அழிப்பிற்கான நிகழ்ச்சி நிரலையும் குறித்துப் பேச அஞ்சும் இக் கட்சிகளை மக்கள் முழுதாக நிராகரித்து புதிய அரசியலுக்காக மக்கள் இணைந்துகொள்ளும் காலம் தொலைவில் இல்லை.