56 ஈழ அகதிகள் தமிழகத்தில் கைது.

பேரினவாத இலங்கை அரசு புலிகளை அழிப்பதாகச் சொல்லி வன்னி மக்கள் மீது தொடுத்த போரின் பின்னர் தமிழ் மக்கள் குறிப்பாக வன்னி மக்கள் வடக்குப்பகுதியில் வாழ முடியாமல் ஆயிரக்கணக்கில் இலங்கையை விட்டு வெளியேறி அரசியல் அடைக்கலம் தரும் நாடுகளை நோக்கி பயணப்படுகின்றனர். அகதிகளான இந்த மக்களைப் பயன்படுத்தி பணம் வசூலிக்கும் ஏஜெண்டுகள் இந்த மக்களை குடியேற்றம் தரும் நாடுகளை நோக்கி பாதுகாப்பற்ற முறையில் கடத்தி வருகிறார்கள். இப்படி கடத்தப்படும் மக்கள் செல்லும் வழிகளிலேயே மரணமடைகிறார்கள். செல்லும் வழியிலேயே கைது செய்யப்படுகிறார்கள். மலேஷியா, ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா என எல்லா நாடுகளிலும் இவர்கள் கைது செய்யப்படுவது போல இந்தியாவிலும் கைது செய்யப்படுகிறார்கள். சமீபத்தில் கேரளத்தில் 30- க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்ட பின்னர் இப்போது தமிழகத்தின் குற்றாலத்தில் சுமார் 56 அகதிகள் கேரளா மூலமாக வெளிநாடு செல்ல முயன்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் தேவர் லாட்ஜ் மற்றும் சிவானந்தா லாட்ஜில் தங்கியிருந்த 50க்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்களை காவல்துறையினர் பிடித்து விசாரித்தனர். 54 பேரும் சென்னையில் இருந்து பேருந்தில் குற்றாலத்திற்கு வந்ததாகவும், இங்கிருந்து கேரளா வழியாக வெளிநாடுகளுக்கு செல்ல திட்டமிட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.இவர்கள் முறையான அனுமதியோடு வந்தார்களா, அல்லது தமிழக முகாம்களில் இருந்து வந்தார்களா, என்பது தெரியவில்லை. சம்பவ இடத்திற்கு நெல்லை மாவட்ட எஸ்பி ஆஸ்ரா கர்க் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்.இவர்களை சென்னையிலிருந்து அழைத்து வந்த பேருந்து மீண்டும் சென்னை திரும்பி விட்டதால் ஆள் கடத்தல் சந்தேகம் போலீஸாருக்கு வலுத்துள்ளது. குற்றாலம் போலீஸாருடன், கியூ பிரிவு போலீஸாரும் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.