3000 படையினரும் பொலிஸாரும் பாதுகாப்பு பணியில் பிரிகேடியர் உதய நாணயக்கார தகவல்

கதிர்காமம், கல்கே பிரதேசத்தில் பயணிகள் பஸ் மீது அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை அடுத்து அப்பிரதேசத்தின் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 3000 பொலிஸ் மற்றும் இரõணுவத்தைச் சேர்ந்தவர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கதிர்காமம் உற்சவத்தை முன்னிட்டு அங்கு பயணிக்கும் பொதுமக்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல்களை முறியடிக்கும் பொருட்டும் அப்பிரதேசத்தில் தீவிர தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையிலுமே அந்த பகுதிக்கு மேலதிக பாதுகாப்பு பிரிவினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.இது தொடர்பில் இராணுவ பேச்சாளர் மேலும் கூறியதாவது கதிர்காமத்தின் வருடாந்த உற்சவத்தினை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதுடன் அதற்காக 3000 க்கும் அதிகமான படையினரும் பொலிஸாரும் ஈடுபடுத்தப்பட்னர். கதிர்காமம் உற்சவத்தை முன்னிட்டு இலட்சக்கணக்கான மக்கள் அங்கு வருகை தந்தவண்ணம் உள்ளனர். அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவே இந்த பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆயினும் அவர்களினது பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மீறி பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

இதனை அடுத்தே கடந்த இரு தினங்களில் மேலதிக பாதுகாப்புக்காகவும் அப்பிரதேசங்களின் தேடுதல் நடவடிக்கைகளுக்கு ஒத்துøழப்பு வழங்கும் முகமாகவும் மேலும் 3ஆயிரம் பாதுகாப்பு பிரிவினர் அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்கள் கதிர்காமம், புத்தள, கல்கே, மொனராகலை, மற்றும் யால போன்ற பிரிவுகளில் தமது பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன் இப்பிரதேசங்களினூடாகப் பயணிக்கும் பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் பலத்த சோதனைகளுக்கு உள்ளாக்கப்படுவதுடன் பொதுமக்களும் பலத்த சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்