2018 புத்தாண்டுச் செய்தி…

உலகத்தை மீண்டும் ஒருமுறை இரத்தத்தால் குளிப்பாட்டிய கொடிய ஆண்டாக 2017 கடந்து போய்விட்டது. எங்கு பார்த்தாலும் யுத்த வெறி, கொலை, குண்டுத் தாக்குதல்கள் என்று அப்பாவி மக்கள் பலியெடுக்கப்பட்டனர். ஜனநாயகத்தின் பெயராலும், மனிதாபிமானத்தின் பெயராலும், மதங்களின் பெயராலும், அடையாளங்களின் பெயரிலும் வர்த்தக வெறி போர் முழக்கமிட்டது. இந்த உலகம் சாமானிய மனிதர்கள் வாழ்வதற்குப் பாதுகாப்பற்றது என அதிகாரவர்க்கம் கற்றுத் தந்தது. வாழ்வதற்காக ஒவ்வோர் முனையிலும் மனிதர்கள் போராடுவதத் தவிர வேறு மாற்றுக் கிடையாது என அவர்கள் அறிவித்திருக்கிறார்கள்.

இயற்கையைக் கூட சுரண்டிப் பணமாக்கிக்கொண்ட வர்த்தக வெறி மக்களை வெள்ளத்தாலும், புயலாலும், நஞ்சு கலந்து வளங்களாலும் கொன்று போட்டது.

இவை எல்லாவற்றையும் எதிர்கொள்ள மக்கள் கூட்டங்கள் கிளர்ந்தெழும் போதெல்லாம் அவர்களைத் தவறாக வழி நடத்த போலித் தலைமகள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டன.

ஜோர்ஜியன் கலண்டர் புத்தாண்டை அறிவிப்பது உலகமயமானது போன்றே, யுத்த வெறி உலகமயமாகிவிட்டது.

இவை அனைத்தையும் மீறி, 2017 மக்களுக்குப் பாடம் கற்பித்திருக்கிறது. அனைத்தையும் கேள்விகேட்கும் புதிய முன்னேறிய மக்கள் பிரிவு ஒன்று தோற்றம் பெற்றுள்ளது. மகிழ்ச்சி என்பது பண வெறி மட்டுமல்ல என்று உணர்ந்துகொண்ட இளைஞர் குழாம் ஒன்று தோற்றம் பெற்றுள்ளது.

2018 ஆம் ஆண்டு மக்களின் வெற்றிக்கான ஆரம்பமாக அமைவதற்கு இவைகளே நம்பிக்கைக் கீற்றுக்கள். மக்கள் சார்ந்த புதிய சிந்தனையை தோற்றுவிப்பதற்கும் போராடுவதற்கும் இணைப்பேற்படுத்திக்கொள்ள இனியொரு…வின் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Leave a Reply