13 வது திருத்தச்சட்டத்திற்கு அப்பால் சென்று தீர்வு காணப்பட வேண்டும் : இந்தியா வலியுறுத்தியுள்ளது.

இலங்கையின் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான அதிகமான அதிகாரப் பரவலாக்கம் மேற்கொள்ளப்படவேண்டும் என இந்தியா, இலங்கையிடம் தெரிவித்துள்ளதாக இந்திய உயரதிகாரி ஐ ஏ என் எஸ் செய்திச்சேவையிடம் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் இலங்கை 13 வது திருத்தச் சட்டத்தை உரியமுறையில் அமுலாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியுள்ளது. 13 ஆவது திருத்தச் சட்டம் முதலாவது படியாக அமையலாம். ஆனால் அதனை விட மேலதிகமாக அதிகாரப் பகிர்வுகளை வழங்கி இனப்பிரச்சினையைத் தீர்க்கவேண்டும் என இந்தியா, இலங்கையிடம் கேட்டுள்ளதாக அந்த உயரதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

13 வது திருத்தச்சட்டம் அந்தக் காலகட்டத்தில் தமிழர்களின் வாழக்கையை இலகுபடுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒன்றாகும். எனினும் இனப் பிரச்சினை தற்போது அதிக சிக்கல் நிலையைக் கொண்டுள்ளது. எனவே, 13வது திருத்தச்சட்டத்திற்கு அப்பால் அதிகாரங்கள் பகிரப்படவேண்டும் என்பதே இந்தியாவின் தற்போதைய நிலைப்பாடாகும் என ஐ ஏ என் எஸ் தெரிவித்துள்ளது.

தமிழீழ விடுதலைப்புலிகளைப் பலவீனப்படுத்துவதாக இலங்கை அதிகாரிகள் கூறுகின்றபோதும், அது இலங்கையின் நிலைமையை மேலும் சிக்கலாக்குவதை இந்திய அதிகாரிகள் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் ஐ ஏ என் எஸ் செய்திச்சேவை குறிப்பிட்டுள்ளது.