13 திருத்தச் சட்டம் – இந்திய இலங்கை நாடகம்? : பீரிஸ் ஒப்புதல்

இந்தியாவில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் ஜி.எல்.பீரிஸ் ’13வது திருத்தத்தினை அமுல்படுத்துவது தொடர்பாக சரியான காலவரையறையை ஏற்படுத்துவது தொடர்பாக கதைப்பது பொருத்தமற்றது” எனத் தெரிவித்திருக்கிறார். மேலும் ‘அவ்வாறு செய்வது பாரிய தவறாகும். ஏனென்றால் காலவரையறை பற்றிக் பேசி பின்பு நடவடிக்கைகளை முழுமையாக மேற்கொள்ள முடியாது விட்டால் அது பாரிய தவறாகும். இது அனுமானம், ஊகத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும்” எனவும் தெரிவித்திருக்கிறார்.
தமிழ்ப் பேசும் மக்களினதும் சிறுபான்மையினரதும் உரிமை குறித்துப் பேசும் 13 வது திருத்தச் சட்டத்தை 20 நீண்ட வருடங்களாக அமுல் படுத்த மறுக்கும் இலங்கைப் பேரினவாத அரசு, தனக்கு அதிகாரத்தைக் குவித்துக் கொள்வதற்காகவும் சிறுபான்மை இனங்களை அழிப்பதற்காகவும் 18 வது திருத்தச் சட்டத்தை எந்தக் கால அவகாசமுமின்றி நடைமுறைப்படுத்தியுள்ளது.
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்எம். கிருஷ்ணா, ஜி.எல்.பீரிஸிடம் அதிகாரப் பகிர்வு விவகாரத்தை எழுப்பியிருந்ததாக அண்மையில் தெரிவித்திருந்தார். எஸ்எம். கிருஷ்ணா ஊடகவியலார்களிடம் கூறுகையில், ‘இப்போது பாராளுமன்றத் தேர்தல்கள் முடிவடைந்து விட்டன. தமிழ் பேசும் இலங்கயரை வெற்றி கொள்வதற்கு உறுதியுடன் செயற்படுவதற்கு இலங்கை அரசாங்கத்துக்கு இதுவே தருணமாகும். தமிழ் பேசும் இலங்கையரின் கவலைகள், ஆடசேபனைகள் தொடர்பாக கவனத்திற்கு எடுப்பதற்கு இதுவே வேளையாகும்” என வலியுறுத்தியிருப்பதாக கூறியதுடன் ‘இந்தக் கருத்தை அவர்கள் ஏற்றுக்கொள்கின்றனர். இந்த இலக்கை நோக்கியதாக தமது முயற்சிகள் வழிநடத்தப்படுவதாக அவர்கள் கூறுகின்றனர்” எனவும் தெரிவித்திருந்தும் இருந்தார்.

இதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே ஜி.எல்.பீரிஸ் “13வது திருத்தத்தினை அமுல்படுத்துவது தொடர்பாக சரியான காலவரையறையை ஏற்படுத்துவது தொடர்பாக கதைப்பது பொருத்தமற்றது” எனக்கூறியிருக்கிறார்.
இந்தக் கூற்றுக் கூட இலங்கை இந்திய அரசுகள் இணைந்து நடத்திய நாடகம் என்பது பீரிசின் கூற்றிலிருந்து தெரியவந்துள்ளது. ஜீ,எல்.பீரிஸ் ஈழத் தமிழ் அகதிகள் போலிப் பொருளாதார அகதிகள் என முன்னமே தெரிவித்திருந்தது அறியப்பட்டதே.
அதே வேளை தமது சந்திப்புத் தொடர்பாக விளக்கமளித்த ஜ.எல்.பீரிஸ், இது ஒரு நல்லெண்ண சந்திப்பாகும், எந்த ஒரு விடயமும் ஆழமாக ஆராயப்படவோ கலந்துரையாடப்படவோ இல்லை எனக்கூறியிருககிறார்.
அதிகாரப் பகிர்வு குறித்து ஊடகவியலாளர் முன்வைத்த கேள்விக்குப் பதிலளித்த ஜி.எல்.பீரிஸ், 13 வது திருத்தத்தில் ஒன்றைத் தவிர ஏனைய அனைத்தையும் அமுல்படுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.
இதே வேளை தமிழ்க் கட்சிகளுடன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தொடர்புகளைப் பேணி வருவதாகவும் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்திருக்கிறார்.