13+ என்றொரு பூச்சாண்டி!:வ.திருநாவுக்கரசு.

         

13+ அமுல்படுத்தப்படுமென ஜனாதிபதி கூறியுள்ளார். அவர் சொன்னதைச் செய்பவர் என யாழ்.நகரில் நேற்று முன்தினம் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெரும கூறியுள்ளார்.தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வாகவே அன்று 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் கொண்டுவரப்பட்டதென்பது அர்த்தமற்றதென ஏலவே நான் சில சந்தர்ப்பங்களில் சுட்டிக்காட்டியுள்ளேன்.அது வடக்கு, கிழக்கு தமிழ் பேசும் மக்கள் பிராந்தியத்திற்கு மட்டுமல்லாமல் இலங்கை முழுவதற்குமான சமச்சீரான திட்டமே ஒழிய புரையோடிப்போயுள்ள தமிழ்த் தேசிய இனப்பிரச்சினைக்கான கனதி காத்திரமான அரசியல் தீர்வுத்திட்டமாயிருக்க முடியாது என்பதையும் எடுத்துக் கூறியிருக்கிறேன். மறுபுறத்தில் பேரினவாத சக்திகள் 13 ஆவது திருத்தம் நடைமுறைப்படுத்தக்கூடாது.அது நாட்டைத் துண்டாடுவதற்கு வழிசமைத்துவிடுமென கடுமையாக எதிர்த்து வருகின்றன.இத்தகைய சக்திகள் அரசாங்கத்துக்குள்ளேயும் இருக்கவே செய்கின்றன.

இப்போது 13+ என்றொரு பூச்சாண்டி காட்டப்படுகின்றது. ஆனால், நிச்சயமாக இது நடைமுறைப்படுத்தப்படும் என சொன்னதைச் செய்யும் ஜனாதிபதியே கூறிவைத்துள்ள படியால் எதிர்க்கும் சக்திகள் ஒரு பொருட்டாக எண்ணப்படமாட்டா என்ற அர்த்தப்படவே அமைச்சர் அழகப்பெரும கருத்துத் தெரிவித்துள்ளார். ஒற்றையாட்சியில் மாற்றமில்லை.சமஷ்டி முறைமை என்ற பேச்சுக்கு இடமில்லை. எந்தவொரு மக்கட் பிரிவினருக்கும் இம் (தமிழ் பேசும் மக்களுக்கு என்று வாசிக்கவும்) விசேடமான அல்லது சமச்சீரற்ற அதிகாரப் பகிர்வுக்கு இடமில்லை என்பது ஜனாதிபதியின் நிலைப்பாடாகும். நிற்க 13+ எனப்படுவதை சற்று நோக்குவோமாயின் அதன் உள்ளடக்கம் தான் என்ன? அதுவும் மூடுமந்திரமாகவே உள்ளது.சரி சிங்கள பேரினவாத சக்திகளைப் பகைத்துவிடக்கூடாது என்பதற்காக ஒற்றையாட்சி முறைமையை மாற்றமுடியாது என்றால் இந்தோ னேசிய ஆச்சே மாகாணத்தில் 2004 கடல்கோள் பேரழிவைத் தொடர்ந்து எட்டப்பட்ட அரசியல் தீர்வையாயினும் முன்னுதாரணமாகக் கொண்டு நடவடிக்கை மேற்கொள்வதற்கு ராஜபக்ஷ அரசாங்கம் ஆர்வம் கொள்ளக்கூடிய அரசியல் உறுதியினை தன்னகத்தே கொண்டுள்ளதா? அதாவது,ஆச்சேயில் எட்டப்பட்ட தீர்வானது பெயரளவில் ஒற்றையாட்சி முறைமையானதாயினும் நடைமுறையில் ஒரு சமஷ்டி முறைமைக்கு ஒத்ததெனக் கொள்ளும் அளவுக்கான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.அண்மையில் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் சகோதரருமான பசில் ராஜபக்ஷ ஆச்சே மாகாணத்திற்கு விஜயம் செய்து அங்கேயுள்ள ஆளுநருடன் கலந்துரையாடல்கள் நடத்தியுள்ளார்.அதனைத் தொடர்ந்து வர்த்தக மற்றும் முதலீடு நடவடிக்கைகள் தொடர்பாகப் பேசப்பட்டதாக சில செய்திகள் வெளியாகியதைத்தவிர அரசியல் அம்சம் தொடர்பாக எதுவித தகவலும் வெளியாகியதாக அறிய முடியவில்லை.

ஐ.தே.க.வும் ஒற்றையாட்சிப்பாதையில்

தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பாக ஐக்கிய தேசியக்கட்சி (ஐ.தே.க.) தற்போது ஒற்றையாட்சி முறைமையினைக் கடைப்பிடிக்கப்போவதாக தனது நிலைப்பாட்டினைச் சென்ற வாரம் பகிரங்கப்படுத்தியுள்ளது. ஐ.தே.க. தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாணசபை எதிர்க்கட்சித் தலைவருமாகிய எஸ்.பீ.திஸாநாயக்க வெளிப்படுத்திய அறிக்கையில் நாட்டின் முழுமையான சுதந்திரம் ,இறைமை மற்றும் ஆட்புல ஒருமைப்பாட்டினைப் பேணிப்பாதுகாப்பதே தமது குறிக்கோள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐ.தே.க. வின் அரசியல் விவகாரக்குழு அங்கத்தவர் ஒருவர் (பெயர் குறிப்பிடப்படவில்லை) இது தொடர்பாக விளக்குகையில்; ஐ.தே.க. முன்னர் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வாக ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டி முறைமையினை முன்வைத்ததாயின் நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலை காரணமாகவே கொள்கை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறியக்கிடக்கிறது.”அரசியல் ரீதியாக நாம் ஒற்றையாட்சி முறைமையினை உள்வாங்கி அதன் கீழ் முடிந்தளவு அதிகாரப்பரவலாக்கம் செய்ய ஆயத்தமாயுள்ளோம்’ என அப்பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார். மற்றும் அரசியலமைப்பு சட்ட நிபுணரும் ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினருமாகிய கே.என்.சொக்ஸி இதனை உறுதிப்படுத்தியதோடு, தமிழர்,முஸ்லிம்கள் அடங்கலான சிறுபான்மை சமூகங்களுக்கு சம உரிமைகள் வழங்கப்படுமெனவும் கூறியுள்ளார். 1815 இல் பிரித்தானிய ஏகாதிபத்திய ஆட்சியாளர் இந்த நாட்டை ஒன்றிணைத்த காலம் முதல் நாடு தொடர்ச்சியாக ஒரு அலகாக ஆளப்பட்டு வந்ததால் அது தொடர்ந்து நிலைபெற வேண்டுமென சொக்ஸி மேலும் கூறியுள்ளார்.

நாட்டைக் குட்டிச்சுவராக்கிய சந்தர்ப்பவாத அரசியல்

ஐ.தே.க. இதற்கு முன்னதாகவே சமஷ்டிக் கொள்கையைக் கைவிட்டுள்ளது. ஆயினும், ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல்கள் நெருங்கிக் கொண்டிக்கும் நிலையில் அதனை அக்கட்சி மீண்டும் உத்தியோகபூர்வமாக உறுதிப்படத் தெரிவித்துள்ளதையே காண்கிறோம். ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் (ஐ.ம.சு.மு.) ஒற்றையாட்சி கொள்கைக்குச் சமாந்தரமாக காய்களை நகர்த்தி வாக்கு வங்கியைப் போஷித்து விடலாமென்ற நப்பாசையிலேயே ஐ.தே.க. இன்று மீண்டும் ஒருமுறை குத்துக்கரணம் அடித்துள்ளது எனலாம். ஐ.தே.க.மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (ஸ்ரீ.ல.சு. க.) இரண்டும் அன்று முதல் நடத்தி வந்த இனவாத சந்தர்ப்பவாத மற்றும் கழுத்தறுப்பு அரசியல் காரணமாகவே இந்த நாடு குட்டிச்சுவராக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சர்வதேச நாணய நிதியம் (IMF), உலக வங்கி (WB) மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) போன்ற நிதி நிறுவனங்களிடம் கையேந்தி நிற்கிறது. தமிழர் ஆயுதப் போராட்டத்திற்கும் இவ்விரு கட்சிகளுமே கூட்டாகவும் தனியாகவும் வித்திட்டன என்பது வரலாறு.

ஸ்ரீ.ல.சு.க. தலைமையிலான இன்றைய மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாகத் தோற்கடித்து இரண்டு மாதங்கள் கடந்துவிட்டன. கொண்டாட்டங்களும் பாராட்டு விழாக்களும் உள்நாட்டில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் கூட வெகு கோலாகலமாக நடத்தப்பட்டு வருகின்றன. சென்ற வாரம் மகியங்கனையில் இடம்பெற்ற பாராட்டு விழாவின் போது ஜனாதிபதி ராஜபக்ஷ ஆற்றிய உரையில் , 1818 இல் பிரித்தானிய ஆட்சியாளருக்கெதிராக வெலெஸ்ஸ பகுதி மக்கள் நடத்திய போராட்ட வரலாற்றினை நினைவு கூர்ந்ததோடு இன்று அதே வெலெஸ்ஸ கிராம இளைஞர்கள் விடுதலைப் புலிகளைத் தோற்கடித்த யுத்தத்தில் வழங்கிய பங்களிப்பையும் செய்த உயிர்த்தியாகங்களையும் பாராட்டியுள்ளார். பிரித்தானிய ஆட்சியாளருக்கெதிராக பெருந்தோட்டத்துறையில் நடத்தப்பட்ட போராட்டங்களில் உதாரணமாக முல்லோயாவில் தொழிலாளி கோவிந்தன் சுட்டுக்கொல்லப்பட்டமை மற்றும் 1947 இல் கொலன்னாவையில் என்.எம்.பெரேரா தலைமையில் இடம்பெற்ற சுதந்திர ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் அரசாங்க லிகிதர் சேவைச் சங்க உறுப்பினராகிய தொழிலாளி கந்தசாமி துப்பாக்கி வேட்டுக்கு இலக்காகி மரணித்தமை போன்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளும் மறந்துவிடக்கூடியவை அல்ல.

யுத்த வெற்றிப் பங்கு தனக்கு என்கிறது ஐ.தே.க.

நிற்க , விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பாக தாம் ஆற்றிய பங்களிப்பு குறைத்து மதிப்பிடக்கூடியதல்ல என ஐ.தே.க. தரப்பினர் அடிக்கடி பெருமை பேசி வருவதை யாரும் அறிவர். அதற்காக ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரம சிங்கவினாலேயே முதலாவது வேட்டுத் தீர்க்கப்பட்டதென ஐ.தே.க. தேசிய அமைப்பாளர் எஸ்.பி.திஸாநாயக்க சென்றவாரம் தொழிலறிஞர்கள் குழு ஒன்றின் முன்னிலையில் உரையாற்றும் போது கூறியுள்ளார். அதாவது, விக்கிரமசிங்க முன்னர் பிரதம மந்திரியாயிருந்த போது 2002 பெப்ரவரியில் விடுதலைப் புலிகளுடன் செய்து கொண்ட யுத்தநிறுத்த ஒப்பந்தம் (CFA) தான். விடுதலைப் புலிகளின் தோல்வியின் ஆரம்பமென திஸாநாயக்க கூறியிருந்தார். விக்கிரமசிங்க ஏற்படுத்தியிருந்த சர்வதேச ரீதியான பாதுகாப்பு வலைப்பின்னல் மற்றும் புலனாய்வுப் பரிவர்த்தனை காரணமாகவே விடுதலைப்புலிகளின் ஆயுதக்கப்பல்கள் தாக்கி அழிக்கப்பட்டதாகவும், அது மட்டுமல்லாமல் கருணா அம்மான் என்றழைக்கப்பட்ட முன்னாள் கிழக்கு மாகாண தளபதியாகிய விநாயகமூர்த்தி முரளீதரன் விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து வெளியேறியதாகவும் திசாநாயக்க விளக்கியிருந்தார்.

அணிசேரா நாடுகள் மாநாடு பத்தோடு பதினொன்று?

அண்மையில் எகிப்தில் எகிப்திய ஜனாதிபதி ஹொஸ்னி முபாறக் தலைமையில் நடைபெற்ற 15 ஆவது உச்சி மாநாடு விவகாரம் தொடர்பாக நான் அதிகம் அலட்டிக் கொள்ள முற்படவில்லை. அது பத்தோடு பதினொன்று என்ற வகையிலேயே நோக்கப்படவேண்டியுள்ளது. அதற்கு பெரிய வகிபாகம் உண்டு என்றாலும் கூட, அதனால் உலக பொருளாதார நிலைமை மற்றும் காலநிலை மாற்றம் போன்ற அதிமுக்கியமான விடயங்கள் தொடர்பாக நடைமுறையிலான பங்களிப்பு அல்லது ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் மிக அற்பமாகவே உள்ளன. சென்ற மாநாட்டில் ஜனாதிபதி ராஜபக்ஷ அவசரகால நிதியம் ஒன்று Emergency Fund அமைக்கப்படவேண்டுமென முன்வைத்த யோசனை குறிப்பிடத்தக்கதாகும். இலங்கைக்கு IMF கடன் வழங்குவதில் இழுத்தடிப்புச் செய்து வருவதைச் சற்று கடித்து கொண்ட நிலையிலேயே அவர் அந்த யோசனையை முன்வைத்தவராயினும் அது திருப்பு முனையாயிருக்க வேண்டும் ஏனென்றால் ஏகாதிபத்திய சார்பு நிதி நிறுவனங்களின் நிபந்தனைகளுக்கு இலங்கை போன்ற வளர்முக அணிசேரா அமைப்பு நாடுகள் அடிபணிந்து செயற்படும் நிலைமை நீடிக்கப்பட வேண்டும்.

என்.எம். நினைவு தினம்

13.07.09 ஆம் திகதி கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் மறைந்த லங்கா சமசமாஜ கட்சித் தலைவர் என்.எம். பெரேராவின் 104 ஆவது ஜனனதின ஞாபகார்த்தக் கூட்டம் அக்கட்சியின் இந்நாள் தலைவரும், விஞ்ஞான தொழில் நுட்ப அமைச்சருமாகிய பேராசிரியர் திஸ்ஸ விதாராணவின் தலைமையில் நடைபெற்றது.அதன் தொனிப்பொருள் “”யுத்தத்திற்குப் பின் அடுத்தது என்ன’ என்பதாகும். கூட்டத்தின் தமிழர் விடுதலைக் கூட்டணித்தலைவர் வீ.ஆனந்த சங்கரி, கொழும்பு அங்கிலிக்கன கிறிஸ்தவ ஆயர் அதி வண.டியுலீப் சிக்தேரா, பொது நிர்வாக அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இந்திய தூதுவருமாகிய மங்கள முனசிங்க ஆகியோர் உரையாற்றினர். குறிப்பாக தமிழ் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கான அணுகுமுறைகள் தொடர்பாக கடந்த காலங்களில் இழைக்கப்பட்ட தவறுகள் முதல் இன்றைய அகதிகள் ( IDPS) வரையிலான

விடயங்கள் பேசப்பட்டன. கூட்டம் தொடர்பான அறிக்கைகள் எல்லா பத்திரிகைகளிலும் வெளியாகியுள்ளன.

சபையோர் கேள்விகள் எழுப்புவதற்கோ கருத்துகள் முன்வைப்பதற்கோ அதிகம் அவகாசம் அற்ற நிலை இருந்ததாயினும் நான் ஒருவாறு சந்தர்பத்தைப்பயன்படுத்தியிருந்தேன். இந்த நாட்டுக்கு பிரித்தானிய அந்நிய ஆட்சியிலிருந்து முழுமையான சுதந்திரம் வேண்டுமென முதன்முதலாக குரலெழுப்பியது யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் என்பதையும் மறைந்த ஹன்டி பேரின்பநாயகம் தலைமையில் இயங்கிய அவ் அமைப்பினர் சிங்கள, தமிழ் ஒற்றுமையைக் கட்டி வளர்ப்பதற்கு கண்ணும் கருத்துமாக உழைத்து வந்த மறக்கப்பட்ட வரலாற்றினை நினைவு கூர்ந்தேன் . அடுத்ததாக வவுனியா முகாம்களிலுள்ள அகதிகள் அவலங்கள் தொடர்பாகவும் எடுத்துக் கூறியதோடு, அவர்களை அங்கே அடைத்து வைத்திருக்காமல் தாமதமின்றி தமது சொந்த வீடுகளில் மீளக் குடியமர்த்துவதற்கு இங்கே சமூகமாயிருக்கும் இரு அமைச்சர்களும் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கேட்டிருந்தேன்.

அகதி முகாம்களை கொண்டு நடத்துவதற்கு குறைந்தது 3 மாதத்திற்கு 1.9 பில்லியன் அமெரிக்க டொலர் தேவைப்படும் என்பதையும் எடுத்துக் கூறியிருந்தேன்.

சென்ற ஞாயிறு ஆங்கில இதழ்களில் இச்சந்தர்ப்பத்தில் பொருளியல் ஆய்வாளர் கலாநிதி முத்துகிருஷ்ணா சர்வானந்தன் எழுதிய கட்டுரையொன்றில், அரசாங்கம் ஏன் அந்த அகதிகளைத் தடுத்து வைத்திருக்கிறது. அவர்களை விடுவித்தால் அரசாங்கம் கணிசமானளவு பணத்தை மீதப்படுத்த முடியும் என்று எடுத்துக்காட்டியதோடு, கொடையாளர்களிடமிருந்து மனிதாபிமான உதவிகளைப் பெற்றுக் கொள்வதன் மூலம் அரசாங்கம் தனது அந்நியச் செலாவணி இருப்புகளைப் பலப்படுத்துவதற்கு எண்ணுகிறதா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

எனவே, இத்தகைய கருத்துகளைக்கண்டு அரசாங்கம் வெறுப்படையாமல் அல்லது கசப்படையாமல் எல்லோரினதும் தாய் நாட்டை செழிப்படையச் செய்வதற்கான பாதையில் பயணிக்க வேண்டும்.

Thanks:Thinakkural.