100 மில்லியன் பிணைப்பணம் : இலங்கைப் பங்குகளிலிருந்து?

உட்சந்தை மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட ராஜ் ராஜரட்ணம், தமது பிணைத்தொகையை திரட்டுவதற்காக தமது பங்குகளின் ஒருபகுதியை இலங்கையில் விற்பனை செய்யவிருப்பதாக இந்திய செய்தி இதழான ‘த ஹிந்து’ தெரிவித்துள்ளது. ராஜ் ராஜரட்னம் கடந்த ஒக்டோபர் 16aaம் திகதி அமெரிக்க புலனாய்வுத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவரை விடுவிக்க 100 மில்லியன் டொலர்கள் பிணைத்தொகை செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்தத் தொகையைக் குறைக்குமாறு கோரப்பட்டிருந்த போதும், அதனை அமெரிக்க நீதிபதிகள் நிராகரித்தனர். எனினும், அமெரிக்காவின் முக்கிய பிரதேசங்களுக்குள் பயணம் செய்வதற்கு அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில் கொழும்பு பங்குச்சந்தையில் அவரது 105 மில்லியன் டொலர்கள் பெறுமதியான பங்குகளை விற்பனை செய்யவிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. எனினும் 100 மில்லியன் டொலர்களைத் திரட்டுவதற்கு, இலங்கையின் நாணய மாற்று விகிதங்களின் அடிப்படையில், இங்கு பங்கு விற்பனையில் சிக்கல் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ராஜ் ராஜரட்ணம் கைது செய்யப்பட்டதில் இருந்து பல்வேறு நெருக்கடி நிலைமைகளைச் சந்திக்க நேர்ந்திருந்தது. அவர் தமிழீழ விடுதலைப்புலிகளுடன் தொடர்புடையவர் எனக் குற்றம் சுமத்தப்பட்டது. அத்துடன் அவர் மீது 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதற்கிடையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் புதிய தலைவராக அடையாளப்படுத்திய நிலையில் கைதான கே. பத்மநாதன், ராஜ் ராஜரட்ணம் புலிகளின் முன்னிலை நிதி வழங்குனராக இருந்தார் எனத் தெரிவித்திருந்ததாக பாதுகாப்பு அமைச்சு தகவல் வெளியிட்டமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.