தடுத்துவைக்கப்பட்டிருந்த வன்னி மருத்துவ அதிகாரிகள் பிணையில் விடுதலை!

 
 
 
    இறுதிக் கட்டப் போரின் போது விடுதலைப் புலிகளின் பிரதேசத்தில் பணியாற்றி குற்றத்திற்காக பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டிருந்த மருத்துவர்கள் நால்வர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு வழங்கினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு இவர்கள் விசாரணை செய்யப்பட்டு வந்தனர்.

இவர்கள் நால்வரையும் 10 லட்சம் ரூபா சரீர பிணையில் செல்வதற்கு கொழும்பு பிரதான நீதிமன்ற நீதிவான் நிசாந்த கப்புஆராச்சி இன்று அனுமதி வழங்கினார்.

 கிளிநொச்சி வைத்திய அதிகாரி சி.சத்தியமூர்த்தி, முல்லைத்தீவு மாவட்ட வைத்திய அதிகாரி டி.பி. சண்முகராஜா, இளஞ்செழியன் பல்லவன், மற்றும் கிருஸ்ணராஜா வரதராஜா ஆகியோரே பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறையினரின் ஒப்புதலுக்கு அமைய இவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் வவுனியாவில் தான் தங்கியிருக்க வேண்டும் எனவும் பிரதி ஞாயிறு தோறும் இரகசிய காவல்துறையினரிடம் சென்று கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனைகளின் அடிப்படையில் இவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

இவர்கள் கைதுசெய்யப்பட்டு ஒரு மாத காலப்பகுதியில், இறுதிக் கட்டப் போரின் போது வன்னி நிலவரம் குறித்து தாம் ஊடகங்களுக்குக் கொடுத்த தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை என்றும் தமிழீழ விடுதலைப்புலிகளின் அழுத்தம் காரணமாகவே அவ்வாறான தகவல்களை வழங்கியதாகவும் அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்திருந்தனர்.

எனினும், அழுத்தம் காரணமாகவே இவ்வாறு மருத்துவர்கள் கருத்து வெளியிடுவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்திருந்தன.