“சார்க்” மாநாட்டுக்காக ஒதுக்கப்பட்ட நிதி : 75 வீதமானவை பாதுகாப்புக்காக

“சார்க்” மாநாடு;க்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் 75 வீதமானவை பாதுகாப்புக்காக செலவிடப்படவுள்ளதாக அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பி;ல் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், “சார்க்” மாநாட்டுக்காக 2.8 பில்லியன் ரூபா செலவு ஏற்படுவதாக குறிப்பிட்டார்.
இதில் 75 வீதமானவை மாநாட்டுக்காக வருகைத்தரும் வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக ஒதுக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் பாகிஸ்தானிய ஜனாதிபதி பேவஸ் முஸாரப் ஆகியோரும் பங்கேற்கவுள்ளதாக அவர் தெரிவித்தார். இலங்கையின் வடபகுதியில் மேற்கொள்ளப்படும் இராணுவ நடவடிக்கையின் காரணமாகவே இந்தியாவும் பாகிஸ்தானும் தமது படைகளை கொண்டு தமது தலைவர்களுக்கு பாதுகாப்பளிப்பதாகவும் அமைச்சர் கூறினார். அமரிக்கா, ஐரொப்பிய ஒன்றியம் மற்றும் சீனா, கொரியா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள், இந்த மாநாட்டின் போது பார்வையாளர்களாக பங்கேற்கவுள்ளமையால், அவர்களுக்கும் பாதுகாப்பளிப்பது, இலங்கை அரசாங்கத்தின் கடமை என அவர் தெரிவித்தார். இதேவேளை 1976 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற அணிசேரா நாடுகளின் மாநாடு தொடர்பாகவும் அன்று ஐக்கிய தேசியக்கட்சி குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தது.எனினும் அந்த மாநாட்டின் காரணமாகவே 1.5 மில்லியன் இலங்கையர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை பெற்றுக்கொள்ளமுடிந்தது என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.