ஹமாஸின் 22 ஆம் ஆண்டு நிறைவு நிகழ்வில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு!

hamas10 ஹமாஸின் 22 ஆம் ஆண்டு நிறைவுக் கொண்டாட்டங்கள் காஸாவில் நேற்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் ஹமாஸுக்கான தமது ஆதரவை வெளிக்காட்டும் நோக்குடன் இந்நிகழ்வுகளில் கலந்துகொண்டிருந்தனர். காஸா மீதான இஸ்ரேலின் படையெடுப்பு நடைபெற்று இன்று கிட்டத்தட்ட ஒரு ஆண்டு பூர்த்தியாகும் நிலையில் நடைபெற்ற இக் கொண்டாட்டங்களில் ஹமாஸ் தலைவர்களின் உரைகளும் இடம்பெற்றன.

ஹமாஸின் பச்சை நிறக் கொடிகளால் அலங்கரிக்கப்பட்ட பாரிய பந்தலின் கீழ் ஒன்று திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கானோர் ஹமாஸை அடையாளப்படுத்தும் தொப்பிகளையும் அணிந்திருந்தனர்.இஸ்ரேலியத் தாக்குதல், அச்சுறுத்தல் காரணமாக பொது நிகழ்வுகளில் கலந்துகொள்வதைத் தவிர்த்து மறைமுகமான வாழ்க்கை வாழ்ந்துவந்த ஹமாஸ் தலைவர்கள் பல ஆண்டுகளின் பின்னர் முதற் தடவையாக மக்கள் முன் தோன்றியுள்ளனர்.

ஹமாஸின் சிரேஷ்ட அமைச்சர்களும் உயர்மட்ட அதிகாரிகளும் தனது உதவியாளர்களும் முன்வரிசையில் அமர்ந்திருக்க காஸாவிலுள்ள ஹமாஸின் தலைவர் இஸ்மாயில் ஹனியே இங்கு நீண்ட உரையொன்றை நிகழ்த்தியுள்ளார்.இராணுவச் சீருடை அணிந்திருந்த சிறுவர்கள் பச்சைநிற பலூன்களை பறக்கவிடத் தனது உரையை ஆரம்பித்த ஹமாஸ் தலைவர்,நாமே எதிர்காலம், பாலஸ்தீனத்திலிருந்து விடுதலை பெற்ற பகுதியே காஸா என்றும் தொடர்ந்தும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுமெனவும் கூறித் தனது உரையை ஆரம்பித்தார்.

மேலும், மேற்குக் கரையை இஸ்ரேலிருந்து பிரிந்த ஒரு மாநிலமாக ஏற்றுக்கொண்டுள்ளதுடன், மேற்குக்கரையில் தமது ஆட்சியையும் நிலைநாட்டியுள்ள தமது பிரதான எதிர்க் குழுவான பதாஹ் அமைப்புடன் தேசிய ஐக்கிய அரசாங்கம் ஒன்றை நிறுவுவதற்கும் இஸ்மாயில் ஹனியே அழைப்பு விடுத்துள்ளார்.இக்கொண்டாட்டத்தின்போது கலை நிகழ்வுகளில் பாடப்பட்ட பாடங்களில்நீரோ,மின்சாரமோ இல்லாது போனாலும் கூடத் தமது போராளிகள் வெடிகுண்டின் மூலம் தமக்கு வெளிச்சத்தை ஏற்படுத்துவர் என்ற அர்த்தம் பொதித்திருந்தது.அதேவேளை, அரங்கில் இஸ்ரேல் விமானத் தாக்குதல்களில் பலியான ஹமாஸ் தலைவர்களின் படங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.